Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக தேர்தல் முடிவுகள்: "அன்பை நேசித்த மக்கள் கொடுத்த வெற்றி இது" - ராகுல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காங்கிரஸ் கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம்,INC

 
படக்குறிப்பு,

ராகுல் காந்தி

13 மே 2023, 01:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ""இது குரோனி முதலாளிகளுக்கும் (ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்காக இருந்து சலுகை அனுபவித்தல்) மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர்," என்றார்.

"ஏழைகளின் பிரச்னைகளுக்காக நாங்கள் போராடினோம், நான் விரும்பிய சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்த தேர்தலில் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி. முதலில் இது கர்நாடக மக்களின் வெற்றி. ஏழை மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மாநிலத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி முடிவெடுப்போம்," என்று ராகுல் தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல்

முன்னிலை நிலவரம்

மொத்த தொகுதிகள் - 224

முன்னிலை நிலவரம் தெரிந்தவை: 224

பாஜக - 62

காங்கிரஸ் - 137

ஜனதா தளம் - 21

சுயேச்சை - 2

மற்றவை - 2

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியதாக கூறப்பட்டாலும், உண்மையில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான நேரடி மோதலாகவே இந்த தேர்தல் வர்ணிக்கப்பட்டது. தேசிய அளவில் மூன்றாவது பெரிய சக்தியாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் - முக்கிய அம்சங்கள்

  • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. "பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடினமாக முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த இடங்களில் தவறவிட்டுள்ளோம், என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டு வருவோம்" என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
  • "வெற்றியும் தோல்வியும் பா.ஜ.க.வுக்கு புதிது அல்ல. தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். கட்சியின் பின்னடைவுக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்படும். தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இது கூட்டுத் தலைமைக்குக் கிடைத்த வெற்றி" என்று கருத்து தெரிவித்துள்ளார். "காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்த கர்நாடக மக்களுக்கு நன்றி. அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
  • கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த நாடாளுன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். "கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு எதிரானது. கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி 20 முறை வருகை தந்துள்ளார். வேறெந்த பிரதமரும் அதுபோல் பிரசாரம் செய்ததே இல்லை. கர்நாடக தேர்தல் முடிவுகளைக் கண்டு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்பார் " என்று அவர் கூறியுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

  • "கர்நாடகாவில் வெறுப்புணர்வுக்கான வாசல் அடைக்கப்பட்டுள்ளது. அன்பின் வாசல் திறக்கப்பட்டுள்ளது." காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கர்நாடகாவில் பெரு முதலாளித்துவத்தை ஏழைகள் தோற்கடித்துள்ளார்கள். நாங்கள் இந்த யுத்தத்தில் வெறுப்புணர்வைப் பயன்படுத்தவில்லை." என்று குறிப்பிட்டார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

  • கர்நாடகாவில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பெங்களூரு வருமாறு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்து, பாதுகாக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. "பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
  • பெங்களூரு மட்டுமின்றி டெல்லியில் உள்ள காங்கிரஸின் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்கட்சித் தலைமை அலுவலகங்களிலும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
  • காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல்காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நடைபயணம்' நல்ல பலனைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

  • முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே தத்தமது தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றனர். வருணா தொகுதியில் சித்தராமையா தமக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் சோமன்னாவைக் காட்டிலும் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
  • கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு அமோக வாக்குகளைப் பெற்றுள்ளார். சற்று முன்வரை, அவர் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்துள்ள மத சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க., ஆகியவற்றின் வேட்பாளர்கள் 9 ஆயிரம் வாக்குகளைக் கூட தாண்டவில்லை.
  • கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவரது ஷிக்கோவான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசிர் அஹமத்கானை விட சுமார் 22 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
  • முன்னாள் முதலமைச்சரும், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி தான் போட்டியிட்ட சென்னப்பட்டினம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சற்று முன் நிலவரப்படி, இரண்டாவது இடத்தில் உள்ள பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்ராவைக் காட்டிலும் அவர் சுமார் 500 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறார்.
  • தமிழ்நாடு பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரும், பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவைக் காட்டிலும் அவர் சுமார் ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார்.
  • சிட்டப்பூர் தொகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் மனிகாந்த ரதோட்டை காட்டிலும் அவர் சுமார் 2,500 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
  • முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வில் இருந்து தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்த முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டார் தான் போட்டியிட்ட ஹூப்ளி-தார்வார்ட் மத்திய தொகுதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அந்த தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் 27 ஆயிரத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று, தொடக்கம் முதலே முன்னிலையில் இருக்கிறார்.
  • கோலார் தங்க வயல் தொகுதியில் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜேந்திரன் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.
  • தென்னிந்தியாவின் அயோத்தி என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்த ராமதேவரப்பேட்டா கோவிலை உள்ளடக்கிய ராம நகரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளார். அந்தத் தொகுதியில் இஸ்லாமியரும் காங்கிரஸ் வேட்பாளருமான இக்பால் ஹுசைன் 65,192 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் குமாரசாமியின் மகன் நிகில் இருக்கிறார். பா.ஜ.க. சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. "ராமதேவரப்பேட்டா கோவிலை காங்கிரஸ் கவனிக்கவில்லை; அதனால் அந்தக் கோவிலே நாசமாகிவிட்டது; பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் அங்கு அயோத்தியைப் போல மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும்" என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
கர்நாடகாவில் அரியணை யாருக்கு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், தேசிய அரசியலில் அந்த கட்சியின் நிலை இன்னும் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக காங்கிரஸ் உருவெடுக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பா.ஜ.க.வை எதிர்க்கும் வல்லமை காங்கிரசுக்கு இருக்கிறதா என்று சந்தேகத்துடன் நோக்கும் கட்சிகள், அடுத்து வரும் நாட்களில் காங்கிரசை நோக்கி ஈர்க்கப்படலாம் என்பது அவர்களின் கருத்து.

கர்நாடகாவில் அரியணை யாருக்கு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபுறம், கர்நாடகாவில் எந்தவொரு கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்ததில்லை என்ற 38 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில், கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் அக்கட்சிக்கு சுமார் 50 இடங்கள் குறையும் வாய்ப்புள்ளது.

மண்டல வாரியாக நோக்குகையில், கடலோர கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது.

கர்நாடகாவில் அரியணை யாருக்கு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்புள்ள எச்.டி. குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51lv2d9edpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக தேர்தல்: பாஜகவின் தாமரை 'மலர்ந்த’ வரலாறும் 'வாடிப்போன' கதையும்!

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஜ்னிஷ் குமார்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கடந்து மாலை 6.30 மணி நிலவரப்படி 124 இடங்களில் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியாக காங்கிரஸ் உருப்பெற்றுள்ளது. அத்துடன் மேலும் 12 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களில் வென்று, மேலும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் அது சாத்தியம் இல்லை என்ற நிலையே பாஜகவுக்கு உள்ளது.

இப்படி, எல்லா தரப்பிலிருந்தும் கட்சிக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்திகளே வந்துகொண்டிருக்க, இந்த தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மீள்வது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது.

ஆனால் இங்கு காங்கிரஸ் தோல்வியடைந்தால், 2024 பொதுத் தேர்தலில் நரேந்திர மோதியின் புகழுக்கு எதிராக முழு வலுவுடன் போட்டிபோடுவது அக்கட்சிக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையை நோக்கி நகர்வது,1985க்குப் பிறகு இங்கு எந்த அரசும் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போக்கின் தொடர்ச்சிதான்.

2008 கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது அதுவே முதல் முறை.

2008 ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக, மொத்தமுள்ள 224 இடங்களில் 110 இல் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு மிகக்குறைவான இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அது உருவெடுத்தது.

கர்நாடகாவில் பாஜகவின் தலைமை அப்போது பி.எஸ். எடியூரப்பாவிடம் இருந்ததால் அவர் முதல்வரானார். எடியூரப்பா முதலமைச்சராக நீடிக்க இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டனர். இந்த வேலையை பெல்லாரியின் ரெட்டி சகோதரர்கள் செய்தார்கள்.

ரெட்டி சகோதரர்கள் ஆறு சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக பக்கம் கொண்டுவந்தனர், இதன் மூலம் எடியூரப்பாவுக்கு சாதாரண பெரும்பான்மை கிடைத்தது.

இந்த எம்.எல்.ஏ.க்களை பாஜக.வுக்கு கொண்டு வரும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கமல்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

அப்போதிலிருந்து 'ஆபரேஷன் கமல்' மிகவும் பேசப்படும் ஒன்றாக ஆனது. பாஜக பக்கம் வந்த 6 எம்எல்ஏக்களில் 5 பேர் எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களாக்கப்பட்டனர்.

ஆனால் ரெட்டி சகோதரர்களின் உதவியுடன் ஆட்சி அமைந்த உடனேயே பாஜக பிரச்னையை சந்தித்தது. ஏனென்றால் அவர்கள் மீது சட்டவிரோத சுரங்கம் மூலம் பணம் சம்பாதித்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன.

இதன் காரணமாகவே எடியூரப்பா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலக வேண்டியிருந்தது. முன்னதாக 2007ஆம் ஆண்டு எடியூரப்பா 7 நாட்கள் முதல்வராக இருந்தார்.

மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் எடியூரப்பாவால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பின்னர் அவர் ராஜிநாமா செய்தார்.

பாஜகவின் முக்கிய தலைவர் எடியூரப்பா

கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கர்நாடகாவில் பாஜகவின் எழுச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக எடியூரப்பா கருதப்படுகிறார்.

கர்நாடகாவில் இதுவரை மூன்று முதல்வர்களால் மட்டுமே தங்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடிந்தது. இந்த மூன்று முதல்வர்களும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.

இந்த மூன்று முதல்வர்கள் எஸ் நிஜலிங்கப்பா (1962-1968), டி. தேவராஜ அர்ஸ் (1972-1977) மற்றும் சித்தராமையா (2013-2018).

சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக லோகாயுக்தாவின் அறிக்கையில் எடியூரப்பாவின் பெயரும் இருந்தது. எடியூரப்பா ராஜிநாமா செய்ய விரும்பவில்லை. ஆனால் கட்சியின் மேலிடம் அவரது நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. எடியூரப்பா 2012இல் பாஜகவில் இருந்து பிரிந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத்தேர்தல்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 30% முதல் 36% வரையிலும், காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 35% முதல் 38% வரையிலும் இருந்தது.

மறுபுறம் மதசார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவிகிதம் 18 முதல் 20 சதவிகிதம் வரை இருந்தது. இந்த மூன்று கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தால் சாதி அணிதிரட்டல் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தெரிகிறது.

கர்நாடகாவில் பாஜக ஒரு பெரிய கட்சியாக 1990 களில் உருவாகத்தொடங்கியது. இதில் குறிப்பாக இரண்டு காரணிகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முதல் காரணம், கர்நாடகாவில் ஆதிக்க சமூகமான லிங்காயத்-வீரசைவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்தது. மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான எடியூரப்பாவும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

இந்துத்துவ அரசியல்

கர்நாடக தேர்தல்
 
படக்குறிப்பு,

பாஜக தேர்தலில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் வரைபடம்

இரண்டாவது காரணம், கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலை பாஜக வலுப்படுத்த முடிந்துள்ளது.

இது தவிர, மற்றொரு ஆதிக்க சாதியினரான வொக்கலிகா சமூகத்தினரிடம் இருந்தும் பாஜகவுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்து வருகிறது.

கர்நாடகாவின் நடுத்தர வர்க்கத்தினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் ஒரளவிற்கு ஊடுருவுவதில் பாஜக வெற்றி பெற்றது.

ஆனால் கர்நாடகாவில் கடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பார்த்தால்,சாதி, மத சமன்பாட்டில் கூட பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது என்பது தெளிவாகிறது.

2008 மற்றும் 2019 ஆகிய இருமுறையும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது, ஆனால் எந்தத் தேர்தலிலும் அக்கட்சிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

2008 இல் பாஜக அதிகபட்சமாக 110 இடங்களையும், 2018 இல் 105 இடங்களையும் பெற்றது. 2018 இல் காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றன.

இரண்டு முறையும் பாஜக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

2013 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போது எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

2013 இல் பாஜகவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்க, மற்ற கட்சி உறுப்பினர்கள் அல்லது சுயேச்சை உறுப்பினர்களை தன்பக்கம் கொண்டுவந்தது. அவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த சாதிகள் - பிராமணர்கள், லிங்காயத்-வீரசைவர் மற்றும் அவற்றின் துணை சாதிகள், வொக்கலிகாக்கள், குருபாக்கள், சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்.

லிங்காயத்துகளின் ஆதரவு

இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவுக்கு வெற்றி கடினமாக இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அப்பகுதிகளில் சமூக அடித்தளம் இருந்தது மற்றும் அந்த பகுதிகளில் பாஜகவை பிரபலமாக்கும் திறன் அவர்களுக்கு இருந்தது.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள், மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றனர்.

பல்வேறு சாதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை உடைத்து, தாங்கள் ஊடுருவக்கடினமாக உள்ள பகுதிகளை அவர்கள் மூலம் அடையும் இந்த வழி, பாஜகவின் உத்தியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

லிங்காயத்துகளின் வாக்குகளை மட்டுமே நம்பி இருக்க பாஜக விரும்பவில்லை.

2018 இல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக பாஜக மற்றும் எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது.

2008 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மும்பை கர்நாடகா பகுதியில் பாஜக அதிகபட்ச இடங்களைப்பெற்றது.

இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத் சமூகத்தினர், எண்ணிக்கை அடிப்படையில் மிகவும் வலுவாக உள்ளனர்.

1994 இல் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களைப் பெற்றபோது இப்பகுதியில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

'ஏமாற்ற' அலை

ஆனால் பாஜகவின் தலைமை எடியூரப்பாவிடம் வந்தபிறகு 2004ல் மும்பை-கர்நாடகா பகுதியில் 24 இடங்களையும், 2008ல் 34 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது.

எச்.டி.குமாரசாமி (வொக்கலிகா சமூகம்) தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வை எடியூரப்பாவால் மக்களிடையே பரப்ப முடிந்ததால் 2008-ல் பாஜக அதிகபட்ச இடங்களைப் பெற்றதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் லிங்காயத்துகளின் தொகை சுமார் 17 சதவிகிதமாகவும், வொக்கலிகர்களின் தொகை 12 சதவிகிதமாகவும் உள்ளது. பாரம்பரியமாக, லிங்காயத்துகள் பாஜகவையும், வொக்கலிகாக்கள் காங்கிரஸையும் ஆதரித்து வந்தனர்.

பாஜக.வுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும் 2007 ஆம் ஆண்டில் முதல்வர் நாற்காலியை விட்டுக்கொடுக்க குமாரசாமி மறுத்துவிட்டார்.

குமாரசாமியின் இந்த நிலைப்பாட்டை தனக்கு சாதகமாக எடியூரப்பா பயன்படுத்தி லிங்காயத்து வாக்குகளை திரட்டினார். 2008-ல் பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது.

2012ல் எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்த போதும், பாஜக தன்னை முதுகில் குத்திவிட்டது என்றும் மக்கள் அக்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார்.

2013 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது.

இந்தப் பகுதியில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2018 தேர்தலை ஒப்பிடும்போது 23 இடங்கள் இழப்பு ஏற்பட்டது. பாஜகவின் வாக்கு சதவிகிதத்திலும் 8.5 சதவிகித சரிவு ஏற்பட்டது.

எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவிகிதம் 10.3 ஆக இருந்தது.

லிங்காயத்துகள், பாஜகவுக்கு மாற்றாக கேஜேபியை பார்க்காமல் காங்கிரஸை பார்த்ததாக கூறப்பட்டது.

கர்நாடகாவின் தக்ஷிண் கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் இந்துத்துவாவின் பரிசோதனைக்களம் என்று அழைக்கப்படுகின்றன. தக்ஷிண கன்னடாவில் உள்ள எட்டு இடங்களிலும், உடுப்பியில் உள்ள ஐந்து இடங்களிலும் 1989 முதல் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

2008 இல் இந்த இரண்டு மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 13 இடங்களில் 10 இல் பாஜக வெற்றி பெற்றது.

லிங்காயத் மற்றும் பாஜக

கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காங்கிரஸின் முதல்வராக இருந்த தேவ்ராஜ் அர்ஸ் செய்த சமூக மாற்றங்களின் (social engineering) விளைவால்தான் லிங்காயத்துகள் பாஜக பக்கம் சாய்ந்தனர் என்று கூறப்படுகிறது.

தேவ்ராஜ் அர்ஸ், லிங்காயத் அல்லாத மற்றும் வொக்கலிகா அல்லாத சாதி சமன்பாட்டு விளையாட்டை விளையாடினார்.

தேவ்ராஜ் அர்ஸ் மாநிலத்தில் நிலச் சீர்திருத்தம் செய்தார். இது உயர் சாதியினரின் ஆதிக்கத்தை சவால் செய்தது.

தேவ்ராஜ் அர்ஸின் இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸுக்கு பலம் கிடைத்தது.

தேவ்ராஜ் அர்ஸ் காரணமாகவே கர்நாடகாவில் உயர்சாதியினர் காங்கிரசிடமிருந்து இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் ஜனதா கட்சியின் தலைமை ராமகிருஷ்ண ஹெக்டேவிடம் வந்தபோது அக்கட்சி, காங்கிரஸுக்கு மாற்றாக உருவானது மற்றும் லிங்காயத்துகள் ஜனதா கட்சியின் பக்கம் சாய்ந்தனர்.

ராமகிருஷ்ண ஹெக்டே ஒரு பிராமணர். ஆனால் அவரது தலைமையில் ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம் தொடர்ந்து லிங்காயத்துகளின் ஆதரவைப் பெற்றது.

லிங்காயத்துகள் ஆரம்பத்திலிருந்தே பாஜகவுடன் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. 1983 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் 18 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது.

1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் பாஜக முறையே 116 மற்றும் 118 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் இரண்டு மற்றும் நான்கு இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.

பின்னர் ஜனதா தளம் பிளவுபட்டு தேவகெளடா முதல்வரானார்.

ஹெக்டேக்கு கிடைத்த ஆதரவு

லிங்காயத்துகளின் நலம் விரும்பியாக கருதப்பட்ட ஹெக்டே, தேவகெளடாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ராமகிருஷ்ண ஹெக்டேயின் லோக்சக்தி கட்சி மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, அதன் மூலம் பாஜக நேரடியாக பலனடைந்தது.

லிங்காயத்துகள் ஹெக்டேயுடன் இருந்தனர். அதன் பலனை பாஜகவும் பெற்றது. 1999 இல் பாஜக 144 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 44 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் எடியூரப்பா இரண்டாவது முறையாக கர்நாடக பாஜக தலைவராக ஆனார்.

2004 இல் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி 79 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

ஏறக்குறைய இந்த 79 எம்எல்ஏக்களும் புதுமுகங்கள் மற்றும் வட கர்நாடகத்தைச்சேர்ந்த லிங்காயத்துகள்.

2008 இல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றபோது லிங்காயத்துகள் அவருக்கு ஆதரவாகத்திரண்டனர்.

கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும் அதிக பிரபலம் இல்லாதவராக அவர் இருந்தாலும்கூட கட்சியில் அவரை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும் மூத்த செய்தியாளர் நீரஜா செளத்ரி கூறுகிறார்.

“நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்கும் எடியூரப்பாவின் வலு பற்றித்தெரியும். 2013 இல் எடியூரப்பா தனிக்கட்சி அமைத்து சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டபோது, பாஜக வுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

2014-ல் நரேந்திர மோதி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, எடியூரப்பா மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். 2014 பொதுத் தேர்தலில் பாஜக, எடியூரப்பாவின் மறுவருகையின் பலனையும் பெற்றது,”என்று அவர் குறிப்பிட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்றது.

2009 ஐ ஒப்பிடும்போது இது இரண்டு இடங்கள் குறைவு. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது.

“கர்நாடகாவில் பாஜகவுக்கு எடியூரப்பாவைத் தவிர வேறு தலைவர்கள் இல்லை என்பதே பிரச்சனை. பாஜகவின் பலம் லிங்காயத்துகள் மற்றும் லிங்காயத் சமூகத்தின் ஆதரவு எடியூரப்பாவின் காரணமாகவே உள்ளது. எடியூரப்பாவின் புகழ் குறைந்து வருவதால் லிங்காயத்துகளுக்கு பாஜக மீதான விசுவாசம் நிரந்தரமாக இருக்காது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றியை வைத்து 2024 மக்களவைத்தேர்தலில் மோதி தோற்கடிக்கப்படுவார் என்று கூறுவது அவசரத்தனமாக இருக்கும். சட்டப்பேரவை மற்றும் மக்களவை முடிவுகள் வெவ்வேறாக இருப்பது நாடு முழுவதும் நடக்கிறது. 2014 மற்றும் 2019-ல் கர்நாடகத்திலும் இது நடந்ததை நாம் காணலாம்,” என்று நீரஜா செளத்ரி கூறினார்.

கர்நாடக மாநிலம் பாஜகவுக்கு தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்டது, ஆனால் அந்த கட்சியால் இந்த முறை ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறும் போட்டியில் முன்னேற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

“கர்நாடகாவில் இருக்கும் 'எடியூரப்பா' போன்ற தலைவர் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு இல்லை. தென்னிந்தியாவில் மொழிபெயர்ப்பாளரை சார்ந்தே மோதி பொதுமக்களுடன் உரையாடுகிறார்.

இந்துத்துவ அரசியலின் பலம் வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவில் இல்லை. இங்குள்ள பிராந்திய கட்சிகள் அதிக வலுவாக உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகா பாஜகவுக்கு தென்னிந்தியாவின் வாசலாக மாறிய பிறகும் மற்ற மாநிலங்களின் கதவுகளை திறக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டார் நீரஜா செளத்ரி.

https://www.bbc.com/tamil/articles/c729191znyko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி.கே.சிவகுமார், சித்தராமையா: கர்நாடக முதல்வராக காங்கிரஸ் தலைமை யாரை தேர்ந்தெடுக்கும்?

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம்,ANI/GETTY

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அபிநவ் கோயல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 24 நிமிடங்களுக்கு முன்னர்

கர்நாடகாவில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையை அளித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

முடிவுகள் வந்துவிட்டபோதிலும் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார்கள் என்ற ஒரு கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பந்தயத்தில் மூன்று பெயர்கள் அடிபடுகின்றன.

அவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் முன் வந்து, உணர்ச்சிவசப்பட்டுப் பேசினர். முதல்வர் பதவி தொடர்பாக கர்நாடகாவில் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே போஸ்டர் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

சித்தராமையா ஒருமுறை கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். டி.கே.சிவகுமாரின் இந்த ஆசை நீண்ட நாட்களாக நிறைவேறாமல் உள்ளது. இந்த முறை அதை நிறைவேற்றிக் கொள்ள அவர் விரும்புகிறார்.

கர்நாடக முதல்வராக வரப்போவது யார்?

இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய, பல ஆண்டுகளாக கர்நாடக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து செய்திகளை அளித்து வரும் மூத்த செய்தியாளர்களிடம் பேசினோம்.

டி கே சிவகுமார்

முதலில் டி.கே.சிவகுமார் பற்றிப் பேசுவோம்.

2020ஆம் ஆண்டில், கர்நாடக மாநில தலைவர் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலைமையில் இருந்த நேரம் அது. சித்தராமையா அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள்கூட தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.

டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் பழைய விசுவாசி. அவர் மாநிலத்தில் வொக்கலிகா சமூகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸை விட்டு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

கனகபுரா தொகுதியில் எட்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டில் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் டெல்லியின் திகார் சிறையில் அவர் சுமார் இரண்டு மாதங்கள் கழிக்க வேண்டியிருந்தது.

டி.கே.சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு குறித்துப் பேசிய மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ், அந்த வாய்ப்பு 60-40 என்ற விகிதத்தில் உள்ளது என்றார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்

பட மூலாதாரம்,@DKSHIVAKUMAR

 
படக்குறிப்பு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்

"இந்த 60 சதவிகித ஆதரவு ஹைகமாண்டின் ஆதரவு. காங்கிரஸ் தலைமையில், கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அவரை விரும்புகிறார்கள். மேலும் அவரது ஆதரவிலும் காணப்படுகிறார்கள். அவர் 2018இல் கட்சித் தலைவராக ஆன பிறகு இரவும் பகலும் கடினமாக உழைத்தார்,” என்று அவர் கூறினார்.

”இக்கட்டான காலங்களில் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து உயர் தலைமை வரை காங்கிரஸில் நம்பிக்கையை வளர்க்கும் பணியை அவர் செய்துள்ளார்."

காங்கிரஸ் மேலிடத்துடன் அவருடைய நெருக்கம் பற்றி மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரியும் பேசுகிறார்.

"ராஜஸ்தானில் மாநில தலைவர் சச்சின் பைலட் தலைமையில் தேர்தல் நடந்தது. ஆனால் ஆட்சி அமைக்கும் நிலை வந்தவுடன் அஷோக் கேலாட்டுக்கு முதல்வர் நாற்காலி வழங்கப்பட்டது. கர்நாடகாவிலும் இது போன்ற ஏதாவது நடக்கலாம்," என்று ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.

“கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை டி.கே.சிவகுமார் முன்னின்று நடத்தினார் என்று கூறலாம். நிதியளித்ததுடன் கூடவே நீண்ட நாட்களாக உழைத்தார். ஆனால் 2024க்கு முன் எந்த ரிஸ்கையும் எடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஏனென்றால் முன்பு ஆபரேஷன் லோட்டஸ், ஜே.டி.எஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை உடைத்துவிட்டது. எனவே இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்."

கர்நாடகாவின் மக்கள் தீர்ப்பை மக்களவை இடங்களாக மாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. எனவே மாநிலத் தலைமைக்கு இடையே சண்டையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அது எடுக்காது என்று அவர் கூறினார்.

சிவகுமார் மீது அமலாக்கத்துறையின் வழக்கு இருக்கிறது. இது அவரது வாய்ப்பை பலவீனப்படுத்துகிறது என்று ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார். அவர் மிகவும் திறமைசாலி மற்றும் போராடும் ஆற்றல் கொண்டவர் என்பதால் அவர் முதல்வர் ஆவதை பாஜக ஒருபோதும் விரும்பாது.

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சித்தராமையா

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.

1983ஆம் ஆண்டு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994இல் ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவின் துணை முதல்வரானார். எச்.டி.தேவே கெளடாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சமய சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி 2008இல் காங்கிரஸில் இணைந்தார்.

2013 முதல் 2018 வரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். இதுவரை 12 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள அவர் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார்.

முதலமைச்சராக இருந்தபோது ஏழைகளின் நலனுக்கான அவரது பல திட்டங்கள் மிகவும் பாராட்டப்பட்டன. ஏழு கிலோ அரிசி வழங்கிய வளன்ன பாக்ய யோஜனா, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 150 கிராம் பால், இந்திரா கேன்டீன் ஆகியவை இவற்றில் அடங்கும்.

லிங்காயத் மற்றும் இந்து வாக்காளர்கள் மத்தியில் டி.கே.சிவகுமாரை விட குறைவான பிரபலமாக அவர் கருதப்படுகிறார். மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறந்தநாளை பிரமாதமாகக் கொண்டாடியது, பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளின் உறுப்பினர்களை சிறையில் இருந்து விடுவித்தது போன்றவை இதற்கான காரணங்கள்.

கர்நாடக தேர்தல்

பட மூலாதாரம்,ANI

சித்தராமையாவின் வாய்ப்பு சிவகுமாரைவிட பலவீனமானது என்று மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் சிவகுமார் செய்த கடின உழைப்புக்கான வெகுமதியை அவர் இந்த முறை பெறக்கூடும் என்றார் அவர்.

"இருவருக்கும் இடையே ஏற்கெனவே பனிப்போர் நடந்து வருகிறது, அது வருங்காலத்திலும் தொடரும். சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த 35 ஆண்டுகளாக சித்தராமையாவை எனக்குத் தெரியும். டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்,” என்றார் அவர்.

"சித்தராமையா அமைதியாக இருக்க மாட்டார். சிவகுமாருக்கு எதிராக நிச்சயம் ஏதாவது செய்வார்," என்கிறார் எம்.கே.பாஸ்கர் ராவ்.

மறுபுறம் மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி, முதல்வர் பதவிக்கான மிகப்பெரிய போட்டியாளராக சித்தராமையாவை கருதுகிறார்.

”இதற்கு முன் சித்தராமையா முதலமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையுடன் நல்ல அரசியல் தொடர்பு உள்ளவர். இது தனக்கு கடைசி தேர்தல் என்று அவரே கூறியிருப்பதால் அவருக்கு முதல் வாய்ப்பை காங்கிரஸ் தரலாம்,” என்கிறார் அவர்.

‘‘கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் ஃபார்முலாவை காங்கிரஸ் கொண்டுவரக்கூடும். இதன்கீழ் சித்தராமையாவுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் காங்கிரஸின் இந்த ஃபார்முலா சத்தீஸ்கரில் வெற்றி பெறவில்லை.

மல்லிகார்ஜுன கார்கே

இந்த இரு தலைவர்களைத் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை ஏற்பீர்களா என்று தேர்தலுக்கு முன் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேட்கப்பட்டது.

நீலம் சஞ்சீவ ரெட்டியை போல தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

1962இல் நீலம் சஞ்சீவ ரெட்டி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஆந்திர பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியில் ஈடுபட்டார்.

முதலமைச்சராக வர முடியவில்லையே என்ற வேதனை கார்கேவின் உள்ளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். கர்நாடக முதல்வர் பதவி அவரிடமிருந்து மூன்று முறை கை நழுவிப்போனது.

1999இல் ஹை கமாண்ட், எஸ்.எம்.கிருஷ்ணாவை முதல்வராக்கியது இரண்டாவது முறையாக ஜேடிஎஸ் தலைவர் எச்டி தேவகெளடா, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசை வழிநடத்த கார்கேவைவிட தரம் சிங் பொருத்தமானவர் என்று நினைத்தார். மூன்றாவது முறையாக 2013இல் சித்தராமையா தனக்கு ஆதரவாக எம்எல்ஏக்களை வளைத்து கார்கேவை ஓரங்கட்டினார்.

ஆனால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கார்கேவுக்காக முதல்வர் நாற்காலியை தியாகம் செய்வதாக டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜன் கார்கே

பட மூலாதாரம்,@KHARGE

 
படக்குறிப்பு,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜன் கார்கே

அரசியல் ஆய்வாளர் டி. உமாபதி, ஏப்ரல் மாதம் பிபிசி இந்தி இணை செய்திகையாளர் இம்ரான் குரேஷியிடம் பேசுகையில், "கார்கே முதல்வர் நாற்காலியில் அமர விரும்பினார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் தலைவராக அவர், முதல்வர் பதவிக்கு மேலே உயர்ந்துவிட்டார்,” என்றார்.

"அவர் அதிலிருந்து கீழே வர விரும்பமாட்டார். அவரது சுயமரியாதை அதை அனுமதிக்காது. குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் கபில் சிப்பலை சந்திக்க கார்கே காத்திருக்க வேண்டிய காலம் இருந்தது. இன்று அவரைச் சந்திக்க பல தலைவர்கள் காத்திருக்கிறார்கள்."

மல்லிகார்ஜுன கார்கே முதல்வர் பதவியை ஏற்க மறுப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. தமிழகம், தெலங்கானா அரசியல் போல கர்நாடக அரசியல் இல்லை என்று மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ் கூறுகிறார்.

“கர்நாடகா அரசியலுக்கு அவர் திரும்பினால் மகனின் அரசியல் எதிர்காலத்தை அவர் பணயம் வைக்க வேண்டியிருக்கும். அவர் ஸ்டாலின் செய்தது போல் மகனை தன் அமைச்சரவையில் அமைச்சராக்க முடியாது. தனது மகனை காங்கிரஸ் கட்சியில் முன்னே கொண்டு வருவதே அவரது லட்சியம்,” என்கிறார் அவர்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இம்முறையும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார் எம்.கே.பாஸ்கர்.

”சமீபத்தில்தான் கார்கே காங்கிரஸ் தலைவராகியுள்ளார். இம்முறை கர்நாடகாவில் நிறைய உழைத்துள்ளார். அதன் பலன் நம் அனைவரின் கண் முன்னால் உள்ளது. இந்த வயதிலும் அவரது உழைப்பு சிறப்பாக உள்ளது,” என்று ஹேமந்த் அத்ரி கூறினார்.

"காங்கிரஸ் கட்சி பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. தலித் தலைவர் மற்றும் ஓபிசி கொடியுடன் காங்கிரஸ் முன்னேறுகிறது. சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி கட்சி பேசுகிறது. இந்த உத்தி பாஜகவின் இந்துத்துவ பேச்சை முறிக்கும் வேலையைச் செய்கிறது. காங்கிரஸ் இதையே மற்ற தேர்தல்களிலும் பயன்படுத்தப் போகிறது,” என்று ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cnk0gypz49do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக மாநிலத்தில் இந்த முறையும் வெற்றிபெறாத தமிழர்கள் - காரணம் என்ன?

கர்நாடகா
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தமிழர் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. சுயேச்சைகள் உட்பட சுமார் 30 தமிழர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் ஒருவரும் வெற்றிபெறவில்லை.

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிப்பது கர்நாடக மாநிலத்தில்தான். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம். இங்கு வசிக்கும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் கேட்டால், தமிழர்கள் எண்ணிக்கையை இன்னும் கூடுதலாகச் சொல்வார்கள்.

பெங்களூர், மைசூர், ஷிவமோகா, உடுப்பி, கோலார், பத்ராவதி, கொள்ளேகால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

ஆனால், 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தின் எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை. கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தமிழர்களாக உள்ள கோலார் தங்க வயல் தொகுதியிலும் அதுதான் நிலைமையாக உள்ளது.

2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெங்களூரின் சி.வி. ராமன் நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர், ஹனூர், ஷாந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.

 

அதேபோல, இந்த ஆண்டும் கே.ஜி.எஃப்., பெங்களூரில் உள்ள சி.வி. ராமன் நகர், ஜெயநகர், புலிகேசி நகர் ஆகிய இடங்களில் தமிழர்கள் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே தோல்வியடைந்துள்ளனர்.

கே.ஜி.எஃப் தொகுதியில் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட எஸ். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி. தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர். ஜோதிபாசு, சுயேச்சையாகப் போட்டியிட்ட கலாவதி ஆகியோர் தமிழர்கள்.

பெங்களூரில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் சி.வி. ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழரான எஸ். ஆனந்த் குமார் நிறுத்தப்பட்டிருந்தார். புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.கவின் சார்பில் ஏ. முரளி நிறுத்தப்பட்டிருந்தார். அதேபோல, ஜெயநகர் தொகுதியில் ஆர். செல்வக்குமார் என்ற தமிழர் நிறுத்தப்பட்டிருந்தார். இது தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

கர்நாடகா

கே.ஜி.எஃப் தொகுதியைப் பொறுத்தவரை, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரான எம். ரூபகலாவுக்கும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் எஸ். ராஜேந்திரனுக்கும் இடையில்தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கே.ஜி.எஃபில் இருந்த தமிழர்களில் பலர் இந்த முறை தமிழர் ஒருவருக்குத்தான் வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்தனர்.

அதைப் போலவே, ராஜேந்திரன் பங்கேற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. முதல் சில சுற்றுகளில் ராஜேந்திரன் மிகவும் பின்தங்கி இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும், அவரால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளரான எம். ரூபகலா கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை பா.ஜ.கவின் அஸ்வினி சம்பங்கி பிடித்தார். இருவருமே தமிழரல்லாதவர்கள்.

சி.வி. ராமன் நகர் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த முறையும் இந்தத் தொகுதியில் ஒரு தமிழரையே நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. பெங்களூர் நகரின் முன்னாள் மேயரான சம்பத்ராஜ் இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை. இந்த முறையும் இந்தத் தொகுதியில் தமிழரான ஆனந்த் குமாரை நிறுத்தியது காங்கிரஸ். அவருக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆதரவளித்திருந்தது. அவரை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் எஸ். ரகு நிறுத்தப்பட்டிருந்தார். இவர் அந்தத் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். 2008ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தொகுதி அவர் வசம்தான் இருக்கிறது. இப்போது நான்காவது முறையாகவும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார் ரகு. கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட கிட்டத்தட்ட 11 ஆயிரம் வாக்குகள் அவருக்கு அதிகம் கிடைத்திருக்கிறது.

போன முறை சி.வி. ராமன் நகரில் கிடைத்த தோல்விக்கு, அந்தத் தொகுதிக்குள் இருந்த உட்கட்சிப் பிரச்சனை காரணமாக இருந்தது. இந்த முறை கிடைத்த தோல்விக்கு, கடைசி நேரத்தில் ஆனந்த் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது காரணமாகச் சொல்லப்படுகிறது.

கர்நாடகா

புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ஏ. முரளியால் சுமார் பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட செல்வக்குமார் வெறும் 215 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

மேலே சொன்ன தொகுதிகளில், கோலார் தங்க வயல் தொகுதியைத் தவிர, வேறு எந்தத் தொகுதியிலும் வேட்பாளர் எந்த மொழியைப் பேசக்கூடியவர் என்பது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

பெங்களூரிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் 2004ஆம் ஆண்டுவரை பெரும்பாலும் தமிழர்களே போட்டியிட்டு வென்றனர். சி.எம். ஆறுமுகம் மூன்று முறையும் எம். பக்தவத்சலம் மூன்று முறையும் எஸ். ராஜேந்திரன் இரண்டு முறையும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதில் எம். பக்தவத்சலம் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டே இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார். 2008ஆம் ஆண்டுத் தேர்தலில் சம்பங்கியும் 2013ஆம் ஆண்டுத் தேர்தலில் ராமக்கா என்பவரும் வெற்றிபெற்றனர். இருவருமே பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். 2018ல் காங்கிரசைச் சேர்ந்த ரூபகலா வெற்றிபெற்றார்.

karnataka

2001ல் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அந்த தொகுதியில் வசித்த தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் குடியேற ஆரம்பித்தனர். 2008ல் தொகுதி மறு சீரமைப்பின்போது கோலார் தங்க வயலைச் சுற்றியுள்ள தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் பல அந்தத் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால், தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை கேஜிஎஃப் தொகுதிக்குள் அதிகரித்தது. தவிர, எந்தக் கட்சியும் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி வேட்பாளர்களை போட்டியிடச் செய்வதும் நின்று போனது. இதனால், கோலார் தங்க வயலில் 2004க்குப் பிறகு தமிழர்கள் யாரும் வெற்றிபெறவில்லை.

சி.வி. ராமன் நகர் தொகுதியைப் பொறுத்தவரை, தமிழர் - தமிழரல்லாதவர் என்ற பிரச்னையே எழவில்லை. மற்ற தொகுதிகளைப் போலவே பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே பிரசாரம் நடைபெற்றது. அதைவிட முக்கியமாகக் கவனிக்கத்தக்கது, அந்தத் தொகுதியில் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் குமார் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கவே தயங்கினார் என்பதுதான். அவர் ஒரு இடத்திலும் தன்னைத் தமிழராக முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு காலத்தில் தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியான சிவாஜி நகர் (முன்பு பாரதி நகர்) தொகுதியில் இந்த முறை தமிழர்கள் போட்டியிடவேயில்லை.

கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழி தவிர, துளு, கொங்கணி, மராத்தி, தெலுங்கு பேசக்கூடியவர்கள் அவ்வப்போது வெற்றிபெருகிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள தொகுதிகளில் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி போன்றவை தீவிரமாக செயல்படுகின்றன. இந்த முறை, மராட்டியத்தை ஒட்டியுள்ள கானாபூர் தொகுதியில் இந்த முறை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தனது வேட்பாளரை நிறுத்தியது. நாக்தன் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தியது.

ஆனால், தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளில் வழக்கமாக வேட்பாளர்களை நிறுத்தும் அ.தி.மு.ககூட, இந்த முறை எந்தத் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

கோலார் தங்க வயல் தொகுதியை விட்டுவிட்டால், கர்நாடகத்தைப் பொறுத்தவரை, பெரிய கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் யாராவது யதேச்சையாக தமிழர்களாக இருந்து, வெற்றிபெற்றால் தமிழ் பேசும் வேட்பாளர் வெற்றிபெற்றதாகச் சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, ஒருவர் தமிழர் என்பதற்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்படுவது என்பது கிட்டத்தட்ட அறவே இல்லாமல் போய்விட்டது.

அப்படி யதேச்சையாக போட்டியிடுபவர் வெற்றிபெற்றாலும், கர்நாடகத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனைப் பிரதிபலிப்பவராக செயல்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

https://www.bbc.com/tamil/articles/cn07e5w5d2jo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தராமையா: முதலமைச்சர் இலக்கை மீண்டும் அடைந்த கர்நாடக அரசியலின் ‘மாஸ்டர்’

சித்தராமையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,இம்ரான் குரேஷி
  • பதவி,பிபிசி இந்தி சேவைக்காக
  • 17 மே 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கிராமப்புற கர்நாடகத்தில் வலுவான பிடிப்புள்ள முன்னாள் முதல்வராக இருந்த சித்தராமையா முதல்வர் பதவிக்கு வருவது அவரது சாதனைகளின் வரிசையில் இன்னொரு சாதனை.

நாட்டில் தொடர்ந்து 13 பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனையையும் சித்தராமையா படைத்துள்ளார். தொடர்ந்து பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமரும், மத்திய நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய், சித்தராமையாவுக்குப் பிறகுதான் வருகிறார்.

சித்தராமையா முதல் முறையாக 2013 முதல் 2018 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு (1972-1978) ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த இரண்டாவது முதலமைச்சராக ஆனார்.

”அவரது கடுமையான நடத்தைக்குப் பிறகும், அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சமூக நீதிக்காக அவர் தொடர்ந்து குரல் எழுப்பியதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.”

”1997-98ல் ஜே.எச்.படேல் ஆட்சியின்போதும், 2004ல் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். முதல் கூட்டணி ஆட்சியின்போதும் அவர் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தார். அப்போது சித்தராமையா ஜேடிஎஸ்-ல் இருந்தார்,” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஏ. நாராயணா கூறினார்.

மக்கள் மத்தியில் அவருடைய பிரபலம் காரணமாகவே, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரைவிட சித்தராமையா முன்னிலையில் இருந்தார். 'கர்நாடகாவில் அவர் மிகவும் சமயோசித அரசியல்வாதி' என்று எதிரணியினர்கூட சிவகுமார் பற்றிக் கூறுகின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எம்.எல்.ஏ.க்களின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் பலத்தையும் காங்கிரஸ் மேலிடம் கணித்திருந்தது. சித்தராமையா தனது கடைசி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் முன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். அப்போது அவர், 'ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பு நடக்கவேண்டும். அதுதான் ஜனநாயக முறையும்கூட,” என்று தெரிவித்தார்.

'கிளர்ச்சியாளர்' சித்தராமையா முதல்வராக இருந்தபோது எந்தவொரு கிளர்ச்சியையும் சந்திக்க வேண்டி வரவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம்.

"சித்தராமையாவின் கிராமமான சித்தார்மன்ஹூண்டியில் அனைவரும் ஒருமையில் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். பெற்றோரைக்கூட அப்படித்தான் அழைப்பர்,” என்று சிஆர்பிஎஃப்-ன் ஓய்வுபெற்ற ஐஜியும் சித்தராமையாவின் பால்ய நண்பருமான கே. அர்கேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆனால், அதை ஆணவமாகக் கருதக் கூடாது. பிரதமர் மோதியை சித்தராமையா இவ்வாறு அழைக்கும்போது, அவரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர். உண்மையில் சித்தராமையா பேசும்விதமே இப்படித்தான்,” என்றார் அவர்.

புள்ளி விவரங்களில் மாஸ்டர்

siddharamaiah, priyanka and shivakumar

பட மூலாதாரம்,GETTY IMAGES

1985ஆம் ஆண்டு, ராமகிருஷ்ண ஹெக்டே அரசில் சித்தராமையா கால்நடை துறை அமைச்சராக இருந்தபோது, அவரது கணீர் குரல் மற்றும் புள்ளிவிவரங்களை நினைவில் வைத்திருக்கும் திறனும் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

”அவருக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் பட்ஜெட் தேவைகள் மீது பெரும் பிடிப்பு இருப்பதை நாங்கள் மிக விரைவில் உணர்ந்தோம். சித்தராமையாவின் திறன் பல மூத்த அதிகாரிகளை அவரது ரசிகர்களாக ஆக்கியுள்ளது,” என்று ஒரு முன்னாள் மூத்த அதிகாரி பிபிசி இந்தியிடம் கூறினார்.

சித்தராமையாவின் பொருளாதார அறிவை அனைவரும் பாராட்டுகின்றனர். சென்ற சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் மாநில பட்ஜெட் மீது உரை நிகழ்த்தும்போது, ஆளும் பாஜகவின் எல்லா எம்எல்ஏக்களும் அவையில் இருப்பது வழக்கம்.

'நிர்வாகத்தில் சித்தராமையாவின் பிடி மிகவும் வலுவானது. அவர் கோப்புகளைப் படிக்கும் முறையும் மிகவும் பாராட்டுக்குரியது. ஓர் அதிகாரியின் ஆலோசனை சரியானது என்று அவர் உணர்ந்தால், அவர் அதை வெளிப்படையாகச் சொல்வார். அரசியல் ஒற்றுமைக்கு மிகுந்த அக்கறை காட்டுவார்.

எந்த அதிகாரியின் அணுகுமுறைக்கும் எதிராக அமைச்சரவையில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பேன் என்றும் அதிகாரி அதைப் பற்றி வருத்தப்படக் கூடாது என்றும் பலமுறை அதிகாரிகளிடம் கூறி வந்தார்,” என்று ஓய்வு பெற்ற மற்றோர் அதிகாரி கூறினார்.

கிராமப்புறங்களில் நல்ல பிடிப்பு

சித்தராமையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேராசிரியர் எம்.டி.நஞ்சுண்டசாமி, சித்தராமையா மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் மைசூரில் உள்ள சட்டக் கல்லூரியில் சித்தராமையாவுக்கு கற்பித்தார். பேராசிரியர் நஞ்சுண்டசாமி கர்நாடக ராஜ்ய ராயத் சங்கத்தை (விவசாயிகள் அமைப்பு) உருவாக்கினார்.

”ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் நாங்கள் கூட்டங்களை நடத்துவோம். அதில் அனைவரும் சமூகப் பிரச்னைகள் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் சுதந்திரம் இருந்தது. அப்போதுதான், கிராமப்புறப் பொருளாதாரம், சமூக நீதி போன்ற விஷயங்கள் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது. சமத்துவ உணர்வு, பேச்சு சுதந்திரம், அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதலும் அந்தக் கூட்டங்களின் மூலம் ஏற்பட்டது,” என்று அர்கேஷ் கூறினார்.

இந்தச் சந்திப்புகள் தாலுகா வளர்ச்சி வாரிய (டிடிபி) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற சித்தராமையாவுக்கு தைரியத்தை அளித்தன.

”சித்தராமையாவின் சமூகப் பின்னணியைப் பார்க்கும்போது, இந்தக் கூட்டங்கள் இல்லாமல் அவர் இவ்வளவு தன்னம்பிக்கையைப் பெற்றிருக்க மாட்டார் என்று சொல்லலாம். ஏனெனில், சித்தராமையாவின் தந்தை படித்த பணக்காரர் அல்ல. சித்தராமையா பள்ளிக்கூடத்திற்கே மிகவும் காலம் கடந்துதான் சென்றார்,” என்று அர்கேஷ் தெரிவித்தார்.

இருப்பினும் கணிதத்தில் சித்தராமையா மிகுந்த திறமைசாலியாக இருந்தார். அர்கேஷ் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார். “அவர் ஒரு நல்ல சீட்டாட்டக்காரர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரம்மி ஆடும்போது ஒருமுறைகூட ஆட்டத்தை இழந்ததில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தந்திரம்

சித்தராமையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரசியல் ரீதியாக சித்தராமையா, 'புத்திசாலி; அரசியல் கணக்குகளை சிறப்பாக மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

குருபா (அல்லது கட்ரியா) சமூகத்தைச் சேர்ந்த சித்தராமையா, தனது பழைய வழிகாட்டியான எச்.டி.தேவ கெளடாவின் சமய சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பிரிந்து செல்வதற்காக,

அஹிந்தா (சிறுபான்மையினர், பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள்) நலன்களை முன்வைத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே தனது தளத்தை விரிவுபடுத்தினார்.

2013இல் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பிறகு சித்தராமையா அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முதல் நடவடிக்கை ’அன்ன பாக்ய திட்டத்தின்’ கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ அரிசி வழங்குவதாகும். பின்னர் இது ஏழு கிலோவாக உயர்த்தப்பட்டது.

அவருடைய நலத்திட்டங்களின் செலவு 4410 கோடி ரூபாய். இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம், தலித்/பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி, ஏழைகளின் பழைய மின்கட்டணங்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

இருப்பினும் சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் முதல்வர் சித்தராமையாவின் அணுகுமுறை அவருக்கு எதிராகச் சென்றது.

2018ஆம் ஆண்டில், லிங்காயத்துகளின் கோரிக்கைப்படி அவர்களுக்கு தனி மத அந்தஸ்து வழங்க பரிந்துரைத்தது அவரது மிகவும் சர்ச்சைக்குரிய முடிவு. அவர் அதை அறிவித்தார், ஆனால் அது லிங்காயத் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை மக்களுக்கு விளக்கவில்லை.

இதன் மூலம் லிங்காயத் சமூகத்தை பிளவுபடுத்த சித்தராமையா முயற்சி செய்வதாக பாஜகவுக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

அவரது மற்றொரு முடிவு, தனது பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரியில் போட்டியிடுவது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, சித்தராமையா அங்கு கால் வைத்ததில்லை.

தேர்தலில் சித்தராமையா படுதோல்வி அடைந்தார். அதேநேரம் தனது இரண்டாவது தொகுதியான பாதாமியில், வெறும் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது சித்தராமையாவின் பிரபலம் தெளிவாகத் தெரிந்தது.

"அவரது கூட்டங்களில் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. அவர் எங்கு சென்றாலும், அவரை வரவேற்கவும் அவர் பேசுவதைக் கேட்கவும் மக்கள் கூடுவது வழக்கம்,” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/czkxe2197mko

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.