Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர கதியில் நடைபெறுகிறதா சென்னை சங்கமம் நிகழ்ச்சி? கலைஞர்கள் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசர கதியில் நடைபெறுகிறதா சென்னை சங்கமம் நிகழ்ச்சி? கலைஞர்கள் கூறுவது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,CHENNAI SANGAMAM/ YOUTUBE

"கொரோனா காலத்தில் வருமானத்துக்கு கஷ்டப்பட்டோம். சில தன்னார்வ அமைப்புகள் எங்களுக்கு உதவின. ஒரு சிலர் பொருட்களை விற்று குடும்பம் நடத்தும் சூழல் ஏற்பட்டது. கொரோனா நெருக்கடியால்  கடுமையாகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நிச்சயம் இது வரப்பிரசாதம்தான்,” என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி குறித்துப் பேசுகிறார் மதுரை அலங்காநல்லூர் வேலு கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வேலு ஆசான். 

கடந்த முறை நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் வேலு ஆசான். அது குறித்து நம்மிடம் பேசுகையில், “கடந்த முறை நடைபெற்ற சென்னை சங்கமம்  நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தில் தற்போது தமிழ்நாடு முழுவதும் என் மாணவர்கள் உள்ளனர். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பறையிசை குறித்து வகுப்பெடுக்கிறேன்,” என்றார்.

கும்கி, குட்டிப்புலி, தர்மதுரை போன்ற திரைப்படங்களின் வாய்ப்புகளும் சென்னை சங்கமம் மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். 

 

 

மேலும், “கலையை வளர்க்கும் விதமாகவும் திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த முறை அரசு சார்பிலேயே நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மண்ணின் கலைகளை அடையாளப்படுத்தி வெளிக்கொண்டு வருகிறார்கள்.  எங்களின் பறை இசையைப் பலருக்கும் கொண்டு செல்ல இந்த நிகழ்ச்சி உதவுகிறது. எங்களுக்கான அங்கீகாரமாக மட்டும் இல்லாமல் வழிகாட்டுதலாகவும் சென்னை சங்கமம் இருக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் வேலு ஆசான் குறிப்பிட்டார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது

பட மூலாதாரம்,VELU ASSAN

 
படக்குறிப்பு,

வேலு ஆசான்

கடந்த 2006-2011 திமுக ஆட்சியின்போது சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி சென்னை சங்கமம். கனிமொழி மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ஆகியோரின் முயற்சியால்  தொடங்கப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்ச்சி சென்னையின் பல்வேறு பூங்காக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

கிராமிய கலைகளை நகரங்களில் வசிப்பவர்களும் அறிந்துகொள்ள ஏதுவாகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடல்கள், கூத்து, ஒயிலாட்டம், குயிலாட்டம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலைகள் இடம்பெற்றன.

அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டு வந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறுத்தப்பட்டது. தற்போது திமுக ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு கடந்த ஆண்டு, ஒரே ஒரு நாள் நிகழ்ச்சியாக  மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற நம்ம ஊரு திருவிழா இந்த ஆண்டு   ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா  ஜனவரி 13ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சென்னை சங்கமம் 2023ஐ தொடங்கி வைக்கவுள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,FACEBOOK/ KANIMOZHI KARUNANIDHI

 
படக்குறிப்பு,

கனிமொழி

எதற்காகத் தொடங்கப்பட்டது சென்னை சங்கமம்?

அருகி வரும் மண்சார்ந்த கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக அமைந்ததுதான் சென்னை சங்கமம் என்று கூறுகிறார் இந்நிகழ்ச்சியை முன்னெடுத்தவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சென்னை சங்கமம் குறித்து என் தந்தையும் அப்போதைய முதல்வருமான கருணாநிதியிடம் பேசியபோது, அவர் மகிழ்ச்சி அடைந்தார், தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார். நிகழ்வுகள் எப்படி நடக்கிறது, மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார். நாட்டுப்புற கலைஞர்களை நேரில் சந்தித்தும் பேசினார். மிகவும் ஆர்வமாக இருந்தார்,” என்றார்.

 

அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது வருத்தமடையச் செய்ததாகத் தெரிவித்த கனிமொழி, “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த நிகழ்ச்சியை அரசே ஏற்று செய்யும் என்று ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, நாங்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்.

ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, நிகழ்ச்சி நடக்கவே இல்லை. தற்போது முதல்வர் ஸ்டாலின், அரசாங்கமே இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் என்று அறிவித்து செயலாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

'நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல உதவும்'

“பெரியமேளம் என்பது குறித்துப் பெரியதாக மக்களுக்குத் தெரியாத நிலையில், சென்னை சங்கமம் நிகழ்ச்சி எங்களுக்கு வெளிச்சம் கொடுத்தது,” எனக் கூறுகிறார் திருவண்ணாமலை, பாப்பம்பட்டி முனுசாமி பெரியமேளம் குழுவைச் சேர்ந்த முனுசாமி.

கடந்த முறை வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை எனப் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சியை நடத்தியதாக நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் இந்த முறையும் சென்னை மக்கள் முன்பாக தங்களின் கலையை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது என்ன?
 
படக்குறிப்பு,

பறையிசை கலைஞர் ராம்

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதன்முறையாக பங்கேற்பதில் ஆர்வமாக இருப்பதாக முனுசாமியின் பேரன் ராம் கூறுகிறார்.

“கடந்த முறை சென்னை சங்கமம் நடைபெற்றபோது நான் சிறுவனாக இருந்தேன். நாமும் சென்னை சங்கமத்தில் பங்கேற்க முடியுமா என ஆவலோடு காத்திருந்தேன். தற்போது 10 ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் அவர். 

இத்தனை கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறோம் என்பதே பெருமிதமாக உள்ளதாகக் குறிப்பிடும் அவர், இழவு வீடு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைத்து வந்த தான் தற்போது சென்னையில் ஏராளமான மக்கள் முன்பு இசைப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் சமூக ஊடகம் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில், தங்களை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்த நிகழ்ச்சி உதவும் என்றும் கூறுகிறார்.

 

மொத்தம் 16க்கும் மேற்பட்ட  இடங்களில் , பறையாட்டம், கரகாட்டம், புலியாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள்  என 60க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கடந்த காலங்களை போல் தற்போதும் கட்டணமின்றி இந்நிழ்ச்சியை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அரசின் உதவியோடு நடைபெற்ற இந்நிகழ்ச்சி இந்த முறை அரசின் சார்பில்  நடைபெறுகிறது. கலை பண்பாட்டுத்துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.  சென்னை சங்கமம் நிகழ்ச்சியுடன் உணவுத் திருவிழாவுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. உணவுகளுக்கு கட்டணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான திட்டமிடல் இல்லை?

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சரியான திட்டமிடல் இல்லை என்ற புகாரும் கலைஞர்களிடம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் தேன்மொழி ராஜேந்திரன் கரகாட்டக் குழுவை சேர்ந்த ராஜேந்திரன் தேன்மொழி பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த முறை நாங்கள் பங்கேற்ற போது, ஒரு குழுவுக்கான ஊதிய தொகையை அக்குழுவின் தலைவர்களிடம் தந்துவிடுவார்கள். இந்த முறை ஒவ்வொருவரிடம் தனித்தனியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்கள். மொத்தமாக குழுத் தலைவரிடம் வழங்கும்போது அவர், செலவுகள் போக மீதத் தொகையை பிரித்துகொடுப்பார். தற்போதைய முறையால் குழுவின் ஒருங்கிணைப்பு உடைகிறது’ என்றார்

சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது

பட மூலாதாரம்,RAJENDRAN THENMOZHI

 
படக்குறிப்பு,

ராஜேந்திரன் தேன்மொழி

சொந்த ஊரில் இருந்து சென்னை வந்துசெல்லும் பயணத்துக்கான செலவை அரசு சார்பில் தந்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால், 10, 20 பேர் உள்ள குழுவினர் சென்னை வந்து செல்லும்போதும் குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இந்த தொகை கைக்கு கிடைத்து விடும் என்றாலும், தற்போது ஏழ்மை நிலையில் உள்ள எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களால் உடனடியாக பணத்தை புரட்டி அனைவரையும் சென்னை அழைத்து வருவது என்பது சிரமமாக உள்ளது. எனவே,  கலைஞர்களின் பயண செலவுக்கான தொகையை முன்னரே வழங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், அனைத்து கலைஞர்களுக்கும் சம ஊதியம் வழங்குவது தொடர்பாகவும் அவர் தனது நெருடலை வெளிப்படுத்தினார். “அனைவரும் சமம் என்ற நோக்கத்தில் கலைஞர்களுக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று கலை மற்றும் பண்பாட்டு துறை நினைக்கிறது. ஆனால், கலைமாமணி விருது பெற்ற நாட்டுப்புற கலைஞருக்கும் குறைவாக வேலை தேவைப்படும் கலைஞருக்கும் ஒரே ஊதியம் என்பது ஏற்புடையது அல்ல” என்றார்.

 

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பின்னர்தான், கலைஞர்களுக்கு மரியாதை கிடைத்தது.  நாட்டுப்புற கலைகள் பரவலாக வெளியில் தெரிய தொடங்கியது. கலைஞர்களின் வாழ்வாதாரமும் கௌரவமான நிலையை எட்டியுள்ளது என்று கூறும் ராஜேந்திரன் தேன்மொழி, சரியான திட்டமிடலுடன் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

 

ஒரு குழுவின் பெயரில் வேறு குழு பங்கேற்பு?

எட்டயபுரம் கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு குழுவினரோ வேறுவிதமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக அந்த குழுவைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில் நாங்கள் இந்த முறை சென்னை சங்கமத்தில் பங்கேற்கவே இல்லை. ஆனால் எங்கள் பெயரில் வேறு குழு பங்கேற்றுள்ளது என்றார்.

விரிவாக பேசிய அவர், “ சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என்று அதற்கு 2 தினங்களுக்கு முன்புதான் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டதால், சென்னை சங்கமத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது கலை மற்றும் பண்பாட்டு துறையின் சமூக ஊடக பக்கங்களில்,  எங்களின் ‘எட்டயபுரம் கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு குழு’ என்ற பெயரில் வேறு குழுவின் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த குழு திருநெல்வேலியை சேர்ந்த  கிருஷ்ணாபுரம் முத்துலட்சுமி குழு  ” என்று தெரிவித்த அவர், இந்த குழப்பத்திற்கு உள்ளூர் அதிகாரிகளின் முறைகேடுதான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி- கலைஞர்கள் கூறுவது

பட மூலாதாரம்,YOUTUBE/KALAIMAMANI G.MUTHULAKSHMI GOPIKRISHNAN

 
படக்குறிப்பு,

கலைமாமணி முத்துலட்சுமி -கோபிகிருஷ்ணன்

கலை, பண்பாட்டு துறை விளக்கம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக கலை, பண்பாட்டு துறையின் இயக்குநர் சே.ரா. காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம். அவர் அளித்த விளக்கத்தில், “சென்னை சங்கமத்தில் பங்கேற்கும் கலைஞர்களை அதிகாரிகள் தேர்வு செய்யவில்லை. கலைத்துறையில் உள்ள கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், கலை துறையில் ஆர்வம் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரை கொண்டு தேர்வு குழு ஒன்றை அமைத்தோம்.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் என 7 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு தேர்வுக்குழு என 7 தேர்வுக்குழு அமைத்தோம். ஒரு மண்டலத்தில் இருந்து வந்த கலைஞர்களின் வீடியோக்களை மற்றொரு மண்டலத்தைச் சேர்ந்த தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள்தான் யார் பங்கேற்பது என்பதை தேர்வு செய்தனர்.

எனவே, இதில், பாகுபாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு 7 மண்டலங்களில் இருந்தும் 15 வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான நிகழ்ச்சிக்கு  105 வீடியோக்கள் வந்தன. திறமையான கலைஞர்கள் கொண்டு மாநில அளவில் தேர்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்க வாய்ப்பு இல்லை.” என்று தெரிவித்தார்.  

https://www.bbc.com/tamil/articles/cyxw01zd7xyo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.