Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிவகாமியின் சபதம்' நாவலின் கதை என்ன? சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடுத்தபடியாக கல்கி எழுதிய நாவல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சிவகாமியின் சபதம் நாவல்தான். அந்த நாவலின் கதையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாமா?

1940களில் கல்கி இதழில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்த இந்த நாவல், பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.

இந்த நாவலின் முக்கியமான பாத்திரங்கள்: பரஞ்சோதி, ஆடலரசி சிவகாமி, அவளுடைய தந்தையும் பல்லவ நாட்டின் தலைமைச் சிற்பியுமான ஆயனர், பௌத்தத் துறவி நாகநந்தி, பல்லவ நாட்டின் இளவரசன் நரசிம்மப் பல்லவன், மன்னன் மகேந்திரவர்மப் பல்லவன், சாளுக்கிய மன்னன் புலிகேசி ஆகியோர்.

ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாளுக்கிய நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது படையெடுத்து, மகேந்திர வர்மப் பல்லவனைத் தோற்கடித்தார். இதற்குப் பழிவாங்கக் காத்திருந்த இளவரசன் நரசிம்மப் பல்லவன் சில ஆண்டுகளுக்குப் பிறகு புலிகேசியின் தலைநகரமான வாதாபி மீது படையெடுத்து, அந்நகரைத் தீக்கிரையாக்கினார். வாதாபி கொண்டான் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார். இந்த சரித்திரப் பின்னணியில்தான் சிவகாமியின் சபதம் நாவலைப் படைத்திருந்தார் கல்கி.

ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். காஞ்சிபுரத்தை நோக்கிச் செல்லும் பாதை அது. ஒரு புத்த பிட்சுவும் இளைஞன் ஒருவனும் அந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். இளைஞனின் பெயர் பரஞ்சோதி. செங்காட்டாங்குடியைச் சேர்ந்த பரஞ்சோதி, அரச பணியில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் படிப்பறிவில்லாதவன் என்பதால், அவனுக்குத் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க அவனுடைய மாமன் மறுத்துவிடுவதால், நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிக்கவே காஞ்சி நகரத்தை நோக்கி வருகிறான் பரஞ்சோதி.

 

அதே வழியில் காஞ்சிக்குச் செல்லும் ஒரு புத்த பிட்சு பரஞ்சோதியுடன் பேச ஆரம்பிக்கிறார். அவர்கள் இருவரும் காஞ்சி நகரக் கோட்டையை அடையும்போது, இரவாகிவிடுகிறது. அன்று நகரத்திலேயே மிகச் சிறந்த நடன மங்கையான சிவகாமியின் நடனம் நடந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த மன்னர் மகேந்திரவர்மனும் இளவரசன் நரசிம்மனும் அவசரமாக வெளியேறிவிட்டதாகத் தெரிந்துகொள்கிறார்கள் இருவரும்.

பிறகு, பரஞ்சோதி நாவுக்கரசர் மடத்தை நோக்கிச் செல்ல, புத்த பிட்சு வேறு திசையில் செல்கிறார். பரஞ்சோதி மடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிவிகையில் வந்த பெண்ணையும் அவளது தந்தையையும் யானை ஒன்று துரத்துகிறது. யானை மீது பரஞ்சோதி தன் கையில் இருந்த வேலை எறிகிறான். யானை அவனைத் துரத்த ஆரம்பிக்கிறது. பெண்ணும் அவள் தந்தையும் காப்பாற்றப்படுகிறார்கள். அவர்கள், வேறு யாருமல்ல ஆடலரசி சிவகாமியும் அவள் தந்தை ஆயனரும்தான்.

அப்போது அங்கு வரும் மகேந்திர வர்மனும் நரசிம்மப் பல்லவனும் நடந்ததைக் கேட்டறிகிறார்கள். நரசிம்மப் பல்லவன், யானைத் தாக்கிய பரஞ்சோதியின் முறிந்தவேலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறான். பரஞ்சோதியைத் தேடிப்பிடிக்க வீரர்களுக்கு உத்தரவிடுகிறான்.

நாவுக்கரசர் மடத்தைத் தேடியலையும் பரஞ்சோதியை கண்டுபிடிக்கும் வீரர்கள், அவனை ஒரு இருட்டறையில் போட்டு பூட்டிவிடுகின்றனர். அன்று இரவு அவன் அடைபட்டிருந்த அறையிலிருந்து ஒரு கயிற்றின் மூலம் அவனை மீட்கிறார் புத்த பிட்சு. அவர் பெயர் நாகநந்தி என்பது தெரிகிறது. பரஞ்சோதியை அழைத்துக்கொண்டு காஞ்சியின் ராஜ விகாரைக்குச் செல்லும் நாகநந்தி, கோட்டையை விட்டு வெளியேறிவிடுவதே நல்லது என அவனை எச்சரிக்கிறார். இருவரும் கோட்டையைவிட்டு வெளியேறுகிறார்கள்.

இதற்கிடையில், வாதாபியின் மன்னாக இருந்த புலிகேசி லட்சக்கணக்கான வீரர்கள், குதிரைகள், யானைகளுடன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வருவதாகவும் அவன் துங்கபத்திரை நதியைத் தாண்டிவிட்டதாகவும் மகேந்திர வர்மனுக்குத் தெரியவருகிறது.

சிவகாமியின் தந்தை ஆயனர் ஒரு சிற்பி. அவர் ஒரு வனத்தின் அருகில் தனது சிற்பக் கூடத்தை அமைத்திருந்தார். அவரை மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் வெகுவாக ஆதரித்துவந்தனர். இந்த நிலையில், கோட்டையை விட்டு வெளியேறிய நாகநந்தியும் பரஞ்சோதியும் அந்த சிற்பக் கூடத்திற்கு வந்தனர். பரஞ்சோதிதான் யானை மீது வேலெறிந்து தங்களைக் காப்பாற்றியவன் என்பது ஆயனருக்குத் தெரிந்தது. அவனைத் தன் சீடனாக ஏற்றுக்கொள்கிறார் ஆயனர்.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிவகாமியும் இளவரசர் நரசிம்மரும் காதலித்து வருகின்றனர். அவளைப் பார்க்க வரும் நரசிம்மரிடம், யானை மீது வேல் எறிந்த வாலிபன் தங்கள் வீட்டில்தான் இருப்பதாக சிவகாமி தெரிவித்தாள். இதையடுத்து அவனைப் பார்க்க விரும்பினார் நரசிம்மவர்மன். அவர் ஆயனரின் வீட்டிற்குச் சென்றபோது, மகேந்திர வர்மரும் ஆயனரைப் பார்க்கவருகிறார்.

மகேந்திரரும் நரசிம்மரும் அங்கே வருவதை அறிந்த பரஞ்சோதியும் நாகநந்தியும் ஒரு புத்தர் சிலைக்குப் பின்னால் மறைந்துகொண்டனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, அடுத்த நாள் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து தன்னைச் சந்திக்கும்படி கூறிவிட்டுச் செல்கிறார் மகேந்திர வர்மன்.

மன்னரும் இளவரசரும் வருவதற்கு முன்பாக, ஆயனருடன் நாகநந்தியும் பரஞ்சோதியும் பேசிக்கொண்டிருந்தனர். பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பினால் அவன் அங்கிருந்து அஜந்தா ஓவியங்களின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டுவர முடியும் எனக் கூறினார் நாகந்தி. யுத்த காலத்தில் பயணம் செய்ய வேண்டியருப்பதால் முத்திரை இலைச்சினையை வாங்கிக்கொடுங்கள் என்கிறார் நாகநந்தி. அந்த நேரத்தில்தான் அரசரும் இளவரசரும் வரவே இருவரும் ஒரு புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்கள்.

ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர வர்மன், ஆயனரின் வீட்டைக் கண்காணிக்க தலைமை ஒற்றனான சத்ருக்னன் என்பவனுக்கு கட்டளையிடுகிறார். நரசிம்மன் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, தாங்கள் அங்கிருந்தபோது இரண்டு பேர் ஒளிந்திருந்தாகக் கூறுகிறார் மகேந்திர வர்மன். அங்கேயே அவர்களைப் பிடித்திருக்கலாமே எனக் கேட்டபோது, புத்த விகாரையில் உள்ள மர்மத்தைக் கண்டறிவதற்காகவே அவர்களை விட்டுவைத்ததாகச் சொல்கிறார் மகேந்திரவர்மன்.

பிறகு, நரசிம்மனிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொள்கிறார். அதாவது, தான் போருக்காக வடக்கே செல்லும்போது, நரசிம்மன் காஞ்சிக் கோட்டையை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். தான் போரில் இறந்துவிட்டாலும் பழிவாங்க அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சத்தியத்தை அவர் வாங்குவதாகச் சொல்கிறார்.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த நாள் ஆயனரும் சிவகாமியும் மாமல்லபுரத்தை வந்தடைந்தனர். பரஞ்சோதிக்காக வேல், குதிரை, இலைச்சினை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தார் ஆயனர். மாமல்லபுரத்தில் ஐந்து குன்றுகளையும் கோவில்களாக ஆக்கும் பணிகள் துவங்கியிருந்தன. பணிகள் முடியும்வரை அங்கேயிருந்து, அந்த வேலைகளைக் கண்காணிக்க வேண்டும் என ஆயனரிடம் கேட்டுக்கொள்கிறார் மகேந்திர வர்மன். தான் போருக்காக வடக்கே செல்லப்போவதாகவும் தான் திரும்பும்வரை, நரசிம்மவர்மனே நாட்டைக் கவனிப்பான் என்றும் சொல்கிறார்.

இதற்கு அடுத்த வாரம், பரஞ்சோதி நாகார்ஜுன மலையை நோக்கிப் புறப்பட்டான். அவன் ஒரு வறண்ட பிரதேசத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, வஜ்ரபாஹு என்ற வீரனின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அன்று இரவு ஒரு விடுதியில் தங்கினார்கள். இரவில் தூங்கும்போது பரஞ்சோதியிடம் இருந்த ஓலையை வஜ்ரபாஹு மாற்றி வைத்தான். பிறகு, பரஞ்சோதியிடம் சொல்லாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுகிறான்.

பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பரஞ்சோதி, பாபாக்னி நதியும் பெண்ணாறும் சந்திக்கும் இடத்தில் இருந்த விகாரையைச் சென்றடைந்தான். அங்கிருந்த தலைமை பிக்ஷு அவனிடம் தமிழில் பேசினார். ஆனாலும் அவரிடம் ஓலையைக் கொடுக்க மறுத்துவிட்டான் பரஞ்சோதி. சத்யாச்ரயர் என்பவரிடம்தான் கொடுக்க முடியும் எனக் கூறுகிறான் பரஞ்சோதி.

அடுத்த நாள், அவனைச் சில வீரர்களுடன் அனுப்பிவைக்கிறார் அந்த பிக்ஷு. ஆனால், அந்த வீரர்கள் திடீரென அவனைச் சிறைப்படுத்தி புலிகேசியின் பாசறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். புலிகேசியிடம் பரஞ்சோதியை அழைத்துச் செல்லும் வழியில் வஜ்ரபாஹுவை மீண்டும் சந்தித்தான் பரஞ்சோதி. "பயப்படாதே மன்னனிடம் உண்மையை மட்டும் சொல்" என்றான் வஜ்ரபாஹு.

அவனிடம் இருந்த ஓலையைப் படித்துப் பார்த்தான் புலிகேசி. "இந்த ஓலை கொண்டுவருகிற பையனிடம் அஜந்தா வர்ண இரகசியத்தைச் சொல்லி அனுப்ப வேணுமாம். இரண்டு வருஷம் நான் அஜந்தா குகைகளிலேயே வசித்திருந்தும் அந்தப் புத்த பிக்ஷுக்களிடமிருந்து வர்ண இரகசியத்தை என்னால் அறிய முடியவில்லை. அப்படியிருக்க இந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லி அனுப்பும்படி இந்த ஓலையில் எழுதியிருக்கிறது. இதில் வேறு ஏதாவது விஷயம் இருக்கலாம்" என்றார் புலிகேசி.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, புலிகேசியின் சகோதரர் விஷ்ணுவர்த்தனுக்கு ஏதாவது செய்தி இருக்கலாம் என்றான் வஜ்ரபாஹு. அவரிடமும் இந்த ஓலையை காட்டலாம். அவருக்குப் புரியாவிட்டால், பரஞ்சோதியை சிரச்சேதம் செய்துவிடலாம் என்று முடிவானது. இதையடுத்து அடுத்த நாள் ஒன்பது வீரர்களுடன் பரஞ்சோதி புறப்பட்டான்.

அன்று இரவு ஓரிடத்தில் அவர்கள் தங்கியபோது, ஒரு கிழவன் வந்து அவனை அழைத்துச் சென்றான். அவன்தான் வஜ்ரபாஹு என்பது பிறகு தெரியவந்தது. இருவரும் சேர்ந்து ஒன்பது வீரர்களையும் கொன்றார்கள்.

பிறகு வஜ்ரபாஹு நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான். அதாவது, நாகநந்தி எழுதிக் கொடுத்த ஓலையில், புலிகேசியை காஞ்சி நகருக்கு வந்து முடிசூடிக்கொள்ளும்படி கூறியிருந்ததாகவும் அதனால்தான் அந்த ஓலையை தான் மாற்றியதாகவும் கூறுகிறான் வஜ்ரபாஹு.

பிறகு, இருவரும் பல்லவ படை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அந்தப் படை மிகச் சிறியதாக இருந்தது. தான் பல்லவ சைன்யத்தில் சேர விரும்புவதாகச் சொல்கிறான் பரஞ்சோதி. அரசன் மகேந்திர வர்மனிடம் கேட்டுவிட்டு, அவனை மன்னரிடம் அழைத்துச் செல்வதாகச் சொன்னான் வஜ்ரபாஹு. பிறகு மன்னர் வந்தார். படையில் இணைகிறான் பரஞ்சோதி.

இதற்கு எட்டு மாதங்கள் கழித்து, காஞ்சிக் கோட்டைக்கு, அந்தக் கோட்டையின் தளபதியாக திரும்புகிறார் பரஞ்சோதி. போர்க்களத்தில் நடக்கும் செய்திகளை மகேந்திரவர்மன் நரசிம்மருக்கு ஓலைகள் மூலம் சொல்லிக்கொண்டே இருந்ததால், பரஞ்சோதியைப் பற்றி, கோட்டைக்குள்ளேயே இருந்த நரசிம்ம வர்மனுக்கு தெரிந்திருந்தது. இதனால், முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களானார்கள்.

இதற்குப் பிறகு சிவகாமியின் வீட்டிற்கு வந்த பரஞ்சோதி, தன்னால் அந்த வர்ணக் கலவையின் ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆயனரிடம் கூறுகிறார். புலிகேசியின் படை காஞ்சியை நோக்கி வருவதால் காஞ்சிக் கோட்டைக்குள் ஆயனரும் சிவகாமியும் சென்றுவிட வேண்டுமென மகேந்திரவர்மன் சொல்லியிருப்பதாக பரஞ்சோதி சொன்னார். ஆனால், கோட்டைக்கு வெளியே வனப்பகுதியிலேயே இருந்துவிடலாம் என ஆயனரும் சிவகாமியும் முடிவுசெய்தார்கள்.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தன் மகளை பரஞ்சோதிக்குத் திருமணம் செய்து தரலாமா என்று யோசித்தார் ஆயனர். அந்த நேரத்தில் நாகநந்தி அங்கே வந்தார். அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்துவராமல் பரஞ்சோதி ஏமாற்றிவிட்டதாக நாகநந்தியிடம் கூறினார் ஆயனர். பதிலுக்கு, நரசிம்மவர்மன் கோழை என்றும் பெண்பித்தன் என்றும் குறைகூறினார் நாகநந்தி. இதைக் கேட்டு வேதனையடைந்தாள் சிவகாமி.

இதற்கிடையில் சத்ருக்னன் நாகநந்தியை ஒற்றுப் பார்த்ததில் கிடைத்த விவரங்களை மகேந்திர வர்மனிடம் தெரிவித்தார். நாகநந்தி மதுரைக்குச் சென்று பாண்டியனிடம் படைதிரட்டும் படி கேட்டிருப்பதாகக் கூறினான். மேலும் நரசிம்ம வர்மனும் சிவகாமியும் காதலிப்பதாகவும் தெரிவித்தான் சத்ருக்னந்.

இதைக்கேட்ட மகேந்திரவர்மன், நரசிம்மனுக்கு ஓலை ஒன்றை அனுப்புகிறார். அந்த ஓலையில் தலைக்காட்டிலிருந்து புறப்பட்டுவரும் துர்வீனதனை முறியடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆயனரையும் சிவகாமியையும் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கும்படியும் கூறியிருந்தார்.

அந்த ஓலை வந்தவுடன் நரசிம்மரும் பரஞ்சோதியும் ஆயனர் வீட்டிற்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. ஆயனர், நாகநந்தி, சிவகாமி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு, அசோகபுரம் என்ற ஊரில் இருந்த விகாரையில் சென்று தங்கினர். அந்தப் பயணத்தின்போது மகேந்திர வர்மர் பற்றியும் நரசிம்மர் பற்றியும் மோசமாகப் பேசிக்கொண்டே வந்தார் நாகநந்தி.

அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, பலர் போரிலிருந்து தப்பி ஓடுவதைப் பார்த்தார்கள். அவர்களை நரசிம்மரும் பரஞ்சோதியும் துரத்திக்கொண்டு சென்றார்கள். பிறகு, ஆயனர், சிவகாமி, நாகநந்தி, நரசிம்மவர்மன் ஆகிய அனைவரும் மண்டகப் பட்டு என்ற கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் அந்தக் கிராமத்தில் தங்கியிருந்தபோது நரசிம்மவர்மரை விஷக் கத்தி மூலம் கொல்ல பல முறை நாகநந்தி முயன்றார். ஆனால், சிவகாமி அருகில் இருந்ததால் அது நடக்கவில்லை.

ஆயனரும் சிவகாமியும் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மகேந்திரவர்மர், சிவகாமியிடம் தனிமையில் பேசினார். காஞ்சியை வாதாபி படைகள் நெருங்கி வருவதாகவும் மற்றொரு புறம், பாண்டியப் படைகள் நெருங்கி வருவதாகவும் கூறினார். அதனால், பாண்டிய இளவரசியை நரசம்மவர்மன் திருமணம் செய்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் அதனால், அவனுக்கு சிவகாமி தன் காதலில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். இதைக் கேட்டு, சிவகாமி மிகுந்த வருத்தமுற்றாள்.

இதற்குப் பிறகு நாகநந்தியை கைதுசெய்ய உத்தரவிடுகிறார் மகேந்திர வர்மர். காஞ்சியை வாதாபி படைகள் முற்றுகை இடுகின்றன. இந்த முற்றுகை எட்டுமாத காலம் நீடித்தது. எவ்வளவு முயன்றும் வாதாபியின் படைகளால் கோட்டைக்குள் புக முடியவில்லை. உணவுப் பொருள் கையிருப்பு தீர்ந்து வந்தது. அதனால், பல்லவர்கள் மீது கோபமாக இருந்த ஜயந்தவர்ம பாண்டியனுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டான் புலிகேசி. ஆனால், காஞ்சியின் தலைமை ஒற்றன் சத்ருக்னனின் பணியாளான குண்டோதரன் புலிகேசியின் மனதைக் குழப்பிவிடுகிறான்.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் தான் தோற்றுவிடலாம் எனப் பயந்து, புலிகேசி மகேந்திர வர்மனுக்கு சமாதானத் தூது அனுப்பினார். இதை ஏற்காத நரசிம்மவர்மனையும் பரஞ்சோதியையும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல ஆணையிட்ட மகேந்திரவர்மன், புலிகேசியின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டார்.

பிறகு புலிகேசியிடம் பேசும்போது, வஜ்ரபாகுவாக வந்தது தானே என்பதைத் தெரிவித்தார் மகேந்திர வர்மர். பரஞ்சோதி கொண்டுவந்த ஓலையில், உடனடியாக காஞ்சி மீது படையெடுக்கும்படி கூறப்பட்டிருந்தாகவும் தானே அதை மாற்றிவைத்ததாகவும் மகேந்திரவர்மர் கூறினார். இதைக் கேட்ட, புலிகேசி ஆத்திரமடைந்தார். இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

காஞ்சியிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, நாகநந்தியை விடுவிக்கலாமே எனக் கோரினார் புலிகேசி. முறைப்படி கேட்டால் விடுவிக்கலாம் என்றார் மகேந்திரவர்மன். அதற்கு புலிகேசி மறுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கோட்டைக்கு வெளியில் வந்த புலிகேசிக்கு பயங்கர ஆத்திரமாக இருந்தது. இதனால், மகேந்திரவர்மனைப் பழிவாங்க காஞ்சியைச் சுற்றியுள்ள ஊர்களை அழிக்க உத்தரவிட்டான். சிற்பங்களைச் சிதைக்கவும் சிற்பிகளின் கைகளை உடைக்கவும் உத்தரவிட்டார். கோட்டையிலிருந்து ரகசியமாக வெளியேறிய சிவகாமியையும் ஆயனரையும் புலிகேசியின் வீரர்கள் பிடித்துக்கொண்டனர். அப்போது புலிகேசியின் வேடத்தில் வந்த நாகநந்தி ஆயனரைக் காப்பாற்றி, வீட்டில் சேர்த்தார். சிவகாமி புலிகேசியால் கடத்திச் செல்லப்பட்டாள்.

இதையடுத்து, நரசிம்மவர்மனுக்கும் பரஞ்சோதிக்கும் திரும்பி வரும்படி ஓலையனுப்பிய மகேந்திர வர்மன், புலிகேசி மீது படையெடுத்தார். அதில் பலத்த காயமடைந்தார். சிவகாமியை புலிகேசி கடத்திச் சென்றதில் நரசிம்மர் மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். சாளுக்கிய நகரங்களைக் கொளுத்த வேண்டுமென நினைத்தார். பிறகு ஆயனர் வீட்டில் ஒற்றர் தலைவன் சத்ருக்னனை சந்தித்தார் நரசிம்மர். அப்போது சிவகாமியை புலிகேசி தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றிருப்பதை உறுதிசெய்தான் சத்ருக்னன்.

புலிகேசியும் அவரது படைகளும் வாதாபி நகரை நோக்கிச் செல்லும்போதுதான், புலிகேசியும் நாகநந்தியும் சகோதரர்கள் என்ற உண்மை சிவகாமிக்குத் தெரிந்தது. தனக்கு சிவகாமியை விட்டுத்தரும்படி புலிகேசியிடம் கேட்டார் நாகநந்தி.

சிவகாமி வாதாபியில் சிறைப்பட்டிருப்பதை அறிந்த மகேந்திர வர்மன், நரசிம்மவர்மனும் பரஞ்சோதியும் மாறுவேடத்தில் வாதாபிக்குச் சென்று அவளை மீட்டு வர வேண்டுமெனச் சொன்னார். இதையடுத்து நரசிம்மவர்மன், பரஞ்சோதி, சத்ருக்னன், குண்டோதரன் உள்ளிட்டோர் வாதாபிக்குப் புறப்பட்டார்கள்.

இதற்கிடையில் வாதாபியில், தமிழ் பேசுபவர்கள் முச்சந்தியில் வைத்து சாட்டையால் அடிக்கப்படுவதைப் பார்த்தாள் சிவகாமி. அவர்கள் அப்படி துன்புறுத்தப்படாமல் இருக்க வேண்டுமானால், சிவகாமி முச்சந்தியில் ஆடவேண்டும் என்றான் புலிகேசி. அதனால், முச்சந்தியில் ஆட ஆரம்பித்தாள் அவள்.

சில நாட்கள் கழிந்து வாதாபிக்கு வந்த நாகநந்தி, இதனைக் கேட்டு மனம் வருந்தினான். சிவகாமிக்காகவே எல்லாவற்றையும் செய்ததாகவும் இப்போது அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதற்கு தானே காரணம் என்றும் வருந்தினான். அவளைத் திருப்பி காஞ்சிக்கே அனுப்பிவிடுவதாகவும் கூறினான். ஆனால், அதனை ஏற்க மறுத்த சிவகாமி, தன்னை நரசிம்ம வர்மன் வந்து மீட்டு, வாதாபியை தீக்கிரையாக்கும்வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று சபதமிட்டாள்.

பிறகு மாறுவேடத்தில் வாதாபிக்கு வந்த நரசிம்மரும் பரஞ்சோதியும் சிவகாமியை சந்தித்து தங்களுடன் வந்துவிடும்படி கேட்டனர். ஆனால், அவள் தன் சபதத்தைப் பற்றிக் கூறி மறுத்துவிட்டாள். நரசிம்மவர்மர் எவ்வளவு கேட்டும் மறுத்துவிட்டாள் சிவகாமி.

'சிவகாமியின் சபதம்' கதை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஞ்சி திரும்பிய நரசிம்ம வர்மரிடம் வம்சம் தழைக்கவும் படைகளைப் பெருக்கவும் பாண்டிய இளவரசியை மணக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மகேந்திர வர்மன். நரசிம்ம வர்மன், பரஞ்சோதி ஆகிய இருவரின் திருமணங்களும் ஒரே நேரத்தில் நடந்தது.

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து ஒன்பது வருடங்கள் கழிந்த பிறகு வாதாபி மீது நரசிம்மவர்மன் படையெடுத்தான். அவனுக்கு பாண்டிய படைகளும் இலங்கை இளவரசனும் உதவியாக வருவதாக இருந்தார்கள். ஆனால் சமணர்களின் குறுக்கீட்டால், பாண்டியன் நெடுமாறன் வரவில்லை. இருந்தபோதும் பல்லவப் படைகள் வாதாபியை நோக்கிப் புறப்பட்டன.

இதற்கிடையில் நாகநந்தி, சிவகாமியை தன்னைக் காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திவந்தார். வாதாபியை நெருங்கிய பல்லவ படைகள் மூன்று நாட்கள் போருக்குப் பிறகு கோட்டையை நெருங்கின. ஆனால், புலிகேசி இருக்குமிடம் தெரியவில்லை.

வாதாபியை தீயிட வேண்டாம் என ஓலை அனுப்பினாள் சிவகாமி. அது நரசிம்மருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், போரில் இறந்துபோன புலிகேசிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் நாகநந்தி. பிறகு தானே புலிகேசியைப் போல வேடம் பூண்டுகொண்டார்.

இதற்குப் பிறகு வாதாபியை கொளுத்த நரசிம்ம வர்மன் உத்தரவிட்டார். வாதாபி பற்றி எரிந்தது. சிவகாமியை தூக்கியபடி சுரங்கத்தின் வழியாக வெளியேற முயன்ற நாகநந்தியை அனைவரும் சுற்றி வளைத்தனர். சிவகாமியை கொல்ல முயன்ற நாகநந்தியின் ஒரு கையை வெட்டினார் பரஞ்சோதி.

இதற்குப் பிறகு சிவகாமியை மீட்டு ரதத்தில் காஞ்சிக்கு அனுப்பிய நரசிம்மர், அங்கு ஒரு வெற்றித் தூணை நட ஏற்பாடு செய்தார். வெற்றித் தூணை நட்ட பிறகு, தான் துறவறம் போவதாக அறிவித்தார் பரஞ்சோதி. அதற்குப் பிறகு அவர் சிறு தொண்டர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்.

நரசிம்மருக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிந்த சிவகாமி, மனம் உடைந்து, நடனக் கலைக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தாள்.

https://www.bbc.com/tamil/articles/c4nwyq13rv7o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.