Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ராகவேந்திர ராவ்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,TWITTER/TEJASVI YADAV

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப்பணியின் முதல் கட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் சாதி, துணை சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும்.

பிகார் அரசு நடத்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,ANI

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.

 

பிகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் எந்த மனுவையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுதாரர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அது தெரிவித்தது.

இந்த மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக மனுதாரர்கூறியதையடுத்து, உச்ச நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நீதிபதி விக்ரம் நாத் அடங்கிய, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

"இது ஒரு பொதுநல வழக்கு அல்ல, விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இடஒதுக்கீடு எவ்வாறு வழங்கப்படும் என்பதை அவர்கள் எவ்வாறு தீர்மானிப்பார்கள் எனக் கூறி நீதிபதி கவாய், இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டார்.

"அரசின் இந்த அறிவிப்பு பாரபட்சமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று வழக்கறிஞர் பரூன் குமார் சின்ஹா தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது மனுவில், பிகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிகார் அரசின் துணை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

ஜூன் 6, 2022 வெளியான அறிவிப்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவு வழங்கும் சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சமமான பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சத்தை மீறுகிறது, இது "சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த விதியும் இல்லை என்றும் இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பின் வரலாறு

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,TWITTER/AKHILESH YADAV

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1872-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1931-ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய ஒவ்வொரு முறையும் அதில் சாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியபோது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே சாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர்.

அப்போதிலிருந்து இந்திய அரசு ஒரு கொள்கை முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்த்து வருகிறது. சட்டப்படி சாதிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஏனென்றால் அரசியல் சாசனம் மக்கள் தொகையை ஏற்கிறது, சாதி அல்லது மதத்தை அல்ல என்று இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

1980களில் சாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல பிராந்திய கட்சிகள் தோன்றியபோது நிலைமை மாறியது.

அரசியலில் உயர்சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இந்த கட்சிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தை தொடங்கின.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய இந்திய அரசு 1979 ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தை அமைத்தது.

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை 1990 ஆம் ஆண்டுதான் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அது தொடர்பான கோரிக்கையை அவ்வப்போது எழுப்பத் தொடங்கின. இறுதியாக 2010இல், ஏராளமான எம்.பி.,க்கள், சாதிவாரி கணக்கெடுப்பை கோரியபோது, அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று.

சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. ஆனால் இதன் மூலம் பெறப்பட்ட சாதி தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இதேபோல் கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

2011-இன் சாதி கணக்கெடுப்பு தரவு ஏன் வெளியிடப்படவில்லை?

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2011 இல் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பில் பெறப்பட்ட சாதி விவரங்களை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்று 2022 ஜூலையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கு சில மாதங்களுக்கு முன், 2021ல் நடந்த மற்றொரு வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில். ”2011ல் நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறுகள் நிறைந்ததாகவும் பயனற்றதாகவும் உள்ளது,” என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

1931 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, நாட்டில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 ஆக இருந்தது என்றும், 2011 ஆம் ஆண்டு சாதிக் கணக்கெடுப்பிற்கு பிறகு, நாட்டில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை 46 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியது.

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய மத்திய அரசு, மகாராஷ்டிராவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளின் கீழ் வரும் சாதிகளின் எண்ணிக்கை 494 என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிக் கணக்கெடுப்பில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,28,677 என்று கண்டறியப்பட்டதாக மத்திய அரசு குறிப்பிட்டது.

இதனுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நிர்வாக ரீதியாக சிரமங்கள் நிறைந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியரான சதீஷ் தேஷ்பாண்டே, பிரபல சமூகவியலாளரும் ஆவார்.

"தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு வருவது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் எவ்வளவு காலம் இதை நிறுத்த முடியும் என்பதுதான் கேள்வி. மாநிலங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. சில சமயங்களில் அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது, இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை உதாரணம் காட்டிய சதீஷ் தேஷ்பாண்டே, "இந்த சாதிவாரி கணக்கெடுப்பு மிகுந்த ஆர்வத்துடன் நடந்தது. தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஆனால் அதன் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் அரசியல் இழுபறியில் சிக்கியுள்ளது. சில குழுக்கள் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைக்கின்றன. வேறு சில குழுகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கருதுகின்றன,” என்றார்.

 

“சாதிக் கணக்கெடுப்பு நடத்திய பிறகும் புள்ளிவிவரங்களை கட்சிகள் வெளியிடாமல் இருப்பதற்கு ஒரு வேளை பயம் காரணமாக இருக்கலாம் அல்லது புள்ளிவிவரங்களில் முழுமையின்மை இருக்கலாம். பல சாதிகளில், வகைகளை பிரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. சில நேரங்களில் சர்ச்சைகளை தவிர்க்கவும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதில்லை," என்று அலகாபாத்தைச் சேர்ந்த கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் பணிபுரியும் பேராசிரியர் பத்ரிநாராயண் தெரிவித்தார்.

”அடுத்து என்ன நடக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கை நியாயமான ஒன்றாகும். அதை செயல்படுத்த வேண்டும்" என்று பேராசிரியர் தேஷ்பாண்டே குறிப்பிட்டார்.

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் இருப்பதாக சொல்லப்படும் தொழில்நுட்பத் தடைகள் வெறும் யூகங்கள் மட்டுமே. சிக்கலான விஷயங்களைக் கணக்கிடுவது நமது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு புதிதல்ல.

தொழில்நுட்ப ரீதியாக இது முற்றிலும் சாத்தியம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக டாக்டர் விஜயன் உண்ணி இருந்தார். மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு, இதுபோன்ற கணக்கெடுப்பை நடத்தும் திறன் கொண்டது என்று அவர் மிகத்தெளிவாகக் கூறினார்," என்று தேஷ்பாண்டே மேலும் தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பால் என்ன பயன்?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES/GETTY IMAGES

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல வகையான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் மிகவும் தேவைப்படும் பிரிவினருக்கு நீட்டிக்கப்படலாம் என்பது அதற்கு ஆதரவாக கொடுக்கப்படும் மிகப்பெரிய வாதம்.

"சாதிவாரி கணக்கெடுப்பு பலனளிக்கும் என்பது ஒரு வாதம். ஏனெனில் தரவுகள் கிடைத்தால் நலத் திட்டங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வாதம் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தரவுகள் இருப்பதால் மட்டும் நலத்திட்டங்களை மேம்படுத்தமுடியும் அல்லது அவற்றை செயல்படுத்துவதை மேம்படுத்த முடியும் என்று சொல்லமுடியாது,” என்று பேராசிரியர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

சாதிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம், யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது மற்றும் சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

" இதில் சமத்துவமின்மை இருந்தால் அது வெளிவருவது நம் சமூகத்திற்கு நல்லது. நடப்பு காலத்தில் நமது பிரச்சினைகள் சிறிது அதிகரித்து, அரசியல் அதிருப்தி பரவினாலும், நீண்ட கால அடிப்படையில் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அது மிகவும் முக்கியமானது. இதை எவ்வளவு சீக்கிரம் நாம் சந்திக்கிறோமோ, அது நமது சமுதாயத்திற்கு அவ்வளவு நல்லது." என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று சாதி தொடர்பான இரண்டு பெரிய பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று அவர் கூறுகிறார்.

"ஒன்று, சாதி அமைப்பால் அதிகம் பயனடைந்த சாதிகள், அதாவது உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள். அவர்கள் இதுவரை  கணக்கிடப்படவில்லை. தரவுகளின் அடிப்படையில் அவர்கள் மறைந்திருப்பதால் அது அவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இரண்டாவது சிக்கல், இந்த வகுப்பில் மிகவும் வசதி படைத்தவர்களும், சக்தி வாய்ந்தவர்களும் தங்களுக்கு சாதி இல்லை என்ற மாயையில் உள்ளனர். தாங்கள் சாதியை தாண்டி உயர்ந்துவிட்டதாக கருதுகின்றனர்,” என்கிறார் தேஷ்பாண்டே.

மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற முறையான மற்றும் ஆட்சியமைப்பு நடத்தும் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரிடமும் உங்கள் சாதி என்ன என்று கேட்கும்போது, சமூகத்தின் பார்வையில் அனைவருக்கும் சாதி உள்ளது என்ற எண்ணம் மக்களுக்கு வரும் என்று அவர் கூறுகிறார்.

"உளவியல் அல்லது கலாச்சாரம் என்று எதுவாக இருந்தாலும் இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும். உயர்சாதி பிரிவினர் உண்மையில் சிறுபான்மையாக இருப்பது தெளிவாக தெரிந்துவிடும்,” என்று அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பால் பயன் ஏன்?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

2018 ஆகஸ்டில் மத்திய அரசு, 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை விரிவாகக் கூறியது. ”மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதல் முறையாக OBC கள் பற்றிய தரவுகளை சேகரிக்க திட்டமிடப்படுகிறது" என்று தெரிவித்தது.

ஆனால் பின்னர் மத்திய அரசு இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது.

" எந்த ஒரு கட்சியும் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது இதிலிருந்து  விலகிக்கொள்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசுகிறது. பா.ஜ.க மர்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே இதை செய்தன,” என்று பேராசிரியர் தேஷ்பாண்டே குறிப்பிட்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது பல கவலைகளும் கேள்விகளும் அடிக்கடி எழுகின்றன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து பெறப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கான புதிய கோரிக்கைகள் எழத் தொடங்கும் என்பது முக்கிய கவலைகளில் ஒன்றாகும்.

ஆயினும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நிர்ணயிக்கப்பட்ட 50 சதவிகித இடஒதுக்கீடு வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று வாதிட்டால், அப்படிப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படும் சமூகப் பிளவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது,” என்று பேராசிரியர் பத்ரி நாராயண் குறிப்பிட்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும். ஜனநாயகத்தில் மக்களுக்கும் பங்கு கிடைக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால் இதனால் சமூகத்தில் சாதிய ஒருமுனைப்படுத்தல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. இது சமூகத்தில் மக்களின் பரஸ்பர உறவுகளை பாதிக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பில் பாஜகவின் முக்கிய கவலை என்ன?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதிவாரி கணக்கெடுப்பால் பிராந்திய அரசியல் கட்சிகளுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் அதே நேரம் பா.ஜ.க.வுக்கு இழப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"எல்லோரையும் உடன் அழைத்துச் செல்லும் கட்சியாக பாஜக தன்னைக் காட்டிக் கொள்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூகத்தின் எந்த ஒரு பிரிவும் தனக்கு எதிராகத்திரும்பும்  பிரச்சனைகளை அது எழுப்ப விரும்பாது. இதை பாஜக நேரடியாக மறுக்கவும் முடியாது. அதனால் தான் ஒரு நடுப்பாதையை அது பின்பற்றுகிறது,” என்று பேராசிரியர் பத்ரி நாராயண் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பால் இந்து சமுதாயம் மேலும் பல சாதிகளாக பிரிந்துவிட்டால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்பது பாஜகவின் கவலை.

"மறுபுறம், பிராந்தியக் கட்சிகளின் முழு அரசியலும் சாதிய ஒருமுனைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டது. சாதிக் கணக்கெடுப்பின் காரணமாக சமூகம் மேலும் பல சாதிகளாகப் பிரிந்தால், அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." என்றார் அவர்.

பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டேயும் இந்தகூற்றை ஒப்புக்கொள்கிறார்.

”பா.ஜ.க.வின் முழு கொள்கையும் இந்து ஒற்றுமையை சார்ந்தது. அதனால்தான் இந்து ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் கட்சிக்கு உள்ளது. அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்து என்ற தனி அடையாளத்தில் சாதி என்பது பிளவை உருவாக்கி அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்."

தற்போது பா.ஜ.க வலுவான நிலையில் இருப்பதால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூட அது முடிவு செய்யலாம் என்கிறார் தேஷ்பாண்டே.

”பா.ஜ.க.வுக்கு நிச்சயம் அசௌகரியம் ஏற்படும் என நினைக்கிறேன். ஆனால் அக்கட்சிக்கு வலுவான போட்டியாளர் யாரும் இல்லாத தற்போதைய சூழ்நிலையில், அதன் நம்பிக்கை உச்சத்தில் இருக்கலாம். இந்த நேரத்தில் பா.ஜ.க. தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால்  அது இந்த ஆபத்தை எதிர்கொள்ள முடிவெடுக்கலாம்."

இந்தியாவிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா என்பது ஒரு பெரிய கேள்வி.

சமூகத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் சாதியால் வழங்கப்படும் சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்று பல சமூகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனுடன், பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் அடையாளம் காண வேண்டும்.

எல்லா சாதியினரைப் பற்றியும் துல்லியமான தகவல்களும் புள்ளி விவரங்களும் கிடைத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்.

மறுபுறம், அரசின் நலத்திட்டங்களின் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற வாதமும் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இதை உறுதிப்படுத்த உதவும் ஒரே கருவி.

மூன்றாவது விஷயம், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிப்பது. இந்த வேலையைச் செய்ய, நம்பகமான சாதி தொடர்பான தரவுகள் தேவை. அதை சாதிக் கணக்கெடுப்பு மட்டுமே வழங்க முடியும்.

"சாதி கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம்., ஏனென்றால் சாதி புள்ளி விவரங்கள் வெளிவர வேண்டும்" என்கிறார் பேராசிரியர் தேஷ்பாண்டே.

மறுபுறம் பேராசிரியர் பத்ரி நாராயண். அத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று கருதுகிறார்.

"இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் முன்னேறிவிட்டது. சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு அதை மீண்டும் பின்னுக்கு கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cyrn2elk0kko

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.