Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெளதம் அதானி: பிரதமர் மோதியுடனான நெருக்கம், வாழ்வின் நான்கு திருப்புமுனை குறித்து சொன்னது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கெளதம் அதானி: பிரதமர் மோதியுடனான நெருக்கம், வாழ்வின் நான்கு திருப்புமுனை குறித்து சொன்னது என்ன?

கெளதம் அதானி

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

கெளதம் அதானி

30 நிமிடங்களுக்கு முன்னர்

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்டிடிவியின் எதிர்காலம் முதல் பிரதமர் நரேந்திர மோதியுடனான நெருக்கம் பற்றி வெளிவரும் செய்திகளுக்கு தனது முதல் எதிர்வினையை அளித்துள்ளார்.

அதானி குழுமம் சமீபத்தில் என்டிடிவி என்ற செய்தி சேனலை வாங்கியது. இந்த பங்குகள் கொள்முதல் ஊடக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக என்டிடிவி மேம்பாட்டாளர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா பிரணாய் ராய் ஆகியோர் தாங்கள் உருவாக்கிய குழுவிலிருந்து வெளியேறினர். அவர்களுடன் என்டிடிவி ஹிந்தி பத்திரிகையாளரான ரவீஷ் குமாரும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்குப் பிறகு இந்த கையகப்படுத்தல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. என்டிடிவியின் செயல்பாட்டில் அதானி குழுமத்தின் குறுக்கீடு தொடர்பான அச்சங்களும் இதில் அடங்கும்.

 

கெளதம் அதானி இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், என்டிடிவி ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் உலகளாவிய நிறுவனமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

என்டிடிவியின் இதழியல் சுதந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அதானி, "என்டிடிவி ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் உலகளாவிய நிறுவனமாக இருக்கும் என்பதை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். மேலும் நிர்வாகத்திற்கும் ஆசிரியர் குழாமுக்கும் (எடிட்டோரியல்) இடையே ஒரு தெளிவான லட்சுமண ரேகை (வரம்புக்கோடு) இருக்கும்.

என் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் முடிவில்லாமல் விவாதிக்கலாம். அதில் இருந்து வெவ்வேறு அர்த்தங்களை கொள்ளலாம். இதற்கு முன்னரும் பலர் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், பின்னர் எங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்குங்கள்," என்றார்.

கெளதம் அதானி

பட மூலாதாரம்,VIJAY SONEJI/MINT VIA GETTY IMAGES

நரேந்திர மோதியுடனான நெருங்கிய நட்பு

கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினர் பிரதமர் மோதியுடனான நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு, "பிரதமர் மோதியும் நானும் குஜராத்தில் இருந்து வருகிறோம். அதனால்தான் இதுபோன்ற வணிக குற்றச்சாட்டுகளுக்கு நான் எளிதான இலக்காகிவிட்டேன். ஆனால் ஒரு தொழிலதிபராக எனது பயணத்தை பார்க்கும்போது அதை நான்கு கட்டங்களாக பிரிக்க முடியும். அவை ஆச்சரியமாக இருக்கலாம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே எனது தொழில் பயணம் தொடங்கியது," என்கிறார்.

"ராஜீவ் காந்தி இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை தாராளமயமாக்கியபோது, பல விஷயங்கள் திறந்தவெளி பொது உரிமப் பட்டியலில் கொண்டு வரப்பட்டன.

அது எனது ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்க வாய்ப்பாக அமைந்தது. ராஜீவ் காந்தி இல்லாமல் ஒரு தொழிலதிபராக எனது பயணம் தொடங்கியிருக்காது.

"இதற்குப் பிறகு, 1991இல் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் நிதியமைச்சர் ஆக இருந்த மன்மோகன் சிங் இருவரும் பெரிய பொருளாதார மாற்றங்களைச் செய்தபோது எனக்கு மற்றொரு ஏற்றம் கிடைத்தது.

பல தொழில்முனைவோரைப் போலவே, நானும் அந்த சீர்திருத்தங்களின் பலனைப் பெற்றேன். இதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. காரணம், அனைத்தும் எழுத்து வடிவில் உள்ளன," என்றார்.

 

1995-ல் கேசுபாய் படேல் குஜராத் முதல்வராக பதவியேற்றபோது எனக்கு மூன்றாவது திருப்புமுனை ஏற்பட்டது. அதுவரை குஜராத்தில் அனைத்து தொழில் வளர்ச்சியும் மும்பையில் இருந்து டெல்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 8ஐ சுற்றியே எல்லாம் நடந்தது.

அதானி

பட மூலாதாரம்,ANI

அது சூரத் மற்றும் ஆமதாபாத்தை சுற்றியும் நடக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் கடலோரப் பகுதிகளை மேம்படுத்துவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு பல தொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தது. இதன் காரணமாக நான் முந்த்ராவை அடைந்தேன். அங்கு எங்களின் முதல் துறைமுகத்தை உருவாக்க முடிந்தது. மற்றவை எல்லாம் வரலாறு," என்கிறார் அதானி.

 

"நான்காவது திருப்புமுனை 2001இல் குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் நடந்தது. அவரது கொள்கைகள் குஜராத்தின் பொருளாதார முகத்தை மாற்றியது மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் கொண்டு வந்தன.

இதனுடன் வளர்ச்சியும் தடைபடாமல் இருந்தது. அவர் காலத்தில், இது தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பில் வரலாறு காணாத வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று, அவரது தலைமையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியைக் காண்கிறோம். மேலும் புதிய இந்தியா உருவாகி வருகிறது.

இத்தகைய நிலையில் எனது வளர்ச்சியை சுற்றி பல புனைக்கதைகள் வருவது துரதிருஷ்டவசமானது. நான் கூறியது போல் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை," என்கிறார் அதானி.

https://www.bbc.com/tamil/articles/cz7ynkxr982o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதியுடன் நட்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி வெளிப்படை பேச்சு

கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்கிய சாராம்சம்
  • "ராகுல் காந்தி ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். ஒரு தொழிலதிபராக நான் அவரைப் பற்றி கருத்து சொல்வது நல்லதல்ல."
  • "நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. யார் சொல்வதாலும் அல்ல."
  • "இன்று நாங்கள் 22 மாநிலங்களில் தொழில் செய்கிறோம். எல்லா இடங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. எங்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை."
  • "ராகுல் காந்தியும் எங்களது முதலீட்டைப் பாராட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன்."
  • "மோதியிடமிருந்து எந்தத் தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது. கொள்கை பற்றிய விஷயங்களை பேச முடியும்."
8 ஜனவரி 2023, 15:28 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்தும் நரேந்திர மோதியுடனான தனது நட்பு குறித்தும் பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் விரிவாகப் பேசப்பட்டு வருகிறது.

“அவரால் (ராகுல் காந்தி) மக்களுக்கு அதானி என்ற பெயர் தெரிய வந்தது” என்று அதானி குறிப்பிட்டார்.

அதே நேரம் பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசிய அவர், 'மோதியிடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் பெற முடியாது. ஆனால் மோதியுடன் 'எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது' என்றார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீண்ட காலமாக 'அதானி குழுமத்துடன்' பிரதமரின் 'நட்பை' குறிப்பிட்டு வருகிறார்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த கெளதம் அதானி, ராகுல் காந்தியை தான் மதிப்பதாகவும், அவரது அறிக்கையை அரசியல் சொல் விளையாட்டாகக் கருதுவதாகவும் கூறினார்.

தனியார் செய்தி சேனலான 'இந்தியா டிவி'யுடன் உரையாடிய கெளதம் அதானி, "2014 தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி எங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் அதானி யார் என்பதை அறிய உங்களுக்கு வாய்ப்பளித்தது. அதனால்தான் நான் இன்று இங்கே (நேர்காணல் அளித்த ஸ்டுடியோ) இருக்கிறேன்," என்று கூறினார்.

ராகுல் காந்தி குறித்த கௌதம் அதானியின் கருத்துக்குப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் அதானிக்கு விளக்கம் அளிக்க வேண்டி வந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அதேநேரம் மேலும் சிலர் அதானியின் பதில்களைப் பாராட்டி வருகின்றனர்.

2011 நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதே ஹோட்டலில் தான் இருந்ததாகவும் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டதாகவும் அதே நேர்காணலில் அதானி கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய செல்வந்தருமான கெளதம் அதானி ஓர் எளிய வைர வியாபாரியாகத் தனது தொழில் வாழ்கையைத் தொடங்கினார்.

இருப்பினும் இன்று அவரது குழுமம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, சூரிய ஆற்றல், நிலக்கரி சுரங்கங்கள், சிமெண்ட், வீடுகள் முதல் பெட்ரோ கெமிக்கல்ஸ் வரையிலான துறைகளில் வணிகம் செய்து வருகிறது.

'நாட்டின் ஏழைகளுடைய பணத்தை, நாட்டின் இரண்டு பெரிய வணிகக் குழுக்களுக்கு (அதானி மற்றும் அம்பானி) மத்திய அரசு வழங்கியுள்ளது' என்று, ராகுல் காந்தி பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அதானி சொன்னது என்ன?

பல மாநிலங்களைக் கடந்து, 'பாரத் ஜோடோ யாத்திரை' டெல்லியை வந்தடைந்தபோது ராகுல் காந்தி, 'மத்தியில் மோதி அரசு அல்ல, அம்பானி-அதானி அரசுதான் உள்ளது' என்று மீண்டும் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கெளதம் அதானியிடம் கேள்வி எழுப்பியபோது, "ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். ஒரு தொழிலதிபர் என்ற முறையில் அவரைப் பற்றி நான் கருத்து சொல்வது நல்லதல்ல. அவர் மரியாதைக்குரிய தலைவர். அவரும் நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறார்,” என்று கூறினார்.

"அவரது அறிக்கை அரசியல் ஆர்வம் காரணமாக வருகிறது. ஆனால் நான் அதை அரசியல் சொல் விளையாட்டாகவே கருதுகிறேன்," என்றார்.

“மோதி அரசு துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிவாயு, சுரங்கங்கள், இந்தியாவின் பசுமை எரிசக்தி என்று அனைத்தையும் கெளதம் அதானிக்கு வழங்கிவிட்டது,” என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,ANI

பொதுத்துறை வங்கிகளின் கடன் பற்றிய விளக்கம்

அதானி குழுமம் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள பணம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் அவருக்கு இருப்பதாகவும் பொதுப் பணத்தில் அவர் தனது தொழிலைப் பெருக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்தும் அதானியிடம் கேட்கப்பட்டது.

அவர் இதைப் பற்றியும் தனது வாதத்தை முன்வைத்து, இதுபோன்ற கூற்றுகள் 'தவறு' என்று கூறினார்.

கௌதம் அதானியும் அஷோக் கேலோட்டும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கௌதம் அதானியும் அஷோக் கேலோட்டும்

காங்கிரஸ் மற்றும் மோதியுடனான உறவு பற்றி என்ன சொன்னார்?

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 68 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதானி, முதலீட்டை ராகுல் காந்தி  பாராட்டியதாகக் கூறினார்.

"ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன். ஒன்று அரசியல் பேச்சு, மற்றொன்று உண்மையான குற்றச்சாட்டு. உண்மை என்ன என்பதை பொதுமக்கள் தீர்மானிக்கட்டும்," என்றார் அவர்.

அதானி குழுமத்தின் வெற்றிக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோதியின் கை இருப்பதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அதானி, ‘மோதியுடன் பிரச்னை உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன,” என்றார்.

”மோதியிடம் இருந்து தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் பெற முடியாது. மோதி குஜராத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்தார். அவருடன் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமூக ஊடகங்களில் எதிர்வினைகள்

இந்தப் பேட்டி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் அதானியை விமர்சித்து வரும் நிலையில், அதானியின் நகைச்சுவை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டர் பயனாளியான பாரத் பாண்டே, "அதானி எதையும் கண்டுபிடிக்கவில்லை. வங்கிப் பணத்தையும் அரசியல் பலத்தையும் பயன்படுத்தி நிறுவனங்களை வாங்கினார். மக்களின் பணத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தினார்" என்று ட்வீட் செய்துள்ளார்.

"ராகுல் காந்தி குறித்த அதானியின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. இந்த நேர்காணலில் வேறு மட்டத்திலான எனெர்ஜி காணப்பட்டது," என்று ஆஷிஷ் பாரீக் எழுதியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பத்திரிக்கையாளர் ரஜத் ஷர்மாவுக்கு பதிலளித்த ட்விட்டர் பயனாளர் ராஜு கே கோகோய், “ராகுல் காந்தியை ஏன் பொருத்தமற்றவர் என்று சொல்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

ட்விட்டர் பயனர் அஞ்சனா, 'மோதி உடன் இருக்கும்போது அவருக்கு ராகுல் காந்தி ஏன் தேவை? மோதி அவருக்காக 18 மணி நேரம் உழைக்கிறார். இத்தனை அநியாயம் செய்யாதீர்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

'கௌதம் அதானியை குறிவைத்து ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு கெளதம் அதானியின் பதில் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது' என்று மற்றொரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

'ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்த கௌதம் அதானி, அவரால்தான் தாம் இங்கு இருப்பதாகக் கூறினார். அத்தகைய நேர்மறையான அணுகுமுறையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று ட்விட்டர் பயனாளி சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c4n20v8qxpeo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓராண்டில் 46% அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு - ஆக்ஸ்ஃபேம் அறிக்கை என்ன சொல்கிறது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மர்லின் செபஸ்டியான்
  • பதவி,பிபிசி நியூஸ், கொச்சியில் இருந்து
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்
அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியாவின் முதல் பணக்காரர் கௌதம் அதானி

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவீதம் குவிந்து கிடப்பதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது.

2020ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த பில்லினியர்கள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 166 ஆக அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளையில், சமூகத்தில் அடித்தட்டில் வசிக்கும் ஏழைகளால் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியவில்லை என்று அது மேலும் கூறுகிறது. 

இந்த பட்டவர்த்தமான பாகுபாட்டைக் களைய கோடீஸ்வரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொண்டு நிறுவனம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. 

 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கிய உலக பொருளாதார சபையில், 'செல்வந்தர்களின் வாழ்க்கை' குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வளங்கள் பங்கீட்டில் பெருமளவு சமத்துவமின்மை நிலவுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட செல்வ வளம் வெறும் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சென்று சேர்ந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பணக்காரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 46 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 660 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 

2022ஆம் ஆண்டு உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்வந்தராக அதானி உருவெடுத்தார் என்று ப்ளூம்பெர்க் இதழ் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் உலகம் முழுவதும் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்த செல்வந்தர் வரிசையில் அவரே முதலிடம் பிடித்திருந்தார். 

அதேநேரத்தில், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது பணக்காரர்களைக் காட்டிலும் அதிக வரி விதிக்கப்பட்டதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அடித்தட்டில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் இருந்தே சுமார் 64 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுவதாகவும், முதல் 10 சதவீத பணக்காரர்களிடம் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே கிடைப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. 

"துரதிர்ஷ்டவசமாக இந்தியா பணக்காரர்களுக்கு மட்டுமேயான நாடாக மாறுவதற்கான பாதையில் விரைகிறது" என்று ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறினார். 

"பணக்காரர்களின் வாழ்க்கையை உறுதி செய்யும் கட்டமைப்பால், விளிம்பு நிலையில் தவிக்கும் பட்டியல் பிரிவினர், ஆதிவாசிகள், முஸ்லீம்கள், பெண்கள் மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்," என்கிறார் அவர். 

தற்போது கார்ப்பரேட் வரிகள் குறைப்பு, வரி விலக்குகள் மற்றும் பிற சலுகைகளால் பணக்காரர்கள் பயனடைகிறார்கள் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய, வரவிருக்கும் பட்ஜெட்டில் பணக்காரர்கள் மீதான செல்வ வரி போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துகளுக்கும் 2% வரி விதித்தால், நாடு முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடால் வாடும் மக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊட்டம் அளிக்க முடியும் என்று ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறியுள்ளது.

1% செல்வ வரி விதித்தால், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு தாராளமாக நிதி வழங்க முடியும். 

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களுக்கு 2.5% வரி அல்லது முதல் 10 கோடீஸ்வரர்களுக்கு 5% வரி விதித்தால் 15 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரத் தேவையான முழுத் தொகையையும் ஏறக்குறைய ஈடுசெய்யலாம் என்றும் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்துள்ளது.

"சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், ஜனநாயகத்தை உயிர்ப்பிப்பதற்கும்" பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பது அவசியம்" என்று ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குனர் கேப்ரியேலா புச்சர் கூறியுள்ளார். 

https://www.bbc.com/tamil/articles/crg04j80kn2o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி

By RAJEEBAN

26 JAN, 2023 | 04:42 PM
image

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார்.

பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கவுதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, அதிகரிப்பு மற்றும், அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இது குறித்து அதானி குழுமம் கூறும்போது, 

அதானி எண்டர்பிரைசஸ் எப்பிஓ(FPO) வை சேதப்படுத்தும் நோக்கில் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறியது. தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழும  ஜுகேஷிந்தர் சிங் மேலும் கூறினார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் மூலம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ. 80,000 கோடிக்கு மேல் இழந்து, 119 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/146769

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூ.88,000 கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நிகில் இனாம்தார் மற்றும் மோனிகா மில்லர்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹிண்டன்பர்க் அறிக்கை- அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம் பங்கு சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அதானி நிறுவனம்  பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதானி குழுமம், 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மதிப்பை இழந்தது.

 

தற்போது, நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம், பொருட்கள் வணிகம், விமான நிலையம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்பட பலவகை வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களை நடத்துகிறது. இந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

ஹிண்டன்பர்க் என்பது குறுகிய கால பங்கு விற்பனையில் தனித்திறன் பெற்றது, அல்லது, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காக பந்தயம் கட்டக்கூடியது.

அதானி "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமம் தன் பங்குகளை பொதுவெளியில் விற்பனை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது.

மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற கடல்கடந்த வரிப் புகலிடங்களில் அதானி குழுமத்துக்கு உரிமையாக உள்ள நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வியாழக்கிழமை, அதானி குழுமம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக தெரிவித்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை- அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எப்போதுமே எல்லா சட்டங்களுக்கும் இணக்கமாகவே நடந்துகொள்வதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த அறிக்கை மூலம் இந்திய பங்குச் சந்தையில் உருவாக்கப்பட்டுள்ள ஏற்ற இறக்கமான நிலை மிகவும் கவலையளிப்பதாகவும், இந்தியக் குடிமக்களுக்கு தேவையற்ற வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அதானி குழும சட்ட அணியின் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா கூறினார்.

“இந்த அறிக்கையும் அதன் ஆதாரமற்ற உள்ளடக்கங்களும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளபடி, அதானி பங்குகளின் மதிப்பு சரிவதன் மூலம் பலனடையும் நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது அறிக்கை குறித்து அதானி நிறுவனம் வெளியிட்ட கருத்துகளுக்கு ஹிண்டன்பர்க் வியாழக்கிழமை பதில் தந்துள்ளது.

“தாங்கள் எழுப்பிய முக்கியமான பிரச்னை ஒன்றுக்கு கூட அதானி நிறுவனம் பதில் அளிக்கவில்லை” என்று கூறியுள்ள ஹிண்டன்பர்க், தங்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தங்களுக்கு எதிரான எந்த புகாருக்கும் அடிப்படை ஏதும் இருக்காது என்பதால் சட்ட நடவடிக்கையை ‘வரவேற்பதாகவும்’ அதானி நிறுவனத்துக்கு தாங்கள் அளித்த பதிலில் கூறியுள்ளது ஹிண்டன்பர்க்.

அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்குவதாகத் திட்டமிட்டது.

அரசியல் எதிர்வினைகள்

பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் அதானி பலன் அடைந்து வருவதாக நீண்ட காலமாகவே கூறிவரும் எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த அறிக்கைக்கு உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர்.

"விரிவான ஆய்வு தற்போது பொது வெளிக்கு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்" என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா கட்சி நிர்வாகியுமான பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.

பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (முன்னர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சியைச் சேர்ந்த கே.டி.ராமா ராவ், அதானி குழுமத்தின் செயல்பாடு தொடர்பாக இந்தியப் புலன்விசாரணை நிறுவனங்களும், பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்காற்று அமைப்பு தாமாக எந்த நடவடிக்கையையும் தொடங்க வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, தங்களுக்கு எதாவது குறிப்பான புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில் அப்படி ஏதும் இல்லை," என்று இன்கவர்ன் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் சுப்பிரமணியம் கூறினார்.

“அறிக்கையில் உள்ள பல குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கேட்க செபி அமைப்பை பிபிசி தொடர்புகொண்டது. எனினும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

அதானி குழுமம் வெள்ளியன்று சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுப் பங்கு விற்பனையைத் தொடங்குவதற்குத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக சில முதலீட்டாளர்கள் பின்வாங்கக் கூடும் என்று நிதிச் சந்தை ஆய்வாளர் அம்பரீஷ் பாலிகா கூறினார்.

ஆனால், இந்த அறிக்கை அதானி குழுமத்தையும் தாண்டி பரந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

அதானியையும் தாண்டி, “நிதித்துறையின் உலக மயமாக்கல் – அரசியலின் தேசியமயமாக்கல் ஆகிய இரண்டின் அழுத்தங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ள இந்திய பங்குச் சந்தையின் நம்பகத் தன்மை தொடர்பாக பல கேள்விகள்” இருப்பதாக கூறியுள்ளார்

ப்ளூம்பெர்க் செய்திச் சேவையின் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி.

“பொதுமக்கள் வெகுண்டெழுந்த பிறகு சந்தையை சுத்தம் செய்யலாம் என்று செபி காத்திருக்கிறதா” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

https://www.bbc.com/tamil/articles/ckk6e92zpywo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபத்திய ஆண்டுகளில் சரசரவென மேலேறி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.

அதானிக்கு சவால் விடும் ஹிண்டன்பர்க்

அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம்சாட்டுகிறது.

 

 

ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறும் அதானி குழுமம், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

 

ஆனால், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமோ, "ஆய்வறிக்கையில் நாங்கள் முனவைத்த எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை. நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்துள்ளோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்," என்று சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்துள்ளது.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹிண்டன்பர்க் ரிசர்ச் கம்பெனி நிறுவனர் ஆண்டர்சன்.

பங்குச்சந்தையில் அதானி பங்குகள் வீழ்ச்சி

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டே நாட்களில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு தடாலடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த குழுமத்திற்குட்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகளும் சரமாரியாக சரிந்துள்ளன.

குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளும் 20 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளன. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 18.5 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தில் அடங்கிய 7 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு சுமார் 3.92 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் ஒட்டுமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது சுமார் ரூ. 4.2 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பை இழந்துள்ளது.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக பணக்காரர்கள் வரிசையில் பின்னடைவு

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவு அதன் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 7.87 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

இரண்டே நாட்களில் அவரது சொத்து மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையிலும் ஏழாவது இடத்திற்கு கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்குகள் வெளியீடு

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் திரட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டில் இறங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட ரத்தக்களரி இங்கும் எதிரொலித்தது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் எதிர்பார்த்தபடி அந்த நாள் அமையவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட, முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்யப்பட்டதாக மும்பை பங்குச்சந்தை இணையதள தரவுகள் கூறுகின்றன. அந்நிறுவனம் 4.55 கோடி பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், சுமார் 4.7 லட்சம் பங்குகளுக்கு மட்டுமே முன்பதிவுகள் கிடைத்துள்ளன.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மீண்டும் முதலீடு

ஆனாலும், இந்த பங்குச்சந்தை நிகழ்வுகள் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.300 கோடி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ரூ.125 கோடி முதலீடு செய்துள்ளன.

அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால், எல்.ஐ.சி. நிறுவனம் இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி. வசமுள்ள அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அந்த அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கும் அதானி குழுமத்தில் எல்,ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்திருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அந்த இரு நிறுவனங்களிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து - காங்கிரஸ்

"இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது," என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

"ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் குறித்த ஆய்வறிக்கை குறித்து ஒரு அரசியல் கட்சி வினைபுரிய தேவையில்லைதான். ஆனால், அதானி குழுமம் ஒன்றும் சாதாரண நிறுவனம் அல்ல. பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த போதே அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் கௌதம் அதானியுடையது. ஆகவே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி விசாரிக்க வேண்டும்," என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ.யில் மக்களின் சேமிப்புப் பணம் என்னவாகும்?"

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், அது எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகியவற்றில் தங்களது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிதைத்துவிடும்," என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

"நாட்டிற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து முழுமையாக விசாரணை அவசியம்," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.பி.ஐ. வங்கி என்ன சொல்கிறது?

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ்குமார் காரா விளக்கம் அளித்துள்ளார். "அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "அண்மைக் காலத்தில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. வங்கி முதலீடு ஏதும் செய்யவில்லை. இனி வருங்காலத்தில் அதானி குழுமத்தில் இருந்து முதலீட்டிற்கான வேண்டுகோள் ஏதும் வந்தால், விவேகத்துடன் அதனை அணுகுவோம்," என்று தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி.யோ, பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளை பொருட்படுத்தாமல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மீண்டும் 300 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதன் மூலம் மவுனமாக தனது பதிலை தெரியப்படுத்தியிருப்பதாகவே பொருள் கொள்ளலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பங்குச்சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் பேசிய போது, "எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் அளவில் மிகப்பெரியவை. அத்துடன் ஒப்பிடுகையில், அதானி குழுமத்தில் அவற்றின் முதலீடு என்பது சிறிய அளவுதான். மேலும், ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கு மேல் அதானி குழுமத்தில் அவற்றால் முதலீடு செய்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளால் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒருவேளை நஷ்டத்தை சந்தித்தாலும், அவை அந்நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்காது என்றே கருதுகிறேன். ஆகவே, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை குறித்து அச்சப்படத் தேவையில்லை," என்றார்.

வீழும் அதானியில் மேலும் முதலீடு
 
படக்குறிப்பு,

பங்குச்சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன்

அதானி குழுமத்தின் எதிர்காலம் என்னவாகும்?

"அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பை மிகை மதிப்பீடு செய்தது, செயற்கையாக மதிப்பை உயர்த்திக் காட்டியது என்பதே அதன் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு போல தெரிகிறது. நிறுவனம் குறித்த மிகை மதிப்பீடு என்பது புதிதல்ல. லஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தால் அது பெரிய பிரச்னையை உருவாக்கக் கூடும்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை சுட்டுவது எந்த அளவுக்கு உண்மையாக இருந்தாலும், தற்போதைய நிலையில் அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அதில் முதலீடு செய்ய பெரு முதலீட்டாளர்களிடையே தயக்கம் நிலவும். சிறு முதலீட்டாளர்களோ ஆபத்து என்று கருதி ஒதுங்குவதே சரி. அவர்கள் அப்படி செய்வார்களா என்று தெரியவில்லை," என்கிறார் வள்ளியப்பன்.

வீழும் அதானியில் மேலும் முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அவர் பேசும்போது, "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மையா? இல்லையா? என்பதைக் காட்டிலும் அதன் பேரில் செபியோ, இந்திய ரிசர்வ் வங்கியோ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே மிகவும் முக்கியம். ஆய்வறிக்கையால் எழுந்துள்ள சந்தேக மேகங்கள் எப்போது விலகும் அல்லது உறுதி செய்யப்படும்? செபி அல்லது ரிசர்வ் வங்கி நடவடிக்கை என்ன? என்பதைப் பொருத்தே அதானி குழுமத்தின், அதன் பங்குகளின் எதிர்காலம் அமையும்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cw0r0nkgg54o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.