Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`இந்துக்கள் அனைவரும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் அவர்களுக்கு போதிய ஒழுங்கமைப்பு இல்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`இந்துக்கள் அனைவரும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் அவர்களுக்கு போதிய ஒழுங்கமைப்பு இல்லை'

[08 - August - 2007]

* கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை

பல வேற்றுமைப்பட்ட சமயக் கூறுகளை உள்ளடக்கிய மக்கட் பிரிவினர்களைத் தன்னுட் கொண்டதே இந்து மதம். இந்து மதம் என்ற சொல்லைப் பாவிக்காதீர், சைவசமயம் என்று கூறுங்கள் என்று பெரும்பான்மை இந்து சமயிகள் இலங்கையில் காலங்காலமாகப் பின்பற்றிய மதத்தின் பெயரால் எல்லா இந்து சமயத்தவரும் அழைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இன்று இருக்கின்றார்கள். இலங்கையின் பெரும்பான்மையினர் சிங்களவர்; ஆகவே நாடுபூராகவும் ஒரே மொழி அரச மொழியாகப் பாவிக்கப்படவேண்டும் என்று கூறி "சிங்களம் மட்டும்" சட்டத்தை இயற்றிய பெரும்பான்மையின சிங்கள அரசியல்வாதிகளுக்கும் சைவசமயிகளென்றே எல்லா இந்து மக்களும் அழைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுபவர்களுக்கும் அதிகம் வேற்றுமையில்லை. பெரும்பான்மை அராஜகம் இது. சிறுபான்மையினரை அடக்கி ஆள வேண்டும் என்ற மனோபாவத்தின் வெளிப்பாடே இது. இது சமயத்துக்கு உதவாதது. மதக் குறிக்கோள்களுக்கு மாறுபட்டது.

எவ்வாறு "சிங்களம் மட்டும்" என்ற சட்டம் தமிழர்களுக்கு இன்னல்களையும் இடையூறுகளையும் விளைவித்ததோ அதேபோல் இந்து மக்கள் அனைவரையும் சைவசமயிகள் என்று அழைப்பதும் சைவர் அல்லாதோருக்கு இடர் விளைவிக்கும் செயலாகும். பொருத்தமற்ற செயலாகும். சைவர்களை மட்டும் சைவசமயிகள் என்று அழைப்போம். மற்றவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் தம்மை அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறுபவர்களும் இருக்கின்றார்கள். அதாவது பலதரப்பட்ட சநாதன தர்மப் பின்பற்றாளர்கள் இன்று ஒன்று சேர்த்து இந்து சமயிகள் என்று அழைத்து வருவதை விடுத்து அவர்களிடையே வேற்றுமையைக் கிளப்பிவிட வேண்டும் என்று மேற்படி நபர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

கிட்டத்தட்ட இன்று கிழக்கிலங்கையில் நடைபெறும் அரசியல் நாடகத்தை ஒத்தது இந்தச் செயல். ஒருமித்திருந்த தமிழினத்தை வடக்கர், கிழக்கர் என்பதால் தெற்கர்தான் நன்மை பெறப்போகின்றார்கள். இந்து மதத்தினர் மத்தியில் பிரிவினைகள் ஏற்படுவதால் இந்து மக்களே பாதிக்கப்படப்போகின்றார்கள்.

காகத்தையும் குயிலையும் மைனாவையும் பறவைகள் என்கின்றோம். மனிதர்களுடனும் மிருகங்களுடனும் ஒப்பிடுகையில் இவை மூன்றும் பறவைகள் தான். அவற்றுள் வேற்றுமைகள் இருந்தாலும் மூன்று புள்ளினங்களும் பறவைகள் என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றின் உள் வேற்றுமைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்றால் தான் காகம், குயில், மைனா என்று அவற்றைத் தனித்தனியாக அழைக்கின்றோம்.

இந்துக்கள் என்ற சொல் பலதரப்பட்ட சநாதன தர்மப் பின்பற்றாளர்களை உள்ளடக்குகின்றது. அவர்களுள் விநாயக வழிபாட்டாளர்கள், சைவர், வைஷ்ணவர், சக்தி வழிபாட்டாளர்கள், முருக வழிபாட்டாளர்கள், சூரிய வழிபாட்டாளர்கள் என்று பல தரப்பட்டோர் அடங்குவர். வேதங்களை ஒப்புக்கொள்வோரை வைதிகர் என்றும் ஒப்புக்கொள்ளாதோரை அவைதிகர் என்றும் குறிப்பிடுவர். அவைதிகர் என்போர் உலகாயத்தர் (Materialists), சமணர், பௌத்தர் ஆவர். வைதிகர் என்போர் சாங்கியர், யோக மதத்தினர், நையாயிகர், மீமாம்சகர், வேதாந்திகள், சித்தாந்திகள் ஆகியோர் ஆவர். அவர்களுள் சித்தாந்திகளே சைவ சமயத்தவர்கள். இப்படி இருக்க எல்லோரையும் சைவ சமயிகள் என்று அழைக்க வேண்டும் அல்லது எல்லோர் மதத்தையும் சைவ சமயம் என்று குறிப்பிட வேண்டும் என்று கூறுவது காகம், குயில், மைனா மூன்றையும் குயில் என்றோ காகம் என்றோ மைனா என்றோ அழைப்பது போல் அமைகிறது.

ஆகவே, சைவ சமயிகளாக இருக்கும் மக்கள் சிந்தாதிகளாக இருக்கும் எம்மவர் தொடர்ந்து சைவ மதத்தைப் பின்பற்றி வருவோமாக! ஆனால், சைவர் அல்லாதோர்களையும் சைவ சமயத்தவர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுத்துவோமாக. இதனால்தான் உங்கள் மன்றம் இந்து மன்றம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

உண்மையில் பல் சமய நோக்குகளைத் தன்னுள் அடக்கியதே எங்கள் இந்து சமயம்.

உதாரணமாக வேதாந்தம் என்று கூறும் போது அதில் கூட உட்பிரிவுகள் உள்ளன. சங்கரரின் அத்வைத வேதாந்தம், இராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம், மத்வாச்சாரியாரின் துவைதம் ஆகியன அவை. தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கும்போது நோக்குகள் வேற்றுமைப்படுகின்றன. ஆகவே, வேதாந்திகளுக்குள்ளும் உட்பிரிவுகள் இருப்பதைக் காணலாம். வேதாந்திகளுக்கு வேதங்கள் ஆதாரம் என்று கூறினால், சைவ சித்தாந்திகளுக்கு ஆகமங்களே முக்கிய ஆதாரம். வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களை சிறப்புப் பிரமாணமாகவும் கொள்வது மரபு. உலகையும் அதில் அடங்கலான படைப்புகளையும் அவற்றை நோக்கும் மனிதனையும் அவை யாவற்றினதும் இயல்புகளையும் ஆராய்ந்ததாலேயே இந்திய தத்துவ ஞானம் வளர்ந்தது.

"கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்றது உலகாயதம். அதாவது கண்ணால் கண்டு கொள்வது பிரத்தியட்சம். அதை மட்டுமே ஏற்பது உலகாயதம். அனுமானம், ஆப்த வாக்கியம் ஆகியவற்றை அவர்கள் ஏற்பதில்லை. இதனால் இறைவனை அவர்கள் ஏற்பதில்லை. புலன் நுகர் காட்சிப் பொருட்களை மட்டுமே ஏற்பர். இது ஒரு அந்தம். நாம் கண்ணால் காணும் இந்த உலகம் பொய். நம் அறியாமையால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுகின்றோம் என்றார்கள் வேதாந்திகள்.

இது இன்னொரு அந்தம். இன்றைய பௌதிகவியலும் வேதாந்த வாக்குகளைப் பின்பற்றியே செல்கின்றது. அணுவின் அடிமட்டக் கீழ்பிரிவுகளை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் நாம் காணும் உலகில் உண்மையில் துகள்கள் அல்லது Particles என்று ஏதும் இல்லை. பருப்பொருட்கள் போல் காட்சியளிப்பவை. ஓயாத சக்தியின் பல்வித இடைச்சிதறலும் இடைத்தொடர்புமே என்கிறது அந்த விஞ்ஞான அறிவு. எதுவுமே நிரந்தரமில்லை. நிரந்தரம் போல் காட்சியளிக்கின்றன. ஆகவே, நாம் காணும் இந்த துகள்களால் ஆன உலகமாகக் கருதும் இந்த உலகமானது ஒரு மாயையே என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

ஆனால், இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றுபட்ட, சம்பவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உறவுபடைத்த, உள்ளார்ந்த சக்தியினால் இயக்கப்படும் ஒன்றே என்கிறது விஞ்ஞானம். அதுமட்டுமல்ல அடிமட்ட அணு ஆராய்ச்சியின் பின்னர் சகல நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டு இயங்கிக் கொண்டிருப்பதையும் அதை அவதானிக்கும் மனிதனும் அந்த நிகழ்வுகளில் ஒரு பாத்திரதாரி என்கிறது விஞ்ஞானம். ஆகவே, "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்ற உலகாயதக் கொள்கையில் இருந்த விஞ்ஞானம் வேதாந்தக் கொள்கைகளைச் சாரும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேர்ப்பட்ட இருதுருவ கோட்பாடுகளைக் கொண்ட இந்து மதம் ஒரு மதமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்றால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் எங்கள் இந்திய சமய கலாச்சாரத்தின் சிறப்பம்சம் அது.

அதே ஒரு பரந்த நோக்கை நாங்கள் வேற்றுமதங்கள் சம்பந்தமாகவும் எடுத்துக்காட்ட வேண்டும். இதற்குப் பல் சமய அறிவு அவசியம். அவ்வறினூடு மதங்களின் உள்ளார்ந்த ஒருமைப்பாட்டை கண்டறியலாம். அந்த அறிவை அதை முன்வைத்து சமயங்களுள் எழும் முரண்பாடுகளையும் பூசல்களையும்களைய ஆவன செய்யலாம்.

இந்து மதத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. ஒன்று வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. அடுத்தது இந்து மதத்தின் தொடர் பரிணாம வளர்ச்சி. காலத்திற்குக் காலம் ரிஷிகளும் தவமுனிவர்களும் பிறந்து மதத்தைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இந்து மதத்தை ஆற்றுப்படுத்தி வந்துள்ளார்கள்.

மற்றைய மதத்தவர்கள் யாவரும் எப்பொழுதோ இருந்த ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் சொன்ன விடயங்களைச் சொல்லி, கடந்த காலத்தின் நிழலிலேயே நடந்து வருகின்றனர். ஆனால், இந்து மதம் அப்படியல்ல. காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இதைத்தான் செய்தார்கள். வேதம் ஒன்று. அதனைப் பார்க்கும் விதம் நவீன நோக்கிற்கு ஏற்ப எடுத்தியம்பப்பட்டுள்ளது. இன்று சாயிநாதப் பெருமானும் அதையே செய்கின்றார். பல சுவாமிமார்கள் காலத்திற்கு ஏற்றவாறு வேத உண்மைகளைப் புது வடிவங் கொடுத்து மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

இன்று உலகில் ஆயிரம் இலட்சம் இந்துகள் வாழ்கின்றார்கள் (One Billion). இவர்களுள் 70 சதவீதமானர்கள் 35 வயதிற்குக் குறைந்தவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது வயதுவந்தோர் தொகை 30 விகிதம் மட்டுமே. உலக மக்களுள் அதிக செல்வம் மிகுந்த சமூகத்தினர் யூதர்கள் என்றால் அடுத்து ஜப்பானியரும் மூன்றாவது சீனரும் இடம்பெறுகின்றார்கள். நான்காவதாகச் செல்வம் படைத்த மக்கள் என்று கணிக்கப்பட்டு இருப்பவர்கள் உலக இந்துக்களே. இந்து மக்களுள் இருந்துதான் உலகத்தின் ஆகக்கூடிய வைத்தியர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ஜனப் பெருக்கத்திலும் இந்து மக்கள் முதல் நிலை வகிக்கின்றார்களாம். 1901 ஆம் ஆண்டில் உலக ஜனத்தொகையில் 12.3 சதவீதமாக இருந்த இந்து மக்கள் 2001 ஆம் ஆண்டில் 14 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளார்கள். பௌத்த சமயத்தினர், கிறிஸ்தவ சமயத்தினர், ஏன் இஸ்லாம் சமயத்தினர் கூட முன்னைய சதவீதத்தில் இருந்து முன்னேறவில்லை என்று புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. சீனாவின் ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற கொள்கை அவர்கள் வளர்ச்சியைத் தடைசெய்தது. மேலைநாட்டினர் குழந்தைகள் பெறுவதில் சிக்கனம் காட்டி வந்துள்ளனர். இஸ்லாமியர் பலதார மணங்களில் ஈடுபட்டாலும் அவர்களின் குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

இப்புள்ளி விபரங்கள் எல்லாம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டலாம். எனக்கு இவற்றைத் தந்துதவியவர் கதிர்காமத் தெய்வானை அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக விளங்கும் வட இந்திய சுவாமி அவர்கள்.

உங்கள் மன்றமோ, வேறு எந்த மன்றமோ அழைத்தால் மேலும் இவைபற்றிய முழு விபரங்களையும் தந்து ஆங்கிலத்தில் உங்கள் மத்தியில் பேச ஆயத்தமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

ஒரு முக்கிய கேள்வியை அந்த சுவாமி அவர்களிடம் முன்வைத்தேன். மற்றைய மதங்கள் யாவும் தம்மிடையே ஒரு கட்டுக்கோப்பை, ஒழுங்கமைப்பைப் பேணி வருகின்றன. ஆனால், இந்துக்கள் மத்தியில் அது காணப்பெறவில்லையே என்று கேள்வி எழுப்பினேன். ஆங்கிலத்தில் அவர் கூறிய பதிலை உங்களுக்குத் தமிழாக்கம் செய்து தருகிறேன்.

ஒரு இறைவன், ஒரு நூல், ஒரு மத ஆசிரியர் என்கின்றனர் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும். வெளிப்படையாகப் பார்த்தால் அவை அழகான தோடம்பழங்களைப் போல் முழுமையாக இருக்கின்றன. உள்ளே பிரித்துப் பார்த்தீர்களானால் சுளை சுளையாக வேறுபட்டு இருப்பதைக் காணலாம். அங்கு ஒற்றுமையில்லை. கிறிஸ்தவர்களுள் 400க்கு மேற்பட்ட சமயக் குழுக்கள் (Sects) இருக்கின்றன. சமயப் பிரிவுகளோ 36,000 க்கும் மேல் இருக்கின்றன. இஸ்லாத்திலும் அப்படித்தான் 72 சமயக் குழுக்கள் இருக்கின்றன. ஷியா என்ற பிரிவினருக்கும் மற்றைய இஸ்லாமியப் பிரிவினர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் இனப் பிரிவினர்களின் மோதல்களிலும் பார்க்க உக்கிரமானவை. மக்கள் ஒரே மதம், ஒரே நூல், ஒரே இறைவனையே வழிபடுகிறார்கள். அப்படி இருந்தும் மோதல்கள் மோசமானவையாக இருக்கின்றன.

அத்துடன் மற்றைய மதங்களில் ஒரு சமயக் குழுவைச் சேர்ந்த பூசகர் மற்றொரு சமயக் குழுவின் சமயக் கிரியைகளில் கலந்துகொள்ளமாட்டார். கலந்துகொள்ள அவர்கள் குழு இடமளிக்காது. ஆனால், இந்துக்கள் அப்படி அல்ல. பல பிரிவுகள் எம்முள் இருந்தாலும் ஒரு வைஷ்ணவப் பூசகர் சிவ பூஜை செய்யவோ சைவப் பூசகர் விஷ்ணு பூஜை செய்யவோ பின் நிற்கமாட்டார். இறைவன் ஒன்றே என்ற அடிப்படை எண்ணம் எமது இந்து மக்களிடையே உறைந்து நிற்கின்றது என்றார். விஷ்ணு கோயில்களில் சிவனுக்குப் பூஜை செய்வதையும் சிவன் கோயிலில் விஷ்ணுவிற்குப் பூஜை செய்வதையும் எங்கள் கோயில்களில் பார்த்திருப்பீர்கள் என்றார்.

அண்மையில் சந்தித்த அவரின் இந்த நோக்கு என்னைச் சிந்திக்க வைத்தது. எம்முட் சிலர் நாம் சைவர்கள் நாம் இந்துக்கள் அல்ல என்று கூறிவருவது பரந்து கிடக்கும் இந்து சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கக்கூடும் என்று கருதியதாலேயே இந்துக்கள் என்ற பெரும் பிரிவின் கீழ் நாம் யாவரும் கைகோர்த்து முன்செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டேன். இடையிலேயே வந்த மதங்கள் அழிந்தாலும் சநாதன தர்மம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இந்துக்கள் அனைவரும் மனதால் ஒன்றுபட்டவர்கள். ஆனால், போதிய ஒழுங்கமைப்புகள் எமக்கில்லை. மத்திய கிழக்கு மதங்கள் மனதால் வேறுபட்டவர்கள். ஆனால், ஒழுங்கமைப்புகளால் ஒற்றுமைப்படுத்தப்பட்டு மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.