Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

on November 21, 2023

thequint_2022-07_345b3c17-0660-4859-ac69

Photo, THEQUINT

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

விக்கிரமசிங்கவை எதிர்த்து வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சில வாரங்களுக்கு முன்னர் கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். அடுத்த ஜனாதிபதியாக விக்கிரமசிங்க போட்டியின்றி தெரிவாகவேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருக்கிறது போலும்.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மகாநாட்டில் உரையாற்றியபோது அரசியலமைப்பின் பிரகாரம் 2024 பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் உள்ளூராட்சித் தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி அந்தத் தேர்தல்களுக்கு தயாராகுமாறு தனது கட்சியினரை கேட்டுக்கொண்டாரே தவிர கட்சியின் வேட்பாளர் பற்றி எதுவும் கூறவில்லை.

தேர்தல்களை இலக்குவைத்தது என்று எதிரணி அரசியல் கட்சிகளினால் வர்ணிக்கப்படும் 2024 பட்ஜெட்டை கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி மறுநாள் மாலை தனது செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தார். ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு  பதிலளித்த அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதை உறுதிசெய்யவோ அல்லது போட்டியிடக்கூடிய சாத்தியத்தை நிராகரிக்கவோ இல்லை. பொறுத்திருந்து பார்க்கப்போவதாகவே அவர் கூறினார்.

நாட்டின் வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தற்போது முழுக் கவனத்தையும் செலுத்தியிருப்பதால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறிய விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின்  எதிர்காலம் குறித்து கேட்டபோது பொருளாதாரம் குறித்து உண்மையைப் பேசியவர்கள் தனது கட்சியினர் மாத்திரமே என்பதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் கட்சியை மீள அணிதிரட்டிக் கொண்டு அடுத்தவருடம் தேர்தல்களுக்கு தயாராகப்போவதாகவும் பதிலளித்தார்.

“எனது முதற்பணி வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதே. அதை நெருங்கிக்  கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும். உண்மையை பேசுபவர்கள் என்பதால் வெற்றிபெறுவதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். பல புதுமுகங்களும் வந்திருக்கிறார்கள். அரசாங்கத்திலும் எதிரணியிலும் உள்ள பல கட்சிகளும் போட்டியிடும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல்கள் என்று வரும்போது வெற்றி பெறுவதற்கு தனக்கு வாய்ப்பு இல்லை என்று  கண்டால் விக்கிரமசிங்க அவற்றில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். முதல் இரு தடவைகள் தோல்வி கண்ட அவர் கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் அவர் இரு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்து பிரதமராக வரமுடிந்தபோதிலும் முழுமையாக ஐந்து வருடங்களுக்கு பதவியில் நீடிக்க முடிந்ததில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் கூடுதலான காலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ‘பெருமை’ அவருக்கே உரியது.

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்கமுடியாத நிலையில் தேசியப்பட்டியல் மூலமாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பயன்படுத்தி பத்து மாதங்கள் கழித்து நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வந்த விக்கிரமசிங்க எவருமே எதிர்பார்த்திராத வகையில் மாற்றமடைந்த அரசியல் கோலங்களின் விளைவாக கால் நூற்றாண்டு காலமாக தன்னிடமிருந்து நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை வசப்படுத்தக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் நாடாளுமன்றத்தினால் தெரிவான முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான  விக்கிரமசிங்க தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்னமும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் நடத்தப்பட வேண்டியதாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து திட்டவட்டமாக எதையும் கூற அவர் தயாராயில்லை.

விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை.

பொதுஜன பெரமுன அதன் வேட்பாளரைக் களமிறக்கும் என்று தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அந்த வேட்பாளர் ஒரு ராஜபக்‌ஷவை தவிர வேறு யாருமாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.

தேசிய தேர்தல்களை இலக்குவைத்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டுகின்றபோதிலும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை.

பொதுஜன பெரமுனவில் இருந்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்கும் ஜனாதிபதியின் வியூகத்துக்கு அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் பதவிகளை இழக்க காரணமாக இருந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் போய்விட்டது.

உண்மையில், ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது பொதுஜன பெரமுனவோ தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்கக்கூடிய செல்வாக்குடன் இல்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும், தங்களது கட்சி வெற்றிபெறும் என்று ராஜபக்‌ஷர்கள் ஒருவர்மாறி ஒருவர் நாட்டு மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்‌ஷர்களே பொறுப்பு என்று கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சித் தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் நேர்ந்த கதிக்குப் பிறகு தேசிய தேர்தல்களுக்கு என்ன நேருமோ என்ற பயம் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. இதற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து வருகின்ற அறிவிப்புக்களே முக்கிய காரணமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாட்டில் தேசிய தேர்தல்கள் குறித்து அறிவித்த சில தினங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தல் சடடங்களையும் ஒழுங்குவிதிகளையும் விரிவாக ஆராய்ந்து சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர அவசியமான விதப்புரைகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் பத்துப் பேரைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பளித்தல், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதிசெய்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் போட்டியிடும் ஒருவர் மக்களினால் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் இரு சபைகளிலும் ஏககாலத்தில் அங்கம் வகிப்பதற்கு வசதிசெய்தல் என்று பெருவாரியான ஏற்பாடுகளுக்கான சாத்தியம் குறித்து ஆராயுமாறு அந்த ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆறு மாதகால அவகாசத்திற்குள் அல்லது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்னதாக அதனால் பணிகளை நிறைவுசெய்யக்கூடியதாக இருக்குமா என்று அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் ஏற்கனவே கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டன.

ஆணைக்குழு அதன் அறிக்கையை உரிய காலத்தில் கையளித்தாலும் கூட அதனால் முன் வைக்கப்படக்கூடிய விதப்புரைகள் தொடர்பில் சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு கணிசமான காலம் எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி பேசும்போது தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அவர் உபாயங்களை தேடுகிறார் என்பது பொதுவெளியில் பரவலான கருத்தாக இருக்கிறது. கடந்த வருட நடுப்பகுதியில் பதவிக்கு வந்த பின்னர் இதுநாள் வரையில் தேர்தல்கள் தொடர்பில் அவர் கடைப்பிடித்த அணுகுமுறைகளே இதற்குக் காரணம்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில் தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கும் என்று விக்கிரமசிங்க நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆனால், அரச வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் போதாமை குறித்து சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் வரிகள் மற்றும் சேவைகள் கட்டணங்களின் அதிகரிப்புக்கள் வாழ்க்கைச் செலவை மேலும் கடுமையாக அதிகரிக்கச் செய்து மக்களை திணறடித்துக் கொண்டிருக்கின்றன.

அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு கடுமையாக அதிகரிக்கிறது. சிவில் சமூக நிறுவனம் ஒன்றினால் சில தினங்களுக்கு  முன்னர் மேற்கொள்ளப்பட்ட ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு இதை தெளிவாக நிரூபிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் தனக்கு வாய்ப்பான தருணத்துக்காக காத்திருக்கும் ஜனாதிபதி என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

தேர்தல்களில் வெற்றிபெற முடியாத சூழ்நிலை இருக்குமென்றால் அதற்கு மாற்றுவழி தேர்தல்களை நடத்தாமல் விடுவதோ அல்லது வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களைக் காலந்தாழ்த்திக் கொண்டு போவதோ அல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பது அதிகாரத்தில் இருப்பதற்கான நியாயப்பாடு  தொடர்பில் ஏற்கனவே சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு பல முனைகளிலும் மேலும் நெருக்கடிகளையே கொண்டுவரும் என்பது நிச்சயம். அவருக்கு உபாயங்கள் அருகிக்கொண்டுபோகின்றன.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு

கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்‌ஷ சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கமான   உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  ஆட்சிமுறையில் தவறிழைத்து மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம்செய்த முன்னாள் ஜனாதிபதிகளை குற்றவாளிகளாகக் கண்டு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் ஒரு வருட காலத்திற்குள் வழங்கிய இரண்டாவது தீர்ப்பாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பத்துக்கோடி ரூபா இழப்பீட்டை வழங்குமாறு இவ்வருட முற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்களை விசாரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ராஜபக்‌ஷர்களும் ஏனைய பிரதிவாதிகளும் தங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மீறிச் செயற்பட்டதாகவும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறிவிட்டதாகவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிக்கல மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்கள் பி.பி. ஜெயசுந்தர, சமான் குமாரசிங்க ஆகியோரே குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இவர்களுடன் நாணய சபையும் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகமிழைத்ததாக தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறு சிறிசேனவுக்கு   உத்தரவிட்டதைப் போன்று இந்த வழக்கின் பிரதிவாதிகளை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை. பதிலாக குற்றவாளிகளை நான்கு மனுதாரர்களுக்கும் வழக்கு செலவுத் தொகையாக தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மனுதாரர்கள் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை என்பதால் அதற்கு உத்தரவிடவில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தால் நீதியரசர்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

இந்தியா போன்ற நாடுகளில் அரசாங்கங்களின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டி தீர்ப்புக்களை பல சந்தர்ப்பங்களில் வழங்கிய நீதித்துறைச் செயலூக்கம் (Judicial Activism) இலங்கையிலும் இருந்திருந்தால் வித்தியாசமான தீர்ப்பை எதிர்பார்த்திருக்கமுடியும்.

சட்டத்தின் பிரகாரம் வழக்குகளை விசாரிப்பதற்கு அப்பால் நீதிபதிகள் பொது நலனை மனதிற்கொண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தங்களது நேர்மையான அபிப்பிராயத்தின் அடிப்படையில் தீர்ப்புக்களை வழங்குவதுண்டு. இந்தியாவில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

நாட்டின் 2 கோடி 20 இலட்சம் மக்களும் அல்லவா இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்?

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் நாட்டின் முழு சனத்தொகைக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்‌ஷ சகோதரர்களிடம் இருக்கிறது என்று கூறினார்.

மனுதாரர்கள் கோரவில்லை என்பதால் உயர்நீதிமன்றம் இழப்பீடு குறித்து பரிசீலிக்கவில்லை என்றாலும் அதற்கான உத்தரவை நீதியரசர்கள் வழங்கியிருக்கமுடியும் என்று கூறிய அவர் ராஜபக்‌ஷர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை இந்த நோக்கத்துக்காக மீட்டுக் கொண்டவரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட சகலரும் இழப்பீட்டைக் கோர முன்வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்து அதேவேளை,  ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல  இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றரை இலட்சம் ரூபா இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு உரித்துடையவர்கள் என்று சபையில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை, பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டமைக்கு தாங்கள் பொறுப்பு என்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். கடந்த புதன்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்கு சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தீர்ப்பு குறித்து கேட்டபோது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை விளக்கிக்கூறப் போவதாகப் பதிலளித்தார். எப்போதுஅந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்.

கோட்டபாய ராஜபக்‌ஷவும் பசில் ராஜபக்‌ஷவும் உடனடியாக எந்தக் கருத்தையும் கூறியதாக செய்தி  வந்ததாக இல்லை. ஆனால், ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீதித்துறையை எப்போதும் மதித்து வந்திருக்கிறது என்றும் பொருளாதார நெருக்கடியை ஆராய்வதற்கு சிறந்த இடம் நாடாளுமன்றமே என்றும்  கூறினார். இந்த விடயத்தை ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயமுடியும். சாட்சியங்களை அழைத்து விரிவான விசாரணைகளை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்ட தெரிவுக்குழு ஒன்று ஏற்கனவே இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்களை ஆராய்வதற்கு கடந்த ஜூலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தலைமையில் நியமித்திருந்தார். ஆனால், இதுவரையில் ஒரேயொரு தடவை மாத்திரமே அந்தக் குழு கூடியது என்பதை நாமல் ராஜபக்‌ஷ அறியாதவர் அல்ல. அதில் பங்கேற்பதற்கு எதிரணி அரசியல் கட்சிகளின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியிருப்பதால் அந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சபாநாயகரை வலியுறுத்திக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர்நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் பின்ணியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாடாளுமன்றத்தினதும் பொருத்தமான நிறுவனங்களினதும் பொறுப்பு என்று இலங்கை ‘ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நாஷனல்’ சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், அரசாங்கமும் நாடாளுமன்றமும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் முடிவில் சமர்ப்பிக்கப்படக்கூடிய அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று சாக்குப்போக்கை கூறக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

பொருளாதார முறைகேடுகள் தொடர்பில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து ராஜபக்‌ஷர்கள் சட்ட நுட்ப நுணுக்க காரணங்களின் அடிப்படையில் தங்களை  விடுவித்துக்கொண்டார்கள். ஆனால், இந்த வழக்கில் இத்தகைய ஒரு தீர்ப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்ற ராஜபக்‌ஷர்களின் மக்கள் செல்வாக்கை இந்தத் தீர்ப்பு மேலும் பாதிப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளுக்கு ஒரு வலுவான ‘ஆயுதமாக’ தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்துவரக்கூடிய எந்த தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பிரசாரங்களில் தீர்ப்பு பிரதான பிரசாரக் கருவியாக இருக்கும்.

ஊடகங்களுக்குப் பதில் அளிப்பதில் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் கிரமமாக நடத்தப்பட்டுவந்த செய்தியாளர்கள் மகாநாடு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஒரு தகவல்.

தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தீர்ப்பின் பின்னரான நிலைவரத்தை தனக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்துவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளை வரும் நாட்களில் காணக்கூடியதாக இருக்கும்.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

https://maatram.org/?p=11161



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.