Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அவள் எனக்கு கிடைத்த வரம்': கார்ல் மார்க்ஸை சாதனையாளன் ஆக்கிய ஜென்னியின் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மே 2023
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்"

- காதல் மனைவி ஜென்னியின் மறைவுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கடிதத்தில் இடம் பெற்ற உருக்கமான வாசகங்கள் இவை.

ஆம், அது உண்மைதான். தன் வாழ்க்கையில் பூரணத்துவம் கண்ட, நிறை மனிதர்களால் மட்டும் தானே இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியும். மானுட சமூகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸுக்கு அத்தகைய முழுமையை தந்தவர் ஜென்னி. அள்ளஅள்ள குறையாத அன்பும், எத்தகைய நெருக்கடியிலும் விலகாத நேசமும் தந்து மார்க்சின் சிந்தையிலும் உணர்விலும் இரண்டறக் கலந்தவர். மார்க்சின் தனிப்பட்ட வாழ்க்கையை முழுமையாக்கி சமூகம் குறித்த சிந்தனையை கூர் தீட்டிக் கொள்ள உறுதுணையாக இருந்தவர் ஜென்னி.

பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஜென்னி

காரல் மார்க்ஸ் - ஜென்னியின் காதல் வாழ்க்கை நம்மையெல்லாம் உருக வைத்த உலக சினிமாக்களை எல்லாம் விஞ்சியது. இப்படியும் கூட ஒரு காதல் இருக்குமா? காதலர்கள் இருப்பார்களா? என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் காதல் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் அவர்கள்.

சமூக, பொருளாதார அந்தஸ்து, இனம், கல்வி, தோற்றம் என அனைத்த்திலுமே இரு துருவங்களாக திகழ்ந்த கார்ல் மார்க்சுக்கும் ஜென்னிக்கும் இடையே காதல் பற்றியது, அந்த காதல் திருமணத்தில் கைகூடியது, சமூகக் கட்டமைப்பையே மாற்றக்கூடிய சிந்தனைகளால் பல முறை நாடு விட்டு நாடு குடும்பமே துரத்தி அடிக்கப்பட்டது, வறுமையின் கோரப் பிடிக்கு பெற்ற குழந்தைகளையே பலி கொடுத்தது, இறந்த மனைவியின் முகத்தைக் கூட காண முடியாத தீரா வலியை மார்க்சுக்கு தந்தது என அவர்களது வாழ்க்கை முழுவதுமே நம்ப முடியாத தருணங்கள் நிரம்பியது.

இன்றைய ஜெர்மனியிலே(அன்றைய பிரஷ்யா) பிரபுக்கள் குடும்பத்தில் செல்வச் சீமாட்டியாக பிறந்தவர் ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன். கல்வியறிவும், நற்குணங்களும் நிரம்பிய பேரழகியாக திகழ்ந்த ஜென்னியை மணக்க அன்றைய பிரஷ்யாவின் பிரபுக்களும், பெரும் செல்வந்தர்களும் போட்டியிட்டதாக அவரது சுயசரிதையை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரு துருவங்கள் இணைந்தது எப்படி?

ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் புறந்தள்ளிவிட்டு, பக்கத்து வீட்டில் வசித்த சிறு வயது தோழனான கார்ல் மார்க்சை தனது வாழ்க்கைத் துணையாக ஜென்னி தேர்ந்தெடுந்தார். ஜென்னி ஜெர்மானியர் என்றால் கார்ல் மார்க்ஸ் பிறப்பால் யூதர். மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜென்னி மென்மையான, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர் என்றால் இள வயது கார்ல் மார்க்சோ பிடிவாதம் கொண்ட, கரடுமுரடான நபராக இருந்தார். எதிர்காலத்தில் மிகச்சிறந்த அறிஞனாவதற்கான எந்தவொரு அறிகுறியும் அப்போது அவரிடம் இல்லை. வயதிலும் ஜென்னியை விட 4 வயது இளையவர் மார்க்ஸ்.

இவ்வாறு மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட இருவருக்கும் காதல் பற்றியது என்றால் அது ஆச்சர்யப்படத்தக்க விஷயம் தானே? வாசிக்கும் பழக்கம் இருவரையும் நெருங்கிடச் செய்தது என்றால், மார்க்சிடம் இருந்த உறுதியான மனப்பாங்கும், எதிரில் இருக்கும் எவரையும் ஆட்கொள்ளும் திறனும், ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுக்கும் தன்மையுமே ஜென்னியைக் கவர்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி இள வயது காதல்

சுயமாக சம்பாதிக்கும் வரை விவாகம் செய்வதில்லை என்று தீர்மானித்த கார்ல் மார்க்ஸ், அதற்காக பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு உயர்கல்வி பயிலச் சென்றுவிட்டார். அவர் படிப்பை முடித்து வேலை தேடிக் கொள்ளும் வரை ஜென்னி என்ன செய்வது? காத்திருக்க வேண்டியதுதான்! ஜென்னியும் அதைத் தான் செய்தாள். அதுவும், ஒரு மாதமோ, ஓராண்டோ அல்ல, ஏழு ஆண்டுகள். ஜென்னி மகா பொறுமைசாலி. இந்த கால கட்டத்தில் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் அவர்களது ஆழமான அன்பை வெளிப்படுத்தின. கார்ல் மார்க்ஸ் எழுதிய கவிதைகள் ஜென்னி மீது அவருக்கிருந்த அளவிலா அன்பை வெளிப்படுத்துபவையாக இருந்தன.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வழக்கறிஞருக்குப் படிக்கப் போன மார்க்சோ தத்துவவியலில் நாட்டம் கொண்டார். 23 வயதிலேயே முனைவர் பட்டம் பெற்றுவிட்ட மார்க்ஸ், அதனை வாழ்நாளில் ஒருமுறை கூட பயன்படுத்தியதே கிடையாது. அதற்கு ஒரு மதிப்பு ஒன்று என்று கூட அவர் கிஞ்சித்தும் எண்ணியதுகூட கிடையாது.

கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காதலுக்காக பெரும் விலை கொடுத்த ஜென்னி

வளமான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, பெரும் செல்வந்தர்களை எல்லாம் புறக்கணித்து, கார்ல் மார்க்ஸ் மீது பேரன்பு கொண்ட ஜென்னி தன் காதலுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி வந்தது. ஜென்னி குடும்பத்தினர் கொண்டிருந்த கனவுகளுக்கு மாறாக ஜென்னி - கார்ல் மார்க்ஸ் திருமணம் எளிமையாகவே நடந்தேறியது. குடும்ப வாழ்க்கையும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் கார்ல் மார்க்ஸ் - ஜென்னி குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.

பொருளாதார கொள்கைகளிலே நிபுணத்துவம் பெற்று, தொழிலாளர் மேன்மைக்காக பொதுவுடைமை சித்தாந்தத்தை வகுத்தளித்த கார்ல் மார்க்ஸ் தனது சொந்த குடும்பத்தின் நிதி மேலாண்மையில் அவ்வளவு சிறப்பானவராக இருக்கவில்லை. இதனால், குடும்பத்தில் வறுமை நிலையைத் தவிர்க்க முடியவில்லை.

போதாக்குறைக்கு, அன்றைய ஐரோப்பாவில் நிலவிய மன்னராட்சிக்கு எதிரான கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் அவரை ஓரிடத்தில் நிலையாக இருக்க விடாமல் அலைக்கழித்தன. பிரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன் என ஒவ்வொரு நாடாக குடும்பத்துடன் அவர் அவ்வப்போது இடம்பெயர நேரிட்டது. ஒரு கட்டத்தில் அவர் பிறந்த பிரஷ்யாவே அவரது குடியுரிமையை ரத்து செய்ய, நாடற்ற ஏதிலி என்னும் நிலைக்கும் கார்ல் மார்க்ஸ் ஆளானார்.

வறுமை, நோய்க்கு 4 குழந்தைகளைப் பறிகொடுத்த ஜென்னி

வறுமை, தொடர்ச்சியான நாடு விட்டு நாடு இடப்பெயர்வு, சுகாதாரமற்ற சிறிய வீட்டில் வாசம், வீட்டைச் சுற்றிலும் கடன் சுமை என வாழ்க்கை நெடுக புயல் அடித்தாலும் கூட கார்ல் மார்க்ஸ் - ஜென்னி இருவருக்கும் இடையிலான காதல் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை. "காதல் மற்றும் மூலதனம்: கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ் மற்றும் புரட்சியின் தோற்றம்" என்ற தனது நூலில் எழுத்தாளர் மேரி கேபிரியேல், கர்ப்பிணியாக இருந்த போதிலும் மார்க்சின் பணிகளுக்காக ஜென்னி எவ்வாறு கஷ்டப்பட்டு பயணங்கள் மேற்கொண்டு நிதி திரட்டினார் என்பதை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி தம்பதியருக்கு 7 குழந்தைகள் பிறந்த போதிலும் அதில் 4 குழந்தைகளை வறுமையும், நோயும் எடுத்துக் கொண்டுவிட்டன. குழந்தை குடிப்பதற்குக் கொடுக்க பால் கூட இல்லாத சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு எங்கே போவது? 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகளை பறிகொடுத்துவிட்ட மார்க்ஸ் - ஜென்னி தம்பதியர் 3 பெண் குழந்தைகளை மட்டுமே வளர்த்து பெரியவர்களாக்க முடிந்தது.

கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,WIKIMEDIA COMMON

 
படக்குறிப்பு,

ஆருயிர் நண்பர் ஏங்கல்ஸ் மற்றும் தனது 3 பெண் குழந்தைகளுடன் கார்ல் மார்க்ஸ்

1850-ம் ஆண்டு மே 20-ம் தேதி வடக்கு லண்டனில் குடியிருந்த போது குடும்ப நண்பர் யோஸிப் வெய்டெமையரிடம் உதவி கேட்டு ஜென்னி எழுதிய கடிதத்தில், "நான்காவதாக பிறந்த குழந்தை இந்த உலகத்திற்கு வந்த நாள் முதல் ஒரு நாள் கூட 2, 3 மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக உறங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பின் தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது" என்ற ஜென்னி மார்க்ஸின் வரிகளே போதும் அவர்களது குடும்ப நிலையை உரைக்க.

மற்றொரு கடிதத்தில், "பிறக்கும் போது அந்தக் குழந்தைக்கு தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி வாங்குவது கூட மிகவும் கஷ்டமாகிப் போனது" என்று தனது இரண்டாவது குழந்தை இறந்ததைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் ஜென்னி.

ஜென்னி அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளரும் கூட

கண் முன்னே குழந்தைகள் உயிருக்குப் போராடும் கொடுமையை ஒரு தாயாக அனுபவித்த போதிலும் கூட கார்ல் மார்க்ஸ் மீதான ஜென்னியின் அன்பு துளியளவில் குறைந்ததில்லை. கார்ல் மார்க்ஸ் எதற்கும் கலங்காமல் தடையின்றி தொடர்ந்து இயங்க ஜென்னி உறுதுணையாக இருந்தார்.

குறிப்பாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது போல் யாராலும் செய்ய முடியாத ஒன்றை ஜென்னி மட்டுமே செய்தார். அது அவரது கணவர் மார்க்ஸின் கையெழுத்தை புரிந்து கொள்வது.

மார்க்ஸின் கையெழுத்தை புரிந்து கொள்ள முடியாமல் பல பதிப்பகங்களும், பத்திரிகை செய்தி ஆசிரியர்களும் தவித்தது உண்டு. ஆகவே, மார்க்ஸின் எழுத்துகளை முதலில் ஜென்னி படித்து பின்னர் தன் கைப்பட எழுதி பதிப்பகங்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.

ஆனால், மார்க்ஸின் மொழிபெயர்ப்பாளர் என்கிற அளவில் ஜென்னியை சுருக்கிப் பார்ப்பது, வரலாற்றில் அவரது முக்கியத்துவதை குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும். அது அவருக்குச் செய்யும் அநீதியாகவே இருக்கும்.

ஏனெனில், ஜென்னி ஓர் அரசியல் சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளரும் கூட. கணவர் மார்க்சுடன் அரசியல்வாதிகள், தத்துவ அறிஞர்களுடன் ஜென்னியும் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டுள்ளார்.

கார்ல் மார்க்சும், அவரது ஆருயிர் நண்பர் பிரடெரிக் ஏங்கல்சும் இணைந்து 1847-ம் ஆண்டு நிறுவிய புரட்சிகர இயக்கமான கம்யூனிஸ்ட் லீக்கில் முதல் உறுப்பினர் ஜென்னி மார்க்ஸ்தான். அதுவே பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது.

கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,WIKIMEDIA COMMON

கார்ல் மார்க்சுக்கு பெரும்புகழ் சேர்த்த மூலதனம்

கணவர் மார்க்ஸின் கரங்களை வலுப்படுத்த, தனிப்பட்ட முறையில் ஜென்னி செய்த தியாகங்களை பல வரலாற்றறிஞர்கள் எடுத்துக் காட்டுகிற்ர்கள். அன்றைய பிரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரால், ஆடம்பரமும் செல்வமும் கொண்ட வாழ்க்கையை எளிதில் பெற்றிருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக போராட தனது வாழ்க்கையையே ஜென்னி அர்ப்பணித்துக் கொண்டார்.

கார்ல் மார்க்சுக்கு பெரும் புகழ் சேர்த்த, மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர் என்று இருபதாம் நூற்றாண்டில் அவர் கொண்டாடப்படக் காரணமான "கேபிட்டல்" நூலின் முதல் தொகுதி 1867-ம் ஆண்டு வெளியான போது பெரியளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டை வடிவமைத்ததில் மார்க்ஸின் கொள்கைகளுக்கு பெரும் பங்கு உண்டு. லெனின், ஸ்டாலின், மாவோ என பல தலைவர்களைத் தந்தது அவரது சிந்தாந்தம்தான். இன்னும் உலகம் முழுவதும் பல தலைவர்கள், சிந்தனையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் கார்ல் மார்க்ஸ் வசீகரித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒருவேளை ஜென்னியை கார்ல் மார்க்ஸ் சந்திக்காமல் போயிருந்தால் இவையெல்லாம் நடக்காமலே கூட போயிருக்கலாம். அந்த அளவுக்கு கார்ல் மார்க்ஸின சிந்தனையிலும், உணர்விலும் இரண்டறக் கலந்துவிட்டவராகவே ஜென்னி இருந்துள்ளார்.

"ஜென்னி இல்லையெனில் சாமானியனாகவே இருந்திருப்பேன்"

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி காதல் மண வாழ்க்கை 38 ஆண்டுகள் நீடித்தது. மார்க்சுக்காக பல துன்பங்களையும் துயரங்களையும் ஏற்றுக் கொண்ட ஜென்னி, இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு நோயுற்று படுத்த படுக்கையாக கிடந்தார். ஜென்னி ஓர் அறையிலும், மார்க்ஸ் மற்றொரு அறையிலும் பிரிந்து இருந்தனர். 1881-ம் ஆண்டு ஜென்னி இறந்து, கல்லறையில் அடக்கம் செய்யப்படும் வரையிலும் கூட அவரது உடலைப் பார்க்க மார்க்ஸ் அனுமதிக்கப்படவில்லை. காரணம், மார்க்ஸை நோய்த்தொற்று பீடித்துவிடக் கூடும் என்ற அச்சமே.

அந்த நேரத்தில்தான், உயிருக்கு உயிராக நேசித்த மனைவி ஜென்னிக்கு மார்க்ஸ் இறுதியஞ்சலி கடிதத்தை எழுதுகிறார். அந்த கடிதத்தில்தான் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரிகளை அவர் எழுதியுள்ளார்.

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்"

- கார்ல் மார்க்ஸின் இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவரது வாழ்க்கையைப் படிக்கும் யாருக்கும் புரியும்.

அது காதலின் சின்னமும்தான்!

ஜென்னி இறந்த 2 ஆண்டுகளில் கார்ல் மார்க்ஸூம் மறைந்தார். இருவரது உடலும் வடக்கு லண்டனில் ஹைகேட் சிமெட்டரியில் அருகருகே புதைக்கப்பட்டுள்ளன.

அந்த கல்லறையில் கார்ல் மார்க்ஸின் தலைச் சிற்பம் வடிக்கப்பட்டு, அதில் அவரது பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் -ஜென்னி காதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் புனிதப் பயணம் மேற்கொள்வது போன்றே அந்த கல்லறைக்கு வருகை தருகின்றனர். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும், கார்ல் மார்க்சுக்கு அருகே மீளாத் துயில் கொண்டுள்ள ஜென்னியும் சிறப்பிக்கப்பட வேண்டியவர், கொண்டாடப்பட வேண்டியவர் என்று.

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி ஆகிய இருவரும் பொதுவுடைமை சிந்தாந்தத்தின் சின்னம் மட்டுமல்ல, காதலின் அழியா சின்னமாகவும் வாழ்ந்து மறைந்தவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

https://www.bbc.com/tamil/articles/c51lg62v2lyo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.