Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நினைவுகளில் பொறிக்கப்பட்டுள்ள திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நினைவுகளில் பொறிக்கப்பட்டுள்ள திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

திலீபன் என்று அழைக்கப்பட்ட இராசையா பார்த்தீபன் 1987 செப்டம்பர் 15 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகளில் பற்றுறுதிகொண்டவர் 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு செப்டம்பர் 26 அன்று தண்ணீர் கூட குடிக்காமல் இறந்தார்.திலீபனின் 36 வது நினைவு தினம்  2023 செப்டம்பர் 26 அன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது.இந்த கட்டுரையில் புலிகளின் தியாகி திலீபனைப் பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரால் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதி காக்கும் படையாக இந்திய வீரர்களை நிலைநிறுத்தியதுடன், இலங்கை தமிழ் மக்களால் பரவலாக வரவேற்கப்பட்டது.போரின் முடிவிலும், இந்தியாவால் உத்தரவாதப்படுத்தப்பட்ட நீடித்த  அமைதிக்கான வாய்ப்புகளிலும் தமிழர் மகிழ்ச்சியடைந்தனர்.அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி  உடன்படிக்கைக்கு முழுமையாக ஆதரவளித்தது.

முதன்மையான தமிழ் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளும் தயக்கத்துடன் அந்த வரிசையில் விழுந்தனர்.1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி சுதுமலையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க “நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்” என்ற உரையின் மூலம் புலிகளின் மனநிலை தெளிவாக விளக்கப்பட்டது.

எனினும் நாட்கள் செல்ல செல்ல விடுதலைப் புலிகள் பாதுகாப்பற்றவர்களாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர ஆரம்பித்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வழங்கிய பல வாக்குறுதிகள் துரிதமாக  நிறைவேற்றப்படவில்லை என்ற அபிப்பிராயத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.தாமதமான முன்னேற்றம் , இந்திய அதிகாரிகளின் சில  நடவடிக்கைகள் ஆகியவை புலிகளை வெறுப்படையச் செய்தது.ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தின் இரகசிய சூழ்ச்சிகள் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டது.
 
மேலும் இந்திய இராணுவத்தின் மீது தமிழ் மக்கள் காட்டிய அதீத பாசமும் நல்லெண்ணமும் ஆரம்ப கட்டங்களில் புலிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்த தியாகங்களை மறந்துவிட்டு “இந்திய மாதாவை” நோக்கி ஈர்ப்பதாக புலிகள் உணர்ந்தனர். விடுதலைப் புலிகள் இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகத் தொடங்கினர்.புலிகளின் “புத்திஜீவி “பிரிவுகள் கவலை அடைந்தன.

 

இதில் பிரதானமானவர் புலிகளின் அரசியல் தலைவரான திலீபன் என்கிற இராசையா பார்த்தீபன்.திலீபன் இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.தமிழ் மக்களே பேரழிவிற்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்பதால் இந்தியாவிற்கு வன்முறையான பதிலடி என்பது பேரழிவை அழைப்பது என்பதை திலீபன் அறிந்திருந்தார்.எனவே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக வன்முறையற்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தார்.

உண்ணாவிரதமிருக்க முடிவு

திலீபன், அவரது அரசியல் பிரதித் தலைவர் ராஜன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற முத்தரப்பு கலந்துரையாடலின் பின்னர் இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. ராஜனின் கூற்றுப்படி, திலீபன் உண்மையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்தார்.மேலும் தனது முடிவை  இரண்டாவது கருத்துக்காக மட்டுமே திருவிடம் தெரிவித்தார் . கலந்துரையாடலில் இரண்டு சாத்தியமான தடுமாற்றங்கள் அடையாளம் காணப்பட்டன. ஒன்று தலைவர் பிரபாகரன் ஒப்புதல் அளிப்பாரா என்பது.மற்றொரு   இந்தியா எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதுதான்.

நிலைமை இருமுரண்நகைப்பட்டதாக இருந்தது.புலிகள் ஆயுதம் ஏந்திய போராளிகள்  ஆனால் இப்போது திலீபன் காந்திய வழியிலான அகிம்சையின் தொட்டிலான இந்தியாவுக்கு எதிராக வன்முறையற்ற போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தனது எண்ணம் குறித்து திலீபன் கூறியபோது, இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்வது பிரபாகரனுக்கு மிகவும் கடினமாக இருந்தது.1983 இல் பிரபாகரனின் மனைவி மதிவதனி [அப்போது திருமணமாகவில்லை] உட்பட  பட்டதாரிகளின் சாகும் உண்ணாவிரதத்தை குழப்பி அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவளித்தது புலிகள்தான்.புலிகளின் நிலைப்பாடு இலங்கை அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறையற்ற நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான்.கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகங்களும், இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்ட விதமும் இதற்குச் சான்றாகும்.அகிம்சைப் போராட்டம் புலிகளின் சித்தாந்தத்திற்கு எதிராக நடந்தது.

ஆனால் திலீபன் ஒரு இலக்கை கொண்ட மனிதராக இருந்தார்.அவர் பிரபாகரனை வற்புறுத்தி தனது  உத்தேச நடவடிக்கைக்கு ஒப்புதல் பெற முயன்றார்.  அவர் (திலீபன்) சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.பிரபாகரனே இந்தியாவில் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் என்பதை திலீபன் தனது கோரிக்கைக்கு ஆதரவாக மேற்கோள் காட்டினார். 1986 ஆம் ஆண்டு இந்தியப் பொலிசார் விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்களைக் கைப்பற்றிய போது, பிரபாகரன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 24 மணி நேரத்திற்குள் புது டில்லி நிலைப்பாட்டை தளர்த்தியது.வயர்லெஸ் கருவி திரும்பப் பெறப்பட்டது. பிரபாகரன் இணக்கம் தெரிவித்தார்.

 
ஐந்து கோரிக்கைகள்

 

திலீபன் தனது காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை 1987 செப்டெம்பர் 15 அன்று ஆரம்பித்தார்.இறுதிவரை உண்ணாவிரதத்தை தொடர அவர் உறுதியாக இருந்தார்.சுருக்கமாகச் சொன்னால், அவர் இறக்கத் தயாராக இருந்தார்.இந்திய அரசிற்கு ஐந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.இந்தக் கோரிக்கைகளில் எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இலங்கை அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். எவ்வாறாயினும், இந்தியா குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்ததால், கொழும்பு அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது புதுடில்லியின் பொறுப்பாகும்.

ஐந்து கோரிக்கைகள்:

1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.
2. பயங்கரவாதத் தடைச் சட்டம் ( மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபையொன்று நிறுவப்பட வேண்டும். அதில் புலிகளுக்கு தலையாய இடம் வழங்கப்படவேண்டும். இந்த சபை வடக்கு மற்றும் கிழக்கின் புனர்வாழ்வுக்கு பொறுப்பாகும்.

4. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களை திறப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இலங்கை பாதுகாப்பு படையினர் அவற்றை காலி செய்ய வேண்டும்.

5. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஊர்காவல் படையினருக்கு இலங்கை அரசு வழங்கிய ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறுவதை இந்திய ராணுவம் கண்காணிக்க வேண்டும்.

உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் முன், திலீபன் தனது உண்ணாவிரதத்தை எக்காரணம் கொண்டும் இடையூறு செய்யக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.தண்ணீரைக் கூட குடிக்கக் கூடாது என்றும் முடிவு செய்தார்.அயர்லாந்தில் பாபி சாண்ட்ஸ், இந்தியாவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீ ராமுலு, சங்கரலிங்க நாடார் போன்றோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தண்ணீரை உட்கொண்டார்கள். திலீபன் தனது உடல் நிலை மோசமடைந்ததால், தண்ணீருக்காக அழுது புலம்புவதை அறிந்திருந்தார்.அதனால், மயக்கத்தில் அழுதாலும்,மன்றாடினாலும்  யாரும் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கட்டளையிட்டார்.திலீபனின் விடயத்தில் தண்ணீர் குடிக்காதது அவரது உடல் நிலையை வேகமாக பாதித்தது.

 
கந்தசுவாமி கோவில்

 

திலீபன் தனது உண்ணாவிரதத்தை 1987 செப்டெம்பர் 15 அன்று நல்லூரில்  கந்தசுவாமி ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் ஆரம்பித்தார். அவர் பகலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இரவில் படுக்கையில் தூங்கினார்.இரவு முழுவதும் ஜெனரேட்டர் மூலம் அப்பகுதி முழுவதும் பிரகாசமாக இருந்தது.தமிழ்த் தேசியப் பாடல்கள் இசைக்கப்பட்டன, உரைகள் நிகழ்த்தப்பட்டன, கவிதைகள் வாசிக்கப்பட்டன.திலீபனின் விருப்பமான விடுதலைப் பாடல் “ஓ, மரணித்த வீரனே, உன் சீருடையை  எனக்குத் தா”  ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலிக்கப்பட்டது.

புலிகள் ஆரம்பத்தில் விடுதலைப் பாடல்களைப் பாட ஏற்பாடு செய்தனர்.ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, நிகழ்வு தானாகவே   வேகத்தை எடுத்தது.மக்கள் தாங்களாகவே நல்லூரில் திரண்டனர். யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.மக்கள் காவடி ஊர்வலம் நடத்தினர்.அனுதாப உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது. நல்லூரில் பதற்றம் அதிகமாக இருந்தது. திலீபனின் மறைவுக்குப் பிறகு அவரது படம் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு வந்து திலீபனுடன் உரையாடலில் ஈடுபட்டார்.இந்த உண்ணாவிரதத்தில் திலீபனின் தந்தை இராசையா மாஸ்டர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேடையின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருப்பார்.நாளுக்கு நாள் திலீபனின் உடல்நிலை மோசமடைந்தது.வலியைக் குறைக்க விடுதலைப் புலிகள் அவருக்கு மசாஜ் செய்து கொண்டே இருப்பார்கள்.மிகவும் வேதனையடைந்த திலீபன் கோமா நிலைக்குச் சென்றார்.12 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 26 அன்று முடிவு வந்தது.யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் மருத்துவர் சிவகுமாரன், திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கியதன் மூலம் திலீபன் இப்போது இல்லை என சுட்டிக்காட்டினார்.திலீபனின் தந்தையின்  “ஐயோ” என்ற உரத்த அலறல் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எதிரொலித்தது.ஏறக்குறைய அங்கிருந்த அனைவரும் அழத் தொடங்கினர். திலீபனின் மறைவைக் கேள்வியுற்ற பிரபாகரன் நல்லூருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தார்.

திலீபன் தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியை  ராஜன் தமிழில் வாசித்தார்.அந்தச் செய்தியின் இறுதிப் பத்தி “எங்கள் மக்கள் ஒரு நாள் சுதந்திரத்தை அடைவார்கள் என்று நான் நம்புகிறேன். தேசத்திற்கான தேசிய பொறுப்பை நான் நிறைவேற்றுவது எனக்கு மிகுந்த திருப்தியையும் மனநிறைவையும் தருகிறது”. இவைதான் திலீபனின் கடைசி வார்த்தைகள்.

 
இறுதி ஊர்வலம்

 

திலீபனின் உடல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பதனம் செய்யப்பட்டது.அதன் பின்னர் புலிகளின் சீருடை அணிந்த திலீபனின் உடல் மக்கள் அஞ்சலிக்காக நல்லூருக்கு கொண்டு வரப்பட்டது.புலிகள் திலீபனின் இறுதி ஊர்வலத்தை பாரியளவில் ஏற்பாடு செய்தனர்.

யாழ். குடாநாட்டில் உள்ள 435 கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு வாகன பேரணியில் திலீபனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. புலிகளின் அரசியல் பொறுப்பாளராக திலீபன் இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று வந்திருந்தார். தமிழ் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் ஒலிபெருக்கியில் அடிக்கடி ஒலிக்கப்பட்டது. ஓ திலீபன், நீ எங்கே ஐயா போகிறாய் என்ற ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் உள்ள பல்லவி மக்களின் இதயங்களைத் தொட்டது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் அவுஸ்திரேலியா மனைவி அடேல் பாலசிங்கம் ‘வில்  ரு  ப் ரீடம்  ’ என்ற நூலில் திலீபனின் இறுதிப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார். இதோ ஒரு பகுதி:

“குடாநாடு முழுவதிலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் திலீபனின் படம் அடங்கிய சிறிய மெழுகுவர்த்தி ஏந்திய ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் பாரம்பரியப்படி தென்னங்குருத்தினால் பின்னப்பட்ட தோரணங்கள் துக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. கோவில்களின் ஒலிபெருக்கிகளில் இருந்து இறுதி ஊர்வல இசை ஒலித்தது.புலிகளின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட இராணுவச் சீருடையால் திலீபனின் உடல் போர்த்தப்பட்டிருந்தது. இந்த புகழ்பெற்ற தியாகிக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்துவதற்காக மாலை அணிவிக்கப்பட்ட இறுதி ஊர்வலம் குடாநாடு  முழுவதும் கிராமம் கிராமமாக மெதுவாக நகர்ந்தது. இராணுவ டிரம்ஸின் அலாதியான துடிப்பு, ஊர்தி அதன் தரித்து நின்ற இடத்திலிருந்து கிராமத்தின் வழியாக அதன் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதை அறிவித்தது. திலீபனின் திறந்த ஊர்தி பிரதான கிராமப் பாதை வழியாக கடைசியாக ஊர்ந்து சென்றபோது, சத்தியாக்கிரகத்தின் குருவான மகாத்மா காந்தியின் உண்ணாவிரதத்தையும் தியாகத்தையும் விஞ்சிய ஒரு இளைஞனுக்கு இறுதி வணக்கம் செலுத்த நான் கூட்டத்துடன் அமைதியாக நின்றேன். திலீபன் தனது செயலில், உணவை மட்டுமல்ல, திரவங்களையும் மறுத்ததன் மூலம் காந்தியை மிஞ்சியிருந்தார்.

 
இறுதிப் பிரியாவிடை செப்டம்பர் 28 அன்று சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது.பேச்சுக்கள் நிறைவடைந்ததையடுத்து, திலீபனின் உடல் யாழ்.மருத்துவ பீடத்திடம் அவர் கோரியபடி சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான சங்கர் மற்றும் தேவர் ஆகியோர் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் சிவராஜாவிடம் உத்தியோகபூர்வமாக சடலத்தை ஒப்படைத்தனர்.

 

மருத்துவபீடம்

திலீபனின் உடல் 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் வைக்கப்பட்டது.1995 ஆம் ஆண்டு “ரிவிரேச நடவடிக்கையின்” பின்னர் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய போது, புலிகள் திலீபனின் எச்சங்களை எடுத்துச் சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தனர்.கிளிநொச்சியின் சில பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றிய போது, எலும்புக்கூடு முத்தையன்கட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.1998 இல் புலிகள் நகரை மீண்டும் கைப்பற்றிய போது அது மீண்டும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.2009 ஜனவரியில் கிளிநொச்சி ஆயுதப்படையிடம் வீழ்வதற்கு முன்னர், சடலம் மாத்தளன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 2009 ஏப்ரலில் மாத்தளன் இராணுவத்தால் கைப்பற்றப்படுவதற்கு சற்று முன்னர், திலீபனின் எலும்புக்கூடு மாத்தளனில் தகனம் செய்யப்பட்டது.

திலீபனின் உதவியாளரான ராஜன், திலீபனின் கண்ணாடி, பேனா, உடைகள், புத்தகங்கள், பிரீப்கேஸ் போன்ற பல பொருட்களை எடுத்துச் சென்று புன்னாலைக்கட்டுவானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் வைத்திருந்தார்.உண்ணாவிரதத்தின் போது திலீபன் அமர்ந்திருந்த நாற்காலி மற்றும் அவர் உறங்கிய படுக்கையும் அங்கு கொண்டு செல்லப்பட்டது.எதிர்காலத்தில் தமிழ் ஈழ அருங்காட்சியகம் அமைக்கப்படும் வரை அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.1987 அக்டோபரில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் போர் மூண்டது.மோதலின் போது திலீபனின் நினைவுச் சின்னங்கள் அடங்கிய புன்னாலைக்கட்டுவன் வீடு இந்திய இராணுவத்தால் அழிக்கப்பட்டது.
திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது இந்திய அதிகாரிகள் விரைந்து தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்று பெரும்பாலான தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.திலீபனை இந்தியா இறக்க அனுமதிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.ஆனால் திலீபன் இறந்துவிட்டார்.

 
இந்திய தரப்பின் பிரதிபலிப்பு

 

திலீபன் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது, கொழும்பில் இந்தியர்களின் பிரதிபலிப்பு விகாரமாகவும் மடமைத்தனமாகவும் இருந்தது.கொழும்பில் இருந்த கர்வமுள்ள உயர்ஸ்தானிகர் ஜே.என். தீக்சித் சாகும்வரையிலான உண்ணாவிரதம் குறித்து தீவிரமாக பரிசீலிக்க மறுத்துவிட்டார்.கொழும்பில் உள்ள இந்த கட்டுரையாளர் உட்பட ஒரு சிறிய குழு ஊடகவியலாளர்களிடம் “அவர் விரும்பினால் இறக்கட்டும்” என்று அவர் கிண்டலாக குறிப்பிட்டார்.

ஆரம்பகால இந்தப் பதில், புலிகள் அத்தகைய நேரடியான அகிம்சை நடவடிக்கைகளுக்குத் தகுதியற்றவர்கள் என்ற இழிந்த முன்னோக்கினால் நிபந்தனை விதிக்கப்பட்டதாகத் தோன்றியது. உண்ணாவிரதம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அது வேகத்தைக் கூட்டியது.கிளர்ச்சியடைந்த புது டில்லி தாமதமாக சேதத்தை கட்டுப்படுத்த முயன்றது. தீக்சித் செப்டம்பர் 26 அன்று யாழ்ப்பாணம் சென்றார்.அவர் சென்றிருந்த  சில நிமிடங்களில் திலீபன் உயிரிழந்தார்.

செப்டம்பர் 28 அன்று நீண்ட விவாதங்களுக்குப் பிறகு உடன்பாடு எட்டப்பட்டது.இடைக்கால நிர்வாகக் குழுவை அமைப்பதற்கு ஒப்பந்தம் சாராம்சத்தில் ஒப்புதல் அளித்தது.அதில் இந்திய அரசியல் செயலாளர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அப்போதைய விடுதலைப் புலிகளின் துணைத் தலைவர் கோபாலசுவாமி மகேந்திரராஜா என்ற மாத்தயா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 
இந்திய விரோத மனநிலை

 

ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இல்லை திலீபனின் வெற்றி.ஒரு சில நாட்களிலேயே தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக புலிகளின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப மாற்றியமை அவருக்கு கிடைத்த வெற்றியாகும்.ஒப்பந்தத்திற்குப் பிந்தைய இந்தியச் சார்பு மனநிலை இந்திய விரோதமாக மாறியது. சாகும் உண்ணாவிரதம் இந்தியாவின் தார்மீக வங்குரோத்து நிலைக்கு மாறாக தமிழர்களின் தார்மீக மேன்மையை நிரூபிப்பதாகத் தோன்றியது.தமிழர்களின் பார்வையில் புலிகள் வன்முறைப் போராளிகள் மட்டுமன்றி, அகிம்சை வழியில் தியாகிகளாகவும் இருந்தனர்.டாக்டர் சிவகுமாரன், திலீபன் இறந்து கிடப்பதைக் கண்டதும், திலீபனின் பாதங்களைப் பகிரங்கமாகத் தொட்டபோது, அவர் ஒரு மகாத்மா அந்தஸ்தைப் பெற்றதாகத் தோன்றியது.

இந்திய பத்திரிகைகளில் விதைக்கப்பட்ட செய்திகளால் மட்டுமே இந்தியா பலவீனமாக பதிலளிக்க முடியும். திலீபன் ஏற்கனவே இறந்து கொண்டிருந்தார், உண்ணாவிரதம் ஒரு கேலிக்கூத்து என்று ஒரு அறிக்கை சென்றது.பிரபாகரன் தனது விருப்பத்திற்கு மாறாக திலீபனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வற்புறுத்தினார் என்பது மற்றொரு தகவல்.பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் என்று அவரைப் பின்பற்றுபவரைக் கேட்காமல் இருந்திருக்க வேண்டும் என்பது கூடுதல் தகவல்.ஆனால் இவை எதுவும் தமிழ் மக்களின் பார்வையில் திலீபனை கீழறுப்பதில் வெற்றி பெறவில்லை.

 
திலீபனின் மரண உண்ணாவிரதம் தமிழ் மக்களின் அரசியல் மனநிலையை மாற்றியமைத்தது,அக்டோபரில் இந்தியாவுடன் ஆயுத மோதல்கள் தொடங்கிய போது புலிகளுக்கு பரவலான ஆதரவு இருந்தது.”ஆபரேஷன் பவன்” இல் கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவு இந்திய எதிர்ப்பு மனநிலையை வலுப்படுத்தியது.
 
ஜே.என். தீக்சித்

 

திலீபனை இறக்கவிட்டதற்காக புலிகளாலும் பல தமிழர்களாலும்  முன்னாள் இந்திய தூதர் ஜே.என்.தீக்ஷித் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் நல்லூருக்கு சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு திலீபனிடம் கோரிக்கை விடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தீக்சித் தனது “அசைன்மென்ட் கொழும்பு” புத்தகத்தில் இத னை  கூறியுள்ளார்.

“இதற்குள் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் திலீபனின் உடல் நிலை மீள முடியாத அளவிற்கு மோசமடைந்திருந்தது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த கோவிலுக்கு நேரில் சென்று நோன்பை துறக்குமாறு கூறுமாறு பிரபாகரன் என்னிடம்  கேட்டுக் கொண்டார்.அவர் இணங்குவார் என்று எனக்கு உத்தரவாதம் இருந்தால் நான் அவ்வாறு செய்ய தயாராக இருந்தேன்.ஆனால் திலீபன் ஒரு இலட்சியவாதி மற்றும் உறுதியான சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் பிரபாகரனால் அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியவில்லை.

“நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள திலீபனிடம் என்னை அழைத்துச் சென்று பாரிய ஒப்பந்தத்துக்கும், இந்திய எதிர்ப்புக்கும் ஆட்படுத்தவும், பின்னர் எனது கோரிக்கையை நிராகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஐ.பி கே .எவ் மற்றும் எங்கள் புலனாய்வு வட்டாரங்கள் எனக்கு (தீக்சித்) தெரிவித்திருந்தன.இந்திய உயர்ஸ்தானிகரின் முயற்சி நிராகரிக்கப்பட்டது பற்றி இந்திய அரசை இப்படி ஒரு அவமானத்திற்கு ஆளாக்கமாட்டேன் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.எனவே திலீபன் உண்ணாவிரதத்தை துறப்பார் என்ற உறுதி எனக்கு கிடைத்தாலொழிய வீண் முயற்சிக்கு நான் தயாராக இல்லை என்று பிரபாகரனிடம் கூறினேன்.அடிப்படையில் எந்த ஆத்திரமூட்டலும் இல்லாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர் திலீபன்.இந்திய அரசாங்கமோ அல்லது அதன் மக்களோ ஈடுபடாத அவரது உண்ணாவிரதத்திற்கு ஆதரவளிப்பது விடுதலைப் புலிகளின் உயர் கட்டளையின் முடிவு.

திலீபனின் மரணம் மற்றும் இந்தியாவுக்கான அதன் விளைவுகளை லெப்டினன்ட் ஜெனரல் டெபிந்தர் சிங் தனது ‘இலங்கையில் ஐ.பி.கே  எவ்  ’ என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார். ,”திலீபன் ஒரு முக்கிய ஆளுமை, அவர் ,1987 செப்டம்பர் 26 இறந்தபோது, இந்தியாவிற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளி அளவிட முடியாத அளவுக்கு விரிவடைந்தது.”

 
புலிகளை உலுக்கியது
திலீபனின் மரண உண்ணாவிரதம் புலிகளையும் உலுக்கியது. வன்முறையை விட அரசியல் அணிதிரட்டலில் அகிம்சை நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அன்டன் மாஸ்டர் என்றழைக்கப்படும் தளையசிங்கம் சிவக்குமார், இந்தியாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினையில் வெளிப்படையாகவே பிரபாகரனுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியேற்றப்பட்டார்.புலிகள் இந்தியாவை அகிம்சை வழிகளில் எதிர்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
திலீபனின் மறைவுக்குப் பிறகு, புலிகளின் யோகி என்ற நரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வர வேண்டியிருந்தது, திலீபன் ஒரு “அகிம்சை” (அகிம்சையின் மனிதர்) அல்ல, மாறாக “அகிம்சை” (அகிம்சை) ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியவர் என்பதை வலியுறுத்தினார்.சுருக்கமாகச் சொன்னால் திலீபன் அகிம்சையை ஆயுதமாக்கினார், அகிம்சையைப் பின்பற்றுபவர் அல்ல என்பது புலிகளின் நிலைப்பாடாகும்.

 

1990 ஆம் ஆண்டு புலிகளால் நல்லூர் “திலீபன் நகர்” அல்லது திலீபன் நகரம் என மறுபெயரிடப்பட்டது.1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி திலீபன் இறந்த அதே நேரத்தில் யாழ்ப்பாணக் கோட்டையில் புலிக்கொடி யாழ்.தளபதி பானுவால் ஏற்றப்பட்டது. ஏனென்றால், கோட்டையின் மீது புலிக்கொடி பறக்கும் போதுதான் தமிழர்கள் உண்மையாக விடுதலை பெறுவார்கள் என்று திலீபன் முன்னரே பரபரப்பான உரையை நிகழ்த்தியிருந்தார்.

யாழ்.மாநகர சபையினால் நல்லூரில் திலீபனுக்கு நினைவுத்தூபி அமைக்கப்பட்ட போது சி.வி.கே. சிவஞானம் யாழ்ப்பாண மாநகர ஆணையாளராக இருந்தார்.யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இந்த நினைவுத்தூபியின் பராமரிப்பிற்காக மத்திய மயமாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளனர். திலீபன் தொடர்பான நினைவேந்தல் நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக இந்த நினைவுச்சின்னம் உள்ளது.

“தியாக தீபம்”

திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும் இலங்கைத் தமிழர்களின் நினைவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. திலீபனின் மறைவு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான உன்னத தியாகமாக கருதப்படுகிறது. அவர் “தியாக தீபம்” என்று பரவலாக குறிப்பிடப்படுகிறார்.அவரது வாழ்க்கை மற்றும் மறைவு செப்டம்பர் மாதம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது. திலீபனின் உன்னத தியாகத்தை நினைவு கூரும் போதெல்லாம் அவரது பெயர் வரவழைக்கும் அபிமானமே திலீபனின் மரபு.

பினான்சியல்  டைம்ஸ்

https://thinakkural.lk/article/275331

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.