Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: ரயில்கள் பல லட்சம் பேரை காப்பாற்ற விமானங்கள் என்ன செய்தன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா - பாக். பிரிவினை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கராச்சியில் டக்ளஸ் டகோட்டா விமானத்தில் இருந்து சரக்குகளை இறக்கும் உள்ளூர் தொழிலாளர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 14 ஆகஸ்ட் 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின் மேலே மூன்று முறை வட்டமடித்தது.

“மக்கள் வெளியே வந்துவிட்டார்கள். சண்டை ஓய்ந்து இறந்தவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்படுவது போல இருந்தது. மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று உடைகள் மற்றும் ஆயுதங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட தொடங்கினர்.”

துணைக் கண்டத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரித்தபோது ஏற்பட்ட படுகொலைகளைப் பற்றிய கற்பனையான விவரத்தை பீஷ்ம சாஹ்னி எழுதியுள்ளார். இதன் போது மதக் கலவரம் வெடித்தது. சுமார் 1 கோடியே 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். சுமார் 10 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

விமானங்கள் பற்றிய விளக்கம் வரும் இடத்தில், கற்பனை என்பது யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய வரலாற்றாசிரியர் ஆஷிக் அஹ்மத் இக்பால் கூறுகிறார்.

"விமானம் இருந்தது என்பது ஒரு வகையில் பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது கூட்டத்தை சிதறடித்தது. கிராம மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நேரம் கிடைத்தது," என்று இக்பால் குறிப்பிட்டார்.

 

இக்பால் தனது The Airplane and the Making of India என்ற புத்தகத்தில்,"பிரிட்டிஷ் பேரரசு இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்த போது, விமானங்கள் சிறிய, ஆனால் முக்கிய பங்கு வகித்தன" என்று எழுதுகிறார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெயர்ந்த கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் மக்களில் பெரும்பாலானோர் ரயில்கள், வாகனங்கள், மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர் அல்லது கால்நடையாகச் சென்றனர். இவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டதாக இக்பால் கூறுகிறார்.

1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அதாவது சுமார் மூன்று மாதங்களில் மக்கள் பரிமாற்றம் முடிவடைந்தது.

 
இந்தியா - பாக். பிரிவினை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரயில்களில் ஏறி உயிர் தப்பிய அகதிகள்

கால்வாய்களில் மிதந்த சடலங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவின் விமானப்படையாக இருந்து பின்னர் இந்திய தன்னாட்சி பகுதியின் விமானப்படையாக மாறிய தி ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் (RIAF), பிரிவினையின் போது ஏற்பட்ட குழப்பத்தை அமைதிப்படுத்துவதிலும், பிரிவினையின் காரணமாக அகதிகளாக மாறிய மக்களை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகித்ததாக இக்பால் எழுதுகிறார்.

ஒவ்வொரு நாள் காலையிலும், விமானப்படை விமானங்கள் முக்கிய உளவுப் பணிகளை மேற்கொண்டன. அகதிகள் செல்லும் ரயில்களை வன்முறை கும்பல்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும், ரயில் பாதையில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதா என்பதைக்கண்டறியவும் ரயில் தண்டவாளத்தின் மீது பறந்து சென்றன. இந்த விமானங்கள் ஆயுதமேந்திய கும்பலைக் கண்காணிக்கும் மற்றும் வயர்லெஸ் ரேடியோ மூலம் ரயிலுடன் தொடர்பை பராமரிக்கும்.

1947 செப்டம்பரில் பஞ்சாப் மீது பறந்த ஒரு விமானம் திடுக்கிடும் காட்சியை விவரித்தது. ”சுமார் முப்பதாயிரம் அகதிகள் 40 கிலோமீட்டர் நீளமான வரிசையில் நடந்தே எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். களைத்துப்போயிருந்த அகதிகளைத் தாக்கத் தயாராக பதுங்கியிருந்த கூட்டத்தை இந்த விமானம் கண்டது. இந்த விவரத்தை ராணுவ ரோந்து படைகளிடம் தெரிவித்தது. எரிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து எழும் புகை பற்றிய விவரங்களையும் விமானங்கள் பதிவு செய்துள்ளன,” என்று இக்பால் குறிப்பிடுகிறார்.

" குறைவான உயரத்தில் பறந்த விமானங்கள் பஞ்சாபின் கால்வாய்களில் மிதந்துகொண்டிருந்த சடலங்களைக் கண்டன,” என்று அவர் எழுதியுள்ளார்.

 

ஆனால் விமானத்தின் பங்கு இதனுடன் நிற்கவில்லை. RIAF இன் நம்பகமான விமானமான டகோட்டா, டெல்லியில் இருந்து கராச்சிக்கு காலரா மருந்தின் 15 லட்சம் டோஸ்களை கொண்டு சேர்த்தது. கராச்சியின் அசுத்தமான அகதிகள் முகாம்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. விமானங்களில் இருந்து அகதிகளுக்காக சமைத்த உணவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவையும் போடப்பட்டன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் விமானங்கள் மூலம் துண்டு பிரசுரங்களை வீசி, வன்முறையை நிறுத்துமாறு கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என்று இக்பால் குறிப்பிட்டுள்ளார்.

முல்தான், பன்னு மற்றும் பெஷாவர் போன்ற பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவித்த முஸ்லிம் அல்லாதவர்களை RIAF, பாதுகாப்பான புகலிடங்களுக்கு வெளியேற்றியது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போது, லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றனர். விமான நிலையத்தில் விமானங்களின் டயர்களில் மக்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக்காண முடிந்தது. 1947 ஆம் ஆண்டில், டெல்லி மற்றும் பஞ்சாப் விமான ஓடுபாதைகளில் ’ஆபத்தான மற்றும் எந்த விலை கொடுத்தாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தின்’ காட்சிகள் அரங்கேறின.

 
இந்தியா - பாக். பிரிவினை

பட மூலாதாரம்,MICHAEL OCHS

 
படக்குறிப்பு,

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க விமானப்படையால் கைவிடப்பட்ட விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கின.

விமானம் ஏற லஞ்சம்

“விமான ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள முகாம்களில் வசித்த அகதிகள் அனுமதிக்கப்பட்டவுடன் விமானங்களை நோக்கி ஓடுவார்கள். விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் தங்கம் மற்றும் பணத்தை பணியாளர்களுக்கு லஞ்சமாக கொடுத்தனர்,” என்று இக்பால் குறிப்பிடுகிறார்.

டிக்கெட் விலை அதிகம். பயணிகள் மிகக் குறைந்த சாமான்களையே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஹைதராபாத்தில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற பெண் பயணி ஒருவர் தன்னுடன் குர்ஆனை மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்தது என்று விவரித்துள்ளார். சில பயணிகள் 'குழந்தையின் மூங்கில் நாற்காலி' அல்லது 'நோய்வாய்ப்பட்ட கிளி' போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.

விமானங்கள் நிரம்பி வழிந்தன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதிக மக்களை ஏற்றிச்செல்ல ஏதுவாக இருக்கைகள் மற்றும் தரை விரிப்புகள் அகற்றப்பட்டன. டகோட்டா டிசி-3 விமானங்கள் 21 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால் இவை பெரும்பாலும் ஐந்து மடங்கு அதிகமான மக்களுடன் பறந்தன.

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் விமானி, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தனது டெக்னீஷியனுக்கு கைமுட்டிகளில் அணியும் உலோக உறைகளை அளித்தார்.

“அவர் அண்டர்கேரேஜின் (விமானத்தின் கீழ் பகுதி) pin களை எடுத்து அதை தள்ளியவாறு கதவுகளை நோக்கி முன்னேறுவார். பின்னர் தள்ளியவாறு விமானத்திற்குள் நுழைந்து கதவை மூடுவார். இன்ஜின் சத்தத்துடன் விமானம் புறப்படும். விமானத்தில் ஏற முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் தானே வழிவிட்டுப்பிரியும்,” என்று இக்பால் எழுதுகிறார்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், விமானத்தை அதிக அளவில் பயன்படுத்தினாலும், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலவீனமாக இருந்தாலும் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்தியா - பாக். பிரிவினை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன் இந்தியாவில் கூடியிருக்கும் முஸ்லிம் அகதிகள்

உலகப் போரில் கைவிடப்பட்ட விமாங்களின் பயன்பாடு

"பலவீனமான பாதுகாப்பு காரணமாக விமானம் தரையிறங்குவதற்கு முன்பே ஓடுபாதை பெரும்பாலும் அகதிகளால் நிரம்பி வழியும். ஆனால் நிர்வாகம், பிற நாட்டு விமானங்களின் பணியாளர்களுடன் மிகவும் நட்பாக இருக்கவில்லை. இதன் காரணமாக எந்த உதவியும் கிடைக்கவில்லை,” என்று இக்பால் குறிப்பிடுகிறார்.

1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் 115 சிவிலியன் விமானங்கள் இருந்தன. அவை 11 தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்திய நிறுவனங்கள் மலிவான விலையில் விமானங்களை வாங்கியதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்தது. அவற்றில் பெரும்பாலானவை டக்ளஸ் டிசி-3 டகோடாக்கள். அவை அமெரிக்க விமானப்படையால் கைவிடப்பட்டவை. ஆனால் சப்ளை அதிகமாக இருந்தது. தேவையும் அவ்வளவாக இல்லை. லாபம் குறைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திட்டமிட்ட மார்கங்களில் பறக்காத சிவிலியன் விமானங்கள், பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளை கொண்டுவர பயன்படுத்தப்பட்டன. இவற்றில் பத்து விமானங்கள் அரசுக்கு கிடைக்கப்பெற்றது.

ஆனால் அப்போது நடந்துவந்த பெருவாரியான இடப்பெயர்வை சிவிலியன் விமானங்களை இயக்கும் ஆபரேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை.

இந்த சாத்தியமற்ற பணிக்காக தனது விமானங்கள் மற்றும் பணியாளர்களின் உயிரைப் பணயம் வைக்க அவர்கள் மறுத்தனர். இறுதியில் வெளிநாட்டில் இருந்து உதவி கோரப்பட்டது.

பிரிட்டிஷ் ஓவர்சீஸ் ஏர்வேஸ் கார்ப்பரேஷனின் 21 விமானங்கள் 6300 பேரை டெல்லியிலிருந்து கராச்சிக்கு ஏற்றிச் செல்ல 15 நாட்கள் இரவும் பகலும் பறந்தன. டெல்லி விமான நிலையத்தில் சிக்கித் தவித்த முஸ்லிம் அகதிகளுக்கு உதவ இந்த விமானங்கள், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் மருந்துகளுடன் வந்தன.

 
இந்தியா - பாக். பிரிவினை

பட மூலாதாரம்,COURTESY THE PARTITION MUSEUM, TOWN HALL, AMRITSAR

 
படக்குறிப்பு,

பிரிவினையின் போது அகதிகள் முகாமில் தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் மக்கள்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஊழியர்கள்

பிரிட்டிஷ் குடிமக்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ராயல் விமானப்படை விமானங்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 12,000 பேரை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டன.

இவர்களில் 2790 பேர் மட்டுமே பிரிட்டிஷ் ஊழியர்கள். மீதமுள்ளவர்கள் ரயில்வே, தபால் மற்றும் தந்தி துறையின் ஊழியர்கள். மக்கள் இடப்பெயர்வில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கவேண்டி இருந்தது என்று இக்பால் எழுதுகிறார்,

இந்த முயற்சி போதாது என்பதை 1947 அக்டோபரில் இந்தியா உணர்ந்தது. பின்னர் ஆபரேஷன் இந்தியா தொடங்கப்பட்டது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 21 விமானங்கள் சுமார் 35,000 பேரையும், பெருமளவு பொருட்களையும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கொண்டு சென்றன. இந்த விமானங்களில் பெரும்பாலானவை எட்டு பிரிட்டிஷ் நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட டகோடாக்கள். இந்த நடவடிக்கைக்காக பிரிட்டனில் இருந்து 170 பணியாளர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கை மிகவும் பெரியதாக இருந்தது. இந்தியாவின் விமான நிறுவனங்கள் அதை சமாளிக்கப்போதுமானதாக இல்லை. இந்த சூழ்நிலையில் இரு அரசுகளுமே பிரிட்டிஷ் நிறுவனங்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களை நம்ப வேண்டியிருந்தது.

"சுதந்திரத்திற்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த முதல் மாதங்களில், சுதந்திர இந்தியாவின் விரைவான மேம்பாட்டிற்கு விமானங்களின் பயன்பாடு உதவியது," என்று இக்பால் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/ce9g95j0yqlo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.