Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர்

பட மூலாதாரம்,RAJAB FAMILY

படக்குறிப்பு,

ஹிந்த் ரஜாப்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூசி வில்லியம்சன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 5 நிமிடங்களுக்கு முன்னர்

காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமியின் காணாமல் போயிருக்கும் சம்பவம் காஸாவின் மனிதநேயச் சிக்கலைப் பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. காணாமல் போகும் முன் அந்தச் சிறுமி செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் பேசிய தொலைபேசி அழைப்பில் அவர் என்ன சொன்னார்?

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பாலத்தீனத்தின் மனிதநேய உதவி நிறுவனமான ரெட் கிரெசன்டின் உதவி மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியது ஒரு ஆறு வயது சிறுமியின் பயந்த குரல். “எனக்கு அருகே இருக்கும் டாங்கி நகர்கிறது,” என்றார் அந்தச் சிறுமி.

உதவி மையத்தில் இருந்த ராணா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாகப் பேசினார். “அது மிகவும் அருகில் இருக்கிறதா?”

“மிகவும் அருகில் இருக்கிறது,” என்றது அந்தச் சிறுமியின் குரல். “எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?”

அந்தத் தொலைபேசி உரையாடலை நீட்டிப்பதைத் தவிர ராணாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆறு வயதாகும் ஹிந்த் ரஜாப், காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கிக்கொண்டார். அவரது மாமாவின் காரில், தனது உறவினர்களின் உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு உதவிக்காக மன்றாடினார்.

இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிய குடும்பம்

இஸ்ரேல் ராணுவம், காஸா நகரத்தின் மேற்குப் பகுதியிலிருந்து மக்களை தெற்கு நோக்கி கடற்கரைச் சாலை வழியே இடம்பெயரச் சொன்னதைத் தொடர்ந்து, ஹிந்த் ரஜாப் தனது மாமா, அத்தை மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் காஸா நகரை விட்டு வெளியேறினார்.

ஹிந்தின் டாய் விஸ்ஸாம் தங்களது பகுதியில் தீவிரமான குண்டு வீச்சு நடந்ததை நினைவுகூர்கிறார். “நாங்கள் அதிர்ந்து போயிருந்தோம். தப்பிக்க விரும்பினோம். வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க இடம்விட்டு இடம் ஓடினோம்,” என்கிறார் அவர்.

அவர்கள் காஸா நகரத்தின் கிழக்கில் இருந்த அஹ்லி மருத்துவமனை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து அங்கு சென்று தஞ்சம் புக முடிவெடுத்தனர்.

விஸ்ஸாமும் அவரது மூத்த குழந்தைகளும் நடந்து செல்ல முடிவுசெய்தனர். ஹிந்த் ரஜாபை அவரது மாமாவின் காரில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

“அன்று முகவும் குளிராக இருந்தது. மழை பெய்தது. அதனால் ஹிந்தை காரில் போகச் சொன்னேன்,” என்கிறார் தாய் விஸ்ஸாம்.

கார் கிளம்பியதுமே அதே திசையிலிருந்து பலத்த துப்பாக்கிச்சூடு கேட்டதாக அவர் தெரிவித்தார்.

ஹிந்தின் மாமா பிரசித்தி பெற்ற அல்-அஸார் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம் செய்தார். வழியில் அவர்கள் இஸ்ரேலிய டாங்கிகளை நேருக்குநேர் சந்தித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் காரை அருகிலிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குச் செலுத்தினார்கள். அங்கு அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

 
இஸ்ரேல் ஹமாஸ் போர்

உதவிக்காக மன்றாடிய குடும்பம்

காருக்குள்ளிருந்து அவர்கள் உதவிக்காக உறவினர்களை அழைத்தனர். அவர்களில் ஒருவர் பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டைத் தொடர்புகொண்டார். அந்த அலுவலகம், 80கி.மீ. தொலைவில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ளது.

அப்போது நேரம் மாலை 6 மணி (இந்திய நேரப்படி). ரெட் கிரெசன்ட் உதவி மையத்திலிருந்தவர்கள் ஹிந்தின் மாமாவுடைய அலைபேசிக்குத் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது 15 வயது மகள் லயன் தான் பதிலளித்தார். பதிவுசெய்யப்பட்ட அந்த அழைப்பில், லயன், தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறார். அவர்களது காருக்கருகில் ஒரு டாங்கி இருப்பதாகக் கூறுகிறார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஒரு அலறலோடு அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரல் பயத்தில் கம்மியிருந்தது. அந்தக் காரில் பிழைத்திருந்தது அவர் மட்டும்தான் என்பதும் அவர் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ளார் என்பதும் தெளிவானது.

“இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர்.

தொலைபேசியில் உரையாடிய ராணா பகிஹ், சிறுமி ஹிந்துடன் சில மணிநேரம் தொடர்பிலிருந்தார். அதேவேளை ரெட் கிரெசன்ட், இஸ்ரேலிய ராணுவத்திடம், அவர்களது ஆம்புலன்ஸை அவ்விடத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

“அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். உதவிக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்,” என்கிறார் ராணா. “தனது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறினாள். பிறகு அவர்கள் ‘உறங்கிக் கொண்டிருப்பதாகக்’ கூறினாள். நாங்கள் ‘அவர்களை உறங்கவிடு, தொந்தரவு செய்யாதே’ என்றோம்,” என்கிறார்.

ஹிந்த் மீண்டும்மீண்டும் தன்னை யாராவது வந்து காப்பாற்றும்படிக் கேட்டார்.

“ஒரு கட்டாயத்தில் இருட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் பயந்து போயிருந்தாள். எனது வீடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டாள். நான் செய்வதறியாமல் உறைந்து போனேன்,” என்று ராணா பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
படக்குறிப்பு,

சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா

தொடர்பு துண்டாகும் முன் சிறுமி என்ன சொன்னார்?

இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.

அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ரானா.

“அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம்.

மாலை இருட்டியபின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, ரெட் கிரெசன்ட் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன.

ஹிந்தின் தொலைபேசி இணைப்பு இன்னும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அவரது தாய் விஸ்ஸாம் கார் திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்தார்.

 

மகளுக்காக காத்திருக்கும் தாய்

பிபிசியிடம் பேசிய சிறுமியின் தாய் விஸ்ஸாம், “ஒவ்வொரு நொடியும் என் இதயம் வெடிக்கிறது,” என்று “ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஒலியைக் கேட்கும்போதும் ‘அது அவள்தான்’ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வெடிச் சத்தம் கேட்கும் போதும் என் மகளுக்கு என்ன ஆனதோ என்று மனம் பதறுகிறது,” என்கிறார் அவர்.

காஸாவின் ரெட் கிரெசன்ட் குழுக்களாலும், ஹிந்தின் குடும்பத்தினராலும் அந்த இடத்தை அடைய முடியவில்லை. அவ்விடம் இன்னும் சண்டை நடக்கும் பகுதியில் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதைக் கட்டுப்படுத்துகிறது.

ஹிந்துடன் தொலைபேசியில் பேசிய ராணா, “இரவில் தூங்குவதே சிரமமாக உள்ளது. எழுந்தால் அவளது குரல்தான் காதில் கேட்கிறது,” என்கிறார்.

இஸ்ரேலிய ராணுவத்திடம் அன்று அப்பகுதியில் நடந்த தாக்குதல் குறித்தும், ஹிந்த் குறித்தும், அவரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் குறித்தும் பிபிசி கேட்டது. ஒருநாள் கழித்து மிண்டும் கேட்டது. இஸ்ரேலிய ராணுவம் அதுபற்றி விசாரித்து வருவதாகக் கூறினர்.

தனது மகள் காணாமல்போய் ஒருவாரம் கழித்தும், விஸ்ஸாம் அஹ்லி மருத்துவமனையில் அவருக்காகக் காத்திருக்கிறார். “அவளது பொருட்களை எடுத்து வந்திருக்கிறேன். அவளுக்காகக் காத்திருக்கிறேன். ஒரு மனமுடைந்த தாயாகக் கேட்கிறேன், இதனை யாரும் மறந்துவிடாதீர்கள்,” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv2931y3pvvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வயது சிறுமியை கொன்றதா இஸ்ரேல் ராணுவம்? போனில் மன்றாடிய சிறுமிக்கு கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது?

காஸா, இஸ்ரேல் ஹமாஸ் போர்

பட மூலாதாரம்,RAJAB FAMILY

படக்குறிப்பு,

சிறுமி ஹிந்த் ரஜாப்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூசி வில்லியம்சன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த மாதம் காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜாப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களின் உடல்கள் இருந்த காரில் சிறுமியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை காப்பாற்ற முயன்ற இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் உடல்களும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டன.

இஸ்ரேலிய டாங்கிகள் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹிந்த் ரஜாப் என்ற இந்த சிறுமி தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக காஸா நகரிலிருந்து தனது மாமா மற்றும் அத்தையுடன் காரில் தப்பித்து சென்று கொண்டிருந்தார். மேலும் அவரது மாமாவின் பிள்ளைகள் மூவர் அந்த காரில் இருந்தனர்.

ஹிந்த் ரஜாப் மற்றும் அவசர உதவிக்கு போன் செய்து பேசிய இறுதி உரையாடல் பதிவுகள் மூலம், அப்போது காரில் உயிர் பிழைத்திருந்தவர் ஹிந்த் ரஜாப் மட்டுமே என தெரியவந்தது. இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்ற, இறந்த உறவினர்களின் உடல்களுக்கு இடையே அவர் மறைந்திருந்தார்.

யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவர் தொலைபேசியில் கெஞ்சினார், ஆனால் திடீரென்று பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டது, பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அவசரகால ஊழியர்களால் ஹிந்த் ரஜாப் உடன் பேச முடியவில்லை.

பல நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

போர் காரணமாக இந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன. சனிக்கிழமையன்று, பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட் (PRCS) பணியாளர்களால் அந்தப் பகுதியை அடைய முடிந்தது.

ஹிந்தின் குடும்பத்தினர் பயணம் செய்த கருப்பு கியா காரை அவர்கள் கண்டுபிடித்தனர். இதில் காரின் கண்ணாடி மற்றும் டேஷ்போர்டு கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது. காரில் டஜன்கணக்கான புல்லட்கள் துளைத்ததற்கான அடையாளங்கள் தெளிவாகக் காணப்பட்டன.

காருக்குள் ஹிந்த் ரஜாப் உட்பட ஆறு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெட் கிரெசன்ட் ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனைவரது உடலிலும் தோட்டாக் காயங்கள் காணப்பட்டன என்றார்.

இந்த காரில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு கார் எரிந்து நாசமாகி கிடந்தது. மேலும் இந்த காரின் இன்ஜின் வெடித்து சாலையில் சிதறிக் கிடந்தது.

அது உண்மையில் ஹிந்த் ரஜாபைத் தேடி அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

இந்த ஆம்புலன்சில் யூசுப் அல்-சீனோ மற்றும் அகமது அல்-மதூன் ஆகியோர் பயணித்ததாகவும், அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

காஸா, இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ்களை குறிவைத்ததாக தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட். ஜனவரி 29 அன்று, ஹிந்தின் கார் இருந்த இடத்தை ஆம்புலன்ஸ் சென்றடைந்தவுடன், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, "ஹிந்த் ரஜாபைக் காப்பாற்றுவதற்காக இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப ரெட் கிரெசன்ட் குழு தேவையான அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால் இந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியப் படைகள் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினரை வேண்டுமென்றே குறிவைத்தன."

ரெட் கிரெசன்ட் குழு பிபிசியிடம் கூறியதாவது, "ஹிந்த் ரஜாபுக்கு உதவுவதற்கு இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து பல மணிநேரம் போராடி அனுமதி பெற வேண்டியிருந்தது"

அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிபால் ஃபர்சாக், ஒரு வாரத்திற்கு முன்பு பிபிசியிடம் பேசியபோது, "நாங்கள் ஒருங்கிணைந்து முயற்சி செய்து இதற்கான கிரீன் சிக்னல் பெற்றோம். அங்கு சென்றதும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் ஹிந்த் ரஜாப் மறைந்திருந்த காரைக் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர். அவர்களால் அந்த காரைப் பார்க்க முடிந்தது. நாங்கள் கடைசியாகக் கேட்டது துப்பாக்கிச் சத்தம் தான்" என்று கூறியிருந்தார்.

காஸா, இஸ்ரேல் ஹமாஸ் போர்

முடிவில்லாத காத்திருப்பு

அவசர அழைப்பு ஆபரேட்டருடன் ஹிந்த் ரஜாப் பேசிய முழு தொலைபேசி உரையாடலையும் பொதுவில் வெளியிட்டது செஞ்சிலுவைச் சங்கம். மேலும், ஹிந்த் ரஜாப்புக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஒரு பிரசாரத்தைத் அது தொடங்கியுள்ளது.

ஹிந்த் ரஜாப்பின் தாய் விஸ்ஸாம் பிபிசியிடம் கூறுகையில், "என் மகள் எந்த நேரத்திலும் என் முன்னால் வந்து நிற்பாள் என்ற நம்பிக்கையில், அவள் உடல் கிடைக்கும் வரை இரவும் பகலும் காத்திருந்தேன்." என்கிறார்.

ரஜாப்பின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

ஹிந்த் ரஜாப்பின் தாயார் பிபிசியிடம், "எனது குரலைக் கேட்டவர்கள், என் மகளின் உதவிக்காக கெஞ்சும் குரலைக் கேட்டவர்கள், ஆனால் அவளைக் காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் அனைவரையும் இறுதித்தீர்ப்பு நாளில் கடவுளின் முன் நிற்க வைத்து கேள்வி கேட்பேன்" என்று கூறினார்.

"காஸா மற்றும் அதன் மக்களைத் தாக்க, நெதன்யாகு, பைடன் மற்றும் அவர்களுடன் கைகோர்த்த அனைவருக்கும், நான் என் இதயத்திலிருந்து வணக்கம் செலுத்துகிறேன்." என்று அவர் கூறுகிறார்.

மருத்துவமனையில் தன் மகளைப் பற்றிய செய்திக்காக கையில் ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற பையுடன் காத்திருந்தார் தாய் விஸ்ஸாம். அந்த பையை அவர் ஹிந்த் ரஜாப்புக்கு கொடுக்க வைத்திருந்தார். அதில் ஒரு நோட்புக் இருந்தது, அதைத் தான் கையெழுத்துப் பயிற்சிக்காக சிறுமி ஹிந்த் பயன்படுத்தி வந்தார்.

"இன்னும் எத்தனை தாய்மார்கள் இதுபோன்ற வலியை அனுபவிக்க வேண்டுமென காத்திருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை குழந்தைகள் இறக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேள்வியெழுப்புகிறார் விஸ்ஸாம்.

 

போரின் போது கடைப்பிடிக்கப்படும் விதிகள்

அன்றைய இராணுவ நடவடிக்கை, ஹிந்த் காணாமல் போனது மற்றும் அவரைத் தேடச் சென்ற ஆம்புலன்ஸ் பற்றிய தகவல்களை பிபிசி இரண்டு முறை இராணுவத்திடம் கேட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ளவும் சனிக்கிழமையன்று இஸ்ரேல் இராணுவத்தையும் பிபிசி தொடர்பு கொண்டது.

போர் விதிகள் பற்றி பேசுகையில், "மருத்துவ ஊழியர்கள் போரின் போது களத்தில் குறிவைக்கப்படுவதில்லை, மாறாக அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி விரைவில் வழங்கப்படுகிறது." என்று இராணுவத் தரப்பு கூறுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காஸா நகரங்கள் மீது விரைவான தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கியது இஸ்ரேல்.

மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப் பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸ் போராளிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் தங்கள் போராளிகளை ஏற்றிச் செல்வதாகவும் இஸ்ரேல் முன்பு கூறியிருந்தது.

அவசர எண்ணில் கடைசியாக பேசிய ஹிந்த் ரஜாப்

ரெட் கிரெசன்ட் குழுவின் ராணாவுடன் இறுதியாக தொலைபேசி மூலம் பேசியிருந்தார் ஹிந்த் ரஜாப்.

“எனக்கு எதிரே ஒரு டாங்கி இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து வருகிறது” என்று அந்த தொலைபேசி அழைப்பில் கூறியிருந்தார்.

“அது மிகவும் அருகில் இருக்கிறதா?” எனக் கேட்டார் ராணா.

அதற்கு ஹிந்த், "மிகவும் அருகில் இருக்கிறது, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?” எனக் கேட்டிருந்தார்.

 

ஹிந்தின் குடும்பம் எங்கே போனது?

ஜனவரி 29 அன்று, காஸா நகரின் மேற்கே வாழும் மக்களை கடல் எல்லையை ஒட்டிய சாலை வழியாக தெற்கே செல்லுமாறு கேட்டுக் கொண்டது இஸ்ரேலிய இராணுவம்.

ஹிந்தின் குடும்பம் காஸா நகரில் இருந்தது. அவரது குடும்பம் கிழக்கு நோக்கி சென்று அல்-அஹ்லி மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தது. இந்த இடம் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார்கள். அப்பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடந்ததாக விஸ்ஸாம் கூறுகிறார்.

"நாங்கள் மிகவும் பயந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்ற, வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓடிக் கொண்டிருந்தோம்."

விஸ்ஸாமும் அவரது மூத்த பிள்ளைகளும் மருத்துவமனையை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

"அதிக குளிராக இருந்தது, மழையும் பெய்து கொண்டிருந்தது. மாமாவின் காரில் செல்லும்படி ஹிந்திடம் கேட்டுக் கொண்டேன். அவர் மழையில் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை." என்று கூறுகிறார் விஸ்ஸாம்.

மாமாவின் கியா பிகாண்டோ காரில் ஏறி அமர்ந்தாள் ஹிந்த். காசாவின் புகழ் பெற்ற அல்-அசார் பல்கலைக் கழகத்தை நோக்கி அந்த கார் சென்று கொண்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காருக்கு முன்னால் இஸ்ரேலிய டாங்கிகள் வந்தன.

உதவிக்காக பரிதவித்த குடும்பம்

காரில் இருந்தவர்கள் அங்கிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டின் அவசரகால தலைமையகத்தை உதவிக்கு தொடர்பு கொண்டனர். சிறிது நேரம் கழித்து, மதியம் 2.30 மணியளவில், ரெட் கிரெசன்ட் குழு ஹிந்தின் மாமாவை தொடர்பு கொண்டார். 15 வயது லயன் அப்போது பேசினார்.

தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என கூறினார் லயன். தனது காருக்கு அருகில் ஒரு டாங்கி இருப்பதாகவும், அது காரை நோக்கி தொடர்ந்து குண்டுகளை வீசுவதாகவும் கூறியிருந்தார். துப்பாக்கிச் சத்தத்திற்கு நடுவே, பலத்த அலறல் சத்தம் கேட்டது. பின்னர் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரலில் அதிக பயம் தெரிந்தது. காரில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும், தான் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் கூறினார் ஹிந்த்.

“இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர்.

ஹிந்த் ரஜாப் உடன் சில மணிநேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் ராணா பகிஹ். அதேநேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தைத் தொடர்புகொண்ட ரெட் கிரெசன்ட் குழு, தங்களின் ஆம்புலன்ஸ்களை நகருக்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தது.

 

தோல்வியில் முடிந்த மீட்பு முயற்சி

காஸா, இஸ்ரேல் ஹமாஸ் போர்
படக்குறிப்பு,

சிறுமியின் தாத்தா பஹா ஹமாதா

இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.

அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ராணா.

“அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம்.

மாலை இருட்டிய பின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன.

ஹிந்தின் தொலைபேசி இணைப்பு மேலும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அப்போது அவரது தாய் விஸ்ஸாம் கார் கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1619we6326o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.