Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

மூன்றாம் ஈழப்போரில் சிங்கள வான்படையின் யாழ். குடாநாட்டிற்கான வான்வழி வழங்கல்கள் இரு அவ்ரோ வானூர்திகளின் சுட்டுவீழ்த்தலுடன் முடக்கப்பட்டதால் விரைவான வழங்கலுக்கு வழியற்றுப் போனது. இந்த நிலைமையில் தான் கடல்வழி வழங்கல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றன. 

அதன் போது, 1996, 1997 ஆண்டுக் காலத்தில், யாழ் குடாநாட்டில் தரிபெற்றுள்ள சிங்களப் படைக்கான கடல் வழி வழங்கலையும் நிறுத்தும் நோக்கோடு கடற்புலிகள் கடலில் பயணித்த சிங்களக் கடற்படையின் வழங்கல் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டதோடு சில கப்பல்களை சிறைபிடிக்கவும் - சில நாட்கள் கழித்து விடுவித்தனர் - செய்தனர். குறிப்பாக தீவின் மேற்குக் கடற்பரப்பில் புலிகளின் வலிதாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டதால் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ் குடாநாட்டிற்குச் மூலம் செல்வது பாதுகாப்பற்றது என்பது தெரிந்ததால், முதலில் திருமலை சென்று அங்கிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்வதே நல்லம் என்று சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 1998 சனவரி மாதத்தில் அறிவுரை கூற அதன் படி சிங்களப் படையும் ஒழுகியது. 

இது கடலில் கடற்புலிகளின் ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவடால் ஆக கருதப்பட்டது என்று கடற்புலிகளின் சிறப்புக்கட்டளையாளர் பிரிகேடியர் சூசை குறிப்பிட்டார். 

இந்தச் சவடாலிற்கு முடிவு கட்டி வெல்லும் நாளிற்காக கடற்புலிகள் காத்திருந்தனர். அப்போதுதான் ஒரு உளவுத்தகவல் புலிகளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. 

பெப்ரவரி 22, 1998 அன்று 650 படைவீரர்களை ஏற்றவல்ல "சக்தி" என்ற தரையிறக்கக் கலத்தில் 400 வரையான படைவீரர்களும், "பப்பதா" என்ற எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலத்தில் (Landing Craft Mechanized) வகை-89 தகரிகள் (Tank) இரண்டும் அவற்றிற்கான கணைகளும் கொஞ்சப் படைவீரர்களும், 27-30 வரையான படையினரோடு "வலம்புரி" (இது தீவக மக்களின் போக்குவரத்திற்கு என்று சொல்லி கொழும்புக் கட்டுத்துறையில் கட்டப்பட்டு பின்னர் படைத்துறையால் எடுத்துக்கொள்ளப்பட்டது ஆகும்) என்ற படைய வலசை (Military ferry) ஆகியனவோடு இவற்றிற்கான ஏமத்திற்காக இரண்டு சுடுகலப் படகுகளும் இரண்டு டோறாக்களும் என மொத்த 7 கடற்கலங்கள் அடங்கிய தொடரணி ஒன்று நண்பகல் வேளையில் திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்படப் போகின்றது என்பதே அவ்வுளவுத் தகவல் ஆகும்.  

Valampuri ship (Left) and Pabbatha LC (Right) on the day of attack.jpg

'சமர் நடந்த நாளில் கடற்புலிகளால் எடுக்கப்பட்ட நிகழ்படக் காட்சியிலிருந்து: இடது பக்கம் நிற்பது வலம்புரி, வலது பக்கம் நிற்பது பப்பதா | படிமப்புரவு(Img. crd.): நிதர்சனம்'

 

This is Ranagaja. Pabbatha (sunk 1998) looks exactly like this

'இது ரணகஜ. மூழ்கடிக்கப்பட்ட பப்பதாவும் இதனை ஒத்த தோற்றத்தையே கொண்டது | படிமப்புரவு: navy.lk'

இவை தம் பயணத்தினை வல்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகரான திருமலையிலிருந்து காலை 7 மணியளவில் வெளிக்கிட்டு பகல் நேரத்தில் முல்லைத்தீவை அடைந்து பின்னர் காங்கேசன்துறையை அடைவதற்கு மாலை 8 அல்லது 9 மணி சொச்சம் ஆகும். 

இவற்றில் இருந்த படைஞர்களில் பெரும்பாலானோர் தமது விடுமுறையினை முடித்து விட்டு தத்தம் கடமைகளுக்கு; தமிழீழ வல்வளைப்பிற்கு; திரும்பிக்கொண்டிருந்தவர்கள் ஆவர்.

அந்த இரண்டு தகரிகளும் கொழும்பில் சிறிலங்காச் சுதந்திர நாள் கொண்டாடத்தில் பங்குபெறுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் வடக்குச் சமர்க்களத்திற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தன ஆகும். 

இதைத் தாக்குவதற்கு கடற்புலிகள் ஆயத்தமாகினர். புறப்படுவதற்கு முன்பாக போராளிகளுடன் சேர்ந்து கட்டளையாளர்களும், கப்பலை அழிக்காது தளம் திரும்புவதில்லை என்று உறுதியெடுத்துக்கொள்கின்றனர்.

இந்தத் தொடரணியை தாக்குவதற்காக கடற்புலிகளின் துணைக் கட்டளையாளராகிய லெப். கேணல் நிரோஜன் அற்றைச் சமரின் தாக்குதல் கட்டளையளராக பணியமர்த்தப்பட்டார்.

லெப். கேணல் நிரோஜனின் தலைமையில் அவரைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட சண்டைப்படகொன்றும் அவருக்கு உதவியாக லெப். கேணல் மதியை கட்டளை அதிகாரியாகக் கொண்ட ஒரு வோட்டர்ஜெட் வகுப்புச் சண்டைப்படகும் தயாராகின. இவர்களோடு மோதியிடிப்பதற்காக கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் (இவரோடு கடற்கரும்புலிகளான மேஜர் குமரேஸ், கப்டன் ஜனார்த்தனி, கப்டன் வனிதா), கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (இவரோடு கடற்கரும்புலிகளான மேஜர் தமிழ்நங்கை, மேஜர் தமிழினியன், கப்டன் நங்கை), கடற்கரும்புலி மேஜர் மொறிஸ் (இவரோடு கடற்கரும்புலி மேஜர் மதன் (பின்னாளில் வேறொரு கடற்சமரில் வீரச்சாவடைந்தார்)) ஆகிய கடற்கரும்புலிகளைக் கட்டளை அதிகாரிகளாகக்கொண்ட மூன்று வெள்ளை வகுப்பு இடியன்களுமாக மொத்தம் 5 படகுகள் ஒரு கலத்தொகுதியாகப் (Flotilla) புறப்பட்டுச் சென்றன. இவர்களின் நோக்கம் சக்தியை மூழ்கடிப்பதாகும்.

இவர்களின் கலத்தொகுதியானது சிங்களத்தின் தொடரணி முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்பரப்பைத் தாண்டி வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த போது, 20 கடல்மைல் உயரத்தில், வட்டுவாகலிலிருந்து புறப்பட்டு கடற்படையை மேவியபடி 30 கடல்மைல் உயரத்தில் அவர்களை கிட்டத்தட்ட 15 மைல் தொலைவு இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்து சென்றது. அதாவது இவர்களுக்குக் கீழை தான் சிங்களத் தொடரணி சென்றுகொண்டிருந்தது. தமிழரின் இக்கலத்தொகுதியின் நோக்கம் சிங்களத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த "சக்தி"யை மூழ்கடிப்பதே ஆகும். 

அதே நேரம் வெற்றிலைக்கேணியில் சிங்களவரின் மேலதிகமான இரண்டு டோறாக்கள் வெட்டுப்போட்டு (cutout) இந்தத் தொடரணிக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டு நின்றன. அந்த இடத்தில் நின்ற டோறாக்களைத் தாக்குவதற்கு லெப். கேணல் பாலையாவின் தலைமையில் (இவருடன் கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசனும் சென்றிருந்தார்) அவரையும் லெப். கேணல் பழனி, மேஜர் கருணாகரன் ஆகியோரையும் கட்டளை அதிகாரிகளாகக்கொண்ட மூன்று சண்டைப்படகுகளும் (கிடைக்கப்பெற்ற படிமங்களிலிருந்து இம்மூன்றில் ஒன்று வோட்டர்ஜெட் வகுப்பு என்பது என்னால் அடையாளங்காணப்பட்டது) லெப். கேணல் பாலையாவின் கட்டளை பெறும் கடற்கரும்புலி லெப். கேணல் கரனை (இவரோடு கடற்கரும்புலி கப்டன் மேகலா) கட்டளை அதிகாரியாகக் கொண்ட சூடை வகுப்பு இடியனுமாக ஒரு கலத்தொகுதி ஆயத்தமாகிச் சென்றது. இவர்கள் தொடரணியைக் காட்டிலும் உயரங்குறைவாக, 20 கடல்மைல் உயரத்தை விட, புறப்பட்டுச் சென்றனர். இவர்களின் நோக்கம் வெட்டுப்போட்டு நிற்கும் டோறாக்களில் ஒன்றை மூழ்கடிப்பதாகும்.

இவர்கள் வெற்றிலைக்கேணியை அண்மித்த போது மாலை 7:15 மணியளவில் டோறாவோடு முட்டுப்பட்டு மோதல் வெடித்தது. ஆனால் அந்நேரத்தில் தொடரணி பருத்தித்துறையைத் தாண்டி காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள் இறங்கிக்கொண்டிருந்ததால் டோறா விலகி அதற்குப் பாதுகாப்புக்கொடுக்கச் சென்றது. எஞ்சிய டோறாவோடு லெப். கேணல் பாலையா தலைமையிலான கலத்தொகுதி அடிபட்டுக்கொண்டிருந்த போது தொடரணியில் சென்றுகொண்டிருந்த "வலம்புரி" கப்பல் தன்பாட்டில் தொடரணியிலிருந்து விலகி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தது. உடனே பாலையாவோடு நின்ற கடற்கரும்புலி லெப். கேணல் கரனின் இடியன் புறப்பட்டுச்சென்று கடற்புலிகளின் சூட்டாதரவோடு இரவு 8:00 மணியளவில் வலம்புரியோடு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இக்கலம் ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தில் கடலினுள் மூழ்கி அமிழ்ந்துவிட்டது.

இங்கு கடற்சமர் நடந்துகொண்டிருந்த வேளை தொடர்ந்து தொடரணிக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த லெப். கேணல் நிரோஜனின் கலத்தொகுதி ஒரு கட்டத்தில் தொடரணியை நெருக்கியது. அதைக் கண்டவுடன் தொடரணியில் சென்றுகொண்டிருந்த இரு சுடுகலப் படகுகளும் கடற்புலிகளின் அந்தக் கலத்தொகுதியோடு பொருத விரைந்தன. 

சிங்களவரின் சுடுகலப் படகுகள் தமிழரின் சண்டைப்படகுகளோடு பொருத காங்கேசன்துறைக் கடற்பரப்பில் கடற்சமர் வெடித்தது. இக்கடற்சமர் நடந்துகொண்டிருப்பது பகைவரின் கடற்பரப்புக்குள் தான். மேலும் கரையிலிருந்து நீண்ட தொலைவில் சென்றுவிட்டதால் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளருடனான தொடர்பு முற்றுமுழுதாகவே துண்டிக்கப்படதொரு நிலை. இவ்வாறாக முற்றிலும் சாதகமற்றதொரு சமர்க்களத்தில் நின்றபடியே தான் கடற்சமரை வழிநடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார், லெப். கேணல் நிரோஜன்.

இக்கடற்சமரின் ஒரு கட்டத்தில் தமிழரின் படகுகள் பிரிந்து வேறு திசைகளில் சென்றன. பின்னர் மீண்டும் அவைகளை ஒழுங்குபடுத்திய தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன், முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை பப்பதா மீது மேற்கொள்கிறார்.

முதலில் கடற்கரும்புலி மேஜர் வள்ளுவனின் இடியனைக் கொண்டு சென்று பப்பதாவின் கடையார் பகுதில் மோதுவிக்கிறார். பப்பதா நிலைகுலைந்து அப்படியே நிற்கிறது. உடனே கடற்கரும்புலி கப்டன் மொறிஸை கட்டளை அதிகாரியாகக் கொண்ட குண்டுப்படகு கப்பலை நோக்கி விரைந்து சென்றது. அது கப்பலின் அணியத்தில் மோத எத்தனித்த போது பப்பதாவிலிருந்து வலுவெதிர்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினரின் சூட்டில் கப்டன் மொறிஸ் ஏவுண்ணி கடும் காயத்திற்கு உள்ளாக்கிறார். உடனே விரைவாகச் செயற்பட்ட கடற்புலிகள் குண்டுப்படகிலிருந்த இரு இடியர்களோடு சேர்த்து இடியனையும் வலுத்த சேதமேற்பட முன்னர் மீட்டுப் பின்னுக்குக் கொண்டுவருகின்றனர்.

பேந்து, 9:30 மணியளவில், எஞ்சியிருந்த மூன்றாவது இடியனை லெப். கேணல் நிரோஜன் கொண்டு சென்று மீண்டும் அணியத்தில் இடிக்க முயற்றுவிக்க இம்முறை வெற்றிகரமாக மோதியிடிக்கப்படுகிறது, கடற்கரும்புலி மேஜர் சுலோஜனைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனால். மோதியது கப்டன் மொறிஸ் எத்தனித்த அணியத்தின் பக்கவாடு அல்லாமல் மற்றைய பக்கவாட்டில் ஆகும். தீப்பிடித்து எரிந்த கப்பல் உடனே அந்தப் பக்கமாக பப்பதா கவிழ்ந்து ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தில் மூழ்கியது. இது 17 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. 

காயப்பட்ட கடற்கரும்புலி கடற்சமர்க்களத்திலேயே வீரச்சாவடைந்துவிட்டார்.

மேற்கொண்டு சில மணிநேரம் நீடித்த இக்கடற்சமர், அடுத்த நாள், 24/02/1998, சாமம் 2:00 மணியளவில் கடற்புலிகளின் அனைத்துக் கலத்தொகுதிகளும் தளம் திரும்பிய போது முடிவிற்கு வந்தது. தொடரணிக்கு மேலதிகப் பாதுகாப்பிற்காக திருமலையிலிருந்து விரைந்து வந்துகொண்டிருந்த டோறாக்கள் இதே நாளின் வைகறை வேளையில் இத்தொடரணியோடு சேர்ந்து கொள்ளும் சமயம் கடற்புலிகள் தம் தளத்திற்குத் திரும்பிவிட்டனர். 

இத் தரையிறக்கக் கலத்திலிருந்த இரு தகரிகளையும் கலத்தையும் மீட்க தம் நண்பரான இந்தியக் கடற்படையின் உதவியை நாட உதவியும் கிடைத்தது, சிங்களத்திற்கு. முதலில் கப்பலை எடுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றுக்கொண்டிருந்ததால் அதை கடலிற்கு அடியில் வைத்தே தகர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதே நேரம் மூழ்கிய தகரிகளை மீட்க இயலாவிட்டால் அவற்றின் முக்கிய பாகங்களையாவது கழற்றி எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதலாம் திகதி கப்பலினுள்ளிருந்த இரு தகரிகளும் இந்தியரின் உதவியோடு மீட்கப்பட்டது. பின்னர் தரையிறக்கக் கலத்தையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அதன் முடிவு என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. 

பப்பதாவோடு மூழ்கிய மற்றொரு கடற்கலமான வலம்புரியைக் கடற்சுழி இழுத்துச் சென்றுவிட்டதால் அது மூழ்கிய இடத்தை கடற்படையினரால் ஈழப்போர் முடியும்மட்டும் கண்டுபிடிக்க இயலவில்லை.

இச்சமரானது பருத்தித்துறைக் கரைக்கு அண்மையாக நடந்ததால் கரையோரத்திலிருந்த மக்கள் வீடுகளின் சாளரங்களும் கதவுகளும் அதிர்ந்தன. கரையிலிருந்த படையினர் கடலை நோக்கி வெளிச்சக்குண்டுகளை சமர் முடியுமட்டும் வீசியபடியிருந்தனர். மேலும் அவர்கள் கடலை நோக்கிச் சுடவும் செய்தனர். இவ்வேட்டொலிகளும்  வெடியோசைகளும் சாமத்தில் கேட்டதால் தூக்கத்திலிருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். கடலில் சமர் நடப்பதை அறிந்து பொதுமக்கள் கரையோரம் நின்று கண்டனர்.

மூழ்கிய பப்பதாவின் ஒரு முனை மட்டும் கடலின் மட்டத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்ததை அடுத்த நாள் கரையோர மக்களால் காணக்கூடியவாறு இருந்தது. 

24/02 வரையில் இச்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினரின் இரு தரையிறக்கக் கலத்திலுமிருந்த 108 படையினரில் (அலுவல்சாராக வெளியிடப்பட்ட எண்ணிக்கை. பெயர் பதியாமல் கப்பலில் வந்தோர் எத்தனை பேரென்பது தெரியவில்லை) 14 கடற்படையினரும் 43 தரைப்படையினரும் உட்பட 60 பேர் வரை சிங்களக் கடற்படையின் சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் தாமாக நீதிக் கரைசேர்ந்தனர். ஒரு கப்டன் உட்பட நால்வர் தமிழ்நாட்டை நோக்கி நீந்திச் சென்று கொண்டிருந்த வழியில் தமிழ்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டு இந்தியக் கடற்படயிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வானூர்தி மூலம் சிறிலங்காவை அடைந்தனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கை சிங்களப் படைத்துறையால் முடுக்கிவிடப்பட்டது. 48 பேரின் கதி இறுதிவரை தெரியவரவில்லை.

தவிபுவின் அறிக்கையின் படி, சிங்களப் படைத்துறைத் தரப்பில் இத்தாக்குதலில் மொத்தம் 62 படைஞர்கள் காயப்பட்டதோடு 47 பேர் கொல்லப்பட்டனர். தமிழர் தரப்பில் 11 கடற்கரும்புலிகள் தாய்நாட்டின் விடுதலைக்காய் தம்முயிரைத் தியாகம் செய்தனர். உயிராயுதங்களின் பெயர் விரிப்புப் பின்வருமாறு:

  1. கடற்கரும்புலி லெப். கேணல் கரன்
  2. கடற்கரும்புலி கப்டன் மேகலா
  3. கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் 
  4. கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் எ குமரேசன்
  5. கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தனி
  6. கடற்கரும்புலி கப்டன் வனிதா 
  7. கடற்கரும்புலி மேஜர் மாமா எ சுலோஜன்
  8. கடற்கரும்புலி மேஜர் நைற்றிங்கேள் எ தமிழ்நங்கை
  9. கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
  10. கடற்கரும்புலி கப்டன் நங்கை
  11. கடற்கரும்புலி மேஜர் தமிழின்பன் எ மொறிஸ் 

அன்னவர்கள் தவிர்த்து கடற்புலிகள் தரப்பில் வேறு யாரும் வீரச்சாவடையவில்லை. காயப்பட்டோர் விரிப்பு அறியில்லை. 

Shakthi - escaped in 1998

'சக்தி என்ற படைக்காவிக் கப்பல் | படிமப்புரவு: வேசுபுக்கு (Sri Lanka Naval Fleet)'

அன்று மூழ்கடிக்கப்பட்ட பப்பதா என்ற எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலமானது 1994 ஆம் ஆண்டு கடற்கரும்புலி மேஜர் வித்தியால் இடிக்கப்பட்டு சேதத்தோடு தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சமரின் போது கடற்புலிகள் தம் முதன்மை இலக்காகக் கருதியது 'சக்தி' என்ற தரையிறக்கக் கலத்தையே ஆகும். ஆனால் புலிகளின் கெடுவேளையோ அல்லது சிங்களத்தின் நல்லவேளையோ தெரியவில்லை, வந்த மூன்று கலங்களிலையுமே வேகம் கூடியதான அது ஓடித்தப்பிப் பிழைத்தது. அது மட்டும் அம்பிட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்குமாயின் சிங்களப் படைத்துறைக்கு பேரிழப்பே ஏற்பட்டிருக்கும்!

 

உப்புக்காற்றும் உங்கள் பெயர்சொல்லி இன்று மட்டுமல்ல, தமிழீழ வரலாறு உள்ளவரை வீசும்!

 

உசாத்துணை:

  • உயிராயுதம் - 7
  • உதயன்: 24/02/1998
  • உதயன்: 25/02/1998
  • உதயன்: 26/02/1998
  • உதயன்: 01/03/1998
  • உதயன்: 02/03/1998
  • தமிழ்நெற்: 23/02/1997 (Two tanks on sunk ships), (Eleven Tigers killed in naval battle), (Sea tigers sink ship carrying troops - radio)
  • கடற்கரும்புலிகளின் படிமங்கள்: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/blacktigers
  • லெப்.கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு
  • எம்.ரி. கொய் தண்டையல் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to வடமராட்சிக் கடலில் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட இரு சிங்களக் கலங்கள்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.