Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியலில் ராஜபக்ஷேக்கள் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலில் ராஜபக்ஷேக்கள் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
28 ஏப்ரல் 2022, 06:22 GMT
 

இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ராஜபக்ஷேக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் முதல் பாகம் இது.

ஒரு காலத்தில் மனித உரிமைப் போராளியாக தீவிரமாகச் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இருந்தபோதும் ராஜபக்ஷே குடும்பத்தினர் இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர். முழுமையான பின்னணி.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தபோது சர்வதேச அளவிலான கவனம் அவர் மீது விழந்தது. அந்தப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி ஒரு அரசனுக்குரிய செல்வாக்கோடு வலம்வந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

மஹிந்த மட்டுமல்லாமல் அவருடைய சகோதரர்கள் சமல் ராஜபக்ஷ, கோட்டாபய, பக்ஷ, மஹிந்தவின் மகன் நாமல் என அவருடைய குடும்பமே மிகப் பெரிய செல்வாக்குக்குரியதாக உயர்ந்தது.

தற்போதைய ராஜபக்ஷ குடும்பத்தின் கதை என்பது மூன்று தலைமுறையாக, தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு, உச்சத்தை அடைந்த ஒரு குடும்பத்தின் கதை.

இலங்கையின் தென்கோடியில் இருக்கிறது அம்பாந்தோட்டை மாவட்டம். ராஜபக்ஷக்களின் மாவட்டம் என்பதால், இலங்கையிலேயே அரசின் கவனிப்பை அதிகம் பெற்ற மாவட்டமாக இருக்கிறது அம்பாந்தோட்டை. மிகப் பெரிய துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் என மெகா நகரத்திற்கு உரிய எல்லாம் இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. சீனாவின் குவாங்ஸு நகரின் சகோதர நகரமாகவும் அம்பாந்தோட்டை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மாவட்டத்திலிருக்கும் வீரகட்டிய கிராமமே, ராஜபக்ஷேக்களின் சொந்த ஊர். அந்த ஊருக்குள் நுழையும் அந்நியர் யாருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். அந்தச் சிறிய ஊருக்குப் பொருந்தாத வகையில் பெரும் எண்ணிக்கையில் காவலர்கள் அந்த கிராமத்தில் தென்படுகிறார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினரின் வீடு, தோட்டம், அவர்களது பெற்றோரின் நினைவிடம் என எல்லா இடங்களிலும் காவலர்களைப் பார்க்க முடிகிறது.

ஆனால், ராஜபக்ஷே குடும்பத்திலிருந்து முதன் முதலில் ஒருவர் அரசியலில் இறங்கியபோது, இந்தப் பிரதேசமே காடுகளும் வறண்ட வயல்வெளிப் பிரதேசங்களும் கொண்ட பகுதியாக இருந்தது. மக்கள் தொகையும் மிகவும் குறைவு. அதிலும் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கிராமப்புறங்களிலேயே வசித்துவந்தனர்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்த டான் டேவிட் ராஜபக்ஷ, வீரகெட்டிய கிராமத்தில் ஒரு கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். அதுதவிர, அவருக்கு உள்ளூர்செல்வாக்கும் இருந்தது. இந்த டான் டேவிட்டின் மகன்தான் டான் மேத்யூ ராஜபக்ஷ. ராஜபக்ஷ குடும்பத்திலேயே முதன்முதலில் அரசியலுக்கு வந்தவர் இவர்தான்.

1936ல் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ. அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த டான் மேத்யூ, 1945-ல் காலமானார். அந்தத் தருணத்தில் அவருடைய மகன்கள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால், அம்பாந்தோட்டை தொகுதியில் டான் மேத்யூவின் தம்பி டான் ஆல்வின் ராஜபக்ஷே களமிறக்கப்பட்டார்.

மிக எளிதாக அந்தத் தேர்தலில் வென்ற டான் ஆல்வின், 1947ல் அம்பாந்தோட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்படியாக சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றார் டான் ஆல்வின்.

 

நமல் ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

1951ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக) பிரிந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் துவங்கியபோது, அவருடன் சென்றார் டான் ஆல்வின். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது ராஜாங்க அமைச்சர் பதவி டான் ஆல்வினுக்கு வழங்கப்பட்டது.

பண்டாரநாயக கொல்லப்பட்டவுடன் பதவியேற்ற விஜயானந்த தகநாயக்கவின் அமைச்சரவையில் முழுப் பொறுப்புடன் விவசாயம் மற்றும் நிலங்கள் துறையின் அமைச்சராக அமைச்சராக 1959 செப்டம்பரிலிருந்து 1960 மார்ச்வரை சிறிதுகாலம் பணியாற்றினார்.

இதற்கு பிறகு சிறிது காலத்திற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெலிவத்த தொகுதியின் அமைப்பாளராக இருந்தபடியே அம்பாந்தோட்டையைச் சுற்றி தன் அரசியலைச் சுருக்கிக்கொண்டார் டான் ஆல்வின்.

ஆனால், இந்த காலகட்டத்தில் வீரகெட்டிய கிராமத்தில் செல்வாக்கு சிறப்பாகவே இருந்தது. டான் ஆல்வினுக்கு சாமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள்.

இதில் மூன்றாவது குழந்தையான மஹிந்த, மிகப் பெரிய தலைவராக உருவெடுக்கக்கூடும் என அந்தத் தருணத்தில் யாரும் யூகித்திருக்க முடியாது.

வீரகெட்டிய கிராமத்தைச் சேர்ந்த கே.பி. ஜெயசேகர மஹிந்தவின் தீவிர ஆதரவாளர். மனிதருக்கு வயது எழுபதாகிவிட்டது. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுடனான சிறுவயது நாட்களை துல்லியமாக நினைவுகூர்கிறார்.

"அந்த காலகட்டத்தில் நான், மஹிந்த, கோட்டாபய என எல்லோருமே ஒன்றாகத்தான் விளையாடினோம். சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிவோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன்கள் என்ற தோற்றமின்றி பழகுவார்கள் மஹிந்தவும் அவரது சகோதரர்களும். எனக்கும் பஷிலுக்கும் ஒரே வயது" என்கிறார் வீரகெட்டியவைச் சேர்ந்த கே.பி. ஜெயசேகர.

1966வாக்கில் மூத்த மகனான சாமல் ராஜபக்ஷ காவல்துறையில் துணை ஆய்வாளராக வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிலையில், 1967ல் டான் ஆல்வின் ராஜபக்ஷ உடல்நலம் குன்றி இறந்துபோனார். அப்போது மஹிந்த வித்யோதயா பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்நிலையத்தில் பணியாற்றிவந்தார்.

டான் ஆல்வினின் மறைவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை நினைவுகூரும் சடங்கு ஒன்று அவர்களது பூர்வீக வீட்டில் நடந்தது. அந்த நிகழ்வுக்கு வந்தார் சிறிமாவோ பண்டாரநாயக. அப்போது, டான் ஆல்வின் வகித்துவந்த பெலிவத்த தொகுதியின் கட்சி அமைப்பாளர் பொறுப்பை, சாமல் ராஜபக்ஷவுக்குக் கொடுக்க முன்வந்தார் சிறிமாவோ. ஆனால், அவர் அப்போது காவல்துறை பணியில் இருந்ததால், அந்தப் பொறுப்பை மஹிந்தவுக்கு அளிக்கும்படி கேட்டார் அவரது தாயார்.

மஹிந்தவுக்கு அப்போது வெறும் 21 வயதுதான். வயதுக்கு உரிய பொறுப்பாக இருக்குமா என்று யோசித்தாலும், அந்தப் பொறுப்பை அளித்தார் சிறிமாவோ. இது நடந்தது 1968 மே மாதம்.

இதற்குப் பிறகு அரசியலில் மஹிந்த வளர்ச்சி படிப்படியாக இருந்தது என்கிறார் ஜெயசேகர.

"வீரகெட்டிய பகுதி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்வந்து நிற்பார். அதனால், இந்தப் பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது" என்கிறார் ஜெயசேகர.

தொடரின் இரண்டாவது பாகம் நாளை வெளியாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61253812

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: மனித உரிமை ஆர்வலர் மஹிந்த - ராஜபக்ஷக்களின் கதை

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
29 நிமிடங்களுக்கு முன்னர்
 

ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தின7ரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் இரண்டாம் பாகம் இது.

பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் தனது தொகுதியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ. அந்தத் தருணத்தில் அவரது தாயார் மிகக் கவனமாக மஹிந்தவை வழிநடத்தினார்.

1970ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மஹிந்தவும் தனது பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். எதிர்பார்த்ததைப் போலவே பெலியத்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது மஹிந்தவுக்கு. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சித் அட்டபட்டுவை எளிதில் தோற்கடித்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில்தான் அவருடன் இணைந்துகொண்டார் அவருடைய சகோதரரான பஷில் ரோஹண ராஜபக்ஷ. மஹிந்த இல்லாத நேரங்களில் பெலியத்த தொகுதியில் பஷிலைத்தான் அப்பகுதியினர் தொடர்புகொள்ள வேண்டும்.

1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த சார்ந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தன மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

இந்தத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த, ரஞ்சித் அட்டபட்டுவிடம் தோற்றுப் போனார். சகோதரர் பஷிலும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். இந்த காலகட்டத்தில் சட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார் மஹிந்த.

1972ல் இலங்கையில் புதிதாக அரசியல் சாஸனம் எழுதப்பட்ட பிறகு, இலங்கையின் சட்ட விவகாரங்களை இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, 1973ல் ஃபெலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, 30 வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இந்த விதியைப் பயன்படுத்திய மஹிந்த தனது சட்டப்படிப்பை முடித்தார். 1981ல் வழக்கறிஞராக பணியாற்றிய்மஹிந்த, எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை நீதிமன்றங்களில் செயல்பட்டுவந்தார்.

இந்த காலகட்டத்தில், சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் அவருடைய மகன் அனுர பண்டாரநாயகவிற்கும் எழுந்த மோதலில், அனுர கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். அந்தத் தருணத்தில் பஷில் ராஜபக்ஷ அனுர பண்டாரநாயகவுக்கு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அனுர திரும்பவும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், அவருடன் வெளியேறியவர்களுக்கு பெரிதாக பொறுப்பு கிடைக்கவில்லை. ஆனால், மஹிந்த தொடர்ந்து பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நீடித்தார்.

இந்த காலகட்டத்தில், காவல்துறையில் பணியாற்றிவந்த சாமல் ராஜபக்ஷ என்ன செய்துகொண்டிருந்தார்? 1970ல் சிறிமாவோ பிரதமரானபோது, சாமல் ராஜபக்ஷ பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1977ல் சிறிமாவோ பதவிவிலகும்வரை, அந்தப் பிரிவில் பணியாற்றிவந்தார் சாமல்.

1977ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தபிறகு, சாமல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இனியும் காவல்துறையில் இருப்பது பெரிய பலனளிக்காது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்தார் சாமல்.

 

மஹிந்த

பட மூலாதாரம்,GETTY IMAGES

1970களின் பிற்பகுதியில், சிறிமாவோவின் மகளான சந்திரிகாவும் அரசியலில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருந்தார். இதற்கு நடுவில் இலங்கையின் அரசியல் சாஸனம் திருத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டிருந்தது. 1982ல் நடந்த பொதுத் தேர்தலிலும் ஜெயவர்தனவே மீண்டும் வெற்றிபெற்றார்.

தனது பெலியத்த தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தார் மஹிந்த. 1983ல் நடந்த இடைத் தேர்தலிலும் மஹிந்தவுக்குத் தோல்வியே கிடைத்தது. இதற்குப் பிறகு அரசியல் ரீதியாக அமைதியாக இருந்தார் மஹிந்த.

இந்த நேரத்தில்தான் ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. அதனை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

 

மஹிந்த ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. இந்தத் தருணத்தில் பத்திரிகையாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா மஹிந்தவைத் தொடர்புகொண்டு, தென்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு, மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் இருவரும் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தனர்.

"மஹிந்தவுடன் சேர்ந்து செயல்படுவது மிக எளிது. அரசியல் ரீதியாக அவரை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால், மிகத் துல்லியமான செயல்பாட்டு அறிவைக் கொண்டவர்" என நினைவுகூர்கிறார் குஷால் பெரேரா.

1989 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதற்குப் பிறகும் அவரது மனித உரிமைச் செயல்பாடுகள் தொடர்ந்தன. மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்தபடி இருந்தார் மஹிந்த. ஐநா மனித உரிமை செயற்பாட்டுக் குழுவின் பிரச்சாரகராகவும் அங்கீகரிக்கப்பட்டார் மஹிந்த.

1991-92 காலகட்டத்தில் மஹிந்தவின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அவரது குரல்கள் கவனிக்கப்பட்டன. அதேபோல, தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடத்திய சிலர் காணாமல்போனபோது அவர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார் மஹிந்த.

https://www.bbc.com/tamil/sri-lanka-61265404

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராஜபக்ஷக்கள் குடும்பத்தினர் வளர்ந்த கதை - தேசியத் தலைவராக உருவெடுத்த மஹிந்த ராஜபக்ஷ

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
30 ஏப்ரல் 2022, 01:39 GMT
 

மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் அவருடைய கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் அவருடைய கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் மூன்றாம் பாகம் இது.

மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் வெகுவாக நடைபெற்றாலும் மஹிந்தவின் கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.

"வடக்கு - கிழக்கு விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், தென் பகுதி சிங்கள மக்களின் மனித உரிமை காவலர் என்ற பெயரை இழக்க அவர் தயாராக இல்லை" என்கிறார் அந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து செயல்பட்டுவந்த மனித உரிமை ஆர்வலரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா.

இதற்கிடையில் சில சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றிருந்தன. சிறிமாவோ பண்டாரநாயகவின் மகள் சந்திரிகாவின் கணவர் விஜேய குமாரதுங்கே கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நாடு திரும்பினார்.

மஹிந்த தொடர்ந்து தென் பகுதியின் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதிலும் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குரலை ஒலிப்பதிலும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். அந்தத் தருணத்தில், பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.

முந்தைய பாகங்கள்

இதனை எதிர்த்து என்ன செய்யலாம் என விவாதித்தபோது, பாத யாத்திரை நடத்தலாம் என யோசனை தெரிவித்தார் குஷால் பெரேரா. "மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை ஏற்படுத்திய தாக்கம் என் மனதில் இருந்தது. ஆகவே, அதேபோன்ற பாத யாத்திரையை கொழும்பிலிருந்து கதிர்காமம்வரை நடத்தலாம் என தெரிவித்தேன்" என்கிறார் குஷால் பெரேரா.

கொழும்புவில் துவங்கி கடற்கரை ஓரமாகவே, காலி சாலை வழியாகச் செல்லும் அந்த யாத்திரை கொழும்பு, காலி, மாத்தர மாவட்டங்களைக் கடந்து அம்பாந்தோட்டையை அடைந்து மொனேராகல பகுதியை அடையுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தார் பிரேமதாச. அப்படியான சூழலில் இந்த பாத யாத்திரையை எப்படி வெற்றிகரமாக நடத்த முடியுமெனப் பலரும் கேள்வியெழுப்பினர்.

இருந்தபோதும் மஹிந்த தீவிரமாக ஆதரவு திரட்ட ஆரம்பித்தார். இந்த பாத யாத்திரையில் நான்கு பிரதானமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. 1988-90 ஆம் ஆண்டுகளில் நடந்த கலவரம், அதையொட்டிய அரசின் நடவடிக்கைகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். 2. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 3. தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். 4. உரிமைக்காக போராடிவரும் குழுக்களுடன் சண்டையிடாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்த பாத யாத்திரை 1992 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தொடர்பான மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றும் கொழும்பு நகரில் மஹிந்த தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. அரசுக்கு எதிர்த்தரப்பில் இருந்த பலரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தத் தருணத்திலேயே மஹிந்தவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாக உயர ஆரம்பித்தது.

 

தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ச

இதற்குப் பிறகு, பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்த சிறிமாவோ அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையென்றாலும், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். சந்திரிகா குமாரதுங்கவும்கூட பாத யாத்திரை துவங்கிய தினத்தில் அதில் பங்கேற்றார். மிகப் பெரிய ஊடக கவனமும் அந்த பாத யாத்திரைக்குக் கிடைத்தது. தோல்வியால் சோர்வுற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அந்த பாத யாத்திரை பெரும் உற்சாகத்தை அளித்தது.

இந்த பாத யாத்திரை மாத்தர பகுதியை அடைந்தபோது, மஹிந்த தற்போது பிரபலமான குரக்கன் சால்வையை அணிந்துகொண்டார்.

ராஜபக்ஷக்களின் சொந்த ஊரான வீரகெட்டியவிலும் அம்பாந்தோட்டை பகுதியிலும் குரக்கன் எனப்படும் கேப்பை பெருமளவில் விளைந்துவந்தது. வாக்குப் பெட்டிகளை அடையாளமாக வைத்து தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ஷ.

அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு, அதே நிறத்தில் அவர் சால்வை அணிய ஆரம்பித்தார். அப்போதிலிருந்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த நிறத்தில் சால்வையை அணிந்து வந்தனர். பாத யாத்திரைக்கு முன்பாக ராஜபக்ஷ சகோதரர்களின் சாமல் ராஜபக்ஷ மட்டும் அவ்வப்போது அந்த சால்வை அணிந்து வந்தார்.

இந்த யாத்திரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மட்டுமல்லாது, இலங்கை அரசியல் பரப்பிலும் மஹிந்தவுக்கு ஒரு முக்கிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. "இந்தத் தருணத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசியத் தலைவராக உயர்ந்தார்", என்கிறார் குஷால் பெரேரா.

 

பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

இந்தத் தருணத்தில்தான் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, மே 1 ஆம் தேதியன்று கொழும்பு நகரின் ஆர்மர் வீதியில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். அப்போது மாகாண சபை தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருந்தது. பிரேமதாசவின் மரணம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பிரேமதாச கொல்லப்பட்ட பிறகு, பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியானார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், தேர்தல் களத்தில் இருவரும் ஈர்ப்பை ஏற்படுத்துபவர்களாக இல்லை.

மாறாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த போன்றவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த அழைக்கப்பட்டார். மூன்று மாகாண சபைகளுக்கு நடந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.

இதற்கு நடுவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சில மாற்றங்கள் நடந்தன. சிறிமாவோவின் மகனும் சந்திரிகாவின் சகோதரருமான அனுர பண்டாரநாயக கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆகவே, அக்கட்சியின் அடுத்த தலைமை சந்திரா குமாரதுங்க என்பது உறுதியானது.

1994ல் ஜூனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மஹிந்தவுக்கு இருந்த செல்வாக்கை வைத்துப் பார்க்கும்போது, தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால், மஹிந்த நிச்சயம் அமைச்சராகக்கூடும் எனப் பலரும் கருதினார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா. உடனடியாக ப்ளாட், ஈரோஸ், டெலோ, டக்ளஸ் தேவானந்தாவின் இபிடிபி ஆகியவை அரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தன.

எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்த அமைச்சரவை வேறு. கிடைத்த அமைச்சரவை வேறு. அதற்குக் காரணம் இருந்தது.

இத்தொடரின் நான்காம் பாகத்தில் தொடரும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61277449

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாறு: மஹிந்த பிரதமரான 'அரசியல்' - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
56 நிமிடங்களுக்கு முன்னர்
 

மஹிந்த

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்து வருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் நான்காம் பாகம் இது.

1994ல் ஜூனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா.

எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்த அமைச்சரவை வேறு. கிடைத்த அமைச்சரவை வேறு. அவர் எதிர்பார்த்தது விவசாய அமைச்சகத்தை. ஆனால், சந்திரிகா அவருக்கு தொழிலாளர் மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சகத்தை வழங்கினார். விவசாயத் துறை கிடைத்தால், தனது தொகுதியில் செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக இருக்குமெனக் கருதினார் மஹிந்த.

முந்தைய பாகங்கள்

இருந்தபோதும், தொழிலாளர் துறையை ஏற்றுக்கொள்ளும்படி தான் அவரை வலியுறுத்தியதாகக் கூறுகிறார் குஷால் பெரேரா.

தொழில்துறையை ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்வது என்று யோசித்த மஹிந்தவுக்குக் கிடைத்தது, தேசிய தொழிலாளர் சாசனம். உற்சாகத்துடன் அதனை உருவாக்குவதில் பணியாற்ற ஆரம்பித்தார் மஹிந்த.

தொழிலாளர் துறை பறிக்கப்பட்டது

ஆனால், அந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்புடன் சந்திரிகா துவங்கியிருந்த பேச்சு வார்த்தை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததால், மஹிந்த மீதான ஊடக கவனம் குறைவாகவே இருந்தது. இதற்கிடையில் 1994ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்றார் சந்திரிகா.

இருந்தபோதும் தொழிலாளர் சார்ந்து பல யோசனைகளை முன்வைத்தபடி இருந்தார் மஹிந்த. இவையெல்லாம் சேர்ந்த மஹிந்த ஒரு முற்போக்கான அமைச்சர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

1997ல் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டிற்காக மஹிந்த சென்றிருந்தார். அவர் ஜெனீவாவில் இருந்தபோதே, அவரிடமிருந்து தொழிலாளர் துறை பறிக்கப்பட்டது. கடற் தொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் அமைச்சராக்கப்பட்டார் மஹிந்த

 

மஹிந்த மற்றும் சிந்திரிகா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சந்திரிகாவின் இந்த நடவடிக்கையால் மஹிந்த சற்று சோர்வடைந்தாலும், தனக்களிக்கப்பட்ட அமைச்சகத்தின் மூலம் மக்களை எந்த அளவுக்கு சென்றடைய முடியும் என்று யோசித்து செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த. இந்த காலகட்டத்தில் அவரது அரசியல் சிங்கள - பௌத்த அரசியலாக தீவிரமாக உருவெடுத்தது.

1999ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார் சந்திரிகா குமாரதுங்க. இந்தத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இருபது பேர் கொல்லப்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க.

இதற்குப் பிறகு, தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அளிக்கக்கூடிய புதிய அரசியல் சாஸனத்தை உருவாக்கி அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்பினார் சந்திரிகா குமாரதுங்க. இதற்கு எதிர்பார்த்ததுபோலவே பௌத்த பிக்குமார்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

மஹிந்தவும் இந்த புதிய அரசியல்சாஸனத்தை ஏற்கவில்லை என்கிறார் குஷால் பெரேரா. "இந்த அரசியல்சாஸனம் நிறைவேறினால் நான் எனது மக்களிடம் செல்ல முடியாது" என மஹிந்த தன்னிடம் கூறியதாக தனது Rajapaksa - The Sinhala Selfie நூலில் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த அரசியல் சாஸனம் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டால், மஹிந்த எதிர்ப்பார் என்று செய்தி பரவிய நிலையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவேயில்லை. இதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மீண்டும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது.

 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

ஆனால், ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களில் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு, 2001ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த. இந்த காலகட்டத்தில், பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தாதவராகவே இருந்தார்.

தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுகளை அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், 2004 ஏப்ரலில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி வெல்ல, தன் ஆதரவாளரான ரத்ன ஸ்ரீ விக்ரமசிங்கேவை பிரதமராக்க விரும்பினார் சந்திரிகா. ஆனால், பௌத்த பிக்குகளின் ஆதரவு மஹிந்தவுக்கே இருந்தது.

முடிவில், தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. 2004ன் இறுதியில் இலங்கையின் கடற்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளில் புலிகள் அமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பாக கட்சிகளுக்குள் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. முடிவில், சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகள் அமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கான கதவுகள் மூடப்பட்டன. மேலும், அடுத்த ஜனாதிபதியாக தீவிர சிங்கள ஆதரவு மனநிலை கொண்டவரே வரவேண்டுமென்ற மனநிலையும் நாட்டின் தென்பகுதியில் உருவானது.

2005 ஆகஸ்ட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து, போர் நிறுத்தத்திற்கு எதிரான ஒரு மன நிலையையும் தீவிர புலிகள் எதிர்ப்பு மன நிலையையும் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியில் உருவாக்கியது.

சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரது குடும்பத்திற்குள் அவர் முன்னிறுத்தக்கூடியவகையில் யாரும் இல்லை. முடிவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடியவரா மஹிந்த ஒருவரே தென்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நாயகன் மஹிந்த: ராஜபக்ஷேக்கள் வளர்ந்த கதை - 5

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மஹிந்த ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்து வருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்சி அறிவித்தது. மிக வேகமாக தனது தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார் மஹிந்த.

இந்தத் தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், மஹிந்த தனது 'ஹெல்ப்பிங் ஹம்பந்தோட்டா' திட்டத்தின் மூலம் சுனாமி நிதியில் முறைகேடு செய்தார் எனவும் அதனை விசாரிக்க வேண்டுமெனவும் கோரினர். ஆனால் இந்த விசாரணைக்கு உச்ச நீதின்றம் தடை விதித்தது.

இதற்குப் பிறகு, மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார் மஹிந்த.

 

ரணில் விக்ரமசிங்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போர் நிறுத்தத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவரும் ஜனாதிபதியாக தன்னை ரணில் முன்னிறுத்திவந்த நேரம், 'ஒரே இலங்கை' என்ற கோஷத்தை முன்வைத்து சிங்கள மக்களை ஒன்று திரட்டினார் மஹிந்த.

இந்த நிலையில்தான், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தது புலிகள் இயக்கம். ஆனால், புலிகளின் இந்த அழைப்பு தனக்கு பாதகமாக முடியுமென ஐக்கிய தேசியக் கட்சி கருதவில்லை.

முந்தைய பாகங்கள்:

வாக்குப்பதிவு நடந்தபோது, வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ் பேசுவோர் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாயின. மஹிந்த 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ரணிலைவிட சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மஹிந்த, தான் எல்லா மக்களுக்குமாகச் சேர்த்து பாடுபடப்போவதாகவும், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மேலும் உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட திருத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் மஹிந்த.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, உடனடியாக இருவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டது. அதில் ஒருவர் அவருடைய சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ.

கோட்டாபய ராஜபக்ஷ

ராஜபக்ஷ சகோதரர்களில் ஐந்தாவதாகப் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆனந்தா கல்லூரியில் தனது படிப்பை முடித்த பிறகு, 1972 மே மாதத்தில் இலங்கை ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாகச் சேர்ந்தார்.

முதலில் சிக்னல் கார்ப்ஸ் பிரிவிலும் பிறகு, சின்ஹ ரெஜிமென்டிலும் பணியாற்றிய கோட்டாபய, அதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்தார். இந்த காலகட்டத்திலேயே ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகம் துவங்கியிருந்தது.

 

ராஜபக்ஷ சகோதரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1977ல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் ராஜரத ரைஃபிள்ஸ், விஜயபாஹு இன்ஃபான்ட்ரி என இரண்டு படைப்பிரிவுகள் துவங்கப்பட்டன. அப்போதிருந்த லெப்டினென்ட் கர்னல் நாணயக்கரவின் வேண்டுகோளின் பேரில், சின்ஹ ரெஜிமென்டை விட்டுவிட்டு, ராஜரத ரைஃபிள்சில் இணைந்தார் கோட்டாபய. 1983வாக்கில் இந்த ராஜரத ரைஃபிள்ஸ், விஜயபாஹு இன்ஃபான்ட்ரியுடன் இணைக்கப்பட்டு கஜப ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டது. அதன் இரண்டாம் நிலை தளபதியாக உயர்த்தப்பட்டார் கோட்டாபய ராஜபக்ஷ.

1980களின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியின் குடும்பத்தினர் பலர் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்ட நிலையில், இவரையும் அங்கு அழைத்தனர். ராணுவப் பணியிலேயே தொடர விரும்பினார் கோட்டாபய. இந்த நிலையில், கோட்டாபய மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த அப்போதைய ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, 1991 நவம்பரில் ராணுத்தைவிட்டு வெளியேறினார் கோட்டாபய.

முந்தைய பாகங்கள்:

வெகுகாலம் அமெரிக்காவில் கழித்த பிறகு, மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட முடிவுசெய்தவுடன், அவருடைய தேர்தல் பிரசாரத்தைப் பார்த்துக்கொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ஷ, தன் சகோதரரை பாதுகாப்புத் துறைச் செயலராக நியமித்தார். மஹிந்த ஜனாதிபதியான பிறகு, சில மாதங்களில் புலிகள் தரப்போடு பேச்சு வார்த்தை முயற்சிகள் நடந்தாலும் அதில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருகோணமலையில் உள்ள மாவிலாறு அணை மூடப்பட்ட விவகாரம், இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் துவங்குவதற்கான புள்ளியாக அமைந்தது. இதற்குப் பிறகு 2007ல் கிழக்குப் பகுதி முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வர, 2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில் பாதுகாப்பத் துறை செயலர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் இமேஜ் தொடர்ந்தது அதிகரித்தது. ஆட்கடத்தல், சட்டவிரோதமாக பிடித்துவைத்தல், காணாமலாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டன. முடிவாக, 2009 மே 17ஆம் தேதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த கட்டத்தில் மஹந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி என்ற நிலையிலிருந்து கேள்வியே கேட்க முடியாத அரசன் என்ற நிலைக்கு உயர்ந்தார் மஹிந்த.

2010ல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, மீண்டும் போட்டியிட்டார் மஹிந்த. அவரை எதிர்த்து, பொது வேட்பாளராக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்செக நிறுத்தப்பட்டார். ஆனால், சரத் பொன்செகவைவிட 17 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ஷ.

இந்த இரண்டாம் முறை தேர்வுசெய்யப்பட்டபோது, வீரகெட்டிய கிராமத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கிய மஹிந்த, அங்கிருந்து வெகு தூரம் சென்றிருந்தார்.

"காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதத்தை வைத்து அவரை நாங்கள் மிகவும் நம்பினோம். ஆனால், அதிகாரம் வந்த பிறகு அவர் மாறிவிட்டார். சந்தர்ப்பவாதியாகிவிட்டார். மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்டதெல்லாம், ஒரு விளம்பரத்திற்காத்தான் என்பது புரிகிறது" என்கிறார் ஒரு காலகட்டத்தில் மஹிந்தவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்ட பிரிட்டோ.

பஷில் ராஜபக்ஷ, கோட்டாபய போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்காலேயே தங்கள் இடங்களைப் பெற்றார்கள் எனக் கருதுகிறார் குஷால் பெரேரா.

தற்போதைய பொருளாதார நெருக்கடி முற்றியபோது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமரின் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் அரசைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க மஹிந்த முயன்றதாகவும் இலங்கை அரசியல்வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால், இப்போது பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்த தீர்மானமான சித்திரங்களை பார்க்க முடியும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61308622

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.