Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம் சீனாவுக்கு சவால் விடுகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அனந்த் பிரகாஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளின் தலைவர்கள் இதை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர்.

இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அதிக செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தம் இது என்று அவர் தெரிவித்தார்.

'வர்த்தகத்தை துரிதப்படுத்தும் நேரடிப் பாதையாக இது இருக்கும்' என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்ஸுலா வோன் டேர் லேயன் கூறியுள்ளார்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

 

பிரதமர் மோதி தொடங்கி வைத்தது என்ன?

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மிகப்பெரிய, லட்சியபூர்வமான உள்கட்டமைப்பு திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை ரயில் மற்றும் துறைமுக நெட்வொர்க் மூலம் இணைப்பது, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகள் ரயில் வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு, பின்னர் அவை கப்பல் பாதை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதன் பிறகு இந்த நெட்வொர்க் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும்.

செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

“இது வெறும் ஒரு ரயில் திட்டம் மட்டுமல்ல. இது கப்பல் மற்றும் ரயில் திட்டம். இந்தத் திட்டம் எவ்வளவு மதிப்புமிக்கது, லட்சியபூர்வமானது, முன்னோடியானது என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

“இந்த ஒப்பந்தம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்குப் பயனளிக்கும். உலக வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிப்பதற்கு இது உதவும்," என்று அவர் கூறினார்.

 

இந்த ஒப்பந்தத்தால் என்ன மாற்றம் ஏற்படும்?

ஜி20 மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஓர் உள்கட்டமைப்பு திட்டமாகும்.

இதன் கீழ் துறைமுகங்கள் முதல் ரயில் பாதை இணைப்புகள் வரை எல்லாமே கட்டப்பட உள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் ரயில் பாதைத் தொடர்பு மிகவும் விரிவானது.

ஆனால் மத்திய கிழக்கைப் பார்த்தால் அங்குள்ள ரயில் பாதைகள் ஒப்பீட்டளவில் விரிவாக இல்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பெருமளவில் சாலை அல்லது கடல் வழியாகவே செய்யப்படுகிறது.

ரயில்வே பாதைகள் இணைக்கப்பட்டால், மத்திய கிழக்கின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு சரக்குகளைக் கொண்டு செல்வது எளிதாகும்.

இதனுடன் கூடவே இந்தத் திட்டத்தால் உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய கப்பல் போக்குவரத்து வழியையும் வழங்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியா அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை அடைகின்றன. இதன் பிறகு அவை ஐரோப்பிய நாடுகளை சென்றடைகிறது.

இதனுடன், அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்குச் செல்லும் பொருட்கள் மத்தியதரைக் கடல் வழியாக அட்லான்டிக் பெருங்கடலில் நுழைந்து, பின்னர் அது அமெரிக்கா, கனடா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளை அடைகிறது.

 
இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,REUTERS

“தற்போது மும்பையில் இருந்து ஐரோப்பாவுக்கு புறப்படும் கண்டெய்னர்கள் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை அடைகின்றன. எதிர்காலத்தில் இவை துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயிலில் செல்ல முடியும்.

இதற்குப் பிறகு அவை ஐரோப்பாவை சென்றடையும். இதனால் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய நிபுணர் பிரமீத் பால் செளத்ரி கூறினார்.

தற்போது சர்வதேச வர்த்தகத்தின் 10 சதவீதம் சூயஸ் கால்வாயை நம்பியுள்ளது. இங்கு ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும்கூட சர்வதேச வர்த்தகத்திற்கு அது பெரும் சவாலாக உள்ளது.

'எவர் கிவன்' என்ற பெரிய சரக்குக் கப்பல், 2021ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இந்தச் சம்பவம் சர்வதேச வர்த்தகத்திற்கு நெருக்கடியை உருவாக்கியது. இந்தப் பிராந்தியத்தின் வழியாகச் செல்லும் சரக்குகளை ஒரு வார காலத்திற்கு இது தாமதப்படுத்தியது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடலுக்கு அடியில் ஒரு கேபிள் போடப்படும். அது இந்தப் பகுதிகளை இணைத்து, தொலைத்தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை விரைவுபடுத்தும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,PMO INDIA/TWITTER

உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை இது கொடுக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று சர்வதேச வர்த்தக நிபுணர் டாக்டர் பிரபீர் டே கருதுகிறார்.

"இந்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை வழங்கும். சூயஸ் கால்வாய் வழியை நாம் சார்ந்திருப்பதை இது குறைக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் அந்த வழித்தடத்தில் எப்போதாவது ஏதேனும் சிக்கல் எழுந்தால், அது சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது. ஏனெனில் மாற்று வழி இருக்கும்.

இதனுடன், செளதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரயில் பாதைகள் சரியாக இல்லை. இந்தப் பாதை அமைக்கப்பட்டால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கொண்டு வருவது நமக்கு எளிதாகிவிடும்," என்று டாக்டர் டே கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது சாதகமானதாக இருக்கும் என்று சர்வதேச உறவுகள் நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான டாக்டர் ஸ்வரன் சிங் கருதுகிறார்.

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மத்திய கிழக்கு நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் நிறுவப்படுவதன் மூலம், இந்த நாடுகளில் நிலைமை மேம்படும். ஒருபுறம், உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மறுபுறம், இது மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டு வரும். ஏனெனில் ரயில்பாதை இணைப்புகள் வணிகரீதியாக நாடுகளை நெருக்கமாக்குகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

“ஏதோவொரு விபரீத சூழல் ஏற்பட்டால், இரண்டு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்த முடியும். ரயில்வே வழித்தடத்தில் இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்து நடந்துகொள்ளும்,” என்று டாக்டர். ஸ்வரன் சிங் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால், இந்தப் பாதையின் வரவு இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வளவு ஊக்கமளிக்கும் என்பதை இப்போது மதிப்பிடுவது கடினம் எனக் கருதுகிறார் பிரபீர் டே.

“ஏனெனில் வணிகத்தின் வளர்ச்சி என்பது தூரத்தைக் குறைப்பதால் மட்டுமே ஏற்பட்டுவிடாது. இதற்கு வேறு பல காரணிகளும் உள்ளன,” என்றார் அவர்.

சீனாவின் சவால்

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், ”இந்த ஒப்பந்தம் தொடர்பாக உலகம் முழுவதிலும் நேர்மறையான கருத்துகள் வெளியாகும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இதுதொடர்பாக நேர்மறையான அணுகுமுறை இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை முறியடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார்.

ஜி20 குழுவிற்கு உள்ளே அவர் அமெரிக்காவை, வளரும் நாடுகளுக்கான மாற்று பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் முன்வைக்கிறார்.

பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் சீனா தனது செல்வாக்கு, முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரையிலும், ஆசியாவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரையிலும் விரிவுபடுத்தியுள்ளது.

 
இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஒப்பந்தம், சீனாவின் லட்சிய திட்டமான பிஆர்ஐ-க்கு வலுவான பதிலடி என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான தி வில்சன் மையத்தின் தெற்காசிய அமைப்பின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கருதுகிறார்.

"இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், அது இந்தியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும். பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு சவாலாக விளங்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்," என்று குகல்மேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்

இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பு தொடர்பான செய்திக்குப் பிறகு சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முயற்சிகள் போதுமானது அல்ல என்று விவரிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை 2008இல் தொடங்கியது. மேலும் இதன் கீழ் பல நாடுகளில் பணிகள் நடந்து வருகின்றன.

அதேநேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான இந்தத் திட்டம் 2023இல் தொடங்குகிறது.

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில்-துறைமுக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

அத்தகைய சூழ்நிலையில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்த்தைக் காட்டிலும் வலுவான மாற்றுவழி இது என்று சொல்ல முடியுமா?

பிஆர்ஐயுடன் ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் எங்கும் இல்லை என்று சொல்வது சரியானதுதான். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இந்தத் திட்டம் உலகிற்கு சாதகமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக டாகடர் ஸ்வரன் சிங் கூறினார்.

ஏனெனில், "அதன் நோக்கம் பிஆர்ஐ-இல் காணப்படுவதைப் போல எந்தவொரு அரசு அல்லது கட்சியின் செல்வாக்கை உலகம் முழுவதும் பரப்புவது அல்ல,” என்று டாக்டர் ஸ்வரன் சிங் சுட்டிக்காட்டினார்.

"இதன் நோக்கம், விதிகள் அடிப்படையிலான, உலகளாவிய ஒழுங்குமுறைக்கு ஏற்ப, ஒரு கட்டமைப்பை உருவாக்குவது. அதன்மீது எதிர்கால வர்த்தகம் கட்டமைக்கப்படும்.

ஏனென்றால் பிஆர்ஐ திட்டங்கள் எங்கு அமல் செய்யப்படுகின்றனவோ அந்த நாடுகளில் சில காலத்திற்குப் பிறகு சீனா பற்றிய எதிர்மறையான கருத்துகள் உருவாவதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் சீனாவின் நோக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cl4226y1425o

Barath Broadcasting Corporation என்றும் சொல்லலாம் போல!

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் சீனாவின் புதிய பட்டுப் பாதையுடன் போட்டியிட முடியுமா?

இந்தோ-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

இந்தோ - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து டெல்லியில் அறிவிப்பு வெளியானது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை ஒட்டி அறிவிக்கப்பட்ட புதிய போக்குவரத்து வழித்தடம், வரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடிப்படையாக மாறும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீபத்திய வானொலி உரையில் தெரிவித்தார். உண்மையில் அதற்கான சாத்தியக்கூறு உள்ளதா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கடந்த ஆண்டு இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) அறிவித்ததன் மூலம், ஒரு மோசமான உறவின் பாதையில் இருந்து திடமான கைகுலுக்கலுக்கு மாறினர். (சவுதி அரேபியாவை ஒரு உலகளாவிய பாரிய நாடாக மாற்றுவதாக பைடன் ஒருமுறை சபதம் செய்திருந்தார்.)

இரயில் மற்றும் கப்பல் நெட்வொர்க்குகள் மூலம் ஆசியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் இடையே போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை வலுப்படுத்த தொடங்கப்பட்ட திட்டம், பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும் ஆதரிக்கிறது. "இதை எளிமையாகச் சொன்னால், சீனாவிற்கு எதிராக அமெரிக்க நலன்களை மேலும் அதிகரிக்கும்," என்று ஃபாரீன் பாலிசி (Foreign Policy ) இதழின் தலைமைச் செய்தி ஆசிரியர் ரவி அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் அமெரிக்காவுக்குப் பொருளாதார ரீதியில் எந்தப் பயனும் இல்லை. "ஆனால் இதை கேம்ப் டேவிட்டில் நடைபெற்ற ஜப்பான்-தென் கொரியா உச்சி மாநாட்டின் வரிசையில் சேர்க்கலாம்" என்கிறார் கனெக்டோகிராஃபியின் ஆசிரியர் பராக் கன்னா. சீனா தனது விஸ்தரிப்பை அதிகரித்து வருவதை எதிர்கொள்ளும் வகையில் இரு பசிபிக் நாடுகளின் உறவில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவதன் மூலம், அமெரிக்கா தனது இராஜதந்திர இருப்பைத் தக்கவைத்தது,

 

தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் சீனாவை இணைக்கும் உலகளாவிய உள்கட்டமைப்பு-கட்டுமான திட்டமான சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படும் பெல்ட் அண்ட் ரோடு முயற்சிக்கு (பிஆர்ஐ) அமெரிக்க எதிர்ப்பாகவும் இந்தத் திட்டம் பலரால் பார்க்கப்படுகிறது.

இந்தோ-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சீனாவின் பெல்ட் அண்டு ரோடு திட்டத்துக்குப் போட்டியாக இத்திட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.

புதிய பட்டுப்பாதையுடன் போட்டியிட முடியுமா?

சீன அதிபர் ஷி ஜின்பிங், பெல்ட் அண்டு ரோடு திட்டத்தை அறிமுகப்படுத்தி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன.

சீனாவின் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் திட்டங்களுக்கு கடன் வழங்குவது குறைந்துள்ளதால், இத் திட்டத்தின் பெரும் லட்சியங்கள் கணிசமாக குறைந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இத்தாலி போன்ற நாடுகள் இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் இலங்கை மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. அந்நாடுகள் கடன் சுமைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

சீனாவின் பெல்ட் அண்டு ரோடு திட்டம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வியூகங்களைச் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன. சீனாவை மையமாகக் கொண்ட சங்கிலித் தொடரை உருவாக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளை அதிவேகமாக இணைப்பது, உள்ளூர் தேவைகளில் போதிய கவனம் செலுத்தாதது, வெளிப்படைத்தன்மை இல்லாமை, இறையாண்மையைப் புறக்கணித்தல், பாதகமான சுற்றுச்சூழல் தாக்கம் போன்ற பல காரணங்களுக்காகவும் இத்திட்டம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஊழல் மற்றும் சரியான நிதி மேற்பார்வை இல்லாமை என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் சக ஊழியரான கிரிஷ் லுத்ரா சமீபத்திய கட்டுரையில் எழுதினார்.

சிக்கல்கள் இருந்தபோதிலும், சீனர்கள் ஒரு "பெரும் முன்னேற்றத்தை" அடைந்துள்ளனர் என்ற நிலையில், ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் அதற்கு "போட்டியாக" கூட இன்னும் நெருங்கவில்லை என்று கன்னா கூறுகிறார். இது ஒரு மிதமான போக்குவரத்து வழித்தடமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

"இது சீனத் திட்டத்தின் அளவில் ஒரு பெரிய கேம் சேஞ்சர் கூட அல்ல. இது ஒரு நல்ல அறிவிப்பு. ஆனால் நீங்கள் இந்த திட்டத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு இது இல்லாமல் உலகம் வாழ முடியாது என்று கூற முடியாது," என்று கன்னா பிபிசியிடம் கூறினார்.

இந்தோ-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிக்கல் நிறைந்த இந்தோ-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனுள்ள போக்குவரத்து நடைபெறும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

காரணம் என்ன?

கடந்த ஜூலை மாதம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன், பெல்ட் அண்டு ரோடு திட்டத்தை பத்தாண்டுகளாக சீனா நிறைவேற்றி வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்குதாரர்களாக இணைந்துள்ளன. லூத்ரா எழுதுவது போல், அதன் புவியியல் நோக்கத்தை "ஒரு பிராந்தியத்திலிருந்து உலகளாவிய முன்முயற்சிக்கு" பெரும் அளவில் விரிவுபடுத்தியுள்ளது.

சீனாவின் வளர்ந்து வரும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மற்றொரு உள் கட்டமைப்பைப் பயன்படுத்த வளர்ந்த மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் முதல் முயற்சியாக இந்திய-ஐரோப்பிய பொதுப் போக்குவரத்துத் திட்டம் இருக்கவில்லை.

G7 மற்றும் USA ஆகியவை இணைந்து 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய உள் கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான ஒரு கூட்டமைப்பைத் தொடங்கின. 2027 ஆம் ஆண்டளவில் உலகளாவிய உள் கட்டமைப்பு திட்டங்களில் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது அந்தக் கூட்டமைப்பு. இத்திட்டம் தான் உலகளாவியது என சீனாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்த முயற்சியைக் காட்டியது.

ஆனால், அந்த கூட்டமைப்பின் அளவும், லட்சியமும் பொருந்திப் போகவில்லை. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் முயற்சி வளர்ந்துள்ள விதம் பெல்ட் அண்டு ரோடு திட்டம் "உலகளாவிய பொருளாதாரத்தை வளமாக்கும்" என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது என்று கன்னா கூறுகிறார்.

சில ஆய்வாளர்கள், பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு (பிஆர்ஐ) தெரிவிக்கும் எதிர்ப்பின் மூலம் இந்திய - ஐரோப்பிய போக்குவரத்துத் திட்டத்தை பிரத்யேகமாகப் பார்ப்பதற்கு எதிராக எச்சரிக்கின்றனர். இதுபோன்ற முன்னோக்கு பார்வை பலனளிக்காது என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் உருவாக்கம் பரிவர்த்தனை கூட்டாண்மைகளின் தற்போதைய போக்குக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. அங்கு நாடுகள் ஒரே நேரத்தில் பல கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பில் ஈடுபடுகின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவீந்தர் கவுர் கூறுகையில், "இன்றைய நாட்களில் பெரும்பாலான நாடுகள் பல மன்றங்களிலும் கூட்டணிகளிலும் பங்கேற்கின்றன," என்றார்.

இந்திய-ஐரோப்பிய போக்குவரத்துத் திட்டத்தின் புரிந்துணர்வு ஆவணம் பல விவரங்களில் மென்மையானதாக உள்ளது. ஆனால் அடுத்த 60 நாட்களில் செயல் திட்டம் தீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுவரை, அத்திட்டம் ஒரு கோட்பாட்டு அளவிலேயே தொடர்கிறது.

அத்திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலானதாக இருக்கும். "முதலீடுகள், ஒவ்வொரு அரசும் ஒதுக்கும் மூலதனம் மற்றும் காலக்கெடுவைக் குறிப்பிடும் முக்கிய அரசு நிறுவனங்கள் எவை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்," என்கிறார் கன்னா.

ஆவணத் தயாரிப்பை ஒத்திசைக்க ஒரு புதிய பழக்கவழக்கம் மற்றும் வர்த்தக கட்டிடக்கலை அமைக்கப்பட வேண்டும். "யுரேசியாவின் குறுக்கே அமைக்கப்படும் அந்த போக்குவரத்து தடையற்றது. பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே உங்களுக்கு அனுமதிகள் தேவை. ஆனால், இந்திய-ஐரோப்பிய போக்குவரத்துத் திட்டத்தில் இது இல்லை."

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா போன்ற நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவுகளைக் கையாள்வதில் வெளிப்படையான புவிசார் அரசியல் சிக்கல்களும் உள்ளன. அவற்றை பெரும்பாலும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த வகையான ஒத்துழைப்பை மோசமாக்குவதற்கு இது தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தோ-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போதைய நிலையில் யுரேசிய சரக்கு போக்குவரத்து சூயஸ் கால்வாய் மூலம் நடந்துவருகிறது.

மும்பை மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே சரக்குகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் எகிப்தின் கடல் மட்ட நீர்வழியான சூயஸ் கால்வாயுடன் இந்தத் திட்டம் போட்டியிடும் வகையில் இருக்கும். "இந்திய-ஐரோப்பிய பொதுப் போக்குவரத்துத் திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவுடனான நமது உறவுகளை மேம்படுத்தும் அளவுக்கு, அது எகிப்துடனான உறவைப் பாதிக்கும்" என்று பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

சூயஸ் கால்வாய் வழியாக கடல்வழி போக்குவரத்து மலிவானது என்பது மட்டுமல்லாமல் அது வேகமானதும் கூட. அதே நேரம் இதில் சிக்கல்களும் குறைவாக உள்ளன. "இது சிறந்த அரசியல் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் இது போக்குவரத்து பொருளாதாரத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் எதிரானது," என்று ஐயர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த போக்குவரத்துத் திட்டத்தின் லட்சியங்கள் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் குறுகலான நோக்கத்தை தாண்டி, மின்சார கட்டுமானங்கள் முதல் இணைய பாதுகாப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கியது. குவாட் போன்ற பாதுகாப்பு மன்றங்களில் நடந்த உரையாடல்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான முன்னாள் இந்திய தூதர் நவ்தீப் பூரி இதை தி நேஷனல் நியூஸ் இதழில் எழுதிய போது சுட்டிக்காட்டினார்.

"புது டெல்லியில் உருவாக்கப்பட்ட இந்த உயர்ந்த லட்சியங்கள் நனவாகும் பட்சத்தில், அவை பாதுகாப்பான, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு தனியான பங்களிப்பை அளிக்கும். இப்போதைக்கு, அந்த நம்பிக்கையுடன் வாழ்வோம்."

https://www.bbc.com/tamil/articles/cd1q92vv3d5o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.