Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீன சார்பு வேட்பாளர் வெற்றி - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஏஜே கோக்ஸ்டெஃப்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். பதவி விலகும் அதிபர் இப்ராகிம் முகமது சோலி தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார். அதுவரை இப்ராகிம் சோலி தற்காலிக அதிபராக இருப்பார்.

முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் என்று கருதப்படுகிறார். அதேசமயம் இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் வலுப்பெற்றன.

செயல் உத்தி காரணங்களுக்காக சீனாவும் இந்தியாவும் மாலத்தீவில் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்று நம்பப்படுகிறது.

 

முகமது முய்சுவுக்கு 54 சதவிகித வாக்குகள் கிடைத்தன. தலைநகர் மாலேயின் மேயரான முகமது முய்சு தனது தேர்தல் பிரச்சாரத்தில் 'இந்தியா அவுட்' அதாவது இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் முழக்கத்தை முன்வைத்திருந்தார்.

பதவி விலகும் அதிபர் முகமது சோலி, இந்தியாவுடனான வலுவான உறவை ஆதரிப்பவராகக் கருதப்படுகிறார்.

61 வயதான இப்ராஹிம் 2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய இப்ராஹிம் சோலி தனது பதவிக்காலத்தில் 'இந்தியா முதலில்' அதாவது இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்தினார்.

மாலத்தீவுக்கு ஏற்கனவே இந்தியாவுடன் கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன.

மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. மாலத்தீவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பராமரித்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கும் இப்ராகிம் சோலி.

சீனாவுக்கு மாலத்தீவு ஏன் முக்கியமானது?

அதேசமயம் 45 வயதான முகமது முய்சு முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர். சீனாவுடனான நல்லுறவுக்கு அவர் ஆதரவாக உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அமைந்துள்ள இடம் செயல் உத்தி ரீதியாக மிகவும் முக்கியமானது. சீனா தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. மாலத்தீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மாலத்தீவு வழியாகவே செல்கிறது. இதையும் பாதுகாக்க சீனா விரும்புகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மாலத்தீவுக்கு இந்தியா இரண்டு ஹெலிகாப்டர்களையும் ஒரு சிறிய விமானத்தையும் வழங்கியுள்ளது. 75 இந்திய ராணுவ அதிகாரிகள் மாலத்தீவில் வசித்து வருவதாகவும், இந்திய விமானங்களை இயக்கி பராமரிப்பதாகவும் 2021 ஆம் ஆண்டில் மாலத்தீவு பாதுகாப்புப் படை கூறியது.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா அவுட்’ பிரசாரம்

இதற்குப் பிறகுதான் எதிர்க்கட்சிகள் நாட்டில் 'இந்தியா அவுட்' பிரசாரத்தைத் தொடங்கின. மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை திருப்பி அனுப்பும்படி கோரின.

இப்ராகிம் சோலிக்கு முன், முற்போக்குக் கட்சியின் (பிபிஎம்) அப்துல்லா யாமீன், 2013 முதல் 2018 வரை மாலத்தீவு அதிபராக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் மாலத்தீவு சீனாவுடன் நெருக்கமாகி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் 'பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி'யின் ஒரு பகுதியாகவும் ஆனது.

யாமீன் தற்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் உள்ளார். 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் அனுபவித்து வருகிறார். அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான பிபிஎம் ஆதரவாளர்கள் முகமது முய்சுவின் வீட்டிற்கு வெளியே கூடி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

 
இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் முகமது முய்சு (மாலை அணிந்தவர்).

முகமது முய்சு யார்?

1978 இல் பிறந்த முகமது முய்சு, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2012 இல் அரசியலுக்கு வந்த அவர் அமைச்சரானார்.

யாமீன் ஆட்சிக்கு வந்த போதும் முய்சு தனது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தார். மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் 200 மில்லியன் டாலர் செலவிலான பாலம் உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார். விமான நிலையம் மற்றொரு தீவில் அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், அவர் மாலே மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் பிபிஎம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

சீனாவின் கடன் மற்றும் முதலீடு

சீனாவிடம் இருந்து மாலத்தீவு பெருமளவு கடன் வாங்கியுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலமும் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் மாலத்தீவு தனது தீவுகளில் ஒன்றை சீனாவிற்கு 50 ஆண்டுகளுக்கு வெறும் 4 மில்லியன் டாலர்களுக்கு குத்தகைக்கு அளித்தது. சீனாவின் 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' திட்டத்திற்கு மாலத்தீவு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.

மாலத்தீவுகள் சீனாவிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர் கடனை பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மாலத்தீவுகளில் உள் கட்டமைப்பு திட்டங்களில் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது.

அதிபர் தேர்தலில் முய்சுவின் வெற்றி மாலத்தீவை சீனாவுடன் மேலும் நெருங்க வைக்கும். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் மாலத்தீவுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் முஸ்தஃபா கமால் பாஷா பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசுகையில், “இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாலத்தீவு உடனடியாக சீனாவுடன் நெருங்காது, இந்தியாவும் அங்கு முதலீடு செய்துள்ளது. மாலத்தீவால் அதை புறக்கணிக்க முடியாது,” என்றார்.

'இந்தியா அவுட்' என்ற கோஷத்தை முய்சு எழுப்பியிருந்தார். இது பற்றிப் பேசிய பேராசிரியர் பாஷா, "மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை திருப்பி அனுப்ப அவர் விரும்புகிறார். ஆனால் இந்திய முதலீடுகள் அங்கேயே இருக்கும். இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது அவருடைய தேர்தல் வாக்குறுதியும் கூட. ஆனால் மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கு உடனடியாக குறையும் என்று சொல்ல முடியாது,” என்று குறிப்பிட்டார்.

மாலத்தீவில் இந்தியாவின் முதலீடு

கடந்த சில ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்கள் மற்றும் உதவிகளை வழங்கியதன் மூலம் சீன முதலீட்டிற்கு இணையான தொகையை வழங்க இந்தியாவும் முயற்சித்தது. ஆனால் மாலத்தீவில் உள்ள பலர் இந்தியாவின் நோக்கத்தை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தியா அங்கு மறைமுகமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இமயமலை எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக மாலத்தீவு பாதிக்கப்படலாம் என்பதும் அவர்களது இரண்டாவது கவலை.

"இந்தியா உட்பட எந்த நாட்டுடனும் வலுவான செயல் உத்தி உறவுகளை வைத்திருக்கக் கூடாது என்ற வலுவான உணர்வு மாலத்தீவில் உள்ளது" என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் மாலத்தீவு விவகாரங்களின் நிபுணரான அஸீம் ஜஹீர் கூறுகிறார்.

 
இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,@PPM_HULHUMALE

படக்குறிப்பு,

மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது

மாலத்தீவின் செயல் உத்தி நிலை

இந்தியப் பெருங்கடலில் தங்கள் கடற்படை இருப்பை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் விரும்புகின்றன. மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகள் செயல் உத்தி ரீதியில் முக்கியமானவை. இந்தியா மற்றும் சீனாவுடன் 'பேரம்' பேச இது அவர்களுக்கு உதவுகிறது.

"சீனா வெளிப்படையாக இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரிக்க விரும்புகிறது. மாலத்தீவுகள் மீது அதன் கண்கள் உள்ளன. மாலத்தீவில் தனது கடற்படை இருப்பை நிறுவ முடிந்தால் அது குவாதருக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் அதன் இரண்டாவது தளமாக இருக்கும்,” என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

"இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற சிறிய நாடுகள் தங்களின் செயல் உத்தி நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றன. அவ்வப்போது தனது ஆதரவை மாற்றிக் கொள்கின்றன. மாலத்தீவில் சீனாவுக்கு ஆதரவான முய்சுவின் வெற்றியால் சீனா பயனடையலாம். ஆனால் அங்கு இந்தியாவின் செல்வாக்கு உடனே குறையாது." என்று அவர் குறிப்பிட்டார்.

"மாலத்தீவில் இந்தியா பெரும் முதலீடு செய்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை மாலத்தீவு அரசு திருப்பி அனுப்பினாலும், இந்தியாவின் முதலீடுகள் அங்கேயே இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் இந்தியா - சீனா இடையே சமநிலையை பராமரிக்க மாலத்தீவு முயற்சிக்கும்,” என்று பேராசிரியர் பாஷா தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cx94yzq9ylyo

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி முகமது முஸ்சுக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலத்தீவு: சீன ஆதரவு முகமது முய்சுவால் அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படுமா?

மாலத்தீவு: சீன ஆதரவு முகமது முய்சுவால் அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது முய்சு

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பெருங்கடலில் உள்ள சிறு தீவுக் கூட்டமான மாலத்தீவு அதன் அழகிய கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் பிரபலமானது. அதேநேரம், புவிசார் அரசியலிலும் மாலத்தீவுக்கு முக்கிய இடமுண்டு.

அந்நாட்டு அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவில் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து அவர் தேர்தலைச் சந்தித்த நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்திய படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாக அறிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் இருப்பவராக முகமது முய்சு கருதப்படும் நிலையில் எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடையுமா, அந்நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மாலத்தீவில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில் தற்போதைய இந்தப் பதற்றமான சூழல் அவர்களுக்கு எதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

 

மாலத்தீவு தேர்தலில் 'இந்தியாவே வெளியேறு' பிரசாரம்

மாலத்தீவு - இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது முய்சு

மாலத்தீவு அதிபர் தேர்தல் இந்த மாதம் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபராக உள்ள இப்ராஹிம் சோலியை எதிர்த்து போட்டியிட்ட முகமது முய்சு 54 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இப்ராஹிம் சோலி இந்திய ஆதரவாளராக அறியப்பட்டவர். இந்தியாவின் பிரதானம் என்ற கொள்கையை கொண்டவர். 2018இல் அவர் அதிபராகப் பதவியேற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோதி அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஆனால், முய்சுவோ 'இந்தியாவே வெளியேறு' என்ற பிரசாரத்தை முன்னெடுத்து தேர்தலைச் சந்தித்தார். மாலத்தீவில் இந்திய ராணுவப் படையைச் சேர்ந்த 75 வீரர்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முய்சு தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் சீன ஆதரவாளராக அறியப்படுபவருமான அப்துல்லா யமீனின் அமைச்சரவையில் இருந்தவர்தான் முய்சு.

ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால் அப்துல்லா யமீன் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் அவரது கட்சியின் ஆதரவோடு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார் முய்சு. நவம்பர் 17ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் சோலி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

மாலத்தீவும் இந்தியாவும்

ஐந்து லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் சிறிய நாடான மாலத்தீவு இந்திய பெருங்கடல் பகுதியில் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருப்பதால் இந்தியா அதனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது.

இந்தியாவில் இருந்து வெறும் 70 கடல் மைல் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்குமான உறவு 50 ஆண்டுகளுக்கும் மேலானது.

மாலத்தீவுக்கு பல்வேறு வழிகளிலும் இந்தியா உதவியிருக்கிறது, உதவி வருகிறது. 1988ஆம் ஆண்டு மாலத்தீவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உதவியோடு ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி நடந்தபோது, இந்திய அரசு தலையிட்டு ஆப்ரேஷன் காக்டஸ் மூலம் தடுத்து நிறுத்தியது. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதல் நாடாகச் சென்று மாலத்தீவுக்கு உதவியதும் இந்தியாதான்.

கடந்த 2014ல் மாலத்தீவில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு 1,50,000 பேர் தண்ணீரின்றி சிரமப்பட்டனர். அப்போது, ஆப்ரேஷன் நீர் என்ற பெயரில் இந்தியா விமானப்படை 374 டன் குடிநீரை டெல்லியில் இருந்தும் அரக்கோணத்தில் இருந்தும் மாலத்தீவுக்கு கொண்டு சென்று உதவியது. இதேபோல், கோவிட் தொற்றின்போதும் மாலத்தீவுக்கு தடுப்பூசிகளைக் கொடுத்து இந்தியா உதவியது.

 

மாலத்தீவில் தமிழர்கள்

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவில் திவெயி மொழி பேசுபவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இதேபோல், இந்தியர்கள், வங்கதேசத்தினர், நேபாள மக்களும் கணிசமாக உள்ளனர். 2014ஆம் ஆண்டுவாக்கில் மாலத்தீவில் சுமார் 26,000 இந்தியர்கள் இருப்பதாக இந்திய அரசுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த எண்ணிக்கையில் சில ஆயிரங்கள் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

இந்தியர்களைப் பொருத்தவரை தமிழர்கள், மலையாளிகள், பஞ்சாபிகள், குஜராத்திகள், பிகாரிகள் அதிகமாக உள்ளனர். இதில், தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் 8,000 முதல் 10,000 தமிழர்கள் மாலத்தீவில் இருக்கலாம் என்றும் கூறுகிறார் மாலத்தீவை சேர்ந்த சர்வதேச சமூக செயற்பாட்டாளரான கர்னல் வினோ தேவராஜ்.

“மாலத்தீவில் இந்திய தமிழர்கள் மட்டுமில்லாமல் இலங்கை தமிழர்களும் வசிப்பதால் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செவிலியர், மருந்தாளுநர்கள், வங்கிப் பணி, கற்பித்தல் பணிகளில் தமிழர்கள், மலையாளிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமானப் பணிகளில் தமிழர்கள் ஈடுபட்டாலும் பிகார் போன்ற வடமாநில மக்களின் பங்களிப்பு அதில் அதிகம்,” என்று அவர் கூறுகிறார்.

 
மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

முய்சுவின் நிலைப்பாடு, மாலத்தீவின் தற்போதைய சூழல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கர்னல் வினோ தேவராஜ், “தேர்தலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை தோறும் 'இந்தியாவே வெளியேறு' என்ற பெயரில் பேரணிகள் நடைபெறும். தற்போது தேர்தல் முடிந்ததும் அதுபோன்ற பேரணி நடைபெறவில்லை.

அத்தகைய ஹேஷ்டேக்களையும் சமூக வலைதளங்களில் காண முடியவில்லை. எனவே, முய்சுவின் பேச்சை தேர்தலுக்காகப் பேசியதாகவே கருதத் தோன்றுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்று தோன்றவில்லை,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமீபத்தில் இந்தியர்கள் மாலத்தீவுக்கு விசா பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் பரவியது. பின்னர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது உறுதியானது.

மருத்துவம், கல்வி போன்றவற்றில் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் பங்களிப்பு மாலத்தீவில் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களை வெளியேற்றினால் போதிய நபர்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படும். அதுபோக, மருத்துவத்திற்காக பலர் இந்தியாவுக்கு வருகின்றனர்.

உணவு உட்படப் பல்வேறு விவகாரங்களில் இந்தியா மாலத்தீவுக்கு உதவி வருகிறது. அப்படியிருக்கும்போது இந்தியாவுடன் மோதல்போக்கை மாலத்தீவு கடைபிடிக்குமா என்பது சந்தேகம்தான்,” என்று கூறினார்.

மேலும், மாலத்தீவில் உள்ள மக்களிடையே இந்தியா மீது வெறுப்பு இல்லை. அரசியலுக்காகவே இதுபோன்று பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

மாலத்தீவுக்கு அதிகளவு சுற்றுலா செல்லும் இந்தியர்கள்

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம்,VINO DEVARAJ

படக்குறிப்பு,

கர்னல் வினோ தேவராஜ்

மாலத்தீவின் பிரதான வருவாயாக சுற்றுலா உள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 70 சதவீதம் பேர் அங்கு சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பு பெருகின்றனர்.

சுமார் 1200 பவளத் தீவுகளைக் கொண்ட மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். 2019ஆம் ஆண்டு 1,66,030 பேர் இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

கோவிட் 19 காரணமாக 2020இல் இந்த எண்ணிக்கை 63,000 ஆகக் குறைந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் 2.91 லட்சம் பேரும், 2022இல் 2.41 பேரும் இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதேபோல், மாலத்தீவுகளுக்கு அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு 495.40 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, "பொருளாதாரத்திற்கு பெரும்பங்காற்றும் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்திக்கொள்வது மாலத்தீவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்," என்று கர்னல் வினோ தேவராஜ் குறிப்பிடுகிறார்.

 

நசீர் ஆட்சியில் ஏற்பட்ட எதிர்மறை எண்ணம்

மாலத்தீவு - இந்தியா
படக்குறிப்பு,

பேராசிரியர் கிளாட்சன் சேவியர்

சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “மாலத்தீவின் அதிபராக இருந்த நசீர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டைக் கொண்டவர். இந்தியா கொடுத்த சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜாமீன் வழங்கியதால் நீதிபதியை சிறைபிடிக்க நசீர் உத்தரவிட்டார்.

இதைக் கண்டித்து நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். அதனால், இந்தியாவுக்கு எதிர்மறையான செயல்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.

“தற்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முய்சு சீன ஆதரவாளர் என்று கூறப்பட்டாலும் அவர் இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், மாலத்தீவுக்கு இந்தியா தேவை, இந்தியாவுக்கு மாலத்தீவு தேவை.

எனவே, இப்போதைய சூழலில் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்புக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை,” என்றார்.

மாலத்தீவு விவகாரம் - சீனாவால் இந்தியாவுக்கு பாதிப்பா?

இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவு நோக்கி நகர்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. சுந்தா மற்றும் லாம்போக் ஜலசந்தி வழியாக சீன போர்க்கப்பல்கள் நகர்வதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படைக்குச் சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து சுமார் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தது.

ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்காக இந்த கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதாக சீனா தெரிவித்தது. அதே நேரம், இது இந்தியாவை உளவு பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கவலையை வெளிப்படுத்தினார்.

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போது, மாலத்தீவு நோக்கி சீன போர்க்கப்பல்கள் நகர்ந்ததாக கூறப்படுவது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து க்ளாட்ஸன் சேவியரிடம் கேட்டபோது, “ஒரு கப்பல் வருவதாலேயே பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறிவிட முடியாது," என்று தெரிவித்தார்.

அதேநேரம், "முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாலத்தீவின் தற்போதைய அரசியல் மாற்றம், வர்த்தக ரீதியாக சீனாவுக்கு பலனளிக்கலாம். ஆனால், பாதுகாப்பு ரீதியாக சீனாவுக்கு சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.

மாலத்தீவு மூலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரக்கூடுமா என்பதை முகமது முய்சு அதிபராகப் பதவியேற்ற பின்னர் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறர் வினோ தேவராஜ்.

https://www.bbc.com/tamil/articles/cw4j7e2g7jqo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.