Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 08:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என என்றார்.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,RAJ BHAVAN, TAMILNADU/X

படக்குறிப்பு,

தலைப்பாகை அணிந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஆர்.என். ரவி.

வலுக்கும் எதிர்ப்பு

வைகோ வெளியிட்ட அறிக்கையில், “சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாகத் திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்துத்துவா கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி, “ஆளுநர் வெளியிட்ட புத்தகம், அய்யா வைகுண்டர் வரலாற்றை திரிக்கும் முயற்சி. சனாதனத்தின் வேராக மனுதர்மம் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிரான செயல்களைத்தான் அய்யா வைகுண்டர் செய்திருக்கிறார்."

"பெண்ணடிமைத்தனம், சாதியத்திற்கு எதிரானவற்றை தான் செய்திருக்கிறார். இவை இரண்டுக்கும் ஆதரவானது சனாதனம். புராணமும் ஆகமங்களும் பொய்யானவை என கூறியிருக்கிறார். வைகுண்டரை அறிந்துகொண்டு தான் பேச வேண்டும். அவர் பேசியது தவறானது” என்றார்.

மேலும் பேசிய அவர், “பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என்ற அடக்குமுறையெல்லாம் எதிர்த்தவர் அய்யா. இந்த வழிபாட்டில், உருவ வழிபாடு, பூஜை, புனஸ்காரம், ஹோமம் வளர்த்தல், யாகங்கள், மந்திரங்கள் இல்லை, அவரவர் தாய்மொழியிலேயே வழிபட முடியும். சமஸ்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் எனக்கூறும் சனாதனத்தை இதில் ஒப்பிடக் கூடாது” என்றார்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டின் தனித்துவம் என்ன? அய்யா வைகுண்டர் உண்மையில் சனாதனத்தைப் பாதுகாத்தவரா? அய்யா வைகுண்டர் வழிபாட்டை பின்பற்றுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

அய்யா வைகுண்டர் யார்?

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். “அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி” என்கிறார், வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்.

அக்காலத்தில், கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளடங்கியிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் ஆட்சியின்கீழ் நாடார்கள், ஈழவர்கள் உள்ளிட்ட 18 தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது ஒடுக்குமுறைகள் நிலவிவந்தன.

பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என பல அடக்குமுறைகள் நிலவியதாக கூறுகிறார், ஆ.சிவசுப்பிரமணியன்.

பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொடும் அடக்குமுறைகள் நிலவியதாக குறிப்பிடுகிறார் அவர். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்களும் அவரை பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர்.

“அய்யா வைகுண்டரை நாடார்கள் அதிகம் வழிபடுகின்றனர். அந்த சமூகத்தினருக்கு அவர் ஓர் எழுச்சியை உருவாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலை வரி போட்டிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு வரி கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியிருக்கின்றனர். என்னென்ன வரிகள் போட்டிருக்கின்றனர் என்பதை அவரே பாடியிருக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் அடிப்பார்கள்.

‘கருப்பட்டி கேட்டடிப்பான். பனை நுங்கு கேட்டடிப்பான்’ என அய்யா வைகுண்டரே பாடியிருக்கிறார்” என்கிறார், சிவசுப்பிரமணியன்.

அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான மக்கள், தங்களை மீட்க வந்தவராக அய்யா வைகுண்டரை கருதி அவரை கடவுளாக வழிபடும் போக்கு தோன்றியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக இயங்கினார்” என்கிறார் அவர்.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
படக்குறிப்பு,

ஆ. சிவசுப்பிரமணியன்

அய்யா வைகுண்டர் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த வழிபாடு அகிகமாக இருக்கிறது. சென்னையில் மணலி புதூர் பகுதியில் இதற்கென வழிபாட்டுத்தலம் உள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் பெங்களூரு, மும்பையில், இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறது.

சாதிக்கு அப்பாற்பட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டாலும் நாடார் சமுதாயத்தினரே அய்யா வைகுண்டரை பெரும்பாலும் வழிபடுகின்றனர்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. வழிபாட்டு தலத்தில் நிலைக்கண்ணாடியைத்தான் வைத்து வழிபடுவர். பூஜைகள், அர்ச்சனைகள் இல்லை. பலியிடுதல், தீப ஆராதனைகள் கிடையாது. விளக்கேற்றி அதன் ஒளியைத்தான் வழிபடுவர்.

அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய இரண்டு நூல்கள்தான் இந்த வழிபாட்டின் அடிப்படை.

“அகிலத்திரட்டு அம்மானை முற்றோதல் விழா ஊர்கூடி பத்து நாட்கள் நடத்துவர்” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

அய்யா வைகுண்டர் கோவிலுக்கு வரும் ஆண்கள், சட்டை அணிந்திராமல், தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்.

“தலைப்பாகை அணிவது, சாதிய ஒடுக்குமுறைகளின் ஓர் அங்கம். எல்லோராலும் தலைப்பாகை அணிய முடியாது. அதை ஒழிக்கவே, தலைப்பாகை அணிந்து அவரை வழிபடுகின்றனர். இதுவொரு வகையில் மரபு மீறல்” என்கிறார், ஆ. சிவசுப்பிரமணியன்.

ஹோமம் வளர்த்து, வேதங்கள் ஓதுவது அய்யா வழி திருமணங்களில் இல்லை, கணவர் இறந்தால் தாலியை கழற்றும் வழக்கமும் இல்லை என வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“இப்படி, ஆகம, வேதங்களுக்கு எதிராகத்தான் வைகுண்டர் இருந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி சான்று வலு இல்லாமல் பேசக்கூடாது. குழந்தை திருமணம், கல்வி மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் எல்லாவற்றையும் தான் சனாதனமும் வைதீகமும் போதிக்கிறது. இதனை எதிர்த்தவர் வைகுண்டர். புனித நூல்களை எல்லோராலும் படிக்க முடியாது என்பதுதான் சனாதனம். வேதம் ஓதுவதை மறைந்திருந்து கேட்டவர்களின் காதுகளில் ஈயத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் சனாதனம். ஆளுநரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.” என்றார், ஆ.சிவசுப்பிரமணியன்.

 

வழிபடுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

தன் தாத்தாவின் காலத்திலிருந்து அய்யா வைகுண்டரை தங்கள் குடும்பம் வழிபடுவதாக கூறுகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்சங்கர்.

“அகிலத்திரட்டு அம்மானையில் வாழ்க்கை நெறிமுறைகள் கூறப்பட்டிருக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்தன. சாதிய அடக்குமுறைகள் அதிகமாக இருந்தன. தீண்டாமையும் வரிகளும் விதிக்கப்பட்டன. அப்போது பனையேற்று தொழில்தான் முதன்மை தொழில். பதநீர் எடுப்பதற்கும் நுங்கு, ஓலை எடுப்பதற்கும் வரிகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து அகிலத் திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் இதை எதிர்த்து சண்டை போடவில்லை, மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்” என்கிறார் அவர்.

'விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ’ என கூறியிருக்கிறார். `இறைவன் முன்பு அனைவரும் சமம்` என்று கூறியவர். அனைத்து சாதி மக்களும் ஒன்றாக அமர்ந்து அன்னதானத்தில் சாப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது” என இந்த வழிபாட்டு முறை குறித்து பிரேம் சங்கர் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,BHAVAN, TAMILNADU/X

வாக்குக்காக கவர நினைக்கிறதா பாஜக?

பாஜக குறித்து பாலபிரஜாபதி கூறுகையில், “அய்யா வைகுண்டரை அவர்கள் (பாஜக) எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இதுகுறித்து பேசியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், 4-5 மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை கணிசமான எண்ணிக்கையில் வழிபடுபவர்களை கவர வேண்டும் என பார்க்கிறார்கள்” என்றார்.

பாஜக என்ன சொல்கிறது?

“ஆளுநர் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து பாஜக சார்பாக என்ன சொல்ல முடியும்? ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்” என, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அய்யா வைகுண்டர் அவதார விழா அன்று, அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு பாஜக, பிரதமர் மோதியின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

இந்தாண்டும் பிரதமர் ‘எக்ஸ்’ தளத்தில்,“அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதகுலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான, எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cg3q65xy8n8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.