Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள்; போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன்கண்டி முதல் கற்பிட்டி வரை, நாலாபக்கமும் இருந்து கோட்டாவை வீட்டுக்குப் போகச் சொல்லும் குரல்கள் ஒற்றுமையுடனும் ஆழமாகவும் கோபமாகவும் ஒலிக்கின்றன.

ஆனால், அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் காணவில்லை. ஒரு பொருளாதார நெருக்கடியின் விளைவால் தோற்றம்பெற்ற போராட்டங்கள், இன்று அக்கட்டத்தைத் கடந்து, ஒரு மக்கள் இயக்கமாக உருவாகுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
இந்த மாற்றமும் இலங்கையின் ஜனநாயக அரசியலின் அடித்தளமாய்க் கொள்ளப்படும் பாராளுமன்றின் இயலாமையும், இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றையும் அந்தகாரத்தையும் ஒருங்கே கோடுகாட்டுகின்றன.

கடந்த செவ்வாய்கிழமை, இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில், ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,  அரசியல்வாதிகள் செய்த பாரிய மோசடிகள், ஊழல்கள் தொடர்பான விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார்.

இதில், நாட்டின் பொதுச் செல்வங்களை கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் மோசடிகள், ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இதில், கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளமை புலனாகிறது. குறிப்பாக, மாற்றுச்சக்தியின் தலைவராகப் பலரால் கருதப்படும் சஜித் பிரேமதாஸவின் ஊழல்களும் ஜே.வி.பியால் அம்பலப்படுத்தப்பட்டன.

இலங்கையில், ஊழல்கள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்துள்ளபோதும், அவை பெரும்பாலான மக்களின் கவனத்தைப் பெறவில்லை. இப்போதைய சூழல் அதற்கு வாய்ப்பாக உள்ளது. இலங்கையில் ஊழல், நிறுவனமயப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

இன்று ஜே.வி.பியின் அம்பலப்படுத்தல்களைக் கண்டு பொங்குவோர் பலருண்டு. இவர்கள், இலஞ்சம் கொடுக்க மறுத்தவரை ‘உலக நடப்புப் புரியாதவர்’ என்றும் வாங்க மறுத்தவரை ‘வாழத் தெரியாதவர்’ என்றும், ஊழலுக்குகெதிராகக் குரல்கொடுத்தவரை ‘இடஞ்சல்காரன்’ என்றும் சொல்லிக் கேலிசெய்திருந்தார்கள். 

இன்று, எத்தனை இலங்கையர்களால் கம்பீரமாகத் தலையை உயர்த்தி, “நான் இதுவரையும் இலஞ்சம் கொடுக்கவில்லை-வாங்கவில்லை” என்று சொல்லவியலும்? மாற்றம், எம் ஒவ்வொருவரில் இருந்தும் தொடங்க வேண்டும்.

மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே கொள்ளையடித்தது போலவும் ஜக்கிய தேசிய கட்சியினர் யோக்கியவான்கள் போலவும் ஒரு தோற்றம் எழுப்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே சஜித் பிரேமதாஸ மாற்றுத் தலைவராக முன்வைக்கப்படுகிறார்.

தனது அரசாங்கத்தில், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சராக சரத் பொன்சேகா இருப்பார் என்றும் இலங்கை சிங்கள-பௌத்த நாடு என்றும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக்கும் சஜித்தின் மாற்றுத் தலைமைத்துவம் எனக் கருதப்படும் போக்குக்கும் வேறுபாடுகள் இல்லை என்பது,  இவை போன்ற இன்னும் பல அண்மைக்கால நடத்தைகளின் தொடர்ச்சி உறுதி செய்கிறது.

இன்றைய நெருக்கடிக்குத் தலைகளை மாற்றுவது குறித்தே நாம் பேசுகிறோம்; சிந்திக்கிறோம். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அனைவரும், இன்றைய நெருக்கடிக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

பாராளுமன்றம், இலங்கை ஜனநாயகத்தின் காவலன் என்ற தகுதியை இழந்துவிட்டது. எமது பாராளுமன்றமும் அரசியலமைப்பும் எவ்வளவு ஏதேச்சாதிகாரமானது என்பதை பலர் வலியுறுத்தி வந்தாலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் பாராளுமன்றாலும் ஜனாதிபதியாலும் இதைச் சாத்தியமாக்கிய அரசியலமைப்பாலும் என்ன பயன்? வாக்களிக்கும் அதிகாரத்துக்கு அப்பால் மக்களிடம் எதுவுமே இல்லை. இப்போது அதிகாரம் யாரின் கைகளில் இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டுமா, இல்லையா?

இன்னமும் பாராளுமன்றத்துக்குள் தீர்வைக் கோரும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் அனைத்தையும் சாத்தியமாக்கலாம் என்று வேதம் ஓதும் சாத்தான்கள் எம்மிடம் இருக்கவே செய்கிறார்கள்.  
பாராளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை, நம்முன்னே காணும் வாய்ப்பு இப்போது வாய்த்திருக்கிறது. மக்களை ஒடுக்கும், அடிப்படை உரிமைகளை மறுக்கும் சட்டங்களை ஏகபெரும்பான்மையோடு நிறைவேற்றிய பாராளுமன்றத்தின் மீது, நம்பிக்கை வைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது? ஆனால், அதைப் பலரும் செய்கிறார்கள். “225 பேரும் வீட்டுக்குப் போங்கள்” என்ற கோரிக்கை, பலருக்கு அபத்தமாகப்படுகிறது.

அக்கோரிக்கையில் நியாயம் இல்லை என்கிறார்கள். இன்று, நெருக்கடி தொடங்கி 28 நாள்களாகிற நிலையில் இந்தப் பாராளுமன்றத்தால் என்ன செய்ய முடிந்தது?
புதன்கிழமை (04) பாராளுமன்றில் பேசிய நிதியமைச்சர், “வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றும் “2019ஆம் ஆண்டு வரிச் சலுகைகளை வழங்கியது தவறு” என்றும் பேசியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்தவுடன் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் யாருக்கானவை? அவை செல்வந்தர்களுக்கும் பெருவியாபாரிகளுக்கும் பாரிய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. அரசுக்கு வரவேண்டிய வரிப்பணம், செல்வந்தர்களின் பைகளை நிறைத்தது. இதுகுறித்து எப்போதாவது பேசியிருக்கிறோமா?

இப்போது அதிகரிக்க உத்தேசித்துள்ள வரிகள், யார் மீதானவை? இலங்கையில் இன்னமும் ஏன் செல்வந்த வரிகள் (wealth tax) குறித்துப் பேசப்படுவதில்லை.
இன்றைய நெருக்கடிக்குத் தீர்வுகளை முன்மொழிவோரில் பெரும்பான்மையானோர், செல்வந்தர்களிடம் மேலதிகமாக வரி அறவிடுவது பற்றிப் பேசுவதில்லை. மாறாக, இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானத்தில், அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இலங்கை அரசு சமூகநலத் திட்டங்களுக்கு ஏராளமான பணத்தைச் செலவழிப்பதாலேயே பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது என்று வாதிடுகிறார்கள். மத்திய-தர மனோநிலை கேட்டுக்கேள்வியின்றி இதை ஆமோதிக்கிறது. ஆனால், செல்வந்தர்கள் மீது ஏன் ஒழுங்கான வரிவிதிப்பு நடைபெறவில்லை என்ற கேள்வியை கேட்பதில்லை.

இலங்கையின் தேசியம், நாட்டுப்பற்று பற்றி, இலங்கையின் பெருமுதலாளிகள் வாய்கிழியக் பேசுவதைக் காண்கிறோம். “எல்லோரும் நாட்டில் இருக்க வேண்டும். இந்நெருக்கடி நேரத்தில், வெளிநாடுகளுக்கு செல்வது தேசத்துரோகம். நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்நெருக்கடிகள் தற்காலிகானமாவை” என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறார்கள். ஆனால், பெருந்தொற்றைத் தொடர்ந்த நெருக்கடியின் போது, இதே பெருமுதலாளிகள் தங்கள் மூலதனத்தை பிறநாடுகளுக்கு இடம்பெயர்த்தார்கள். இதுதான் அவர்களின் தேசப்பற்று.
இந்த இடப்பெயர்வால் இலங்கையில் வேலையிழந்தவர்கள் பலர். ஆனால், பெருமுதலாளிகளுக்கு என்றுமே இலாபமே முக்கியமானது. இலாபத்துக்காகத்தான் இப்போதைய அரசுக்கும் அவர்கள் முட்டுக்கொடுத்தார்கள். அதே இலாபத்துக்காகத்தான் இப்போது போராட்டங்களுக்குச் சார்பாக அறிக்கை விடுகிறார்கள்.

அண்மையில் வெளியான அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆவணச்சித்திரம், ஹம்பாந்தோட்டை மருத்துவமனை அமைப்பதில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், ஊழலின் பங்காளிகளாக வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளன என்பதாகும்.

இன்று இலங்கைக்கு நிதி வழங்குவோர் யார்? அதற்கான நிபந்தனைகள் என்ன? அரச சொத்துகள் எவ்வாறெல்லாம் கைமாறுகின்றன போன்ற வினாக்கள் பதிலற்றுக் கிடக்கின்றன. ஏனெனில், நாட்டை நடத்துவதற்கு எவ்வாறேனும் நிதியிருந்தால் போதும் என்ற மனநிலை பொதுமையாக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் இலங்கை யாருக்கானது என்ற வினாவை எழுப்புகின்றன. இலங்கை மக்களுக்கானது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு அப்பால், இலங்கையின் குடிமக்களாகச் செயற்படத் தவறியதன் விளைவுகளையே இன்று அனுபவிக்கிறோம் என்ற உண்மை விளங்க வேண்டும்.

இலங்கை வாக்காளர்கள், தங்களது நீண்ட அரசியல் உறக்கத்தில் இருந்து துயிலெழுவதற்கான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. இனியாவது  தேர்தல் காலங்களில், வாக்குறுதிகளுக்கும் பிரச்சாரங்களுக்கு இரையாகி, வாக்களித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கொடுங்காரியத்தை செய்யாமல் இருக்க வேண்டும்.

வாக்காளர் என்ற நிலையில் இல்லாமல், நாட்டின் குடிமக்களாக அரசியல் விழிப்புணர்வோடு, நியாயங்களுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்புவோராக மாற்றமடைதல் வேண்டும். அதன் முதற்படியே இப்போது நாம் காணும் தொடர்ச்சியான போராட்டங்கள்.

அனைத்திலும் மேலாக சமூகப்பொறுப்புள்ளவர்களாக, சகமனிதன் மீது அக்கறைகொண்டவர்களாக குடிமக்கள் இருத்தல் வேண்டும். இது எளிமையாக, குப்பையை உரிய இடத்தில், உரிய முறையில் போடுவதில் தொடங்குகிறது. இன்று நாம் கோருகின்ற மாற்றம், நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்கட்டும்!
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றத்தை-எங்கிருந்து-தொடங்குவது/91-295869

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.