Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈராக் அவலங்கள்

Featured Replies

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது.

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.

பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன.

சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.

நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்:

ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என் குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை

இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய ரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.

என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.

அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை ...

நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்:

ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறி வருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப் படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி மற்றும் உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும், கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15% பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது.

எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 பேர் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகம் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.

துயரமான வியாபாரம்:

விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு (?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார்.

இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.

"ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.

வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பெண்கள்:

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.

தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறுகையில், தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது.

விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப் பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில், ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம்.

அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண்.

தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:

"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

-News from...thatstamil.com-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.