Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                          ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய் 

                                                                                                                                                       - சுப. சோமசுந்தரம்

 

தலைப்பைத் தொட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். முன்னர் ஆனிப்பொன் என்றே எண்ணியிருந்தேன். தவறு சுட்டப்பேற்றேன்.
"மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்"
என்று பெரியாழ்வார் திருமொழியிலும்
"ஆணிப்பொன்னம்பலக் காட்சி" என்று திருவருட்பாவிலும் உயர் மாற்றுத் தங்கம் ஆணிப்பொன் எனக் குறிக்கப்படுகிறது. ஏன், "ஆணிப்பொன் கட்டில் உண்டு" என்ற வரி திரையிசையிலேயே ஏறியுள்ளது. ஆணி என்பதற்கு உயரிய என்ற பொருள் உண்டு. இப்பொருள் தொட்டது 'ஆணிப்பொன்'. 'ஆணித்தரமாய்' என்பது உறுதிப்பாடு பற்றியது; ஆணி அடித்தாற் போன்ற உறுதியாய்க் கொள்ளலாம்; இதன் வேர்ச்சொல் சுவற்றில் அடிக்கும் ஆணியாய் இருத்தல் வேண்டும். உயரிய பொருளை உறுதிப்பாட்டுடன் வள்ளுவன் சொல்வது இன்று நம் பேசுபொருள் என்பதால், 'ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்' என்பது நம் தலைப்பு.
             
                ஒரு பொருளைத் தேர்ந்து தெளிந்தபின் அதனை ஒரு கொள்கையாய் அறுதியிட்டுக் கூறும் உறுதி அனைவரிடமும் அமைவதில்லை. வள்ளுவப் பெருந்தகையிடம் உண்டு. பெரியார், மார்க்ஸ் போன்ற கொள்கைச் சான்றோரிடம் உண்டு. அவ்வுறுதி அடிப்படைவாதமோ பிடிவாதமோ அன்று. சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு. ஆய்ந்தறிந்த கருதுகோளை ஆணித்தரமாய்க் கூறுவது அக்கருத்து பற்றியது மட்டுமன்று; கொண்ட கொள்கையில் சமரசமில்லாத உறுதிப்பாடு பற்றிய பாடமாகவும் அமைவது. வள்ளுவன் வழிநின்று அவன் குறிக்கும் சிற்சில இடங்களைப் பகிர்வதன் மூலம் அப்பாடத்தைப் பயில்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
         
              'அறன் வலியுறுத்தல்' எனும் தலைப்பே பேசுகிறது - அறத்தை ஆணித்தரமாய் அடித்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று. அன்புடைமை, இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், ஈகை என எத்தனையோ அறங்களை வகுத்தாலும் அத்தனைக்கும் அடிப்படையாயும் தலையாயதாயும் வள்ளுவன் சுட்டுவது மனதளவிலும் குற்றமற்று இருத்தலேயாம்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற".  
        (குறள் 34; அறன் வலியுறுத்தல்)
அஃதாவது மனத்துக்கண் மாசு இன்றி வாழ்தலே அனைத்து அறமும் ஆவது; ஏனையவை ஆரவாரம் மிக்கவை. இதன் பொருள் ஏனைய அறங்கள் தேவையில்லை என்பதன்று. மனதில் அழுக்காறு (பொறாமை), வெகுளி (கோபம்) போன்ற மாசுடன் செயல்படுத்தும் எந்த ஒரு அறச்செயலும் அறமன்று; ஆரவாரம் மிக்கது என்பதே.
            
                இல்வாழ்க்கையின் மேன்மையைப் பேச வந்தவன் அறம் சார்ந்த இல்வாழ்க்கையை விட மேலான வாழ்க்கை முறை உண்டோ என்று விடை தெரிந்த ஐயவினாவாகக் குறித்தல் சிறப்பு.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்"
                 (குறள் 46; இல்வாழ்க்கை)
இல்வாழ்வின் ஒன்றிணைந்த பகுதியாய் அறத்தினை அறிவிக்கும் முகமாய்
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை" என்று குறள் 49 ல் மீண்டும் வலியுறுத்துவது கூர்ந்து நோக்கத்தக்கது. ஆதலினால்தானே அது இல்லறம் !
            
                ஒருவனது மேன்மையான வாழ்வில் மனையாளின் பங்கு அளப்பரியது எனச் சொல்ல வேண்டி, "ஒருவனது மனையாள் மேன்மை பொருந்தியவள் எனில் அவனது வாழ்வில் இல்லாத சிறப்பு என்று உலகில் ஏதேனும் உண்டா ? அவளிடம் மேன்மை இல்லை எனில் அவனுக்கு உள்ள சிறப்பு என்று ஏதேனும் உண்டா ?" என்று மீண்டும் விடையறிந்த வினாவாக வலியுறுத்துகிறான் வள்ளுவன்.
"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை"
               (குறள் 53; வாழ்க்கைத் துணைநலம்).
ஆணுக்கு வாழ்க்கைத் துணைநலம் பற்றிப் பேசியவன் பெண்ணுக்குச் சொல்லவில்லையே என்றால், அது வரையறுக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகத்தில் எழுதப்பட்டது; வள்ளுவன் உட்பட எந்த ஒரு படைப்பாளியும் தன் காலத்தை மிகவும் கடந்து நிற்க இயலாது என்றே கொள்ள வேண்டும்.
             
             இல்லறத்தில் ஒருவனுக்கு அமைப்பு என்பது மனையாளுக்குப் பின் மக்கட்பேறுதானே ! "அறிவாற்றல் மிக்க மக்கட்பேற்றை விட ஒருவன் பெறத்தக்க பேறு யாமறிந்த வரை வேறில்லை" என்று உரத்து உறுதியாய் ஒலிப்பது குறளோனின் குரல்.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"
                (குறள் 61; மக்கட்பேறு)
          
              அறம் பேசுபவன் ஈகை எனும் அறத்தினைத் தவிர்க்கக் கூடுமா என்ன ? ஈகை பேச வந்த வள்ளுவன் அதன் சிறப்புகளைக் கூறும் முன் எடுத்து எடுப்பிலேயே அதனை வரையறுக்கிறான். "இல்லார்க்குத் தருவதே ஈகை; இருப்போர்க்குத் தருவது பயனை எதிர்பார்த்துக் கொடுப்பது" என்று ஆணி அடிக்கிறான்.
"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து"
                            (குறள் 221; ஈகை).

                வாய்மையின் பெருமையுணர்த்த வந்தவன் அதைவிடச் சிறந்த பண்பு தான் மெய்யாய் அறிந்த வரை வேறில்லை என்று பொட்டில் அறைந்து சொல்கிறான்.
"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற"
                    (குறள் 300; வாய்மை)

              அறன் வலியுறுத்தல் மட்டுமன்றி பொருள் வலியுறுத்தலிலும் சளைத்தவன் அல்லன் வள்ளுவன். "கண்ணின் பயன் கற்றலேயாம்; கற்றல் இல்லாத கண்கள் முகத்தில் இரண்டு புண்களே" என்று முகத்திற்கு நேரே சொல்கிறானோ !
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"
                      (குறள் 393; கல்வி).
மேலும், "கல்வி ஒன்றே அழியாத செல்வம்; மற்ற எவையும் செல்வமாகா" என்று செல்வத்திற்கு முன்னுரையும் முடிவுரையும் எழுதுகிறான்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை"
                            (குறள் 400; கல்வி)

                இப்பூவுலகில் உழவின் சிறப்பை எடுத்தியம்ப வந்தவன் ஏனைய தொழில் அனைத்தும் இரண்டாவது பட்சம் தான் என்று அறைவதன் மூலம் உழவுத் தொழிலின் இன்றியமையாமையைச் சுட்டுகிறான். "எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என உடலின் உறுப்புகள் அனைத்திலும் தலையை முன்னிலைப்படுத்துவது போல, மற்ற தொழில் முனைவோர் உழவனைத் தொழுது உண்டு செல்வோர் என்கிறான். "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்னும் பாரதியின் ஆதங்கம் முன்னோர் மொழியாய் வள்ளுவனிடத்தில் ஒலிக்கிறதோ என்னவோ ! ஏனைய தொழில் முனைவோரைக் குறைத்து மதிப்பிடுவதாகுமே என்று நம்மிடம் உள்ள தயக்கமோ பாசாங்கோ வள்ளுவனிடத்தில் இல்லை. தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசித் திரியும் வேடிக்கை மனிதர் நாம்; சமரசமில்லாத் துலாக்கோல் வள்ளுவன்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
                     (குறள் 1033; உழவு).

            பிரிவாற்றாமையினால் வள்ளுவன் காட்டும் தலைவி கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்த் தனது நிலைப்பாட்டில் நிற்கக் காணலாம். பொதுவாக பிரிவாற்றாமைத் தலைவி பசலை கொள்வதும், உடல் மெலிந்து கைவளை பிறரறிய நிலத்தில் கழன்று விழுவதுமாய் வாழ்வதும் இலக்கிய மரபு. பிரிந்தால் வாழ மாட்டேன் எனும் நிலைப்பாடு இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணக் கிடைப்பது. வள்ளுவத்தில் கிடைக்கிறது. "நான்தான் குறுகிய காலத்தில் திரும்பி வந்து விடுவேனே !" என்று தலைவன் எவ்வளவோ தேற்றியும் தலைவி தேறவில்லை. பிரியும் அந்நாளும் வந்து தொலைக்கிறது. உற்றார் உறவினரிடம் விடை பெற்றவன் இறுதியாக அவளிடம் வருகிறான். அவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் பேசுகிறாள், "நீ மனதை மாற்றிக்கொண்டு செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். மற்றபடி 'சீக்கிரம் வந்து விடுவேன்' போன்ற உன் வல்வரவு பற்றிய செய்தியை நீ வரும்போது வாழப் போகிறவர்களிடம் சொல் !" -  நெத்தியடி.
இங்கு நல்வரவிற்கு எதிர்ச்சொல்லாய் வல்வரவு எனும் சொல்லாக்கம் வள்ளுவனுக்கே உரியது போலும். தலைவன் மீண்டு வருவது எங்ஙனம் வல்வரவாகும் ? அவள் இல்லாத வீடு இழவு வீடுதானே !
"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை"
                   (குறள் 1151; பிரிவாற்றாமை)

            பொய்யாமொழியானின் ஆணிப்பொன்னான கருத்துச்செறிவும் சிந்தனைத் தெளிவும் ஆணித்தரமான உறுதிப்பாட்டுடன் தெறிக்கும் விதத்திற்கு மேற்கண்டவை சிற்சில இடங்கள். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம் ! இங்கு கைப்பிடியளவு பதம் கண்டோமே ! அவன் படைத்த அனைத்தையும் அள்ளிப் பருகி ஆனந்தம் கொள்வது இதுகாறும் வாசித்தோரின் விருப்பமும், ஊருக்குச் சொல்ல ஆசைப்பட்டு இதனை எழுதியவனின் கடமையும். 

 

Edited by சுப.சோமசுந்தரம்

அருமையான பதிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.