Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்மையும் வாய்மையிடத்த - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

              பொய்மையும் வாய்மையிடத்த

                                                           -  சுப. சோமசுந்தரம்

 "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லாத சொலல்"
------(குறள் 291; அறத்துப்பால்; அதிகாரம் : வாய்மை)
        
          திருமணப் பத்திரிகைகளில் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலுடன் தொடங்குவார்களே, அதுபோல் இக்கட்டுரைக்கு மேற்கண்ட குறளே நாம் போடும் பிள்ளையார் சுழி (!). இப்பீடிகையைப் பார்த்தாலே தெரிய வேண்டும் - இவன் சில பொய்களுக்குப் புடம் போட்டு, முடிந்தால் நமக்கு மூளைச்சலவை செய்து ஏதோ கருத்தியல் சார்ந்த சுழலில் தள்ளப் பார்க்கிறான் என்று. ஏமாற்ற நினைப்பது உண்மைதான். பின்னர் ஏன் இந்த முன்னறிவிப்பு ? ஏமாற விருப்பமில்லையெனில் ஆரம்பத்திலேயே சுழலில் சிக்காமல் நீங்கள் கரையில் நின்று வேடிக்கை பார்க்கலாமே என்ற நல்லெண்ணமும் உண்டு.

காட்சி 1 காலம் - சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு; இடம் - நெல்லையில் நான் பிறந்து வளர்ந்த எங்களது பூர்வீக வீடும் அதன் சுற்றுப்புறமும்.
           காலங்காலமாக அங்கேயே வாழ்ந்து வந்ததால் சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் சுற்றத்தினராகவே வாழ்ந்தமை அக்கால இயல்பு. பாசப்பிணைப்பு, சண்டையிடல் என அனைத்து அம்சங்களுடன் வாழ்ந்த ஒரு கூட்டம். "எல்லாம் அந்தக் காலம் !" என்று அந்தக் காலப் பெரியவர்கள் போல் பெருமூச்சுடன் ஒரு முறை அங்கலாய்த்துப் பார்க்கிறேனே !
          எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளி வாழ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்டமிடாத வாழ்க்கையாலோ என்னவோ, பெரும் கடன் சுமையில் மாட்டிக்கொண்டார். வெளியில் தலைகாட்ட முடியாமல் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்து விட்டார். இந்த மாதிரி திடீர் 'நோயாளிகளை' இயன்றவரை போராடிக் காப்பாற்ற ஒரு மருத்துவமனை அக்காலத்தில் அங்கு இருக்கவே செய்தது. முடிந்தவரை 'தற்கொலை' செய்தி வெளியில் வராமல் கையாளும் திறமையும் அம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு இருந்திருக்கும். எனினும் இந்த ஆசிரியர் விஷயத்தில் எமனுடன் பெரிதும் போராடி நான்கு நாட்கள் மட்டுமே அவர்களால் 'வாய்தா' வாங்க முடிந்தது. ஆதரவின்றி விடப்பட்ட அவரது மனைவிக்காகவும் நான்கு குழந்தைகளுக்காகவும் தெருவே அழுதது. கடன் கொடுத்தவர்கள் பெரிய மனது வைத்து (அந்தக் காலம் என்பதாலோ !) விலகிக் கொண்டார்கள். அதனால் அவர்களது பூர்வீக வீடு தப்பியது. அரசிடம் இருந்து அவருக்கு வரவேண்டிய பணப் பலன்களும் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு; ஆனாலும் பணிக்காலத்தில் மரணம் அடைந்ததால் மேலதிகார விசாரணை என்ற நடைமுறை இருந்தது. தற்கொலை என்றால் சில சலுகைகள் குடும்பத்திற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. வந்த அதிகாரி விவரங்கள் ஓரளவு கேள்விப்பட்டுதான் வந்திருப்பார். இறந்தவர் வயிற்றுக் கடுப்பு நோயினால் பாதிக்கப்பட்டதாகவே சான்று அளிக்கப்பட்டிருந்தது. சுற்றி வசித்தவர்களுக்கும் அவ்வாறே சொல்லப்பட்டிருந்தது அல்லது சொல்லச் சொல்லப்பட்டிருந்தது. எவரிடமெல்லாம் விசாரிக்கப்பட்டது, பெறப்பட்ட தகவல்கள் யாவை போன்றவற்றைப் பதிவு செய்வது விசாரணை அதிகாரியின் கடமை. ஆசிரியரின் வீட்டில் விசாரித்ததுடன் மேலும் அக்கம் பக்கம் இரண்டு வீடுகளில் விசாரித்தார். எங்களுக்கு அடுத்த வீட்டு ஆச்சியிடம் விசாரிக்க வந்தார் (வயதான பெண்களை ஆச்சி என்று விழிப்பதும், உரிமையோடு அவர்களை ஒருமையில் குறிப்பிடுவதும் சுற்றி அமைந்த அச்சமூக வழக்கு). அந்த ஆச்சி கல்லூரி மாணவனான என்னை அழைத்தாள். "படிச்சவுக வந்திருக்காக. எனக்கு வாசிக்கவும் தெரியாது; ஒரு எழவும் தெரியாது. வாய்யா ! செத்துப்போனவன் குடும்பத்துக்கு நம்மாலான உவகாரத்தச் செய்வோம்" என்றாள். அவளது அனுபவ அறிவுக்கு ஒரு பல்கலைக்கழகத்தின் உயரிய பட்டமே ஈடாகாது என்பது அவளுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். சென்று அமர்ந்தேன். அந்த அதிகாரிக்கும் எனக்கும் கைச்சுற்று முறுக்கும் கடைந்தெடுத்த மோரும் தந்து உபசரித்தாள். அவர் கேட்டதற்கெல்லாம் பிசிறு தட்டாமல் தெளிவாகப் பதில் சொன்னாள் - வயிற்றுக் கடுப்பு நோயினால் இறந்தவர் பட்ட பாடுகள் (!) உட்பட. பொய்யைப் புடம் போட்டு இவள் விவரித்த முறையை நான் ரசித்தது போலவே அந்த அதிகாரியும் ரசித்தார் என்றே நினைக்கிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காக, "அந்த மருத்துவமனையில் இறந்ததால் ........." என்று இழுத்தார் அதிகாரி. அவ்வளவுதான். ஆச்சி அவரது கைகளைப் பிடித்து, "ஐயா உங்களுக்கு என் கடைசி மகன் வயசுதான் இருக்கும். அந்த வீட்ல செத்தவன் நாலு புள்ளைகள அம்போனு விட்டுட்டுப் போயிட்டான். என்னத்தப் போட்டு இப்புடி விசாரிக்குறீக ?"என்று மன்றாடும் தொனியில் சொன்னாளே பார்க்கலாம். ஏதோ ஒரு வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்காக இவள் உருகினாள். உணர்ச்சியில் அந்த அதிகாரியின் கண்களும் பனித்தன. ஆச்சியின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "அம்மா ! நானும் புள்ள குட்டிக்காரன்தான். மேற்கொண்டு யார் கேட்டாலும் நீங்கள் எந்த அளவுக்குத் தெளிவாகச் சொல்வீர்கள் என்பதற்காகத்தான் கேட்டேன். நீங்கள் சொன்ன விவரங்கள்தான் என் இறுதி அறிக்கை" என்று வாக்களித்துச் சென்றார். அக்குடும்பத்திற்கு அனைத்துப் பலன்களும் சலுகைகளும் விரைவில் கிடைத்தன என்பது இக்கதையின் பிற்சேர்க்கை.
          அந்த ஆச்சியால் அங்கு அழைக்கப்பட்ட நான் எதுவும் பேச அவசியம் ஏற்படவில்லை. தன் பேரன் உடன் இருக்கிறான் என்ற மன தைரியம் மட்டுமே நான் அங்கு சென்றதால் அவளுக்குக் கிடைத்த பலனாக இருக்கும். எனக்குக் கிடைத்த பலன்
"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
என்ற குறளின் உண்மைப் பொருள்.

காட்சி 2 அதே தெருக்கோடியில் ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள வருவாய்த்துறை அதிகாரியின் வீடு இருந்தது. அவரும் பரம்பரையாக அங்கு வாழ்பவர். எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர் என்பதால் எங்களது குடும்ப நண்பரும் கூட. நான் அவரை மாமா என்றும் (அங்கிள் என்னும் செயற்கைத்தனம் அப்போது இல்லை) அவர் என்னை மருமவனே என்றும் உறவு பாராட்டும் உரிமை உண்டு. 1990களில் நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த சமயம் அவர் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்று சுமார் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு அலுவலக முறையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை ஒன்றை என் தந்தையாருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். பணிக்காலத்தில் அவருக்கு நன்கு தெரிந்த ஒரு வறிய, வயோதிகப் பெண்மணிக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்திருந்தார். அப்போது அத்தொகை மாதம் சுமார் இருநூறு ரூபாய்தான் என்றாலும் அக்கால கட்டத்திற்கு ஓரளவு அது ஒரு உதவித் தொகைதான். அப்போது அந்த ஆச்சிக்கு ஒரே ஒரு அறை கொண்ட ஓடு வேய்ந்த ஒரு குச்சு வீடு சொந்தமாக இருந்தது. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேறு எந்த வருமானமும் இல்லை. தமது வீட்டை ஒட்டி அந்தக் குச்சு வீடு இருந்ததால் அந்த இடத்தையும் தம் வீட்டுடன் சேர்த்தால் வசதியாய் இருக்கும் என்று எண்ணிய ஒரு நபர் ஆச்சியிடம் வீட்டை விலை பேசி இருக்கிறார். ஆச்சி தனக்குக் குடியிருக்க வீடு வேண்டும் என்பதால் விற்க முடியாது என்று உறுதியாய் மறுத்துவிட்டாள். பெரிய வீடு கொண்ட அந்த சிறிய மனதுக்காரர் ஆச்சிக்குச் சொந்தமாய் வீடு இருக்கும் தகவலை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிப்போட்டு விட்டார். முதியோர் உதவித்தொகை பெற ஒருவருக்கு எந்த சொத்தும் இருக்கக் கூடாது என்ற விவரம் தெரிந்த வில்லத்தனம்.  சுமார் இரண்டு ஆண்டுகளில் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இழுத்தடித்து விசாரணை நடந்த நேரத்தில் தற்செயலாக அந்த ஆச்சி வீடுபேறு (!) அடைந்து விட்டாள். இருப்பினும் அவள் வாழ்ந்த வரை பெற்ற சுமார் ஐயாயிரம் ரூபாயை நான் மாமா என்று உரிமையுடன் அழைக்கும் அந்த அதிகாரி கட்ட வேண்டும் என்று உத்தரவானது. இவர் ஓய்வு பெற்றே பத்து வருடங்கள் கழிந்து விட்டதால் பொதுவாக அரசாங்கத்தில் சிறிது காலம் கழித்து அத்தொகையைத் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்றும், எனவே அந்த உத்தரவைக் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் என் தந்தையார் யோசனை சொல்லிவிட்டார்கள். நான் ஆர்வ மிகுதியால் வழக்கமான உரிமையுடன் அந்த மாமாவிடம் கேட்டேன், "மாமா ! குச்சு வீடு சொந்தமாக இருப்பது தெரிந்துதான் அந்த ஆச்சிக்கு உதவித்தொகை கிடைக்கப் பரிந்துரைத்தீர்களா ?". அவரது பதில், "மருமவனே ! அவ பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தால்தான் கொடுக்கணும்னு ரூல்ஸ் புத்தகத்தை அப்படியே வாசிக்க முடியுமா ? ஏதோ மனசுக்குத் தோணுச்சு, செய்தேன். இதுக்கெல்லாம் புகார் செய்யும் அளவுக்கு ஈனர்கள் இருப்பார்கள் என்று நெனச்சுப் பார்க்கல".
           மேலும் சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து அந்த மாமாவும் எனது தந்தையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினார்கள். எங்கள் தாலுகாவின் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரியுடன் அந்தப் பழைய கணக்கிற்காக வந்தார். தற்செயலாக நான் அவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலுலகத்தைக் கைகாட்டி விட்டு நான் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் நான் அவர் கொண்டு வந்திருந்த அரசு ஓலையைப் பெற்றுக்கொண்டு மறுநாள் அவர் சொன்னவாறு முறையாக அரசுக் கணக்கில் அந்தப் பணத்தைக் கட்டி விட்டேன். அரசாங்கம் பெரிய மனது வைத்து முப்பது வருடங்களுக்கான வட்டியெல்லாம் கேட்கவில்லை என்பதால் சுமார் ஐயாயிரம் ரூபாய் எனக்கு அப்போது சிறிய தொகை என்பதாலும், எனது பெருமதிப்பிற்குரிய அந்த மாமா இறந்த பின்பு அரசாங்கத்துக்குக் கூட கடன் பட்டவராய் இருக்கக் கூடாது என்று எனது உள்ளுணர்வு சொன்னதாலும் அந்தப் பணத்தைக் கட்டினேன். மேலும், சிறிய தொகையில் ஒரு பெரிய காரியத்தில் அந்த மாமாவுடன் பங்கு கொள்ளக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற அற்ப ஆசையும் உண்டு.

காட்சி 3என்னுடன் பல்கலைக்கழகத்தில் வேறு ஒரு துறையில் பணியாற்றிய பேராசிரியர் நண்பர் ஒருவர் தமது துறைக்குத் தலைவரானார். தமது துறையின் ஆசிரியர் அனைவரும் கற்பிப்பதிலும் ஆராய்ச்சிப் பணியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் திகழ்வதை எப்போதும் உணர்ந்தவர் அவர். அத்தனைப் பேரும் அவ்வாறு ஒருசேர அமைந்தது அவருக்கான வியப்பும் துறைக்கான பெரும்பேறும். தமது துறையைச் சார்ந்த ஒவ்வொரு ஆசிரியரின் அறையிலும் துறைத் தலைவரான தமது அறையில் உள்ளது போலவே குளிர்சாதனப் பெட்டியை அமைத்துக் கொடுக்க விரும்பினார். நெல்லையில் வருடத்தில் நான்கு மாதங்கள் கடுமையான வெப்பம் நிலவும். ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறையில் கூட துறையில் வந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்குக் குளிர்சாதனம் ஊக்கம் தரும் விதமாகவும் அவர்களது பணித்திறனை மேம்படுத்தும் விதமாகவும் இருக்கும் என எண்ணினார்.
           பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளில் அன்றைய தினம் அதற்கு வழியில்லை. ஆய்வுத் திட்டங்கள் (projects) கிடைப்பது எளிதான சில துறைகளில் அத்திட்டங்களின் கீழ் வாங்கப்படும் கருவிகளை ஆசிரியர்களது அறைகளில் வைத்து அவற்றுக்கான குளிர் சாதனத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் குளிர்காய்வது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விவேகமான நடைமுறைதான். ஆனால் ஆய்வுத் திட்டங்கள் அரிதாய்க் கிடைக்கும் தமது துறையில் என்ன செய்வது என யோசித்தார் நமது மேற்கூறிய நண்பரான துறைத்தலைவர். நான் எனக்குத் தெரிந்த யோசனையைச் சொன்னேன் (நமக்குதான் மூளை இப்படியெல்லாம் வேலை செய்யுமோ !). அவரது துறையில் இரண்டு கணினி மையங்கள் இருந்தன. இரண்டிலும் சேர்த்து மொத்தம் நான்கு பழைய குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தன. நான்கும் நல்ல நிலைமையில் 'Old is gold' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. எனினும் குறிப்பிட்ட கால அளவைக் கடந்து விட்டதால் அவற்றைக் கழித்து விட்டதாகக் கணக்குக் காட்டலாம்; அந்த இடத்தில் புதிய குளிர்சாதனங்கள் வாங்கிப் பொருத்திவிட்டு, கழித்த பழைய சாதனங்களை நான்கு ஆசிரியர்கள் அறையில் பொருத்திவிடலாம் என்பதே எனது உலக மகா யோசனை. "பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்; சிறிய பிரச்சனைகள் கூட இல்லாமல் வாழ்வதற்காகவா பிறந்தோம் ?" எனும் எனது அசட்டுத் தைரியம் வேறு. இருப்பினும் பணிமூப்பில் கடைசியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் துறைத் தலைவருக்கு. அவரது நல்ல மனதுக்கு அவர் கும்பிடும் சாமியே அவருக்கு உதவுவார் போல. மூத்த ஆசிரியர்கள் இருவர் குளிர்சாதனம் தங்களது உடல் நிலைக்கு ஒத்துக் கொள்வதில்லை எனக் கூறியதால் நமது பேராசிரியருக்கு அளப்பரிய ஆனந்தம். நினைத்ததை சாதித்தார். நினைத்தது போல் அவருக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. கால ஓட்டத்தில்  இப்போது குளிர்சாதனமெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது.
               இருப்பினும் "பொய்மையும் வாய்மையிடத்த" எனும் பொய்யாமொழி இங்கு பொருந்துமா என்பது ஐயப்பாடே ! நன்மை பயத்தது உண்மை. புரைதீர்ந்த நன்மைதானா ? நாம் முன்னம் கண்ட இரண்டு காட்சிகள் வாழ்வில் அடிப்படைத் தேவைகள் தொடர்பானவை. இது வசதி சம்பந்தப்பட்டது ஆயிற்றே ! கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல்தானே இதுவும் ! இப்படியெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்து நானோ எனது நண்பரான அத்துறைத்தலைவரோ நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் கருத்தின்படி அடுத்து ஏதாவது நல்ல காரியத்தை (!) யோசிப்போமா ?

Edited by சுப.சோமசுந்தரம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்மை தரும் பொய்கள்(பிறருக்கு தீங்கிழைக்காவிட்டால் சரி தான்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.