'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி பட மூலாதாரம்,BBC Asian Network 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். பாலிவுட் திரையுலகம் தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது, திரையுலகில் பிளவுக் கருத்துகள் அதிகரித்து வருகின்றனவா, பாலிவுட் திரையுலகில் அவரது அனுபவங்கள் எனப் பல விஷயங்களை அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி ஆசிய நெட்வொர்க் எடுத்த நேர்காணலில் ஹரூண் ரஷீத்திடம் பேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகக் காண்போம். 'நானும் மனிதன்தானே!' ஹரூண் ரஷீத்: உங்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பர்மிங்ஹாம் சிம்ஃபனி அரங்கத்திற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுள்ளதா? அப்போது இருந்ததில் இருந்து உங்களில் இப்போது நடந்துள்ள மாற்றங்கள் என்ன? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் மிகவும் பயந்து போயிருந்தேன். நான் சென்னையில் இருந்து வந்தவன். அங்கெல்லாம் ஆர்கெஸ்ட்ரா வேறுவிதமாக இருக்கும். இங்கு நடந்த விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஹரூண் ரஷீத்: நீங்கள் பயந்தீர்கள் என்பதைக் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆஸ்கர் உள்பட எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையுமே வென்றுவிட்ட நீங்கள் ஓர் அரங்கத்திற்குள் நுழையும்போது பயந்ததாகச் சொல்வதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை... ஏ.ஆர்.ரஹ்மான்: நானும் மனிதன்தானே! நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நிலைமையை திறம்படக் கையாள்வோம். இருப்பினும் சில நேரங்களில் நாம் இதுவரை அறிந்திடாத ஓரிடத்திற்குள் நுழையும்போது பயம் வரவே செய்யும். ஆனால் அதையும் மீறி வாழ்க்கை செல்லத்தானே வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 'ரோஜா படத்துடன் திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்' ஹரூண் ரஷீத்: ரோஜா திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியாவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வெளியான பிறகு நடந்த மாற்றம் என்ன? ரஹ்மான்: ரோஜாவுக்கு இசையமைக்கும் போது மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். இதை செய்து முடித்துவிட்டு, திரைத்துறையை விட்டு விலகி, என் சொந்த ஆல்பங்களை தயாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு மாறாக அனைத்தும் மாறின. என் ஸ்டூடியோவில் இசையைப் போட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச ஸ்பீக்கர்களில் நன்றாக இருக்கும். அதுவே திரைப்படத்தில் மோனோவில் கேட்கையில் அவ்வளவுதானா என்றிருக்கும். அதனால் நான் மீண்டும் படங்களுக்கு இசையமைக்கவே போவதில்லை என முடிவு செய்வேன். இசையின் தரம் குறைந்துவிடுவதாகக் கருதினேன். நான் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், எதுவும் மாறப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனை என்னைப் பீடித்திருந்தது. பின்னர் அனைத்தும் மாறியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டால்பி, அட்மோஸ், டிஜிட்டல் எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிவேகமாக நடந்தன. அதன்பிறகு, சரி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டே இருந்தேன். பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து, சரி திரைத்துறையை விட்டு விலக வேண்டுமென்ற முடிவைக் கைவிட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன். 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' ரஹ்மான்: உண்மையில், ரோஜா, பாம்பே, தில் சே (உயிரே) ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த நேரத்தில் நான் இந்தி திரையுலகில் ஒரு வெளியாள் போலத்தான் உணர்ந்து கொண்டிருந்தேன். தால் திரைப்படம்தான் அதை மாற்றியது. ஹரூண் ரஷீத்: 1999இல் தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியானது என்றால் அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு நாட்டிலேயே மிகவும் அற்புதமான இசையை நீங்கள் அளித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஒரு வெளியாள் என்று விவரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா? ரஹ்மான்: அதற்குக் காரணம் நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது. ஆனால், 'எனக்கு உன் இசை மிகவும் பிடித்துள்ளது. நீ இங்கு நீண்டநாள் நீடிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு நீ இந்தி மொழியைக் கற்க வேண்டும்' என்று சுபாஷ் காய் கூறினார். நானும் சரியெனக் கூறி, ஒரு படி மேலே சென்று உருது மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், 60கள், 70களின் இந்தி இசைக்கு தாயாக இருப்பது உருதுதான். பின்னர் அதனுடன் ஒத்திருக்கக்கூடிய அரபி மொழியை படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து பஞ்சாபி மொழி மீது ஆர்வம் கொண்டேன். உயிரே படத்தில் கதாபாத்திரத்தையே மாற்றிய ஒரு பாடல் ஹரூண் ரஷீத்: சமீபத்தில் அந்தந்த மொழிக்குரிய கலாசார பண்புகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். குறிப்பாக, உயிரே திரைப்படத்தில் வரும் நெஞ்சினிலே பாடலில் மலையாள கலாசாரம் கலந்திருக்கும். அது தற்போது அதிகம் விவாதத்திற்கு உள்ளாகிறது. சமீபத்தில் வெளியான பரம் சுந்தரி திரைப்படத்தில் மலையாள சமூகம் காட்டப்பட்ட விதம் விமர்சிக்கப்படுகிறது. 1998இல் ஏ.ஆர்.ரஹ்மானால் கலாசாரத்தை துல்லியமாகக் காட்ட முடிந்தபோது, இப்போது ஏன் முடியவில்லை என்று கேட்கப்படுகிறது. ரஹ்மான்: மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்களால் முன்பைவிட இப்போது சிறப்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஹரூண் ரஷீத்: இருப்பினும் 1998இல் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது? ரஹ்மான்: அப்போது என்ன நடந்தது என்றால், மணிரத்னம் இந்த டியூனை எடுத்துக்கொண்டு, எனக்கு கல்யாண கனவு போன்ற ஒன்று வேண்டுமென்றார். சரி, எந்த மரபுப்படி அது இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அவர் என்னையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான் மலையாள முறையைத் தேர்வு செய்தேன். அவர் சரியெனக் கூறி, இரண்டாவது கதாநாயகியை ஒரு மலையாளியாகக் கதையில் மாற்றிவிட்டார். ஹரூண் ரஷீத்: அப்படியெனில், ப்ரீத்தி ஜிந்தாவின் பாத்திரம் மலையாளி கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே 'நெஞ்சினிலே' பாடலுக்காகத்தானா? ரஹ்மான்: ஆமாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அந்த டியூன் மிகவும் சுவாரஸ்யமானது எனக் கருதினார். இன்றும்கூட அந்தப் பாடலை, மலையாளம் புரியவில்லை என்றாலும், பலர் பாடுகிறார்கள். அதுமட்டுமின்றி நான் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதுவரைக்கும் எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று, அங்கு நிலைத்தது இல்லை. அது முற்றிலுமாகப் புதிய கலாசாரம். இளையராஜா இரண்டு படங்களைச் செய்திருந்தார். அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன். காணொளிக் குறிப்பு தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா? ஹரூண் ரஷீத்: பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக்கொள்வேன். ஹரூண் ரஷீத்: ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான்: ஏனெனில், வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதைத் தேடிச் செல்வதில்லை. நான் எதையாவது தேடிச் செல்லும்போது அது துரதிர்ஷ்டமாக அமைவதாக உணர்கிறேன். நான் எதற்குத் தகுதியானவனோ அதைக் கடவுளிடம் இருந்து பெறுகிறேன். பட மூலாதாரம்,BBC Asian Network சாவா திரைப்படம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதா? ஹரூண் ரஷீத்: நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்... ரஹ்மான்: அதனால்தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும். ஹரூண் ரஷீத்: ஆனால் இதன் காரணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா? ஏனெனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு படத்திற்கு உங்கள் இசையை வழங்கும்போது, அந்தப் படத்திற்கு எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை அல்லது எந்தத் தீய நோக்கமும் இல்லை என்பதை ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று ஒரு படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிவது மிகவும் கடினமாக உள்ளது. ரஹ்மான்: அது மிகவும் உண்மை. மேலும் சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன். ஹரூண் ரஷீத்: ஆனால், 'சாவா' படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம்? ஏ.ஆர். ரஹ்மான்: ஆமாம். ஹரூண் ரஷீத்: நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உங்களிடம் நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான்: அது பிளவுபடுத்தும் படம்தான். அது பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், இயக்குநரிடம் நான், 'இந்தப் படத்திற்கு நான் ஏன் தேவை?' என்று கேட்டபோது, 'இந்தப் படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை' என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் மேலும் அதன் முடிவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிச்சயமாக, மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்கள் திரைப்படங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு உள்மனசாட்சி என்ற ஒன்று உள்ளது. எது உண்மை, எது திரிக்கப்பட்டது என்பதை அதனால் அறிய முடியும். ஹரூண் ரஷீத்: வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாக்கப்படுவது பிரச்னையல்ல. அவை உருவாக்கப்படுவது உண்மையில் ஓர் அற்புதமான விஷயம். அது வரலாற்றைக் கொண்டாடுகிறது. அது கதாநாயகர்களைக் கொண்டாடுகிறது. அந்தப் படங்களுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள்தான் சிக்கலானவையாக இருக்கக்கூடும், இல்லையா? ஏ.ஆர். ரஹ்மான்: சாவா மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று. அது ஒவ்வொரு மராட்டியரின் ரத்தம் போன்றது. படம் முடிந்ததும், பெண்கள் அந்த அழகான கவிதைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம். அதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இசையமைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஹரூண் ரஷீத்: இது மாதிரியான படங்களில் எனக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால், திரையில் ஒவ்வொரு முறை ஒரு எதிர்மறை விஷயம் நடக்கும்போதும், கதாபாத்திரம் 'சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' போன்றவை வருகின்றன. இந்தப் படத்தில் மட்டும் சொல்லவில்லை; பிற படங்களிலும் இப்படியெல்லாம் காட்டப்படுகின்றன. ரஹ்மான்: ஆம், ஆனால் எனக்கு மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இத்தகைய தவறான தகவல்களால் ஈர்க்கப்படுவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எனக்கு மனிதத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது. ஹரூண் ரஷீத்: ஆனால், இத்தகைய விஷயங்கள் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதைக் காட்டுகிறதா? ரஹ்மான்: ஆம். அதோடு மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு இதயம் இருக்கிறது, அன்பு இருக்கிறது, இரக்கம் இருக்கிறது. தினசரி காலையில் எழுந்து 'இன்று எத்தனை பேரை நான் வெறுக்கப் போகிறேன்' என்று கருதுவோமா? இல்லை. அது உங்கள் இதயத்தில் இருக்கும் அமிலத்தைப் போன்றது. அது இதயத்தையே அழித்துவிடும். 'பிராமணப் பள்ளியில் படித்தேன்' ஹரூண் ரஷீத்: சமீபத்தில் நீங்கள் ராமாயணம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மத ரீதியான நூல் ஒன்று திரைப்படமாக வடிவம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் நன்கு அறியப்பட்ட ஒரு முஸ்லிம். அப்படியிருக்க இந்தப் படத்தில் உங்கள் பங்கு இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கலாம். இது ஏதாவது வகையில் உங்களை பாதித்துள்ளதா? ரஹ்மான்: நான் படித்தது ஒரு பிராமணப் பள்ளியில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் ராமாயணம், மகாபாரதம் இருக்கும். எனவே எனக்கு முழு கதையும் நன்கு தெரியும். மேலும், அந்தக் கதை நற்பண்பு, உயர்ந்த லட்சியங்கள் போன்ற விஷயங்கள் பற்றியது. மக்கள் பல விதமாக வாதிடலாம், ஆனால் அந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் மதிக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு நல்ல விஷயத்தையும் விட்டுவிடக் கூடாது என்கிறார் நபிகளார். அறிவு என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. அதை நீங்கள் எல்லாவற்றில் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், ஒரு யாசகனிடம் இருந்து அரசன் வரை, எதிர்மறை செயல்களில் இருந்து நேர்மறை செயல்கள் வரை அனைத்திலும் கற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது எல்லா இடங்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்று. அதனால், 'நான் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை' என்றோ, 'இங்கிருந்து நான் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்றோ ஒருவரால் ஒதுக்கிவிட முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vxdzkmpk2o
By
ஏராளன் · 3 minutes ago 3 min
Archived
This topic is now archived and is closed to further replies.