Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பத்மா மீனாட்சி
  • பதவி,பிபிசி தெலுங்கு சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நீரிழிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதுடெல்லியில் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது.

"இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்தது போன்ற சிக்கல்கள் எழுந்ததால் அவர்கள் உயிரிழந்தனர்," என பிபிசியிடம் அவர் கூறினார். ஜோதி இப்போது மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்.

நடுத்தர வயது கொண்டவர்களிடம் நீரிழிவு நோய் ஏன் அதிகரித்துள்ளது?

"நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்,"  என இந்திய நீரிழிவு நோய் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.

 

அவர் பிபிசியிடம் மின்னஞ்சல் வழியே தனது கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.

அதிக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு இட்டுச்செல்வதற்கான முக்கியமான காரணங்கள் என்றும் அவர் கூறினார்.

ஜோதி போன்ற நடுத்தர வயதில் உள்ளவர்கள் நீரிழிவால் பாதிக்கப்படுவது ஏன்? அவருடைய குடும்பத்தினரின் முந்தைய நீரிழிவு வரலாறு அல்லது அவரது வாழ்க்கை முறை காரணமாக அவருக்கு நீரிழிவு வந்ததா?

குடும்பத்தினருக்கு ஏற்கனவே நீரிழிவு இருந்ததற்கான வரலாறு, வாழ்க்கை முறை பழக்கங்கள் ஆகியவை நீரிழிவு நேரிடுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கின்றன என மருத்துவர் மிஸ்ரா கூறுகிறார். ஆலுபூரி, பன்னீர், கோழி இறைச்சி, பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் என தன்னுடைய தினசரி உணவுத் திட்டத்தின்படி உணவு உட்கொள்வதாக ஜோதி கூறினார்.

நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் தன்னுடைய உணவு பழக்கத்தை மாற்றினாரா என்று கேட்டபோது, "எங்களுடைய தினசரி உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யவில்லை. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உணவை விரும்புகின்றனர். நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, நீரிழிவுக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டபோதிலும், நான் விரும்புவதை உண்கின்றேன்," என்றார்.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது என அமெரிக்காவின் நீரிழிவு மையம் மற்றும் எண்டோகிரைனாலஜியின் நிர்வாக இயக்குநர், உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் லக்ஷ்மி லாவண்யா அலபதி கூறினார்.

 

நீரிழிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறி வருகிறதா?

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும்.

தோராயமாக 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரியவருகிறது.

கோவிட் பெருந்தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் கூட, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

நீண்ட நேரம் பணியாற்றுவது, பல்வேறு சுழற்சி முறைகளில் பணியாற்றுவது ஆகியவை ஒருவரை  அழுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லும். இதுவே நீரிழிவு நோய் நேரிடுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் என மருத்துவர் மிஸ்ரா குறிப்பிடுகிறார்.

"குடும்பத்தில் முன்பு நீரிழிவு பாதித்த வரலாறு உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு விரைவில் என்னை பாதிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்றார் ஜோதி.

வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம் என கூறும் மருத்துவர் அனூப் மிஸ்ரா, யார் ஒருவரையும் எந்த வயதிலும் நீரிழிவு நோய் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

அலுவலக பணி சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நாம் செய்யும் வேலை நமது வாழ்க்கை முறை மீது தாக்கம் செலுத்தி நீரிழிவுக்கான காரணியாக அமையலாம். (சித்தரிக்கும் படம்)

இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய்

இளம் பெண்களிடம் நீரிழிவு நோய் பரவல் என்பது 2000ஆம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருவதாக மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார். இது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விவரிக்கிறார். இந்த ஆய்வுகளில், குறிப்பாக நகரங்களில் வசிக்கும் இளைஞர்களிடம் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோய் நிகழ்வுகள் காணப்படுவது தெரியவந்திருப்பதாக கூறினார்.

இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் 1.29 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானது. 12 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி அவர்கள் உறுதி செய்கின்றனர்?

காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது உடலின் க்ளுக்கோஸ் அளவு வரம்பு 70-100 ஆக இருந்தால் இது வழக்கமான அளவாகும். இந்த வரம்பு 100-125 மில்லி கிராம்களாக இருந்தால் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும், 126க்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய் அறிகுறி என்றும் கணக்கிடப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

எனினும்,  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதை காட்ட, மருந்து நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் இந்த க்ளுக்கோஸ் அளவுகள் குறைக்கப்பட்டிருப்பதாக சில நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தவிர மருத்துவம் மற்றும் இதயவியல் பேராசிரியர் மருத்துவர் பிஎம்.ஹெக்டேவும் இதே கேள்வியை எழுப்புகிறார். அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயர்த்தப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் காரணமா?

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் உலகம் முழுவதும் பொருந்தக்கூடியது என மருத்துவர் லட்சுமி லாவண்யா அலபதி கூறுகிறார்.

மருந்து நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிக அளவு கொடுக்கின்றனவா?

"இது தவறான கருத்து. தவிர, உண்மையில் மருத்துவர்கள்தான் நோயாளிகளிடம் மாற்றம் செய்யும்படி அறிவுறுத்த வேண்டும்," என்கிறார் மருத்துவர் லட்சுமி. "குறைந்த அளவிலான மருந்தில் இருந்துதான் சிகிச்சைகள் தொடங்கப்பட வேண்டும். நீரிழிவு நோய் தாக்கத்தின் அளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட வேண்டும். மருந்துகளின் அளவை குறைக்க வேண்டிய தேவை அல்லது அதிகரிக்க வேண்டிய தேவைக்கு ஏற்ப மருந்துகள் மாற்றப்பட வேண்டும்," என்றும் அவர் சொல்கிறார்.

2019ஆம் ஆண்டில் 10.5 லட்சம் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்த பின்னணியில் உலக சுகாதார அமைப்புடன் கூடுதலாக உலகம் முழுவதும் பரவியுள்ள  சில இதர சுகாதார அமைப்புகள், முன்கூட்டியே கண்டறிவது குறித்து பரிந்துரைக்கின்றன என மருத்துவர் லட்சுமி கூறுகிறார்.

கோவிட் பெருந்தொற்று தாக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக மருத்துவர் மிஸ்ரா கூறுகிறார்.

 

சாதாரண நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, கோவிட் தொற்று காரணமாக க்ளுக்கோஸ் அளவு அதிகரித்திருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என மேலும் அவர் கூறினார்.

நீரிழிவு நோயின் வரலாறு

நீரிழிவு நோய் குறியீடு ('The Diabetes Code) என்ற புத்தகத்தில் மருத்துவ வரலாற்றில், நீரிழிவு நோய் என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார்.

கி.மு. 1550ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பண்டைய எகிப்திய மருத்துவ நூலான எபர்ஸ் பாப்பிரஸ், மற்றும் பண்டைய இந்து வேதங்களிலும் நீரிழிவு நோய் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாத்திரைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு நோய் என்ற பெயர் எப்படி கொடுக்கப்பட்டது? கி.மு 250ஆம் ஆண்டில் மெம்பிஸின் அப்போலோனியஸ் என்ற கிரேக்க மருத்துவர்  நீரிழிவு நோய் என்ற பெயரை உருவாக்கினார் அதிக அளவு சிறுநீர் கழித்தல் என்பதுதான் இதன் பொருளாகும். 1675ஆம் ஆண்டில் டயாபடீஸ் என்பதுடன் மெலிட்டஸ் (தேன்) என்ற பதத்தை  தாமஸ் வில்லிஸ் என்பவர் சேர்த்தார்.

எனினும், 1797ஆம் ஆண்டு வரை நீரிழிவு நோய்க்கு முறையான சிகிச்சையை யாரும் கண்டறியவில்லை. ஸ்காட்டிஷ் ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ரோவ், உணவு திட்டம் மூலம் கார்ப்போஹைட்ரேட் அளவை குறைக்கும் முதல் பரிசோதனையை மேற்கொண்டார்.

அபோலி நாயர் பௌஹார்ட் (1806-1886) என்ற மருத்துவர், நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த உணவு திட்டத்தை முதன் முதலாக முறைப்படுத்தினார்.

1910ஆம் ஆண்டு நீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றாக்குறைதான் காரணம் என்பதை சர் எட்வர்ட் ஷார்ப் ஷேஃபர் என்பவர் கண்டுபிடித்தார்.

'இன்சுலா' என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து இன்சுலின் என்ற ஆங்கில வார்த்தை வந்தது. கணையத்தில் உள்ள லாங்கர்ஹான்ஸ் என்ற திசு கட்டமைப்பின் செல்களில் இன்சுலின் உற்பத்தி செய்வதால் இது அந்தப் பெயரைப் பெற்றது.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஃபிரடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் ஜான் மெக்லியோட் ஆகியோர் 1921ஆம் ஆண்டு இன்சுலினை கண்டுபிடித்தனர். பேண்டிங் மெக்லியோட்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 

நீர் அருந்துதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல் , அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறியது.

எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளதாக  மருத்துவர் லட்சுமி லாவண்யா கூறுகிறார். இதன் காரணமாக என்ன பிரச்னைகள் எழுகின்றன? ரத்தத்தின் அதிக குளுக்கோஸ் அளவு என்பது ரத்த குழாய்களை பாதிக்கலாம்.

காலில் தொற்று ஏற்படுதல் மற்றும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பார்வையின்மை, சீறுநீரகம் செயல் இழத்தல் மற்றும் மாரடைப்பு போன்ற உடல் நலக்கோளாறுகள் நேரிடுவதற்கு முதன்மையான காரணியாக நீரிழிவு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

 

நீரிழிவு நோய் நிலையில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமா?

அண்மைக் காலமாக, பல்வேறு அமைப்புகளின் விளம்பரங்களில், நீரிழிவு நோய் நிலையில் மாற்றம்  என கோரப்படுவதை பரவலாக இணையவெளியில் காணமுடிகிறது. தங்கள் அமைப்புகளால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின்படி நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக நோயாளிகளின் அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றனர்.  

நூற்றுக் கணக்கான நல மையங்கள், சாத்வீக உணவு முன்னெடுப்பாளர்கள் மற்றும் இணையவழி வணிக தளங்கள்  (குறைந்த குளுக்கோமிக் உள்ளடக்கம் கொண்டவை) லோகி (LOGI ) எனப்படும் உணவு வகையை விற்பனை செய்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்ற அறிகுறியையும் இவை குறிப்பிடுகின்றன.

உணவு திட்டம் (டயட் ப்ளேன்) மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என மருத்துவர் பிஎம்.ஹெக்டே கூறுகிறார்.

"வாழ்க்கை முழுவதும் மருந்து எடுத்துக்கொண்டால்தான் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்ற தீர்வை எதிர்பாரதவிதமாக உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோய் அமைப்புகள் கொண்டிருக்கின்றன," என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார்.

 

சத்தான உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவே மருந்து

"உணவே மருந்து," என விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரக்யானந்த் சொல்கிறார்.

44ஆவது வயதில் பிரக்யானந்துக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் குறிப்பிட்ட அளவுக்கு அதிமாகவே இருந்தன. எனினும், எந்தவித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் தனது நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பிபிசியிடம் அவர் குறிப்பிட்டார்.

"ஒரு நாள் இனிப்பு உண்ட பிறகு, தலை சுற்றுவது போல உணர்ந்தேன். என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உடனடியாக நான் ஆய்வகத்துக்கு சென்று எனது ரத்தத்தை பரிசோதனை செய்தேன். உணவு உண்ணாமல் இருக்கும்போது என் உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு 280 ஆக இருந்தது கண்டறியப்பட்டது. உணவு உண்ட பிறகு அந்த அளவு 400க்கும் அதிகமாக இருந்ததும் தெரியவந்தது," என்று பிரக்யானந்தா நினைவு கூர்ந்தார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற உடன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அலோபதி மருந்துகளுடன்  ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன் என்று அவர் கூறினார்.

இந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட ஓராண்டு கழித்து அவர் ஹோமியோபதி மருந்துகளையும் எடுத்துக் கொண்டார்.  ஹோமியாபதி மருந்துகள்தான் குணப்படுத்துவதாக இருந்ததாக கூறினார். ஆனால், இதோடு அவர் நிறுத்தவில்லை.

அவர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் யோகா முதுநிலை படிப்பில் சேர்ந்தார். மருந்துகள் எடுத்துக் கொண்டதுடன் கூடுதலாக யோகா மற்றும் தியான பயிற்சிகளையும் மேற்கொண்டதாக மேலும் அவர் கூறினார்.

உணவு திட்டம் குறித்தும் உணவு திட்டத்தில் சிறுதானியங்களை சேர்ப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார்.

ஏறக்குறைய நான்கரை ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சில மூலிகைகள், சிறுதானியங்கள் ஆகியவை இணைந்த எளிதாக தயாரிக்கப்படும் சில உணவு வகைகளை தாம் தயாரித்ததாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

 அவினாஷ் எனப்படும் தனது ஸ்டார்ட் அப் நிறுவனம், ஹைதராபாத் நகரில் உள்ள சிறுதானிய ஆராய்ச்சிக்கான இந்திய மையத்தின் வாயிலாக நிதி உதவி அளிப்பதற்காக  மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

 

அனைத்து நிகழ்வுகளிலும் நீரிழிவு மாற்றம் சாத்தியமா?

நீங்கள் ஓர் உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை முறைப்படி மேற்கொண்டால், சில வகையான நீரிழிவு நோய்களில் மாற்றம் ஏற்படும் என மருத்துவர் லட்சுமி சொல்கிறார். அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல் , அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறியது.

எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளதாக  மருத்துவர் லட்சுமி லாவண்யா கூறுகிறார். நீரிழிவு நோய் ஏற்படுதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

"சில நேரங்களில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் அல்லது கோவிட் தொற்று காரணமாகவும் அல்லது பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும் போதும் கூட நீரிழிவு நோய் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும்போது வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்," என்கிறார் மருத்துவர் லட்சுமி.

"ஆனால், உடலில் உள்ள இன்சுலினை உருவாக்கும் பீட்டா செல்கள் பாதிப்படைந்தால், அதன் செயல்பாடுகள் குறையும். அப்போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்காது," என்றார் அவர்.

தவிர, முழுமையான இன்சுலின் குறைபாடு இருக்கும்போது நீரிழிவு நோயில் மாற்றம் என்பது சாத்தியமில்லை.

நீரிழிவின் தாக்கம் குறைந்திருக்கின்றதா என்று பார்ப்பதற்கான ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் சோதனையை ஒருவர் நிறுத்தக் கூடாது என்று அவர் கூறுகிறார். இவையெல்லாம் மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே செய்யப்பட்ட வேண்டும், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

 

 

நீரிழிவு நோயில் இருந்து முழுவதும் குணமடைவது சாத்தியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு மாற்றம் குறித்த பிரசாரங்கள்

"உடல்நல மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. உணவு முறை மற்றும் உடற்பயிற்சியோடு கூடுதலாக, மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்," என்றும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொருவருக்கும் பொதுவான உணவு திட்டம் இருக்க முடியாது, இது தனிப்பட்ட நபர்களின் உடல் அமைப்பு, உடல் நலத்தின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது  என்று மேலும் அவர் கூறினார். தவிர பிரக்யானந்தாவும், இதே கருத்தை முன் வைக்கிறார். யோகா, பிராணயாமம், உணவு பழக்கங்கள் மூலமே தனது நீரழிவு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறினார்.

என்ன மாதிரியான உணவு திட்டம் ஏற்றது?

1923ஆம் ஆண்டில் சர் வில்லியம் அஸ்லர் என்பவர் எழுதிய ஒரு மருத்துவ அறிக்கையில், கார்ப்போஹைட்ரேட்டை கிரகிக்கும் உடலின் திறனில் இழப்பு ஏற்படுவதே நீரிழிவு நோயின் அறிகுறி என கூறப்பட்டுள்ளது.

"ஆனால், இன்சுலின் வருகையால், கார்போஹைட் எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது, " என ஜேசன் ஃபாங் கூறுகிறார்.

உணவு திட்டத்தில் சர்க்கரையின் அளவு  மற்றும் கார்ப்போஹைட்ரேட்களை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவை குறைப்பதை இது பரிந்துரைக்கிறது.

உண்ணாமல் இருப்பது, உணவு திட்டம் மற்றும் ஊட்டசத்து ஆகியவை முழுமையாக 2ஆம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்தாகும் என  சர்க்கரை நோய் கல்வியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். சுபா ஸ்ரீ ரே கூறுகிறார்.

அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை  கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆரஞ்சு, தர்பூசணி,  கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்.

பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது என இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

ஆலிவ் எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.

சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மட்டுமின்றி, சோடா, பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், கேக் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் உட்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது என சுபஸ்ரீ கூறுகிறார்.

வாரத்தில் இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பது சிறந்த சிகிச்சை என ஜேசன் ஃபாங் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நீரிழிவு கட்டுக்குள் வந்த பின்னரும் கூட, ஒருவர் வாழ்க்கை முறை மாற்றத்தை புறக்கணித்தால், மீண்டும் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்," என பிரக்யானந்தா எச்சரிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cjqweq0yxk4o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.