Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மலை கிராமங்களில் கொடிய தலசீமியா நோய்: உறவுகளில் திருமணம் செய்தது காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கோ.கிருஷ்ணா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 36 நிமிடங்களுக்கு முன்னர்

தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும்.

இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா கொண்டவர்களுக்குக் கடுமையான ரத்த சோகை இருக்கும்.

இதனால் இதற்கு மருத்துவம் அளிக்கத் தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும். தலசீமியா நோயால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் உள்ள மலை கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு சில நோய்கள் அதன் அறிகுறியை உணர்த்துவதோடு, தாக்கத்தை உடனடியாக வெளிப்படுத்தும். ஆனால், ஒரு சில நோய்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதே தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சக்கரை நோய் புற்றுநோய் என்பதெல்லாம் மிகவும் அரிதான நோயாக இருந்தது.

அதேபோல 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தைராய்டு குறைபாடும் PCOS, உள்ளிட்ட குறைபாடுகளும் என்னவென்றே தெரியாமல் இருந்தது. அதேபோல மரபணு சார்ந்த பலவித நோய்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. சில நோய்கள் தீவிரமான தன்மையைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் தலசீமியா என்று கூறப்படும் ரத்த சம்பந்தப்பட்ட நோயாகும். இது ஒரு மரபணு கோளாறு மற்றும் பரம்பரையாக பாதிப்பு ஏற்படுத்தும் நோயாகும்.

 
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தர்மபுரி சித்தேரிமலை பஞ்சாயத்து கருக்கம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமாரின் குழந்தை பாதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டு பிபிசி தமிழுக்காக அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் மலையடிவாரத்தில் உள்ள புதுப்பட்டி - பாப்பம்பாடி கிராமத்திற்கு வரச் சொன்னார். அந்த கிராமத்திற்கு பயணப்பட்டோம்.

கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார், நதியா தம்பதியினர் சிமெண்ட் கலவை படிந்த உடுப்போடு வரவேற்றனர்.

“என் சொந்த ஊர் சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருக்கம்பட்டி. அங்கு 35 வீட்டுக்கு மேல் இருக்கு, யாருக்கும் கல்வி பெருசா இல்ல. எல்லாரும் கூலி வேலைதான் செஞ்சுட்டு இருக்காங்க. மூணாவது வரைதான் படித்து இருக்கிறேன்.

கொஞ்சம் மேட்டுக்காடு நிலம் இருக்கு. அதுல பண்ணையம் எல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு தொடக்கப்பள்ளி இருந்துச்சு அதுவும் ஏழு, எட்டு வருஷத்துக்கு முன்னாடி போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லைன்னு மூடிட்டாங்க. நான் 2016இல் எங்க ஊர் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்தேன். இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை, முதல் ஆண் குழந்தையான சக்திக்குத்தான் தலசீமியாவால் சிக்கல் செல் அனிமியா பாதிக்கப்பட்டு உள்ளது," என்றார் சிவக்குமார்.

முதல் ஒன்றரை வருடம் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது, ஒரு நாள் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு சுயநினைவு இன்றி மயங்கி விட்டான் என்றும் சிவகுமார் அந்த நாளை விவரிக்கிறார்.

"எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பேருந்து போக்குவரத்து வசதி எல்லாம் இல்லை. டூவீலர் மூலம் மலையிலிருந்து கீழே வந்து அதன்பிறகு வாடகை கார் மூலம் சேலம் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினோம்.

அதன்பிறகு, சென்னை அடையாறில் உள்ள The Voluntary Health Service Chennai மருத்துவமனையில் பரிசோதனை செய்த போதுதான் தலசீமியா என்னும் சிக்கல் செல் அனிமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்," என்றார்.

 
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

கல்வி, மருத்துவத்திற்காக மலையில் இருந்து வெளியேறிய பழங்குடிகள்

இந்த நோயிலிருந்து முற்றிலுமாக குணப்படுத்த வேண்டும் என்றால் ரூ. 27 லட்சம் ஆகும் அல்லது மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்ற இரண்டு முடியாத வாய்ப்புகள் தனக்குத் தரப்பட்டன என்கிறார் சிவக்குமார்.

"கூலி வேலைதான் செய்கிறேன். நாங்க வேலைக்குப் போனால் மட்டும்தான் வீட்டில் அடுப்பு எரியும். 27 லட்சம் கொடுத்து நோயைக் குணப்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை. அதுமட்டுமின்றி சென்னைக்கு வந்து போகவும், மருந்து மாத்திரை வாங்கவும் மாதம் 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறதுனு சொன்னதும் தர்மபுரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

நாங்களும் மலையில் இருந்து சிகிச்சை பெற முடியாது என்பதாலும், பசங்க படிக்கிறதுக்கு எங்க ஊர்ல ஸ்கூல் இல்லாத காரணத்தாலும், கீழ வந்துட்டோம். எங்க சொந்தக்காரர் பாப்பம்பாடியில் இருந்தார். அவர் வெளியில் நிலம் வாங்கிக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார். அவரது வீடு காலியாக இருந்தது அதில் நாங்கள் வாடகைக்கு இருக்கிறோம்.

குழந்தைகள அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறோம். இங்கு இருப்பதற்குக் காரணம் பசங்க படிப்பதற்கும், மருத்துவமனைக்குச் சென்று வரவும் வசதியாக இருப்பது மட்டுமே. வெளியில் எங்கும் சென்று தங்கி வேலை செய்ய முடியாது.

ஏனென்றால் குழந்தைக்குத் திடீரென சளி, காய்ச்சல் வந்துவிடும். அப்போது, அவனது உடலில் இருக்கும் ரத்தம் எங்கு போகிறது என்று தெரியாது. அவனால் எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்து போய் விடுவான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலுமே சளி, காய்ச்சலை சரி செய்துவிட்ட பிறகுதான் ரத்தம் ஏற்றப்படும். தருமபுரியிலுமே காலையில் அனுமதித்தால், அனைத்து பரிசோதனைகளையும் செய்துவிட்டு 11 மணிக்கு மேல்தான் ரத்தம் ஏற்றத் தொடங்குவார்கள், மாலை 4 மணி வரை ரத்தம் ஏற்றப்படும். அதன்பிறகுதான் கிளம்பி வீட்டுக்கு வருகிறோம். மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதற்கு என்ன தீர்வு என்றே தெரியலவில்லை,” என்று கண்கள் கலங்கக் கூறினார் சிவக்குமார்.

 

மலை கிராமங்களில் பரவியுள்ள தலசீமியா நோய்

மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் ஏற்றுவதற்கு வந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியை அடுத்த அத்திவீரம்பட்டியைச் சேர்ந்த நவீனாவின் தாய் சோனியாவிடம் பேசினோம்.

“கடந்த 2013ஆம் ஆண்டு தாய்மாமனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை. முதலாவதாகப் பிறந்த ஆண் குழந்தை நன்றாக இருக்கிறான். இரண்டாவது பிறந்த நவீனாவுக்கு ஏழாவது மாதத்தில் திடீரென வயிறு வீக்கம், காய்ச்சல் ஏற்பட்டது.

உடனடியாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமணையில் சேர்த்து பரிசோதனை செய்ததில் தலசீமியா நோய் தாக்கம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. எதனால் இந்த நோய் தாக்குகிறது என்று டாக்டர்களிடம் கேட்டோம், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துகொண்டால் இந்த நோய் வரும் என்றார்கள்.

நாங்கள் ஐந்து தலைக்கட்டாக நெருங்கிய உறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டுள்ளோம். அதாவது எங்கள் தாத்தனுக்கு தாத்தன் முதல் எங்க அப்பா, நான் வரை அக்கா மகளையும், தாய்மாமன், தாய்மாமன் மகனை திருமணம் செய்துள்ளோம்.

ஏற்கனவே, எங்கள் மூத்தார் (கணவருக்கு பெரியப்பா மகன்) மகனுக்கு தலசீமியா உள்ளது. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் குழந்தைக்கு பாதித்த பிறகுதான் இதன் விளைவு எங்களுக்குப் புரிந்தது. சென்னை மருத்துவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தனர்.

அப்போதிருந்து இப்போதுவரை தர்மபுரி மருத்துவமனையில் ரத்தம் ஏற்றி வருகிறோம். ஆனால், குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்து முழுமையாகக் குணமடைய வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனையில் 30 லட்சம் செலவாகும் என்று சொல்கிறார்கள்.

அதுவும், எலும்பு மஜ்ஜை சரியாகப் பொருந்தினால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்கிறார்கள். தமிழக அரசின் பொது மருத்துவக் காப்பீட்டின் மூலம் எவ்வளவு தூரம் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை,” என்றார்.

 
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி தெரிவித்தார்.

"தலசீமியா என்பது ஒரு மரபணு வியாதி. ரத்தம் உருவாக ஒரு புரதம் சரியாக உற்பத்தி ஆகாததால், இது ரத்த சோகையின் ஒரு வகையைச் சார்ந்தது. இந்த நோய் ஏற்பட்டு குழந்தைகளுக்கு வயிறு வீக்கம், ரத்த சோகை போன்றவை ஏற்படும்.

இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 15 - 20 நாட்களுக்கு ஒருமுறை ரத்தம் கொடுக்க வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழக அரசு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ. 62 லட்சம் மதிப்பில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலசீமியா நோய்க்கான சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது.

தலசீமியா மையத்தில் தலசீமியா நோயைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகள், தலசீமியா நோய் புரதக் குறைபாட்டைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கருவி, ரத்த செல்களை பிரித்துச் சேகரிக்கும் கருவி, ரத்த செல் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கும் நவீன கருவிகளை வழங்கி, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வது தலசீமியா ஏற்படுவதற்கான ஒரு காரணம் என்று மருத்துவர் அமுதவல்லி கூறுகிறார்.

"ஹீமோகுளோபினோபதி என்பது ரத்தம் சம்பந்தப்பட்ட மரபணு நோய். இது ரத்த சொந்தத்திற்குள் திருமணம் செய்யும்போது ஒரே மாதிரியான மரபணு கொண்ட தம்பதிகள் தலசீமியாவுடன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் மலையில் வாழும் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு கர்ப்பத்திலும் 25 சதவீதம் முழுமையாக தலசீமீயா பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கவும், 50% தலசீமியா மைனராக குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த நோயில் ரத்த சிவப்பணுக்கள் துரிதமாக அழிந்துவிடும். இதன் விளைவாக ரத்த சோகையும் அதனால் ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் காணப்படும் இரண்டு பொதுவான ஹீமோகுளோபினோபதிகள் தலசீமியா மேஜர் மற்றும் சிக்கல் செல் ரத்த சோகை ஆகும்," என்று விளக்கினார்.

 
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

சிக்கல் செல் என்னும் ரத்த சோகை நோய்

சிக்கல் செல் ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அரிவாள் போன்று மாறி சிறிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும்.

இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் குறைந்து சிசுக்களுக்கான பிராண வாயுவின் அளவு குறையும். அதனால் அவர்களுக்குத் தீவிரமான உடல் வலி, உறுப்புகளில் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் எளிதாக நோய்த்தொற்று ஏற்படும்.

தலசீமியா என்னும் மேஜர் நோய்

தலசீமியா மேஜர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிதீவிர ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதால் உயிர் வாழ மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும். அவ்வப்போது ரத்தம் ஏற்றுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கிறது.

இதனால் இதயம், கல்லீரல் மற்றும் நாள விலாசரப்புகளில் இரும்புச்சத்து அதிகரிப்பதால் பல பின்விளைவுகள் ஏற்படும். அதனால் இந்த நோயாளிகளுக்கு இரும்பு சத்தைக் குறைக்கும் மருந்துகள் தினஃதோறும் கொடுப்பது அவசியம்.

ஹெமடோஃபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை (எலும்பு மச்சை மாற்று சிகிச்சை) செய்வதன் மூலம் தலசீமியா நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். ஆனால் அதற்கு எச்.எல்.ஏ (HLA) பொருத்தம் உள்ள ஒருவர்தான் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முடியும்.

ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி சிகிச்சை மையம்

மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினாபதி சிகிச்சை மையம் உள்ளது. இது பத்து படுக்கைகளைக் கொண்ட முழு வசதியுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரே கூரையின் கீழ் குழந்தைகளுக்கு மருத்துவமனை மற்றும் பொது மருத்துவத் துறையின் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி சிகிச்சை மையத்தில் தருமபுரி மாவட்டம் அருகில் உள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் சுமார் 245 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் தலசீமியா(131), சிக்கல் செல் ரத்தசோகை(15), சிக்கல் தலசீமியா நோய்(12), பிற ஹீமோகுளோபினோபதி (6), ஹீமோபிலியா - ஏ (58), ஹீமோபிலியா பி (15), பிற காரணி குறைபாடு (8), உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடங்குவர். இந்த சிகிச்சை மையத்தில் ஒரு மாதத்திற்குத் தோராயமாக 120 முதல் 140 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹீமாகுளோபினோபதி நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரத்த வங்கியில் ஆர் ஹெச் தட்டச்சு மற்றும் குறுக்குப் பொருத்தம் செய்யப்பட்டு வாழ்வில் ரத்தம் மாற்றம் வழங்கப்படுகிறது.

அதிகமான இரும்புச் சத்து சேர்தலின் காரணமாக ஏற்படும் பின்விளைவுகளைத் தடுக்க இரும்பு கீலேட்டர் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஹீமோபிலியா நோயாளிகளுக்கு ரத்த கசிவைக் குணப்படுத்துவதற்கான காரணிகள் ஏற்றப்படுகிறது.

நோயாளிகளுக்கு காரணி VIII, ஹீமோபிலியா பி நோயாளிகளுக்கு காரணி IX மற்றும் காரணி தடுப்பான்களைக் கொண்ட ஹீமோபிலியா ஏ மற்றும் பி நோயாளிகளுக்கு காரணி VII ஏற்றப்படுகிறது. ஹீமோபிலியா நோயாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பிசியோதெரபி சிகிச்சை முறைகள் விளக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் ஹீமோபிலியா முதற்காப்பு சிகிச்சை திட்டத்தைச் செயல்படுத்தி ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான முற்காப்பு சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே அதைத் தடுக்கும் விதத்தில் காரணிகளைச் செலுத்தி குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு வாழ வழி வகுக்கிறது. இதுவொரு பகல் நேர பராமரிப்பு மையமாக இருப்பதால் இது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தைக் குறைக்கிறது. நோயாளிகளுக்கு குறுக்கு நோய் தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது. பயண நேரம் மற்றும் பெற்றோரின் நிதி செலவுகளைப் பெருமளவு குறைக்கிறது.

 

பள்ளி மாணவ மாணவிகளே ஹீமோகுளோபினோபதி நோயைக் கண்டறியும் திட்டம்

தமிழ்நாடு அரசால் தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளிடையே மற்றும் 14 வயதுக்கு மேல் உள்ள பள்ளிக்குச் செல்லாத திருமணமாகாத வளர் இளம் பருவத்தினர் இடையேயும் ஹீமோகுளோபினோபதி சிக்கல் செல் மற்றும் தலசீமியா நோயைக் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு தலசீமியா சிக்கல் செல் டிரெய்ட் இருப்பது கண்டறியப்பட்டு மரபணு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

 
மலைவாழ் மக்களை தாக்கும் தலசீமியா

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஹீமோகுளோபினாபதியை கண்டறியும் திட்டம்

அதேபோல தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஹீமோகுளோபினோபதியை கண்டறியும் HPLC பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தல சீமியா சிக்கல் செல் டிரெய்ட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் கணவர்களுக்கும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தம்பதியர் இருவருக்கும் தலசீமியா/ சிக்கல் செல் டிரெய்ட் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சம்மதத்துடன் கருவில் உள்ள குழந்தை நோய்வாய்ப்பட்டு உள்ளதா என்பதைக் கண்டறிய அம்மனியோசென்டேசிஸ் என்னும் பரிசோதனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

கருவின் மரபணு ஆய்வு முடிவுகள் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றாலும் அல்லது இருந்தாலும் தாய் தனது கர்ப்பத்தைத் தொடர அறிவுறுத்தப்படுகிறார். பிரசவத்திற்குப் பிறகு குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு இருந்தால் கருக்கலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் தலசீமியா மேஜராக குழந்தை பிறப்பது தடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை ஐந்து குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழுமையாகக் குணப்படுத்தப்பட்டது.

 

தற்போது தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும் என்ற நிலையை மாற்றி, 40 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தலசீமியா நோயை முழுவதுமாகக் குணப்படுத்துவதற்குத் தேவையான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்கி, இலவசமாகவே இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் செய்ய்யபடுவதாகத் தெரிவித்தார்கள்.

விழிப்புணர்வு இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தில் 40 லட்சம் வழங்கப்படுகிறது என்பதும், இலவசமாக எலும்பு மஜ்ஜை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதும் பரவலாகத் தெரியாமலேயே இருந்து வருகிறது.

அரசு வழங்குகின்ற 40 லட்சம் மருத்துவ காப்பீட்டு பணத்தை முழுவதுமாகப் பயன்படுத்தினால், தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த தலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைப் பெற முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cp9pn70k4z1o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.