Jump to content

சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன?

சோழர் ஆட்சியில் இலங்கை
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையை சோழர்கள் கி.பி. 993ல் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

இந்த நிலையில், சோழர்களின் இலங்கை வரலாறு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், கி.பி. 993ம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்துள்ளார்.

இவ்வாறு இலங்கையை கைப்பற்றிய சோழர்கள், அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தியுள்ளனர்.

   

அநுராதபுரம் உள்ளிட்ட இலங்கையின் வட பகுதி முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பின்னரான காலத்தில் அநுராதபுரத்தை கைவிட்ட சோழர்கள், பொலன்னறுவையை தமது ஆட்சியில் தலைநகராக அறிவித்துள்ளனர்.

அதன்பின்னர், கி.பி. 1070ம் ஆண்டு காலப் பகுதியில் ராஜேந்திர சோழன், இலங்கையின் தென் பகுதியையும் கைப்பற்றி, தமது ஆட்சியை இலங்கை முழுவதும் நிலைநிறுத்தியிருந்தார்.

சோழர்களின் இலங்கை வரலாறு அதன் ஊடாக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.

தமது ஆட்சியை இலங்கையில் உறுதிப்படுத்திய சோழர்கள், தமிழ் மொழியை அரச மொழியாகவும், சைவ மதத்தை அரச மதமாகவும் அறிவித்து ஆட்சி செய்துள்ளனர்.

இதன் அடையாளங்களாக, இன்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயங்கள் மற்றும் கல்வெட்டுகளை காண முடிகின்றது.

குறிப்பாக பொலன்னறுவை பகுதியில் சோழர்களின் சிவன் ஆலயங்கள், கட்டடங்கள் மற்றும் கல்வெட்டுகளை அதிகளவில் காண முடிகின்றது.

சோழர் ஆட்சியில் இலங்கை

இது தொடர்பில் ஆராய்வதற்காக பிபிசி தமிழ், பொலன்னறுவை பகுதிக்கு பயணம் மேற்கொண்டது.

பொலன்னறுவை நகரம் ஆரம்பிக்கும் எல்லை பகுதியிலேயே, சோழர்களின் அடையாளமாக திகழ்ந்த சிவன் ஆலயங்களின் சிதைவுகளை காண முடிகிறது.

சிவலிங்கம், சிவன் ஆலயத்தின் சிதைவுகள், கட்டடத்தின் சிதைவுகள் என பல்வேறு சோழர்களின் அடையாளங்களை பொலனறுவை எல்லை பகுதியில் காண முடிந்தது.

சோழர் ஆட்சியில் இலங்கை
சோழர் ஆட்சியில் இலங்கை

இந்த அனைத்து வரலாற்று சான்றுகளையும், இலங்கை தொல்பொருள் திணைக்களம் முறையாக பராமரித்து வருவதையும் கவனிக்க முடிந்தது.

அதேபோன்று, பொலன்னறுவை நகருக்குள் சென்றால், சோழர்களால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் பல ஆலயங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் சிதைவுகளை, தொல்பொருள் திணைக்களம் பராமரித்து வருவதை அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று, சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயமொன்றில் இன்றும் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதை கவனிக்க முடிந்தது.

இந்த ஆலயத்தில் சிவலிங்கமொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பூஜைகள் நடத்தப்பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

சோழர் ஆட்சியில் இலங்கை
சோழர் ஆட்சியில் இலங்கை

பொலன்னறுவை என்பது தற்போது பெரும்பாலும் சிங்கள மக்கள் வாழக்கூடிய பகுதியாக உள்ளது.

பௌத்த அடையாளங்கள் பொலன்னறுவை பகுதியில் பெரும்பாலும் காணப்பட்ட போதிலும், சோழர்களின் அடையாளமாக காணப்படுகின்ற சிவன் ஆலயங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், சோழர்கள் இலங்கையின் தமிழர் பகுதிகளை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பது தொடர்பிலும் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தை சந்தித்து நாம் வினவினோம்.

''சமீபமாக சில நம்பிக்கைவாய்ந்த ஆய்வுகளை பார்க்கின்ற போது, பொலன்னறுவையிலிருந்து சோழர்களின் ஆட்சி மறைந்தாலும், தமிழ் பிரதேசங்களிலே அவர்களின் ஆட்சி மேலோங்கியிருந்தது. தொடர்ந்தும் ஐரோப்பிய காலம் வரை நிலவியது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பல நம்பகரமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திருகோணமலை - கோமாரன்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, பொலன்னறுவையிலிருந்து சோழர் ஆட்சி மறைந்தாலும், அவர்களுடைய ஆட்சி அங்கிருந்த தமிழர்களோடு இணைந்ததாக இருக்கலாம்.

இவர்களின் ஆட்சி கிழக்கிலங்கையில் தொடர்ந்து இருந்தது என்றும், அந்த காலக் கட்டத்திலே தமிழ் பிரதேசங்கள் மண்டலம், வள நாடு, நாடு, கூற்றம், பற்று என்ற பெயர்களினால் நிர்வகிக்கப்பட்டதையும், அப்பிரதேசங்களில் சில இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டது பற்றிய செய்திகளையும் அது கொடுப்பதாக காணப்படுகின்றது.

சோழர் ஆட்சியில் இலங்கை
 
படக்குறிப்பு,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்

சோழர் ஆட்சி முடிந்ததன் பின்னர் சோழர் ஆட்சியோடு வந்த படை வீரர்கள், கலைஞர்கள், பிராமணர்கள், ராணுவ வீரர்கள், நிர்வாகிகள் மீண்டும் தமிழகத்திற்கு செல்லாது, இலங்கையில் நிரந்தரமாக தங்கிக் கொண்டமையினால் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் மேலும் மக்கள் தொகை அதிகரித்தது என்ற ஒரு கருத்தை பேராசிரியர் அரசரட்ணம் மிக ஆழமாக முன்வைக்கின்றார்.

1964ம் ஆண்டு முன்வைத்த கருத்து உண்மை என்பதை இப்போது கோமாரண்கடவலை, கோடலிபறிச்சான், முல்லைத்தீவில் பெரிய பற்று போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சோழர் ஆட்சியில் செல்வாக்கு பெற்ற படைவீரர்கள், இங்கிருந்த சுதேச மக்களோடு சேர்ந்தோ, தனித்தோ அதிகாரம் பெற்றிருந்ததையும் அந்த வழி வந்தவர்களே வன்னி சிற்றரசர்கள் என்றும் அந்த கல்வெட்டுக்கள் கூறுவதாக இருந்தது.

பொதுவாக வரலாற்று இலக்கியங்களிலும், கனிசமான கல்வெட்டுக்களிலும் பொலன்னறுவையும், கிழக்கிலங்கையும், மாதோட்டம் வட இலங்கை பற்றிய பல செய்திகள் காணப்பட்டாலும், இந்த சோழருடைய ஆட்சி யாழ்ப்பாணத்தில் செல்வாக்கு பெற்றிருக்கலாம் என்பதற்கும் சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் கல்வெட்டு, இங்கிருந்த ஒரு ஆலயத்திற்கு இலுப்பை பால், நெல், ஆடு என்பவற்றை ராஜேந்திர சோழன் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட செய்தியொன்றை சொல்வதாக காணப்படுகின்றது.

சோழர் ஆட்சியில் இலங்கை

அதேபோன்று உரும்புராய் பகுதியில் பிள்ளையார் ஆலயமொன்றிலிருந்து இரண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பல இடங்களில்; சோழ வம்சத்தை, சோழ நாட்டை நினைவுப்படுத்தக்கூடிய தனிநபர் பெயர்களும், ஆட்களின் பெயர்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வரணியில் சோழர் மாசேடி, செம்பியன்பற்று போன்றவை சோழர்களின் காலங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெயர்களாக காணப்படுகின்றன.

சோழர் அநுராதபுரத்தை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், அவர்களுடைய ஆதிக்கம் வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் முதலில் ஏற்பட்ட பின்னரே, அநுராதபுரம் அரசை வெற்றிக் கொண்டு, பொலன்னறுவையை தலைநகராக்கிக் கொண்டார்கள் என்பது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்தாகும்.

சோழர் ஆட்சியில் இலங்கை

அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கக் கூடிய சான்றுகளும் சிங்கள இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆகவே சோழர் ஆட்சிக்கு முன்னரே இலங்கை தமிழர் இடையே ஒரு வலுவான ராணுவ அரச மரபு தோன்றியுள்ளது.

அதன்பின்னர் ஏற்பட்ட சோழர்களின் ஆட்சி, பெரும்பாலும் வடகிழக்கு இலங்கை, தமிழர்களின் பராம்பரிய பிரதேசம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்த உதவியதாக காணப்படுகின்றது," என வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c29nrkn73j8o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் - சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா?

சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் - சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு அதுதான் காரணமா?

வட இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்

இலங்கையின் வடப் பகுதி ஊடாக, கி.பி 993ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன், நாட்டிற்குள் படையெடுத்து வந்து, இலங்கையின் வடப் பகுதியை கைப்பற்றினார்.

ராஜராஜ சோழனின் வெற்றியானது, வட இலங்கையின் வெற்றியாகவே கருதப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராஜராஜ சோழனை தொடர்ந்து, இலங்கைக்கு வருகைத் தந்தார் ராஜேந்திர சோழன்.

 

1012ம் ஆண்டு ராஜேந்திர சோழன், முழு இலங்கையையும் வெற்றிக் கொண்டு, இலங்கையை சோழர்களின் 9வது நிர்வாக மண்டலமாக தஞ்சையுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. அதாவது சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.

அதன்பின்னர், வள நாடு, நாடு, கூற்றம், அகரம், பீடாகை என பல்வேறு சிறு நிர்வாக பிரிவுகளை கொண்டிருந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை, ஐந்து வள நாடுகளாக பிரிக்கப்பட்டு சோழர்களினால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

வட இலங்கையில் மாதோட்டம், அருண்மொழிதேவ வள நாடு என்ற பெயரிலே ஆட்சி செய்யப்பட்டது.

சோழர்கள் இலங்கைக்கு வருகைத் தந்த சமயத்தில், இலங்கையின் தலைநகரமாக அநுராதபுரம் விளங்கியது.

எனினும், சோழர்கள் இலங்கையை கைப்பற்றியதன் பின்னர், பொலன்னறுவையை தமது தலைநகரமாக அறிவித்தனர்.

சோழர்களினால் தற்போதைய பொலன்னறுவை, ஜனநாதமங்களம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ஜனநாதமங்களம், தலைநகராக அறிவிக்கப்பட்டு, ஆட்சி தொடர்ந்துள்ளது.

இலங்கையில் சோழர் காலம்

சோழர்களின் ஆட்சியில் நிர்வாகம், தமிழ் மொழியில் இருந்துள்ளதுடன், இந்து மதம் அரச மதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சோழர்களின் அரசியல், பண்பாட்டு, ராணுவ நடவடிக்கைகள் பொலன்னறுவையை விடவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

பொலன்னறுவைக்கு அடுத்தப்படியாக, உப தலைநகர் என்ற அந்தஸ்த்தை திருகோணமலை பெற்றுக்கொண்டுள்ளமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

திருகோணமலையை சோழர்கள் உப தலைநகரமாக பிரகடனப்படுத்த, பிரதான காரணங்கள் இருந்துள்ளன.

குறிப்பாக தென் இலங்கையிலிருந்து ஏற்படக்கூடிய படையெடுப்புக்களை சோழர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்துள்ளது என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருந்துள்ளது.

''சோழர்களின் கடல்சார் கொள்கை, கடல்சார் வர்த்தக நடவடிக்கையில் மேற்கே இஸ்லாமியரை கட்டுப்படுத்துவதும், கிழக்கே தென் கிழக்காசிய நாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மிக முக்கியமானதொரு கேந்திர நிலையமாக காணப்பட்டதனால், அதற்கு திருகோணமலை, ஊர்காவற்துறை ஒரு முக்கிய தளங்களாக இருந்துள்ளது. அவர்களுடைய கல்வெட்டுக்களில் திருகோணமலை, ஊர்காவற்துறை ஆகியன முக்கிய இடங்களாக சொல்லப்படுகின்றன," என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே, கி.பி 993ம் ஆண்டு முதல் 1070ம் ஆண்டு வரையான காலம் சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்துள்ளது.

''முதல் முறையாக இலங்கையை ஒரு அந்நிய அரச வம்சம் கைப்பற்றி, ஆட்சி செய்தது என்று சொன்னால், சோழர்களின் ஆட்சியிலேயே அதனை காண முடிகின்றது என்று சொல்லலாம்," என அவர் கூறுகின்றார்.

சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் - சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா?

சோழர்களினால் இலங்கை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்?

பொலன்னறுவையிலிருந்து சோழர்களின் ஆட்சி மறைந்தாலும், தமிழ் பிரதேசங்களில் அவர்களுடைய ஆட்சி ஐரோப்பியர் காலம் வரை நிலவியமைக்கான நம்பகரமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை - கோமாரன்கடவல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் அது மிகவும் தெளிவாக உறுதிப்படுத்துவதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

சோழர்களின் ஆட்சி, தமிழர் பகுதியில் வாழ்ந்த தமிழர்களுடன் இணைந்ததாக இருந்திருக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் ஆட்சிக்கு பின்னர், அவர்களின் ஆதிக்கம் கிழக்கு இலங்கையில் இருந்துள்ளது.

குறித்த பகுதிகளில் சோழர்களினால் பல இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சோழர்களுடன் இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள், சோழர்களின் ஆட்சி முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் தமிழகம் செல்லாது இலங்கையிலேயே தங்கியுள்ளமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

இதனால், தமிழர் பகுதிகளில் மேலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

வட இலங்கையில் தமிழ் அரசு உருவாவதற்கு அஸ்திவாரம் இட்டவர்கள் சோழர்கள் என அவர் கூறுகின்றார்.

இந்த விடயங்கள் கல்வெட்டுக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

, பொலன்னறுவை பகுதி
 
படக்குறிப்பு,

பொலன்னறுவை பகுதி

தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள்

சோழர்களின் ஆட்சியின் பின்னர், இலங்கை தமிழர்கள் மத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

''நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எப்படி என்று சொன்னால், பக்தி இயக்கத்திற்கு பிறகு செல்வாக்கான இலங்கையில்; இந்து - பௌத்தம் என்ற சமய வேறுபாடு ஏற்பட்டது. அந்த சமய வேறுபாடு, இன முரண்பாடாக மாறியது. இந்த மாற்றத்திற்கு முன்னர் தமிழர்கள் பொதுவாக வடகிழக்கில் வாழ்ந்துக்கொண்டிருந்த அதேநேரம், தென் இலங்கையில், குறிப்பாக அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் பரவலாக வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. தமிழ் - சிங்கள முரண்பாடும், பௌத்த - இந்து முரண்பாடும் சிங்கள மக்களிடையே, தமிழர்களிடையே ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக தங்களது தனித்துவத்தை பேணிக் கொள்வதில் முனைப்பு பெற்றார்கள் என்பது தான் பேராசிரியர் பந்தநாதனுடைய கருத்தாகும்.” என்கிறார் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்.

மேலும், “இந்தொரு சூழ்நிலையிலே வடகிழக்கு இலங்கைக்கு அண்மையில் தமிழகம் இருந்தது மட்டும் அல்லாமல், மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கை முறையிலும் தமிழகத்தோடு, தமிழர்களுக்கு ஒற்றுமை காணப்பட்டமையினால், பல்லர் ஆட்சியை தொடர்ந்து, வடகிழக்கு இலங்கை தமக்கு பாதுகாப்பானது என கருதி செறிவாக வாழ்ந்தார்கள் என்பது தான் உண்மை.” என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பாக உணர்ந்த தமிழர்கள்

பொலன்னறுவை பகுதி
 
படக்குறிப்பு,

பொலன்னறுவை பகுதி

“நான் மாத்திரம் சொல்லவில்லை. கே.எம்.டி.சில்வா போன்றோர் சொல்கின்றார்கள். அவரே சொல்கின்றார், தென்னிந்தியாவிலிருந்து படையெடுப்புக்கள் நிகழும் போது, தமிழர்கள் வாழ்ந்த பிராந்தியம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது என்றும் அவர் கூறுகின்றார்;. அப்படி ஏற்பட்ட அந்த மாற்றத்தை பலமாக உறுதிப்படுத்தி, வடகிழக்கு இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்வதற்கான பலத்தை உருவாக்கியவர்கள் சோழர்கள். சோழர்களின் ஆட்சியின் விளைவு தான், வட இலங்கையின் தமிழர் பிரதேசங்களுக்கு ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது இப்போது கிடைத்து வரும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன" என அவர் கூறுகின்றார்.

இலங்கையில் இருக்கக்கூடிய இனப் பிரச்னை, சோழர்களின் வருகையுடன் தொடர்புப்படுகின்றதா?

இதுகுறித்து பேசிய பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், ''இல்லை, இனப் பிரச்னை என்பது சரியாக ஐரோப்பியர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றை படித்தால், இன முரண்பாடு, சமய முரண்பாடு என்பது மிக குறைவு. அரசியல் மேலாதிக்கம் பெறுவது தான் முக்கிய போராட்டமாக இருந்தது. பொலன்னறுவையை பார்த்தால், பொலன்னறுவை அரச வம்சத்தில் 40 வீதமானோர் தமிழர்கள். பொலன்னறுவை அரசியலை பார்த்தால், அரசியலும், அரசர்களும் 40 வீதமானோர் இந்துக்கள். பொலன்னறுவையில் பல கோவில்களை புனரமைப்பு செய்வதற்கும், கட்டுவதற்கும் சிங்கள மன்னர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். பொலன்னறுவை அரச சபையில் பௌத்த துறவிகளை விடவும், பிராமணர்கள் தான் மேலோங்கிக் காணப்பட்டார்கள். தென்னிலங்கையில் கோட்டை அரசை பார்த்தால் அவர்களுடைய பௌத்த பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக படிப்பிக்கப்பட்டது. பௌத்த துறவிகள் தமிழை நன்கறிந்திருந்தார்கள். பல இடங்களில் சிங்கள கல்வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் பக்கம் பக்கமாக காணப்படுகின்றது. பௌத்த ஆலயங்களில் இந்து விக்கிரகங்களை வைத்து வழிபடப்பட்டது.” என்கிறார் அவர்.

‘இன்றையை நிலையை வரலாற்றோடு ஒப்பிட முடியாது’

“வரலாற்றை வரலாறாக பார்க்காமல் சமகால அரசியல் நிலையிலிருந்து கடந்த கால நிலைமையை பார்க்கக்கூடாது. பௌத்தம் என்று சொன்னவுடன், அது சிங்கள மக்களுக்கு உரியது என பார்க்கக்கூடாது. அதை பண்பாட்டு எச்சமாக பார்க்க வேண்டும். ஒரு இனத்தின் அடையாளமாக பார்க்கக்கூடாது. எந்தவொரு மதமும் இன்னொரு நாட்டில் பரவும் போது, குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்காக பரவுவது இல்லை. இன்றைய நிலையில் பார்த்து, கடந்த கால தமிழ் சிங்கள உறவுகளையோ, பௌத்த இந்து மத உறவுகளையோ பார்ப்பது மிக தவறு. விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும், பாண்டிய நாட்டிலிருந்து தான் மணப் பெண்களை எடுத்துள்ளார்கள். திருமண உறவின் நம்பிக்கையில் பண்டியர்களே நண்பர்களாகவும், சோழர்களே எதிரியாகவும் பார்க்கின்ற ஒரு மரபு வரலாற்று இலக்கியங்களில் இருக்கின்றது. அதன் வெளிப்பாடு தான் பிற்கால ஆய்வுகளில் ஒரு தமிழ் - சிங்கள முரண்பாட்டிற்கு காரணம்" என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cyxvdw0xyreo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களை எதிர்த்து போராடிய ஈழத் தமிழர்கள் - சோழர்களின் படைகளில் சிங்கள வீரர்கள்

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையை ஆட்சி செய்த சோழர்களிடமிருந்து நாட்டை மீள கைப்பற்றுவதற்கு சிங்கள படைகளுடன் இணைந்து தமிழர்களும் படையெழுத்துள்ளனர்.

இலங்கையை கி.பி 993ம் ஆண்டு முதல் சுமார் 70 ஆண்டு காலம் சோழர்கள் ஆட்சி செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், இலங்கை மீது படையெடுத்து முதல் முதலில் இலங்கையின் வடப் பகுதி முதல் அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பகுதிகளையும் கைப்பற்றி தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளார்.

அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தி, பின்னரான காலத்தில் சோழர்கள் பொலன்னறுவையை தலைநகராக அறிவித்துள்ளனர்.

 

எனினும், முதலாம் ராஜராஜனை தொடர்ந்து, இலங்கைக்கு வருகைத் தந்த ராஜேந்திர சோழன், இலங்கையின் தென் பகுதியையும் கைப்பற்றி, தனது ஆட்சியை இலங்கை முழுவதும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இதன் பிரகாரம், சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் நிலைக்கொண்டுள்ளது.

ஆனால், ராஜேந்திர சோழனினால் இலங்கையை தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்

வட இலங்கையில் மாத்திரமே சோழர்களின் ஆட்சி முழுமையாக நிலவியுள்ளதுடன், தென் இலங்கையில் சோழர்களினால் அவ்வாறு ஆட்சியை முழுமையாக தொடர முடியவில்லை.

தென் இலங்கையில் சோழர்களின் ஆட்சி சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் தொடர்ந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சோழர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஆரம்பித்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அநுராதபுரத்தை தலைநகராக கொண்ட அரசை வெற்றிக் கொண்டதன் மூலம் இலங்கையின் வடப் பாகத்தை ஆட்சி செய்தார்கள் என்பதை கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக்களில் ''முரட்டொழில் சிங்கள ஈழ மண்டலம் முழுவதும்" முழு இலங்கையையும் தான் வெற்றிக் கொண்டதாக அவர் பெருமையாக பேசிக் கொள்கின்றார். அந்த வெற்றியின் பின்னர் தான் 1025ம் ஆண்டு தென்கிழக்காசியா மீது படையெடுத்த ஸ்ரீ விஜய அரசை வெற்றிக் கொள்கின்றார்.

அந்த படையெழுப்பிற்கு திருகோணமலை, ஊர்காவற்துறை போன்ற துறைமுகங்களிலிருந்தும் சோழர் படைகள் சென்றதாக சொல்லப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.

தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்

தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகின்றார்.

''தென்னிலங்கையில் இவர்களுடைய ஆதிக்கம் முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். ஏனென்றால், ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகள் இவர்களுடைய ஆட்சி நிலவிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவனுக்கு எதிரான கிளர்ச்சிகள் விஜயபாகு தலைமையில் தென்னிலங்கையில் உருவாகியுள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

விஜயபாகு படையில் தமிழர்கள்

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்

தென்னிலங்கையை ஆட்சி செய்த சோழர்களுக்கு எதிராக படையெழுத்த விஜயபாகு தலைமையிலான படைகளில் தமிழர்களும் இருந்துள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.

''விஜயபாகு படையில் சிங்கள படை வீரர்கள் மட்டும் அல்ல. தமிழ் படை வீரர்களும் சேர்ந்து சோழர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்கள். அதேநேரத்தில், சோழர் படையிலும் கூட சோழர்களோடு சிங்கள படை வீரர்களும் இணைந்து தான் போரிட்டுள்ளனர். ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற போராடிக் கொண்டார்கள்," என அவர் கூறுகின்றார்.

சோழர்களின் ஆட்சி 77 ஆண்டுகளும் இலங்கையில் நிலவியதா?

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்

சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் 77 ஆண்டு நிலவியது என்று சொல்ல முடியாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

''சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் 77 ஆண்டு காலம் நிலைத்தது என்று சொல்ல முடியாது. சில, பல ஆண்டுகள் வரை சோழர்களின் ஆட்சி தென்னிலங்கை வரை சென்றது உண்மை. ஆனால், அதற்கு எதிராக பல கிளர்ச்சிகள் ஏற்பட்ட போது, சோழர்களின் மேலாதிக்கம் தென்னிலங்கையில் குறைவு என்று தான் சொல்லலாம்." என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் புதுமத்தாவய என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, சோழர்களின் ஆட்சி இலங்கையின் தென் பகுதியிலும் தொடர்ந்தமையை உறுதிப்படுத்தி நிற்பதாக அவர் கூறுகின்றார்.

பொலன்னறுவை கால அரசியலில் சோழருடைய வகிபாகம், தென் இலங்கையில் இருந்ததை கூறுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் அதிகளவில் ஆட்சி செய்த சோழர் யார்?

இலங்கை, சோழர்கள், வரலாறு, பொன்னியின் செல்வன்

இலங்கையை அதிகளவில் ஆட்சி செய்த மன்னர் என்றால், அது ராஜேந்திர சோழன் என சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

எனினும், சோழர்கள் இலங்கையில் நேரடியாக ஆட்சியில் அமரவில்லை. மாறாக அவர்களின் பிரதிநிதிகளே இலங்;கையை ஆட்சி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்;.

''சோழர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் 9 மண்டலமாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த 9 மண்டலங்களில் ஒன்று தான் இலங்கை. இலங்கையை மும்மொழி சோழ மண்டலம் என்று பெயரிட்டு, அதற்கு பொறுப்பாக தங்களுடைய பிரதிநிதியை தான் இலங்கையில் ஆட்சி செய்ய விட்டார்கள்." என அவர் கூறுகின்றார்.

சோழ லங்கேஷ்வரன் என்பவரே, சோழர்களின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்துள்ளமை கந்தளாய் பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதற்கு பின்னரான காலத்திலும் சோழர்கள் வந்திருக்கக்கூடும் என கூறும் அவர், அதற்கான ஆதாரங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

''சுமார் 70 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி சென்ற போது, பல சோழ மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் இங்கு ஆட்சி செய்தார்கள்." என அவர் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cxxr3x8rej6o

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சோழர்கள் இலங்கையில் பௌத்த விஹாரைகளை நிறுவியது மத நல்லிணக்கமா? ராஜ தந்திரமா?

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை முழுவதும் சோழர்கள் சுமார் 77 வருடங்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்களின் அடையாளங்கள் பொலன்னறுவை மற்றும் அதன் சார்ந்த சில இடங்களில் மாத்திரமே இன்றும் காணப்படுகின்றன.

ஆனால், இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலப் பகுதியில் தமிழ் மொழியை அரச மொழியாகவும், இந்து மதத்தை அரச மதமாகவும் பின்பற்றியதுடன், அவர்கள் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளனர்.

சோழர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கியமைக்கான சான்று, அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விஹாரைகள் என்பது வரலாற்று ஆதாரங்களின் ஊடாக உறுதியாகின்றது.

இந்து ஆலயங்களை நிர்மாணித்ததை போன்றே பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும் சோழர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

 

இதனூடாக பௌத்த மதத்திற்கு சோழர்களினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை உறுதியாகின்றது.

சோழர்கள் தென்னிலங்கையை ஆட்சி புரிந்த நிலையில், தென்னிலங்கையில் இந்து ஆலயங்களை அவர்கள் நிர்மாணித்துள்ளார்களா என பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்திடம் வினவியது.

தென்னிலங்கையில் இந்து ஆலயங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது என அவர் பதிலளித்தார்.

சில ஆலயங்கள் அழிவடைந்துள்ளதாகவும், சில ஆலயங்கள் அழிவடைந்து மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் அதனை உறுதிப்படுத்தும் என கூறிய அவர், தென்னிலங்கையில் நிச்சயமாக ஆலயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

தெற்கிலிருந்து வடக்கிற்கு வருவதற்கு முன்னர், மணி ஓசைகள், பூஜைகள் நடந்தது போன்ற பல குறிப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், ஆலயங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

அநுராதபுரத்தில் 20ற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களின் இடிபாடுகளை தொல்பொருள் திணைக்களம் 1850லிருந்து 1990 வரை கண்டுபிடித்துள்ளது.

பொலன்னறுவை பகுதியிலுள்ள ஆலயங்கள், பிரித்தானிய காலத்திலிருந்து பாதுகாக்கப்பட்டமையினால், அவற்றை ஆவணப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

மேலும், ஆவணப்படுத்த முடியாத பல இந்து ஆலயங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமை என்பதையும் மறுக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்

"சோழர்கள் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தார்கள்"

சோழர்களின் தந்திரோபயத்தின் ஒரு கட்டமாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

''சோழர்களுடைய ஒரு தந்திரோபாயமும் அதற்கு ஒரு காரணம். சோழர் காலத்தில் இந்து மதத்தை போல பௌத்தத்திற்கும் இடம்கொடுத்தார்கள். இந்து மதம் அளவிற்கு இல்லாவிட்டாலும், பௌத்த மதத்தை அவர்கள் நிராகரிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியில் படையெடுக்கும் போது, இந்து, பௌத்த, சமணம் என்று பார்ப்பதில்லை. அதேநேரத்தில் அவர்கள் ஒரு ராஜதந்திரத்தை கடைபிடித்தார்கள்.

மேற்கே இஸ்லாமியர்களின் வணிகத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் மேற்கு பகுதிகளை படிப்படியாக வெற்றிக் கொள்ளும் போது, தென்கிழக்காசியாவில் ஸ்ரீவிஜய பேரரசு, வணிகத்தில் போட்டியாக வந்ததனால், அவர்களை சமாதானப்படுத்துவதற்கு அவர்களுடைய மதத்தின் பௌத்த ஆலயங்களை தமிழகத்தில் அமைத்துக்கொண்டார்கள். சூடாமணி விகாரை மிக பிரபல்யமானது. வரலாற்று பழைமை வாய்ந்த ஒரு ஆலயம். எப்படி ஒரு ஸ்ரீவிஜய அரசை திருப்திப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம். சமய நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

தமிழகத்தில் பௌத்த கிராமங்களை உருவாக்கினார்களோ, அதேபோல தான் கிழக்கு இலங்கையில் இன்று வெல்கம் விகாரை என்று அழைக்கப்படுகின்ற விகாரை சோழர் காலத்தில், ராஜராஜ பெரும்பள்ளி என்று தான் அழைக்கப்பட்டது. தெற்காசியாவில் தமிழ் பௌத்தம் சார்ந்த திராவிட கழமரபில் கட்டப்பட்ட ஒரு உண்ணதமான பௌத்த விகாரை என்றால், அது ராஜராஜ பெரும்பள்ளி என நான் நினைக்கின்றேன். அவர்களுடைய காலத்தில் தான் அது அமைக்கப்பட்டது.

கடல் சார் வாணிபத்தில் கைப்பற்றிய சொத்துகளை வைத்து பெரும்பாலும் சிவாலயங்களை அமைத்துக்கொண்டார்கள். அதுவும் தங்களுடைய ஆதிக்கம் நிலவிய இடங்களில் தான் அவர்கள் அதையும் அமைத்துக்கொண்டார்கள். தமிழகத்தில் எப்படி பெரும் கோவில்களை அமைத்தார்களோ, அதேபோல தான் இலங்கையிலும் பொலன்னறுவை, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் அவர்களுடைய ஆலயங்கள் அமைக்கப்பட்டன." என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்
 
படக்குறிப்பு,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்

பொலன்னறுவையில் மாத்திரம் சோழர் அடையாளங்களை பாதுகாப்பது ஏன்?

பிரித்தானியாவைச் சேர்ந்த பெல் என்பவர் 1850ம் ஆண்டு முதல் நீண்ட காலம் பொலன்னறுவையில் ஆகழாய்வு செய்ததன் மூலம், அங்கு 12ற்கு மேற்பட்ட சிவன், விஸ்ணு, விநாயகர் வழிபாட்டு தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் பிரித்தானிய ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பிரித்தானிய ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட சோழர்களின் அடையாளங்களை, இலங்கை தொல்லியல் திணைக்களம் இன்றும் பாதுகாப்பதன் மூலம் சோழர்களின் பண்பாட்டு சின்னங்களை பொலன்னறுவையில் மாத்திரம் பார்ப்பதில் ஆச்சரியம் கிடையாது என அவர் கூறுகின்றார்.

ஆனால், பொலன்னறுவைக்கு வெளியில் பதவிய, கந்தளாய், திருகோணமலை போன்ற பகுதிகளில் சோழர்களின் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் பற்றிய சான்றுகளை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பாக மாந்தோட்டத்தில் சோழர்களினால் இரு சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்ற போதிலும், அந்த ஆலயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேவேளை, சில சோழர் காலத்து ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டாலும், அதை சரிவர பாதுகாக்கவில்லை என்பதையும் கூற வேண்டும்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்

''குமரன்கடவை என்ற பழைய பெயரில் அழைக்கப்பட்ட கோமாரங்கடவல பகுதியில் ஒரு பெரிய ஆலயமொன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை ஓரளவிற்கு தொல்லியல் திணைக்களம் பாதுகாத்திருந்தாலும், அதை பற்றி தகவல்கள் யாருக்கும் தெரியாது. அந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 22 வரிகளில் சிறிய தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டதன் நோக்கம், அங்கிருந்த சிவாலயத்தோடு, முதல் முறையாக சக்திக்கும், சிவனுக்கும் தனித்தனி கோவில்கள் அமைத்த செய்தி அந்த கல்வெட்டில் சொல்லப்படுகின்றது." என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரித்தானிய ஆட்சியில் பொலன்னறுவையில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டமையே, இன்றும் அவை அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றமைக்கான காரணம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw9pl7jz1y9o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 12/4/2023 at 01:51, ஏராளன் said:

தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி

தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகின்றார்.

''தென்னிலங்கையில் இவர்களுடைய ஆதிக்கம் முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். ஏனென்றால், ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகள் இவர்களுடைய ஆட்சி நிலவிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவனுக்கு எதிரான கிளர்ச்சிகள் விஜயபாகு தலைமையில் தென்னிலங்கையில் உருவாகியுள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

சோழர் உருகுணையைக் கைப்பற்றியது 1017- 18இல்... விஜயபாகு பிறந்தது 1039 என்பது வரலாறு. 

39 இற்கும் 17-18 இற்கும் ஆன வேறுபாடு 11- 12 ஆண்டுகள். 

இது இப்படி இருக்க, இந்தாள் என்னடா என்டால், விஜயபாகு பால்குடியாக இருக்கும் போதே சோழர்களுக்கு எதிராக சண்டையிட்டான் என்று கட்டுக்கதையெல்லாம் சொல்லுறார்!

ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி கதைக்கிறாரா இல்லை அவர் சொன்னதை இந்த தில்லியின் ஊதுகுழலான பிபிசி திரித்துப் போடுகிறதா என்பது தெரியவில்லை. 

தமிழனுக்கு பட்டை அடிக்கிறது என்டால் ஆரியம் ஒற்றை வரியில் ஒன்றுசேர்கிறது என்பது வெள்ளிடமலை. 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Chola Kingdom in Sri Lanka: இலங்கையில் சோழர்கள் ஆட்சியின் எச்சம் என்ன?

 

இலங்கை முழுவதும் சோழர்கள் சுமார் 77 வருடங்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்களின் அடையாளங்கள் பொலன்னறுவையிலும், அதுசார்ந்த சில இடங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. அதற்கு காரணம் என்ன?

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.