Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமூலர் பெரியார் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                   திருமூலர் பெரியார்

                                                                                       -       சுப. சோமசுந்தரம்

 

சமீபத்தில் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். பெரியாரும் அச்செய்தியைத்தான் கூறுகின்றார். சொல்லும் முறைதான் வேறு. "கடவுளை மற, மனிதனை நினை" என்பவர் பெரியார். "மனிதனை நினை, அதன் வாயிலாய்க் கடவுளை நினை" என்று மாற்று மொழியில் சொல்பவர் திருமூலர். மனிதனை முன்னிறுத்துவதில் இருவரும் ஒரே அணிதான். இறையிருப்புக் கோட்பாட்டில் மட்டுமே எதிரெதிர் அணி. திருமூலர் சிவத்தில் திளைத்து இறையிருப்பிலும், பெரியார் இறை மறுப்பிலும் நிற்கின்றனர். இவ்விடயத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமையில் வேற்றுமை அமைந்திருக்கிறது எனலாம். ஆனால் இருவரிடமும் வேற்றுமையில்லாத ஒற்றுமை ஒன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது - அது பார்ப்பனியம். பார்ப்பனிய எதிர்ப்பில் முற்றிலும் கருத்தொற்றுமை இருப்பினும், ஒருவர் அதனை மிதமாகவும் மற்றவர் சற்றே தீவிரமாகவும் அணுகக் காணலாம். பார்ப்பனிய எதிர்ப்பைப் பொறுத்தமட்டில், பரவலாக அறியப்பட்ட - அதாவது போலியாகப் பரப்பப்பட்ட - பிம்பத்திற்கு மாறாக பெரியார் மிதவாதியாகவும் திருமூலர் தீவிரவாதியாகவும் திகழக் காணலாம். பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பையும், திருமூலர் பார்ப்பன எதிர்ப்பின் மூலமாகப் பார்ப்பனிய எதிர்ப்பையும் முன்வைக்கக் காணலாம். பெரியார் காலத்தையும் விட திருமூலர் காலத்தில் பார்ப்பனியத்தின் தீவிரம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்பதையே அவரது தீவிரப் பார்ப்பன எதிர்ப்பு காட்டுவதாகக் கொள்ளலாம். பெரியார், "பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால், பாம்பை விட்டு விடு; பார்ப்பனனை அடி" என்று கூறியதாகவும் இன்ன பிறவுமான கட்டுக்கதைகளைக் காலங்காலமாய்ப் பெரியார் எதிர்ப்பாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர்; அவற்றை இப்போது புறந்தள்ளுவோம்.
       
          எந்தவொரு சமூகத்தையும் ஓர் இனக்குழு என்ற அளவில் பழித்தல் பண்பான செயல் என்று பொதுவாகப் பண்புடையோர் கருதுவதில்லை. அதேவேளை திருமூலரையும் பெரியாரையும் விட பண்பட்டோர் யாரும் என்னைப் போன்று பலருக்கும் தென்படவில்லை என்பது எங்களுக்கான நகைமுரண். அவ்விருவரும் வேறு எந்த சமூகக் குழுவையும் பழிக்கவில்லை என்பதும் குறிக்கத்தக்க ஒன்று. அவர்கள் இருவர் மட்டுமின்றி குறுந்தொகைக் காலத்திலிருந்து திருமந்திரம், விவேக சிந்தாமணி வழியாகப் பெரியார் காலம் (நமது காலம்தான்) வரை சான்றோர் பெருமக்களால் பார்ப்பனியம் வசை பாடப்பட்டதுஅதற்கான காரணங்கள் பல தளங்களில் பேசப்பட்டதாலும், அவற்றை மேலும் அலசுவது இங்கு நமது நோக்கமில்லை என்பதாலும் நாம் அதனைக் கடந்து மேற்கொண்டு செல்வது இப்போது பொருந்தி அமையும்.

           நான் தொடக்கத்தில் கூறிய முகநூல் கட்டுரையில் 'மனிதனை நினைக்கும்' மானுடம் பற்றிய திருமூலரின் அணுகுமுறையை மட்டும் தொட்டுக் காட்டியிருந்தேன். திருமூலரும் பெரியாரும் முழுமையாக உடன்படும் பார்ப்பனிய எதிர்ப்பையும் சுட்டிக் காட்டுவது "திருமூலர் பெரியார்" என்று நான் எழுத நினைக்கும் தலைப்பிற்கு ஏற்றதாய் அமையலாம். முதலில் மானுடம் பற்றி திருமூலர் தொட்டு நான் முகநூலில் எழுதியதை இங்கு மீள்பதிவாக இட்டு, பின்னர் பார்ப்பனியத்திற்கு வரலாமே !

         "மனிதம் போற்றுதும்; இறை போற்றுதும்" என்னும் கருத்து இன்றைக்கு மானிடர்க்குக் கைகூடுவது வியப்பன்று. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே திருமூலருக்குக் கைகூடியது வியப்பன்றி வேறென்ன !

  ‌       "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".
        -------- திருமந்திரம், பாடல் 1857.

முதற் குறிப்பு :-
திருமூலர் காலத்தில் கோயிலில்  சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின்  ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது.

பாடற் பொருள் :-
படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும்.

பின் விளக்கம் :-
இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில்  உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார்.
" நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள்  ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீர்கள்" - (மத்தேயு 25:40) எனக் கிறித்துவத்திலும், "தம் பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக பந்துக்களுக்கும்அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வோரே நன்னெறியாளர்கள், முத்தஹீன்கள் (இறை விசுவாசிகள்)" (திருக்குர் ஆன் 2:177) என்று இஸ்லாத்திலும் உள்ளவை இங்கு உணரத் தக்கவை.

          திருமூலர் மேலும் நினைவூட்டினார் :

"தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"
   --------------திருமந்திரம், பாடல் 3065.

பாடற் குறிப்பு :
புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான  எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்....

பாடற் பொருள் :
தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த  ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான  இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன்  எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.

அத்தோடு விட்டாரா திருமூலர் ? ஊனுக்குள் ஒளிந்துள்ள ஈசனைக் காட்டாமல் எப்படி நம்மைக் கடந்து போவார் ?

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே"
          -----திருமந்திரம், பாடல் 1823.

இத்தனை எழுதிய பிறகு மேற்குறிப்பிட்ட எளிமையான வரிகளையுடைய பாடலுக்காவது  விளக்கத்தை வாசிப்போர்க்கு விட்டு விடுகிறேனே ! ஒரு கணித ஆசிரியனாக, இரண்டு கணக்குகள் போட்டுக் காட்டிவிட்டு மூன்றாவதை மாணாக்கர்க்குப் பயிற்சியாகக் கொடுத்துதானே பழக்கம் !

உண்மையில் "கடவுளை மற, மனிதனை நினை" என்ற தந்தை பெரியார்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதை முதலில் சொன்னால், 'வாசிப்பவர்களில்' சிலர் அத்தோடு நம்மைக் கடந்து சென்று விடுவார்கள் என்று நினைத்தேன்; திருமூலரைக் கேடயமாய் முதலில் நிறுத்தினேன். செய்திதானே போய்ச் சேர வேண்டும் என்பதில் பெரியாருக்கும் உடன்பாடு உண்டு.

                இனி நாம் சொன்னவாறு பார்ப்பனியத்திற்கு வருவோம். இதில் பெரியாரின் நிலைப்பாட்டை சுருக்கமாகச் சொல்வதானால், அவர் பார்ப்பனிய எதிர்ப்பை முன்னிறுத்தினாரே தவிர பார்ப்பனர் என்னும் தனி மனிதர்களை எதிரிகளாகக் கருதியதில்லை. நம் அனைவரையும் போன்று பார்ப்பனர் சிலரும் அவரிடம் நட்பு பாராட்டியது உண்டு; மதித்ததும் உண்டு. பார்ப்பனர் குறித்த அவரது நிலைப்பாட்டை பின்வரும் நிகழ்வால் விளக்கலாம் :
         1929 ல் நெல்லூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சியில் பார்ப்பனர் சிலரைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடந்தன. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தை பெரியார், "நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதம் இல்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கினை அளிக்க நாம் தயாராகவே இருக்கிறோம். அரசியலில் நன்மையான காரியங்களுக்கு அவர்களுடன் ஒத்துழைக்கவும் அவர்களது ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்துக்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறேன்" என்று முழங்கினார் (குடியரசு தலையங்கம்; 22-09-1929).

            அந்தணர், பார்ப்பனர் என்ற தொழில் சார்ந்த சொற்கள் சங்க காலம் முதல் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்தவையே. அவர்கள் இறைப் பணியில் ஈடுபட்டு இந்த சமூகத்தினர். புலம்பெயர்ந்து தமிழினத்திற்கு வந்த ஆரியர் அரச அதிகாரத்திற்கு அருகிலும் மக்கள் அதிகாரத்தின் மற்றொரு மையமான கோயில்களிலும் நுழைவதற்கு ஏதுவாகத் தமக்கும் பார்ப்பனர் என்று அரிதாரம் பூசிக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் பிரம்மத்திலிருந்து தோன்றியோர் என்று தம்மை முதன்மைப்படுத்த அன்னார் பிராமணர் என்ற அவதாரம் எடுத்திருப்பார்கள். "அறவாழி அந்தணர்" என்றும் "அந்தணர் என்போர் அறவோர்" என்றும் தமிழ்ச் சான்றோரால் கொண்டாடப்பட்டோர் இந்தப் பிராமணராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தணர் அல்லது பார்ப்பனர்க்கு உரைக்கப்பட்ட உயர் ஒழுக்கங்கள் இவர்களுக்கானது இல்லை. அதனால்தான் திருமூலர் இவர்களை 'பேர் கொண்ட பார்ப்பான்' (பார்ப்பான் என்ற பெயர் கொண்டவன்) என்று குறிக்கிறார் போலும் ! நிற்க.


பஞ்சினாலான நூலும் (பூணூலும்) மயிற்கற்றையாலான சிகையும் (குடுமியும்) கொண்டதால் மட்டும் இவர்கள் அந்தணர் ஆகிவிட முடியுமா என்று கேட்கிறார் திருமூலர். நூல் என்பது தத்துவ ஞானத்தின் (வேதாந்தம்) குறியீடு; சிகை என்பது மெய்யறிவுக்கானது. நூலுடைய அந்தணர்க்கான சொல் (வரையறை) இதுவே எனும் பொருளில் திருமூலர் உரைப்பது :

"நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே".           
                   (திருமந்திரம் - 230)

             திருமூலரின் பார்ப்பன எதிர்ப்பில் எவ்வித சமரசமும் இல்லாத அளவிற்கு அன்று நிலைமை இருந்திருக்க வேண்டும். இறையியலில் பகுத்தறிவாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமூலர் கையறு நிலையில் வசவுச் சொற்களால் அவர்களை அர்ச்சிக்கிறார். முதலில் பிராமணரை மூடர் என்கிறார்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே"                          
                   (திருமந்திரம் - 231)

பொருள் : உண்மையின்றி, தமக்கென கொள்கைத் தெளிவின்றி, உலகோர்க்குப் பொருந்தி வருபவற்றில் பொருந்துதல் இன்றி, இறைவனிடத்தில் உண்மையான பக்தி உணர்வின்றி, இறை பற்றிய மெய்யறிவின்றி பித்தம் பிடித்த மூடரே பிராமணர் ஆவர்.

             பெரியார் இயக்கத்தினர் மீது பொல்லாப் பழி சுமத்தும் பெரியார் எதிர்ப்பாளர்கள் அக்காலத்தில் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று, எங்கோ ஓரிடத்தில் பிராமணர்களின் பூணூலை அறுத்தார்கள் என்பது. அவர்கள் சொன்னது எங்கோ ஆத்திரம் கொண்டு அறிவிழந்து யாரோ செய்திருப்பினும், பெரியார் வன்முறையை ஒருபோதும் ஆதரித்ததில்லை. எதிரிகள் வன்முறையைக் கையிலெடுத்த போது கூட அவர் அதனை அமைதியாகவே எதிர்கொண்டார். கீழ்க்கண்ட பாடலில் திருமூலர் பிராமணர் தம் நூலும் சிகையும் அறுத்தல் நலம் என்று கனல் தெறிக்க விடுகிறார். பிராமணர்கள் தாமே இவற்றை நீக்குதல் நலம் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

"மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம்பரநூற் சிகையறுத் தால் நன்றே"             
                   (திருமந்திரம் - 241)

பொருள் : மூடத்தனத்தைக் கைவிடாதோர் (அஃதாவது, தெளிந்த அறிவில்லாதோர்) குடுமி (சிகை), நூல் (பூணூல்) முதலானவற்றை அணிந்திருப்பதால் இம்மண்ணுலகம் குறைபடும் (வாடும் புவி). பெருமை பெற்ற வாழ்வினைக் கொண்ட மன்னனும் பீடு நடையின்றிப் போவான் (அதாவது பெருமை இழப்பான்). ஆகையால் இதனை ஆய்ந்து அறிந்து அவர்தம் ஆடம்பரப் பூணூலையும் சிகையையும் அறுத்தல் நன்று (மன்னனை அறுக்கச் சொல்கிறாரா அல்லது அத்தகைய மூடரே அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறாரா என்பது வாசிப்போரின் மனநிலையை பொறுத்தது).

       சிகை, நூலைத் திருமூலர் விட்ட பாடில்லை.

"ஞானமி லாதார் சடைசிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே
                    (திருமந்திரம் - 242)

பொருள் : அந்தணர்க்குரிய ஞானமின்றி சிகையும் பூணூலும் விரும்பியணிந்து ஞானிகள் போல் நடிக்கின்ற பிராமணர்களை மன்னன் (நரபதி) உண்மையான ஞானிகள் கொண்டு சோதித்து அவர்களுக்கு ஞானத்தைப் போதிப்பது நாட்டிற்கே நன்மை பயக்கும்.

          தீயவன் ஒருவனை "நாசமாய்ப் போவான்" என்று திட்டுவது நமது கையறு நிலையின் வெளிப்பாடு. நாம் திட்டுவதால் எதுவும் நிகழப் போவதில்லை என்பது நமது பகுத்தறிவுக்கு எட்டும் விடயமே ! இருப்பினும் நம்மில் பெரும்பாலானோர் திட்டாமல் விடுவதில்லை. அது போலவே திருமூலர் வசை பாடுகிறார்.

"பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே"              
                  (திருமந்திரம் - 519)

பொருள் : பார்ப்பான் என்று பெயர் சூட்டிக் கொண்டவன் (ஆனால் மெய்ப்பொருளில் பார்ப்பான் அல்லாதவன்) இறைவனுக்கு அர்ச்சனை செய்தால், போரில் வெற்றிவாகை சூடும் வேந்தனுக்குப் பொல்லாத வியாதி வந்து சேரும்; பார் புகழும் நாட்டுக்கே பஞ்சம் உண்டாகும்; இதனைத் துலாக்கோலன்ன சிறப்பினைப் பெற்ற (சீர் கொண்ட) நந்தி தெரிந்து உரைத்தான் (ஏதோ நான் உரைத்தேன் என்று நினைக்க வேண்டாம்).

               மானுடத்திற்கு ஊறு விளைவிக்கும் கருத்து அமைந்த ஒரு குழு மனப்பான்மைக்கு எதிரான அறச்சீற்றமே திருமூலர் மற்றும் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு. அச்சீற்றத்தின் அளவும் தன்மையும் வேறுபடலாம். இவ்வேறுபாடு காலத்தாலும் சூழலாலும் தீர்மானிக்கப்படுவது. முன்னம் சொன்ன திருமூலரின் இறையிருப்பும் பெரியாரின் இறை மறுப்பும் மானுடத்திற்கானவையே ! எனவேதான் இருவரும் காலனை வெல்லாவிட்டாலும் காலத்தை வென்றவர்கள்.

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பேராசிரியரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.