Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கீதா பாண்டே
  • பதவி,பிபிசி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில் அனாமிகா என்று குறிப்பிடப்பட்ட இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இருந்த கொடூரமான செய்தியால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், 2014ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தண்டனையை உறுதி செய்தது.

ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று அதற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்றம் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த ஆண்களை விடுத்தது. அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கு “உறுதியான மற்றும் தெளிவான சான்றுகள்” இல்லையென்று கூறியது.

 

கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“2022ஆம் ஆண்டின் இந்தியாவில் நீதி இப்படித்தான் இருக்கும்,” என்று ட்விட்டரில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மனச் சோர்வைடைந்த அந்தப் பெண்ணின் தந்தையுடைய ஒளிப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளானது மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் மாநில அரசின் சமீபத்திய உத்தரவுடன் இந்தத் தீர்ப்பை சிலர் ஒப்பிட்டுள்ளனர்.

அனாமிகாவின் தந்தை என்னிடம் “நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சில நிமிடங்களில் பொய்த்துப் போனது” என்று கூறினார்.

“நாங்கள் நீதிக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யும் என்றும் என் மகளைக் கொன்றவர்கள் இறுதியாகத் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் நம்பினோம்,” என்று அவர் கூறினார்.

19 வயதான அனாமிகா, தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா என்ற கீழ்நடுத்தர வர்க்க கிராமப்புறத்தில் வசித்து வந்தார். ஜனவரி 2012இல் அவர் தலைநகரின் புறநகர்ப் பகுதியான குர்காவுனில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருந்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் பாலியல் வல்லுறவு எதிர்ப்பு ஆர்வலர் யோகிதா பயானா, “அவர் தனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார்,” என்கிறார்.

பிப்ரவரி 9, 2012 அன்று இரவு அனாமிகா மூன்று நண்பர்களுடன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சிவப்பு நிற காரில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு சித்திரவை செய்யப்பட்டதன் அறிகுறிகளோடு அவருடைய பாதி எரிந்த, கொடூரமாகச் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூரமான குற்றம் இந்தியாவில் தலைப்புச் செய்தியானது.

விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு மிகவும் உறுதியானது என்று அரசுத் தரப்பு வாதிட்டது. குற்றம் நடந்த இடத்தில் மூன்று ஆண்களில் ஒருவரின் பணப்பையைக் கண்டுபிடித்ததாகவும் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினரை உடல் கிடந்த இடத்திற்கு அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை மீட்க உதவியதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

கைப்பற்றப்பட்ட காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரத்தக் கறை, விந்து மற்றும் முடி ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களும் வாகனத்தில் இருந்ததை நிரூபித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் அந்த நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை “வேட்டையாடிகள்” என்று உயர்நீதிமன்றம் வர்ணித்தது.

ஆனால் கடந்த திங்கட்கிழமையன்று, 40 பக்கங்கள் கொண உச்சநீதிமன்ற உத்தரவு, நீதிபதி பேலோ திரிவேதியால் எழுதப்பட்டது. அது, அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியது:

 

கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றம்

  • “காவல்துறையின் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் பல இருப்பதாக” நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • கடத்தல்காரர்களுடன் சண்டையிட முயன்ற ஓர் ஆண் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நண்பர்களால், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
  • “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் ஆவணங்களைக் கொண்ட காரின் பம்பர், பணப்பை போன்ற கண்டுபிடிப்புகள்” பற்றிய டெல்லி காவல்துறையின் கூற்று, குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட முதல்கட்ட ஒளிப்படங்களில் காணப்படவில்லை.
  • முதலில் சம்பவ இடத்திற்கு வந்த ஹரியானா போலீசார், தங்கள் அறிக்கையில் இந்த விஷயங்களைக் குறிப்பிடவில்லை.
  • புலனாய்வு அதிகாரியின் பறிமுதல் குறிப்பில் பொருட்கள் குறிப்பிடப்படவில்லை.
  • போலீசாரால் மீட்கப்பட்ட கைபேசி, உண்மையில் அனாமிகாவுடையதா என்பதை உறுதிசெய்ய பெண்ணின் தந்தைக்குக் காட்டப்படவில்லை.
  • போலீசாரால் கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற காரில் குற்றச் செயல் இடம்பெற்றது தான் என்பதும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
  • கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் கேள்விக்குரியவை.
  • குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை விசாரிக்காதது “சந்தேக மேகத்தை” உருவாக்கியது.
 

கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காரிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள், கைப்பற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதியன்றே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. “இத்தகைய சூழலில், தடயவியல் ஆதாரங்கள் சேதப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை நிராகரிக்க முடியாது,” என்று அவர் எழுதினார்.

“கொடூரமான குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போனால், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒருவித வேதனையும் ஏமாற்றமும் ஏற்படக்கூடும்” என்பதை ஒப்புக்கொண்ட உத்தரவில், “அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகள், மிகவும் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கு தொடுத்த அனாமிகாவின் குடும்பத்திரன் தரப்பு வழக்கறிஞர் சாரு வாலி கண்ணா என்னிடம் கூறினார்.

“இந்தத் தீர்ப்பு மிகவும் தெளிவற்றது. இது இந்த உயர்-தொழில்நுட்ப சிக்கல்களை எழுப்புகிறது. ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால், அது காவல்துறையை குற்றம் சாட்டவில்லை,” என்று அவர் கூறினார்.

“உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று உத்தரவு கூறுகிறது. ஆனால், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான பல ஆதாரங்களைப் புறக்கணித்தனர்.”

பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றும் அனாமிகாவின் தந்தை, திங்கட்கிழமை இரவு பணி முடிந்து நேராக நீதிமன்றத்திற்குச் சென்றதாகக் கூறினார்.

தீர்ப்பு வாசிக்கப்படும்போது பெற்றோருடன் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த பயானா, அவர்கள் உணர்ந்த கோபம் மற்றும் ஏமாற்றத்தைப் பற்றிப் பேசினார்.

 

கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நான் மனம் உடைந்துவிட்டேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனவே பெற்றோர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நீங்கள் இதிலிருந்து கற்பனை செய்யலாம்,” என்று அவர் என்னிடம் கூறினார்.

இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று தனக்கு “ஒரு சதவீதம் கூட பயம் இருக்கவில்லை” என்றும் நீதிக்கான அவர்களின் போராட்டத்தில் இதுதான் “முடிவு” என்றும் அந்தக் குடும்பத்திற்கு உறுதியளிப்பதாகவும் பயானா கூறினார்.

“எங்களைச் சுற்றி அனைத்துமே சரிந்துவிட்டது. இந்த உத்தரவைப் பற்றி வழக்கறிஞர் எனக்கு செய்தி அனுப்பியபோது, என் முதல் எதிர்வினை அவநம்பிக்கையாக இருந்தது. நான் செய்தியைத் தவறாகக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”

உச்சநீதிமன்றத்திற்கு விசாரணை பற்றி கவலை இருந்தால், அவர்கள் வழக்கை மீண்டும் தொடங்கலாம். மற்றொரு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம் அல்லது வழக்கை மத்திய காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என்று பயானா கூறுகிறார்.

“உண்மை என்னவென்றால், ஓர் இளம் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதிமன்றம் ஏதாவது ஒரு தீர்வை வழங்க வேண்டும்,” என்று கூறுகிறார்.

“வானத்திலிருந்து வந்த மின்னலால் நான் தாக்கப்பட்டேன்,” என்று அனாமிகாவின் தந்தை கூறினார். அவர் மனம் தடுமாறியிருந்தார்.

“உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது? பத்து ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்குச் சந்தேகமே வரவில்லை. பிறகு எப்படி அனைத்தும் திடீரெனப் பொய்யானது?,” என்று அவர் கேட்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cje7wln5ggno

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - குஜராத் அரசு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பில்கிஸ் பானு வழக்கு

பட மூலாதாரம்,CHIRANTANA BHATT

8 ஜனவரி 2024, 05:35 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, குற்றவாளிகள் மன்னிப்புக் கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தது.

தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, குற்றவாளிகளின் பொது மன்னிப்பு மனு மீது நடவடிக்கை எடுத்து, 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் அனைவரும் கோத்ரா துணை மாவட்ட சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் குஜராத் அரசு கூறியிருந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதுடன் அவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் ஆளானார்.

இந்த வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பில்கிஸ் பானுவும் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசின் வாதம் என்ன?

குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும் அவர்களின் நடத்தையை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குஜராத் அரசு தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததற்கும், மூன்றாம் தரப்பு மனுதாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்த குஜராத் அரசு, 'காவல்துறை கண்காணிப்பாளர், சிபிஐ சிறப்புப் பிரிவு மும்பை மற்றும் சிறப்பு சிவில் நீதிபதி (சிபிஐ), சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், கிரேட்டர் பாம்பே' என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

கோத்ரா சிறை கண்காணிப்பாளருக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், இவர்கள் செய்த குற்றம் கொடூரமானது மற்றும் தீவிரமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குஜராத் அரசு, “உண்மையில் அரசியல் ஆர்வலரான மனுதாரர் (சுபாஷினி அலி), கிரேட்டர் மும்பை சிறப்பு நீதிபதியால் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை விடுவிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து எந்த அடிப்படையில் மேல்முறையீடு செய்கிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை? மனுதாரர் மாநில அரசின் முடிவில் எப்படி அதிருப்தி அடைகிறார் என்பதை விளக்கவில்லை. மேலும், இந்த மனுவில் அழுத்தமான வாதங்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை," என்று வாதிட்டது.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,PRAKASH SINGH/GETTY IMAGES

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 வது பிரிவின் படி, வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கேமன்னிப்பு வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்திலோ, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடத்திலோ இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளது.

நீதிபதி நாகரத்னா தீர்ப்பில், “இந்த விதியில் வழக்கு எந்த மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிவாரண உத்தரவு ஒதுக்கி வைக்கப்படும். இந்த விஷயத்தில் குஜராத் அரசின் இந்த முடிவை எடுப்பதற்கான திறன் மிகவும் முக்கியமானது.

ஆனால், முழுப் பிரச்சினையும் இங்கு முடிவதில்லை. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பு மனுவை குஜராத் அரசு பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்த மனுவில் பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு, தலைமை நீதிபதியின் கருத்து, குற்றவாளி ராதேஷ்யாம் ஷாவின் ரிட் மனுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த முடிவு செல்லாது” என்றார்.

இந்த பொதுமன்னிப்பு முடிவு சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நீதிபதி நாகரத்னா, “இந்த விவகாரத்தில் குஜராத் அரசு தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆகவே பொதுமன்னிப்பு முடிவு ரத்து செய்யப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கு
படக்குறிப்பு,

குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்ட போது

குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு கிடைத்தது எப்படி?

பொது மன்னிப்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் குஜராத் அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 11, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பொது மன்னிப்பு வழங்க குஜராத் அரசு முடிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு குஜராத் அரசு கட்டுப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த வழக்கில் அரசின் பொது மன்னிப்பு கொள்கையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்கள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.

குஜராத்தின் 1992-ஆம் ஆண்டு பொது மன்னிப்புக் கொள்கையின்படி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எஸ்.வி. ராஜூ, 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட குஜராத் அரசின் பொது மன்னிப்பு முடிவை அவர் ஆதரித்தார்.

இந்த குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். அதில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதையடுத்து, அரசு ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா இருந்தார்.

இந்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முடிவுக்குப் பிறகு, பிபிசி குஜராத்தி பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின் மனநிலையை அறிய முயன்றது.

அப்போது அவர்கள், “குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, பில்கிஸ் பானு மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்" என தெரிவித்தனர்.

 
பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி

2002 குஜராத் கலவரத்தின் போது, ஆமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்.

மேலும், மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அப்போது பில்கிஸ் பானுவுக்கு சுமார் 20 வயது.

பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் அவநம்பிக்கையான நிலையில் பில்கிஸ் பானு அருகேயுள்ள மலைப்பகுதிக்கு சென்று தன் உயிரை காப்பாற்றினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன.

பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், பில்கிஸ் பானு தொடர்ந்து போராடி குற்றவாளிகளை

அடையாளம் காட்டினார்.

2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகு முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது, குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது எனக்கூறி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

நீதிக்கான 17 ஆண்டுகால போராட்டத்தில், பில்கிஸ் பானு மற்றும் அவரது கணவர் யாகூப் ரசூல் ஐந்து குழந்தைகளுடன் பத்து வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது.

2017-ஆம் ஆண்டு பிபிசியின் கீதா பாண்டேவுக்கு அளித்த பேட்டியில், "காவல்துறையும் அமைப்பும் எப்போதும் தாக்குதல் நடத்துபவர்களை ஆதரித்துள்ளது. குஜராத்தில் கூட நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் முகவரியை யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று பில்கிஸ் பானு கூறினார்.

பில்கிஸ் பானுவுக்கு மகள்கள் ஹஜ்ரா, பாத்திமா, சலேஹா என 3 மகள்களும் யாசின் என்ற மகனும் உள்ளனர்.

தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட மகளின் சலேஹா என்ற பெயரை இளைய மகளுக்கு சூட்டியுள்ளார் பில்கிஸ் பானு.

பிடிஐ செய்தி முகமையின்படி, ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு, பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

 
பில்கிஸ் பானு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக ஏப்ரல் 2019-இல், உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு ரூ. 50 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

பில்கிஸ் பானுவுக்கு விதிகளின்படி அரசு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு ஒரு பெண்ணாகவும் நாட்டின் குடிமகளாகவும் தனது கண்ணியத்தை மீட்டெடுத்ததாக பில்கிஸ் பானு அப்போது கூறினார்.

பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சியங்களை சிதைக்க முயன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் பலரின் ஓய்வூதிய பலன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c9e25v9l1p3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.