Jump to content

சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம்

 

17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில், தமது மகளின் மரணத்துக்கான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

'மகள் உயிரிழப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை'

 

தமது மகளின் காலில் உள்ள ஜவ்வுதான் கிழிந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் தம் மகள் உயிரிழப்பார் என்று தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்கல் எஜுகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரியா. இவர் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்

கடந்த ஓராண்டுக்கு முன்னர் அவரது வலது காலில் ஏற்பட்ட காயத்தால் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. அதே பாதிப்பு மீண்டும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை பெற சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்னர் ஜவ்வு விலகி இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அவரை வீட்டுக்கு அருகிலேயே உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறப் பரிந்துரை செய்துள்ளனர்.

 

17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்

பட மூலாதாரம்,MA SUBRAMANIAN FACEBOOK PAGE

கடந்த 7ஆம் தேதி பெரியார் நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் வலி குறையாததால், பிரியா 8ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அகற்றப்பட்ட கால்

அங்கு பிரியாவின் வலது கால் தசைகள் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவர்களால் கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு காலில் போடப்பட்ட கட்டு மிகவும் இறுக்கமாக இருந்ததால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ரத்த நாளங்கள் பழுதாகி மிகவும் அவதிக்கு உள்ளனார் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் தாம் பிரியாவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வந்து பார்த்த போது அவர் நலமுடன் இருந்ததாகவும், நேற்று நள்ளிரவுக்கு மேல் பிரியாவுக்கு சிறுநீரகம், ஈரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இன்று காலை 7:15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்

 

படக்குறிப்பு,

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் பிணவறை

தமிழ்நாடு அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிரியாவின் சகோதரர்களில் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானது ஆனால் கவனக்குறைவாக அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரியாவின் உடலைப் பெற மறுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வந்த அவரது உறவினர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

மாணவி மரணம் - திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சகோதரி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வோர் அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத் துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

அறிவாலயம் அரசு, சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்குக் காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று இந்த அரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cw86wqejxx4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியா இறந்தது எப்படி?

 

சென்னையில் கால்பந்து வீராங்கனை மாணவி ப்ரியா இறந்தது எப்படி?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப் பிறகும் நடந்தது என்ன? முழு விவரம்.

சென்னை புளியந்தோப்புக்கு அருகில் உள்ள கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. 17 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக முழங்காலில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பரிசோதித்தபோது, எலும்புகளை இணைக்கும் தசைநார்  கிழிந்திருந்தது (Ligament tear) கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக மாணவி சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை (arthroscopy) செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த மாணவியின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த பத்தாம் தேதியன்று கொண்டுவரப்பட்டார்.

இதற்கடுத்து அவருடைய காலின் ஒரு பகுதி அழுக ஆரம்பிக்கவே, அதனை அகற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை மோசமடைந்து, ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து அவர் உயிரிழந்தார்.

 

ப்ரியாவின் சிகிச்சையில் என்ன பிரச்னை?

ப்ரியாவுக்கு பெரியார் நகரில் நடந்த அறுவை சிகிச்சையின்போது காட்டப்பட்ட அலட்சியமே அவருடைய உயிரை எடுத்திருக்கிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளின்போது, ரத்தப்போக்கை தடுப்பதற்காக பிரதானமான தமனியைச் (artery) சுற்றி Tourniquet எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த 'டார்னிக்' கழற்றப்படும்.

ஆனால், ப்ரியாவின் விஷயத்தில் இந்த டார்னிக்கைக் கழற்றுவதில் மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் மிகத் தாமதமாகவே அந்த டார்னிக் அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நேரம் டார்னிக் கட்டப்பட்டிருந்ததால், காலில் Vascular occlusion எனப்படும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால், டார்னிக் கட்டப்பட்டிருந்த பகுதிக்குக் கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்தன.

இந்த நிலையில்தான் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு காலை, அழுகிய பகுதிவரை எடுக்க முடிவுசெய்யப்பட்டு எடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு அழுகிய செல்களை அகற்றும் Debridement treatment எனப்படும் சிகிச்சையும் ப்ரியாவுக்கு நேற்று அளிக்கப்பட்டது.

 

சென்னையில் கால்பந்து வீராங்கனை மாணவி ப்ரியா இறந்தது எப்படி?

ஆனால், சேதமடைந்த தசைப் பகுதியிலிருந்து Myoglobin எனப்படும் புரதம் உருவாகி, ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது. இந்த 'மையோக்ளோபின்' சிறுநீரகத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப் புரதம். இந்தப் புரதம் ரத்தத்தில் கலந்ததால், அந்த ரத்தத்தைச் சுத்திகரித்த சிறுநீரகம் செயலிழந்தது. இதையடுத்து கல்லீரலும், அதற்குப் பிறகு இருதயமும் செயலிழந்து மாணவி உயிரிழந்தார்.

உரிய காலத்தில் டார்னிக் அகற்றப்படாததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைக்கும் காரணம் என ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு மருத்துவர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c19v73m07klo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவம் - சீற்றத்தில் தமிழ்நாடு

By RAJEEBAN

15 NOV, 2022 | 04:51 PM
image

மருத்துவர்களின் தவறினால் மாணவி  ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற பிரியா என்ற மாணவியும் கால்பந்தாட்ட வீரங்கனை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

priya_tamilnadu.jpg

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார்.

 

அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரியா இன்று காலை உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவியின் கால்பந்தாட்ட விளையாட்டு நண்பர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே மகள் பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்.

 

கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.

தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாக செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. மகள் பிரியா தலைநகர் சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதால் செய்தி ஊடகங்களின் மூலம் அவரது மரணமும், அரசு மருத்துவமனைகளின் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழும் குரலற்ற கிராமப்புற ஏழை மக்களின் மரண ஓலங்கள் அரசின் செவிகளை வந்தடையாமலே அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே எதார்த்த உண்மையாகும்.

 

எனவே, தமிழ்நாடு அரசு இனியும் மகள் பிரியாவிற்கு நேர்ந்தது போன்று, அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சையால் மகள் பிரியா உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மகள் பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

 

“மாணவி பிரியாவை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? எனவே இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/140136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு - அரசு மருத்துவமனையில் அன்று நடந்த கொடுமை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 17 நவம்பர் 2022
 

ருக்மணி மற்றும் அவரது கணவர் கணேசன்

பட மூலாதாரம்,GANESAN

சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ப்ரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ரூ.10லட்சத்தை வழங்கியுள்ளார். ப்ரியாவின் மரணத்தை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இழைக்கப்படும் மோசமான சிகிச்சைகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெறும் பணியிடைநீக்கத்துடன் முடிவடைந்துவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ப்ரியாவின் மரணத்திற்கு முன்னதாக, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக பாதிப்பை சந்தித்தவர்கள், தங்களது குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் என்ன ஆனார்கள், அவர்களுக்கு இழப்பீடு கிடைத்ததா என்ற கோணத்தில் ஆராய்ந்தபோது, ஒரு சிலர் வழக்கு போட்டது பற்றியும், அதற்கான பல சிக்கல்களை சந்தித்ததாகவும் கூறுகின்றனர்.

மருத்துவ அலட்சியம் குறித்த வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் அரிது என்றும் கூறுகின்றனர்.  

 

அரசு மருத்துவமனையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவியை இழந்தவர் தேங்காய் வியாபாரி கணேசன்.

2011 மார்ச் மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக நாகர்கோயில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ருக்மணி.

சிகிச்சை முடிந்து, ருக்மணியை காட்டவில்லை என்பதை உணர்ந்த  கணேசன்,  “மருத்துவர்களிடம் பேசமுயன்றபோது சரியான  பதில் கிடைக்கவில்லை. நெடுநேரத்திற்கு பின்னர், ருக்மணி சுயநினைவை இழந்துவிட்டார் என்றும் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என மருத்துவர்கள்  தெரிவித்தபோதுதான், தவறான சிகிச்சை அளித்ததை பற்றி அவருக்கு தெரியவந்தது” என்கிறார்.

 

''என் மனைவிக்கு சிகிச்சையின்போது, சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு அளித்துவிட்டதாக சொன்னார்கள். அதனால் ருக்மணி கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மதுரை மருத்துவமனைக்கு போங்கள், காப்பாற்றும் வாய்ப்புள்ளது என்றார்கள், அதனால் அங்கிருந்து மதுரை சென்றேன். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், என் மனைவி இறந்துபோனார். அந்த சமயத்தில் என் மகன் ஒன்பதாம் வகுப்பு, மகள் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். என் தேங்காய் கடையை மூடிவிட்டு, மருத்துவமனை வாசலில் பலநாள் இருந்தேன்,'' என்கிறார் கணேசன்.

மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் மற்றும் வழக்கறிஞர் அழகுமணி ஆகியோர், அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கான பல வழக்குகளை  கையாண்டுள்ளனர். இவர்களின் உதவியுடன், வழக்கு தொடர்ந்த கணேசன், சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து ரூ.28 லட்சம் இழப்பீட்டை  பெற்றுள்ளார்.

 ''நான் நூறு முறைக்கு மேல் நீதிமன்றம் சென்றிருப்பேன். சிலசமயம்  பேருந்தில் செல்வதற்கு கூட காசில்லாமல் நடந்து சென்றேன். என் வழக்கை விசாரித்த நீதிபதிகள், என் நிலையை  உணர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் தங்குவதற்கு இடம் ஒதுக்கவேண்டும் என்றார்கள். என் பிள்ளைகளை பிரிந்து, வாழ்வாதாரத்தை இழந்து, நம்பிக்கையுடன் காத்திருந்தேன். வழக்கு நடக்கும் நேரத்தில், எங்களை மருத்துவமனையில் மோசமாக நடத்தினார்கள் என்பதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் மரணம் ஏற்பட்டது என்று தீர்ப்பு வந்தது, இழப்பீடு கொடுத்தார்கள், ஆனால் அந்த மருத்துவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை,''என்கிறார் கணேசன்.  

 

வழக்கு நடக்கும் விதம்

 குறிப்பாக அரசு மருத்துவமனையில் நடக்கும் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நெடிய சட்ட போராட்டத்தைச் சந்திக்கவேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அழகுமணி. ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து வழக்கை  நடத்தி, இழப்பீடு பெறுகிறார்கள் என்றும் அதிலும் மருத்துவர்கள் தண்டிக்கப் படுவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது என்கிறார்.  

 

ப்ரியா

பட மூலாதாரம்,DIPR

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் அழகுமணி, ''மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை கொடுத்தால், முதலில் சிகிச்சையின்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன, அதில் தவறு நேர்ந்துள்ளதா என்று நீதிபதிகள் விசாரிப்பார்கள். ஒரு சில, சம்பவங்களில், அறுவை சிகிச்சை அல்லது மிகவும் நுட்பமான மருத்துவ சிகிச்சை தொடர்பாக சந்தேகம் இருந்தால், மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிபதிகள் கேட்பார்கள். அந்த அறிக்கையை கொடுப்பதில் தாமதம் அரசு செய்யும் வாய்ப்புள்ளது.  அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தோம் என்றுகூறி, தவறு செய்தவர்களை பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்வார்கள்,'' என்கிறார்.

 ''சாதாரண அலட்சியம்,  திட்டமிடப்பட்ட குற்றவியல் அலட்சியம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. உள்நோக்கத்துடன் ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை கொடுத்து, அதனால் அவர் பாதிக்கப்பட்டால் அது குற்றவியல் அலட்சியம் என்று சொல்லப்படுகிறது, மற்றவை சாதாரண அலட்சியம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பாதிப்பின் அளவை பொறுத்தும் மருத்துவரின் பங்களிப்பைப் பொறுத்தும், எந்த பிரிவில் அது  சேர்க்கப்படும் என்று ஒரு மருத்துவ குழுதான்  முடிவு செய்யும். ஒருசில வழக்குகளில், இதுபோன்ற மருத்துவக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கே நீண்ட நாட்கள் ஆகிவிடும் என்பதால், வழக்கு போட்டவர்கள் அதனை பின்தொடர முடியாமல் போய்விடும் என்கிறார்.

 ''கணேசனை போல ஒரு சிலர்தான் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்து, குறைந்தபட்சம் இழப்பீட்டை பெறுகிறார்கள். அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை, இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள் என்ற மனப்பான்மை, இறந்தவர்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்ற மனப்பான்மை இருப்பதால், பலர் வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை,''என்கிறார்.  

 

 

அழகுமணி

பட மூலாதாரம்,ALAGUMANI

 

படக்குறிப்பு,

வழக்கறிஞர் அழகுமணி

அலட்சியமான சிகிச்சைக்கு தமிழக அரசின் பதில் என்ன?

கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணத்தில் அலட்சியம் நடந்ததை தமிழக அரசு மறைக்கவில்லை என்று கூறும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டவில்லை என்கிறார்.

 ''கவனகுறைவால் தவறு நேர்ந்தது உண்மை, முதல்கட்ட அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் உதவியுள்ளோம். இறந்த மாணவி ப்ரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன, தவறு எங்கு நேர்ந்தது என்று ஆராய்ந்து நிபுணர் குழு அறிக்கை தரவேண்டும். அதனை கொண்டுதான் எந்தவிதத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்யமுடியும்,' 'என்கிறார் அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் அலட்சியத்தை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கேட்டபோது, ''மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். முதல்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் முழுமையாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தருவதில் நாங்கள் தயக்கம் காட்டமாட்டோம்,''என்கிறார் அவர்.

 

ஆனந்தராஜ்

பட மூலாதாரம்,ANANDARAJ

 

படக்குறிப்பு,

ஆனந்தராஜ்

சிகிச்சையில் அலட்சியத்தைத் தடுப்பது எப்படி?

அரசு மருத்துவமனையில் அலட்சியமாக சிகிச்சை கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால் அடிப்படையில், எத்தனை நோயாளிகளுக்கு அதுபோன்ற அனுபவம் நேர்கிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும், அவ்வாறு நேர்ந்த சமயத்தில் அந்த மருத்துவரோ, ஒரு மருத்துவக் குழுவோ ஏன் அவ்வாறு நடந்துகொண்டது என்பதையும் பார்க்கவேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத்.

 அலட்சியத்தால் இதுபோன்ற மரணம் ஏற்படும்போது, அதனை சோதனை செய்யவும், அறிக்கை கொடுக்கவும் அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை தேர்வு செய்து நிபுணர் குழு அமைக்கவேண்டும். உதாரணமாக, பிரியா சம்பவத்தில், டெல்லி எய்ம்ஸ், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் என அந்த மருத்துவமனை தொடர்பில்லாத நபர்களை கொண்டுதான் விசாரணை செய்யவேண்டும் என்கிறார் ரவீந்திரநாத்.  

 தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களின் வேலை நேரம், பணிச்சுமை என்பது மிகவும் அதிகம். அதேநேரம் மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகிய பணிகளில் உள்ள பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதில்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரு சிலர் 14 மணி நேரம் கூட பணியாற்றவேண்டிய சூழல் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றது என்கிறார் அவர்.

 

 

ப்ரியா

பட மூலாதாரம்,DIPR

 

படக்குறிப்பு,

ப்ரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ரூ.10லட்சத்தை வழங்கியுள்ளார்.

ஊடக வெளிச்சத்திற்கு ஒரு விவகாரம் வந்துவிட்டால், அதற்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்வதுடன் நிறுத்திவதை விடுத்து, அரசு உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவது, மருத்துவ பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டினால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்கிறார் ரவீந்திரநாத்.

 மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான தொடர் கண்காணிப்புக்கு தேவையான பணியிடம் உருவாக்கப்படவேண்டும். மருத்துவர், செவிலியர், மேற்பார்வையாளர் என மூன்று பேரின் கவனமும் இருந்தால்தான் நோயாளிக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்கிறார் அவர்.

 மருத்துவர்களின் மோசமான உதாரணங்கள்  செய்தியாகின்றன, அதேநேரம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பற்றியும், குணமடைந்தவர்களின் நிலை பற்றிய விவரங்களும் வெளிச்சத்திற்கு வரவேண்டும். மருத்துவ உலகின் சாதனைகளை கொண்டாடுவது போல, குணமடைந்த நோயாளிகளின் அனுபவங்களை வெளிப்படுத்தவேண்டும் என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c0welnl6p1ko

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியா மரணம் | மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

900317.jpg மாணவி பிரியா
 

சென்னை: மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல் துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

 

 

 

தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.

நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது.

எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும். அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/900317-protest-across-the-state-if-doctors-are-arrested-in-student-priya-death.html

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.