Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது” - அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழகமுதல்வர் ஸ்டாலின் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 NOV, 2023 | 12:45 PM
image

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். அப்போது பேசிய முதல்வர், "எனது உடல் நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. இது தொடர்பாக சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.

 

ஆனால் ஆளுநர் ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால், சட்டமுன் வடிவுகளை திருப்பி அனுப்பியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவர் அவமதிக்கிறார் எனப் பொருள். இது சட்டவிரோதம், மக்கள் விரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம், அதையும்விட சட்டமன்றத்தின் இறையான்மைக்கு எதிரானது.

 

மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை தமிழக அரசால் செயல்படுத்த முடியும். மத்திய அரசிடம் ஆளுநருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ்நாட்டுக்கான நிதியை பெற்றுத்தர முயற்சிக்கலாம். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை பெற்றுத் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்று தரலாம். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்கலாம். ஆனால் இதில் எதையும் செய்யாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.

 

விழாக்களுக்கு செல்கிறார்.செல்லட்டும் ஆனால் விதண்டாவாதமாக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொது வழியில் விளக்கம் அளிப்பதும், விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு கிடையாது, தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரின் அபத்தமான கருத்துக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மறுப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.

 

தமிழ்நாடு வளர்ந்து வருவதை காண பொறுக்காமல் ஆளுநர் இத்தகைய செயல்களை செய்து வருவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறாக ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு இந்திய குடியரசு தலைவர் அவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி இருக்கிறார்கள். நானும் இந்திய பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் எந்தவித பயனும் தராததால்தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கட்சி கதவுகளை தட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

 

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் " என்று கூறினார்,

 

முதல்வர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார்.

https://www.virakesari.lk/article/169617

  • மோகன் changed the title to “ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது” - அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழகமுதல்வர் ஸ்டாலின் பேச்சு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றியது ஏன்? அடுத்தது என்ன?

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழக அரசின் முக்கிய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆளுனர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் மோதல் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுமார் 22 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்தன.

இந்த மசோதாக்களில் 10 மசோதாக்களை நவம்பர் 13ஆம் தேதி ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதை மாற்றி, மாநில முதல்வர்களே வேந்தர்களாக இருக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சட்டத்தையும் திருத்துவதற்கான மசோதாக்கள்தான் இந்த பத்து மசோதாக்கள்.

மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டவுடனேயே, மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்பப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி, தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

முதலில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசினார்.

"இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

“I withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023ஆம் தேதியன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார் ஆளுநர். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர்.

எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.

சட்ட முன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதமாகும்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், அப்படி எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும் - விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.

பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குமான பிரச்சினை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

தமிழ்நாடு வளர்ந்திருப்பதை - வளர்வதைக் காணப் பொறுக்காத காரணத்தினால்தான் என்னவோ, ஆளுநர் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் எவ்வித பயனையும் தராததால்தான், தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், ஆளுநர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200ன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத்தான் உள்ளது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு தனித் தீர்மானத்தை வாசித்தார். அந்தத் தனித் தீர்மானத்தில் பத்து மசோதாக்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு அவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

முதலமைச்சர் பேசி முடித்ததும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பா.ஜ.கவின் சார்பில் நயினார் நாகேந்திரன் பேசினார். "தமிழ்நாட்டில் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளை மூடி மறைக்கத்தான் ஆளுநர் விவகாரத்தை இந்த அரசு கையில் எடுத்திருக்கிறது என்று கூறினார். இதற்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.

அ.தி.மு.கவின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும்போது, ஏற்கனவே 1990களில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதே போன்ற சட்டத்தைக் கொண்டுவந்ததாகவும் அப்போது தி.மு.க. அதனை எதிர்த்தாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அ.தி.மு.க. அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது.

இதற்குப் பிறகு, முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானமும் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.

 
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்

பட மூலாதாரம்,TNDIPR

படக்குறிப்பு,

தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தின் பின்னணி

தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது.

இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது.

இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். வழக்கு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில்தான் நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது.

 
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்
படக்குறிப்பு,

ஆளுனருக்கும், தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

அடுத்தது என்ன நடக்கக் கூடும்?

"மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் உறவு இவ்வளவு மோசமாகியிருக்கும் நிலையில், நீதிமன்றம் நெருக்கும் நிலையில் வேறு யாராவதாக இருந்தால் மத்திய அரசிடம் தெரிவித்து வேறு மாநிலத்திற்குச் சென்றிருப்பார்கள். ஆனால், தற்போதைய ஆளுநர் இங்கேயே நீடித்து குடைச்சல் கொடுக்க விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த மசோதாக்களை தன்வசமே வைத்திருந்து காலத்தை நீட்டிக்கவே விரும்பினார். ஆனால், விரைவில் உச்ச நீதிமன்ற வழக்கு வருகிறது என்பதால் இப்போது மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், அதையும் மீறி மத்திய பா.ஜ.கவின் பிரதிநிதிபோல அவர் செயல்பட்டால் சிக்கல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

 
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

"சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நிராகரிப்பா, நிறுத்திவைப்பா?": மூத்த பத்திரிகையாளர் எழுப்பும் கேள்வி

ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு சட்டச் சிக்கல் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"ஒரு மசோதாவை ஆளுநர் நிராகரித்துத் திருப்பி அனுப்பினால், அதனை திரும்பவும் சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். ஆனால், ஆளுநர், பத்து மசோதாக்களைக் குறிப்பிட்டு 'I withhold assent” என்று கூறியிருக்கிறார். ஒரு விஷயத்தில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, அது நிராகரிக்கப்பட்டதாகக் கருதி, மீண்டும் எப்படி நிறைவேற்றி அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் ஷ்யாம்.

இது ஒரு மிகப் பெரிய சட்டச் சிக்கல் எனக் குறிப்பிடும் ஷ்யாம், தமிழக அரசு இப்போது அனுப்பும் மசோதாக்களையும் அப்படியே வைத்திருப்பார். ஆகவே இதற்கு உச்ச நீதிமன்றம்தான் விடைசொல்ல முடியும் என்கிறார்.

1990களில் அ.தி.மு.க. இது போன்ற சட்டம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பியபோது ஆளுநர் நிராகரித்த விவகாரம் குறித்துக் குறிப்படும் ஷ்யாம், அப்போது இருந்த அரசியல் சூழலே வேறு என்கிறார்.

"தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர்களே வேந்தர்களாக இருக்கும் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். அந்தச் சட்டத்தை அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி நிராகரித்தார். நிராகரித்தது குறித்துப் பேட்டியளித்த அவர், ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் வேந்தராக இருந்தால் பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி செய்யாது என்று கூறினார். ஆனால், இதற்குச் சில மாதங்களுக்குள் மத்தியில் இருந்த நரசிம்மராவ் அரசுடன் ஜெயலலிதாவின் உறவு மேம்பட்டது. 1996 தேர்தலில் காங்கிரசும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைத்தன. இதனால், இந்த மசோதாவை ஜெயலலிதாவும் பிறகு வலியுறுத்தவில்லை" என்கிறார் ஷ்யாம்.

இதற்கு முன் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு, இதற்கு முன்பும் வேறு சில மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

1. நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இளநிலைப் படிப்புகளுக்கு நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அல்லாமல் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வழிவகுக்கும் மசோதா கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா செப்டம்பர் 18ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இப்போது அந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

2. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அக்டோபர் 1ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இதற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையில் அவசரச் சட்டமும் காலாவதியானது. இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் மசோதாவை பரிசீலனையில் ஆளுநர் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதற்குப் பிறகு இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் மார்ச் 23ஆம் தேதி அந்த மசோதா திரும்பவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடின. வழக்க விசாரித்த உயர் நீதிமன்றம் சட்டம் செல்லும் எனக் கூறியது. ஆனால், திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் குறிப்பிட்டது.

https://www.bbc.com/tamil/articles/c878pnk4417o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.