Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிம் - புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரான்சிஸ் மாவோ
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள்.

ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர்.

கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்படை இலக்கை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். அதற்கு பதிலாக, போரில் உள்ள இரண்டு சுதந்திர நாடுகளாக வட கொரியாவையும் தென்கொரியாவையும் பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

 

"1950ஆம் ஆண்டில் தனது தாத்தா செய்ததை போலவே, கிம் ஜாங்-உன் போருக்குச் செல்ல ஒரு மூலோபாய முடிவை எடுத்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று முன்னாள் சிஐஏ பகுப்பாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் பலமுறை வடக்கு கொரியாவுக்குச் சென்றிருக்கும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் 38 நார்த் என்ற நிபுணர் தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளனர்.

இத்தகைய அறிவிப்பு வாஷிங்டன் மற்றும் சியோலில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தது, வடக்கு கொரியாவைக் கவனிக்கும் வட்டங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது.

எனினும், பெரும்பாலான பகுப்பாளர்கள் போருக்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பிபிசி ஆசியா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவிலிருந்து ஏழு நிபுணர்களுடன் பேசியது - அவர்களில் யாரும் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

"கொடிய மோதலின் சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு போரில் தனது ஆட்சியையே பணயம் வைப்பது வட கொரியர்களின் இயல்பல்ல," என்று நெதர்லாந்தில் இருந்து க்ரைசிஸ் குழுவின் கொரியா கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் கிரீன் கூறுகிறார்.

அவரும் மற்றவர்களும், வட கொரியா மேற்கத்திய சக்திகளை உரையாடலுக்கு அழைக்க விரும்புகிறது என்றும், உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களும் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் கிம்மிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்ணைமூடி கடந்து போக முடியாது என்பதிலும், அவரது ஆட்சி மேலும் ஆபத்தானதாக மாறிவிட்டதிலும் அவர்கள் உடன்படுகிறார்கள்.

போர் இன்னும் நடக்க வாய்ப்பில்லை என்று பெரும்பாலானோர் வாதிட்டாலும், சிலர் ஒரு சிறிய அளவிலான தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,KCNA

இதற்கு என்ன காரணம்?

வடக்கு கொரியாவின் கிம் ஜாங்-உனை நெருக்கமாகக் கவனிக்கும் மக்கள் அவரது அணு அச்சுறுத்தல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் பியாங்யாங்கிலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் வேறு விதமானவை என்று சிலர் கூறுகிறார்கள்.

புத்தாண்டு தினத்தன்று "கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் வெடிப்பதை தவிர்க்க முடியாது" என்று அறிவித்த ஆறு நாட்களுக்குப் பிறகு, அவரது ராணுவம் எல்லையில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.

வடக்கு கொரியா ஜனவரி தொடக்கத்திலிருந்து புதிய திட-எரிபொருள் ஏவுகணைகளின் சோதனையையும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியதாகக் கூறப்படும் நீர்மூழ்கி தாக்குதல் ட்ரோன்களையும் சோதனை செய்ததாகக் கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் தடைகளை வெளிப்படையாக மீறி இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட மாதந்தோறும் ஏவுகணைகளை ஏவுவதையும், ஆயுதங்களை உருவாக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இருப்பினும், கடந்த வாரம், தென் கொரியா உடனான இணைப்பு என்ற இலக்கை அதிகாரபூர்வமாக கைவிடுவதாக அவர் அறிவித்ததால் பலரின் புருவங்கள் சுருங்கின.

தெற்கு கொரியாவுடன் மீண்டும் இணைவது என்பது வடக்கு கொரியா உருவானது முதலே அதன் சித்தாந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. தற்போது அது யதார்த்தமாக கருதப்படுவதில்லை.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது மிகப்பெரிய விஷயம். ஆட்சியின் அடிப்படை சித்தாந்தக் கோட்பாடுகளில் ஒன்று மாறுகிறது. " என்று சியோலில் உள்ள குக்மின் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் பீட்டர் வார்ட் கூறுகிறார்.

கிம் ஜாங்-உன் இப்போது அந்த பாரம்பரியத்தை சோதித்துப் பார்க்கவுள்ளார். ராஜதந்திர பரிமாற்றங்கள் மற்றும் எல்லை கடந்த வானொலி ஒலிபரப்புகளை மூடுவதாகவும், பியாங்யாங்கின் புறநகரில் உள்ள ஒன்பது மாடி மறு இணைப்பு (இரண்டு கொரிய நாடுகளும் இணைவது) நினைவுச்சின்னத்தை இடிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

2001-ம் ஆண்டில், மறு இணைப்பு என்ற இலக்கை நோக்கிய தனது தந்தை மற்றும் தாத்தாவின் முயற்சிகளைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய கொரிய உடையில் இருக்கும் இரு பெண்கள் ஒருவரையொருவர் நோக்கி கைகளை விரிக்கும் வகையில் அந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

1950ல் போருக்குச் சென்றவர் கிம் இல்-சுங் தான், ஆனால் வட கொரியர்கள் எப்போதாவது தங்கள் தெற்கு உறவினர்களுடன் மீண்டும் இணைவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியவரும் அவரே.

ஆனால் அவரது பேரன் இப்போது தென் கொரியர்களை முற்றிலும் வேறுபட்ட மக்கள் என்று வரையறுத்துள்ளார் - ஒருவேளை அவர்களை ராணுவ இலக்காக நியாயப்படுத்துவதற்காகவும் இது இருக்கலாம்.

முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் கிம் ஜாங்-உன் போரைத் தொடங்குவதற்கான திட்டமிட்ட நகர்வுகளை பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதில் உடன்படவில்லை.

அமெரிக்க-சீன உறவுகளுக்கான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அறக்கட்டளையின் சியோங்-ஹியோன் லீ, அடுத்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வட கொரியா மீண்டும் அனுமதிக்கவுள்ளதாகவும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் விற்பதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்களத்துக்குத் தயாராகினால் இவற்றை செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.

 

எவ்வாறிருந்தாலும், வட கொரியா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள் மிகவும் பலமானதாக இருக்கிறது என்பது தான் வட கொரியாவை தடுக்கும் முக்கிய அம்சமாகும்.

"ஒரு பொதுவான போர் தென் கொரியாவில் ஏராளமானோரை கொல்லக்கூடும், ஆனால் அது கிம் ஜாங்-உன்னுக்கும் அவரது ஆட்சிக்கும் முடிவு கட்டுவதாகவும் அமைந்துவிடும்," என்று கூக்மின் பல்கலைக்கழகத்தின் வார்ட் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, சிறிய அளவிலான தாக்குதலுக்கான சூழல் உருவாகி வருகிறது என்று அவரும் மற்றவர்களும் எச்சரிக்கின்றனர்.

"தென் கொரியா மீதான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்பதே என் கவலை. அத்தகைய தாக்குதல் தென் கொரிய பிரதேசம் அல்லது ராணுவப் படைகளை இலக்காகக் கொண்டு, ஒரு எல்லைக்குள் இருக்கும்," என்று கார்னெகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் நிபுணர் அன்கித் பாண்டா கூறுகிறார்.

இது எல்லைக் கோட்டில் இருந்து மேற்கே உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை குண்டு வீசித் தாக்குவது அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியாகவும் இருக்கலாம். 2010-ம் ஆண்டில், வட கொரியா யியோன்பியோங் தீவைத் தாக்கி நான்கு தென் கொரிய ராணுவ வீரர்களைக் கொன்றது. இது தென் கொரியாவுக்கு ஆத்திரமூட்டியது.

தென் கொரியாவை சோதித்து பார்க்க, அதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற நிபுணர்கள், போர் குறித்த அச்சங்களை கிம்மின் செயல்பாட்டு முறைகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

"வட கொரியாவின் வரலாற்றைப் பார்த்தால், வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க விரும்பும்போது, அது பல நேரங்களில் மற்றவரை சீண்டிப் பார்க்கும். " என்று லீ சியோங்-ஹியோன் கூறுகிறார்.

இந்த ஆட்சி பொருளாதாரத் தடைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டு அதன் எதிரிகளுக்கு தேர்தல் ஆண்டு - அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவு மற்றும் தென் கொரிய சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் வட கொரியா தனது சீண்டலை நடத்த எல்லா காரணங்களையும் தருகிறது என்று டாக்டர் லீ கூறுகிறார்.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அமெரிக்க நிர்வாகம் - உக்ரேனுடனும் காஸாவுடனும் இணைந்துள்ளது. வட கொரியாவைக் கவனிக்கவில்லை, மேலும் பியோங்யாங் பொதுவாக குடியரசுக் கட்சி நிர்வாகங்களுடன் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருந்தது.

2019 ஆம் ஆண்டில் அணு ஆயுத நீக்க பேச்சுவார்த்தைகள் கசப்பதற்கு முன் கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பிரபலமாக நண்பர்களாக இருந்தனர். வட கொரிய தலைவர் முன்னாள் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்காகக் காத்திருக்கலாம். அப்போது அமெரிக்காவுடனான தென் கொரியாவின் நட்பு பலவீனமாகக் கூடும். மீண்டும் கிம்முடன் உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

ரஷ்யாவுடனான வட கொரியாவின் நெருங்கிய நட்பு மற்றும் கடந்த ஆண்டு சீனாவிலிருந்து தொடர்ந்து வரும் பொருளாதார ஆதரவு அதன் துணிச்சலை அதிகரித்திருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவிலிருந்து தனது உளவு செயற்கைக்கோள்களை ஏவுவது என்ற நீண்டகால இலக்கை அடைய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளது, மேலும் கடந்த ஆண்டு தலைவர்கள் உச்சிமாநாடு உட்பட பல உயர் மட்ட கூட்டங்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.

வட கொரியா அதன் ராணுவ திறன்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆதரவு காரணமாக அதிக நம்பிக்கையுடன் செயல்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சில நிபுணர்கள் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது ஆட்சியை நிலைநிறுத்துவதையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.

"இது ஆட்சி தப்புவதற்கான ஒரு சித்தாந்த சரிசெய்தல் என்று தோன்றுகிறது," என்று சியோலில் உள்ள எஹ்வா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லைஃப்-எரிக் எஸ்லி வாதிடுகிறார். "வட கொரியர்கள் தங்கள் கம்யூனிஸ்ட் நாட்டின் தோல்விகளை அதிகளவில் அறிந்திருக்கிறார்கள்."

கடினமான காலக்கட்டத்தில், கிம்மின் ஏவுகணை செலவுகளை நியாயப்படுத்தவே, எதிரியை வரையறுப்பதில் கவனம் செலுத்தும் கொள்கையை அவர் பரிந்துரைக்கிறார். நாடு முழுவதும் பஞ்சம் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

"இப்போது, நாடு மற்றும் அதன் கலாச்சாரம் வெறுமனே தீயவை என்று முத்திரை குத்தப்பட்டு, தென் கொரிய கலாச்சாரத்தை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இது காரணமாகிறது." என்று அவர் கூறுகிறார்.

"போர் எனும் மிகப்பெரிய சூதாட்டத்தை அவர் உண்மையில் விரும்பவில்லை . அதில் அவர் எதையும் பெற முடியாது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும்," என்று வட கொரிய அகதிகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான லிபர்ட்டி இன் நார்த் கொரியாவைச் சேர்ந்த ஷோகீல் பார்க் கூறுகிறார்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்நாட்டு இலக்குகள்

அவரது அச்சுறுத்தல்கள் தனது நாட்டில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறுகிறார்.

கடுமையான சூழ்நிலைக்கு தென் கொரியா, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தயாராக இருப்பது முக்கியமாகும். எனினும் வட கொரியாவின் உள்நாட்டு சூழ்நிலையையும் பரந்த புவிசார் அரசியலையும் முழுமையாக ஆராய்வது அவசியம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறுதியில், வட கொரிய தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, அவருடன் உரையாடுவதே சிறந்த வழி என்று டாக்டர் லீ வாதிடுகிறார்.

"சர்வதேச சமூகம் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதை கிம் ஜாங் உன்னின் அச்சுறுத்தல்களுக்கு சரணடைவதாக கருதுவதில்லை. அது ஒரு இலக்கை அடைவதற்கான அவசியமான வழிமுறையாக பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

"தேவைப்பட்டால், தவறான கணிப்புகளை குறைப்பதற்கும் போரைத் தடுப்பதற்கும் எதிரி நாட்டின் தலைவரை சந்திப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்." என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c51089lz66jo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.