Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோரமா: தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத முத்திரையை பதித்த 'ஆச்சி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனோரமா

பட மூலாதாரம்,S KUMARESAN

26 மே 2023, 05:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே.

இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.

குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் நாடக உலகில் பாராட்டப்பட்டார்.

வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரசார நாடகங்கள்தான்.

மாலையிட்டன் மங்கையில் தொடங்கிய திரையுலக பயணம்

திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத் தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாகப் பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் 'ஆச்சி' என அழைக்கப்பட்ட மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த, காலத்தால் அழித்துவிட முடியாத புகழைப் பெற்ற ஒரு நடிகை.

திமுக நிறுவனர் சி.என்.அண்ணாதுரை, மு. கருணாநிதி, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ ஜெயலலிதா, ஆந்திராவின் தெலுகு தேசம் நிறுவனர் என்.டி.ராமராவ் என ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர் மனோரமா.

மிகச்சிறந்த நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்திறமைகள் அவரை சுமார் அரை நூற்றாண்டுகாலம் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக வைத்திருந்தது.

ஆரம்பத்தில் நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958ஆம் ஆண்டு வெளியான "மாலையிட்ட மங்கை" திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

அவர் முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.

மனோரமா

பட மூலாதாரம்,S KUMARESAN

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்க வைத்த நடிப்பு

மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முக்கிய திரைப்படமாக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜி மற்றும் திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினியின் நடிப்புக்கு சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக கதாபாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.

அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர்.

1960களாக இருந்தாலும், 2000த்துக்கு பிறகான காலம் ஆனாலும் மனோரமா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாகக் குடியிருக்கும் கதாபாத்திரங்கள்.

கண்ணத்தாவாக சிரிக்க வைத்த பாட்டி சொல்லை தட்டாதே, கங்காபாய் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் மதனகாமராஜன், தாயம்மாவாக கிச்சுகிச்சு மூட்டிய சிங்காரவேலன், அனுஷ்காவின் பாட்டியாகத் தோன்றிய சிங்கம், சிங்கம் 2 என எண்ணற்ற திரைப்படங்களில் மனோரமாவின் கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகின்றன.

மனோரமா

நவரசங்களுக்கும் நாயகி மனோரமா

அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்குப் போட்டி போட்டு நடித்தவர்.

நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர். பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. அவரது நடிப்பு தனித்துவம் வாய்ந்தது.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி எனப் பாராட்டப்பட்டார்

நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் நிற்பவை. மனோரமாவை திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.

மனோரமா

மனோரமா பாடிய பாடல்கள்

  • ‘மகளே உன் சமத்து’ என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்தத் தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.
  • பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்
  • கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..”
  • பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்
  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல்

இப்படியாக மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்த பாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.

மனோரமா
 
படக்குறிப்பு,

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரச நடிப்புக்கும் அவர் அரசி என்பது விமர்சகர்கள் கருத்து

‘ஆச்சி’யின் ஆயிரம் படங்கள் சாதனை

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா.

அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு அதிகம். திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தபோதும் அவர் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்தவர். அவர் நடித்த மேடை நாடகங்களின் எண்ணிக்கை 5000 வரை இருக்கலாம் என்றும் சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர பல வானொலி நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் மனோரமா நடித்திருக்கிறார். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.

இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுடன் ஏராளமான திரைத்துறைக்கான விருதுகளையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற, தமிழ் சினிமா ரசிகர்களின் அன்புக்குரிய ஆச்சியாக வலம் வந்த மனோரமா 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4n31145nnxo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.