Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத தொழுநோய் மாறாதவரை நாட்டுக்கு விமோசனம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத தொழுநோய் மாறாதவரை நாட்டுக்கு விமோசனம் இல்லை

 

 

 

கலாநிதி சூசை ஆனந்தன்

கடந்த இரு மாதங்களாக காலி முகத்திடலில் சுனாமி அலைகள் போல சீறி எழுந்த “கோட்டா  கோ ஹோம்” என்ற மக்கள் எழுச்சி அலைகள் இப்போ பின்வாங்கி ஓய்ந்து போயுள்ளது.இதன் விளைவு, மகத்தான வெற்றிபெற்று சிம்மாசனத்தில் அமர்ந்து “நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று மார்தட்டிய ஒருவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி அகதியாய் அலைகின்றார்.ஏற்கனவே தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றோடிய ஒருவர் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார்.

இரும்புத் திரைக்குப் பின்னாலிருந்து தமக்கு வேண்டாத ஒருவர் தூக்கப்பட்டு வேண்டிய ஒருவர் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளார் போலவே படுகின்றது.சர்வதேச மார்க்கட் சண்டியர்களின் விருப்பத்துக்கு மாறாக இங்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.இன்றைய உலக ஒழுங்கு இது.

களைகள் பிடுங்கி எறியப்பட்டு புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட மக்கள் எழுச்சி இரும்புக் கரம்.கொண்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி

பசித்திருந்தவனுக்குப் பாயாசத்தோடு விருந்து” கிடைச்சமாதிரி ரணிலுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்துள்ளது.இந்த நாட்டு அரசியல் அமைப்பு தேர்தலில் தோற்றுப் போனவரை ஜனாதிபதியாக கொண்டு வர வாய்ப்பளித்திருப்பது விந்தைதான்.ஆளுவது ஏதோ ரணில் என்றாலும் ஆட்சி புரிவது அவரல்ல.மொட்டு ஆட்சியே பலப்படுத்தப்பட்டுள்ளது.புதிய மொந்தையில் பழைய கள்ளு போல அமைச்சர்களில் பழையவர்களே உள்ளனர்.

இதனிடையே கோட்டா  மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆகவே வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறும்போலவே தெரிகிறது. ஆனால் நாடு இப்போ சீராக உள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்.

சிரிக்க வைத்தே கழுத்தறுத்தது” போல போராட்டக்காரர்கள் இராணுவத்தைக் கொண்டு மிலேச்சத்தனமாக அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் தென் கடலில் சடலங்கள் மிதக்கின்றன .ஆகவே அடுத்த தேர்தல்வரை இந்த ஆட்சி தடையின்றி தொடரும்.

போராட்டம் அது ஒடுக்கப்பட்ட முறை குறித்து பல்வேறு நாடுகள், அமைப்புக்களில் இருந்தும் பலத்த கண்டனங்கள் ரணில் மீது தொடுக்கப்பட்டன.ஆயினும் (அவரின்) ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் அவை எல்லாம் ஒரு நொடியிலேயே அடங்கிப் போயின.ரணிலை விட்டால் இந்த நாட்டை இப்போது மீட்க எவரும் இல்லை யென்றும் ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் மிக்க ஒருவர் எனவும் யுக புருஷர் என்றும் இவரை மேற்குலகும் (நம்ம ஆளு) அமைச்சுப் பதவிக்காக பல்லிளிக்கும் சிலரும் இப்போது புகழ்ந்து தள்ளுகின்றனர்.

thamilr.jpg

ரணில் அவர்களின் கடந்தகால பயணம்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்றில் இருந்தவர் பலம் வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியை வழி நடத்தியவர், ஆறுதடவைகள் நாட்டின் பிரதமராக இருந்தவர். ஆயினும் தமிழர் தாயகத்தில் இரத்த ஆறு ஓடியதை இவரால் தடுக்க இயலவில்லை.

1948 டி.எஸ் முதல் இன்றுவரை நாட்டில் கடவுளின் பத்துக் கட்டளைகளில் அடங்கும் கொலை ,களவு, பொய் ஆகிய மூன்று கட்டளைகளும் (பெரும் பாவங்கள்) ஒருங்கிணைந்து இனவாத தொழுநோயாகத் தாண்டவமாடியபோது கைகட்டி வேடிக்கை பார்த்த பல இனவாத தொழு நோயாளிகளில் இவரும் ஒருவராகவே இருந்துள்ளார். சிங்கள குடியேற்றம், சிங்கள மொழி மட்டும் சட்டம், மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிப்பு, பண்டா_செல்வா ஒப்பந்த எதிர்ப்புக் கண்டி பாதயாத்திரை, சந்திரிகாவின் செம்மணி புதைகுழி, 2009 தமிழின இனவழிப்பு யுத்தம் போன்றவை இக்காலப் பகுதிகளில் நடந்த பல்வேறு வகையிலான அரச பயங்கரவாத செயற்பாடுகள் ஆகும். முக்கியமாக பாடசாலைகளில் மாணவர் படுகொலை (நாகர்கோவில்), தேவாலயப் படுகொலை (நவாலி) ,மீனவர் படுகொலை (குருநகர்) இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய எண்ணிலடங்கா படுகொலைகளின்போது ரணில் அவர்கள் பிரதமராக, அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு மிக்க பதவிகளில் இருந்து வந்தவர்தான்.ஆயினும் ஈழத் தமிழர் விடயத்தில் அறம் பிழைத்த ஒருவராகவும் தமிழ் மக்கள் நலவாழ்வில் பற்றற்றவராகவுமே இருந்துள்ளார்.நேர்மையான அரசியல்வாதியாக, தலைவராக அவர் இருந்திருப்பின் பல அப்பாவிகளின் உயிர்களை அப்போது காப்பாற்றியிருக்க முடியும்.

வடக்கே பொருளாதாரத் தடைகளுடன் பாரிய கைத்தொழிற்சாலைகள் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் அனைத்தும் நிர்மூலக்கப்பட்டிருந்தன.விவசாய நிலங்களும் மீன்பிடி நிலையங்களும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டிருந்தனர். பல தடைகளால் வடகிழக்கு மக்களின் வாழ்வும் வளமும் சிதைந்து சின்னாபின்னமாக ஆக்கப்பட்டிருந்தன.அவ்வேளை இவரும் அமைதியாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர்தானே.

யுத்தம் முடிவுற்று பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இந்த அவலங்கள் தொடர்கின்றன.மூடிய கைத்தொழில்கள் திறக்கப்படவில்லை,ஆக்கிரமித்துள்ள விளைநிலங்கள் விடுவிக்கப்படவில்லை, படைத்தரப்பின் விரைவு பயணத்திற்கான பெருந்தெருக்கள், புகையிரத வீதிகள் தவிர புதிய அபிவிருத்தி முயற்சிகள் எவையும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை,மீனவர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை, தொடரும் பெளத்த ,சிங்கள குடியேற்ற விஸ்தரிப்பு போன்ற இனவாத செயற்பாடுகள் ஆகிய அருவருக்கத்தக்க நடவடிக்கைகளும் தொடர்ந்தன. இவைகளும் நாட்டின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணமாகின.

கொரோனா தாக்கம்,சுற்றுலா வீழ்ச்சி, உக்ரைன்போர், காலநிலை வரட்சி ஆகியனவே இன்றைய அவல நிலைக்கு காரணம் என பொய்கள் கூறி ஆட்சியாளர்கள் தப்பிவிட முடியாது.காலம் கடந்தவேளையில் ரணில் அவர்கள் தேர்தலில் படுதோல்வியடைந்து இவரும் இவரது கட்சியும் மக்களால் துடைத்தெறியப்பட்டு செல்லாக்காசாக ஆனது ஏன்? .என்பதையும் இவர் மறந்து விடக்கூடாது.

ஜனாதிபதியின் சிம்மாசன உரை…. நம்பலாமா?

எதுவாயினும் புதிய ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையினை பல்வேறு தரப்பினரதும் பாராட்டைப் பெறக்கூடியவாறு ஆற்றியுள்ளார் .முக்கியமாக இவரது உரையில் நாட்டின் இன்றைய சீரழிவுக்கு காரணமாக இருந்த காரணிகளில் தீர்க்கப்படாதிருந்த ஈழத்தமிழர் அரசியல் விவகாரம் குறித்த விடயங்கள் முக்கிய இடத்தை வகித்துள்ளமை அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியதன் கட்டாயத்தையும் இதற்கு அனைத்துப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் அவர் தமது உரையில் “சுடலை ஞானம்” பிறந்தவர் போல குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு சர்வகட்சி அரசு ஒன்றின் அவசியத்தை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறார்.இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லையெனில் இந்த நாட்டுக்கும் விடிவு இல்லை என்ற யதார்த்தம் அவரது உரையில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. உரை காற்றில் கலந்துவிடும்? அல்லது செயலுருப் பெறுமா?

இவரது உரையானது பைபிளில் உள்ள யேசுவின் மலைப் பிரசங்கம் போலவே உள்ளது. ஆயினும் சாத்தான் ஓதிய வேதம் போல மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.இவரது கடந்த “காலப்பயணம்” இவரை நம்ப மறுக்கின்றது.எனினும் இக்கட்டான நாட்டின் தலைமைப் பொறுப்பு ரணில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பல சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன.

புலம் பெயர் தமிழர் தடைப் பட்டியல் விவகாரம்

திடீரென புலம்பெயர் தமிழர்கள் மீது வைத்திருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.தமிழர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைப் பட்டியல் ஒருபுறமிருக்கட்டும்.அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல்,சரணடைந்தோர் பட்டியல் இதில் எத்தனைபேர் எங்கு எப்படி உள்ளனர் தொடர்பான பட்டியல் ஆகியவற்றை வெளிவிடுவார்களா? அத்துடன் இராணுவம் பிடித்து வைத்துள்ள மக்களின் காணி விபரப் பட்டியல்களையும் முகாம்கள், காவலரண்கள் இவைகளுக்கு விடுதலை எப்போது என்பதையும் தெரிவிப்பார்களா?

தேசிய கீதம்

தேசிய கீதம் இனி தமிழில் பாடப்படுமாம்.மொழியைப் புறந்தள்ளி, வருங்கால சந்ததியினரை வாயில்போட்டு விழுங்கி விட்டு தமிழர் நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு தேசிய கீதம் தமிழில் பாடு என்றால் எவன் பாடுவான்.மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது.இதற்கிடையில் தமிழர் விவகாரத்தில் ஏதாவது நல்லது செய்துகாட்டி விடவேண்டும் என்ற தோரணையிலே புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் விலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. .நா பேரவைக்கு காதில் பூச்சுற்றி தப்பித்துக் கொள்ளும் நயவஞ்சக வேலைகளில் ஒன்றே இந்த நடவடிக்கை என அஞ்ச வேண்டியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு

ஒருபுறம் ஈழத்தமிழர் அரசியல் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென கூறும் அதேவேளை, தேசிய பாதுகாப்புக்கென இவ்வாண்டு 653 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள 19 பெரும் படைத்தளங்களில் 16 தளங்கள் வடகிழக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.அத்துடன் 25,415 ஏக்கர் நிலம் இராணுவ வசமுள்ளது.இதில் 6,439 ஏக்கர் நிலம் தனியாரது வளமான விவசாய நிலங்களாகும்.

யுத்தம் முடிவுற்று பல ஆண்டுகளாயிற்று.நாட்டின்பொருளாதாரமோ மீளமுடியாத கருந்துளைக்குள் சென்றுகொண்டிருக்கிறது.இவ்வாறான நிலையில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் பெரும் நிதி வடகிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரை மேலும் வலுப்படுத்தவும் பெளத்த தலங்களை நிறுவி தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் வட,கிழக்குப் பகுதிகளை சிங்கள பெளத்த பூமியாக மாற்றுவதற்கு எத்தனிப்பதற்கே என்ற சந்தேகத்தையே தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முன்பள்ளிக் கல்வி, விகாரைகள் நிர்மாணம், தொல்பொருள் திணைக்கள நில ஆக்கிரமிப்பு என்பவற்றில் இராணுவ தலையீடுகள் மற்றும் தொடர்ந்தும் மக்கள் நிலத்தில் இராணுவ இருப்பு போன்றவைகள் தொடர்ந்தும் இருக்குமாயின் சிம்மாசன உரைக்கு முரணான ஒன்றாகவே இது கணிக்கப்படும்.இவை இனப்பிரச்சினை தீர்வுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை

கோணேஸ்வர தலம் மற்றும் வன்னி முன்பள்ளி ஆக்கிரமிப்புக்கள்

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தை சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுமாறு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் உரிய தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி கூறுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் இதுகுறித்து நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஏற்கனவே பாடல்பெற்ற இந்துத் தலங்களான சிலாபம் முனீஸ்வர ஆலயம், கதிர்காமம் ஒரு பெளத்தனும் வாழாத திருக்கேதீஸ்வரமும் பறிபோயிற்று.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கூட்டணியின் தலைவர்.கடந்த நல்லாட்சி அரசு என சொல்லப்பட்ட (வல்)ஆட்சிக்கு கைகொடுத்து உதவியவர்.அவரால் தனது தொகுதியில் அமைந்த கன்னியா வெந்நீரூற்றையே காப்பாற்ற முடியவில்லை.கோணேஸ்வரத்தை தமது கூட்டாளிகளோடு சேர்ந்து எப்படி காப்பாற்றப் போகிறாரோ தெரியாது.

இதனிடையே சிறிதரன் பா..அவர்கள் வடக்கில் இராணுவம் நடாத்தி வருகின்ற முன்பள்ளி அவலங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.வடக்கு மாகாணக அமைச்சு ஒன்று உள்ளது.யுத்தம் முடிவுற்று பலவருடங்களாயிற்று இராணுவத்துக்கு ஏன் இந்த முன்பள்ளி கல்வி அலுவல்?மேலும் வடக்கு ஆளுநர் சாரக் கட்டு சண்டியன் போல நடந்து கொள்வதாகவும் அண்மைக்கால ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்தும் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் பேசியுமிருந்தார்.அதிகாரிகள் மட்டத்தில் காட்டும் வீறாப்பை இராணுவப் பிடியிலுள்ள முன்பள்ளி மீட்பிலும் ஆளுநர் காட்டினால் நல்லது என்பது எமது கருத்து

மேற்குறித்த விவகாரங்கள் தவிர வலிந்து காணாமல்.ஆக்கப்பட்டோர் விவகாரம்,சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் எதுவித தீர்வுமின்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.மேற்கூறிய அத்தனை விவகாரங்களும் புதிய அரசு தலைவர் அறியாத ஒன்றல்ல.தமது கொள்கைப்பிரகடனத்தில் முன்னுரிமை கொடுத்துப் பேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை அறம் பிறளாது செயலிலும் காட்டவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.

இவரது சிம்மாசன உரை பைபிள் கூறும் யேசுவின் மலைப்பிரசங்கமாக இருக்குமா அல்லது சாத்தான் ஓதும் வேதமாக இருக்குமா என்பது போகப் போகத் தெரியவரும்.

எவ்வாறாயினும் இந்த நாட்டில் பரவியுள்ள இனவாத தொழுநோய் மாறாதவரை இந்நாட்டுக்கு விடுதலை கிடையாது.

https://thinakkural.lk/article/202300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.