Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விடுதலை புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு

—வன்னிப் போரில் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியதாக 2010 நிபுணர் குழு அறிக்கை கூறியது. ஆனால் இப்போது பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? ஐ.நா.எங்கே? ஆகவே உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது  வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ அந்த அரசைக் காப்பாற்றுவதே  அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை—

அ.நிக்ஸன்-

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர்.

புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை இஸ்ரேல் – பலஸ்தீன போர் ஆரம்பமானதில் இருந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழித்துப் போரை முடிவுக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் 2009 ஜனவரி மாதம் தன்னைச் சந்தித்து கேட்டிருந்தாக விபரித்தார்.

அரசியல் தீர்வு ஏற்படும் என்ற உறுதிமொழியை நம்பியதாகவும் ஆனால் பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும்கூட தீர்வு ஏற்படவில்லை எனவும் அமெரிக்க இந்திய அரசுகள் தன்னை ஏமாற்றியுள்ளதாகவும் சம்பந்தன் கவலை வெளியிட்டிருந்தார்.

இப்போது இஸரேல் – பலஸ்த்தீனம் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கனடா பிரதமர் யஸ்ரின் ட்ரூடோ என்ன சொல்கிறார்? ஹமாஸ் இயக்கம் வேறு பலஸ்தீன மக்கள் வேறு என்கிறார்.

ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னரே பலஸ்தீனயர்களுக்கு தீர்வு என்றும் நாடாளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை ட்ரூடோ கூறியிருக்கிறார்.

இதனையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சொல்கிறார். பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என்று பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் காசா மருத்துவமனை மீது இஸரேல் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக நூறு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை எனவும் பகிரங்கமாகக் கண்டிக்கவேயில்லை.

முதன் முதலில் கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்த மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் பலஸ்தீனம் மீது கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டுகொள்ளவில்லை. கண்டிக்கவுமில்லை.

spacer.png

இந்த அத்து மீறல்களை எதிர்ப்பதற்கான அதி உச்ச ஏற்பாடாகவே ஹமாஸ் இஸ்ரேல் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது. ஆகவே நியாயம் மூடி மறைக்கப்படுகின்றது?

அரசியல் நியாயம் என்பது இஸ்ரேல் அரசுக்குச் சாதகமாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் அமைந்துள்ளதை இந்த போர் பட்டவர்த்தனமாகக் காண்பிக்கிறது.

வன்னி பெருநிலப்பகுதியில் 2009 இல் இலங்கை அரசாங்கம் நடத்திய போர் சாட்சியங்கள் இன்றி நடத்தப்பட்டதாகச் சம்பந்தன் 2010 இல் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் சம்பந்தன் எடுத்துக் கூறியிருந்தார்.

கிளிநொச்சியில் அலுவலகங்கள் மூடப்பட்டபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் தங்களைத் தனியாகக் கைவிட்டு வெளியேற வேண்டாம் என்று கோசம் எழுப்பி அழுது புலம்புலம்பினர் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே சாட்சியங்கள் இன்றி வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த அத்தனை கொலைகளுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கோரியிருந்தார். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை பொறுப்புக்கூறவில்லை. அத்துடன் அமெரிக்க இந்திய அரசுகள் தங்கள் மனச்சாட்சியை இதுவரை தொட்டுப் பார்க்கவுமில்லை

இந்த நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டுகொள்ளாமல் ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறியாக இருக்கின்றன. பலஸ்தீனம் தனிநாடு என்ற நிலைப்பாட்டை ஏற்று 139 நாடுகள் 2012 இல் ஐ.நா சபையில் வாக்களித்திருக்கின்றன.

இந்தியா ஆதரித்தாலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனஅழிப்புகள் பற்றி வாய்திறக்கவில்லை.

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமான முறையிலும் அதேநேரம் ரசிய- சீனக் கூட்டுக்கு ஏற்ற முறையிலும் இரட்டை நிலைப்பாட்டுடன் இந்தியா இயங்குகின்றது. இதேபோன்றுதான் ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்தியா இரட்டை நிலைப்பாட்டை முன்னெடுக்கிறது.

ஆகவே விடுதலை இயக்கங்களைத் தலையெடுக்கவிடக் கூடாது என்ற வன்மம் ஏன் இந்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுகின்றது? ஐக்கிய நாடுகள் சபை, ஹமாஸ் இயக்கத்தைக் கண்டித்தளவுக்கு இஸ்ரேல் அரசை ஏன் கண்டிக்கவில்லை.

ஹமாஸ் தாக்குதல்களில் இஸ்ரேலில் சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் அதனையும் விட மிக் கொடூரமாக பலஸ்தீன மக்கள் கடந்த எழுபது வருடங்களாக இன அழிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களின் பாராம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. பலஸ்தீன பொருளாதார வளங்கள் இஸ்ரேல் அரசினால் அபகரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுமுள்ளன. ஆனால் சர்வதேச நீதி என்ன?

ஒரு கட்டத்தில் பலஸ்தீன மக்களுக்காக மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவுடன் இணங்கிப் போகவும் தயாராக இருந்தன. எண்ணெய்வளங்களைப் பரிமாறவும் அதற்குரிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் இணங்கியிருந்தன.

ஆனால் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான இன அழிப்பினால் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவுடனான உறவைத் தொடருவதற்குத் தயக்கம் காண்பித்திருந்தன.

2012 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கிவில்லை. ஆனாலும் அமெரிக்காவுடன்

மத்திய கிழக்கு நாடுகள் உறவைப் பேணி வந்தன.

2016 இல் அமெரிக்காவில் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரமப் மேற்கொண்ட பலஸ்தீன எதிர்ப்பு நடவடிக்கைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் 2020 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜோ பைடன் நிர்வாகம் அதனைச் சீர்ப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக மத்திய கிழக்கு நாடுகளுடன் மென்போக்கு நகர்வைக் கையாண்டு டொனால்ட் ட்ரமப் மேற்கொண்ட அனைத்துச் செயற்பாடுகளையும் அப்படியே முன்னெடுத்து இஸ்ரேலுக்கு ஜோ பைடன் வலுச் சேர்த்திருக்கிறார்.

இப் பின்புலத்திலேயே பலஸ்த்தீனம் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ள போர், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை அதன் கீழ் இயங்கும் அனைத்துச் சர்வதேச பொது அமைப்புகள் மீதும் சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளன.

ஏனெனில் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தவறிழைத்திருக்கிறது என ஐ.நா.நிபுணர்குழு 2010 இல் வெளியிட்ட அறிக்கையில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தது. பொதுமக்கள் கொல்லப்படுவதை சர்வதேசம் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது தடுத்து நிறுத்த சர்வதேசம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்ருந்தது. முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் தற்போது ஹமாஸின் தாக்குதலையடுத்து பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் அவலப்படுகின்றனர். அதனைத் தடுக்க ஐ.நா கடந்த பன்னிரெண்டு நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை.

spacer.png

வன்னி பெருநிலப்பரப்பில் இலட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போது அதனைத் தடுக்கத் தவறிய ஐ.நா ஏன் பலஸ்தீனத்தில் தடுக்க முற்படவில்லை? முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஐ.நா 2010 இல் வெளியிட்ட நிபுணர்குழு அறிக்கையை ஒரு பாடமாக எடுத்துப் பலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாமல்லவா?

ஐ.நாவில் அங்கீகாரம் உள்ள பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் கொல்லப்படுவதை ஐ.நா ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது?

ஆகவே ஐ.நா சபையின் பின்னால் செயற்படுவது யார்?

இக் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு யாருடையது? வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நலன் என்பது இதுதான். அதாவது மனித உரிமை, ஜனநாயகம் என்று தமது தேவைக்கு ஏற்ப அளந்து பேசுவது.

அத்துடன் புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களைப் பெறும் நோக்கில் மனித உரிமை மீறல், இன அழிப்பு என்று காண்பித்து குறித்த அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதும் இந்த வல்லாதிக்க நாடுகளின் வழமை. இதற்கு வசதியாக ஐ.நா சபையும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் பக்கபலமாக இயங்குகின்றன.

விடுதலை இயக்கங்கள் மீதான தவறுகள் கண்டுபிடிக்கப்படுதல் அல்லது திட்டமிட்டு தவறுகளை உருவாக்குதல் என்பதன் பின்னணியையும் இங்கிருந்துதான் நோக்க வேண்டும்.

2009 இல் விடுதலைப் புலிகளுக்கு நடந்ததையும் தற்போது ஹமஸ் இயக்கத்துக்கு நடந்து கொண்டிருப்பதையும் இப் பின்புலத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்.

உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது இந்த வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அந்த விடுதலை இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ அந்த அரசைக் காப்பாற்றும் நகர்வுகளிலேயே அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் முனைப்புக் காட்டும்.

குறிப்பாக இஸ்ரேல் அரசை வேறு பார்வையிலும் சிறிய நாடான இலங்கையை இந்தோ – பசுபிக் விவகாரத்திலும் அமெரிக்கா கையாள்வதை அவதானிக்க முடியும். இதற்கு இந்தியாவும் பின்னணியாகச் செயற்படுகிறது.

ஏனெனில் இந்திய மாநில அரசுகளுக்கு, உரிய அதிகாரங்கள் இல்லை. இந்திய மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் உண்டு. இதனை மையமாகக் கொண்டு தமது இந்தியப் பிராந்தியப் பாதுகாப்புக் கருதி ஈழத்தமிழர்களுக்கும் அரைகுறைத் தீர்வான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து 1987 இல் உருவாக்கியிருந்தது.

அதற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

1987 இல் இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 187 பொதுமக்களையும் வைத்தியர்கள் தாதியர்கள் பலரையும் கொலை செய்தது. 2009 இல் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இறுதிப் போரில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மாத்தளன் மருத்துவ மனைகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைக் கொலை செய்தது.

இப்போது காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரையும் சர்வதேசக் கண்டனங்கள் வெளிவரல்லை.

முப்பது வருட ஆயுதப் போரை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்க இந்திய அரசுகளும் சீனாவும் மற்றும் சில நாடுகளும் முரண்பாட்டில் உடன்பாடாக ஒத்துழைப்பு வழங்கியதாகப் பிரதமராக இருந்த அமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா 2009 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் பெருமையாகக் கூறியிருந்தார்.

இதன் காரணத்தினால் வல்லாதிக்க நாடுகளின் நலன் சார்ந்து தமிழ் இனஅழிப்பு என்பதைச் செவிமடுக்காமல் சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு மாத்திரம் ஜெனிவா மனித உரிமைச் சபை பரிந்துரை செய்திருக்கிறது.

ஆனால் அமெரிக்க இந்திய அரசுகளுக்கிடையே நிலவும் பனிப்போர் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்திய அரசின் இரட்டைத் தன்மைப் போக்கை அவதானித்து இலங்கை சர்வதேச போர்க் குற்ற விசாரணையை நிராகரித்துப் பொறுப்புக் கூறலில் இருந்து முற்றாகவே விலகி நிற்கிறது.

இதுபோன்ற ஆபத்தான நிலைமைதான் சர்வதேச அங்கீகாரம் உள்ள பலஸ்தீன மக்களுக்கும் ஏற்படும் என்பது பட்டவர்த்தனம்.

அதாவது விடுதலைப் புலிகளை அழித்த பின்னரே தீர்வு என்று வாக்குறுதி வழங்கப்பட்டு இதுவரையும் எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஈழத்தமிழர் தொடர்ந்து இன அழிப்புக்கு உள்ளாவது போன்று, ஹமாஸ் இயக்கம் அழிக்கப்பட்டால் பலஸ்தீன மக்களும் தொடர்ந்தும் இஸ்ரேல் அரசினால் இன அழிப்புக்கு உள்ளாவர் என்பது பரகசியம்.

 


http://www.samakalam.com/விடுதலை-புலிகளை-அழித்த-ப/

 

 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.