Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர்

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

முலாயம் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.

உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.

1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் இந்தர் குமார் குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சம்யுக்தா சோசியலிச கட்சி, லோக் தளம், ஜனதா தளம், ஜனதா கட்சி உள்ளிட்டவற்றில் இருந்த முலாயம் சிங் யாதவ் 1992இல் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார்.

 

''என் மதிப்புக்குரிய தந்தையும், அனைவரின் தலைவரும் இறந்துவிட்டார்,'' என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாக அக்கட்சியின் அலுவல்பூர்வ டிவிட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்தத்தில் இருந்து அரசியல் களத்துக்கு

முலாயம் சிங் யாதவின் இளமைக் காலத்தில் அவரது கை, எதிராளியின் இடுப்பைச் சுற்றிவிட்டால், அந்த எதிராளி எவ்வளவு உயரமானவராக இருந்தாலும், பலசாலியாக இருந்தாலும், முலாயமின் பிடியில் இருந்து விடுபட அவரால் முடியாது என்று கூறப்படுகிறது.

அவரது 'சர்க்கா தாவ்' -ஐ (சக்கர பிடி) இன்றும் அவரது ஊர் மக்கள் மறக்கவில்லை. கையை பயன்படுத்தாமல் மல்யுத்த வீரரை மண்ணைக் கவ்வச்செய்யும் பிடி இது.

"மல்யுத்த அரங்கில் முலாயமின் போட்டி இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது நாங்கள் கண்களை மூடிக்கொள்வோம். கூட்டத்தில் இருந்து "முடிந்துவிட்டது, முடிந்துவிட்டது" என்ற சத்தம் கேட்டால்தான் கண்களை திறப்போம். எங்கள் அண்ணன் எதிராளி மல்யுத்த வீரரை வீழ்த்திவிட்டார் என்பது, அதிலிருந்து எங்களுக்கு புரிந்துவிடும்," என்று முலாயம் சிங் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரர் பேராசிரியர் ராம் கோபால் யாதவ் ஒருமுறை பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆசிரியரான பிறகு முலாயம் மல்யுத்தத்தை முற்றிலுமாக கைவிட்டார். ஆனால் தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தனது கிராமமான சைஃபியில் மல்யுத்த போட்டிகளை நடத்தி வந்தார்.

இந்த மல்யுத்த திறமை காரணமாக, அரசியல் பின்னணியில்லாவிட்டாலும், அரசியல் அரங்கில் முலாயம் வெற்றி பெற்றார் என்று உத்தர பிரதேச அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முலாயம் சிங்கின் திறமையை முதலில் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான நாத்து சிங் அடையாளம் கண்டார். 1967 தேர்தலில் ஜஸ்வந்த்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.

அப்போது முலாயமுக்கு வயது 28 தான். அந்தத் தேர்தலில் வென்று மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் மிகவும் இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றார். எம்.எல்.ஏ ஆன பிறகு எம்.ஏ படிப்பை முடித்தார்.

உத்தர பிரதேசத்தில் ராம் நரேஷ் யாதவ் தலைமையில் 1977-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, முலாயம் சிங் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அப்போது அவரது வயது 38 மட்டுமே.

முதல்வர் பதவிக்கான போட்டியில் அஜீத் சிங்கை தோற்கடித்தார்

செளத்ரி சரண் சிங், முலாயம் சிங்கை தனது அரசியல் வாரிசு என்றும் தனது மகன் அஜீத் சிங்கை சட்டபூர்வ வாரிசு என்றும் கூறி வந்தார்.

ஆனால் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அஜீத் சிங் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் அவரை கட்சியின் தலைவராகும்படி வற்புறுத்தினார்கள்.

 

முலாயம் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் பிறகு முலாயம் சிங் மற்றும் அஜீத் சிங்குக்கும் இடையே போட்டி அதிகரித்தது. ஆனால் முலாயம் சிங்குக்கு உத்தர பிரதேச முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது.

1989ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி லக்னெளவில் உள்ள கே.டி.சிங் பாபு ஸ்டேடியத்தில் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட முலாயம், "ஓர் ஏழை மகனை முதல்வராக்க வேண்டும் என்ற ராம் மனோஹர் லோஹியாவின் பல காலக் கனவு நனவாகி விட்டது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

'பாபர் மசூதிக்கு அருகே பறவைகூட பறக்கமுடியாது'

முலாயம் சிங் முதல்வராக பதவியேற்றவுடன், உத்தர பிரதேசத்தில் வேகமாக வளர்ந்து வந்த பாரதிய ஜனதா கட்சியை வலுவாக எதிர்க்க முடிவு செய்தார்.

"பாபர் மசூதிக்கு அருகே பறவை கூட பறக்கமுடியாது" என்று அவர் சொன்ன வாக்கியம் அவரை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது.

இது மட்டுமின்றி 1990 நவம்பர் 2ம் தேதி பாபர் மசூதியை நோக்கி கரசேவகர்கள் செல்ல முயன்றபோது, அவர்கள் மீது முதலில் தடியடி நடத்தப்பட்டு, பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 12க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாஜக ஆதரவாளர்கள் முலாயம் சிங் யாதவை 'மௌலானா முலாயம்' என்று அழைக்கத் தொடங்கினர்.

1992 அக்டோபர் 4ஆம் தேதி அவர் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை தன்னால் மட்டும் தடுக்க முடியாது என்று அவர் கருதினார்.

ஆகவே அவர் கான்ஷி ராமின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். டெல்லியில் உள்ள அசோசா ஹோட்டலில் தொழிலதிபர் ஜெயந்த் மல்ஹோத்ரா, கான்ஷிராமுடனான அவரது சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

1993 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், அவரது கட்சி 260 இடங்களில் போட்டியிட்டு 109 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 163 இடங்களில் போட்டியிட்டு 67 இடங்களையும் பெற்றது. பாரதிய ஜனதா கட்சிக்கு 177 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் முலாயம் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

 

சிவப்புக் கோடு

முலாயம் சிங் யாதவின் அரசியல் பயணம்

  • 1967ல் உத்தர பிரதேச மாநிலம் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் வென்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
  • முலாயம் சிங் யாதவ் 1996-ஆம் ஆண்டு வரை ஜஸ்வந்த்நகர் எம்எல்ஏவாக இருந்தார்.
  • 1989ல் முதன்முறையாக உத்தர பிரதேசத்தின் முதலமைச்சரானார்.
  • 1993ல் இரண்டாவது முறையாக மாநில முதல்வராக பதவியேற்றார்.
  • 1996ல் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டார்.
  • 1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
  • அதன் பிறகு முலாயம் சிங் யாதவ், மக்களவை தேர்தல்களில் சம்பல் மற்றும் கன்னோஜ் தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
  • 2003ல் மீண்டும் முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றார்.
  • முலாயம் சிங் யாதவ் 2007 வரை உத்தர பிரதேச முதல்வராக இருந்தார்.
  • இதற்கிடையில் 2004 இல் அவர் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால் பின்னர் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 2014 மக்களவைத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ், ஆசம்கர் மற்றும் மெயின்புரி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • பின்னர் அவர் மெயின்புரி தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார்.
  • 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 

சிவப்புக் கோடு

கான்ஷி ராம் முலாயமை நான்கு மணி நேரம் காக்க வைத்தபோது...

கான்ஷி ராமுடனான இந்தக் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏனென்றால் பகுஜன் சமாஜ் கட்சி தனது கூட்டணிக் கட்சியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தது.

மாயாவதி முலாயமின் பணிகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை பகிரங்கமாக அவமானப்படுத்தத் தயங்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு கான்ஷிராமும் முலாயம் சிங் யாதவை எதிர்க்கத் தொடங்கினார்.

உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலராக இருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், 'Journeys through Babudom and Netaland' என்ற தனது புத்தகத்தில் "ஒருமுறை கான்ஷி ராம் லக்னெளவுக்கு வந்து சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்தார். அவரிடம் முன்பே நேரம் பெற்றுக்கொண்டு முலாயம் சிங் அவரை சந்திக்கச் சென்றார். அப்போது கான்ஷிராம் தன் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அடுத்த அறையில் அமர்ந்து கான்ஷி ராம் வேலையை முடிக்கும்வரை காத்திருங்கள் என்று அவரது ஊழியர்கள், முலாயமிடம் தெரிவித்தனர்," என்று எழுதியுள்ளார்.

"கான்ஷி ராமின் கூட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. கான்ஷி ராமின் உதவியாளர்கள் வெளியே வந்ததும் தான் உள்ளே அழைக்கப்ப்டுவோம் என்று முலாயம் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து உள்ளே என்ன நடக்கிறது என்று முலாயம் கேட்டபோது கான்ஷி ராம் முகச் சவரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் பிறகு அவர் குளிக்கச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. முலாயம் வெளியே காத்திருந்தார். இதற்கிடையில் கான்ஷி ராம் சிறிது தூங்கினார். நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவர் முலாயம் சிங்கை சந்திக்க வெளியே வந்தார்."

" அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அறையை விட்டு வெளியே வந்த முலாயம் சிங்கின் முகம் சிவந்திருந்தது என்று அங்கிருந்த எனக்கு தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர். உத்தர பிரதேச முதல்வரை வெளியில் வந்து வழியனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்றும் கான்ஷி ராம் நினைக்கவில்லை," என்று சுப்பிரமணியம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே நாள் மாலையில் கான்ஷி ராம்,பாஜக தலைவர் லால்ஜி டாண்டனைத் தொடர்பு கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி , முலாயம் சிங் அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது.

முன்னதாக ஜூன் 2-ம் தேதி மாயாவதி லக்னெளவுக்கு வந்தபோது, முலாயம் சிங்கின் ஆதரவாளர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் அவரைத் தாக்கி அவமானப்படுத்த முயன்றனர்.

இதற்குப் பிறகு இந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகக் குறையவில்லை.

முலாயம் சிங்கிற்கும் அமர் சிங்கிற்கும் இடையே நட்பு

2003 ஆகஸ்ட் 29 அன்று முலாயம் சிங் யாதவ் மூன்றாவது முறையாக உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையில் அமர்சிங்குடன் அவருக்கு ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது.

 

முலாயம் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமர் சிங்கிற்கு மாநிலங்களவை சீட்டு வழங்கிய முலாயம், பின்னர் அவரை கட்சியின் தேசிய பொதுச் செயலராக ஆக்கினார். இதன் காரணமாக பெனிபிரசாத் வர்மா உள்ளிட்ட பல பெரிய தலைவர்கள் முலாயம் சிங் யாதவுடனான தங்கள் நெருக்கத்தை குறைத்துக்கொண்டனர்.

"முலாயம் சிங் எனக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார். ஒருமுறை ராம் நரேஷ் யாதவ் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, முலாயம் சிங் யாதவை முதல்வராக்குமாறு சரண் சிங்கிற்கு பரிந்துரை செய்தேன். ஆனால் சரண் சிங் இதைக்கேட்டு சிரித்தார். உயரம் குறைவான இவரை யார் தலைவராகக் கருதுவார்கள் என்றார். அப்போது நான் அவரிடம் 'நெப்போலியன், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரும் உயரம் குறைந்தவர்கள். அவர்கள் தலைவராக ஆகமுடியும் என்றால், முலாயமால் ஏன் முடியாது' என்று என் வாதத்தை முன்வைத்தேன். அதை சரண்சிங் ஏற்கவில்லை," என்று ஒருமுறை பிபிசியிடம் பேசிய பெனி பிரசாத் வர்மா கூறியிருந்தார்.

கை நழுவிய பிரதமர் பதவி

முலாயம் சிங் யாதவ் 1996 இல் ஐக்கிய முன்னணி அரசில் பாதுகாப்பு அமைச்சரானார். பிரதமர் பதவியில் இருந்து தேவ கெளடா ராஜினாமா செய்த பிறகு, முலாயம் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

"தலைமை பதவிக்கான உள் வாக்கெடுப்பில் முலாயம் சிங் யாதவ் 120-20 என்ற கணக்கில் ஜி.கே. மூப்பனாரை தோற்கடித்தார்," என்று 2012 செப்டம்பர் 22ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் தான் எழுதிய 'Mulayam is the most political' என்ற கட்டுரையில் சேகர் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் அவரது போட்டியாளர்களான லாலு பிரசாத் யாதவும், ஷரத்தும் அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். சந்திரபாபு நாயுடுவும் அவர்களுக்கு துணை நின்றார். இதன் காரணமாக முலாயம் சிங்கிற்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. அவருக்கு அந்தப் பதவி கிடைத்திருந்தால், குஜ்ராலைக் காட்டிலும் அதிக காலத்திற்கு கூட்டணியை காப்பாற்றியிருப்பார்."

நம்பகத்தன்மை பற்றிய கேள்வி

இந்திய அரசியலில் முலாயம் சிங் நம்பகமான கூட்டாளியாக ஒருபோதும் கருதப்படவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் சந்திரசேகரை தனது தலைவராக அவர் கருதினார். ஆனால் 1989இல் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர் விஸ்வநாத் பிரதாப் சிங்கிற்கு ஆதரவளித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு வி.பி. சிங் மீது அவருக்கு கசப்பு ஏற்பட்டபோது மீண்டும் சந்திரசேகருடன் சேர்ந்தார்.

2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைத்தபோது, இடதுசாரிக் கட்சிகள் அவரை எதிர்த்து கேப்டன் லட்சுமி சேஹலை நிறுத்தியது. கடைசி நேரத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவை கைவிட்ட முலாயம், கலாமுக்கு தனது ஆதரவை அளித்தார்.

2008-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப்பெற்றபோதும், அவர்களுக்கு ஆதரவளிக்காமல் அரசுக்கு ஆதரவளிக்க முலாயம் முடிவு செய்ததால் மன்மோகன் சிங் அரசு காப்பாற்றப்பட்டது.

2019 பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோதி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று அவர் கூறியது பல அரசியல் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

சோனியா காந்திக்கு மறுப்பு தெரிவித்த கதை

 

முலாயம் , சோனியா, மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1998-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு முலாயம் சிங் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.

அவர் உறுதியளித்த பின்னரே சோனியா காந்தி தனக்கு 272 பேரின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பின்னர் தனது வார்த்தையில் இருந்து முலாயம் பின்வாங்கியதால் சோனியா காந்திக்கு தலைகுனிவு ஏற்பட்டது.

லால் கிருஷ்ண அத்வானி தனது சுயசரிதையான 'மை கன்ட்ரி, மை லைஃப்'-இல் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு,"ஏப்ரல் 22ஆம் தேதி இரவு எனக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸிடமிருந்து அழைப்பு வந்தது. உங்களுக்காக ஒரு நல்ல செய்தி இருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார். சோனியா காந்தி ஆட்சி அமைக்க முடியாது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கியமான ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் இந்த சந்திப்பை உங்கள் வீட்டிலோ, என் வீட்டிலோ நடத்த முடியாது. ஜெயா ஜேட்லியின் சுஜான் சிங் பார்க் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். ஜெயா தன் காரில் உங்களை அழைத்துச் செல்ல வருவார் எனக் கூறினார்" என்று எழுதியுள்ளார்.

"ஜெயா ஜேட்லியின் வீட்டிற்கு நான் சென்றபோது, பெர்னாண்டஸ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஏற்கனவே அங்கு இருந்தனர். அவரது கட்சியைச் சேர்ந்த 20 பேர் சோனியா காந்தியை பிரதமராக்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நம் நண்பர் உறுதி கூறுகிறார் என்று பெர்னாண்டஸ் என்னிடம் கூறினார். பெர்னாண்டஸின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்திய முலாயம் சிங் யாதவ், 'நீங்கள் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டீர்கள் என்று என்னிடம் வாக்குறுதி அளிக்க வேண்டும். மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்றார். உடனே அதற்கு நான் சம்மதித்தேன்," என்று அத்வானி மேலும் எழுதியுள்ளார்.

இரண்டு திருமணம் செய்துகொண்ட முலாயம் சிங் யாதவ்

1957இல், முலாயம் சிங் யாதவ் மாலதி தேவியை மணந்தார். 2003இல் அவர் இறந்த பிறகு முலாயம் சிங் யாதவ் சாதனா குப்தாவை மணந்தார். நீண்ட நாட்கள் இந்த உறவு மறைக்கப்பட்டு வந்தது. மிக நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் முலாயம் சிங் யாதவ், தனக்கு மனைவி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளித்தபோதுதான் இந்த திருமணம் குறித்து முதன்முறையாக மக்கள் அறிந்தனர்.

முலாயம் 2003-ல் சாதனா குப்தாவை மணந்தபோது, மூத்த தாரத்தின் மகன் அகிலேஷ் யாதவுக்கு திருமணம் ஆகியிருந்ததோடு, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்தது.

குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு

 

முலாயம் மற்றும் அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முலாயம் சிங் யாதவ் குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 2014 மக்களவைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் மொத்தம் ஐந்து இடங்களைப் பெற்றது, இந்த ஐந்து எம்.பி.க்களும் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

2012 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் தனது மகன் அகிலேஷ் யாதவை தனது வாரிசாக்கினார். ஆனால் முலாயம் 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் ஆட்சியை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 2017 சட்டப்பேரவைத்தேர்தலில் அகிலேஷ் தோல்வியடைந்தார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கட்சி தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் யாதவ் நீக்கப்பட்டு, அவரது மகன் அகிலேஷ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்திலும் முலாயம் பங்கேற்கவில்லை. பின்னர் தோல்வியின் சுமையை தன் மகன் மீது சுமத்திய அவர், "அகிலேஷ் என்னை அவமானப்படுத்திவிட்டார். ஒரு மகன் தந்தைக்கு விசுவாசமாக இல்லை என்றால் அவர் யாருக்கும் விசுவாசமாக இருக்க முடியாது," என்று கூறினார்.

முலாயமின் விருப்பத்திற்கு மாறாக அகிலேஷ் 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து போட்டியிட்டார். இந்தக் கூட்டணியை அதுவரை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.

இந்த கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. பின்னர் சில நாட்களில் இந்த கூட்டணி முறிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

https://www.bbc.com/tamil/india-63163856

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.