Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரயாக்ராஜ் வன்முறை: “அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்” – முகமது ஜாவேதின் மகள் சுமையா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரயாக்ராஜ் வன்முறை: “அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்” – முகமது ஜாவேதின் மகள் சுமையா

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

"அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்" - முகமது ஜாவேதின் மகள் சுமையா

 

படக்குறிப்பு,

முகமது ஜாவேதின் மகள் சுமையா

பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10 நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த பேட்டியின் முழு விவரங்கள்:

சுமையா, நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்?

நாங்கள் 20 ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம். நான் இங்குதான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டினார்கள்.

காவல்துறை அறிக்கைகளில், நடந்த வன்முறைக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் உங்கள் தந்தை என்று சொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

என் அப்பாவை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவை பார்த்தால், அதில் அவர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்துச் சொல்லியிருப்பார். அமைதி, பாதுகாப்பு குறித்துப் பேசும் ஒரு மனிதர், எப்போதும் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கும் ஒரு மனிதர், திடீரென்று இரவோடு இரவாக எப்படி வன்முறையின் முக்கிய மூளையாக மாறமுடியும்?

அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தாரா? அவர் ஏதாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தாரா? அவருடைய பங்கு என்ன? காவல்துறை ஏன் அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது?

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் யாரையும் கூப்பிட முயலவில்லை. கூட்டத்தைச் சேர்க்க முயலவில்லை. காவல்துறை எந்த ஆதாரத்தின் பேரில் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறதோ, அதை எங்களுக்குக் காட்டவேண்டும். அதை எங்களுக்குக் காட்டவில்லை. பாருங்கள், அவர் இப்படியெல்லாம் கூறியுள்ளார் என்று காட்டட்டும். அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? உண்மையில் அவர் ஆர்ப்பாட்டம் நடத்த யாரையும் கூப்பிடவில்லை.

அவர் வேண்டாம் என்று தான் கூறியுள்ளார். நீங்கள் அவருடைய பதிவைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், நிர்வாகத்திடம் மனு கொடுங்கள், அரசியல் சாசன அடிப்படையில் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்த மாதிரி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை என்று அவர் எழுதியுள்ளார்.

தொழுகைக்குப் பிறகு பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லி, சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை, மக்களைத் திசை திருப்பும் ஒன்றாக காவல்துறை சித்திரித்தது.

உங்களிடம் ஆதாரம் உள்ளதா? உங்கள் அப்பாவுடைய வாட்ஸ் ஆப் சாட் போன்றவை உள்ளதா? உங்களுடைய அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நீங்கள்தான் அவருக்குச் சாதகமான ஆதாரங்களை வழங்க வேண்டும்...

இருக்கிறது. எங்கள் அப்பாவுடைய கடைசி ஃபேஸ்புக் சாட்டின் ஸ்க்ரீன் ஷாட் இருக்கிறது. அவருடைய ஃபேஸ்புக் கணக்கை நீங்கள் திறந்தால், அந்த ஃபேஸ்புக் பதிவை நீங்களும் பார்க்கலாம்.

நான் வாட்ஸ் ஆப் பற்றிக் கேட்கிறேன்.

வாட்ஸ் ஆப்பில் எதுவுமில்லை. நாங்கள் அவருடன் செய்த சாட்களை நீங்கள் படிக்கலாம். என்ன மாதிரியான பேச்சு நடந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

காணொளிக் குறிப்பு,

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்த உபி அரசு - இவர் யார்?

அவர் கைது செய்யப்பட்டபோது, உங்கள் தாய் ஃபாத்திமா மற்றும் உங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?

முதலில் சுமார் 8:30 மணியளவில் காவல்துறை வந்தது. பேச வேண்டுமென்று கூறி அப்பாவை அவர்கள் அழைத்துப் போனார்கள்.

அவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் ஒத்துழைத்தார். நான்கு மணிநேரத்திற்குப் பிறகு 12:30 மணிக்கு மேல், என்னையும் என் அம்மாவையும் பேசுவதற்காக என்று கூறி அழைத்துச் சென்றார்கள். குடும்ப உறுப்பினர் அதிக நேரமாகியும் திரும்பி வரவில்லை என்றால், அதுவும் நகரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் நேரத்தில் அனைவருக்குமே கவலை ஏற்படும். என் அம்மாவும் பயத்தில் அங்கு போக நினைத்தார்கள்.

எங்களை அழைத்துச் செல்லும்போது, நாங்கள் அப்பாவைக் கொண்டு சென்றுள்ள அதே காவல் நிலையத்திற்குத்தான் எங்களையும் அழைத்துச் செல்கிறார்களா என்று கேட்டோம். ஆம் என்றார்கள். "மேடம் உங்களோடு பேசவேண்டும்" என்றார்கள். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் எங்களை சிவில் லைன்ஸில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

முதலில் எங்களிடம் பெயர் போன்ற விவரங்களைக் கேட்டார்கள். அப்பா வீட்டில் எப்படிப் பேசுவார், அவர் எந்த மாதிரியான பதிவுகளைப் போடுவார் என்று கேட்டார்கள். எங்களுடைய குடும்பம் பற்றிய தகவல்களைக் கேட்கத் தொடங்கினார்கள். குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எத்தனை பேர், எங்கு இருக்கிறார்கள், அவர்களின் முகவரி என்ன, எந்த காவல்நிலையத்திற்குக் கீழ் வருகிறது என்பன போன்ற கேள்விகளைக் கேட்டார்கள்.

உங்களிடம் விசாரணை செய்த பிறகு உங்களை விட்டுவிட்டார்களா?

இல்லை, இரவு வந்து, எங்கள் கைபேசியைக் கொடுக்காமல், அவர்களின் கைபேசி மூலம் வீட்டுக்குக் கூப்பிட்டுக் கொடுத்து, இரண்டு நிமிஷம் பேசுமாறும் வீட்டைக் காலி செய்யச் சொல்லுமாறும் கூறினார்கள். வீட்டை காலி செய்யும்படி, இரண்டு நிமிடத்தில் என்ன சொல்ல முடியுமோ அதை அம்மா கூறினார். எங்களிடமிருந்து கைபேசியைப் பிடுங்கிவிட்டார்கள். பிறகு வீடு காலி ஆகவில்லை என்று எங்களைத் திட்டத் தொடங்கினார்கள். வீட்டை ஏன் காலி செய்ய வைக்கவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். நாங்கள் அங்கு உட்கார்ந்து இருந்தோம். கையில் கைபேசியும் இல்லை. நாங்கள் என்ன செய்யமுடியும்.

 

வீடு இடிப்பு

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

வீடு இடிப்பு

உங்களிடமும் உங்கள் அம்மாவிடமும் எப்படிநடந்துகொண்டார்கள்?

ஆரம்பத்தில் சரியாக இருந்தது. ஆனால், வீடு காலி செய்யும் பேச்சு தொடங்கிய பிறகு, மகளிர் கான்ஸ்டபில் ஒவ்வொருவராக வந்தார்கள். ஏதேதோ பேசத் தொடங்கினார்கள். அச்சுறுத்தும் விதமாக மிரட்டினார்கள். பிறகு ஒரு ஆண் கான்ஸ்டபிள் வந்து, அம்மாவை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இருந்தோம். என்ன செய்வது, என்ன நடக்கிறது என்று புரியவில்லை. காலையில் சுமார் 8:20 மணிக்கு எங்களுடைய உறவினர் வீட்டில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள்.

எவ்வளவு நேரம் காவல் நிலையத்தில் இருந்தீர்கள்?

இரண்டு இரவுகளை அங்குக் கழித்தோம்.

அதாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு...

ஆம், பிறகு ஞாயிறு காலையில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள். அதிலிருந்து சில மணிநேரம் கழித்து புல்டோசர் எங்களுடைய வீட்டை இடித்தது.

இந்த விவகாரத்தில், இந்த வீடு யாருடையது, நிலம் யார் பெயரில் உள்ளது?

இந்த நிலம் என் அம்மாவுடையது. என் தாத்தா, அம்மாவுடைய அப்பா, அவருக்கு வழங்கிய வீடு.

இதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் அவர்களிடம் இருக்கிறதா?

இருக்கிறது. வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி அனைத்துமே அம்மா பெயரில்தான் வரும். இந்த நிலம் அம்மாவுடையது. வீடு அம்மாவுடையது. அனைத்துமே அம்மாவின் பெயரில் தான் உள்ளது.

 

அஃப்ரீன் பாத்திமா

பட மூலாதாரம்,AFREEN FATIMA

 

படக்குறிப்பு,

அஃப்ரீன் பாத்திமா

இதில் சட்டவிரோதம் என்ன இருக்கு? எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்பா பெயரில் நோட்டீஸ் வந்தது. அப்பா பெயரில் நோட்டீஸை 12 மணிநேரத்திற்குள் வீட்டு வாசலில் ஒட்டினார்கள். பிறகு, வீட்டை இடித்துவிட்டார்கள். வீடு அம்மாவின் பெயரில் இருக்கும்போது, அப்பா பெயரில் நோட்டீஸ் கொடுத்து எப்படி வீட்டை இடிக்க முடியும்? வீடு அம்மாவுடையது.

கட்டிடத்தின் வரைபடத்திற்கு ஒப்புதல் உள்ளதா?

பிடிஏ மூலமான வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லை. இதற்கு ஒரு காரணம் உள்ளது. இது தொடர்பாக எங்கள் வீட்டில் பலமுறை பேசியுள்ளோம். வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லையென்று அப்பா கவலைப்படுவார். ஆனால், ஒப்புதல் வாங்க, குறைந்தது 25 முதல் 30 லட்சம் வேண்டியிருந்தது.

உங்கள் வீட்டிலிருந்து சில ஆவணங்கள், காகிதங்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆட்சேபகரமான சில பொருட்கள் அதாவது, போஸ்டர்கள் போன்றவை. அவர் நீதிமன்றத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறதே...

எங்களுடைய வீடு இடிக்கப்பட்டபோது, அது முழுவதுமாக காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அது வெளியிலிருந்து நடந்தது. ஆனால், உள்ளே?

வெளியில் வந்த சாமான்கள் தெரிந்ததே. அதைக் கையில் எடுத்து, "பாருங்கள். இவர்கள் வீட்டிலிருந்து இது கிடைத்துள்ளது," என்று காட்டினார்கள். அனைவரும் பார்த்தார்கள். வீடு முழுக்கக் காலியானபோது, அனைவரும் பார்த்தார்கள். பிறகு வீடு இடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எங்களுடைய வீட்டிலிருந்து ஆயுதம் அல்லது வேறு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், வீடு முழுவதும் இடிந்தபிறகு அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கிறது. அது எப்படியென்று தெரியவில்லை. வீடு முழுவதும் உடைந்தபிறகு, அனைத்து சாமானையும் வெளியில் தூக்கிவீசிய பிறகு எப்படிக் கிடைக்கும்?

உங்கள் அப்பா லைசென்ஸ் பெற்ற ஆயுதம் வைத்திருந்தாரா?

எங்களிடம் லைசென்ஸ் உள்ள ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் அதை ஒப்படைத்துவிடுவோம். அதேபோல, அந்தத் துப்பாக்கியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் ரசீதும் எங்களிடம் இருந்தது. ஆனால், இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்போதும் அந்தத் துப்பாக்கி அங்குதான் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு, அதைக் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

எங்களுடைய வீடு இடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் தங்குவதற்கே இடமில்லை. வீட்டை எப்படியோ கட்டிவிடுவோம். எங்கேயாவது தங்கிக் கொள்வோம். ஆனால், குடும்பம்! அவர்கள் ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்.

ஜாவேத் அகமதின் வழக்கறிஞர் கே.கே.ராய், அனந்த் ஜனானேவுடன் பேசிய விஷயங்கள்.

இந்த வீட்டை இடிக்கும் நடவடிக்கை, சட்டரீதியாக எவ்வளவு தவறானது? இது தவறு என்று எப்படி நிரூபிப்பீர்கள்?

இங்கு பாருங்கள். புல்டோசர் நடவடிக்கை என்பது, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவறானது. இந்த விவகாரத்தில் இரண்டு தவறுகள் நடந்துள்ளன. முதலில் ஜாவேத் அகமதின் வீட்டை இடிக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். ஆனால், அவர்கள் இடித்தது ஜாவேத் அகமதின் வீடு இல்லை. அது பர்வீன் ஃபாத்திமாவுடைய வீடு.

அந்த வீட்டை அவருடைய அப்பா, அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இஸ்லாமிய சட்டத்தின்படி, அது முழுமையாக பர்வீன் ஃபாத்திமாவுக்குச் சொந்தமானது. அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. ஜூன் 9-ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட நோட்டீஸ் அனைத்துமே ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள். ஒரு நாள் காலக்கெடு கூட கொடுக்கப்படவில்லை. வீட்டை இடித்துவிட்டார்கள்.

 

சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜில் ரோந்து செல்லும் போலீசார்

பட மூலாதாரம்,@PRAYAGRAJ_POL

 

படக்குறிப்பு,

சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜில் ரோந்து செல்லும் போலீசார்

வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லையென்று நிர்வாகம் சொல்கிறதே?

வரைபடம் ஒப்புதல் இல்லாததற்கு, அதாவது உத்தர பிரதேச நகர்ப்புற மேம்பாட்டு சட்டத்தில், வீடு இடிக்கப்பட வேண்டுமென்று சொல்லப்படவில்லை. முதலில் காம்பௌண்டிங் செய்யுங்கள். இல்லையென்றால், சீல் வையுங்கள். அந்த வீடு தொடர்பாக தீவிரமான ஏதாவது விஷயம் இருந்தால், அதைப் பறிமுதல் செய்யுங்கள். வீட்டை இடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து சேர்மன் முன்னிலையில் 30 நாட்களுக்குள் அப்பீல் செய்யும் வசதியுள்ளது.

மேலே என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் லெட்டர் பெட்டிஷன் போட்டுள்ளீர்கள். ஆனால், நீதிமன்ற விடுமுறை நடக்கிறது. தலைமை நீதிபதியும் இல்லை.

நாங்கள் உச்ச நீதிமன்றத்திடமும் பேசியுள்ளோம். அனைத்து ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் ரெகுலர் பெட்டிஷன் தாக்கல் செய்யும் முடிவை எடுத்துள்ளோம். ஜஹாங்கிர்புரி வீடுகள் தகர்ப்பு விஷயத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இடிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

அவர் குற்றமற்றவர் என்று எப்படி நிரூபிப்பீர்கள்?

அவர் மீதான வழக்கில், ஜாமீனுக்கு நாங்கள் விண்ணப்பிப்போம். அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். ரிட் எஃப்.ஐ.ஆரையும் நாங்கள் எதிர்ப்போம். அவருடைய மனைவி மற்றும் மகளை சட்டவிரோதமாக மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் வைத்திருந்தது தொடர்பாகவும் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடுப்போம்.

https://www.bbc.com/tamil/india-61804514

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரயாக்ராஜ் வன்முறை: ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

புல்டோசர்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

பிரயாக்ராஜில் உள்ள ஜாவேத் முகமதின் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே புல்டோசர்

பிரயாக்ராஜ் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாவேத் முகமதின் வீட்டை உத்தரபிரதேச அரசு ஞாயிற்றுக்கிழமை இடித்துள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் ஜாவேத் முகமது தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் யோகி அரசின் இந்த நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பியதோடு கூடவே இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.

அதே நேரத்தில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குற்றவாளிகள் / மாஃபியாவுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை தொடரும்' என்று ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் புல்டோசர் மூலம் வீட்டை இடிக்கும் நடவடிக்கை சட்டப்பூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு என்ன சொல்கிறது?

பிரயாக்ராஜில் உள்ள ஜாவேத் முகமதின் வீடு இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, யோகி ஆதித்யநாத் ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார்.

"குற்றவாளிகள்/மாஃபியாக்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை தொடரும். ஒரு ஏழையின் வீட்டின் மீது தவறுதலாக கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஒரு ஏழை/ஆதரவற்ற நபர் சில காரணங்களால் பொருத்தமற்ற இடத்தில் வீடு கட்டியிருந்தால், முதலில் உள்ளாட்சி நிர்வாகத்தால் முறையான ஏற்பாடு செய்யப்பட்டு, அது முறையாக நிர்வகிக்கப்படும்,"என்று அதில் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, மே 26-ம் தேதி, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா சட்டப்பேரவையில் "ஏழையின் வீட்டில் புல்டோசர் பணியில் ஈடுபடுத்தப்படாது. ஆனால் குண்டர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

குற்றவாளிகளுக்கு எதிரான விரைவான நடவடிக்கை என்ற பெயரில், உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் புல்டோசர் பயன்பாடு தொடங்கியுள்ளது.

"குண்டர்கள், துரோகிகளை நான் விடமாட்டேன். அவர்களை உடைத்து மண்ணில் கலப்போம். சிறுமிகளை தவறாகப்பார்க்கும் யாரும் தப்பிக்கமுடியாது. வீடுகள் இருக்காது, கடைகள் இருக்காது. குற்றவாளிகளுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று இதுவரை 4 முறை மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள சிவராஜ் சிங் செளஹான் சமீபத்தில் கூறினார்.

சிவராஜ் சிங் செளஹானின் அரசில் உள்துறை அமைச்சராக உள்ள நரோத்தம் மிஸ்ராவும் கர்கோன் வன்முறைக்குப் பிறகு இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார்.

"கற்கள் எங்கிருந்து வந்ததோ அந்த வீடுகள் கற்குவியலாக மாற்றப்படும்" என்று மிஸ்ரா கூறியிருந்தார்.

 

யோகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த அறிக்கைக்குப் பிறகு, நிர்வாகம் கர்கோன் மாவட்டத்தில் பலரின் வீடுகளை இடித்தது.

உத்தரபிரதேச முதல்வராக பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஒரு அரசியல் சாசனப் பதவியை வகிக்கிறார்.

இதிலிருந்து புல்டோசர் மூலம் வீட்டை இடிப்பது தொடர்பாக இந்தத் தலைவர்கள் அளிக்கும் அறிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இருந்தாக வேண்டும்.

"ஒருவர் செய்யும் எந்தக் குற்றத்திற்கும் தண்டனையாக, அவருடைய வீடு இடிக்கப்படலாம்" என்பதே இவர்களின் அறிக்கைகளுக்கு அர்த்தம்.

ஆனால் இந்தியச் சட்டம் அத்தகைய நடவடிக்கையை அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

சஞ்சய் ஹெக்டே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானது மற்றும் பழிவாங்கும் செயல் என்கிறார் அவர்.

"சந்தேகத்திற்குரிய நபர்களின் வீட்டில் புல்டோசரை ஏற்ற தற்போதைய சட்டத்தில் எந்த விதியும் இல்லை. மாநகராட்சி தொடர்பான சட்டத்தை மீறியதற்காக புல்டோசரை ஈடுபடுத்தியதாக அரசு கூறுகிறது. எனவே அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அறிவித்த பின் விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும்."

"இங்கு என்ன நடந்தாலும் நகராட்சி சட்டத்தை மீறுவதற்காக இந்த இடிப்பு நடக்கவில்லை. ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் செய்யப்படும் பழிவாங்கும் செயலாகும். இது முற்றிலும் சட்டவிரோதமானது" என்றார் அவர்.

ஆனால் தண்டனை என்ற பெயரில் வீட்டை இடிக்க சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ஹெக்டே, "ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மாற்றலாம் என்பது சட்டத்தில் உள்ள ஒரே விதி. ஆனால், ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்ற சட்டம் இதுநாள் வரையில் உருவாக்கப்படவில்லை."என்றார்.

உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூரும் இந்த நடவடிக்கைகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கருதவில்லை.

 

புல்டோசர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனுடன், குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் சட்டத்தை மீற முடியாது என்று அவர் கூறுகிறார்.

"குற்றங்களைத் தடுக்க நிர்வாகம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். இதற்காக சட்டத்தை மீற முடியாது. குற்றங்களைத் தடுக்க சிஆர்பிசி, நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணிக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

சட்ட விரோத நடவடிக்கை ஏன்?

இவ்வாறான நிலையில், எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக வீட்டை இடிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றால், இந்த நடவடிக்கையை அரசுகள் தொடர்ந்து நியாயப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

புல்டோசர் போன்ற செயல்களால் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம் என்ற கேள்வியும் உள்ளது. இதற்கு விடை காண, புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் கேங்ஸ்டர் விகாஸ் துபேயின் வீடு இடிக்கப்பட்டதில் இருந்து வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. யோகி ஆதித்யநாத்தின், குற்றங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடாக இது பார்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் பிற மாவட்டங்களிலும் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதன் மூலம் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைத்தது.

 

கார்கோனில் இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகள்

பட மூலாதாரம்,MADHYA PRADESH POLICE VIA TWITTER

 

படக்குறிப்பு,

கார்கோனில் இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகள்

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, பலரின் வீடுகள் மற்றும் கடைகளை நிர்வாகம் புல்டோசர்களைக் கொண்டு சேதப்படுத்தியது.

இதற்கான காரணத்தை அப்பகுதி மாவட்ட அதிகாரி அனுக்ராவிடம் கேட்டபோது,"வீடுகள் எரிக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள். அந்த மக்களிடையே மிகுந்த கோபம் உள்ளது, இந்த செயலால் நிர்வாகம் எதோ செய்வதாக அவர்கள் உணர்கிறார்கள். நிர்வாகம் தங்களுடன் நிற்கிறது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

புல்டோசர்களைக் கொண்டு வீடுகள் மற்றும் கடைகளை இடித்த சம்பவங்கள் குஜராத்திலும் காணப்படுகின்றன. பின்னர் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

ஜஹாங்கிர்புரியில் புல்டோசர், கதவை உடைத்து திறக்கிறது

பட மூலாதாரம்,SALMAN ALI/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜஹாங்கிர்புரியில் புல்டோசர், கதவை உடைத்து திறக்கிறது

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது.

கான்பூரிலிருந்து கார்கோன் வரையிலும், ஜஹாங்கிர்புரியிலிருந்து பிரயாக்ராஜ் வரையிலும் புல்டோசர்கள் மூலம் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் சம்பவங்களில் ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. அதுதான் ஊடகங்களின் மிகப்பெரிய கூட்டம்.

இதனுடன், புல்டோசர் மூலம் வீடுகள் மற்றும் கடைகளை இடித்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் தலைவரின் படத்தை மீம்ஸ், சமூக வலைதள பதிவுகள் மூலம் வலுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இதற்கு உதாரணம் உத்தரபிரதேச அரசில் அமைச்சர் சஞ்சய் ராயின் ட்வீட்.

சம்பந்தப்பட்ட தலைவர் யாருக்கும் பயப்படுவதில்லை என்பதையும், குற்றத்திற்கு எதிராக கடுமையாக செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதையும் நிலைநாட்ட, இந்த சமூக ஊடகச் செய்திகள் முயல்கின்றன.

காணொளிக் குறிப்பு,

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்த உபி அரசு - இவர் யார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபர்களைப் பிடிப்பது விரைவான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இதற்குப் பிறகு குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கான நீதித்துறை செயல்முறை தொடங்கியது.

ஆனால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, புல்டோசர் மற்றும் ஹாஃப் என்கவுன்டர்கள் (குறிப்பாக காலில் சுடுவது) போன்றவற்றைப் பயன்படுத்துவது விரைவான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதன் மூலம் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலிலும் பா.ஜ.க. ஆதாயம் பெற்றது. ஆனால் இதற்கெல்லாம் என்ன தேவை என்ற கேள்வி எழுகிறது.

மூத்த பத்திரிகையாளர் அஷூதோஷ் பரத்வாஜ் சமீபத்தில் அவுட்லுக் என்ற ஆங்கில இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார், அதில் அவர் இதை விரிவாக விளக்கியுள்ளார்.

"இந்த மாபெரும் இயந்திரம் ஒரு வலுவான தலைவரின் பிம்பத்தை உருவாக்கப் பயன்படுகிறது. புல்டோசர் பாபா மற்றும் புல்டோசர் மாமா போன்ற புனைப்பெயர்கள் வளர்கின்றன. மார்ச் மாதம், பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் ஷர்மா தனது அரசு இல்லத்திற்கு வெளியே பல புல்டோசர்களை நிறுத்தி வைத்தார். அவைகளில் பிரமாண்டமான போர்டுகள் அமைக்கப்பட்டன,"என்று பரத்வாஜ் எழுதுகிறார்.

'மகளின் பாதுகாப்பில் யார் இடையூறாக வந்தாலும், புல்டோசர் மாமா சுத்தியலாக மாறுவார்," என்று அதில் எழுதப்பட்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, 'புல்டோசர் மாமா ஜிந்தாபாத்' என்ற கோஷத்துடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை ஷர்மா வரவேற்றார். சட்ட விரோதமான செயல் இப்போது அரசியல் ஆதாயம் தரும் செயலாக மாறிவிட்டது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் 58 பேரணிகளில் புல்டோசர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், இந்த எல்லா இடங்களிலும் கட்சி வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வந்தன. யோகியின் வெற்றிக்குப் பிறகு ஆக்ராவில் பல இளைஞர்கள் புல்டோசர் மற்றும் புல்டோசர் பாபாவின் பெயரை பச்சை குத்தியுள்ளனர் என்று யோகியின் அபிமானிகள் கூறுகின்றனர்.

புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தால் என்ன ஆகும்?

ஆனால், புல்டோசர் நடவடிக்கைகளை பாஜக நியாயப்படுத்துகிறது மற்றும் குற்றங்களைக் குறைப்பதில் அவை உதவிகரமாக உள்ளன.

இவ்வாறான நிலையில், சட்டவிரோதமான முறையில் வீடுகளை புல்டோசர் மூலம் அகற்றும் சம்பவங்களை சாதாரணமாக கருதினால், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

"அச்சத்தை உருவாக்கி குற்றங்களை தடுப்பது என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது. இப்போது சீர்திருத்தக் கோட்பாடு உள்ளது . ஆதிக்கவாதிகளின் கொள்கை இப்போது வேலை செய்யாது. இப்போது 18 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளைப் பற்றி பேசினால் அது சரியில்லை.மிகவும் சிரமப்பட்டு இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடிந்தது. கடந்த 75 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இதை சிறப்பாக தொடர வேண்டும். அதை உடைக்க முடியாது. "என்று முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் கூறினார்.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாகிவிட்டால் அதன் விளைவு என்னவாகும்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் ஹெக்டே, "அரசுகள் இப்படியே தொடர்ந்தால், ஒன்று பொதுமக்கள் பயத்தில் ஒடுங்கி விடுவார்கள் அல்லது கோபம் மேலும் அதிகரிக்கும். இது எந்த விவேகமான அரசும் செய்யாத நெருப்பை நெருப்பால் அணைக்கும் வேலை" என்று குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-61817259

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு: அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம் - 10 தகவல்கள்

  • சுசித்ரா மொஹந்தி
  • பிபிசிக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த ஒரு சில தினங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தி கட்டுமானங்களை இடிக்க தடை விதிக்கக் கோரி ஜாமியத் - உலேமா - இ - ஹிண்ட் அமைப்பு தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு பதில் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு மற்றும் பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

கோடை விடுமுறை கால மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ. எஸ். போபண்ணா மற்றும் விக்ரம்நாத் அடங்கிய இரண்டு நீதிபதிகள் இந்த மனுவை விசாரித்து அடுத்த விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

முன்னதாக, "ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட முடியாது," என்று கூறிய நீதிபதிகள், "அந்த நடவடிக்கைகள் சட்டத்தின்படி நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் கட்டுமானங்களை இடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உத்தர பிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுமாறு ஜாமியத் உலேமா இ ஹிண்ட் அமைப்பு மனுவில் கோரியிருந்தது.

இன்றைய விசாரணையின்போது வாதிடப்பட்ட தகவல்களில் 10 முக்கிய விவரங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1) இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், குற்றவியல் மனுவின் அடிப்படையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்பது தொழில்நுட்ப ரீதியாக இது டெல்லிக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும் என்று வாதிட்டார்.

2) உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்த பிறகும் கட்டுமானங்கள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவது தொடர்கிறது. இத்தகைய காட்சிகளை நாங்கள் இதுவரை கண்டதில்லை. எனவேதான் நீதிமன்றத்தின் தலையீட்டை கோரி இடைக்கால மனுவை தாக்கல் செய்ய நேர்ந்துள்ளது. இங்கே அரசியலமைப்பும் அதை அமல்படுத்த சட்டமும் உள்ளது. அவர்கள் எப்படி கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தார்கள் என்பதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று வழக்கறிஞர் சந்தர் உதய் சிங் கூறினார்.

3 ) நீதியை வழங்க இப்போது புல்டோசர் பயன்படுத்தப்படுவது புதிய முறையாக மாறிவிட்டதா? அவர்களால் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது? என்று ஜாமியத் உலேமா அமைப்பின் மற்றொரு வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

4) இடிக்கப்பட்ட குடியிருப்புகள் 'சட்டவிரோத கட்டுமானங்கள்' என்று கூறி இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது. புல்டோசரைக் கொண்டு வீடுகள் இடிக்கப்படுகின்றன. சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக புல்டோசர் கொண்டு நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார் வழக்கறிஞர் சந்தர் உதய் சிங்.

 

இடிப்பு நடவடிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 ) "இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எங்கே கொடுக்கப்பட்டது?" எவராவது சட்டவிரோதமாக வீடோ கட்டுமானங்களை எழுப்பியிருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களும் அதிகபட்சமாக 40 நாட்களும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தர் சிங் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதம்

6) இந்த வழக்கில் உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா ஆஜராகி, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை. இந்த இடிப்பு நடவடிக்கை ஜஹாங்கிர்புரியில் தொடங்கியது. இடிப்புக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த மத மாச்சரியங்களைக் கடந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார்.

7) இந்த வாதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர் சந்தர் சிங், என்ன நடக்கிறதோ அது அரசமைப்புக்கு எதிரானது. அதிர்ச்சியூட்டக் கூடியது. இது ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

😎 அதற்கு ஆட்சேபம் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, இந்த பிரச்னை அரசியலாக மாறுவதற்கு நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கட்டுமானம் செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்கள் செயல்படவும் அவகாசம் வழங்கப்பட்டது என்று கூறினார்.

9) உத்தர பிரதேச அரசுக்காக ஆஜரான முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே, 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் தேதி உட்பட பல்வேறு தேதிகளில் கட்டுமானத்தை ஏன் இடிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த கட்டுமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், அந்த சீல் உடைக்கப்பட்டது என்று கூறினார்.

10) வடக்கு டெல்லியில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது அந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுஉத்தரவு வரும்வரை தடை விதித்தது. அதை ஒத்த சம்பவம்தான் உத்தர பிரதேசத்திலும் நடப்பதால் அதை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் நடவடிக்கை. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முனிசிபல் சட்டத்தையும் இதர சட்டத்தையும் மீறி நடந்ததாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரரான ஜாமியத் உலேமா - இ - ஹிண்ட் என்ற அமைப்பு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-61828342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.