Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)

நேர்காணல் –                  பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)

— கருணாகரன் —

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரான பொ. ஐங்கரநேசன் தாவரவியல்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் ஊடகத்துறையில் கற்று, அதில் செயற்பட்டிருக்கிறார். 1990 களில் ‘நங்கூரம்’ என்ற இளையோருக்கான அறிவியல் இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். தமிழ்த்தேசிய அரசியற் பற்றாளரான ஐங்கரநேசன், 2013 இல் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தொடர்ந்து வடமாகாண சபையின் விவசாய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்.

சூழலியல்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஐங்கரநேசன், அந்தத் துறைசார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். தொடர்ந்து மரநடுகை இயக்கத்தையும் நடத்தி வருகிறார். தமிழ்த்தேசிய அரசியலை மேற்கொண்டு வரும் அரசியல்வாதிகளில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்களில் ஒருவராக இருக்கும் ஐங்கரநேசனுடன் உரையாடியபோது….

01. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றிய உங்கள் அவதானமும் நிலைப்பாடும் என்ன?

  இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்களின் அங்கீகாரம் பெறாத ஒருவர் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது இதுதான் முதல் தடவை. ரணில் விக்கிரமசிங்க இன்று ராஜபக்ஷ சகோதரர்களின் பின்பலத்துடனேயே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கின்றார். ராஜபக்ஷ சகோதரர்களின் ஒப்புதலின்றி இவர் எதனையும் செய்யமுடியாது என்பதே யதார்த்தம். இந்நிலையில், இவர் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு காணவேண்டுமென்று இதயசுத்தியாக விரும்பினாலுங்கூட அது இயலாத ஒன்றாகும். 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் தமிழ்த் தரப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்த காலப்பகுதியில் இவர்களிடம் இருந்து தமிழ்த்தரப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்த்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அப்போது தீர்வுக்கு முயற்சிப்பதாகக் காட்டிக்கொண்டாரே தவிர ஆத்மார்த்தமாக அதனைச் செய்து முடிப்பதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. இந்த இடத்தில் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் எமது தமிழ்த் தலைவர்களும் தவறு இழைத்திருக்கிறார்கள். 

தற்போதும் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் சிங்களவர்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள பாராளுமன்றில் அதனை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும்; அங்கு கொண்டு சென்றிருப்பது தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டுகின்ற அவரின் விலாங்குத் தந்திரமே ஆகும்.  

ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைச் சட்டங்களில்; உடனடியாகச் சில மாற்றங்களைச் செய்து விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தவுள்ளார் என்ற தோற்றத்தைத் தனது பாராளுமன்ற உரையின்போது வெளிப்படுத்தியிருந்தார். மாகாணசபைச் சட்டம் நடைமுறைக்கு வருவதோ, மாகாணசபைத் தேர்தல் நடைபெறப்போவதோ உடனடிச் சாத்தியம் இல்லாதவை. உள்ளூராட்சித் தேர்தலையே நடாத்தவிடாமல, வேட்புமனுத் தாக்கல் செய்த பின்பும் பல தந்திரங்களைச் செய்து தேர்தலைக் காலவரையின்றி ஒத்திப்போட்ட ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைத் தேர்தலை நடாத்துவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறிவிலித்தனம். மாகாணசபைச் சட்டங்களில் திருத்தங்கள் செய்து தமிழ்மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்வார் என்று நினைப்பது அதைவிட அறிவிலித்தனமானது. 

ரணில் விக்கிரமசிங்க  மாகாணசபை விவகாரத்தைக்  கையிலெடுத்திருப்பதன் முதலாவது நோக்கம் மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு கோரும் இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதாகும். இரண்டாவது நோக்கம், ஐனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடாத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் தான் ஜனாதிபதியாக நீடிப்பதை உறுதி செய்வதாகும்.  ரணில் தீர்வு தருவார் என்ற நம்பிக்கையைத் தமிழ்மக்களிடையே ஏற்படுத்தி அவர்களின் வாக்குகளைக் கபளீகரிப்பதும், மாகாணசபை விவகாரத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு சென்று அதனை நிறைவேற்ற முடியாமல் செய்வதன் மூலம் சிங்கள மக்களினது வாக்குகளை வாரிச் சுருட்டுவதுமே அவரது இலக்குகளாகும். 

02.  சிங்களப் பெருந்தேசியவாதத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் இலங்கை பாராளுமன்றத்தையும் அரசியல் யாப்பையும் எப்படி மீட்டெடுத்து,  ஜனநாயகமயப்படுத்துவது? அல்லது எப்படி அதைப் பன்மைத்துவப்படுத்துவது?

இலங்கைப் பாராளுமன்றத்தை தமிழர் தரப்பு தனக்குச் சாதகமாகக் கையாள்வது என்பது ஒருபோதும் சாத்தியமாகாத ஒன்று. சிங்களவர்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள இலங்கையின் பாராளுமன்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பங்கு எப்போதுமே சிங்களவர்களாகவே இருப்பர். வாக்குப்பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஜனநாயகத்தின்கீழ் எவ்வாறு தமிழர்களின் நலனை முன்னிறுத்தி அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்? 

03. அரசியற் தீர்வுக்கு இந்தியாவின் அனுசரணை பிரதானமாக இருக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, ஈழப்போராட்டத்தையே நசுக்கி அழித்ததே இந்தியாதான். ஆகவேஇ இந்தியாவை நம்ப முடியாது. பதிலாக சர்வதேச சமூகத்தின்  (மேற்குலகின்) ஆதரவைக் கோருவதே சரியானது என்கின்றனர். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடென்ன?

ஈழப்போராட்டத்தை இந்தியா மட்டுமா நசுக்கி அழித்தது? மேற்குலகுக்கு இதில் பங்கில்லையா? புலிகள் ஆயுத ரீதியாகப் பலம் பெற்றுவருவதை விரும்பாத இந்த இரண்டு சக்திகளும் இணைந்துதானே புலிகளை அழித்தொழித்தன. இந்தியாவை விடுங்கள, மேற்குலகுதன்னும் இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வரவில்லையே! இந்தியாவோ மேற்குலகோ தங்கள் நலன் சார்ந்தே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை அணுக முற்படுகின்றன என்பதே யதார்த்தம். 

புவிசார் அரசியல் இயங்கியலின்படி இந்தியாவின் அனுசரணையின்றி இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியம் இல்லாததொன்று. சர்வதேசமும் இலங்கைத் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தியாவைத் தாண்டி அல்லது இந்தியாவின் கலந்தாலோசிப்பின்றி அரசியல் தீர்வு விடயத்தில்  காத்திரமான பங்களிப்பை வழங்கப்போவதில்லை. இவற்றைப் புரிந்திருந்தும் புரியாததுபோல நாம் கடந்து செல்ல முற்படுவது அறிவுடமையாகாது. 

04.  இனப்பிரச்சினைக்கான தீர்விலும் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைப்படுத்தலிலும் இந்தியாவின் அனுசரணை, வகிபாகம் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. ஆனாலும் இந்தியா இன்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே!

இலங்கை மிகமோசமான பொருளாதாரப் படுகுழிக்குள் வீழ்ந்தவுடன் அதிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியா ஆபத்பாந்தவனாகத் தன் கரங்களை நீட்டியதை மறுப்பதற்கு இல்லை. இந்தியா அண்டை நாடான இலங்கைக்குத் தான் செய்த உதவியை மனிதாபிமானதாகக் குறிப்பிட்டபோதும் அந்த உதவிகளில் இலங்கை அரசின் சீனச்சார்பை ஓரளவுக்கேனும் நிமிர்த்தும் எத்தனமும் இருந்தது வெளிப்படை. இலங்கையில் தன் பிடியை வலுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு வகையான திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது. ஆனால், “ பொருளாதார நிலையை வலுப்படுத்தி இலங்கையின் அரசயில் ஸ்திரத்தன்மையைப் பேண முற்படுகின்ற இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஆக்கபூர்வமாக, தமிழ்மக்கள் திருப்திப்படும்படியாக எதையுமே செய்யவில்லை. 

இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதையொட்டியே 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபையும் உருவானது. ஆனால்,  இணைந்திருந்த வடக்குக்கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபோது இந்தியா வாழாதிருந்தது. 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டபோதும் இந்தியா வாழாதிருந்தது. இப்போது மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இலங்கையின் மீது வலுவானதொரு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்குத் தயாராகவில்லை. இதுதொடர்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மீது விசனம் உள்ளது. 

05. உண்மையில் இந்தியா யாருக்கு ஆதரவாக உள்ளது? தமிழர்களுக்காகவா, சிங்களவர்களுக்காகவா அல்லது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என்ற இலங்கை மக்களுக்காகவா? 

இந்தியா ஒரு அரசு. அரசு என்று சொல்வதை விடவும் பேரரசு என்று சொல்வதே பொருத்தமானது. அது தன் காலடியில் கிடக்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் தனக்குப் பகையான அந்நிய சக்திகள் எதுவும் காலூன்றாத வகையிலேயே எல்லா முடிவுகளையும் எடுக்கும். தமிழர்களுக்கு ஆதரவை வழங்கி சிங்களவர்களைப் பகைக்கவோ அல்லது சிங்களவர்களுக்கு ஆதரவை வழங்கித் தமிழர்களைப் பகைக்கவோ ஒருபோதும் விரும்பாது. தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்தால் தென்னிலங்கை இந்தியாவின் பகை நாடுகளின் பக்கம் நாடும் என்பது திண்ணம். இதனால், இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கா அல்லது சிங்களவர்களுக்கா என்று இல்லாமல் தனது சொற்கேட்டு நடக்கக்கூடிய தலைவர்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்துவதற்கான ஆதரவையே எப்போதும் வழங்கும். 

இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து போவதற்கு உதவியதுபோல ஸ்ரீலங்காவில் இருந்து ஈழம் பிரிந்துபோவதற்கும் உதவி செய்திருப்பார் என்ற கருத்தும் எம்மவர்களிடையே உள்ளது. இது முற்றிலும் அபத்தமானது. ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுத்தபோதே அவரை வழிக்குக் கொண்டுவருவதற்காக, அவர்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அவரைப் பணிய வைப்பதற்காக ஈழவிடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினாரேதவிர, அது ஈழ விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல. இப்போதும் இந்திய மைய அரசின் அணுகுமுறை இதுதான்.

06. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பல்வேறு விதமான யோசனைகளும் பரிந்துரைகளும் பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. உங்களுடைய நிலைப்பாடு என்ன?

இலங்கை ஒரு நாடு. அதில் தமிழ்மக்கள் தனியானதொரு தேசம் என்பதே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு. ஒருதேசம் குறிப்பிட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பையாவது கொண்டிருத்தல்வேண்டும். தமிழ்மக்களுக்கு என்று அவர்களின் பூர்வீக வாழிடங்களாக வடக்குக்கிழக்கு உள்ளது. ஒரு தேசம் ஒரு ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். தமிழ் மக்கள் காலனித்துவ காலத்திற்கு முன்பாக தனியான ஆட்சி அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். ஏன் விடுதலைப் புலிகள்கூட ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தார்கள்தானே. ஒருதேசம் சில ஒருங்கிணைப்புகளை அதாவது, மையப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சார்பைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தோடு, ஒருதேசம் எப்பொழுதும் தான் ஒரு தேசம் என்ற உணர்வு நிலையையும் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாறு,  சர்வதேசம் ஒர் இனத்தைத் தேசம் என்று அங்கீகரிக்கக்கூடிய பண்பியல்புகள் யாவும் தமிழ் மக்களிடம் தாராளமாகவுள்ளன. 

தமிழ்மக்களைத் தனியானதொரு தேசமாக அங்கீகரித்து, மைய அரசால் அதிகாரங்களை மீளப்பெறமுடியாதவாறு தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் சமஸ்டி நிலைப்பட்ட அரசியல் தீர்வே எமது நிலைப்பாடாகும். அதுவும் இந்தியா போன்று அரைகுறைச் சமஸ்டியாக அல்லாமல் சுவிற்சர்லாந்தின் சமஸ்டி முறைபோன்று அமைதல் வேண்டும். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் இதுவே மிகவும் பொருத்தமானதும் ஆகும். 

07.  வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமானதா? அதைச் சாத்தியப்படுத்துவதற்கு முஸ்லிகளின் ஆதரவைப் பெறுவது எப்படி?

வடகிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் என்பது வரலாற்று உண்மை தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரண்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் இன்று அது தனித்தனி மாவட்டங்களாகச் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமானதா என்ற கேள்வியையும் தாண்டி அதனை எவ்வாறு மீளவும் இணைப்பது என்பதே முன்னுரிமை பெறவேண்டும். சிங்களப் பெரும்பான்மையின் மீது தமிழ்ச் சிறுபான்மையினராகிய நாம் கொண்டிருக்கும் சந்தேகங்களைப் போன்றே தமிழினத்தின் மீது முஸ்லிம்களுக்கும் அவர்களின் அரசியல் இருப்புக் குறித்து சந்தேகங்கள் உள்ளன. இரண்டு தரப்பும் உட்கார்ந்து இது குறித்து நிறைய பேசவேண்டியுள்ளது. முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற குடையின்கீழ் தமிழ்த் தரப்புடன் கைகோர்க்காவிடின் நாளை அவர்களது இருப்பும் இந்தத் தீவில் சிங்களப் பெரும்பான்மையால் இல்லாதொழிக்கப்படும். 

08. புலிகளின் காலத்திற்கும் (2009 க்கு முன்பும்) அதற்குப் பின்னுள்ள இன்றைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை – அரசியல் நிலைமையை எப்படிப்பார்க்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசும் அளவிற்கு ஒரு கட்டத்தில் இராணுவ வலுச்சமநிலையை எட்டியிருந்தார்கள். அப்போது, அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றை விரல் அசைவின் கீழேயே கட்டுண்டும் இருந்தது. இன்று தமிழ் மக்களிடம் இலங்கை அரசாங்கத்துடன் சரிசமமாக உட்கார்ந்து பேரம் பேசும் அளவிற்குப் பலம் இல்லை. தமிழ்த்தேசியம் என்று வரிக்குவரி உச்சரிக்கும் தமிழ்க் கட்சிகளும் தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட்டவர்களாக இல்லை. இக் கட்சிகளின் தலைவர்களில் பலர் சிங்களப் பேரினவாத அரசுடன் திரைமறைவில் தங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், தமிழ் மக்களின் மத்தியில் வீராவேசமாகப் பேசும் இவர்களால் அரசாங்கத்தின் முன்னால் கூனிக்குறுகியே நிற்கமுடிகிறது. இத்தலைவர்களின் பெயர்களை இங்கு நான் உச்சரிக்க விரும்பவில்லை. தமிழ்மக்களின் அரசியல் சாபக்கேடு இவர்கள். 

09. இன்றைய நிலையில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது சாத்தியமாகுமா? 

தமிழ் இனத்தை வழிப்படுத்துவதற்கோ அல்லது தமிழ்க் கட்சிகளை நெறிப்படுத்துவதற்கோ எங்களிடம் இன்று ஒரு தேசியத் தலைமை இல்லை. எங்களிடம் இருப்பவர்கள் எல்லோரும் கட்சிகளின் தலைவர்கள்தாம். வாக்குப் பொறுக்கும் அரசியலில் இத் தலைவர்கள் யாவரும் எப்போதும் தமது கட்சிகளின் நலன் குறித்தும் தம்மை எவ்வாறு முன்னிலைப்படுத்துவது என்பது குறித்துமே சிந்திப்பார்கள். இவர்களுக்குக் கடிவாளம் போடுவதற்கு அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார். இன்று இந்தப் பாத்திரத்தை வகிக்கின்ற பொறுப்பு சிவில் சமுகங்களிடமே உள்ளது. ஆனால்,  இருக்கின்ற சிவில் சமுகங்களிலும் பல கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன. அல்லது சிவில் சமுகத்தின் மூலம் ஒருவரின் பெயர் பிரபல்யமாகிவிட்டால் அவருக்கும் தேர்தல் அரசியலில் ஆசை தொற்றிக்கொள்கிறது. இந்நிலை மாறவேண்டும். கட்சிசார்பற்ற தமிழினத்தின் நலனை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட சிவில் சமுக அமைப்பொன்று பலம்பெறவேண்டும். 

10. பிரதான அரசியற் தலைமைகளும் கட்சிகளும் ஊடகங்களும் பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தயங்குவது ஏன்?

இலங்கையில் மாறி மாறி ஆட்சிசெய்த ஒவ்வொரு கட்சியும் சிங்கள வெகுஜன மக்களிடையே பேரினவாத உணர்வை ஊட்டி அதனை அறுவடை செய்தே ஆட்சிபீடம் ஏறின. ஒவ்வொரு கட்சியும் பேரினவாதத்தை ஒன்றுன் ஒன்று போட்டிபோட்டே ஊட்டி வளர்த்தன. உச்சாணிக்கொப்பில் ஏறி அமர்ந்திருக்கும் பேரினவாதப் பேயை கீழே இறக்குவதற்கு எந்தக் கட்சியும் எந்த ஊடகமும் இன்று தயாராக இல்லை என்பதே யதார்த்தம். இறங்கச்சொன்னால் தங்களை அது திருப்பித்தாக்கிவிடும் என்று அஞ்சுகிறார்கள். 

சிங்களத் தரப்பில் மாத்திரமல்ல ; தமிழ்த்தரப்பிலும் அறிவுபூர்வமாக அல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட இனவாதத்தை மக்களிடையே விதைக்கின்ற அரசியல் வாதிகளே அதிகம். இது ஒருபோதும் ஆக்கபூர்வமாக அமையப்போவதில்லை. 

11. இலங்கையில் சீனப் பிரசன்னத்தையும் அதிகரித்து வரும் அதனுடைய செல்வாக்கையும் எப்படி நோக்குகிறீர்கள்? தமிழர்கள் சீனாவுடன் கொள்ள வேண்டிய அரசியல் இராசதந்திர உறவு எப்படியானதாக இருக்க வேண்டும்?

சீனா இந்தியாவுக்குப் போட்டியாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன் செல்வாக்கை அதிகரிக்க விரும்பியே இலங்கையில் காலூன்றியுள்ளது. ஒருவகையில் இலங்கையை தன் டிராகனின் கைகளுக்குள் கொண்டுவந்தும் விட்டது என்றுகூடச் சொல்லலாம். இலங்கை விரும்பினாலும் சீனாவின் பிடியுனுள் இருந்து விலக முடியாத நிலையே நீடிக்கிறது. இது இராணுவ ரீதியான முற்றுகையல்லாமல் பொருளாதார ரீதியான முற்றுகையாகவே உள்ளது. தமிழ்மக்கள் தமது உணவில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ளாத கடல் அட்டைகளுக்கான பண்ணைகளை எமது கடலில் உருவாக்கியிருப்பதும் இம்முற்றுகையில் ஓர் அம்சம்தான். தமிழர்கள் வேண்டுமென்றால் சீனாவிடம் பொருளாதார ரீதியான உதவிகளுக்கு கையேந்தலாமேதவிர சீனாவிடம் இருந்து தங்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒத்துழைப்பை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்களிடம் வெளிநாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஒரு வெளியுறவுக்கொள்கை இல்லை. ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் வெளிநாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால், ஆகப்போவது எதுவுமேயில்லை. இச்சந்திப்புகள் யாவும் சம்பிரதாயபூர்வமானவை. தமிழ் மக்களுக்கான வெளியுறவுக்கொள்கை ஒன்றைத் தாபிக்காத வரைக்கும் சீனாவுடன் மட்டுமல்ல் உலகின் எந்தவொரு நாட்டுடனும் அரசியல் ரீதியான இராசதந்திர உறவைப்பேண முடியாது. 

12. சிங்களத் தேசியவாதம், தமிழ்த்தேசியவாதம்,  முஸ்லிம் தேசியவாதம்,  மலையகத் தேசியவாதம் என இன்று இன ரீதியான தேசியவாத உணர்வு கூர்மைப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பகை மறப்பு,  நல்லிணக்கம்,  அரசியல் தீர்வு, சமாதானம் போன்றவற்றை எட்டுவது எப்படி?

இன்றைய மூன்று பெரும் இயக்கங்களில் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துடன் தேசியமும் ஒன்றாகும் என்ற சன்யாட்-சென்னின் வார்த்தைகளை நாம் புறந்தள்ள முடியாது. தேசியம் என்றால் என்ன? ஒரு இனத்தின் வாழிடம், அது பேசும் மொழி,  அதன் பண்பாடு, அதன் நம்பிக்கை ஆகியனவற்றின் கூட்டுப் பிரக்ஞைதானே தேசியம். அந்தவகையல்,  ஒவ்வொரு இனத்தினதும் தேசியம் என்பதும் அத்தேசிய இனத்துடன் கூடப்பிறந்ததாகும். இலங்கைத் தீவில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்களின் தேசியங்கள் இணைந்தே இலங்கைத் தேசியமாக உருப்பெறவும் வலுப்பெறவும் முடியும். இவற்றில் சிங்களத் தேசியம் ஆதிக்கவெறிகொண்ட தேசியமாக மாறிவிட்டுள்ள நிலையில் மற்றைய தேசியங்கள் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தேசியங்களாக ஆகிவிட்டுள்ளன. சிங்களத் தேசியத்தின் ஆக்கிரமிப்பு ஏனைய இனங்களிடையே தேசிய உணர்வைக் கூர்மைப்படுத்திவிட்டுள்ளது. கூர்மைப்பட்டுள்ள இத்தேசியங்கள் சிங்களத் தமிழ் மக்களிடையே பகைத் தேசியங்களாகவும் உருமாறியுள்ளன. இவற்றின் நடுவில் நின்று பகைமறைப்பு, நல்லிணக்கம், அரசியல் தீர்வு, சமாதானம் போன்றனவற்றைத் தேடுவது கடினமானதுதான். 

இலங்கையை 2004ஆம் ஆண்டு கடற்கோள் தாக்கியபோது விடுதலைப்புலிகளும் சிங்கள இராணுவமும் தங்கள் பகையை மறந்து ஒருவருக்கொருவர் உதவிசெய்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ஐக்கியநாடுகள் சபையே பாராட்டியுள்ளது. இலங்கையில் பிளவுபட்டுள்ள இத்தேசியங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான சக்தியாக சூழலியற் தேசியத்தை நான் பார்க்கிறேன். உலகம் இன்று எதிர்நோக்கும் மிகப்பெரும் பயங்கரவாதம் காலநிலை மாற்றம் என்னும் சூழலியற் பயங்கரம்தான். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தில் மோசமாகப் பாதிக்கப்படப்போகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடல்மட்டம் உயர்ந்து வருவதால் இலங்கையின் கரையோரக் கிராமங்கள் யாவும் கடலால் காவுகொள்ளப்பட்டுவிடும் என்றம், யாழ் குடாநாடு ஆனையிறவுப் பகுதியில் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டாடப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இச்சூழலியற் பேரனர்த்தம் தமிழ், சிங்களம் என்று பேதம் பார்க்காது ஒட்டுமொத்த இலங்கையையுமே கபளீகரித்துவிடும். எங்களுக்கிடையே தேசிய வாதங்களைக் கூர்மைப்படுத்தியது போதும். சிங்களப்பெரும் தேசியவாதம் சிறுபான்மை இனங்களினது சுயத்தையும் அரசியல் அங்கீகாரங்களையும் அங்கீகரித்து அவர்களை இலங்கைத் தேசியர்களாகவும் உணரவைப்பதன் மூலமே இலங்கை எதிர்நோக்கும் சூழலியற் பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தப் பலத்துடன் எதிர்கொள்ள முடியும். 

13. மக்களின் போராடும் குணாம்சம் மழுங்கி வருகிறது. அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதைக் குறித்து?

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் ஜனநாயக வழியிலான போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டமாக பரிணாமித்தபோது அப்போராட்டத்தில் தமிழ் வெகுமக்கள் முழு அளவில் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. ஒரு குறித்த எண்ணிக்கையானோர் நேரடிப் பங்களிப்பாளர்களாக இயக்கங்களில் உறுப்பினர்களாகிப் போராடியபோது பெரும் சதவீதத்தினர் வெளியே நின்றுகொண்டிருந்தனர். பவுணும் பணமும் கொடுத்தால் போதுமானதாகக் கருதிக்கொண்டார்கள். இயக்கங்கள் அறவழிப் போராட்டங்களுக்கு அழைத்தால் இவர்களில் சில சதவீதத்தினர் கலந்துகொண்டும் இருந்தார்கள். இப்போது அந்தநிலை இல்லை. போராட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்காத, போராட்டத்தின் வலிகளை,  பாடுகளை எவ்விதத்திலும் அனுபவிக்காத புதிய தலைமுறை எங்களிடம் உருவாகிவிட்டது. இவர்களின் நேரங்களை இன்று கைத்தொலைபேசிகளும் சமூக ஊடகங்களும் மாய உலகொன்றுக்குள் இழுத்துச்சென்றுகொண்டிருக்கின்றன. ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று இவர்களை வழிநடத்தக்கூடிய தலைவர்களும் எம்மிடம் இல்லை. இதனால், இவர்களின் தேசியம் பற்றிய பார்வையும் குறுகிமறுகி வருவதோடு போராட்டக் குணாம்சமும் அருகி வருகிறது. இதன் வெளிப்பாடே ஐந்து, பத்துப் பேருடன் இடம்பெற்று வரும் போராட்டங்கள். 

14. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் புதியதொரு அரசியற் பண்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறது. இதனைப் பெருந்திரள் சமூகம் எப்படி அங்கீகரிக்கும்?

தமிழ் அரசியற் கட்சிகள் பலவும் தேசியத்தை ஒரு அரசியற் கோசமாக மட்டுமே தேர்தல் மேடைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். தேசியம் என்பது ஒரு வெற்றுக்கோசம் அல்ல. அதனுள்ளே அந்த இனத்தின் ஆன்மாவே அடங்கியுள்ளது. தேசியத்தின் ஒரு கூறாக மண் மீட்பைப் பற்றிப் பேசி வருகிறோம். இந்த மண் என்பது எங்கள் சூழல். இதனால்தான் தமிழ்த்தேசியத்தின் பிரிக்க முடியாத, பிரிக்கக்கூடாத ஒரு கூறாக சூழலியம் என்கின்ற கோட்பாட்டை உள்வாங்கி நாங்கள் பயணித்து வருகிறோம். உலகளாவிய சூழல் நெருக்கடிகள் இக்கோட்பாட்டை நோக்கித்தான் அரசியல் கட்சிகளை நெட்டித்தள்ளி வருகின்றன. இந்தியாவில் தேர்தல் ஆணையம் சகல கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சூழல் பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்துக் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  நீங்கள் கேட்பதுபோல பெருந்திரள் சமூகம் இதனைப் புரிந்துகொள்வதற்குச் சற்றுக் காலதாமதம் ஆகலாம். ஆனால்,  புரிந்துகொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாங்கள் தேர்தல் வெற்றி குறித்து கவலைப்படுபவர்கள் அல்ல. ஆனால், பசுமை அரசியலுக்கு வித்திட்டவர்களாக நாங்கள் இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.

 

 

https://arangamnews.com/?p=10005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.