Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

Featured Replies

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.

சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் . இதனை "Blasphemy" என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

Posted by தமிழ் சசி / Tamil SASI at 9/24/2007 11:17:00 PM

http://blog.tamilsasi.com/2007/09/economic...u-samudram.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.