Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன?

அ.நிக்ஸன்-

ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும்.

2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன?

1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்பது பற்றிய ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். குறிப்பாக 1948 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பில் இருந்து தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு குடியரசின் இரண்டாவது யாப்பு வரையும் எப்படிப் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்பது பற்றிய சட்டங்களை மேற்கோள்காண்பித்து ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

2) நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழர்களுக்கு எதிராக குறிப்பாகப் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் கொலை ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்படுகின்றமை. அதுவும் இராணுவத்துடன் சேரந்து இயங்கிய இராணுவக் குழுக்களில் இயங்கிய பலர் தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்றமை போன்ற விபரங்கள் ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட வேண்டும்.

3) கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாள பொதுப் பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். அந்தப் பொறிமுறையைக் கையாள உள்ளூர் மற்றும் உலக அரசியல் பொருளாதார நிலைமைகளை அவதானித்து அதற்கு ஏற்ப செயற்படக்கூடிய துறைசார்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

4) அரசியல் தீர்வு எது என்பதைத் தீர்மானித்து அனைத்துக் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தில் கையொப்பமிட்டு அதனையே தேசியக் கோரிக்கையாகவும் பொது நிலைப்பாடாகவும் பிரகடனப்படுத்த வேண்டும்.

5) கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஒருமித்த குரலில் பேசுவதற்காகக் குறிப்பிட்ட சிலர் நியமிக்கப்பட வேண்டும். கட்சிகளாகப் பிரிந்து சென்று சந்தித்தால் அது பிரித்தாளும் தந்திரத்துக்கே வழி சமைக்கும். ஒருமித்த குரல் செயற்பாட்டுக்கும் அது தடையாக அமையும்.

6) வடக்குக் கிழக்கில் இராணுவத்தினர் வசமள்ள காணிகள் பற்றிய விபரங்கள், 1948 இல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள் குடியேற்றங்கள், 2009 மே மாதத்திற்குப் பின்னர் இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், அமைக்கப்பட்டு வரும் விகாரைகள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

7) அதாவது இலங்கைச் சட்டங்கள் அனைத்தும் பௌத்த சமயத்துக்குரியது, தொல்பொருள் திணைக்களம் பௌத்த சமயத்தை மாத்திரம் மையப்படுத்தியது என்ற விரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இது பற்றிய சாட்சியங்கள் வாக்கு மூலங்களைப் பெற வேண்டும்.

😎 இவை பற்றி வடக்குக் கிழக்கில் மக்கள் அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஏன் எங்களைப் பிரித்தாள முற்படுகிறார்கள், ஏன் எங்களுக்குள் சாதி. சமய மற்றும் பிரதேசவாத எண்ணங்களைக் கிளறி முரண்பாடுகளை தோற்றிவிக்கிறார்கள் என்பது பற்றிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டும்.

9) சாதி, மத பிரதேச வேறுபாடுகளுக்கும் அது பற்றிய சின்னச் சின்ன உணர்வுகளுக்கும் இடமளிக்காத முறையில் ஒரு தேசமாகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுசார்ந்த விழிப்புணர்வுகளை அரசியல் – பொருளாதார நோக்கில் வழங்க வேண்டும்.

10) சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் வடக்குக் கிழக்கில் உள்ள வளங்களைப் பயன்படுத்தியும் உள்ளூராட்சி சபைகள் மூலமாகவும் குறைந்த பட்ச அபிவிருத்திகளை இயல்பாகவே செய்ய முடியும் என்ற அறிவுசார்ந்த விடயங்களை மக்களுக்குப் போதிக்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் பொருளாதார உற்பத்தி முறைகள் பற்றி அறிவூட்ட வேண்டும்.

11) கல்வியின் அவசியம் பற்றியும் உலக நடப்புகள் பற்றியும் அறிவூட்ட வேண்டும். அத்துடன் பொழுதுபோக்கு என்று அரசாங்கம் அல்லது சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் அறிமுகப்படுத்துகின்ற களியாட்ட நிகழ்வுகளினால் எழக்கூடிய ஆபத்துகள் பற்றி அறிவூட்ட வேண்டும்.

12) பொதுழுதுபோக்கும் களியாட்ட நிகழ்வுகளும் உலக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேவைதான். ஆனால் அது எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர் தேசத்துக்கு ஏற்ற பொதுப் புத்தியாக வகுக்க வேண்டும்.

13) நவீன தொழிநுட்பங்களைக் குறிப்பாகச் சமூகவலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டும்.

இவற்றைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் உண்டு. சிவில் சமூக அமைப்புகள் இதற்கான அழுக்ககக் குழுக்களாக இயங்க வேண்டும்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று தத்தமது ஆசனங்களையும் தமது கட்சிகளுக்குரிய ஆசனங்களையும் அதிகரிப்பதுதான் முதன்மை நோக்கம் என்றால் மேற்குறித்த பரிந்துரைகள் எதுவுமே செல்லுபடியாகாது.

அது உப்புச் சப்பில்லாத ஹர்த்தால்களை மாத்திரமே நடத்த வசதியாக இருக்கும்.
 

 

http://www.samakalam.com/ஹர்த்தால்-பயனற்றது-சர்வ/
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.