Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம் 

08 DEC, 2023 | 11:59 AM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சிய கிரிக்‍கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 10ஆவது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு 'ஏ'யில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 அணிகள் அங்கம் வகிக்கின்றன. 

அத்துடன் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகிய 4 அணிகள் குழு 'பீ'யில் இடம்பெற்றுள்ளன. 

ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகளும் தங்கள் குழுவிலுள்ள ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்து விளையாடும். புள்ளிகள் பட்டியலில் தத்தம் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 

அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டி 17ஆம் திகதியன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

சினெத் ஜயவர்தன தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி  நாளைய தினம் (9) ஜப்பான் அணியையும், 11ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியையும், 13ஆம் திகதியன்று பங்களாதேஷ் அணியையும் எதிர்த்தாடவுள்ளது.    

சினெத் ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் மல்ஷ தருபதி (உப அணித்தலைவர்), புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத்த, விஷேன் எலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புரு பண்டார, தினுக்க தென்னகோன் ஆகியோர் 15 பேர் அங்கம் வகிப்பதுடன், ஜனித் பெர்னாடோ, சுப்புன் வடுகே ஆகிய இருவரும் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். 

1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள 9 தொடர்களில் 7 தடவைகள் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், ஒரு தடவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் (2012) ஆகியன கூட்டாக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன.  

2017இல் மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் சம்பியனாகியிருந்தது. 

5 தடவைகள் உப சம்பியன் பட்டம் வென்றுள்ள இலங்கை ஒரு தடவை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த முறை அதனை மாற்றியமைத்து முதல் தடவையாக சம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/171240

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் : நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி

09 DEC, 2023 | 10:08 AM
image
 

(என்.வீ.ஏ.)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் நடப்பு சம்பியன் இந்தியாவும் முன்னாள் இணை சம்பியன் பாகிஸ்தானும் தலா 7 விக்கெட்களால் வெற்றியீட்டின.

ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அர்ஷின் குல்கர்னியின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜம்ஷித் ஸத்ரான் அதிக்பட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் யூனுஸ் (26), நுமான் ஷா (25), அக்ரம் மொஹமத்ஸாய் (20) ஆகிய மூவரும் சுமாரான பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் அர்ஷின் குல்கர்னி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாமன் திவாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அர்ஷின் குல்கர்னி ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களையும் முஷீர் கான் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.

பாகிஸ்தான் வெற்றி

நேபாளத்திற்கு எதிராக ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு  ஏ குழு போட்டியில் நேபாள அணியை 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

மொஹமத் ஸீஷானின் துல்லியமான பந்துவீச்சு, அஸான் அவய்ஸ், சாத் பெய்க் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

உத்தம் மகர் 51 ஓட்டங்களையும் திப்பேஷ் கண்டல் 31 ஓட்டங்களையும் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர் அர்ஜுன் குமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மொஹமத் ஸீஷான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9.2 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது.

துடுப்பாட்டத்தில் அஸான் அவய்ஸ் ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களையும் சாத் பெய்க் 50 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் குல்சான் ஜா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆகாஷ் திரிபதி 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/171294

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் ஜப்பானை சந்திக்கிறது இலங்கை

09 DEC, 2023 | 10:07 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமான 8 நாடுகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் 10ஆவது அத்தியாயத்தில் பங்குபற்றும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை இன்று சனிக்கிழமை (09) எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி துபாயில் அமைந்துள்ள ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் அறிமுக அணியும் கிரிக்கெட்டின் மழலையுமான ஜப்பானை இலங்கை இலகுவாக வெற்றிகொள்ளும் என பெரிதும் நம்பப்படுகிறது.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணப் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஈட்டிய வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

சினேத் ஜயவர்தன தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இந்த வருடம் முதல் தடவையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது.

குழு பியில் ஜப்பானை இன்று எதிர்த்தாடும் இலங்கை, திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தையும் புதன்கிழமை பங்களாதேஷையும் சந்திக்கவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை எனவும் திறமையாக விளையாடி சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆசிய இளையோர் சம்பியன் பட்டத்தை வென்றெடுப்பதே தமது அணியின் குறிக்கோள்  எனவும்   சினேத் ஜயவர்தன, இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

'எமது அணி சம பலம்வாய்ந்தது. 8ஆம் இலக்கம் வரை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக் கூடியவர்கள் இடம்பெறுகின்றனர். எனவே சகல போட்டிகளிலும் திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்' என அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, பி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான மற்றொரு போட்டி ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

சினேத் ஜயவர்தன (தலைவர், றோயல்), மல்ஷ தருப்பதி (உதவித் தலைவர், றிச்மண்ட்), புலிந்து பெரேரா (தர்மராஜ), விஷேன் ஹலம்பகே (புனித பேதுருவானவர்), ரவிஷான் டி சில்வா (பி. டி எஸ். குலரட்ன), சாருஜன் சண்முகநாதன் (புனித ஆசீர்வாதப்பர்), தினுர களுபஹன (மஹிந்த), விஹாஸ் தெவன்க (தேர்ஸ்டன்), விஷ்வா லஹிரு (ஸ்ரீ சுமங்கல), கருக்க சன்கேத் (வத்தளை, லைசியம்), துவிந்து ரணசிங்க (மஹநாம), ஹிருன் கப்புருபண்டார (புனித சூசையப்பர்), ருசந்த கமகே (புனித பேதுருவானவர்), தினுக்க தென்னக்கோன் (திரித்துவம்), ரவிஷான் பெரேரா (ஆனந்த).

பயணிக்கும் பதில் வீரர்கள்: சுப்புன் வடுகே (திரித்துவம்), ஜனித் பெர்னாண்டோ (புனித ஜோசப் வாஸ்)

19 வயதுக்குட்பட்ட ஜப்பான் குழாம்

கோஜி அபே (தலைவர்), கஸுமா கேட்டோ ஸ்டபர்ட் (உதவித் தலைவர்), சிஹாயா அரகவா, ஷொட்டாரோ ஹிரட்சுகா, சார்ள்ஸ் ஹின்ஸே, ஹிரோடக்கே கக்கினுமா, ஹியூகோ கெலி, டெனியல் பன்ச்ஹேர்ஸ்ட், நிஹார் பாமர், ஆதித்யா பாத்கே, திமத்தி முவர், டோமோ ரெயர், ஆரவ் திவாரி, கீபர் யமாமொட்டோ லேக்.

https://www.virakesari.lk/article/171295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் : ஐக்கிய அரபு இராச்சியத்திடம் வீழ்ந்தது இலங்கை

12 DEC, 2023 | 05:23 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக  மைதானத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை முற்றிலும் எதிர்பாராத விதமாக 2 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதியில் விளையாடும் இலங்கையின் வாய்ப்பு குறைந்துள்ளது.  

இந் நிலையில் பங்களாதேஷுக்கு எதிராக புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

முன்வரிசை வீரர் தனிஷ் சூரி பெற்ற அரைச் சதமும் மத்திய வரிசையில் மாறூப் மேச்சன்ட், அணித் தலைவர் ஆயன் அப்சால் கான், அம்மார் படாமி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றியில்  பிரதான பங்காற்றின.

பி குழுவுக்கான அப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தனிஷ் சூரி 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

அவருடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்த இதான் டி சோசா 17 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட மத்திய வரிசையில் அப்சால் கான் 33 ஓட்டங்களையும் மாறூப் மேச்சன்ட் 20 ஓட்டங்களையும் அம்மார் படாமி ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் ஆய்மன் அஹமத் ஆட்டம் இழக்கமால் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கருக்க சன்கேத் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் சினேத் ஜயவர்தனவும் ருசந்த கமகேயும் 3ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டபோதிலும் ஜயவர்தன ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

எவ்வாறாயினும் தினுர களுபஹனவும் விஷ்வா லஹிருவும் 9ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம்சேர்த்தனர்.

ஆனால், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் தினுர கலுபஹன ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும் சினேத் ஜயவர்தன 49 ஓட்டங்களையும் ருசந்த கமகே, 10ஆம் இலக்க வீரர் விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆயன் அப்சால் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓமித் ரெஹ்மான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/171502

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை போட்டியிலிருந்து வெளியேறியது

14 DEC, 2023 | 09:55 AM
image

(நெவில் அன்தனி)

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் பங்களாதேஷிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை சுற்றுப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.

அஷிக்குர் ரஹ்மான் ஷிபி குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம் பங்களாதேஷுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இந்த சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை, அறிமுக அணி ஜப்பானை மாத்திரம் வெற்றிகொண்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் இலங்கை  தோல்வி அடைந்திருந்தது.

பங்களாதேஷுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

புலிந்து பெரேரா (28), விஷ்வா லஹிரு (26), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (25), ருசந்த கமகே (24), ரவிஷான் டி சில்வா (21), ஷாருஜன் சண்முகநாதன் (21), தினுர கலுபஹன (20) ஆகிய 7 வீரர்கள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவர்களால் அணியை பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.

பந்துவீச்சில் வசி சித்திக் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாறூவ் இம்ரிதா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் மஹ்புஸுர் ரஹ்மான் ரபி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 116 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைவிட சௌதுர் ரிஸ்வான் 32 ஓட்டங்களையும் அஹ்ரார் அமின் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

சௌதுர் ரிஸ்வானுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அரிபுல் இஸ்லாமுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் அஹ்ரார் அமினுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

பந்துவீச்சில் கருக்க சன்கேத் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியம்

ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற பி குழுவுக்கான மற்றொரு 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஜப்பான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஏ குழுவிலிருந்து பாகிஸ்தான், இந்தியா

இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவிலிருந்து பாகிஸ்தானும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

பாகிஸ்தான் தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

அரை இறுதிப் போட்டிகள் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.

ஒரு அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு இராச்சிய அணிகளும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகளும் மோதவுள்ளன.

அப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

https://www.virakesari.lk/article/171675

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த பங்களாதேஷ், ஐ.அ.இ

Published By: DIGITAL DESK 3    16 DEC, 2023 | 10:26 AM

image
 

(நெவில் அன்தனி)

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானங்களில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் முற்றிலும் எதிர்பாராத விதமாக முறையே வெற்றிகொண்ட பங்களாதேஷும் ஐக்கிய அரபு இராச்சியமும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இந்த அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு அணிகளும் பங்களாதேஷிடமும் ஐக்கிய இராச்சியத்திடமும் தோல்வி அடைந்து வெளியேறின.

இந்தியாவுக்கு எதிராக ஐசிசி பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பங்களாதேஷ் 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

under_19_asia_cup_uae_win_vs_pak.jpg

மாறூப் ம்ரிதா, ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும்  அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் பங்களாதேஷை இறுதிப் போட்டிக்குள் இட்டுச் சென்றன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

16ஆவது ஓவரில் இந்தியாவின் 6ஆவது  விக்கெட்  வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், முஷீர் கான் (50), முருகன் அபிஷேக் (62) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

அபிஷேக் 74 பந்துகளை எதிர்கொண்டு  6 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசினார்.

பந்துவீச்சில் மாறூவ் ம்ரிதா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரொஹானத் தௌல்லா போசன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியீட்டியது.

அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்ளைப் பகிர்ந்து பங்களாதேஷை வெற்றி அடையச் செய்தனர்.

அரிபுல் இஸ்லாம் 90 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களைக் குவித்ததுடன் அஹ்ரார் அமின் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 101 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நாமல் திவாரி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜம் லிம்பானி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மாறுவ் ம்ரிதா.

under_19_asia_cup_uae_aryansh_vs_pak.jpg

பாகிஸ்தானை சரித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐசிசி பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதிரவைத்த ஐக்கிய அரபு இராச்சியம் 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ஆரியன் ஷர்மா 46 ஓட்டங்களையும் இதான்  டி சோஸா 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஆயன் அப்ஸால் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதான் டி சோஸா, ஆயன் அப்ஸால் கான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்ட இணைப்பாட்டம் அணியை ஓரளவு பலமான நிலையை அடைய உதவியது.

பந்துவீச்சில் உபெய்த் ஷா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலி அஷ்பண்ட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர.

under_19_asua_cup_bang_beat_india.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அஸான் அவாய்ஸ் (41), அணித் தலைவர் சாத் பெய்க் (50) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால் மத்திய மற்றும் பின்வரிசையில் அமிர் ஹசன் (27) தவிர்ந்த ஏனையவர்கள் துடுப்பாடத்தில் பிரகாசிக்கத் தவறியமை பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

பந்துவீச்சில் ஆய்மான் அஹமத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பய் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். மூன்று துடுப்பாட்ட வீரர்கள் ரன் அவுட் ஆக்கப்பட்டனர்.

ஆட்டநாயகன்: ஆயன் அப்ஸால் கான்

under_19_asia_cup_bang_vs_india_...jpg

https://www.virakesari.lk/article/171805

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷிப்லி அபார சதம் : 19இன் கீழ் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது பங்களாதேஷ்

17 DEC, 2023 | 06:10 PM
image
 

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் 195 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய பங்களாதேஷ் முதல் தடவையாக  ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது.

அத்துடன் இந்த வருட 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாக பங்களாதேஷ் சம்பியனானமை விசேட அம்சமாகும்.

18 வயதான அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி குவித்த அபார சதம், ரொஹானத் தௌல்லா போசன், மாறூப் ம்ரிதா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன பங்களாதேஷை ஆசிய சம்பியனாக்கியது.

முதல் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், இலங்கை ஆகிய அணிகளை வெற்றிகொண்ட பங்களாதேஷ், அரை இறுதியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக 2021 ஆசிய சம்பியன் இந்தியாவை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் முதல் சுற்றில் இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதி ஆட்ட வாய்ப்பை ஐக்கிய அரபு இராச்சியம் உறுதிசெய்துகொண்டிருந்தது.

இறுதிப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்து முழுமையான ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ் மிக இலகுவாக வெற்றிபெற்று ஆசிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

download__1_.jpg

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்ப வீரர் அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி குவித்த அபார சதம், சௌதர் ரிஸ்வான், அரிபுல் இஸ்லாம் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.

பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதலாவது விக்கெட் வீழ்ந்தபோது மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தது.

எனினும், கடைசி ஓவர் வரை மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷிப்லி 149 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 129 ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷின் வெற்றிக்கு வித்திட்டார்.

50ஆவது ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தபோது 7ஆவதாக ஆட்டம் இழந்த ஷிப்லி, 2ஆவது விக்கெட்டில் சௌதர் ரிஸ்வானுடன் 125 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஆரிபுல் இஸ்லாமுடன் 76 பந்துகளில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

சௌதுர் ரிஸ்வான் 71 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களையும் ஆரிபுல் இஸ்லாம் 40 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் மஹ்புஸுர் ரஹ்மான் ரபி 21 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றியை மாத்திரம் குறிவைத்து ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த  பங்களாதேஷ் முதல் 30 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷிப்லி 5 போட்டிகளில் விளையாடி 126.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியுடன் 2 சதங்கள் உட்பட மொத்தமாக 378 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணி பந்துவீச்சில் அய்மான் அஹமத் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஓமித் ரெஹ்மான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

283 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 87ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் முதல் சுற்றில் இலங்கையையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வெற்றிகொண்ட பெருமையுடன் ஐக்கிய அரபு இராச்சியம் உப சம்பியனாகி திருப்தி அடைந்தது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியில் துருவ் பரஷர் (25 ஆ.இ.), அக்ஷத் ராய் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். 14 உதிரிகள் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாறுப் ம்ரிதா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசெயன் ஈமொன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/171907

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியா கோப்பையில் 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்

 

நாளை தொட‌ங்கும் 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சிமிபின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.