Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சாண்டோ சின்னப்பா தேவர்

பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

 

முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.

 

 

முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும் முடித்துவிடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

சாண்டோ சின்னப்பா தேவர் - யார்?

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. 'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.

 

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்` என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர். நல்ல உடற்கட்டு உள்ளவர்.

நவீன உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார். அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார். ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.

 

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். தொடர்ந்து மோட்டார் கம்பெனி ஒன்றில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும் கொஞ்ச காலம் நடத்தினார்.

 

’’அடேய் முருகா சீக்கிரம் சூர்யன உதிக்கச் சொல்லுடா, வள்ளி தெய்வானை கூட இருக்குற சந்தோஷத்துல என்ன மறந்திடாதேடா’’ என கடவுளையும் உரிமையோடு உறவாடும், தீவிர முருக பக்தராக அறியப்பட்ட சின்னப்பத்தேவர், தனது சிறுவயதில் குஸ்தி பார்ப்பதற்காக கோவிலுக்குச் செல்லாமல் தவிர்த்தவராம்.

யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகில் வந்து ’’அய்யாவு மகனா நீ...? உங்க வீட்ல எல்லாரும் கோயிலுக்குப் போறாங்களே, நீ போகலியா...?’’ என்றதற்கு, ’’மறுபடி என்னைக்கு குஸ்தி நடக்கும்னு தெரியாதுங்களே, சாமிய எப்பப் பார்த்தா என்ன...? மலையும் நகராது, சிலையும் பறக்காது’’ என்றாராம்.

 

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியிருக்கிறார். சின்னப்பத்தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது அந்த உடற்பயிற்சிக் கூடம்தான், என்று சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட சாண்டோ சின்னப்பா தேவர் என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா.தீனதயாளன்.

 

ஓய்வு நேரத்தில் தனது உடற்பயிற்சி கூடத்தில், மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்து ஆண் அழகனாக உருவானார். பிறருக்கும் கற்றுக்கொடுத்தார். அந்தப் பயிற்சிகள்தான் அவரது பிற்கால சினிமா பயனுத்துக்கு பெரிதும் உதவப் போகிறது என்பது அப்போதே அவருக்குத் தெரிந்திருக்கலாம்.

சினிமா ஆர்வமும் - சினிமாவில் நுழையும் முயற்சியும்

டூரிங்க் டாக்கிசில் சினிமா பார்ப்பது சின்னப்பாவுக்கு ருசிகரமான அனுபவம். கூலி வாங்கியதும் ஓடுகிற ஒரே இடம் அதுதான். மவுனப்படங்கள் மட்டுமே வெளியான காலகட்டம் அது. வெளிநாட்டு சண்டைப்படங்கள் என்றால் தேவருக்கு அத்தனை இஷ்டம். மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து அட்டைக்கத்தி வீசுவார், ஆக்ரோஷமாகப் பாய்ந்து குத்துவார், குதிரை ஏறிப் பறக்கும் சின்னப்பாவின் ஆசையில் ஆற்றங்கரைக் கழுதைகள் அல்லல்படும், கிணற்றில் நீர் இறைக்கும் தாம்புக் கயிறு சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜனாக மாற்றுமாம்.

 

1931-ஆம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியது. ஒலியோடு கூடிய ஒளிச்சித்திரங்களில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை எனும் விளம்பரங்களோடு, பிரபல சினிமா நிறுவனங்களின் முகவரிகள், அக்கால பத்திரிகைகளில் வரத்தொடங்கின. உற்சாகமான சின்னப்பத்தேவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாரானார். பல சினிமா நிறுவனங்களுக்கு தனது புகைப்படத்துடன் வாய்ப்புக் கேட்டு கடிதம் எழுதினார். எதற்கும் பதில் வரவில்லை. இரவு தெருக்கூத்துகளில் ஆடிப்பாடி ஆத்ம திருப்தியடைந்தார்.

 

அடிப்படை சங்கீதம், ராக பாவம் குறித்தெல்லாம் தெரியாவிட்டாலும், கேள்வி ஞானத்தில் சொற்களைச் சேர்த்து இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைத்தட்டல்கள் தொடர்ந்தன.

 

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. அதற்கு திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர்.

 

பிரபல ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பத்தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சாண்டோ சின்னப்பா தேவர்

பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS

வாழ்நாள் நட்பை முதல்முறை சந்தித்த தருணம்

சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள், தற்செயலாக ஒருவரைச் சந்தித்து பார்வையைத் திரும்பப் பெறவே முடியாமல் பிரம்மித்தார் தேவர். ‘’அந்திச்சூரியன் ஆளாகி வந்து நிற்கிறதா என்ற சந்தேகம். செக்கச்செவேலென்ற கம்பீரத் தோற்றம், களையான முகம், எவரையும் அசத்திவிடும் வசீகரச் சிரிப்பு. தன்னையும் அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார் தேவர்’’ என்று அந்தத் தருணத்தை விளக்குகிறார் எழுத்தாளர் தீனதயாளன்.

 

‘’அண்ணே ஒருத்தர் வந்தாரே யாருண்ணே அவரு? ஜோரா இருக்காரு’’ என்ற தேவரின் கேள்விக்கு கிடைத்த பதில் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’

 

அப்போது எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பு, பின் நட்பாகி இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

 

திரையுலகின் உச்சாணிக்கொம்பை நோக்கி எம்.ஜி.ஆர் மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருந்த சமயத்தில், அவரது படங்களிலெல்லாம் தேவருக்கென்றே கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. மர்மயோகி, குலேபகாவலி, மதுரை வீரன், அரசிளங்குமரி என எம்.ஜி.ஆருக்கு இமாலயப் புகழ் கிடைத்தப் படங்கள் அனைத்திலும், தேவர் தொடர்ந்து இடம்பெற்றார்.

 

வாய்ப்புகள் நிறைய கிடைத்தாலும் நடிப்புத் தொழிலோடு நிறுத்திவிடாமல், சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்குதான் சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இனி சினிமா மட்டுமே தன் எதிர்காலம் என்று தீர்மானித்த தேவர், எம்.ஜி.ஆர் பின்புலமாக இருக்கிறார், இனியும் இருப்பார் என்ற நம்பிக்கையில், நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

தயாரிப்பாளர் அவதாரம்

சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி, எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர் அவர்தான். ஆனால், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல தங்கை’ சுமாராகத்தான் ஓடியது. ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.

 

அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார். தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில் சிக்கல் நீடித்தது. தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின. மருதமலை முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தேவர் ஃபில்ம்ஸ் உதயமானது இப்படி தான்

சாண்டோ சின்னப்பா தேவர்

பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS

 
படக்குறிப்பு,

ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் சாண்டோ சின்னப்பா தேவர்

’’நாகராஜா, இன்னும் கம்பெனிக்கே பெயர் வைக்க முடியல, அப்புறம் எப்படி படம் எடுக்குறது? ஏதாவது ஒன்ன முடிவு பண்ணேம்பா’’ என்று நல்ல தங்கை படத்திற்கு வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜனை அவசரப்படுத்தினார் தேவர். படத்துக்கான கதையைக் கூட அவரே எழுதியிருந்தார்.

 

’’தேவர் ஃபிலிம்ஸ் வழங்கும் தாய்க்குப் பின் தாரம், நல்லா இருக்கா..? உங்க பேரையே வெச்சுட்டேன்’’ என்று ஏ.பி.நாகராஜன் சொல்ல, தேவர் முகத்தில் முழு திருப்தி. - தேவர் ஃபிலிம்ஸ் உருவான கதையை இப்படித்தான் விவரிக்கிறார் எழுத்தாளர் தீனதயாளன்.

 

கம்புச்சண்டை காட்சியில், ’’நீங்களே எங்கூட நடிங்க, வேற ஆளு வேணாம்’’ என்று எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதை அடுத்து, இருவரும் தினமும் சிலம்பம் சுற்றினார்கள். படத்தின் டெக்னீஷியன்களே விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். அந்த ஒரு சண்டைக்காட்சிக்காகவே அந்தப்படம் வசூலை அள்ளும் என்று தெரிந்திருந்தும், கூடுதலாக எம்.ஜி.ஆரை உயர்த்திக்காட்ட எண்ணிய தேவருக்கு உதயமான இன்னொரு யோசனைதான் ஜல்லிக்கட்டு. அதுவரை யாராலும் அடக்க முடியாத காளையைத் தானே தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, பிரம்மாண்டமான செட்டில் எம்.ஜி.ஆரை வைத்து ஜல்லிக்கட்டு காட்சியை படமாக்கினார்.

 

1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வெளிவந்த ’’தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

 

அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களைத் தயாரித்தார்.

 

பின்னாளில் தனது ஆஸ்தான வசனகர்த்தா என்று அறியப்பட்ட ஆரூர்தாசை நான்காவது படமான செங்கோட்டை சிங்கம் படத்தில்தான் அறிமுகப்படுத்தினார்.

 

’’வெற்றி... வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி...’’ என்று எஸ்.வி.சுப்பையா பேசுகிற முதல் காட்சியின் வசனத்தை வாய்விட்டுக் கூறினார், ஆரூர்தாஸ். ’’நிறுத்துப்பா... முதல் மூணு ஆட்டத்த நாம காட்டலியே’’ என்றார் தேவர்.’’அதனால எண்ணண்ணே... தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம், அதைத்தான் வெற்றி வெற்றி-ன்னு எழுதினேன்’’ என்று கூற தேவர் உருகிவிட்டார். ஆரூர்தாஸ் கூறியபடி, அந்தப்படமும் வெற்றிபெற, தனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் வெற்றி... வெற்றி... என்று கத்தியபடியே ஓடி வருவதை ஓர் அம்சமாகவே நிலைநாட்டினார்.

 

ஒரு கட்டத்தில் மற்ற ஃபைனான்சியர்களை நாடிச் செல்ல மனமில்லாமல், குறைந்த செலவில் புதுமுகங்களை மட்டும் வைத்துப் படம் பண்ணலாமா, அல்லது மிருகங்களை அதிகளவில் பயன்படுத்திப் படம் பண்ணலாமா என்கிற யோசனையில் இருந்த தேவர், ’’எலிஃபேண்ட் பாய்’’ என்னும் ஆங்கிலப்படத்தை தமிழ்ப்படுத்த விரும்பினார். தனது லட்சியப் படமாகவும் அதனை அறிவித்தார்.

 

யானைகளை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார். முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். முதுமலை ஸ்ரீநிவாச எஸ்டேட்டில் யானைகளுக்காக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி தவம் கிடந்தார். 1960ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’யானைப் பாகன்’ ரிலீசானது.

 

உண்மையில் தமிழ் சினிமாவில் புதுமையான முதல் முயற்சி அது என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் தீனதயாளன், அதே தினத்தில் வெளியான கைதி கண்ணாயிரம், கைராசி, மன்னாதி மன்னன் போன்ற படங்களின் முன் யாரும் யானைப்பாகனை கண்டுகொள்ளவில்லை என்றும், பத்திரிகைகள் கூட, தேவரின் டாக்குமெண்ட்ரி படம் என்று கிண்டல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.

கிழக்கில் இருந்து வந்த நல்ல செய்தி

’’முருகா... என் கதைய இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டியே...’’ என்று கலங்கிய தேவருக்கு கிழக்கிலிருந்து நல்ல செய்தி வந்தது. கல்கத்தாவில் இருந்து வந்த பட அதிபர் ஒருவர், யானைப்பாகனை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்ய உரிமைக் கேட்டார். மயக்கம் தெளிந்தவாரு கல்கத்தா சென்ற தேவர், தன்னைத் தேடி வந்த பட அதிபருக்கும், அவரது நண்பர்களுக்கும் யானைப் பாகனை போட்டுக் காண்பித்தார்.

 

படம் முடிந்ததும், அங்கிருந்த அந்த கல்கட்டா பட அதிபரின் நண்பர் ஒருவர் எழுந்து வந்து தேவரைக் கட்டிக்கொண்டார். ’’மிக அற்புதமாகப் படமாக்கி இருக்கிறீர்கள்... இயற்கையான சூழ்நிலையில், மிகைப்படுத்தலின்றி, இயல்பாகவே எடுத்திருக்கிறீர்கள், பாராட்டுகள்’’ என்றார். அவர் வேறு யாருமல்ல, திரைமொழியில் இலக்கியத்துக்கு நிகரான பல படைப்புகளைத் தந்த இந்தியத் திரையுலகின் மேதை சத்யஜித்ரே.

 

உழைப்பு வீணாகவில்லை என்று தலை நிமிர்ந்தார் தேவர். சத்யஜித்ரே தேவருக்காகப் பரிந்துப் பேச, வியாபாரம் நல்ல விலையில் முடிந்தது. வங்க நண்பருக்கு நன்றி கூறி ஊர்த் திரும்பியவர், மீண்டும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார்.

 

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். அந்த தருணத்தில் எம்.ஜி.ஆருக்கு தேவர் செய்து கொடுத்த சத்தியத்தைக் கடைசி வரை காப்பாற்றினார். சிவாஜியின் நடிப்புக்குத் தீவிர ரசிகனாக இருந்தாலும், கடைசி வரை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஒரு படத்தில் கூட சிவாஜியுடன் இணையவில்லை.

 

அந்த சந்திப்புக்குப் பிறகுதான், ’தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்தத் திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. வேகத்தில், தேவர் யாரும் கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் என்பதற்கு அதுவே சான்று.

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி.ஆரை தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.

எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

சாண்டோ சின்னப்பா தேவர்

பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS

 
படக்குறிப்பு,

எம்.ஜி.ஆர்.-ஜானகி திருமணத்தில் சாண்டோ சின்னப்பா தேவர்

சொல்லி அடித்த தேவர்

நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை திரைத்துறை. ஆரவாரமாக துவங்கப்படும் பல படங்கள் வழக்கமான பல பிரச்னைகளைத் தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயமாகிவிடுகின்றன. அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டியே வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கும் விஷயம்.

தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளையெல்லாம் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும். தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் மட்டுமல்ல இன்றும் ஆச்சர்யமான விஷயம்தான்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.

மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கண்ணாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் பிரபலமானார். லட்சுமி காந்த் பியாரிலால் இசையில் பாடல்களும் செம்ம ஹிட்... ஏற்கனவே மேஜர் சுந்தர் ராஜனை வைத்து தேவர் எடுத்திருந்த தெய்வச்செயல் என்னும் படத்தையே சீர் படுத்தி கதை செய்திருந்தார்கள். ஆனால், படம் இந்தியில் ஓடு ஓடு என ஓடியதைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணா கேரக்டரில் எம்ஜியாரை வைத்து நல்ல நேரம் என ரீமேக் செய்தார். தமிழிலும் பாடல்கள் பெரும்புகழ் பெற்றன.

கிருபானந்த வாரியாரை திரையில் காட்டியவர்

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார்.

திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். முருகனின் தலங்களை அடிப்படையாகக்கொண்ட பாடல்களோடு ’தெய்வம்’ எனும் திரைப்பட்டத்தை தயாரித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார். கண்ணதாசன் வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட். ’’மருதமலை மாமணியே’’ பாடல் இடம்பெற்றதும் இத்திரைப்பபடத்தில்தான். ரமணியம்மாள் குரலில் ’’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’’, சீர்காழி கோவிந்தராஜனின் காந்தக் குரலில் ஒலித்த ‘’திருசெந்தூரின் கடலோரத்தில்’’ எனும் பாடல்களைக் கேட்போரெல்லாம், இன்னமும் சிலிர்த்துப் போவார்கள்.

 

நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வர வைத்ததும் தேவரின் சாதனைதான்.

சாண்டோ சின்னப்பா தேவர்

பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS

 
படக்குறிப்பு,

சாண்டோ சின்னப்பா தேவருடன் முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர்.

கலைஞர்களுக்கு ஈடாக விலங்குகளைப் பயன்படுத்தியவர்

அதுவரை இணை நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் நாயகனாக ப்ரமோஷன் ஆன படம் ’’வெள்ளிக்கிழமை விரதம்’’. ஆனால் பாராட்டுக்களை அள்ளிச் சென்றது முக்கிய வேடத்தில் நடித்த பாம்புதான்.

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்குகளை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறியிருக்கும், என்கிறார் எழுத்தாளர் தீனதயாளன்.

 

’ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம்.

1972 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது. ராமு என்னும் ஆடு ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டாரானது. தியேட்டர் தியேட்டராக அந்த ஆட்டை கூட்டிச் சென்று படம் பார்க்க வந்தவர்களுக்கு காட்டினார்கள். ஸ்ரீபிரியாவையும் நம்பர் ஒன் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது அந்தப் படம்தான். பின் ஐந்து வருடங்கள் அவர் உச்சத்தில் இருந்தார். பொதுமக்கள் ஆட்டின் சாகஸங்களான டேப் ரிக்கார்டர் ஆன் செய்வது, கடிதம் கொடுப்பது போன்றவற்றில் மெய்மறந்தனர்.

 

அந்தக் காலகட்டத்தில் வந்த மற்ற படங்கள் போல், தேவரின் படங்களில் கலை அழகு மிளிராது. முக்கியமாக, பிரம்மாண்ட செட்களில் கனவுப் பாடல்கள் இருக்கவே இருக்காது. இலக்கண தர வசனங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும். அதற்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா.

இறுதிப் பயணம்

ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதே மறுநாள், அதாவது 1978ஆம் செப்டம்பர் 8ஆம் நாள், மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.

 

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின், மகன் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடிப்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.

 

நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் போன்ற பிரச்னைகளில் திரையுலகம் இன்றும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் நடிக்கும்போது, இந்திய திரையுலகின் பரபரப்பான கதாநாயகர்கள் பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பது, இப்போதும் வியப்புக்குரிய ஒன்றுதான்.

https://www.bbc.com/tamil/articles/c4npym8424ko

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.