Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப் பொருள்கள் போல மனதில் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள்கள் போல மனதில் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்'

  • வில்லியம் பார்க்
  • பிபிசி ஃபியூச்சருக்காக
8 அக்டோபர் 2022
 

மாயத்தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் 'ட்ரீமேஷின்'

பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC

போதைப்பொருட்கள், ஒளிகள் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் மாயைகள் நம் மூளையின் உள் செயல்பாடுகள் பற்றிய புதிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. இது குறித்து மேலும் அறிய வில்லியம் பார்க் தனது பயணத்தைத் தொடங்கினார்.

மெக்சிகோவின் சியரா மாட்ரே ஆக்சிடென்டல் மலைகளில் வசிக்கும் ஹூய்ச்சோல் பழங்குடியினரால் ஆவிகளுடன் பேச முடியும். ஒரு சிறிய சப்பாத்திக்கள்ளி உதவியுடன் விலங்குகள் மற்றும் மூதாதையர்களைப் பார்க்க அவர்கள் இந்த பூமியைவிட்டுச் செல்கிறார்கள்.

பெயோட்டே என்று அழைக்கப்படும் சப்பாத்திக்கள்ளியை வட்டமாக வெட்டி, வாயில் போட்டு மெல்லும்போது மாயத்தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஹாலுசினோஜன் எனும் போதைப்பொருள் வெளியாகிறது. மானுடவியலாளர் பார்பரா மைர்ஹாஃப், மேற்கு மெக்சிகோவில் உள்ள ஹூய்ச்சோல் பழங்குடியினருடன் பெயோட்டே எடுத்துக் கொண்ட தனது அனுபவத்தை 'பெயோட்டே ஹன்ட்' என்ற புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பெயோட்டே பயணம் அதிகரிக்கும் பரவச உணர்ச்சியுடன் தொடங்கியதாக அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மாயக் காளான்களை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் மாயத்தோற்றங்களை உருவாக்கக்கூடிய மெஸ்கலின் எனும் ஒரு சைகடெலிக் கலவை பெயோட்டேவில் உள்ளது. பெயோட்டேவின் சுவை சொல்ல முடியாத வகையில் கசப்பான புளிப்புடனும், கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்ததாக பார்பரா மைர்ஹாஃப் கூறுகிறார். அதை எடுத்துக்கொண்டதும் நேரத்தைப் பற்றிய எண்ணங்களை தான் மறந்துவிட்டதாகவும் தெளிவான கனவில் இருந்து மற்றொரு கனவிற்கு நகர்ந்ததாகவும் அவர் கூறுகிறார். அதை எடுத்த பிறகு தன்னால் நகர முடியாது என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிடும் அவர், அந்த அனுபவம் சிறிய பயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்.

 

பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் போருக்கு முன்பும், பொழுதுபோக்கிற்காகவும், மத விழாக்களிலும் சைக்கெடெலிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, சில கொடிகள் அல்லது புதர் செடிகளைக் காய்ச்சி அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை மாயத்தோற்ற பானமான அயாஹுவாஸ்கா, தென் அமெரிக்க பழங்குடி மக்களால் மத மற்றும் நோய் குணப்படுத்தும் சடங்குகளில் ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

 

Presentational grey line

 

Presentational grey line

ஆரம்பகால மெசோ அமெரிக்க நாகரிகங்களில் ஒன்றான ஓல்மெக்ஸ் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த மாயா இனத்தவர்கள் மாயத்தோற்றத்திற்காக கேன் டோட் எனப்படும் தேரைகளில் இருந்து பெறப்பட்ட நியூரோடாக்சினை தங்கள் சடங்குகளின்போது உட் கொண்டனர். அதை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டால் முன்னோர்களிடம் பேச முடியும் என்று அவர்கள் நம்பினர். அளவு அதிகமானால் மரணமும் நேரலாம்.

சடங்குகளில் ஏன் இந்த சைகடெலிக்ஸ் பயன்படுத்தப்பட்டது? ஒருவேளை எடுத்துக்கொள்பவர்களுக்கு அவை பிரமிப்பு மற்றும் ஆச்சரிய உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரே வகையான ஹாலுசினோஜனாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்து, நீடித்த பேரின்பம், நுண்ணறிவு மற்றும் ஆழ்ந்த ஆன்மீக அறிவொளி பெற்றதைப் போன்ற உணர்வை அவை தருகின்றன.

1950கள் மற்றும் 60களில், மனச்சோர்வு, மது அடிமை நோய் முதல் ஸ்கிசோஃப்ரினியா எனும் தீவிர மனக்கோளாறு நோய் வரையிலான பலவற்றுக்கான சிகிச்சைவரை சைகடெலிக்ஸில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ப்ராஜெக்ட் எம்கேயுல்ட்ரா மற்றும் ப்ராஜெக்ட் எம்கேடெல்டா என்ற பெயர்களில் எல்எஸ்டி என்ற பொருளை மருந்தாகப் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பாக அமெரிக்கா சோதனைகளை நடத்தியது. 60களின் பிற்பகுதியில் எல்எஸ்டி தடைசெய்யப்பட்ட பிறகு, ஹாலுசினோஜன்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவது குறித்த ஆராய்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, புதிய ஆய்வுகளின் தொடர்ச்சியாக மாயத்தோற்றங்களை ஏற்படுத்த வல்ல கெட்டமைன் மற்றும் எல்எஸ்டி ஆகியவற்றை சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

மாயத்தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் 'ட்ரீமேஷின்'

பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC

ஆனால், பொருட்களை உட்கொள்வது மட்டுமே மாயத்தோற்றத்தை அனுபவிப்பதற்கான வழி அல்ல. விஷுவல் ஆராஸ் என்பது பொதுவாக ஒற்றைத் தலைவலியுடன் வரும் காட்சி மாயத்தோற்றத்தின் ஒரு வடிவமாகும். மலேரியா போன்ற காய்ச்சல்கூட மாயத்தோற்றத்தை தூண்டலாம் . உதாரணமாக, கொரொனா பெருந்தொற்றின்போது சில நோயாளிகள் தாங்கள் மாயத்தோற்றத்தை உணர்ந்ததாகக் கூறினர். சில கண் நோய்களும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். இதை மாற்றப்பட்ட காட்சி அனுபவங்கள் என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியர் பிரேம் சுப்ரமணியன்.

செவித்திறன் குறைபாடுடைய சிலர் இசை மாயைகளை உணர்ந்துள்ளனர். அதேபோல, மாயத்தோற்றங்களுடன் துக்கத்திற்கும் தொடர்புள்ளது. சிலர் இறந்துபோன துணையின் குரலைக் கேட்பதாகவும், அவர்களைப் பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

சில பிரகாசமான அல்லது ஒளிரும் விளக்குகள்கூட சிலருக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

இந்த மாயைகளை நாம் ஏன் பார்க்கிறோம் என்பது புதிராக உள்ளது, ஆனால் போதைப்பொருட்கள் மற்றும் நோயால் தூண்டப்பட்ட மாயத்தோற்றங்களை ஒப்பிடுவதன் மூலம் அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மனதில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.

உதாரணமாக, சில ஆய்வாளர்கள் மற்றும் மலையேறுபவர்கள் பனிமூடிய பகுதிகளில் பயணம் செய்யும்போது விசித்திரமான உருவங்களைப் பார்ப்பதாகக் கூறுவது ஏன் எனப் பார்க்கலாம். 1919ஆம் ஆண்டு சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் தனது அண்டார்டிக் பயண நாட்குறிப்பில், தென் ஜார்ஜியாவின் பெயரிடப்படாத மலைகள் மற்றும் பனிப்பாறைகள் மீது 36 மணிநேரம் பயணித்த போது, தங்களுடன் இன்னொரு நபர் இருப்பது போல தனக்கு அடிக்கடி தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறிப்பிட்ட மாயைக்கான காரணம் கான்ஸ்ஃபெல்ட் விளைவாகும். தொடர்ச்சியான, சீரான தூண்டுதலுக்கு உள்ளாகும்போது நமது மூளை சிக்னலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. மேலும் அங்கு இல்லாத தகவல்களைச் சேர்த்து மாயத்தோற்றங்களை அது உருவாக்குகிறது. உதாரணமாக, ஒளியின் ஒற்றை அலைநீளத்தை உற்று நோக்கும்போது இது மாதிரியான மாயத்தோற்றம் ஏற்படும்.

தி ட்ரீமெஷின்

ஒளியால் தூண்டப்பட்ட மாயைகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உருவாக்கப்படலாம் என்பதால், அவை மாயத்தோற்றங்கள் உருவாகும் விதத்தை கண்டறிய ஆய்வாளர்களுக்கு உதவக்கூடும். ஒளிக்கற்றைகள் மூடிய கண்களில் நிறங்கள், வடிவங்கள் மற்றும் இயக்கங்களின் காட்சியை ஏற்படுத்துகின்றன என்பது நரம்பியல் அறிவியலின் மிகப் பழமையான கண்டுபிடிப்புகளில் ஒன்று என்கிறார் சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியரும், ஆழ்ந்த கலை மற்றும் ட்ரீமெஷின் அறிவியல் திட்டத்தின் முன்னணி விஞ்ஞானியுமான அனில் சேத்.

மாயத்தோற்றத்தைத் தூண்டுவதற்காக ஸ்ட்ரோபிங் விளக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் உள் மனதின் பன்முகத்தன்மையைப் படம்பிடிக்கும் ஒரு கருவியாக ட்ரீமெஷின் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1959ஆம் ஆண்டைச் சேர்ந்த அதே பெயரில் அதிகம் அறியப்படாத கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டது. போதைப்பொருள் இல்லாமல் சைகடெலிக் மாயத்தோற்றத்தை அனுபவிக்க முடியும் என்ற உறுதிமொழியுடன், அதன் உள்ளே நான் நுழைந்தேன்.

அந்த இயந்திரம் இரண்டு அடுக்கு கொண்ட நீல வண்ண எண்கோணப் பெட்டி. சுமார் 20 பங்கேற்பாளர்கள் ஒரு திரை வழியாக ஒரு வட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அறையின் விளிம்பைச் சுற்றி இருந்த வளைந்த இருக்கைகள் பின்னால் சாய்ந்திருந்தன. இதனால் பங்கேற்பாளர்கள் கூரையை நோக்கி மேல்நோக்கிப் பார்க்க முடியும். கூரையின் மையத்தில் ஒரு தட்டையான, வெள்ளை வட்டு இருந்தது. அதைச் சுற்றி நாம் திரையரங்கில் பார்க்கக்கூடிய பெரிய விளக்குகளின் வளையங்கள் இருந்தன.

நான் இருக்கையில் சாய்ந்துகொண்டேன். எனக்குப் பின்னால் இருந்த ஒலிபெருக்கியில் இருந்து வரும் மெதுவான இசையுடன் அந்த அனுபவம் தொடங்கியது. பிரகாசமான விளக்குகள் மங்கியதும் நான் என் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன். என் இமைகள் வழியாக, பிரகாசமான வெள்ளை ஒளி இளஞ்சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் தெரிந்தது. பின்னர் விளக்குகள் எரியத் தொடங்கின.

அதன் பிறகு, இளஞ்சிவப்பு ஆரஞ்சு, நீல நிறத்தில் மாறி மாறி ஒளிர்ந்தது. இது 'ப்ளீச்சிங் டிசென்சிடிசேஷன்'விளைவாகும். நீங்கள் எப்போதாவது ஒரு பிரகாசமான ஒளியை நீண்ட நேரம் பார்த்துவிட்டு, சிறிது நேரம் உங்கள் பார்வையில் மங்கலான கறைகளை கவனித்திருந்தால் அதற்கு இந்த விளைவே காரணம். உங்கள் விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பிகள் அதிகமாகத் தூண்டப்பட்டிருப்பதால் அவை மீண்டு வர சிறிது நேரம் எடுக்கும்.

அதனைத் தொடர்ந்து, ட்ரீமெஷினில் ஆரஞ்சு மற்றும் நீல நிறங்கள் ஒன்றுடன் ஒன்று சேரத் தொடங்கின. மேலும் சில நிமிடங்களுக்குப் பிறகு நான் கோடுகள் மற்றும் குறுக்கு வடிவங்களைக் கண்டேன். ஸ்ட்ரோப் லைட்டிங் மூலம் ஏற்படும் இந்த வகையான விளைவுகள் 'ஃப்ளிக்கர் பாஸ்பீன்கள்' எனப்படுகின்றன. இவை மருந்துகள் தூண்டக்கூடிய எளிய மாயத்தோற்றங்களைப் போலவே இருந்தன.

 

மாயத்தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் 'ட்ரீமேஷின்'

பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC

ஸ்ட்ரோபிங் விளக்குகளின் அதிர்வெண் மூளையின் அதிர்வெண்ணுடன் ஒத்திசைவதன் மூலம் மாயத்தோற்றத்தின் அளவைத் தீர்மானிக்கிறது என்று சேத் கூறுகிறார்.

"ஸ்ட்ரோப் விளக்குகளின் அதிர்வெண்கள் சுமார் 10-15 ஹெர்ட்ஸ் ஆகும். இந்த அதிர்வெண் வரம்பு மூளையில் உள்ள ஆல்பா ரிதம் போன்றது. இது காட்சிப் புறணியில் மிகவும் முக்கியமானது" என்கிறார் சேத்.

வேறு சில ஆய்வுகள், அதிர்வெண்கள் மாயத்தோற்றத்தின் வடிவங்களையும் தீர்மானிக்கக்கூடும் என்கின்றன. 20-30 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் சிலர் சுருள்கள், அலைகள், செறிவு வட்டங்கள் மற்றும் கோடுகளைக் கண்டுள்ளனர். அதேபோல, 10 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் தேன்கூடு மற்றும் செவ்வக வடிவங்களைச் சிலர் கண்டனர்.

ஆல்ஃபா ரிதம் என்ன செய்கிறது என்பதில் நிறைய மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகவும் சேத் கூறுகிறார்.

"சில நரம்பியல் விஞ்ஞானிகள் இது ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது மூளையின் செயலற்ற நிலை என்று கூறுகிறார்கள். ஆனால் மற்றவர்கள், உலகை நாம் எப்படி உணர்கிறோம் என்பதோடு இது ஆழ்ந்த தொடர்புடையது என வாதிடுகின்றனர்" என்கிறார் சேத்.

இசை மாறும்போது, நான் பார்க்கும் கோடுகள் அலைகளாக மாறின. நட்சத்திரங்களின் பிரபஞ்சம் போன்ற சிறிய வெள்ளைப்புள்ளிகள், வண்ண அலைகளுக்குப் பின்னால் சுழல்வதை நான் பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் இசை மாறியதும் வண்ணங்களும் மாறின. அந்தக் காட்சி பாலைவன நிலப்பரப்பைப் போலத் தெரிந்தது. ஸ்ட்ரோபிங்கின் அதிர்வெண் மாறிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் பார்க்கக்கூடிய வடிவங்கள் தொடர்ந்து ஓட்டத்தில் இருந்தன.

"ட்ரீமெஷின் எவ்வாறு செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அது செயல்படும் என்று எங்களுக்குத் தெரியும்" என்கிறார் சேத்.

முற்றிலும் அல்லாமல், அதே நேரத்தில் கடுமையான பார்வைக் குறைபாடு கொண்ட குழுவினர் இந்த அனுபவத்தை பெற்றபோது மிகவும் உணர்வுப்பூர்வமான அனுபவமாக அது தனக்கு இருந்ததாகவும் சேத் கூறுகிறார்.

நேரம் முன்னோக்கி நகர்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் இயந்திரம் எவ்வளவு நேரமாக இயங்குகிறது அல்லது எவ்வளவு நேரம் இன்னும் எஞ்சியுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் இப்போது என்ன பார்க்கிறேன் என்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதைக் கவனித்தேன். நான் சிறிது நேரம் தூங்கிவிட்டேனா என்றும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர், அந்த தருணத்திற்கு திரும்பினேன்.

பாலைவனம் இப்போது பல வண்ண வடிவியல் வடிவங்களாக மாறியிருந்தது. மேலும் காட்சி வேறு எதையாவது மாற்றும்போது, கறை படிந்த கண்ணாடியின் வண்ணமயமான தன்மையை நான் இழக்கிறேன்.

ட்ரீமெஷினில் மூளை ஏன் நிறங்கள், வடிவங்களை உருவாக்குகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சேத்தும் அவரது சகாக்களும் அதைச் செய்யவே முயற்சிக்கின்றனர். மக்கள் பார்க்கும் வடிவங்கள் மூளையின் முதன்மை காட்சிப் பகுதியோடு மிகவும் தொடர்புடையவை என்று சேத் கூறுகிறார். "கிட்டத்தட்ட ஸ்ட்ரோப் லைட் மூளையின் இந்தக் காட்சிப் பகுதிகளை செயல்படுத்துவது போல இது இருக்கிறது" என்கிறார் சேத்.

 

மாயத்தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் 'ட்ரீமேஷின்'

பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC

வண்ணங்களைப் பார்ப்பது தனிநபர் அனுபவம் சார்ந்தது. அனைவரும் ஒரே வண்ணங்களைப் பார்க்கிறீர்களா என்ற பழைய கேள்விக்கு இல்லை என்பதே பதில். உண்மையில், வண்ணங்களைப் பற்றிய நமது சொந்த கருத்து தொடர்ந்து மாறுகிறது.

கோடையில் மஞ்சள் நிறம் சிறிது பச்சை நிறத்தை நோக்கி மாறுகிறது. குளிர்காலத்தில் அது சிவப்பு நிறமாக மாறுகிறது. கோடை காலத்தில் தாவரங்களில் இருந்து அதிக பச்சை ஒளிகள் பிரதிபலிப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். கோடையில் பச்சை கலந்த மஞ்சள் நிறம் தூய மஞ்சள் நிறமாக இருக்கும் என்கிறார் இங்கிலாந்தின் யார்க் பல்கலைக்கழக உளவியலாளர் லாரன் வெல்போர்ன்.

ஒரே சூழலில் வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவது ட்ரீமெஷினில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நடக்கிறது என்று கூறும் சேத், நம் அனைவருக்கும் ஒரு தனித்துவமான புலனுணர்வு அனுபவம் மற்றும் தனித்துவமான உள் பிரபஞ்சம் உள்ளது. இந்த வகையான உள் பன்முகத்தன்மை பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது என்கிறார்.

அந்த உள் பன்முகத்தன்மையை ஆராய்வது சேத்தின் அடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவரும் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவஞானிகள் கொண்ட அவரது குழுவும், ஒரு சில எளிய கேள்விகளுடன் பொதுமக்களின் பல்வேறு அகநிலை அனுபவங்களை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களது தனித்துவம் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

 

Presentational grey line

 

Presentational grey line

இசையும் விளக்குகளும் மங்கியதும், ட்ரீமெஷின் அனுபவம் முடிந்துவிட்டது என்று வழிகாட்டிகள் கூறினார்கள். எனது அனுபவங்களை வேறொரு பங்கேற்பாளருடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். அதில் ஒற்றுமைகள் இருந்தபோதிலும் முப்பரிமாண இடத்தை உணர்ந்தது, சுழலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் உள்ளிட்ட பல முற்றிலும் வேறுபட்டவை என்பது தெளிவானது. இந்த தனித்துவம் பற்றிய தகவல்களைத்தான் சேத்தும் அவரது சகாக்களும் தங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்க விரும்புகிறார்கள்.

ஒரு சிக்கலான படம்

நான் பார்த்த எளிய நிறங்கள் மற்றும் வடிவங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், போதைப்பொருளால் தூண்டப்பட்ட அல்லது மருத்துவ மாயத்தோற்றம் உள்ளவர்களின் தெளிவான சாட்சியங்களுடன் ஒப்பிடுகையில் அவை மெல்லிய அளவிலேயே இருந்தன. அவை மட்டும் ஏன் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம்?

அயாஹுவாஸ்கா தாவரம் மற்றும் கேன் டோட் வகை தேரையில் இருந்து பெறப்படும் நியூரோடாக்சினில் செரோடோனின், மெலடோனின் மற்றும் சைலோசிபினுடன் நெருங்கிய தொடர்புடைய டிஎம்டி எனும் நரம்பியக்கடத்தி உள்ளது. இதில், சைலோசிபின் மாய காளான்களுக்கான மாயத்தோற்ற பண்புகளை வழங்கும் இரசாயனமாகும். செரோடோனின் மற்றும் மெலனின் தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.

 

மாயத்தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் 'ட்ரீமேஷின்'

பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC

செரோடோனின், டிஎம்டி மற்றும் சைலோசைபின் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகள் மூலம், இந்த சைகடெலிக்ஸ் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கலாம். டிஎம்டி, சைலோசைபின் மற்றும் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஹாலுசினோஜென் எல்எஸ்டி அனைத்தும் நமது மூளையில் செரோடோனின் ஏற்பிகளை செயல்படுத்துகின்றன. மாயத்தோற்ற மருந்துகளால் அவை செயல்படுத்தப்படுவது சிக்கலான காட்சி மாயத்தோற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.

ஆழமாக உணரப்பட்ட இசை

ஓர் ஆய்வில், பங்கேற்பாளர்களுக்கு எல்எஸ்டி மற்றும் செரோடோனின் ஏற்பிகளைத் தடுக்க வல்ல கெடான்செரின் என்ற ரசாயனமும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகள் வழங்கப்பட்டன. எல்எஸ்டி எடுத்த பிறகு, முன்பு அர்த்தமற்றதாக இருந்த இசை அர்த்தமுள்ளதாகவும், ஆழமாகவும் மாறியதை பங்கேற்பாளர்கள் கண்டறிந்தனர். கெட்டான்செரின் மூலம் ஏற்பியைத் தடுப்பது இந்த அர்த்தமுள்ள உணர்வுகளைத் தடுத்தது.

சைகடெலிக் ஏன் அடிக்கடி ஆழமான உணர்வுகளுடன் வருகிறது என்பதை இது விளக்கக்கூடும் என்று சூரிச் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான கேட்ரின் ப்ரெல்லர் கூறுகிறார். தன்னுடைய பிந்தைய ஆய்வில், எல்எஸ்டி நமது புலன்களுடன் தொடர்புடைய மூளை நெட்வொர்க்குகளின் இணைப்பின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்பதை அவர் கண்டறிந்தார்.

போதைப்பொருளால் தூண்டப்பட்ட மாயத்தோற்றங்கள், லட்டுகள், சிலந்தி வலைகள், சுரங்கங்கள் மற்றும் சுருள்கள் போன்ற பிரகாசமான வண்ண வடிவியல் வடிவங்கள் முதல் மக்கள், விலங்குகள், ஆவிகள், வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அரக்கர்களைக் கொண்ட காட்சிகள் அல்லது நிலப்பரப்புகள் வரை இருக்கும்.

போதையா மனநோயா?

ஆனால் சிக்கலான மாயத்தோற்றங்கள், வினோதமான மற்றும் பயமுறுத்தும் முகங்கள், மக்கள் அல்லது பொருள்களின் பயங்கரமான படங்களைக் கொண்டிருக்கலாம். சில நேரங்களில் போதைப்பொருளால் தூண்டப்பட்டாலும், இந்த மாதிரியான மாயத்தோற்றங்கள் ஸ்கிசோஃப்ரினியா முதல் டிமென்ஷியா வரை பல நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

நோய் தொடர்பான மாயத்தோற்றங்களின் எடுத்துக்காட்டுகளில் ஒன்று சார்லஸ் போனட் நோய் அறிகுறி. இது கண்பார்வை இழப்பின் விளைவாகும். விழித்திரையில் ஏற்படும் சேதம் அல்லது கண்புரை போன்ற ஒளியைக் குறைக்கக்கூடிய எதுவும் நோயாளிகளுக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தலாம், இது வடிவங்கள் முதல் உருவமற்ற முகங்கள் மற்றும் ஆடை அணிந்த உருவங்கள் வரை இருக்கலாம். பார்வை இழப்பு இந்த மாயத்தோற்றங்களை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது தெரியவில்லை. ஆனால் பார்வை மோசமடைவதால் காணாமல் போன தகவல்களை மூளை ஈடுசெய்யத் தொடங்கி, தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட படங்களை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.

சார்லஸ் போனட் நோய் சில நேரங்களில் 'பாண்டம் விஷன்'என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது 'பாண்டம் லிம்' நோய் அறிகுறியுடன் ஒப்பிடப்படுகிறது. அந்த நோயுடையவர்களுக்கு தங்கள் மூட்டு காணாமல் போன உணர்வு ஏற்படும்.

பார்வையில் சிக்கிக்கொள்ளும் காட்சிகள்

மற்றொரு ஆச்சரியப் படத்தக்க நோய் பாலினோப்சியா ஆகும். அந்த நோயாளிகளுக்கு ஒரு காட்சி சிறிது நேரம் உறைந்திருப்பது போலத் தெரியும். உதாரணமாக, நீங்கள் அறையின் ஒரு பக்கத்தில் ஒரு நாற்காலியை உற்றுப் பார்த்துவிட்டு, மறுபுறம் பார்த்தால், நாற்காலி தரை முழுவதும் இருப்பதாகத் தோன்றலாம். இது விழித்திரை புதுப்பிப்பு விகிதத்தில் ஏற்படும் தாமதத்தால் ஏற்படுகிறது. நமது விழித்திரையில் உள்ள ஒளி நிறமிகள் தூண்டப்பட்ட பிறகு புதுப்பிக்க ஒரு நொடியில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கின்றன. பொதுவாக இது மிக விரைவாக நடக்கும். ஆனால் பாலினோப்சியா நோயாளிகளுக்கு இந்தப் புதுப்பிப்பு விகிதம் கணிசமாக குறைகிறது. எனவே படங்கள் பார்வையில் சிக்கிக்கொள்கின்றன.

தூண்டப்பட்ட மாயத்தோற்றங்கள் போலல்லாமல், சார்லஸ் போனட் மற்றும் பாலினோப்சியா ஆகியவை தன்னிச்சையாக நிகழும் மாயத்தோற்றங்களுக்கு உதாரணங்கள். பார்வையை ஒழுங்குபடுத்தும் இயல்பான செயல்பாட்டில் ஏற்படும் பிழைகள் காட்சிகளை உருவாக்குவதாக சுப்பிரமணியன் கூறுகிறார்.

"லேசான மற்றும் மிதமான பார்வைக் குறைபாடு என்று நாம் நினைக்கும் நோயாளிகள்கூட இந்த மாயத்தோற்றங்களைக் கொண்டிருக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

வழக்கத்திற்கு மாறான மாயைகளை அனுபவிக்கும் யாரும் அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும் சுப்ரமணியன் வலியுறுத்துகிறார்.

ட்ரீமெஷினில் இருந்த நேரத்தின் நீடித்த விளைவுகள் எதுவும் எனக்கு இல்லை. ஒளிரும் விளக்குகள் உங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தாவிட்டால் ஒளியால் தூண்டப்படும் மாயத்தோற்றங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

ட்ரீமெஷினில் நமது ஒவ்வொரு அனுபவமும் ஏன் சற்று வித்தியாசமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது தற்போது கடினமாக இருக்கலாம், ஆனால் சேத்தும் அவரது சகாக்களும் நமது உள் அனுபவங்களின் முழு அளவையும் அறிந்து கொள்வதற்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லலாம்.

https://www.bbc.com/tamil/science-63184403

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.