Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோ ஃபர்ஸ்ட்: நடுத்தர மக்களை வானில் பறக்க வைத்த இந்தியாவின் பட்ஜெட் விமான சேவை வீழ்ந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோ ஃபர்ஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆயிரக்கணக்கான பயணிகளின் வருகையால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் உள்ள ‘கோ ஃபர்ஸ்ட்’ (Go First) நிறுவனத்தின் கவுன்டர்கள் கடந்த சில தினங்களாக வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இந்த வாரத்தில் திவால் நடைமுறைக்கு கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மே 15ஆம் தேதி வரை பயணச் சீட்டு விற்பனையை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாக பொது விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விமான சேவை ரத்து செய்யப்பட்ட நாட்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தவர்களின் பயணக் கட்டணம் அவர்களுக்கு திருப்பித் தரப்படும் என்று நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

"ஆனால், பணம் யாருக்கு வேணும்? திட்டமிட்டப்படி தங்களால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதே?" என்று ஆதங்கப்படும் பயணிகள், கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் ஏஜென்ட்களை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

 

என்ன காரணம்?

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்கியதில் முக்கியப் பங்காற்றி, பட்ஜெட் விமான சேவை நிறுவனம் என்ற நற்பெயரை வாங்கிய கோ ஃபர்ஸ்ட், தாமாகவே முன் வந்து திவால் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதன் எதிரொலியே, அதன் விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம்.

டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள திவால் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தவறான நிதி நிர்வாகத்தின் காரணமாக எங்கள் நிறுவனம் தற்போது நெருக்கடியைச் சந்திக்கவி்ல்லை. மாறாக எங்களின் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரித்து வழங்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிராட் அண்ட் விட்னி நிறுவனம்தான் இத்தகைய துயர நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

அதாவது, “பிராட் அண்ட் விட்னி நிறுவனம் எங்களுக்கு வழங்கியுள்ள இன்ஜின்கள் தொடர்ந்து பழுதாகிக் கொண்டே வருவதால், திட்டமிட்டப்படி இயக்க முடியாமல் தரையிறக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகத்தான் எங்கள் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது,” என்று கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் விமான சேவை

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

டெல்லி ஏர்போர்ட்டில் ஆட்கள் யாரும் இன்றி காணப்படும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் கவுன்டர்கள்

இன்ஜின் கோளாறு காரணமாக, தங்களது நிறுவனத்தின் பாதிக்கும் மேலான விமானங்களை (25 விமானங்கள்) இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 1.3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோ ஃபர்ஸ்ட், தீர்ப்பாயத்தில் வேதனையுடன் கூறியுள்ளது.

மேலும், தீர்ப்பாயத்தின் உத்தரவுகளையும் பிராட் அண்ட் விட்னி நிறுவனம் மதித்து செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள கோ ஃபர்ஸ்ட், கடந்த மாதம் 27ஆம் தேதிக்குள் (ஏப்ரல் 27) குறைந்தபட்சம் 10 பழுது நீக்கப்பட்ட இன்ஜின்களையாவது வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிராட் அண்ட் விட்னி நிறைவேற்றவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்குவதாகவும், இந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் மேற்கொண்டு இதுகுறித்து கருத்து கூற இயலாது என்றும் கோ ஃபர்ஸ்டின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ரத்தின சுருக்கமாக பதிலளித்துள்ளது பிராட் அண்ட் விட்னி.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மே மாதம் மொத்தம் 6,225 விமான சேவைகளை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும், இது 1.1 மில்லியனுக்கும் அதிகமான இருக்கைகளுக்குச் சமம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனமான சிரியம்.

“இன்ஜின், உதிரி பாகங்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான நிறுவனம் ஒன்று இதுபோன்று நெருக்கடியைச் சந்திப்பது இதுவே முதல்முறை,” என்கிறார் விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான மார்ட்டினின் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்ட்டின்.

கோ ஃபர்ஸ்ட் விமான சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலைமை செயல் அதிகாரி என்ன சொல்கிறார்?

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறும் திட்டம் எதுவுமில்லை என்று இதை நிர்வகித்து வரும் வாடியா குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், “தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திவால் நடவடிக்கைகள், நிறுவனத்தை புத்துயிர் பெறச் செய்வதற்காகத்தான். நிறுவனத்தை விற்கும் நோக்கம் எல்லாம் எங்களுக்கு இல்லை” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஐந்தாவது பெரிய விமான சேவை நிறுவனமான கோ ஃபர்ஸ்டின் தலைமை செயல் அதிகாரி கௌசிக் கோனா.

மூன்று வருடங்களாகவே பிரச்னைதான்!

விமான சேவைகளை ரத்து செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், தங்களது இந்த மோசமான நிலைக்கு அமெரிக்க நிறுவனமான பிராட் அண்ட் விட்னியை கைக்காட்டி உள்ளது. ஆனால், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள இந்தப் பஞ்சாயத்து, 2020ஆம் ஆண்டில் இருந்தே புகைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சுமார் 90% விமானங்கள் A329neos வகையைச் சேர்ந்தவை. இந்த விமானங்கள் அனைத்தும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்தின் இன்ஜின்களை கொண்டே இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பழுதாகும் இன்ஜின்களை சரிசெய்வதில் ஏற்பட்ட காலதாமதம், இன்ஜினின் உதிரிபாகங்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காததன் காரணமாக, 2020இல் இருந்தே திட்டமிட்டப்படி விமானங்களை இயக்க முடியாத நெருக்கடியை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சந்தித்து வந்துள்ளது.

இதன் விளைவாக, பல ஆண்டுகள் சீரான வளர்ச்சியை எட்டி வந்த இந்நிறுவனம், 2020இல் இருந்து வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கியது. கொரோனா பொதுமுடக்கம் (Lockdown) உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசிடம் இருந்து கிடைத்த நிதியுதவி, வாடியா குழுமம் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு 32 பில்லியன் ரூபாய் அளவுக்கு முதலீடு என பொருளாதார ஒத்துழைப்புகள் கிடைத்து வந்தாலும், மூன்றாண்டுக்கு முன்பு தொடங்கிய கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் வீழ்ச்சி இன்று திவால் நோட்டீஸ் அளிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

கோ ஃபர்ஸ்ட் விமான சேவை

பட மூலாதாரம்,REUTERS

இந்த வீழ்ச்சியின் விளைவாக, விமானங்களை குத்தகைக்கு அளித்திருந்த நிறுவனங்கள், அவற்றுக்கான வாடகை தொகையை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சரிவர வழங்கவில்லை எனக் கூறி, விமானங்களை திரும்பப் பெறும் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.

விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் எண்ணெய் நிறுவனங்களும் அதற்கான தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டுமென கறாராகக் கூறிவிட்டதால், சமயத்தில் விமானங்களுக்கு அன்றாடம் எரிபொருள்கூட நிரப்ப முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வந்துள்ளது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்.

இனி என்னவாகும் உள்ளூர் விமான போக்குவரத்து சேவை?

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சரிவு, விமான போக்குவரத்துத் துறையில் எந்த அளவுக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

நிகழாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 37.5 மில்லியன் பயணிகள் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 51.7 % அதிகமாகும்.

2030ஆம் ஆண்டில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 350 மில்லியன் அளவுக்கு அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாக, விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனமான CAPA மதிப்பிட்டுள்ளது.

இந்த அளவுக்கு உள்நாட்டு விமான சேவை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கோ ஃபர்ஸ்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் வீழ்ச்சி இந்தத் துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோ ஃபர்ஸட் நிறுவனம் சந்தித்து வரும் பாதகங்கள், அதன் சக போட்டியாளர்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஷா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விமான பயணிகளுக்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் மார்டின். ஏனெனில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடரும்பட்சத்தில், இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் அந்த நிறுவனத்தின் விமான போக்குவரத்து தடங்களில், போட்டி நிறுவனங்கள் விமானங்களை இயக்கக்கூடும். அப்போது பயணக் கட்டணம் 50 -60% அதிரடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் மார்டின்.

“ஒருவேளை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மூடப்பட்டால், அதன் 50 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முற்றிலும் ரத்தாகிவிடும். வேறு சில விமான நிறுவனங்களும் சிக்கலில் உள்ள நிலையில், மறுபுறம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் தேவை அதிகரித்து வருவதால், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் விமான நிறுவனங்கள் திணறும் நிலை உருவாகக்கூடும்,” என்கிறார் அவர்.

கோ ஃபர்ஸ்ட் விமான சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொழில் போட்டியும் தொழில்நுட்ப சிக்கலும்

தொழில் போட்டியைத் தாண்டி இன்ஜின் கோளாறு, அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்கப் பெறாதது போன்ற தொழில்நுட்பரீதியான சிக்கல்களை விமான சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.

கோ ஃப்ர்ஸ்ட் நிறுவனத்தைப் போன்றே இண்டிகோ நிறுவனமும் இன்ஜின் உதிரிபாகங்கள் கிடைக்காதது போன்ற சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

ஆனால் அந்நிறுவனம் 250க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவதால் தொழில்நுட்பரீதியான சிக்கல்கள் அந்நிறுவனத்தை பெரிதாகப் பாதிக்கவில்லை.

தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், ஒவ்வொரு நிதியாண்டிலும் பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது.

இணையும் கைகள்

இப்படி விமான சேவை நிறுவனங்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளை வைத்துப் பார்க்கும்போது, இந்திய விமான போக்குவரத்து சந்தை, எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களின் கையில்தான் இருக்கும் என்பதே இத்துறை வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

இந்தக் கணிப்பு சரிதான் எனச் சொல்லும்படியாக, நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியாவும் விஸ்தாராவும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தன.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து புதிதாக 470 பயணிகள் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்து சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஏர் இந்தியா.

இந்த நிலையில், பட்ஜெட் விமான சேவை நிறுவனம் என்று பெயர் எடுத்துள்ள கோ ஃபர்ஸ்ட், தற்போதைய சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் கம்பீரமாக வானில் கொடிகட்டிப் பறக்குமா?

இதுவே உள்நாட்டு விமானப் பயணிகளின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c7214rz0d7go

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.