Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலக புற்றுநோய் தினம்: காலநிலை மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்?

 

காலநிலை மாற்றம்: அதிகரிக்கும் அபாயம்

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசா ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் 2023ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவிக்கிறது. அதன் ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் (3394.9 MtCO2e) பிடித்திருப்பதாக உலக வள நிறுவனம் (World Resource Institute) பட்டியலிட்டுள்ளது.

டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையம் (Center for science and Environment), இதனால் சுற்றுசூழல் மற்றும் வளிமண்டலம் சமநிலையற்று இருப்பதாகக் கூறியுள்ளது.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“கோடைக் காலத்தில் கடும் வெப்பம், மழைக் காலத்தில் வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 86 சதவீதம், தீவிரமான (extreme) வானிலை மட்டுமே இருந்துள்ளது," என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையம் கூறுகிறது.

"ஆறறிவு கொண்டு தொழில்நுட்பங்களுடன் பல விஷயங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக மனிதர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அனைத்து வகையிலும் இந்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் இயற்கைதான் ஊந்துதலாகவும் ஆதாரமாகவும் இருந்து கொண்டிருக்கிறது," என்று 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலில், மசானபு ஃபுகோகா எழுதியிருப்பார்.

அதுபோல, மனித மேம்பாட்டிற்கு இயற்கை முதுகெலும்பாக இருந்து வருகிறது.

 

வளர்ச்சிக்கு உந்துதலான இயற்கை

புற்றுநோய்

பட மூலாதாரம்,NITHYANANDH JAYARAM / TWITTER

படக்குறிப்பு,

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்

இந்தியா, இயற்கையின் பல வகையான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட ஒரு வளமான நாடு. வடக்கே இமயமலையின் உறைபணியும், தெற்குப் பகுதியில் கதகதப்பான வானிலையும், மறுபுறம் வடகிழக்கில் தொடர்ந்து மழையும், வடமேற்கில் வறண்ட தார் பாலைவனமும் என அனைத்து வகையான காலநிலையையும் உள்ளடக்கிய நாடு.

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விவசாயம், வருவாய், தொழில் துறை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டாலும், அனைத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் சுற்றுசூழலுக்கு வீழ்ச்சியே என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

"அனைவருக்கும் தெரிந்தது போலவே, நவீன முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்கச் செய்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் புவி வெப்பமடைந்து உலகில் காலநிலை மாற்றம் அதிக அளவில் நிகழ்கிறது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகிறார். அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதரவாக ஆக்சிஜன் வாயு இருக்கிறது. ஆனால், பசுமைக்குடில் வாயுக்களான கரிம வாயு, மீதேன், நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை நச்சுத்தன்மை வாய்ந்தவை.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியா காலநிலை மாற்றத்தால் பெருமளவில் சுற்றுச்சூழல் ஆபத்தையும், வானிலை வேறுபாடுகளையும் சந்தித்து வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சூழலியல் பாதிப்பு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்தப் பிரச்னைகள் பாதிக்கின்றன.

 

காலநிலை மாற்றத்தால் புற்றுநோயா?

புற்றுநோய்

பட மூலாதாரம்,SURESH KUMAR

படக்குறிப்பு,

புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார்

"காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளோடு புற்றுநோயும் வரக் காரணமாக இருக்கிறது," என்று புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறினார்.

புகையிலைப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணத்தால் புற்றுநோய் ஏற்பட்டாலும், காலநிலை மாற்றம் மிகவும் குறைவாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பேசப்படாத ஒரு காரணியாக இருந்து வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

உலகளவில் ஆண்டுக்கு, 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும் மக்கள் இறப்பதற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் இருப்பதாகவும் மருத்துவர் சுரேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மோனார்ஷ் பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் காலநிலை மாற்றம் மறைமுகமாக புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட மோனார்ஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான யுமிங் கோ பிபிசி தமிழிடம் பேசினார்.

இது ஒரு முடிவில்லா சுழற்சி என்றும், அதிக அளவில் புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், காற்றில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து சுற்றுப்புறத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது.

இந்தத் தரமற்ற காற்றைத் தொடர்ந்து சுவாசித்தால் மூளை, நுரையீரல், உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.

 
புற்றுநோய்

பட மூலாதாரம்,YUMING GUO / LINKEDIN

படக்குறிப்பு,

பேராசிரியர் யுமிங் கோ

காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் கோடை மற்றும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், வெள்ளம், புயல் போன்றவை அதிக அளவில் நிகழ்ந்ததால் மக்களின் வாழ்க்கை நடைமுறை, பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கலப்படமான தரமற்ற நீர், உணவை உண்ண, மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் பருமன் ஏற்பட்டு வயிறு, குடல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பதாக பேராசிரியர் யுமிங் கோவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

புவி வெப்பமடைதலால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் (UV rays) இருந்து உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பதாக நாசா ஏற்கெனவே அறிவித்திருந்தது. "அந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தோலில் படும்போது மெலனோமா (melanoma), தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்," என்று எச்சரிக்கிறார் யுமிங் கோ.

தொழில் வளர்ச்சி பெருகிவிட்டது, ஆண், பெண் வேறுபாடின்றி அதிக நேரம் கடும் வெப்பத்தில் பணிபுரியும் சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு மார்பகத்தில், இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேராசிரியர் யும்ங் கோ குறிப்பிட்டார்.

இதுபோன்ற சூழ்நிலைகளால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தும், மீண்டும் இதே மாசான சுற்றுச்சூழலில் இருக்கும்போது சிகிச்சைப் பலன் குறைந்து இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக யுமிங் கோவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்"

"காலநிலை மாற்றம் நிகழ்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது, தாமதப்படுத்த மட்டுமே முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், கொடிய நோய்களால் வரும் விளைவுகளைத் தவிர்க்க முடியும்," என்று வலியுறுத்தினார் யுமிங் கோ.

மேலும் இதுகுறித்து நித்தியானந்த் ஜெயராமன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேசியபோது, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மட்டுமே உண்மையான வளர்ச்சி என்றும், தனி மனித கொள்கைகளுடன் சேர்ந்து அரசாங்கம் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

"பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடிந்தவரை புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடுகளின் பரப்பளவைப் பாதுகாப்பதோடு, மேலதிக மரங்களை நடவேண்டும். இதுகுறித்துப் பலவகை பிரசாரத்தின் மூலம் மக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்."

இன்னொருபுறம், உடல் ஆரோக்கிய ரீதியாகவும் வாழ்க்கை நடைமுறையிலும் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்கிறார் புற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார். "மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"தற்போதைய காலத்தில் நாம் மேற்கத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். அதைத் தவிர்த்து நமது வாழ்விடத்தின் காலநிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்தால், நோயற்ற வாழ்வை வாழலாம்," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72gey0j9p0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் என்றால் என்ன? ஏன் வருகிறது? எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன?

  • முனைவர் செ. அன்புச்செல்வன்
  • அறிவியலாளர், பிரிட்டன்
1 செப்டெம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 6 பிப்ரவரி 2024
புற்றுநோய்

பட மூலாதாரம்,KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY/GETTY IMAGES

(இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

மானுடராய்ப் பிறத்தலும், பிறந்து நோயின்றி வாழ்ந்து மாய்தலும் அரிதரிது. அன்றாடம் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கலங்குகிறோமோ இல்லையோ எந்தவொரு நோயும் வந்துவிடக்கூடாது என்றும், அதிலும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் நமக்கு வரக்கூடாது என்று நினையாமலிருப்பவர் எவருமில்லை.

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும்.

இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோய்

இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது. ஆனால், 130 கோடிக்கும் மேலாக மக்கள்தொகையுடைய நாட்டில், எழுபதுக்கும் குறைவான (புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைவசதிகளைக் கொண்ட) மருத்துவமனைகள்தாம் இருக்கின்றன என்கிறது National Cancer Grid-இன் ஆய்வறிக்கை. ஆகவேதான், இந்தியப் பெருநகரப் புற்றுநோய் மருத்துவமனைகள் யாவும் நிரம்பி வழிந்தாலும், எல்லோருக்கும் சிகிச்சை கிடைக்கிறதா என்று ஐயமெழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

ஆயினும், இவ்வாறாக நீக்கமறப் பரந்து கிடக்கும் உயிர்க்கொல்லிப் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பற்றியோ, அவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறியும் முறைகள் பற்றியோ போதிய விழிப்புணர்வு நம்மிடையே இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக படித்தறியாத பாமர மக்களுக்குத்தான் புற்றுநோய்கள் பற்றித் தெரிவதில்லை என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடவியலாது. முறையே, 95.2, 87.33 மற்றும் 77.9% படிப்பறிவு பெற்ற பெண்கள் நிறைந்த கேரளா, டெல்லி, மற்றும் தமிழ்நாட்டில்தாம் அதிகமானோர் மார்பகப்புற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அதிலும், 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையொன்றின்படி, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப்புற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23%. (Estimated Cancer Incidence, Mortality and Prevalance Worldwide in 2012. 2012. v1.0 (IARC CancerBase No. 11)) இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப்புற்று இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால், இருவரில் ஒருவர் இறந்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தாம் 23.3% பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயினால் (Cervical Cancer) இறந்துபோகிறார்கள். (Lancet Oncol, 15 (6) (2014), pp. e223).

இது இப்படியிருக்க, புகையிலைப் பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது. (JCO Global Oncology no. 6 (2020) pp-1063). 'புகை நமக்குப் பகை' என்ற வாசகத்தைப் படித்துவிட்டே புகைப்பவர்களாகவே பலர் இருக்கின்றனர். ஆகவே, புற்றுநோய்களை வகைப்படுத்தி, அவற்றை அழித்தொழிக்க இன்றைய நாளில் அறிவியல் உலகம் எடுக்கும் ஆய்வுகள் பற்றிப் பேசுகிறது இந்தக்கட்டுரை. ஆகவே, நோய்நாடி நோய்முதல்நாடி, நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறேன்.

 

புற்றுக்கட்டிகளும் (Malignant) புற்றிலிக்கட்டிகளும் (Benign)

புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்துபெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும். லட்சம் கோடிக்கணக்கிலான (Trillions) உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். பொதுவாக, மனிதச்செல்கள் வளர்ந்து பின்னர் 'செல்பிரிதல்' (Cell Division) முறை மூலம் உடலுக்குத் தேவையான புதியசெல்களாக உருவாகின்றன. அவ்வாறு உருவான செல்கள் நாள்பட நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடுவதால், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இதைத்தான் Apoptosis (முறையான செல்லழிவு-Programmed Cell Death) என்கிறது அறிவியல். இவ்வாறு முறையான செல்லழிவு தொடர்ந்து (சங்கிலி) நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது. இதை திருமூலரின் வாக்காக, 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றும் சொல்லலாம்.

புற்றுநோய்

பட மூலாதாரம்,NANOCLUSTERING/SCIENCE PHOTO LIBRARY/GETTY IMAGES

சில நேரங்களில் (பல காரணிகளால்) இந்த முறையான செல்லழிவுத் தொடர்ச்சங்கிலி உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப்பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல்க்குவியங்கள் திசுக்கட்டிகள் (Tumours) எனப்படுகின்றன. இவை புற்றுக்கட்டிகள் (Malignant) அல்லது புற்றிலிக்கட்டிகள் (தீங்கற்ற அல்லது Benign) என்றும் இருவகைப்படுத்தப்படுகின்றன.

மேற்சொன்னவாறு பல்கிப்பெருகும் புற்றுக்கட்டிகள் (போதிய இடமின்மையால்) அருகிலுள்ள திசுக்களில் பரவுகின்றன, அல்லது படையெடுக்கின்றன. அதோடு, மேலும் புதிய புற்றுக்கட்டிகளை உருவாக்க உடலின் பல்வேறு இடங்களுக்கு (உறுப்புகளுக்கு) செல்லலாம். இவ்வாறு, உடலுறுப்பொன்றில் உருவாகும் புற்றுக்கட்டி, உடலின் மற்றொரு உறுப்பைநோக்கி நகர்ந்து உட்பரவுவது (Invasive) மிக முற்றிய அல்லது வீரியமிக்க (Metastasis) நிலை எனப்படுகிறது.

ஆனால், உடலுறுப்பொன்றில் புற்றிலிக்கட்டிகள் தோன்றினால், அவை அருகிலுள்ள திசுக்களுக்குப் பரவாது, அல்லது படையெடுக்காது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டால், இவை பொதுவாக மீண்டும் வளராது. அதேசமயம் புற்றிலிக்கட்டிகள் சில நேரங்களில் உருவில் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்பதால், சில தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, மூளையில் உண்டாகும் புற்றிலிக்கட்டிகள் கண் பார்வை, நினைவுத்திறம் உள்ளிட்ட செயல்பாடுகளோடு உயிருக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

திண்ம மற்றும் நீர்மப்புற்றுக்கட்டிகள் (Solid and Liquid Tumours)

பொதுவாக, புற்றுக்கட்டிகள் அவைத் தோன்றுமிடத்தைக் கொண்டு, திண்மப்புற்று (Solid Tumours) மற்றும் நீர்மப்புற்று (Liquid Tumours) கட்டிகள் என்று வகைப்படுத்தலாம். சற்று கடினமான செல்களைக்கொண்ட உறுப்புகளான எலும்பு, மார்பகம், நுரையீரல், மண்ணீரல் போன்ற உடலுறுப்புகளில் உருவாகும் திண்மப்புற்றுக்கட்டிகளை Carcinoma வகை என்றும், சற்று மெல்லிய அல்லது இணைப்புத்திசுக்களைக் கொண்ட தசைகள், எலும்புச்சவ்வுகள், கொழுப்புப்படலம் மற்றும் இரத்தக்குழாய்ச் சுவர்களில் தோன்றுபவற்றை Sarcoma வகை திண்மப்புற்றுகள் என்றும் கூறுவார்கள்.

அதோடு ரத்தம், எலும்புநல்லி (Bone marrow) மற்றும் நிணநீர் (Lymph) போன்ற உடலியல் நீர்மங்களில் உருவாகும் புற்றுக்கட்டிகள் நீர்மப்புற்று (ரத்தப்புற்று - Leukemia, எலும்புநல்லிப்புற்று- Myeloma மற்றும் நிணநீர்க்குழியப்புற்று-Lympoma) என்றும் அழைக்கப்படுகின்றன.

புற்றுநோய் வகைகள்

மேற்சொன்னவாறு, புற்றுக்கட்டிகளை அவற்றின் தோற்றுவாயைக் கொண்டு வகைப்படுத்தும் மருத்துவ அறிவியல், ஏறக்குறைய 200 வகைகளுக்கும் மேலான புற்றுநோய்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறது. அதாவது, இரண்டு வெவ்வேறு ஆண் (அ) பெண்களுக்கு ஒரே உறுப்பில் புற்றுநோய் வந்திருந்தாலும், அவை ஒரேவகையான புற்றுநோயாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.

அதாவது, புற்றுசெல்கள் தோன்றுமிடங்கள், அவற்றின் புற மற்றும் அக வடிவங்கள், அவற்றுள் சுரக்கும் அல்லது உள்வாங்கும் உயிர்வேதிப்பொருள்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றின் உள்வகைகள் பிரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு வரும் மார்பகப்புற்றுநோய் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இயல்பிடப் பால்குழாய்ப்புற்று (Ductal Carcinoma in situ), வன்புகு பால்குழாய்ப்புற்று (Invasive Ductal Carcinoma), அழற்சி (Inflammatory) மற்றும் உட்பரவிய மார்பகப்புற்று (Metastatic Breast Cancer) என்று நான்கு உள்வகைகளாகப் பகுத்துக் கூறப்படுகிறது. இந்த நான்கு வகையான மார்பகப்புற்று நோய்களில் ஏறக்குறைய எண்பதுக்கும் மேற்பட்ட மார்பகப்புற்று செல் வகைகள் இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறது இன்றைய புற்றுநோய் அறிவியல்.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில், அதிகமான எண்ணிக்கையில் தோன்றும் அரியவகைப் புற்றுநோய்களில் "மேசொதெளியோமா"வும் ஒன்று. கட்டுமானங்களில், வீட்டுக்கூரைகளில், தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் ஆசுபெசுடாசு (Asbestos)-வை நுகர்வதால், நுரையீரலிலும், அடிவயிறு மற்றும் இதயத்தில் உருவாகும் புற்றுநோய்தான் இது. இவ்வகையான புற்றுநோயானது, பெரும்பாலும் பணியிட மாசு நுகர்வால் (Occupational Exposure) உண்டாகும் கொடுநோயாகும். உலக அளவில், பெரும்பாலான நாடுகளில், ஆசுபெசுடாசுப் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் தொழிலகங்களில்/வீடுகளில் மேற்கூரையாக, பந்தல்களாகப் பயன்படுத்தப்படுவதும், வேலைக்குச் செல்லும் மக்கள் நுகர்வதும் குறையவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அதோடு, "மேசொதெளியோமா" இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் ஓராண்டுக்கும் மேலாக உயிர்வாழ்வதில்லை என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம். ஆனால், இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால், இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தே உண்டாக்கி, ஆசுபெசுடாசு பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்தால் மட்டுமே மக்களைக் காக்கமுடியும்.

புற்றுநோய் மருந்தாக்கம்

புற்றுநோய் ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகெங்கும், ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் உதவியோடு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு புற்றுநோய் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், மேற்சொன்ன காரணங்களால்தாம் புற்றுநோய்க்கு மருந்தாக்கம் என்பது எளிதாக இல்லை. ஆகவே, கடந்த நூற்றாண்டு முதலாக இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய்களுக்கான மருந்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அதிலும் குறிப்பாக, வேதிச்சிகிச்சையில் (Chemotherapy) பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள், புற்றுசெல்களை அழிப்பதோடு நல்லசெல்களையும் அழிப்பதால், புற்றுசெல்களைப்போல வேகமாக வளரும் முடி மற்றும் நகச்செல்கள் உதிர்வது தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகும். ஆனாலும், அதைத் தொடர்ந்து, ஒவ்வாமை, வாந்தி, இரத்த உற்பத்தி குறைந்து உடல் நலிதல், பசியின்மை, நினைவாற்றல் குறைபாடு, உயிரிழப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்குவதால் வேதிச்சிகிச்சை என்பதே வேண்டாம் என்னும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். ஆகவே, அறிவியலாளர்கள், மேற்சொன்ன குறைகளற்ற அல்லது தீவிர பக்கவிளைவுகள் குறைந்த, நல்லசெல்களை விட்டுவிட்டு புற்றுசெல்களை மட்டும் தாக்கி அழிக்கவல்ல மருந்துகளை ஆய்ந்து ஆக்க முயல்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக, அறிவியலாளர்களின் சீரிய முயற்சிகளால், Antibody Drug Conjugates (நோயெதிர்ப்பி மருந்திணைமம்) எனப்படும் புற்றுசெல்களை மட்டும் தாக்கியழிக்கும் புதுவகை மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள்

இந்த வகையான மருந்துகளை பற்றித் தெரிந்துகொள்ளும் முன்னர் 'ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி' எனப்படும் Monoclonal Antibody பற்றித் தெரிந்துகொள்வோம். ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி என்பது புற்றுச்செல்களிலிருந்து, ஆய்வகச்சூழலில் (குளோனிங் முறையில்) பிரித்தெடுக்கப்படும் ஒருவகை புரதம் (Protein) ஆகும். இந்தப்புரதங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், புற்றுச்செல்களை அழிக்கவல்ல வேதிமருந்தை இணைத்து நோயெதிர்ப்பி மருந்திணைமம் செய்யப்படுகிறது.

அவ்வாறு, மருந்திணைக்கப்பட்ட புரதம், புற்றுநோயாளியின் உடலுக்குள் ஊசிமூலமாகச் செலுத்தப்படும்போது, நேரடியாக மீண்டும் அதே புற்றுச்செல்களுக்கே செல்கிறது. அதாவது, புற்றுசெல்களிலிருந்தே இந்த வகைப் புரதங்கள் பிரித்தெடுக்கப்பட்டது என்பதால், நோயெதிர்ப்பி மருந்திணைமம் அந்தப் புற்றுச்செல்களை மட்டுமே நாடிச்செல்லும். புரதத்துடன் இணைந்த மருந்தானது, வெகு எளிதாக புற்றுச்செல்களுக்குள் மட்டும் உள்ளே சென்று DNA அழிப்பு, பிறழ்ச்சி (Mutation) போன்ற முறைகளில் செல்களைச் சுருக்கி அழிக்கும். இதனால், நல்ல செல்கள் குறைவாக அழிவதால், பக்கவிளைவுகள் குறைகின்றன.

நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றுவரை, ஏறக்குறைய பதினோரு நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்பதால் 2015ஆம் ஆண்டு முதலாக இன்றுவரை பல்வேறு புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எண்ணிக்கை ஐந்து முதல் பத்தாண்டுகள் உயர்ந்துள்ளது. அதோடு, எண்பதுக்கும் மேலான நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் கடைநிலை மருத்துவச்சிகிச்சைச் சோதனைகளில் இருக்கின்றன.

 

அண்மையில், அமெரிக்காவில் (Memorial Sloan Kettering Cancer Center, New York, USA) மலக்குடல்ப்புற்று (Rectal Cancer) நோயினால் பாதிக்கப்பட்ட பதினான்கு நோயாளிகளுக்கு dostarlimab-gxly என்னும் நோயெதிர்ப்பி மருந்திணைமம் (சோதனைக்காக) செலுத்தப்பட்டது. (N. Engl. J. Med. 2022, 386, pp 2363; DOI: 10.1056/NEJMoa2201445). இந்தச் சோதனையில், பதினான்கு நோயாளிகளும் 100% மலக்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். புற்றுநோய் மருந்தாக்கத்துறையில் இதுவொரு பெருஞ்சாதனை என்பதோடு, வெவ்வேறு வகைப் புற்றுநோய்களுக்கும் நோயெதிர்ப்பி மருந்திணைம முறையில் மருந்தாக்கலாம் என்ற நம்பிக்கையை அறிவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புற்றுநோய்களுக்கு முடிவு கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

(முனைவர் செ. அன்புச்செல்வன், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர்புதூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயிர்க்கனிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகம், போர்ச்சுகல்-இலிசுபன், இங்கிலாந்து-பர்மிங்காம் மற்றும் ஹல் பல்கலைக்கழகங்களில் புற்றுநோய் மருந்தாக்கம் மற்றும் MRI வேதியியலில் முதுமுனைவராகப் பணியாற்றியவர். ஐரோப்பிய ஆணையத்தால் வழங்கப்பெறும் மேரி-கியூரி முதுமுனைவு ஆராய்ச்சி விருதாளராகிய இவர் தற்போது பிரித்தானியாவில் Antibody Drug Conjugate Cancer Therapeutics துறையில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்)

https://www.bbc.com/tamil/science-62745134

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்

புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025இல் 15.7 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. இதில் ஆண்கள் அதிகமாக நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

குறிப்பாக 2023ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், யாருக்கெல்லாம் புற்றுநோய் வரலாம், புற்றுநோய் அறிகுறிகளை உறுதிப்படுத்திக்கொள்வது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. அவை குறித்து இங்கு பார்ப்போம்.

 

புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்?

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“உயிர்க்கொல்லி நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது புற்றுநோய். முதல் இடத்தில் இருப்பது இதய நோய். ஆனால் இதய நோய் போல் அல்லாமல், தலை முதல் கால் வரை உடலின் எந்தப் பாகமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது”, என்கிறார் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

அவரது கூற்றின்படி, தலைமுடி, நகங்கள், பற்களில் மட்டுமே புற்றுநோய் வராது. புற்றுநோயைப் பொறுத்தவரை கருப்பை, மார்பகம், நுரையீரல் புற்றுநோய்களைத் தவிர்த்து மலக்குடல் புற்றுநோய், சூல்பைப் புற்றுநோய் (Ovarian cancer), தலை மற்றும் கழுத்து புற்றுநோய் போன்றவையும் இந்தியாவில் சாதாரண நோயாக மாறி வருகிறது.

இதில் முக்கியமானது தலை மற்றும் கழுத்து புற்றுநோய். இதற்கு மிக முக்கியக் காரணம் புகையிலை. இந்தியாவில் புகை பிடிப்பது என்பது அதிகமாகி வருகிறது. சாதாரண சிகரெட், பீடி, சுருட்டு தவிர்த்து, புகையிலையை மெல்கிறார்கள், இ-சிகரெட்டுகளை புகைக்கிறார்கள். பல இளைஞர்கள் கூல் லிப் எனப்படும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள்.

"சிறுவயதிலேயே இத்தகைய பழக்கங்கள் உருவாகின்றன. புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் இந்தப் பழக்கங்கள் பெரும் பங்காற்றுகின்றன” என்கிறார் மருத்துவர் ரத்னா தேவி. இதுமட்டுமின்றி தவறான உணவுப் பழக்கங்களும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார் அவர்.

“பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பக புற்றுநோய்க்கு மோசமான உணவுப் பழக்கம் ஒரு காரணமாக உள்ளது. எந்த வகையான உணவுகளை, எந்த நேரத்தில், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.”

 

புற்றுநோய் எந்தெந்த வழிகளில் ஏற்படும்?

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்
படக்குறிப்பு,

அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

“உணவுப் பழக்கம் தவிர்த்து வைரஸ் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படலாம். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றால் இது ஏற்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குதப் புற்றுநோய் (Anal cancer) போன்றவை இந்த வைரஸால் உருவாகின்றன. ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரையும் இது தாக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து இது வருகிறது.

இந்த வகை வைரசுக்கு இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. போலியோ தடுப்பூசிகள் போல 9 முதல் 13 வயது வரை உள்ளவர்கள் வரும் முன் காக்கும் நடவடிக்கையின்படி அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை,” என்கிறார் மருத்துவர்.

“புற்றுநோய் ஏற்படுவதற்கு மரபணு காரணங்களும் உள்ளன. உணவுகளில் செய்யப்படும் கலப்படம், மாசுபட்ட காற்றை சுவாசித்தல், மாசடைந்த நீரைத் தொடர்ந்து பருகுதல், இப்படிப் பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. எனக்கெல்லாம் புற்றுநோய் வராது என யாரும் நினைக்க முடியாது,” என்று கூறுகிறார் மருத்துவர் ரத்னா தேவி.

புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய, மாநில அரசுகள் சார்பாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, இந்தியாவில் கணிசமான பேருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறிகுறிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது.

  • எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேலாகக் குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் பரவ ஆரம்பித்த பிறகு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
  • ஓய்வெடுத்தாலும் தீராத உடல் சோர்வும் ஒரு அறிகுறி. ரத்தப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம். சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத ரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.
  • தோலில் ஏற்படும் மாற்றங்களான சருமம் கருமையாகுதல் (hyperpigmentation), தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice), தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus), அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகிய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இவை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.
  • மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் ரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

  • ஆறாத வாய்ப் புண், வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.
  • புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • மறுபுறம், மலத்தில் ரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சிறுநீரில் ரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • முலைக் காம்பிலிருந்து ரத்தம் கசிவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும். இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.
  • தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் இவை ஏற்படுகின்றன.
  • தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
 

இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பது ஏன்?

புற்றுநோய் என்றாலே மரணம் தான் என்ற போலி பிம்பம் உடைக்கப்பட வேண்டும் என்கிறார் மருத்துவர்  ரத்னா தேவி.  “எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் அது ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகம். செய்ய வேண்டியது எல்லாம் சில எளிய பரிசோதனைகளே. அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது.  தங்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனே இந்த சோதனைகளைச் செய்தால் தெரிந்துவிடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டும் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் கூட குணமாவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.  இப்போதும் கூட காசநோய்க்கு சிலரை நாம் இழக்கிறோம் அல்லவா. அது போல தான், ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்” என்கிறார் மருத்துவர்.  “எப்படி இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம், சிகிச்சை எடுக்கிறோம். அதுபோல புற்றுநோய் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு, முழு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமாக்களைப் பார்த்து புற்றுநோய் என்றால் குணப்படுத்தவே முடியாது. நிச்சயம் மரணம் தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.  அது தவறு, எத்தனையோ பேர் சிகிச்சை எடுத்து குணமாகி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர், எந்த அறிகுறியும் இல்லாத போதும் கூட வழக்கமான உடல் பரிசோதனைகள் மூலம் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து கொண்டார்கள்.  எனவே கண்டிப்பாக, அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் வந்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் என இல்லை, முக்கியமாக நாற்பது வயதைக் கடந்தவர்கள். நமக்கு வயதாகும் போது புற்றுநோய் அபாயமும் அதிகமாகிறது” என எச்சரிக்கிறார் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியர்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது ஏன் என்பது குறித்தும் விளக்கினார் மருத்துவர் ரத்னா தேவி.

“இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மைதான். பலரும் புற்றுநோய் சோதனைகளைச் செய்ய முன்வருகிறார்கள். இதனால் புதிய புற்றுநோயாளிகள் குறித்த தரவுகள் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகின்றன,” என்கிறார் மருத்துவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அறிவியில் வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. பலரும் தங்கள் உடல்நிலை குறித்து இப்போது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு கவலை கொள்கிறார்கள்.

முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் தங்கள் உடலில் இருக்கும் நோய்கள் மற்றும் அபாயங்கள் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.

கைப்பேசி மூலமாகப் பல அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு, மருத்துவர்களை அணுகுகிறார்கள். அரசும் பல பரிசோதனை முகாம்களை நடத்துகிறது. சமீபத்தில் கரூரில் நடத்தப்பட்ட முகாம் மூலம் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டார்கள்.

புற்றுநோய் எந்தளவு அதிகரித்து வருகிறதோ அதே அளவு வேகமாக மருத்துவ அறிவியலும் முன்னேறி வருகிறது. எனவே இதற்கான தீர்வுகளும் நம்மிடம் உள்ளன,” என்கிறார் மருத்துவர்.

 

புற்றுநோய் பரிசோதனைகளை எங்கு செய்யலாம்?

புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற போலி பிம்பம் உடைக்கப்பட வேண்டும் என்கிறார் மருத்துவர் ரத்னா தேவி.

“எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் அது ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகம். செய்ய வேண்டியது எல்லாம் சில எளிய பரிசோதனைகளே. அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது.

தங்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனே இந்த சோதனைகளைச் செய்தால் தெரிந்துவிடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டும் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால்கூட குணமாவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்," என்று விளக்கினார் அவர்.

ஆனால் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறார் மருத்துவர்.

புற்றுநோய் அபாயம் எப்போது அதிகமாகிறது?

புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம், சிகிச்சை எடுக்கிறோம். அதுபோல புற்றுநோய் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு, முழு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமா பார்த்து புற்றுநோய் என்றால் குணப்படுத்தவே முடியாது, நிச்சயம் மரணம்தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

அது தவறு, எத்தனையோ பேர் சிகிச்சை எடுத்து குணமாகி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர், எந்த அறிகுறியும் இல்லாத போதும்கூட வழக்கமான உடல் பரிசோதனைகள் மூலம் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

எனவே கண்டிப்பாக, அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் வந்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் என இல்லை, முக்கியமாக நாற்பது வயதைக் கடந்தவர்கள். நமக்கு வயதாகும்போது புற்றுநோய் அபாயமும் அதிகமாகிறது,” என எச்சரிக்கிறார் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

https://www.bbc.com/tamil/articles/c3ge14e813vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.