Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா? விரிவான அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா? விரிவான அலசல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
6 மே 2022
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஓராண்டுகால தி.மு.க. ஆட்சி: சாதனையா, சாதாரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின.

மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.

ஐந்தாண்டுகள் ஆட்சியிலிருக்கும் ஒரு அரசை மதிப்பிட ஓராண்டு காலம் என்பது போதுமானதல்ல என்றாலும், அடுத்த நான்காண்டுகளில் அந்த அரசு செல்லவிருக்கும் திசையை சுட்டிக்காட்டுவதற்கான சமிக்ஞையை ஓராண்டில் நிச்சயமாக கவனிக்க முடியும்.

பத்தாண்டுகளுக்குப் பின்பாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததை, அக்கட்சியினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆனால், அப்படிக் கொண்டாடுவதற்கான சூழலில் தமிழ்நாடு அந்த நேரத்தில் இல்லை. கொரோனா மிகத் தீவிரமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. கொரோனாவின் முதலாம் அலையைவிட இரண்டாம் அலை மிக மோசமானதாகவும் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்குமென சுகாதார நிபுணர்கள் எச்சரித்தபடி இருந்தனர்.

இதனால், உடனடியாக ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலை இருந்தது. முந்தைய ஊரடங்கினால் ஏற்பட்ட வரி இழப்புகள், மக்களின் பொருளாதார இழப்புகள் அரசின் முன்பாக பூதாகரமாக நின்றன. அதே நேரம் மாநிலத்தின் நிதிநிலையும் சொல்லத்தக்க நிலையில் இருக்கவில்லை.

இதையெல்லாம் தாண்டி, சித்தாந்த ரீதியில் எதிர் நிலையில் இருக்கும் மத்திய அரசு மாநில அரசுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்குமென்று தெரியாத நிலை இருந்தது.

பதவியேற்றவுடன் ஆவின் பாலின் விலையை லிட்டர் ஒன்று மூன்று ரூபாய் குறைத்தது, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக இரண்டாயிரம் ரூபாய் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், ஆட்சிக்கான மிகப் பெரிய சவால உடனடியாகக் காத்திருந்தது.

கொரோனா முன்வைத்த முதல் சவால்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. அடுத்த சில இரு வாரங்களில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தொட்டது. அதாவது மே 21ஆம் தேதி மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,184. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின. பல மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நோயாளிகள் உயிரிழந்தனர்.

 

ஓராண்டுகால தி.மு.க. ஆட்சி: சாதனையா, சாதாரணமா?

பட மூலாதாரம்,FACEBOOK/M.K.STALIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளைச் சுமந்துகொண்டு காத்திருந்தனர். இதற்கிடையில் மற்றொரு சவாலும் ஏற்பட்டது. மாநிலம் முழுவதுமே ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. 24ஆம் தேதியே முழுமையான ஊரடங்கிற்கு அரசு உத்தரவிட்டது.

மக்களின் உயிரோடு தொடர்புடைய இந்த சவாலை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாநில அரசு சிறப்பாகவே கையாண்டதாகத்தான் சொல்லவேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றன.

இருந்தபோதும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மருத்துவ நெருக்கடியும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் புதிய அரசுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது.

இதனால், மாநில அரசு தனது முதலாவது பட்ஜெட்டைத் தாக்கல்செய்தபோது, பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததைத்தவிர, குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த ஓராண்டில் மாநில அரசு நிதிநிலையைக் கையாண்ட விதம் பெரிதாக விமர்சனத்திற்கு உள்ளாகாத அளவிலேயே இருந்தது.

ஆனால், முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்தது. முன்கூட்டியே பெய்ய ஆரம்பித்த பருவமழை, மாநிலத்தின் பல இடங்களில் மிகத் தீவிரமாகப் பெய்தது. ஏற்கனவே மிகச் சாதாரணமான நிலையில் இருந்த மழைநீர் வடிகால் அமைப்புகள் இந்தப் பருவமழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். தலைநகர் சென்னையின் பல பகுதிகள் நீரில் மிதந்தன.

 

ஓராண்டுகால தி.மு.க. ஆட்சி: சாதனையா, சாதாரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு முறை மழை பெய்து, அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மழைபெய்து சென்னையைத் தத்தளிக்கவைத்தது. இதில் மக்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என்றாலும், அமைச்சர்களும் முதலமைச்சர்களும் களத்தில் நின்று பணியாற்றியது கவனத்தைப் பெற்றது.

இவை தவிர்த்து, நீட் தேர்வை நீக்கும் விஷயத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்குவது என மாநில உரிமைகள் குறித்த திசையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அந்த விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதும், சம்பந்தப்பட்டவர்களை தொடர்ச்சியாக சிறை விடுப்பில் இருக்க அனுமதித்திருப்பதும் அந்தத் தரப்பின் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மேலும், பதவியேற்று சில நாட்களிலேயே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்விதமாக பல கோவில்களில் பிராமணரல்லாதோரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராடினாலும் அந்த முடிவில் அரசு உறுதியாக இருந்தது, பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

அதேபோல, மாநிலத்தின் பொருளாதாரத்தை சீராகக் கொண்டுசெல்ல ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷாந்த்ரே உள்ளிட்டோரை அடக்கிய குழுமை அமைத்ததும் கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது.

 

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்க குழு அமைத்தது

 

படக்குறிப்பு,

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்க குழு அமைத்தது

தொடர்ச்சியாக, மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது, மதம் சார்ந்த கலவரங்களோ, விரும்பத்தகாத நிகழ்வுகளோ நடக்காமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றிலும் தி.மு.க. அரசு பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், அவற்றை அந்தக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற பிரச்சாரம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பிரச்சாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறநிலையத் துறையின் செயல்பாடுகளை வேகப்படுத்தியதன் மூலம், அந்தத் துறைக்கு எதிரான பிரச்சாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

"ஒரு அரசைப் பொறுத்தவரை, அது செயல்பட்டால் மட்டும் போதாது; செயல்படுகிறது என்பதைப் போன்ற தோற்றத்தைத் தர வேண்டும். அந்த விதத்தில் தி.மு.க. சிறப்பாகத்தான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த மு.க. ஸ்டாலினோடு ஒப்பிட்டால், தற்போதைய முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் மிகவும் மேம்பட்டவராக இருக்கிறார். தன்னம்பிக்கை மிக்கவராகவும் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவும் காட்சியளிக்கிறார்

கல்வி, பொருளாதாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு போன்றவற்றைப் பொருத்தவரை, தொடர்ந்து மத்திய அரசோடு மாநில அரசு மோதிவருகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே இந்த போராட்டம் மிக முக்கியமானது. போராடித்தான் உரிமைகளைத் தக்கவைக்க முடியும். இழந்த உரிமைகளைப் பெற முடியும். அந்தத் திசையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார் மு.க. ஸ்டாலின்.

மேலும், துறைசார்ந்த வல்லுனர்களை தன் அருகில் வைத்துக்கொண்டு, அவர்களது ஆலோசனைக்கு செவிமெடுக்கிறார். அந்த ஆலோசகர்களுக்கு செயல்படக்கூடிய வட்டத்தை அவர் உருவாக்கித் தருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்திய மிக முக்கியமான மாற்றங்கள் இவை" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.

ஆனால், விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

 

ஓராண்டுகால தி.மு.க. ஆட்சி: சாதனையா, சாதாரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2006 - 2011 இடையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவிய கடுமையான மின் தட்டுப்பாடு அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுக்கு மிக மோசமான பெயரை ஏற்படுத்தியது. 2011ல் அக்கட்சி அடைந்த தோல்விக்கு இந்த மின்வெட்டும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இருந்தபோதும், ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலும் தற்போது கோடை காலத்திலும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவது, அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மின்வெட்டிற்கான காரணங்களை அரசைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது முன்வைத்தாலும், இரவு நேரங்களில் நிகழும் மின் தடை கடுமையான அதிருப்திக் குரல்களை ஏற்படுத்திவருகிறது.

இதற்கு அடுத்த படியாக, கடந்த சில நாட்களில் போலீஸ் காவலில் சிலர் உயிரிழந்திருக்கும் விவகாரம், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர் வினைகளை உருவாக்கியுள்ளது. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியின்போது சாத்தான் குளத்தில் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தை தி.மு.க. மிகப் பெரிய அளவில் விமர்சனம் செய்தது. மாநிலம் முழுவதும் ஒரு எதிர்ப்பலை உருவாகும் அளவுக்கு இந்த விவகாரத்திற்குக் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், தற்போது சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலிலும் திருவண்ணாமலையில் தங்கமணி என்பவர் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோதும் இறந்த சம்பவங்களுக்கு போலீஸ் விசாரணையின்போது நடந்த துன்புறுத்தலே காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. இந்த சந்தேக மரணங்களை மாநில அரசு கையாளும் விதம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முதலமைச்சரின் பொறுப்பிலிருக்கும் காவல்துறை தொடர்ந்து இம்மாதிரி அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எப்படிக் கையாளப் போகிறது தி.மு.க?

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும், தொடர்ந்து செய்திகளில் சலசலப்புகளை ஏற்படுத்துவதில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியாக மதம் சார்ந்த விஷயங்களை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, சில நாட்களுக்கு ஒரு முறையாவது அரசைப் பதில் சொல்லவைக்கும் விதத்தில் விவகாரங்களை எழுப்புவது எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது பா.ஜ.க.

இது தவிர, மாநில ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு, தி.மு.க. அரசு நிறைவேற்றிய பல மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் நிற்கின்றன. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு நீட் மசோதா மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் பா.ஜ.கவையும் மாநில ஆளுநரையும் தி.மு.க. எப்படி சமாளிக்கவிருக்கிறது என்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

துரத்தும் வாக்குறுதிகள்

தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் லட்சிய ஆவணத்திலும் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பது, பெட்ரோல் விலையில் 5 ரூபாயும் டீசல் விலையில் 4 ரூபாயும் குறைப்பது ஆகியவை இதில் முக்கியமானவையாக இருந்தன.

 

ஓராண்டுகால தி.மு.க. ஆட்சி: சாதனையா, சாதாரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டாலும் டீசல் விலை குறைப்பு, எரிவாயு மானியம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகின்றன. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பது என்பதை தனது பத்தாண்டுகால லட்சியத்தில் ஒரு பகுதியாக குறிப்பிட்டிருந்தாலும், அவை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதியாகவே எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்படுகின்றன.

இது தவிர, தமிழ்நாடு முதலமைச்சரின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் அடுத்த வாரிசாக முன்னிறுத்த முதல்வர் முயல்கிறார் என்ற விமர்சனங்களும் உதயநிதி ஸ்டாலினின் சினிமா நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களை வெளியிடுவதும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

"முதலமைச்சர் கட்சிக்குள் தனது மகனை முன்னிறுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. இம்மாதிரியான நடவடிக்கைகள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்சியில் ஜனநாயக வெளியே இல்லாமல் செய்துவிடுகின்றன. மேலும், அரசின் பிரதானமான வருவாய் டாஸ்மாக்கைச் சார்ந்திருக்கிறது. அதிலிருந்து மாநில அரசு எப்படி மீளப்போகிறது என்பதும் மிக முக்கியமான கேள்வியாக இருக்கும்" என்கிறார் ராமு மணிவண்ணன்.

இரண்டு உள்ளாட்சித் தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கடைசியாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியை இந்த ஆட்சியைக் குறித்த மக்களின் மதிப்பீடாகக் கொள்ள முடியும். ஆனால், பா.ஜ.க. கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் நிலையில், அடுத்த நான்காண்டுகளில் தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது என்பதில்தான் அக்கட்சியில் எதிர்காலம் இருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-61355913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.