Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தில்நவாஸ் பாஷா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
கஞ்சாவ்லா வழக்கு

கஞ்சாவ்லா வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தனர்.

"பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மற்றொரு பெண் இருந்தார். விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் அவர் எழுந்து சென்று விட்டார்,” என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர்ப்ரீத் ஹூடா கூறினார்.

"சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி எங்களிடம் இருக்கிறார். இப்போது காவல்துறையுடன் அவர் ஒத்துழைத்து வருகிறார். அவரது வாக்குமூலம் CRPC இன் பிரிவு 164 இன் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இது ஒரு முக்கியமான விஷயம்," என்று அவர் குறிப்பிட்டார்.

”குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் இது முக்கியமானதாக இருக்கும். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. டெல்லி காவல்துறை விரைவில் விசாரணையை முடிக்கும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்றும் ஹூடா கூறினார்.

 

டெல்லியில் உள்ள மெளலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து போலீசார் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் ப்ரீத் ஹூடா

அன்று இரவு நடந்தது என்ன?

இரவு 8.29 மணிக்கு 29 வினாடிகள் நீடித்த தொலைபேசி அழைப்பில், 'எப்போது வீட்டிற்கு வருவாய்' என்று தாய் மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு மகள், 'தாமதமாகும்' என பதிலளித்துள்ளார்.

அதன் பிறகு தாய் மகளிடையே எந்தப் பேச்சும் நடக்கவில்லை. மறுநாள் காலை ஒரு பெண் போலீஸ் போன் செய்து, 'உங்கள் ஸ்கூட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வாருங்கள்' என்றார்.

கஞ்சாவ்லா சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுகொண்டிருந்தபோது வழியில் போலீஸ் வாகனம் அவரை அழைத்துச்செல்ல வந்தது. முதலில் சம்பவ இடம் மற்றும் அதற்குப்பின்னர் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

"என் மகளுக்கு என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லவில்லை. நான் போலீசிடம் தொடர்ந்து கெஞ்சினேன். ஆனால் என் மகளை என்னிடம் காட்டவில்லை,"என்று பெண்ணின் தாயார் கூறினார்.

அவரது 20 வயது மகள் டிசம்பர் 31 இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் காலமானார். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், அன்று இரவு அவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார், காரால் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட வழக்காகவே கருதுகின்றனர்.

சுல்தான்புரியின் கிருஷ்ண விஹார் பகுதியில் அந்தப்பெண் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி காருடன் மோதியது. அவரது உடல் காருக்கடியில் சிக்கி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது உடலின் ஒரு பகுதி சிதைந்தது.

புத்தாண்டின் முதல் நாள் காலை அதாவது ஜனவரி 1ஆம் தேதி டெல்லியின் ஜோந்தி கிராமப் பகுதியில் அந்தப்பெண்ணின் உடல் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டது. அவரது உடை தேய்ந்து கிழிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

பெண் மரணம்

'குடும்ப பாரத்தை தனியாளாக சுமந்த மகள்'

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் விரக்தியுடன் அமர்ந்திருந்த இறந்த பெண்ணின் தாய், இந்த சம்பவத்திற்குப் பிறகு எதையும் சாப்பிடவில்லை.

"எங்களிடம் பத்து ரூபாய் கூட இல்லை. மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்யக் கூட எங்களிடம் பணம் இல்லை. என் மகளைத்தான் குடும்பமே நம்பியிருந்தது" என்று அவர் கூறுகிறார்.

இவரது கணவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து விட்டார். கணவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கருதுகிறார். ஆனால் அது ஒரு தற்கொலை வழக்கு என்று போலீசார் கூறுகின்றனர்.

கணவர் இறந்த பிறகு அவர் தனது 6 குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

இதைத் தொடர்ந்து குடும்பத்தை நடத்தும் பொறுப்பை அவரது மகள் ஏற்றுக்கொண்டார். வறுமை காரணமாக இறந்தவரின் தாய் தனது இரண்டு மகள்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளார்.

"என் மகள் சிரித்த முகத்துடன் இருப்பாள். சமூக வலைதளங்களில் ரீல் தயாரிப்பது அவளுக்கு பிடிக்கும். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்," என்று அவர் கூறினார்.

அந்தப்பெண் திருமணம் போன்ற நிகழ்வுகளில் விருந்தினர்களை வரவேற்கும் பெண்ணாக வேலை செய்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

”அவர் நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்ததால் எங்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது’’ என்கிறார் பெண்ணின் தாய்.

இருப்பினும் அவர் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது தாய்க்கும், குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. ஜனவரி 31 அன்று இரவு அவர் எங்கு சென்றார் என்று கூட குடும்பத்தினருக்குத் தெரியவில்லை.

கடைசியாக தனது மகளுடன் பேசியதை நினைவு கூர்ந்த அவர், “தாமதமாக வருவேன் என்றுதான் சொன்னார். ஆனால் நிகழ்ச்சி எங்கே என்று சொல்லவில்லை,”என்றார்.

காவல்துறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

திங்கள்கிழமை டெல்லியில் உள்ள சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே ஏராளமான உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்க வந்த ஓம்வதி என்ற பெண்,"குற்றவாளிகளை போலீசார் பாதுகாப்பதாக கருதுகிறோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

போராட்டக்காரர்கள் டெல்லி காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல் நிலையத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சுவரொட்டியையும் அவர்கள் கிழித்தெறிந்தனர்.

ஐந்து பேர் கைது

ஐந்து பேர் கைது

பட மூலாதாரம்,DELHI POLICE

இந்த வழக்கில் 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மங்கோல்புரியில் வசிப்பவர்கள்.

தீபக் கன்னா என்ற இளைஞர் காரை ஓட்டி வந்ததாகவும், அதில் அமித் கன்னா, மனோஜ் மித்தல், மிதுன், கிருஷ்ணா ஆகியோர் அமர்ந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கார் அடையாளம் காணப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தீபக் கன்னா தொழில் ரீதியாக வாகன ஓட்டுநர். அமித் கன்னா வங்கிக்யில் பணிபுரிகிறார். கிருஷ்ணா, ஸ்பெயின் கலாச்சார மையத்தில் பணிபுரிகிறார்.

மிதுன் சிகையலங்கார நிபுணர் மற்றும் மனோஜ் மித்தல் சுல்தான்புரி கேபி பிளாக்கில் ரேஷன் கடை நடத்தி வருகிறார்.

மனோஜ் மித்தல் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுல்தான்புரி மற்றும் மங்கோல்புரியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியேயும் மனோஜ் மித்தலின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆவேசமான கும்பலால் அவை கிழித்தெறியப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மங்கோல்புரியைச் சேர்ந்தவர்கள். இறந்தவரும் இந்தப் பகுதியில்தான் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கும் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கும் இடையே ஒன்றரை முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது.

காவல்துறை மீது எழுப்பப்பட்ட கேள்விகள்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலர் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சுல்தான்புரி பகுதியில் வசிக்கும் டெலிவரி பாய் விகாஸ் மெஹ்ரா, ஜனவரி 31 அன்று இரவு காருக்கு அடியில் பெண்ணின் சடலத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார்.

"இரவு சுமார் 2.15 மணி இருக்கும். நான் கஞ்சாவ்லா சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தேன். முன்னால் போலீஸ் போஸ்டைப் பார்த்ததும் திடீரென்று ஒரு கார் வேகமாகத் திரும்பியது.

அதன்மீது இடிக்காமல் நான் தப்பித்தேன். அந்த காருக்கு அடியில் ஒரு பெண்ணின் தலையை பார்த்தேன்" என்று விகாஸ் மெஹ்ரா கூறுகிறார்.

"இதுபற்றி நான் காவல்நிலையத்தில் தெரிவித்தேன். ஆனால் அங்கிருந்த காவலர்கள் உனக்கு காயம் ஏற்படவில்லை அல்லவா, நாங்கள் காரை பார்த்துக்கொள்கிறோம், நீ வீட்டிற்குச் செல் என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று தனது மகனை போலீசார் எச்சரித்ததாக விகாஸின் தந்தை கூறுகிறார்.

நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான தீபக்கும் பெண்ணை காருக்கு அடியில் பார்த்ததாக கூறியுள்ளார்.

நேரில் பார்த்த சாட்சி தீபக்

போலீஸ் யாரும் வரவில்லை

டெல்லியின் லாட்பூர் கிராமத்தில் வசித்து வரும் தீபக், பால் வியாபாரம் செய்கிறார்.

“இரவு 3.18 மணிக்கு கடையை திறந்தேன். அதே நேரத்தில் பலேனோ கார் மெதுவான வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

காரிலிருந்து டயர் வெடித்த பிறகு வருவது போல ஒரு சத்தம் கேட்டது. கஞ்சாவ்லாவில் இருந்து வந்த வாகனம் மெதுவாக குதுப்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. உடல் அதன் முன் டயருக்கு அடியில் சிக்கியிருப்பதை நான் கண்டேன்,”என்று தீபக் தெரிவித்தார்.

உடனே 112க்கு போன் செய்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தீபக் கூறுகிறார்.

"இரவு 3:30 மணியளவில், மீண்டும் அதே வாகனம் திரும்பி வந்தது. நான் மீண்டும் போலீசாருக்கு போன் செய்து, இப்போது இந்த வாகனம் மீண்டும் கஞ்சாவ்லா நோக்கி செல்கிறது என்றேன். வாகனம் இருக்கும் இடத்தைக் கூற நான் அதை ஸ்கூட்டி வாகனத்தில் பின்தொடர்ந்தேன். கார் வேகமாக செல்லவில்லை. அதே சமயம் அது நிற்கவும் இல்லை.”

காரைப் பற்றி போலீஸாரிடம் தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும், ஆனால் எந்தவொரு காவலரும் வரவில்லை என்றும் தீபக் கூறுகிறார். "தடுப்புகளை வைத்து போலீசார் வாகனத்தை நிறுத்துவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது’’ என்கிறார் தீபக்.

வாகனம் லாட்பூர் மற்றும் ஜோந்தி கிராமத்திற்கு இடையே இரண்டு முறை சுற்றி வந்தது. இரண்டாவது முறையாக கஞ்சாவ்லாவை நோக்கி வாகனம் திரும்பி வந்தபோது, அதன் அடியில் உடல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் எங்கள் பிக்-அப் காரில் வாகனத்தைப் பின்தொடர்ந்தோம். கஞ்சாவ்லா பக்கத்தில் நின்றிருந்த PCR-க்கு தகவல் கொடுத்தோம். ஆனால் PCR, வாகனத்தை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை."என்று தீபக் தெரிவித்தார்.

விபத்து நடந்தது எங்கே?

விபத்து

இந்த சம்பவம் கிருஷ்ண விஹாரில் உள்ள ஷனிபஜார் சாலையில் அதிகாலை 2 மணியளவில் நடந்தது என்று எப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது. இந்த பகுதி சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கிருந்து ஸ்கூட்டியை மீட்டதாக எப்ஐஆரில் போலீசார் கூறியுள்ளனர்.

"4.30-4.45 மணிக்கு என் அம்மா சத்தம் கேட்டு ஜன்னலைத் திறந்தார். நானும் கண் விழித்தேன். போலீசார் ஸ்கூட்டியை இங்கிருந்து எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியின் ஹேண்டில் உடைந்திருந்தது" என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்கூட்டி தனது வீட்டின் பின்புறம் உள்ள பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தெரு ஷனிபஜார் மார்க்கிலிருந்து செல்கிறது.

கிருஷ்ண விஹாரின் ஷனிபஜார் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவியின் காட்சிகளை பிபிசி பார்த்தது. அதில் விபத்தில் தொடர்புடைய பலேனோ கார் அதிகாலை 1.53 மணியளவில் செல்வதை பார்க்கமுடிந்தது.

இந்த சிசிடிவி காட்சியில் ஸ்கூட்டியும் தெரிகிறது. இருப்பினும் இறந்தவர் பயணித்த ஸ்கூட்டிதான் அது என்பதை இந்த மங்கலான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த இயலாது.

இந்த விபத்து குறித்து இங்கு யாருக்கும் எந்த தகவலும் இல்லை என்கிறார் இந்த சாலையில் வசிக்கும் அங்கூர் சர்மா.

"அதிகாலை 4:30-5 மணிக்கு ஸ்கூட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இரவு 1:54 மணிக்கு எங்கள் தெருவில் சந்தேகத்திற்குரிய வாகனமும் காணப்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு நீதி கிடைக்கவேண்டும்,” என்றார் அவர்.

ஜோந்தி கிராமம் கிருஷ்ண விஹாரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஜோந்தியை அடைய 35 நிமிடங்கள் ஆகும். நான் கிருஷ்ண விஹாரிலிருந்து ஜோந்தி கிராமத்திற்கு காரில் பயணித்தேன். போவதற்கும், வருவதற்கும் சரியாக முப்பந்தைந்து நிமிடங்கள் ஆனது.

இவ்வாறான நிலையில் அதிகாலை 1.54 மணியளவில் கிருஷ்ண விஹாரில் காணப்படுகின்ற வாகனத்தின் ஓட்டுநர் விபத்தால் பயந்து ஓடினார் என்றால் ஜோந்தி கிராமத்தை அடைய ஒன்றரை மணி நேரம் ஏன் ஆனது என்ற கேள்வி எழுகிறது.

கிருஷ்ண விஹாரில் நடந்த விபத்துக்குப் பிறகு, பயத்தின் காரணமாக கஞ்சாவ்லாவை நோக்கி தாங்கள் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

'பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள்'

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குப்பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்களும், ஆர்ப்பாட்டம் செய்வோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

"ஒவ்வொரு அம்சமும் விசாரிக்கப்படும் என்றும், பிரேத பரிசோதனையில் வேறு ஏதாவது தெரியவந்தால் அந்தப்பிரிவுகளும் சேர்க்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்."என்று பென்ணின் தாயார் குறிப்பிட்டார்.

பாலியல் வன்புணர்வு நடந்தது விசாரணையில் தெரியவந்தால், பாலியல் வல்லுறவு, கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திட்டமிடாத கொலை மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளை போலீசார் இதுவரை சேர்த்துள்ளனர்.

எஃப்எஸ்எல் குழு சம்பவ இடத்தையும் விபத்துக்குள்ளான வாகனங்களையும் ஆய்வு செய்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்துள்ளது.

டெல்லி போலீஸ் என்ன சொல்கிறது?

கஞ்சாவ்லா வழக்கில் டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை ஒரு புதிய தகவலை அளித்துள்ளது. சம்பவத்தின் போது இறந்தவர் ஸ்கூட்டியில் தனியாக இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் சென்ற பாதையை பற்றி விசாரித்தபோது, அவர் தனது ஸ்கூட்டியில் தனியாக இல்லை என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தாக செய்தி முகமை ANI கூறுகிறது.

விபத்தின் போது அவருடன் மற்றொரு இளம் பெண் இருந்துள்ளார். விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். ஆனால் இறந்தவரின் கால் காரில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் காரில் தொடர்ந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

'சில கிலோமீட்டர்கள் வரை அந்தப்பெண்ணின் உடலை வாகனம் இழுத்துச் சென்றதால் தலையின் பின்புறம் மற்றும் உடலின் பின்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன' என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

“அந்தப் பெண் சுமார் 10-12 கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்” என்று டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி சாகர்தீப் ஹூடா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

”இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும். தடயவியல் மற்றும் சட்டக் குழுக்களின் உதவியும் பெறப்பட்டு வருகிறது. டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் விஷயத்தை விசாரித்து வருகின்றன."

"விசாரணை அதிகாரி அறிக்கையின்படி முதல் பார்வையில் இது ஒரு சாலை விபத்து வழக்கு போலத்தெரிகிறது. விசாரணை நடந்து வருகிறது. பிற பிரிவுகளை சேர்க்க அவசியம் ஏற்பட்டால் அவையும் சேர்க்கப்படும்," என்று டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா பிபிசியிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv24nj2rreyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை உலுக்கும் காரில் இளம்பெண் இழுத்துச்செல்லப்பட்ட விவகாரம் - தாயார் தெரிவிப்பது என்ன?

By RAJEEBAN

05 JAN, 2023 | 04:34 PM
image

புதுடெல்லி,

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் இளம்பெண் அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது என அவரது தாயார் மற்றும் மாமா கூறியுள்ளனர்.

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.

அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு செல்ல இவ்வளவு நேரம் எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் விடை கிடைக்காமல் உள்ளது.

இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அதனால், அவர்களை ஓட்டலில் இருந்து வெளியேற்றினேன் என அதன் மேலாளர் போலீசிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அஞ்சலியின் இறுதி சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அவரது தோழி என்று கூறி கொண்டு முகமூடி அணிந்தபடி நிதி என்பவர் செய்தியாளர்களிடம் சாட்சி கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் (உயிரிழந்த அஞ்சலி) குடிபோதையில் இருந்த நிலையில், வாகனம் ஓட்ட வேண்டும் என என்னிடம் வற்புறுத்தினார்.

எங்களை கார் மோதியதும், ஒரு புறம் நான் விழுந்து கிடந்தேன். காரின் அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் பயந்துவிட்டேன். போலீசாரிடம் எதுவும் கூறாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். யாரிடமும் எதுவும் கூறவில்லை என கூறியுள்ளார்.

இந்த வழக்கில், அஞ்சலியின் தாய்வழி மாமா செய்தியாளர்களிடம் கூறும்போது, நிதி இதற்கு முன்பு மறைந்து இருந்துள்ளார். அஞ்சலி இறுதி சடங்குகள் நிறைவடைந்ததும் வெளியே வந்து விட்டார். சம்பவம் நடந்தவுடன், அதனை போலீசிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ தெரிவிக்க வேண்டும் என்ற மனித தன்மை அவருக்கு இல்லையா? அப்போது அவர் பயந்து விட்டார் என கூறுகிறார். இப்போது அவருக்கு பயமில்லையா? இது நிதியின் சதி திட்டம் என கூறியுள்ளார்.

அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. அவரது தோழி இந்த விவகாரத்தில் பொய் கூறுகிறார். நிதி கூறியது போன்று அந்த இரவில் (சம்பவம் நடந்தபோது) அஞ்சலி குடித்திருந்தால், அது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

இதில் இருந்தே நிதி பொய் கூறுகிறார் என தெரிகிறது என்று கூறியுள்ளார். அஞ்சலியை மோதி, தள்ளி, காரில் இழுத்து சென்ற குற்றவாளிகள் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

5 பேர் மீது 302-வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நிதியின் மீது 304-வது சட்ட பிரிவு பதிவு செய்யப்பட வேண்டும். அரசிடம் இதனை கோரிக்கையாக வைப்போம் என கூறினார்.

ஆனால், அஞ்சலியின் தாயார் கூறும்போது, நிதி யாரென்றே எனக்கு தெரியாது. நான் ஒருபோதும் அவரை பார்த்ததேயில்லை. அவர் அஞ்சலியின் தோழியா? உண்மையில் தோழி என்றால் அவர் எப்படி சம்பவம் நடந்தபோது, அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்க முடியும்? இது நன்றாக திட்டமிடப்பட்ட சதி.

இதில் நிதிக்கும் தொடர்பு இருக்க கூடும். அவரது வாக்குமூலம் பற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. குடிபோதையில் ஒரு நாளும் அவர் வீட்டுக்கு வந்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் மரணம் அடைந்தபோது அவரது வயிற்றில் பாதியளவு செரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இருந்தன என தெரிவிக்கின்றது.

எனினும், அவர் குடித்திருந்தாரா என்பது பற்றி அறிவதற்காக ரசாயன பகுப்பாய்வு செய்ய அவரது உள்ளுறுப்பு மாதிரிகள் எடுத்து பாதுகாக்கப்பட்டு உள்ளன.

https://www.virakesari.lk/article/145069

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்: விடுபட்ட சிசிடிவி காட்சிகள், விலகாத புதிர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தில்நவாஸ் பாஷா
  • பதவி,பி பி சி நிருபர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
அஞ்சலி வழக்கு: நிமிடத்திற்கு நிமிடம் விசாரணை, விடுபடாத புதிர்

டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது இளம்பெண் அஞ்சலி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவத்தை அடுத்து நடந்த விசாரணை குறித்த தகவல்களை தில்லி காவல்துறை செய்தியாளர் சந்திப்பை நடத்தித் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் சாகர்பிரீத் ஹூடா அளித்த தகவல்களை பார்க்கலாம்.

தில்லி காவல் துறை கூறியவை

  • சாட்சி நிதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, அது குறித்து இப்போது தகவல் தெரிவிக்க முடியாது.
  • சிசிடிவி அடிப்படையில் மேலும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஐந்து பேர் அல்ல ஏழு பேர்.
  • குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இருவரும் உண்மையை மறைக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளைக் காப்பாற்ற உதவியுள்ளனர்.
  • சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
  • அழைப்பு விவரங்களின் அடிப்படையில், இறந்த அஞ்சலிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே பழைய தொடர்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
  • மற்ற அம்சங்களை ஆய்வு செய்த பின்னர், காவல்துறை விரைவில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்.
  • கடைசி காட்சியை ட்ரேஸ் செய்யும் போது, இந்த வழக்கில் நிதி ஒரு முக்கியமான சாட்சி என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். அவரது வாக்குமூலம் 164 சிஆர்பிசியின் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சம்பவத்திற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படவில்லை, இதற்கான காரணம் என்ன என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
  • இப்போது வரை இந்த வழக்கு ஒரு கொலை வழக்காகப் பதிவு செய்யப்படவில்லை.  வலுவான ஆதாரம் இல்லாமல் பிரிவு 302 (கொலை) விதிக்க முடியாது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரிவு 304 (குற்றமில்லா கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது மனிதப் பிழையா அல்லது செயல்பாட்டில் பிழையா என்பது குறித்தும் காவல்துறையின் பங்கு குறித்தும் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அந்த இடத்தில் கிடைத்த ஸ்கூட்டியின் அடிப்படையில், அதன் உரிமையாளரின் வீட்டை போலீஸார் அடைந்தனர். அதன் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு துப்பும் வெளிவரவில்லை.
  • அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புள்ளிகளை இணைக்கும் முயற்சி

டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் 20 வயது இளம்பெண் அஞ்சலி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவத்தை அடுத்து,  டெல்லி காவல்துறையின் எதிர்வினை மற்றும் ஆரம்ப விசாரணை குறித்து தீவிரமாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

 

 

சுல்தான்புரியின் கிருஷ்ணா விஹார் பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கினார் என்பது காவல் துறைத் தரப்பின் வாதம். காரில் அவரது உடல் சிக்கிய நிலையில், இங்கிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள கஞ்சவாலா காவல் நிலையத்தின் ஜௌண்டா கிராமத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் வெளியாகி,  சில மணிநேரங்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது ஒரு விபத்து என்றும், காரில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டது குறித்தும் தெரிவித்தது. அவர்கள் அனைவர் மீதும் குற்றமற்ற கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஐந்து பேர் அல்ல ஏழு பேர் குற்றவாளிகள் என்று போலீஸ் சொல்கிறது.

 

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளோ அல்லது சாட்சிகளோ இல்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்கிழமையன்று, நிதி என்ற இளம் பெண், தான் விபத்து நடந்தபோது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்ததாகவும், பயம் காரணமாக அமைதியாக இருந்ததாகவும் கூறி முன் வந்தார்.

கொல்லப்பட்ட பெண்  தனது தோழி என்றும், ஸ்கூட்டி கார் மீது மோதியதில் காரின் அடியில் சிக்கிக் கொண்டதாகவும் நிதி கூறினார்.

காவல்துறையின் கோட்பாடு மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்து இங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.
 
படக்குறிப்பு,

காவல்துறையின் கோட்பாடு மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்து இங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?

இந்தச் சம்பவம் சுல்தான்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா விஹார் பகுதியில் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசி சம்பவ இடத்தைப் பார்வையிட்டது.  போலீசார் ஸ்கூட்டியை எடுப்பதை நேரில் பார்த்த பல சாட்சிகள் உள்ளனர்.

ஸ்கூட்டி போன்ற  சில துண்டுகள் ஓரிடத்தில் கிடப்பதையும் மக்கள் பார்த்தனர். விபத்து நடந்த இடம் சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ளது.

கிருஷ்ணா விஹாரின் இந்த தெரு 190 மீட்டர் நீளம் கொண்டது, அதில் நான்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிபிசி இந்த கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, நிகழ்வுகளின் வரிசையை ஒன்றாக இணைக்க முயற்சித்தது.

இந்த நான்கு சிசிடிவிகளின் பதிவு நேரங்கள் வெவ்வேறானவை. ஆனால், ஒவ்வொரு படமாகப் பொருத்திப் பார்த்தால் என்ன தெளிவு கிடைக்கிறது?

இந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. இதில் பலேனோ, ஸ்கூட்டி இரண்டும் வந்து போவது போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளது.
 
படக்குறிப்பு,

இந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. இதில் பலேனோ, ஸ்கூட்டி இரண்டும் வந்து போவது போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளது.

அனைத்து சிசிடிவிகளிலும் நேர முத்திரை வித்தியாசமாக இருப்பதாலும், நேரம் முன்னும் பின்னுமாக இருப்பதாலும், காட்சிகளின் நேர முத்திரையின் அடிப்படையில், எந்த நேரத்தில், எங்கு விபத்து நடந்தது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

 

ஆனால் ஒரு சிசிடிவியின் நேர முத்திரையும், காவல்துறை கொடுத்த நேரமும் பொருத்தமாக இருக்கிறது.  இதன்படி இரவு 2.05 மணியளவில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடியும்.

விபத்திற்குச் சற்று முன்பும் பின்பும் ஸ்கூட்டி மற்றும் பலேனோ காரில் இரண்டு பெண்கள்  அங்கிருந்து கிளம்பும் சிசிடிவி காட்சிகள் உள்ளன. ஆனால், கார்-ஸ்கூட்டி மோதி விபத்து அல்லது விபத்து போன்ற காட்சிகள் எதுவும் இல்லை.

 

அந்த இடத்தில் இதுபோன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் எதுவும் தெரியவில்லை, இந்த அறிக்கை எழுதும் வரை இதுபோன்ற காட்சிகள் எதுவும் வெளியில் வரவில்லை.  விபத்து எப்படி நடந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாததற்கு இதுவே காரணம்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதில் ஸ்கூட்டி, பலேனோ கார் மற்றும் போலீஸ் பிசிஆர் வெளியே வருவது தெரிகிறது.
 
படக்குறிப்பு,

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதில் ஸ்கூட்டி, பலேனோ கார் மற்றும் போலீஸ் பிசிஆர் வெளியே வருவது தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு அருகில், பலேனோ காரின் கீழே பெண் இருப்பது தெரியாதது ஏன்?

விபத்து நடந்த இடத்திலிருந்து 20 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தொலைவில் உள்ள சிசிடிவி காட்சிகளை பிபிசி பார்த்துள்ளது. இதில், ஸ்கூட்டியில் இரண்டு பெண்கள் ஒருபுறமும், பலேனோ கார் மறுபுறமும் வருவது தெரிந்தது.

இந்த வீடியோக்கள் அடங்கிய சிசிடிவி விபத்து நடந்த இடத்தை விட சில படிகள் முன்னால் உள்ளது. அதாவது, விபத்து நடந்த சில நொடிகளில் இந்த சிசிடிவி பதிவாகியுள்ளது. ஆனால் இவற்றில் காருக்கு அடியிலோ, பக்கத்திலோ பெண் தென்படவில்லை.

சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லை. ஆனால் அந்த வீடியோவை ஃபிரேம் பை ஃபிரேம் பார்த்த பிறகும் காருக்கு அடியில் எந்தப் பெண்ணும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அப்போது அந்த பெண் காருக்கு அடியில்  இருந்திருந்தால், அவளது எந்த பகுதியும் காட்சிகளில் கூட தெரியாத வகையில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் முன்பு, பலேனோ கார் சென்று 30 வினாடிகளுக்குப் பிறகு பிசிஆர் கடந்து செல்கிறது. இந்த சிசிடிவியின் நேர பதிவைச் சரிபார்க்க முடியவில்லை
 
படக்குறிப்பு,

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் முன்பு, பலேனோ கார் சென்று 30 வினாடிகளுக்குப் பிறகு காவல் வாகனம் கடந்து செல்கிறது. இந்த சிசிடிவியின் நேர பதிவைச் சரிபார்க்க முடியவில்லை

சம்பவ இடத்தில் இருந்த பி சி ஆர் வேன், பலேனோ காரைப் பின் தொடர்ந்து செல்லாதது ஏன்?

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பிபிசி பார்த்ததில், இந்தச் சம்பவம் நடந்த அதே  நேரத்தில் ஒரு போலீஸ் பிசிஆர் வேனும் அந்த இடத்தில் காணப்பட்டது.

இந்த பி.சி.ஆர் வேனின் காட்சிகள் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது, விபத்து நடந்த போது அந்த வேன் அருகில் இருந்திருந்தால் இந்த வேனில் இருந்த போலீசார் ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள நான்கு சிசிடிவிகளில் முதல் சிசிடிவி காட்சிகளின்படி, பலேனோ கார் இந்தப் பாதையில் நுழைந்து சரியாக 30 வினாடிகளுக்குப் பிறகு, பிசிஆர் காரும் அதே பாதையில் நுழைகிறது.

சிசிடிவியின் நேர முத்திரையின்படி, பலேனோ இரவு 2.00.37 மணிக்கு வலது பக்கத்திலிருந்து பாதைக்குள் நுழைகிறது, பிசிஆர் வேன் பிற்பகல் 2.01.07 மணிக்கு இடது பக்கத்திலிருந்து நுழைகிறது. அதாவது, பிசிஆர் சந்தேகத்திற்குரிய பலேனோவுக்குப் பிறகு முப்பது வினாடிகளுக்குப் பிறகு அதே பாதையில் நுழைகிறது.

விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் முன்னால் உள்ள இடத்தின் மற்றொரு சிசிடிவி காட்சியும் பிசிஆர் வேனைக் காட்டுகிறது, இருப்பினும் எவ்வளவு நேரம் கழித்து பிசிஆர் கடந்து சென்றது என்பது நேர முத்திரையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

 

இதுவரை கிடைத்த காட்சிகளில், காவல்துறையின் இந்த PCR சந்தேகத்திற்குரிய பலேனோவை துரத்துவதைப் பார்க்கமுடியவில்லை.

 

வியாழக்கிழமை தில்லி காவல்துறையின் செய்தியாளர் கூட்டத்தில், 'இந்தச் செயல்பாட்டில் மனிதப் பிழையா அல்லது அமைப்பின் தவறா என்பது குறித்து காவல்துறையின் பங்கு குறித்து உள் விசாரணை நடைபெற்று வருகிறது. முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறப்பட்டது.

 

எவ்வாறாயினும், பி.சி.ஆர். விஷயத்தில் தங்கள் தரப்பில் எந்தக் குறைபாட்டையும் போலீசார் இதுவரை ஏற்கவில்லை.

பிசிஓஆர் ஸ்கூட்டியை அந்த இடத்தில் பார்த்ததாக போலீசார் கூறுகின்றனர். அதன் எண்ணின் அடிப்படையில் போலீசார் அவரது உரிமையாளரின் வீட்டிற்கு வந்தனர். இதனடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்துக் காவல் துறையினர் அவரது தாயாரை அழைத்துச் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சாலையில் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பட மூலாதாரம்,GOOGLE MAPS

 
படக்குறிப்பு,

இந்த சாலையில் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

அஞ்சலியின் தோழியின் கூற்றின் மீது கேள்வி

செவ்வாய்கிழமை நடந்த சம்பவத்தை  நேரில் கண்ட சாட்சி தான் மட்டுமே என்று கூறிக்கொள்ளும் அஞ்சலியின் தோழி நிதியின் கூற்று தற்போது புதிராக மாறியுள்ளது.

நிதி சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், சம்பவ இடத்திலிருந்து 1100 மீட்டர் தொலைவிலும் வசிக்கிறார்.

விபத்துக்குப் பிறகு மிகவும் பயந்துவிட்டதாகவும், யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக வீட்டுக்குத் திரும்பியதாகவும் நிதி கூறியுள்ளார்.

அச்சம் காரணமாக சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் வரை இதை யாரிடமும் கூறவில்லை என்று கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளில், ஓயோ ஹோட்டலுக்கு வெளியே அஞ்சலியுடன் மற்றொரு பெண் காணப்பட்டார். அவர் நிதி என்று நம்பப்படுகிறது.

சுல்தான்புரியின் சி-1 பிளாக்கில் நிதி தனியாக வசிக்கிறார். புதன்கிழமை, அவர் தனது வீட்டில்  இருந்தார்.  ஊடகங்களுடன் பேசவில்லை.

அக்கம்பக்கத்தினருடன் பேசியதில், அவர் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வந்தது தெரிய வந்தது.

அவரது தந்தை நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அக்கம்பக்கத்தினருக்கு அவரது தொழில் பற்றி அதிகம் தெரியாது.

மறுபுறம், அஞ்சலியின் குடும்பத்தினர், நிதி பற்றித் தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும், அவர் தங்கள் வீட்டிற்கு வந்ததில்லை  என்றும் கூறுகிறார்கள்.

 

பிபிசி உடனான உரையாடலில் நிதி பொய் சொன்னதாக அஞ்சலியின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தில்லி காவல்துறை வியாழக்கிழமை,  'நேரில் கண்ட சாட்சியான  நிதிக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து இப்போது தகவல் தெரிவிக்க முடியாது.”என்று கூறியது.

நிதியின் தாய் வீடு. அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன், நிதி இந்த வீட்டை விட்டுச் சென்று விட்டார்.
 
படக்குறிப்பு,

நிதியின் தாய் வீடு. அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன், நிதி இந்த வீட்டை விட்டுச் சென்று விட்டார்.

கால வரிசைப்படி இது வரை கிடைத்த தெளிவு

பிபிசி டிசம்பர் 31 இரவு மற்றும் ஜனவரி 1 காலை நிகழ்வுகளை இணைக்க முயற்சித்தது. இதுவரை தெளிவாகத் தெரிந்தது-

அஞ்சலி மாலையே வீட்டை விட்டு வெளியேறிவிட்டு, இரவு வெகுநேரம் கழித்துத் திரும்பி வருவேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டாள். கடைசியாக இரவு 8.29 மணிக்கு அம்மாவிடம் பேசினார்.

அஞ்சலி வேறொரு பெண்ணுடன் ஓயோ ஹோட்டலுக்குச் சென்றதை ஹோட்டல் காட்சிகள் காட்டுகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் கூற்றின் படி, இருவருக்கும் இடையே சிறிது நேரம் மோதல்  ஏற்பட்டதாக தெரிகிறது. காட்சிகளில், பெண்கள் அதிகாலை 1.32 மணிக்கு ஓயோ ஹோட்டலில் இருந்து வெளியேறுவதைக் காணலாம்.

இரவு இரண்டு மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அஞ்சலியும் மற்றொரு பெண்ணும் ஸ்கூட்டியில் செல்கின்றனர். ஓயோ ஹோட்டலுக்கும் ஸ்பாட்டிற்கும் இடையே சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த நேரத்தில், அந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பலேனோ கார் மற்றும் போலீஸ் பி.சி.ஆர். வேன் காணப்படுகின்றன.

இந்த வாகன நிறுத்துமிடத்தில் பலேனோ காரை போலீசார் கண்டுபிடித்தனர். எஃப்எஸ்எல் குழுவினர் சிறிது நேரத்தில் இங்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.
 
படக்குறிப்பு,

இந்த வாகன நிறுத்துமிடத்தில் பலேனோ காரை போலீசார் கண்டுபிடித்தனர். எஃப்எஸ்எல் குழுவினர் சிறிது நேரத்தில் இங்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கஞ்சவாலாவிலிருந்து ஜௌண்டா கிராமத்தை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் காணப்படுகின்றது. அதிகாலை 3.17 மணிக்கு எடுக்கப்பட்ட காட்சியில், சந்தேகத்திற்குரிய பலேனோ கார் யூ-டர்ன் எடுப்பதைக் காணலாம். இப்போது அதன் அடியில் ஏதோ தெரிகிறது.

 

பலேனோ காரின் அடியில் சடலத்தைப் பார்த்தவர்கள் காவல்துறைக்கு பல PCR அழைப்புகளை செய்தனர். காலை 3.30 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து 13.1 கிலோமீட்டர் தொலைவில்  பலேனோ காரின் அடியில் இருந்து அஞ்சலியின் உடல் யு-டர்ன் மீது விழுந்தது. சிறிது நேரம் கழித்து, பெண்ணின் சடலம் சாலையில் கிடப்பது குறித்து கஞ்சவாலா காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மாலை 4.51 மணியளவில், ஜவுண்டி கிராமத்தில் சடலம் விழுந்த இடத்திலிருந்து 14.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோகினியின் செக்டார்-1 இன் வாகன நிறுத்துமிடத்தில் கார் ஓட்டுபவர்கள் காரை நிறுத்துகின்றனர்.

காலை 6:55 மணிக்கு, போலீஸ் டீம் பார்க்கிங்கில் உள்ள கார் அருகே சென்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, எஃப்எஸ்எல் குழு சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கிறது. டெல்லி போலீஸ் குழு இங்கு முழுமையான விசாரணையை நடத்துவதாக நேரில் பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றன.

 

இதற்கிடையில், டெல்லி போலீசார் காரில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். ரோகினி செக்டார் 1ல் வசிக்கும் தங்கள் நண்பரிடம் அவசரத் தேவை என்று கூறி இளைஞர் இந்தக் காரைக் கடனாகப் பெற்றுள்ளார்.

மருத்துவக் குழு தனது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஞ்சலி மீது பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்முறையை உறுதிப்படுத்தவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c3g44x2x9ggo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.