Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும்

 

 

R-300x200.jpg kuru-300x169.jpg

கலாநிதி சூசை ஆனந்தன்

வடக்கில் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருந்தன.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகன விவகாரம், இப்போது திருகோணமலை கோணேஸ்வர கோயிலை மாசுபடுத்தும் விவகாரங்கள், ஏற்கனவே பறிபோன கன்னியா வெந்நீரூற்று விவகாரம்…இவைகள் இப்பிரபஞ்சத்தில் மிகவும் மோசமான இழி நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மதவாத தொழுநோய் பிடித்த நாடு சிறிலங்கா என்பதை நிரூபிக்க போதும்.
வடகிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு,மற்றும் நினைத்தவாறு புத்த விகாரைகள் கட்டுதல் போன்ற அராஜக செயற்பாடுகள் குறித்து 17.09.22 தினக்குரல் தனது ஆசிரியர் தலையங்கத்தில் காத்திரமான சில கருத்துக்களை கூறியிருந்தது.
“இலங்கையில் பெருந்தொகையான இராணுவத்தை கொண்டு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதனை பெளத்த சிங்கள மயமாக்கி தமிழ் மக்களின் தனித்துவத்தை சீரழிப்பதற்கான சதித்திட்டம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவதாகவும்,அதனை முறியடிக்க தேவையான ஒரு கட்டமைப்பு தமிழர் தரப்பிடம் இதுவரை இல்லையென்றும் இத்தகைய நயவஞ்சக திட்டத்தினை முறியடிக்க உறுதியான கட்டமைப்பு ஒன்று தமிழர் தரப்பில் அவசியம்” எனவும் தனது ஆசிரியர் தலையங்கத்தில் இடித்துரைத்திருந்தது. அத்துடன் வடக்கில் பறிபோன நிலங்கள், இந்து கோவில்களின் ஆக்கிரமிப்பு, அத்துமீறி விகாரைகள் கட்டுதல் தொடர்பாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தது.
தமிழர் தலைமைகள் இவ்வாறான சூழலில் , திடுக்கிட்டு நித்திரையால் எழும்பியது போல சம்பந்தன் ஐயா அவர்கள் ஜனாதிபதிக்கு வட-கிழக்கு ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பாக காரசாரமான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.அதில் வட-கிழக்கு நிலத்தை துண்டாடல், மாவட்ட எல்லைப் பரப்புகளை வஞ்சகமாக சிங்கள மாவட்டத்துடன் இணைத்தல், கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி அது வரையப்பட்டிருந்ததாக அறிய முடிந்தது.
வட-கிழக்கு துண்டாட இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என நம்பிக்கை வெளியீட்டுடனும் அந்த கடிதம் வரையப்பட்டுள்ளது. இது ஐயாவுடைய எத்தனையாவது கடிதம் என்பது அவருக்கே வெளிச்சம். வட-கிழக்கு ஏற்கனவே நீதிமன்றம் மூலம் துண்டாடப்பட்டு விட்டதை ஐயா மறந்து போனார் போல.
வட-கிழக்கில் புதிய சிங்கள குடியேற்றம், சிங்களவர்கள் குடித்தொகை மீனவர் குடியேற்றம்,பறிக்கப்பட்ட பிரதேசங்களின் பரப்பளவு, எந்தெந்த பிரதேசங்கள் சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன அல்லது இணைக்கப்படவுள்ளன போன்ற தரவுகள், தகவல்கள், வரைபடங்கள், தடுப்பதற்கான பொறிமுறைகள் எவையும் தமிழர் தரப்பிடம் கிடையாது போலவே தெரிகிறது.

மேலும் கடந்த ஞாயிறு அன்று வவுனியாவில் கூடிய தமிழரசுக்கட்சி வட-கிழக்கு இராணுவமயமாதல்,சிங்கள குடியேற்றம்,புத்த விகாரைகள் அமைத்தல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றை தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.எல்லாம் காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி இது.வழமைபோல காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விடுமா? அல்லது செயல்வடிவம் பெறுமா? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
மேலும் கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரி அடியார்களின் பாத யாத்திரை ஒன்றும் இந்து மாமன்றத்தில் நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டு யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.இதனிடையே நீதிமன்ற கட்டளையையும் மீறி குருந்தூர் மலையில் விகாரை கட்டும் வேலை தொடர்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த 21.09.22 அன்று அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நியாயம் கேட்டு எதிர்த்த சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,சித்தார்த்தன்,தசாரள்ஸ் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.ஏனைய வன்னி வீரர்களின் தலைகளையே காணோம்.பாவம் கடும் வேலை போலும்.மேலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் களத்துக்குச் சென்று தமது கடும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.இவை எவற்றையும் ஜனாதிபதி காதில் வாங்கியதாக இல்லை.நியாயம் கேட்டு போராடியவர்களை கைது செய்து போராட்டங்களை கட்டுப்படுத்துகின்ற மிலேச்சத்தனமான வேலையையே இந்த அரசு செய்து வருகின்றது

பறிக்கப்பட்ட தமிழர் நிலம்

சிறிலங்காவின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பானது தமிழ் போராளிகளின் ஒப்பற்ற தியாகத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டுவரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.சொந்த நிலங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.ஆயினும் 2009 சிறிலங்கா அரசு சீனா,பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் துணையுடன் நடத்திய இனவழிப்பு போரினால் தமிழர் தேசம் மோசமாக சிதறடிக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கானவர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டதுடன் வடகிழக்கு தரை,கடல் காடுகள் என முழு நிலப்பரப்பும் சிறிலங்கா வசமாயின.இந்தியா உதவியிராவிடின் போரை வென்றிருக்க முடியாதென சிறிலங்கா அரசும் படைத்தளபதிகளும் பல தடவைகள் இந்தியாவை நினைவு கூர்ந்தமை நோக்கத்தக்கது.போர் ஆலோசனைகள், பயிற்சிகள், தொலை உணர்வு தொழில்நுட்ப வழிகாட்டல்கள் அனைத்திலும் இந்தியா சிறிலங்கா படைகளுக்கு உதவியுள்ளமை எல்லோரும் அறிந்த ஒன்றே.சிரிக்க வைத்தே கழுத்தறுத்தது போல ஈழத்தமிழர் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டன.போருக்கு இந்தியா உதவியிராவிடின் ஈழத்தமிழர்கள் இன்றைய இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது எமது கருத்து.

போர் அலை ஓயுமுன்னரே அவசர அவசரமாக முல்லைத்தீவில் மணலாறு வெலி ஓயாவாக மாறி வெலி ஓயா என்ற புதிய பிரதேச செயலர் பிரிவை ஏற்படுத்தி பத்தாயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டும் விட்டனர்.அத்துடன் கொக்கிளாய்,நாயாறு,தென்னைமரவடி ஆகிய பாரம்பரிய மீனவ கிராமங்களும்,கரைவலைப் பாடுகள் பலவும் பறிபோயின. புதன்கிழமை சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவில் பெரும் அடாவடித்தனத்தில் இறங்கியிருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இப்போ பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டநிதி மேலும் நில,கடல் ஆக்கிரமிப்புக்கு நன்கு உதவும்.இதனை தடுத்து நிறுத்த எந்தப்பொறிமுறையும் தமிழர் தரப்பிடம் கிடையாது.குறித்த பகுதி சார்ந்த மக்களே எதிர்த்து பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் முரண்படுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மனித உரிமைப் பேரவை

வழமையாக ஆலய “நவ நாட் திருவிழா” போல் இம்முறையும் ஐ.நா பேரவை 51 வது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயம் வெகு காட்டமாகவே இப்பேரவையில் தொடங்கும்.கடைசியில் வழமைபோல கால அவகாசம் வழங்கி இலங்கையை தட்டிக்கொடுத்து “ஒழுக்கம் மிகவும் நன்று, முயற்சித்தால் மேலும் முன்னேறலாம்” என நற்சான்றிதழ் கொடுத்து கதையை முடித்துவிடும். இதுவரை வழங்கப்பட்ட கால அவகாசங்கள் வடக்கில் வன்னியில் நில ஆக்கிமிப்புக்கும் பெளத்த விகாரைகள் அமைப்பதற்கும் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை சிதைக்கவே உதவியிருக்கின்றன.இம்முறை வழங்கப்படும் கால அவகாசம் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை மேலும் சிதைக்கவே உதவும் எனலாம்.இலங்கை-இந்திய ஒப்பந்தம், பதின்மூன்றாவது அரசியல் சீர்திருத்தம் எல்லாம் கோமா நிலைக்கு சென்று பல தசாப்தம் கடந்து விட்டது.எம்மைப் பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஓர் அமைதியான நீரோடை அல்ல.ஆபத்தான முதலைகள் நிறைந்த இடம்.அதில் இறங்குவது எமக்கு முடிவைத் தவிர எந்த விடிவையும் தராது.

இதனிடையே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்து அதனை ஏற்கப்போவதில்லை என நாட்டின் அதி விசுவாசியான வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.வெளிநாட்டுப் பொறி (முறை) பிளவை உண்டுபண்ணுமாம்.உள்நாட்டு பொறி (முறை) மிக உறுதியானதாம். பதின்மூன்று வருடமாக உள்நாட்டு பொறி (முறை) செய்ய வெளிக்கிட்டு இன்னும் பொறி வேலை முடியவில்லை. ஜீ.எல்.பீரிஸின் வேலை “குத்துச்சண்டை” வீரரிடம் விடப்பட்டுள்ளது.ஏப்ரல் தேவாலய குண்டு வெடிப்பு, கொவிட் இறப்பின்போது நடந்த நல்லடக்க விவகாரம் எல்லாம் மறந்து போச்சு அவருக்கு.பாவம் அவர். இப்போ மனித உரிமைகள் சமமாக மதிக்கப்படும் எனவும் புதுக்கதை ஒன்றையும் விட்டுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இம்முறை இந்தியாவின் நிலைப்பாடு வழமையைவிட சற்று வித்தியாசமான திசையை நோக்கி சென்றுள்ளது போல் தெரிகிறது.
“இனப்பிரச்சினைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசு கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை” என ஐ.நா.வில் இந்தியா கவலையை மட்டும் வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.மேலும் “மாகாண சபைகள் அதிகார பகிர்வுக்கு அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.இது விடயத்தில் சிறிலங்காவுக்கான நம்பகத்தன்மை வாய்ந்ததாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டு” மெனவும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.வழமையாக இந்திய அதிகாரிகள் இலங்கை விஜயத்தின்போது சொல்லுகின்ற பழைய செய்திகளே இவை.கேட்டு புளித்துப்போன கதைகள்தான் இவை.
இந்திய நிலைப்பாடு குறித்து சென்னை பல்கலைக்கழக அரசறிவியல்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “உண்மையில் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என இந்தியா நினைத்திருந்தால் அதனை எப்போதோ கொண்டுவந்திருக்கலாம்,அப்படி பல வாய்ப்புகள் இருந்தும் அதனை இந்தியா செய்யவில்லை என்றும், ராஜதந்திர அரசியலில் இந்தியாவை விட பல மடங்கு முன்னனோடி நாடாக இலங்கை இருக்கிறது.தேவைப்படும்போது இந்தியாவைப் புறக்கணிப்பதும் மற்றத் தருணங்களில் மிகமிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல” எனவும் சாடியிருந்தார்.
மேலும் “2009 லிருந்து ஐ.நா.வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கைக்கு அதிக கடன் உதவிகளைச் செய்துவந்த இந்தியா எப்படி இப்போது ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட முடியும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.இவரது கூற்று முற்றிலும் சரியானதே.
இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஓ.சி எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது.வடக்கில் மூன்று தீவுகள் காற்றாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.சீபா என்ற வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.இந்த நிலையில், இந்தியாவின் ஐ.நா பேரவையின் நிலைப்பாடு பட்டமரத்தில் பால்வடிந்த கதையாகவே முடியும் என எண்ண வேண்டியுள்ளது.
ஜனாதிபதி அவர்கள் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது, சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் 2048 ல் இலங்கையை வறுமை அற்ற நாடாக மாற்றப்போவதாகவும் கூறியிருந்தார்.

புத்தளத்திலிருந்து வடக்காக முல்லைத்தீவு வரை பசுமை ஹைட்ரஜன், வடக்கே மேற்குப்பகுதியில் (மன்னார்) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி, (காற்றாலை), கிழக்காக துறைமுக வாய்ப்பு யாழ்ப்பாண தீவுகளில் காற்றாலை மின் உற்பத்திக்கான வாய்ப்பு இவைகளையெல்லாம் இந்தியாவுக்கு வழங்குவதன் மூலம் வடபகுதியை முன்னொருபோதும் இல்லாத அளவில்? பொருளாதாரத்தில் முன்னேற்ற முடியும் எனவும் பொரிந்து தள்ளியிருந்தார்.இதுதவிர இந்திய சுதந்திர தினம் அன்று இந்தியாவும் “இலங்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்” எனவும் இரு நாடுகளும் ஒரேபாதையில் பயணிக்கின்ற நாடு எனும் கற்பனை உலகில் சஞ்சரித்துப் பேசியிருந்தார்.ஆனாலும் தலைமன்னார்_ தனுஷ்கோடி கப்பல்சேவை, பலாலி _ சென்னை விமான சேவை போன்றன இவற்றின் ஆரம்பிக்க மட்டும் ஒருவகை அலர்ஜி அவர்களுக்கு ஏற்பட்டு விடுவதுண்டு.
இவரது கூற்றை அவதானிக்கின்றபோது வடக்கு நிலம் முழுவதையும் இந்தியா வசம் ஒப்படைத்து விடுவார் போலவே தெரிகிறது.வடக்கு கடல் இப்போது இந்திய மீனவர்களிடமே உண்டு. நிலம் மட்டுமே பாக்கி.அதுவும் இனி காலி.

தேசிய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு

இவ்வாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் தேசிய பாதுகாப்புக்காக 383 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.இது மொத்த செலவில்15 சத வீதம் ஆகும். “விவசாயம் மீன்பிடிக்கு தலா 4.89 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுள்ள உணர்வுபூர்வமாக எந்த ஒரு நாட்டின் ஜனாதிபதியும் இப்படி செய்யமாட்டார்” என ம.ஐ.முன்னணியைச் சேர்ந்த விஜித ஹேரத் சாடியிருந்தார்.ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மூச்சு விடவில்லை. ஏனெனில் தமது பதவியும் பாதுகாப்பும் படையினர் கையில்.அத்துடன் வடகிழக்கு சிங்கள பெளத்த ராச்சியமாக மாற்ற படையினர் அவசியம் என்பது அவர்களது பார்வை.நாட்டின் வங்குரோத்து நிலைபற்றி எந்தக்கவலையும் அவர்களிடம் கிடையாது.பாடசாலை புத்தகங்கள் வெளியிட நிதி இல்லையாம்,சீருடைகளுக்கு சீனா உதவவுள்ளதாம். கல்வித்துறையை புறம்தள்ளி பாதுகாப்புக்கு பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்வது இந்நாட்டின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர்களான உயர்திரு சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கலந்துகொண்டு தமிழர்கள் சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி பாதுகாப்புக்கென 15 சதவீதமாக ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க இவை ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
சிறிலங்காவில் உள்ள பத்தொன்பது இராணுவ டிவிசன்களில் பதினாறு டிவிசன்கள் வட-கிழக்கில் உள்ளன.வடக்கில் மட்டும் பதின்மூன்று டிவிசன்கள்.அதிலும் முல்லைத்தீவில் மட்டும் மூன்று டிவிசன்கள் உள்ளன.மொத்த படைத்தரப்பு எண்ணிக்கை மூன்று இலட்சத்து நாற்பத்து ஏழாயிரம் (3,47,000) என குறிப்பு ஒன்று கூறுகிறது.இவ்வருட (2022) பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 383 பில்லியன் ரூபா (15 வீதம்) ஆகும்.ஆகவே இவ்வாறான ஒரு நிலை இருக்கும் வரையில் “பிறக்காத எதிரிக்காக” தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் யுத்தமில்லா சூழலில் நில ஆக்கிரமிப்பும், விகாரைகள் அமைப்பும் தடையின்றி தொடரவே செய்யும்.

முப்படைக்கே முன்னுரிமை

யூலையில் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் நாட்டில் பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட விடயங்களில் அதிக கவனத்தை திருப்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது. .
முதற்கட்டமாக இராணுவத்தை ஏவி பலாத்காரமாக காலிமுகத்திடல் ஜனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியமை,பின் இராணுவ தலைமையகத்துக்குச் சென்று பயங்கரவாதத்தை அடக்கியது போன்று (புலி வாலை ஆட்டத் தவறவில்லை) இந்த காலி முகத்திடல் “கோத்தா கோஹோம்” போராட்டத்தினையும் அடக்கியமைக்காக அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்திருந்திருந்தார்.

பின்னர் (18.௦8. 22) முப்படைத் தளபதிகளையும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி அவர்களை கெளரவப் படுத்தியிருந்தமையும் அதி உச்சமாக நாட்டில் பொது ஒழுங்கமைப்பு பேணவென முப்படைகளையும் களமிறக்கும் அதி விசேட வர்த்தமானியையும் வெளியிட்டிருந்தார்.இதற்கும் மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்து ஜனநாயக வழியில் போராடிய போராட்டக் காரர்களை கைதுசெய்து வருகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கவை.

மேலும் சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் (25.08.22) நடைபெற்ற பல்கலைக்கழக வர்ண விழாவில் கலந்துகொண்டு அவர்கள் தரை,கடல்,ஆகாயம் மட்டுமல்ல சைபர் யுத்தம், இராணுவ ஒழுக்கம், கல்வி அறிவு தொடர்பான விடயங்களிலும் அக்கறை செலுத்துவது அவசியம் என்றவாறு கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

மேலும் கடந்த செப்டம்பர் 15.8.2022 அன்று தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டு கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.
மற்றும் இராணுவ தளபதியின் யாழ்.விஜயத்தின்போது நல்லிணக்க மையம் என்ற “போலி” மையத்தை பலாலி முகாமில் (26.08.22 ) தொடங்கியிருந்தமை போன்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒருவகையில் இராணுவத்தின் துணைகொண்டு இந்த ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஏற்பாடுகள் போலவே பார்க்க வேண்டியுள்ளது.
இப்போது மேற்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் கேந்திர முக்கியத்துவமுடைய பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இதனைக் கண்டித்துள்ளது. ஆனால் வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அது மறந்து போய் அதிக நாட்களாயிற்று.வடக்கில் இன்னும் சில இடங்களுக்கு மீட்சி இல்லை.எவ்வாறாயினும் நாட்டில் எது நடந்தாலும் வட-கிழக்கை சிங்கள பெளத்த ராச்சியமாக மாற்றுகின்ற இலக்கிலிருந்து எந்த அரசு வந்தாலும் இம்மியளவும் விலகப்போவதில்லை போலவே தெரிகிறது.

https://thinakkural.lk/article/214488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.