Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழுப்புரம் அருகே கோவிலுக்கு சீல்: பட்டியல் பிரிவு இளைஞர் தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மாயகிருஷ்ணன். க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 7 ஜூன் 2023

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய நேரடியாக மேல் பாதி கிராமத்திற்கு சென்றோம்.

என்ன நடந்தது?

ஊரின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரை தாண்டி தான் ஊருக்குள்ளே செல்ல முடிந்தது. கோவில் முன்புறமும் கோவில் வெளிப்புறமும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலை சுற்றி தடுப்புக் கட்டைகள் அமைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

 

கோவிலை தாண்டி கிழக்கு பகுதிக்குச் சென்றோம். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரிப்பதற்காக உள்ளே நுழைய முற்பட்ட போது 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்தனர். யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று எங்கள் உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் கடுமையாக எச்சரித்தனர். இதை அடுத்து பலமுறை எடுத்துக் கூறியும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் காலனி பகுதிக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே அங்கிருந்து மீண்டும் ஊருக்குள் நடக்க தொடங்கினோம்.

 

அங்கு கிராம மக்கள், சிறுவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாதது போலவே வழக்கம்போல் அவர்களது வேலையை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் சமையல் வேலையிலும், சிறுவர்கள் விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

ராஜலட்சுமி பாட்டி கீரை பறித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது "என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கின்றோம்" என்று அவர் வேலையை தொடர்ந்தார். இதையே அருகில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்மணியும் கூறினார். "நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இங்கு நிறைய போலீசார் வந்துள்ளனர்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்
 
படக்குறிப்பு,

ராஜலட்சுமி

 

ஊராட்சித் தலைவர் வேதனை

கோவிலுக்கு சீல் வைத்தது தொடர்பாக ஊராட்சி தலைவர் மணிவேல் நம்மிடம் பேசினார்.

 

“எங்கள் ஊரில் கோவில் தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இது தனி நபரால் ஏற்பட்ட பிரச்சனை. எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை பிரச்சனை தொடர்பாக இதுவரை ஸ்டேஷன்களில் எந்தவித வழக்குகளும் இல்லை. நாங்கள் வேறுபாடு இல்லாமல் இணக்கமாகவே இருந்து வருகின்றோம். கோவிலுக்குள் அவர்களும் இதுவரையில் வந்து வணங்கி செல்கிறார்கள் இது அவர்களுக்கும் தெரியும். நாங்கள் அவர்களை தடுத்ததில்லை,” என்று அவர் கூறினார்.

 

“எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்வது வழக்கம். எந்த பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை. ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர் செய்த பிரச்னையை எங்களால் வெளியில் சொல்ல முடியாது. அவருடைய தாய் தந்தையும் வரவழைத்து அறிவுரை சொல்லித்தான் அந்த இளைஞரை அனுப்பினோம். ஆனால், அந்த இளைஞரை நாங்கள் அடித்ததாக அவர்கள் கூறுகின்றார்,” என்று ஊராட்சித் தலைவர் மணிவேல் தெரிவித்தார்.

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்
 
படக்குறிப்பு,

மணிவேல், ஊராட்சித் தலைவர்

அடுத்த நாள் காலை தாம் அவர்கள் வீட்டிற்கு சென்று பேசியதாகவும் தம்மிடம் அவர்கள் நன்றாகப் பேசியதாகவும் கூறிய அவர், தொடர்ந்து அரசாங்க அதிகாரிகளும் சமாதான கூட்டம் நடத்தியதாகக் கூறினார்.

 

“அதில் தான் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரு தரப்பினரையும் உணர்வு ரீதியாக தூண்டிவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவால் தான் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது,” என்று கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது எங்கள் ஊர் பிரச்சனை நாங்கள் சகோதரர்கள் நாங்கள் எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம்,” என்று கூறியவர், “எங்கள் ஊரில் விரைவில் அமைதி சூழல் நிலவ வேண்டும். அதற்கு அரசாங்கமும், அதிகாரிகளும் உதவிட வேண்டும். இரண்டு தரப்பு மக்களையும் வரவழைத்து ஒரே இடத்தில் வைத்து பேச வேண்டும் சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

‘ஓடஓட விரட்டியதை கண்ணால் பார்த்தேன்’

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்

ஆதிதிராவிட சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல முடியாததால் , அப்பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி சிலம்பரசனிடம் ஃபோனில் பேசினோம்.

 

“கடந்த ஏழாம் தேதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு வழிபடச் சென்ற 4 பேரில் ஒரு இளைஞரை மட்டும் அவர்கள் பிடித்துக் கொண்டனர். மற்றவர்களை நீங்கள் செல்லலாம் என்று கூறிவிட்டனர். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. அந்த இளைஞரை நீ எப்படி கோயில் சென்று வந்தாய் எனக் கூறி அடித்து விட்டார்கள். தொடர்ந்து ஊராட்சி தலைவர் மணிவேல், அந்த இளைஞரின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து வரச் சொன்னார். பெற்றோர்களும் ஐயா எனது பையன் என்ன தவறு செய்திருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது வழியில் வேறு சிலர் வழிமறித்து அவர்களை அடித்து விட்டனர். எல்லோரும் அவர்களை ஓடஓடத் துரத்திக் கொண்டு வருவதை நானும் பார்த்தேன்,” என்றார்.

 

காலம் காலமாக தாங்களும் அந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவதாகத் தெரிவித்த அவர், “கோவிலில் சிலையை வெளியில் வைத்திருப்பார்கள் நாங்கள் மாலை, சுண்டல் எடுத்துச் சென்று படைத்து வருவோம். நாங்கள் தரும் மாலையை குதிரைக்கும் போடுவார்கள்,” என்று விவரித்தார்.

 

“நான் ஒதுங்கி சென்று கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வந்து விட்டேன்,” என்று கூறி சட்டென முடித்துக் கொண்டார்.

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்

‘கையெடுத்து கும்பிட்டு தன் மகனை அழைத்து வந்தார்’

தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் கிருபாநிதி தொலைபேசியில் நம்மிடம் பேசினார்.

 

“ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏழாவது உபயம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் உபயமாகும். அன்று அந்த இளைஞரை தடுத்து கோவிலுக்கு செல்லக்கூடாது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர் அப்பாவிற்கும் போன் செய்து பையனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அவனை அழைத்து க்கொண்டு வரும் வழியில் சிலர் தாக்கி அடித்துள்ளனர். இதில் கதிரவனுக்கு காயமும் ஏற்பட்டது என்று கூறினார்.” என்றும் தெரிவித்தார். தன் மீதும் கோவில் பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. கூறியது என்ன?

மேல்பாதி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் சீல் வைத்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.சஷாங் சாய் நம்மிடம் தொலைபேசியில் பேசினார்.

 

“விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் 145 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி உள்ளேன். 2 ஏ.டி. எஸ்.பி., 6 டிஎஸ்பிக்கள், 31 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும்,” என்றார்.

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்

மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அளித்துள்ள ஊடக அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமம் அருள்மிகு தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே 7.4. 2023 அன்று ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு சுமூகமான தீர்வு காணப்படவில்லை.

தற்பொழுது இரு தரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவுவதாலும் இதனால் பொது அமைதியை பாதுகாத்திடும் பொUட்டு தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கோவிலில் யாரும் பிரவேசிக்க கூடாது என தீர்மானித்து இன்று கு.வி.மு. ச. பிரிவு 145 -இன் கீழ் கோவில் மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை 9.6.23 அனறு 10 மணிக்கு இருதரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை ஆவணங்களுடன் அளித்துக்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவும் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

 

மேல்பாதி கிராமத்தில் நிலைமை என்ன?

திரௌபதி  அம்மன் கோவிலுக்கு சீல்

இந்நிலையில் மேல் பாதி கிராமப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட் ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

 

விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேப்போல் கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c72384d28z3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலின சமூகத்திற்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் அதிகாரிகள் பூட்டு - தீண்டாமை தொடர்வது ஏன்?

கரூர், கோவில், சாதி, சீல்
 
படக்குறிப்பு,

இருதரப்பினரிடமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பி சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 8 ஜூன் 2023

பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்னையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வியாழனன்று சீல் வைக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள மேலப்பதி கிராமத்தின் வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவில், மேலப்பதியைச் சுற்றியிருக்கும் எட்டு ஊர்களில் வசிக்கும் ஒரு சமுகத்தினருக்குச் சொந்தமானது. இது சுமார் 1500 குடும்பங்களின் குலதெய்வ கோவில் என்றும் கூறப்படுகிறது.

கோவில் அமைந்திருக்கும் வீரணம்பட்டியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

 

இங்கு திருவிழாவின்போது கோவிலுக்குள் செல்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே எழுந்த பிரச்னையால் வருவாய்த் துறையினர் கோவிலைப் பூட்டி சீல் வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு பிரச்னையால் ஒரு கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளே இந்தச் சம்பவம் நடந்திருப்பது, தமிழக கிராமங்களில் இருக்கும் கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் நுழைய இன்றும் தொடரும் பிரச்னைகளைப் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

 

திருவிழாவில் இரு சாதியினரிடையே பிரச்னை

கரூர், கோவில், சாதி, சீல்
 
படக்குறிப்பு,

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள மேலப்பதி கிராமத்தின் வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில்

ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். இவ்வருடத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நாளான நேற்று பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது உயர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவரை உள்ளேவிட மறுத்ததுடன், சாமி கும்பிட அனுமதிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், கரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மோகன், குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பட்டியலின மக்களை சாமி கும்பிட அனுமதிக்காவிடில், கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலை பூட்டப்படுமென அதிகாரிகள் எச்சரித்தனர்.

கோவிலுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்

கரூர், கோவில், பூட்டு
 
படக்குறிப்பு,

பூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட கோவில்

முதலில் கோவில் பூட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளோ அதை மறுத்தனர்.

குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலை பூட்டக்கூடாது எனவும், பட்டியலின மக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினரிடமும் பேசிய அதிகாரிகள் இந்தப் பிரச்னையை சுமூகமாகப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும், அதுவரை கோவிலை தற்காலிகமாகப் பூட்டுவதாகவும் கூறி, கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலுக்கு பூட்டுப் போட்டனர்.

சாமி பொதுவானது, ஏன் நாங்கள் கும்பிடக் கூடாது?

கரூர், கோவில்
 
படக்குறிப்பு,

பிரச்னைக்குள்ளான காளியம்மன் கோவில்

கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரான சக்திவேல் பிபிசி தமிழிடம் பேசினார்.

அவர், இப்பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர் என்றார்.

“பட்டியல் இன சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிப்பதில்லை. காளியம்மன் கோவில் பொது இடத்தில் அமைந்துள்ளது. வீரணம்பட்டியில் இருக்கும் எங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட விடாமல், வெளியில் நின்று கும்பிடச் சொல்கின்றனர்,” என்றார்.

மேலும் பேசிய அவர், "புதன்கிழமை காலை 7.30 மணிக்கு சாமி கும்பிடுவதற்குத் தான் சென்ற போது, மூன்று பேர் வெளியே போய் சாமி கூம்பிடு என வலியுறுத்தியதாக" தெரிவித்தார். மேலும், சாமி கும்பிட்டு, திருநீறு பூசிவிட்டுப் போய் விடுவதாகக் கூறியபோது சட்டையைப் பிடித்து வெளியே தள்ளியதாகக் கூறினார்.

“ஊர் மக்கள் என்னை வா, பார்த்துக்கலாம் என வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். ஆன்லைன் மூலமாக நடந்த சம்பவத்தை ஆட்சியரிடம் புகாராக அளித்திருந்தேன்.

புகாரின்பேரில் வட்டாட்சியரும் சிந்தாமணி பட்டி காவல் நிலையத்திலிருந்து வந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவில் பொது இடத்தில் இருக்கிறது, எனவே அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு. இல்லையென்றால் கோவிலை பூட்டி விடுவேன் எனச் சொன்னார்கள்,” என்றார்.

மேலும் அவர், "அதிகாரிகள் இருக்கும்போதே சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பவர்கள், எங்களை எப்படி அனுமதிப்பார்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

“சாமி பொதுவானதுதானே, ஏன் எங்களை சாமி கும்பிட வேண்டாம் எனச் சொல்கிறார்கள்? அதற்குக் காரணம் தெரியணும். எங்கள் மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும்,” என்றார்.

திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

கரூர், கோவில், திருவிழா
 
படக்குறிப்பு,

திருவிழாவில் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வீரணம்பட்டி சின்னசாமி நம்மிடம் பேசுகையில், "குறிப்பிட்ட கோவில், மேலப்பகுதி, வீரணம்பட்டி, மாலப்பட்டி, சர்க்கம்பட்டி, கரிச்சிப்பட்டி உள்ளிட்ட எட்டு ஊரில் வசிக்கும் தங்களது சமூகத்தினருக்குச் சொந்தமானது" என்றார்.

தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபடும் இக்கோவிலில் தனது பாட்டன் காலத்திலிருந்து அவர்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

“கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகத்தின்போது, பட்டியலின மக்கள் சாமி கும்பிட வந்தபோது பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னை சிந்தாமணி பட்டி காவல் நிலைநிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிக்கப்பட்டது. அப்போது அனைவரும் சாமி கும்பிடலாம், என்றபோது பட்டியலின மக்கள் வெளியே இருந்து சாமி கும்பிடுவதாகத் தெரிவித்தனர்,” என்றார்.

 

மேலும் பேசிய அவர், "செவ்வாயன்று கோவில் திருவிழாவின்போது பட்டியலின இளைஞர் ஒருவர், அவரே கோவிலுக்குள் வந்து, சாமி கும்பிடாமல் புகைப்படம், வீடியோ எடுத்து பிரச்னை செய்ய முற்பட்டபோது, இளைஞர்கள் சிலர் அவரை வெளியே போகச் சொன்னதாக" குற்றம் சாட்டினார்.

அதோடு, “புதன்கிழமை காலை 11.30 மணிக்கு அதிகாரிகள் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். அதை தெய்வம் பார்த்துக்கும். அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,” என்றார்.

சின்னசாமி, "பிரச்னை செய்யும் இளைஞர் ஏற்கெனவே பி.சி.ஆர் வழக்கு தொடுத்துள்ளதாகவும், தற்போது எங்களது இளைஞர்கள் மீது மேலும் வழக்குகள் போட முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்னை காரணமாக மேளதாளம், அலங்காரம் இல்லாமல், இன்றைக்கு கரகம் எடுத்து கிணற்றில் கரைக்க இருப்பதாகத் தெரிவித்தவர், "நேற்று நடைபெறுவதாக இருந்த நாடகம் மற்றும் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என்றும் கூறினார்.

கரகம் கரைப்பு, கோவிலுக்கு சீல்

கோவில், சீல்
 
படக்குறிப்பு,

வருவாய் கோட்டாட்சியர் கோவிலைப் பூட்டி சீல் வைத்தார்

இதற்கிடையே, வியாழன் மாலை, குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகாரிகளிடம் தகவல் சொல்லாமல் கரகத்தை எடுத்து கரைத்துவிட்டனர்.

பட்டியலின மக்கள், அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கரகத்தை எடுத்து விழாவை முடித்துவிட்டார்கள் என்றும், தம்மால் சாமி கும்பிட முடியாமல் போய்விட்டது எனவும் குற்றம்சாட்டினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, வருவாய் கோடாட்சியர் புஷ்பா தேவி கோவிலைப் பூட்டி சீல் வைத்தார்.

இதைத்தோடர்ந்து, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
 
படக்குறிப்பு,

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

கரகம் கரைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன் பிபிசியிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அனைவரும் வழிபாடு செய்ய கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், பட்டியலின மக்கள் சண்டை போட்டுக்கொண்டு சாமி கும்பிட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

“அனைவரும் ஒற்றுமையோடு வழிபாடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தற்சமயம், இரு சமூகத்தினரும் கோவில் திருவிழா முடியும் வரை கோவிலுக்கு வெளியே இருந்து கும்பிட்டுக் கொள்வதாக உறுதியளித்தனர்.

திருவிழா முடிந்தவுடன், சுமூகமாகப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் வழிபாடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், குறிப்பிட்ட காளியம்மன் கோவில் அரசுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அது தனிப்பட்ட ஒரு சமூகத்தினருக்குச் சொந்தமானது என்றும பிபிசி தமிழிடம் கூறினார்.

“கோவில் திருவிழா இன்றைக்கு (ஜூன் 😎 முடிகிறது. நாளை ஜமாபந்தி முடிந்ததும். இரு தரப்பினருடன், நாளை மறுநாள் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடக்க இருக்கிறது. வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையில் 30 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே காளியம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் வைத்த சீலை அகற்றக்கோரி, வருவாய் கோட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரூர் ஆதீனகர்த்தர் என்ன சொல்கிறார்

கோவில், ஆதீனம், கருவறை
 
படக்குறிப்பு,

பேரூர் ஆதீனகர்த்தர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்

பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது தொடர்பாக, கோவையிலுள்ள பேரூர் ஆதீனகர்த்தர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பிபிசி தமிழிடம் பேசினார்.

“எல்லோருக்கும் மன மாற்றம் வரவேண்டும். அப்பர் அடிகள் காலத்திலேயே, 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்தார்கள்.

அந்த நிலை படிப்படியாக மாறி, அர்த்தமண்டபத்திற்கு வெளியே நின்று கடவுளைக் கும்பிடுகிறோம். அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதைத் தடுக்கக் கூடாது.

திரையரங்குகள், பேருந்துகள், ரயில்கள் என எங்கும் மக்கள் ஒன்றாகச் செல்வதைப் போல கோவில்களுக்கு உள்ளேயும் ஒன்றாகச் செல்லும் வகையில் மனமாற்றம் வர வேண்டும்,” என்றார்.

சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும்

சாதி, கோவில் நுழைவு, அறநிலையத்துறை
 
படக்குறிப்பு,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார்

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார், சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தும் உறுதி அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும்.

“இந்து சமய அறநிலையத்துறை சட்டம், ஒவ்வொரு கோவிலுக்கும் 3 முதல் 5 பேர் வரை உள்ள ஓர் அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என்று சொல்கிறது.

அக்குழுவில் ஒருவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதேபோல, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முனைப்பையும் முன்னெடுக்க வேண்டும்.

ஆகமம் சார்ந்த கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே முதலில் ஆகமம் சாராத கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்,” என்றார்.

மேலும், தீண்டாமை, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இயங்கும் சமூக சீர்திருத்த அமைப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்," எனவும் கூறினார்.

இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பகுதி குறைக்கப்படும் என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c723el8e4zwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீண்டாமை: சாதி ரீதியான தனி கோயில்களில் அனைவரும் வழிபட உரிமை உண்டா? சட்டம் என்ன சொல்கிறது?

கோப்புப்படம்
 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியல் பிரிவினர் நுழைவதற்குத் தடை இருப்பதாகப் புகார் எழுந்தது. அதில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தை பலன் தரவில்லை என்பதால், அந்தக் கோவிலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் சர்ச்சையில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இதேபோல் கரூர் மாவட்டத்திலும் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலில் பட்டியல் மக்கள் நுழைவதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த செய்தி வெளியானது. அங்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்தில், தமிழ்நாட்டில் இரண்டு கோவில்களுக்கு தீண்டாமை பிரச்னை தொடர்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதால், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் தீண்டாமை தொடர்கிறதா என்ற கேள்வி கவனம் பெறுகிறது.

பட்டியல் பிரிவினருக்கு சமமான உரிமை தேவை என்று பல அமைப்புகள் இந்த விவகாரத்தை முன்னெடுக்கின்றன. அதேநேரம், மாற்று சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகளில் உள்ளவர்கள், தங்களது சமூகத்திற்கான கோவில் பொதுக் கோவிலாக மாறிவிட்டதால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், மூன்று தலைமுறையாக நுழையாத கோவிலில் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் பட்டியல் பிரிவினர் நுழைந்தனர். 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், கள்ளக்குறிச்சியில் உள்ள 200 ஆண்டு கால வரதராஜ பெருமாள் கோவிலில் பட்டியல் பிரிவினர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு முதல்முறையாக நுழைந்து, வழிபாடு நடத்தினர். 2008ஆம் ஆண்டிலேயே பட்டியல் மக்கள் அரசிடம் புகார் அளித்திருந்தாலும், 2023இல் தான் அவர்கள் நுழைய முடிந்தது என்று தெரிவித்தனர்.

 

தற்போது, விழுப்புரம் மாவட்டம் தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்த கோவில், தீண்டாமை பிரச்னை குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்த மையப்புள்ளியாக மாறியுள்ளது. அதனால், அதில் தொடர்புள்ள இரண்டு தரப்பு சமூகத்தினரிடம் பேசினோம்.

 

முதலில், திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், அந்த கோவில் மீதான உரிமை தங்களது சமூகத்திற்கு உட்பட்டது எனக் கூறும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். அவர்களின் கருத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலா சக்தி எதிரொலித்தார்.

பாலா சக்தி, பிபிசி தமிழிடம் பேசுகையில், ''தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கோவில். இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இடம் தந்துள்ளார் என்பதற்கான பட்டா எங்களிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், "நீதிமன்றத்தை நாங்கள் நாடியிருக்கிறோம். இந்தக் கோவிலுக்குள் பட்டியல் பிரிவினர் நுழைவதற்குத் தடை இல்லை. ஆனால் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வலிமையைக் காட்டும் இடமாகக் கோவிலை பார்ப்பதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம்.

பேச்சுவார்த்தையில் இரண்டு சமூகத்தினரும் ஒன்றாக வழிபட வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம், அதேநேரம் கோவில் மீதான எங்கள் உரிமையைப் பறிக்கக்கூடாது,'' என்கிறார் அவர்.

தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில்

அதோடு, தங்களது முன்னோர்கள் தர்மராஜா திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டதாகவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், பொதுக்கோவிலாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார் பாலா சக்தி.

''எங்கள் குலதெய்வத்தை எல்லோரும் வணங்குகிறார்கள் என்பது எங்களுக்குப் பெருமைதான். ஆனால் எங்கள் சமூகத்திற்கான கோவிலில் நாங்கள் முறைப்படி திருவிழா நடத்துவதற்குச் சிக்கல்கள் ஏற்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாதி ரீதியாகப் பாகுபாடு இல்லாமல் வணங்கலாம். ஆனால் கோவிலுக்குச் சொந்தமான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கருவறை வரை உள்ளே செல்ல அனுமதி உள்ளது. மற்றவர்களுக்கு அது கிடையாது.

இது பல காலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். இதை எப்படி தவறு என்று சொல்லமுடியும்?,'' என்று வாதிடுகிறார்.

மேற்கொண்டு பேசிய அவர், ''எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கூட கோவிலில் ஓர் எல்லை வரைக்கும்தான் வரமுடியும். இதைப் பல காலமாக எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இது எங்கள் நம்பிக்கை,'' என்கிறார் பாலா சக்தி.

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்டம் 1978இல் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது தனியார் கோவிலாக இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் கூறுகிறார்கள்.

''கோவில் பொது இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதற்குத் தெளிவான ஆண்டுக் கணக்கு எதுவும் இல்லை. சுமார் 100ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட கோவில்தான். 1978இல் இருந்து அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், இந்த கோவிலைத் தனியொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. தீண்டாமையை அங்கு கடைப்பிடிக்கக் கூடாது,'' என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களை அறங்காவலர் குழுவில் சேர்க்க ஏன் தயக்கம்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார், 2021இல் இதே மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட கோவில் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

விழுக்கம் கிராமத்திலிருந்த செல்லியம்மன் கோவில் தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

''விழுப்புரம் மாவட்டம் மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல கிராம கோவில்களில், சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தீண்டாமை கொடுமை நடைபெறுகிறதா என தமிழ்நாடு அரசு ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.

அவ்வப்போது, வெளியில் தெரியும் விவகாரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 43,283 கோவில்களில் வெறும் 780 கோவில்களில்தான் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிற கோவில்களில் பல ஆண்டுகளாக நியமனம் நடைபெறவில்லை. இந்த நியமனத்தை உடனடியாக நிறைவேற்றி, அந்த குழுவில், சட்டப்படி, ஒரு தலித் மற்றும் ஒரு பெண் உறுப்பினரை நியமித்தால் இதுபோன்ற பிரச்னைகள் எழுவது முடிவுக்கு வரும்.

பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஏன் அரசு தயங்குகிறது? இந்த விவகாரத்தில் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், வேறு யார் முன்வருவார்கள்?,'' என்கிறார் ரவிக்குமார்.

ரவிக்குமார்
 
படக்குறிப்பு,

ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்

சாதி ரீதியாக தனிக்கோவில் கட்டுவது தனிச்சொத்தா?

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரான ஈ.ஆர்.ஈஸ்வரன் ஒவ்வொரு சமூகத்தினரும் அவர்கள் குல தெய்வத்திற்குத் தனிக்கோவில் கட்டிக்கொண்டு தங்களது கட்டுப்பாட்டில் கோவிலை நடத்துவதில் மற்ற சமூகத்தினர் தலையிடுவது தேவையற்றது என்ற கருத்தை முன்வைக்கிறார்.

''ஒரு சமூகத்தினர், தங்களுக்காகக் கட்டிக்கொள்ளும் தனிக்கோவில் தனிச் சொத்தாக இருப்பதால், அங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமையை எதிர்பார்க்க முடியாது.

ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரி வசூலித்து, தங்கள் சொந்தங்களுக்காகக் கோவில் விழா நடத்தினால், அதில் மற்ற சமூகத்தினர் பங்கேற்கலாம், ஆனால் தங்களுக்கும் அதே உரிமை வேண்டும் எனக் கேட்பதில் நியாயம் இல்லை. அது தனிக் கோவில், அது தனிச்சொத்தாகப் பார்க்கப்படவேண்டும்,'' என்கிறார்.

மேலும், குலதெய்வ கோவில்களில், வழிபாடு செய்வதற்கு மற்ற சமூகத்திற்குக் கட்டுப்பாடுகள் இல்லை என்றபோதும், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கான குலதெய்வத்திற்குத் தனிக்கோவில் கட்டிக்கொள்ளும் முறையில் தவறில்லை என்கிறார்.

''ஒரு சாதியில் பல பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனி குலதெய்வம் இருக்கும். குலதெய்வத்திற்கு அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் வருவார்கள். ஒரே குலதெய்வத்தை வணங்குபவர்கள் மத்தியில் திருமணம் நடத்தப்படாது.

அவர்கள் சகோதர, சகோதரி உறவில் இருப்பவர்கள் என்று கருதப்படுவார்கள். இதைத் தவிர, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்காக யாரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்வதில்லை.

குலதெய்வ கோவிலாக இருக்கும் கோவில்கள் ஒரு சில நேரம் மிகவும் பிரசித்தி பெற்று, பலரும் வணங்கும் கோவிலாக மாறிவிட்டால், அந்தக் கோவிலுக்குத் தொடர்புள்ள சமூகத்தினருக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்பதால்தான் சிக்கல் ஏற்படுகிறது,'' என்கிறார்.

''எந்த வடிவத்தில் கடைபிடித்தாலும் தீண்டாமைதான்''

கோவில்களில் வழிபாடு செய்வது, பொது கோவில் மற்றும் தனிக் கோவில் என்ற வரைமுறைக்கு உட்பட்டதா, ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென கோவில் கட்டிக்கொள்வதில் சிக்கல் உள்ளதா என்ற தெரிந்துகொள்ள சட்ட வல்லுனரை அணுகினோம்.

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் தவறு என்பதால், கோவில் தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும்கூட, வழிபடும் உரிமைகளை யாரும் மறுக்கக்கூடாது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சுதா ராமலிங்கம்.

சுதா ராமலிங்கம்
 
படக்குறிப்பு,

சுதா ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அனுமதி மறுக்கப்படுவது மோசமான செயல் என்று விமர்சித்த அவர், ''கோவில் என்பது ஒரு மத ரீதியான நம்பிக்கை கொண்ட மக்கள் வழிபடும் இடம் என்றுதான் பார்க்கவேண்டும். ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள், தங்களுக்கென ஓரிடத்தில் கோவில் கட்டிக்கொண்டாலும், அதில் வழிபடும் உரிமையைச் சாதி ரீதியான காரணங்களைச் சொல்லி மறுக்க முடியாது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தனிக்கோவில் கட்டப்பட்டிருந்தால் அது தீண்டாமைதான்.

அதனால், வழிபடும் உரிமையை மீறுவது என்ற கோணத்திலும், தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் குற்றம் என்றுதான் அரசமைப்பு சொல்வதையும் வைத்து தனிச் சொத்தாக இருந்தாலும் அங்கும் தீண்டாமை கடைபிடிக்கக்கூடாது என்று சொல்லமுடியும்,'' என்கிறார்.

அதோடு, கோவில் என்ற இடம், வழிபாடு செய்யும் இடம் என்ற அர்த்தத்தில் பார்க்கும்போது, தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும், சாதியின் பெயரில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஒதுக்கி வைப்பது தீண்டாமைதான் என்று வலுவாகப் பேசுகிறார் சுதா ராமலிங்கம்.

''தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் எனக் குழந்தைகளின் பாடநூலில் முதல் பக்கத்தில் அச்சேற்றுவதைப் பெருமையாகப் பார்க்கிறோம். நம் மனங்களில் சாதி அழுக்கைச் சுமப்பதை மட்டும் ஏன் பெருமையாக நினைக்கிறோம்?'' என்கிறார் சுதா ராமலிங்கம்.

''எல்லோரும் சமம்தானே''

தமிழ்நாட்டில் நிலவிய பல சாதிக் கொடுமைகள் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக, செய்தியாக ஆவணப்படுத்திவரும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனிடம் பேசியபோது, கோவில்களில் தீண்டாமைக்குத் துளி அளவும் இடம் தரக்கூடாது ஏன் என்று விளக்குகிறார்.

தமிழ்நாட்டில் பல பிரசித்தி பெற்றுள்ள கோவில்கள் ஒரு காலத்தில் ஒரு சமூகத்திற்கான கோவிலாக இருந்தது என்றாலும், காலப்போக்கில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன என்பதால், சாதி வேறுபாடுகள் உடைந்து போயின என்கிறார்.

''தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைவதற்கு யாருக்கும் தடை இல்லை. ஒரு காலத்தில் பிராமணர் அல்லாதவர்கள் - தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்குத் தடை இருந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்ததால்தான், இன்று எல்லோரும் அங்கு சென்று வருகிறார்கள்.

அதனால், மீண்டும் குறுகிய மனப்பான்மையை வைத்துக்கொண்டு, ஒரு சமூகம்தான் வரவேண்டும், மற்ற சமூகம் வரக்கூடாது என்ற விதத்தில் இயங்குவது ஏற்புடையது அல்ல. தீண்டாமையின் அடிப்படையாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தால், சாதிப் பிரிவினைகள் இருந்துகொண்டே இருக்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலைப்பாட்டிற்கு நம் மாநிலம் சென்றுள்ளது என்பதால், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கான தனிக் கோவிலாக இருந்தாலும், எல்லோரும் சமம் என்ற நடைமுறை தேவை. அரசமைப்பு சட்டத்தின்படி, எல்லோரும் சமம்தானே,'' என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

 

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிரச்னையை எப்படிக் கையாளுகிறார்?

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பதிவாகியுள்ள தீண்டாமை பிரச்னை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசப் பலமுறை முயன்றோம்.

அவர் தீண்டாமை பிரச்னை கோவில்களில் இல்லை என்றும் ஒரு சில சம்பவங்களைக் கொண்டு எந்த முடிவும் செய்ய முடியாது எனவும் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.

சேகர் பாபு

பட மூலாதாரம்,SEKAR BABU

விழுப்புரம் மற்றும் கரூர் கோவில்களில் நடந்த சம்பவங்கள் குறித்தும், மாற்று சமூகத்தினர் சிலர் தங்களுக்கென தனிக் கோவில் கட்டிக்கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்தும் அவரிடம் கேட்டபோது, ''அறநிலையத்துறை கோவில்களில் தீண்டாமை கொடுமை இருந்தால், உடனடியாக உதவிஎண்: 044 – 28339999ல் புகார் தெரிவிக்கலாம்.

விழுப்புரம் மற்றும் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைப் பெரிய பிரச்னையாக மாற்றிவிடாதீர்கள். இதுகுறித்துக் கேள்வி கேட்காதீர்கள். பொது மக்கள் எங்களுக்குப் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று மட்டும் சொல்லுங்கள்,'' என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cqe0m4lvp72o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.