Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
MH370: மாயமான மலேசிய விமானம் - 10 ஆண்டுகளாக விலகாத பெரும் மர்மம்; வேதனையில் குடும்பத்தினர்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் ஹெட்
  • பதவி, பிபிசி செய்திகள் கோலா லம்பூர்
  • 8 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 மார்ச் 2024

லி எர்யோவின் காதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’.

லி எர்யோவின் மகன் யான்லின் சென்ற MH 370 விமானம் காணாமல் போனபோது, இதுதான் மலேசிய ஏர்லைன்ஸ் , அவரிடம் சொன்ன இரண்டு வார்த்தைகள்.

“பல ஆண்டுகளாக ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்றால் என்னவென கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள இயலும்தானே” என்கிறார் லி.

தெற்கு பெய்ஜிங்கில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான லி எர்யோ மற்றும் அவரது மனைவி லியு ஷுயாங்ஃபெங் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். உலக வான் சேவை வரலாற்றின் மிகப்பெரிய மர்மத்தை விளங்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

மாயமானவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் மலேசியாவில் அனுசரிக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள், மலேசியாவின் தலைநகர் கோலா லம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது MH370 விமானம். போயிங் 777 வடிவமைப்புடன் 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் தாங்கிக் கொண்டு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மலேசிய வான் சேவை கட்டுப்பாட்டு அரங்கத்து நன்றி தெரிவித்து விட்டு, வியட்னாம் வான் பரப்பில் நுழையவிருந்தது MH 370.

பத்து ஆண்டுக்கால பெருந்துயரம்

திடீரென விமானம் வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து மின்னணு தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் மலேசியா நோக்கி அந்த விமானம் வந்தது. பின் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது எங்கோ பறந்துகொண்டிருந்தது. அதன் எரிபொருள் தீரும் வரை அங்கேயே பறந்து கொண்டிருந்தது என்று யூகிக்கப்படுகிறது.

மிகத் தீவிரமான அதிக செலவிலான தேடுதல் பணி நடத்தப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் காணாமல் போன விமானத்தின் ஒரு துரும்புகூடக் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், இளம் புலனாய்வாளர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்பமான தகவல்களைக் கொண்டு, MH370 தனது பயணத்தை எங்கு முடித்திருக்கும் எனக் கணக்கிட முயன்றுள்ளனர்.

MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

தேடுதல் பணியைத் தொடர்வதற்கான போராட்டம், MH 370க்கு உண்மையில் என்ன நேர்ந்தது எனக் கண்டறிவது, என இவை அனைத்தும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து ஆண்டு கால பெருந்துயரத்தைக் கொடுத்துள்ளது.

இந்த பிரசாரத்துக்கு ஆதரவு திரட்ட லி உலகம் முழுவதும் பயணித்துள்ளார். தனது சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி ஆசியா, ஐரோப்பா, விமானத்தில் சில எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட மடகாஸ்கரின் கடற்கரைகளுக்கும் சென்று வந்துள்ளார்.

தனது மகன் இருந்திருக்கும் மணலைத் தொட்டு உணர வேண்டும் என்கிறார். இந்திய பெருங்கடல் முன்பு நின்றுகொண்டு “யான்லின், நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்,” என்று ஓலமிட்டு அழுததை நினைவு கூர்கிறார் அவர்.

“எனது மகனைக் கண்டுபிடிக்க இந்த உலகின் இறுதி வரை செல்வேன்,” என்று லி கூறுகிறார்.

 

சீனாவில் ஹேபே மாகாணத்தின் கிராமப்புற பகுதி ஒன்றில் வசித்து வருகின்றனர் லி மற்றும் அவரது மனைவி. அவர்களுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இளமைக் காலத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கே அவர்களது வருமானம் முழுவதும் செலவிடப்பட்டது. உலகத்தைச் சுற்றிப் பார்க்க எந்த பணமும் இருந்ததில்லை.

அவர்கள் கிராமத்தில் இருந்து முதன்முதலில் பல்கலைழகத்துக்குச் சென்று படித்தது யான்லின் தான். வெளிநாட்டில் வேலை கிடைத்த முதல் நபரும் யான்லின்தான். மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் யான்லினுக்கு வேலை கிடைத்திருந்தது.

விசா பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சீனா திரும்பிக் கொண்டிருந்தார் யான்லின். அப்போதுதான் விமானம் காணாமல் போனது. “இந்தச் சம்பவத்துக்கு முன், அருகில் உள்ள ஹாண்டன் நகரத்துக்குக்கூட நாங்கள் சென்றது இல்லை,” என்கிறார் லி.

தற்போது அடிக்கடி பயணிப்பவர்களாக மாறிவிட்ட லி மற்றும் அவரது மனைவி பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை பிற குடும்பத்தினருடன் அனுசரிக்க மலேசியா வந்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த் 153 சீன பயணிகளில் ஒருவர் யான்லின். மலேசிய அரசிடமிருந்து இழப்பீடு வாங்க மறுத்த 40 சீன குடும்பங்களில் அவரது பெற்றோர்களும் உண்டு. விமான சேவை, விமான தயாரிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிறர் மீது சீனாவில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைகள் நகர்ந்தாலும் அவர்கள் காணாமல் போன விமானத்துடன் கட்டிப் போடப்பட்டுள்ளனர்.

 
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரேஸ் நாதனின் மருமகன், MH370ல் பயணித்த தனது மாமியாருக்கு எழுதியிருந்த கடிதம்.

MH370 காணாமல் போனபோது, கிரேஸ் நேதன், பிரிட்டனில் தனது சட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அவரது தாய் ஆன் விமானத்தில் பயணம் செய்தார். இன்று அவர் மலேசியாவில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கோலா லம்பூரில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில், தனது திருமணத்தின்போது தாயின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு தேவாலயத்துக்குள் நடந்து வந்ததையும், இரண்டு சிக்கலான பிரசவங்களின் போது தனது தாயின் அன்பான அறிவுரைகள் இல்லாமல் போனதையும் நினைவுகூர்ந்து பேசினார்.

விமானத்தில் இருந்து சிதறிய சில துண்டுகள் அந்த நிகழ்வில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. விமானத்தின் இந்த எச்சங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. கடலுக்கு அடியில் பல நாட்கள் இருந்து துருபிடித்த விமான இறக்கைகளின் பாகங்கள் அவை. இந்த நிகழ்வுக்கு வந்திருந்த பிளைன் ஜிப்சன் தான் விமானத்தின் அதிகமான பாகங்களைக் கண்டறிந்தவர்.

MH 370 நெடுங்கதையின் வண்ணமயமான கதாபாத்திரங்களில் ஒருவர் ஜிப்சன். இளம் சாகசக்காரர் என்றே அவரை அழைக்கலாம். இண்டியானா ஜோன்ஸ் போன்று உடை அணிந்துகொண்டு, கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டை விற்றுக் கிடைத்தை பணத்தைக் கொண்டு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டவர்.

“முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்றபோது, கடற்கரை ஓரங்களில் மிதக்கும் கழிவுகளைக் கண்டறிய ஒருங்கிணைந்த தேடுதல் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிந்தது. யாரும் அதைச் செய்யவே இல்லை. கடலுக்கு அடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், காணாமல் போன விமானத்தின் பாகம் கடற்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் ஒருவரின் கண்ணில்தான் முதலில் படும் என்று நான் நம்பினேன். அதை யாரும் செய்தாததால் நானே அதைச் செய்தேன்,” என்றார்.

ஓராண்டு காலம் மியான்மர் முதல் மாலத்தீவுகள் வரையிலான கடற்கரைகளில் தேடிய அவருக்கு விமானத்தின் முதல் பாகம் மொசாம்பிக்கின் மணல்திட்டு ஒன்றில் கிடைத்தது.

இதற்கிடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரி யூனியன் தீவில் விமான இறக்கையில் இருந்து பெரிய பாகம் ஒன்று கிடைத்தது. இதன் மூலம் MH370 இந்திய பெருங்டலில்தான் வீழ்ந்து மூழ்கியுள்ளது என்பது அந்த குடும்பங்களுக்கு உறுதியானது.

 

MH370யின் பாகங்கள் எப்படி கண்டறியப்பட்டன?

MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

விமானத்தின் சிதறிய பாகங்கள், நினைவு தின நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன

விமானம் காணாமல் போன 16 மாதங்கள் கழித்தே அதன் பாகங்கள் கிழக்கு ஆப்பரிக்க கடற்கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரோட்ட ஆய்வுகள் மூலம், இந்த பாகங்கள் MH370இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

அஸ்லாம் கான், மலேசிய முன்னாள் தலைமை புலனாய்வாளர் இந்த பாகங்களை எப்படி உறுதிப்படுத்தினோம் என விளக்கினார். கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் உள்ள வரிசை எண்கள், விமான தயாரிப்பாளரின் ஆவணங்களில் இருந்த வரிசை எண்களுடன் ஒத்துப் போனது. எனவே அவை மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அந்தப் பாகங்களில் இருந்த எழுத்துகளின் வடிவங்களைப் பார்த்தபோது, அவை போயிங் விமானத்தினுடையது என்பது, வேறு எந்த போயிங் விமானமும் இந்திய பெருங்கடலில் விழவில்லை என்பதால் அது MH370இன் பாகங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

விமானம் பறக்கும்போது அதைச் சீராக வைத்துக்கொள்ள இறக்கைகளில் உள்ள பாகம் ஃப்ளாப்ரான். அந்தப் பாகமும் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் மீண்டும் மலேசியா நோக்கி திரும்பியதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இந்த பாகம் கிடைக்கும் வரை விமானம் மேற்கில் மலாய் தீபகற்பம் நோக்கி பறந்ததற்கான சாட்சி, மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள ராணுவ ரேடார்களின் தரவுகள் மட்டுமே.

மேலும் சில சான்றுகளும் கிடைத்தன. பிரிட்டன் நிறுவனமான இன்மர்சாட், தனது செயற்கைகோள்கள் ஒன்றுடன் MH370 தொடர்பு கொண்டதைத் தெரிவித்தது. தெற்கு நோக்கிச் செல்லும்போது, ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் MH370 உடன் நிகழ்ந்த ‘கை குலுக்கல்’ என்றழைக்கப்படும் ஆறு தொடர்புகளைக் கண்டறிந்தது.

 

விமானம் மீண்டும் மலேசியா நோக்கிப் பறந்ததா?

MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேடுதல்கள் எந்தப் பலனையும் தரவில்லை

ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும், விமானத்துக்கும் செயற்கைக் கோளுக்குமான தூரத்தைக் கணக்கிட்டு விமானம் உத்தேசமாக கடலில் எந்தப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. அப்படி குறிக்கப்பட்ட இடம், மிகப் பரந்த ஆக்ரோஷமான ஆழமான கடல் பகுதி. அதற்கு மேல் குறிப்பான இடத்தைத் துல்லியமாக கண்டறியமுடியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை, 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 53 விமானங்கள் தேடுதல் பணியை மேற்கொண்டன. 2018ஆம் ஆண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி ஐந்து மாதங்களுக்கு கடலுக்கு அடியில் செல்லக்கூடிய ட்ரோன்கள் கொண்டு தேடியது.

ஆதாரபூர்வமான தரவுகள் இல்லாததால், விமானம் மாயமானது குறித்துப் பல சதிக்கோட்பாடுகள் பேசப்பட்டன. விமானம் கடத்தப்பட்டு ரஷ்யா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது டியகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க வான் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனப் பல கோட்பாடுகள் இருந்தன.

காட்சிக்கு வைக்கப்பட்ட விமான பாகங்களைப் பார்த்தபோது, “இது மிகவும் வெறுக்கக்தக்கது” என்கிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஃப்ளாரன்ஸ் டெ சாங்கி.

இவர், MH370 மாயமானது குறித்து விரிவாக ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். MH 370 குறித்து வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

விமானம் திரும்பி தெற்கு நோக்கிப் பறந்தது என்ற கோட்டைபாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்கிறார். கண்டெடுக்கப்பட்டவை MH370-இன் பாகங்கள் இல்லை என்கிறார். விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள் குறித்துக் கேள்விகள் எழுப்புகிறார் அவர். அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் காரணமாக தென் சீனக் கடல் மீது அமெரிக்க விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

 

தொடர்பு துண்டிக்கப்பட்டும் ஆறு மணிநேரம் எப்படி சீராகப் பறந்தது?

MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

MH370 மாயமானது குறித்து பல சதிக்கோட்பாடுகள் பேசப்படுகின்றன.

ரேடார் மற்றும் செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தரவுகளின்படி பார்த்தால், விமானத்தை யாரோ தெரிந்தே தெற்கு நோக்கி இயக்கியுள்ளனர் என்பதுதான் அதற்குரிய ஒரே விளக்கம்.

பிபிசியின் “ஏன் விமானங்கள் மாயமாகின்றன” என்ற புதிய வீடியோவில் இரண்டு பிரெஞ்சு வான்வெளி நிபுணர்கள் பேசியுள்ளனர். அதில் ஒருவர் அனுபவமிக்க விமானி. விமானம் எப்படி பறந்திருக்கக் கூடும் என்று அவர் தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்திக் காட்டுகிறார். மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு முடிந்த பிறகு, தென் சீனக் கடல் மீது MH370 துரிதமாக எப்படி திரும்பியிருக்கக் கூடும் என்று விளக்குகிறார். இதை அனுபவமிக்க, திறன்கொண்ட விமானி ஒருவர் செய்தால் மட்டுமே இப்படித் திரும்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

சரியாக மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வியட்நாம் வான் கட்டுப்பாட்டு மையத்துக்குள் நுழையும் முன் விமானம் இப்படி திரும்பியுள்ளதால், யாருக்கும் தெரியாமல் திருப்ப வேண்டும் என்று விமானி செய்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். ஏனென்றால், வியட்நாம் வான் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வரவில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகும்.

மேலும் சில கோட்பாடுகளும் உள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் சீரற்ற அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயிருக்கலாம் அல்லது திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்டு, தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், விமானத்தின் சவாலான திருப்பம், அதன் பிறகு தொடர்ந்து ஏழு மணிநேரம் சீராகப் பறந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மேற்சொன்ன கோட்பாடுகள் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

 

மலேசிய அரசின் மெத்தனப் போக்கு

MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

ஜாகிடா கொன்சாலெஸின் கணவரான பாட்ரிக் கோம்ஸ் MH 370 விமானத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.

அதேநேரம் விமானி வேண்டுமென்றே விமானத்தை வேறு திசையில் திருப்பி பயணிகளை மரணத்துக்கு இட்டுச் சென்றார் என்பதும் நம்பத்தக்கதாக இல்லை. அந்த விமானி அப்படி செய்யக் கூடியவர் என்பதற்கான வரலாறும் இல்லை. இந்த சந்தேகங்கள், கோட்பாடுகள் அனைத்தும் குடும்பங்களின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“எனது மோசமான எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது” என்கிறார் ஜாகிடா கொன்சாலெஸ், MH 370 விமானத்தின் உள் இருக்கும் கண்காணிப்பாளர் பாட்ரிக் கோம்ஸின் மனைவி.

“நாங்கள் இதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகளுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறோம். முதன்முதலில் தேடுதல் பணிகள் தொடங்கியபோது, ஏதாவது ஒன்றைப் பார்த்து விட்டதாகக் கூறுவார்கள், அப்போது எங்கள் நம்பிக்கை அதிகமாகும். அதன் பிறகு அது MH370 இல்லை என்று கூறுவிடுவார்கள். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குவோம்.” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே மலேசிய அரசு குடும்பங்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. ராணுவ ரேடார் தகவல்கள் கொண்டு துரிதமாக MH370 விமானத்தைக் கண்டறியும் பணியை மேற்கொள்ளாததற்காகவும், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேடுதல் பணிகளை மேற்கொள்ள மெத்தனமாக இருந்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டது. ஓஷன் இன்ஃபினிடி என்ற தனியார் நிறுவனம், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் வேண்டாம் என்ற அடிப்படையில் தேடுதல் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அரசின் அனுமதி வேண்டும்.

மலேசிய அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என சில அரசு அதிகாரிகள் தனியாகச் சந்தித்துப் பேசும்போது ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு சமீப ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இருக்கலாம். அதன் பிறகு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய கொரோனா பெருந்தொற்று பரவியது. பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பங்கள் வருடாந்திர நினைவு தினத்தை அனுசரிக்கக்கூட இயலவில்லை.

தற்போது பொறுப்பில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், கோலா லம்பூரில் நடைபெற்ற 10வது ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்றார். மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டில் தேடுதல் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஓஷன் இன்ஃபினிடி நிறுவனத்துடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

ஓஷன் இன்ஃபினிடி 2018ஆம் ஆண்டு 1.12 லட்சம் கி.மீ இடத்தைத் தேடிப் பார்த்தது. இதில் ஆழ்கடல் பள்ளத்தாக்குகள் போன்ற மிக சவாலான பகுதிகளும் இருந்ததால், விமானத்தைத் தவற விட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

 

தேடுதல் பணியில் புதிய நம்பிக்கை

MH 370

பட மூலாதாரம்,BBC/ JONATHAN HEAD

படக்குறிப்பு,

பத்து ஆண்டுகளாக லி மற்றும் அவரது மனைவி தங்கள் மகனுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.

இந்தத் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட மற்றொரு நபர் ஓய்வுபெற்ற பிரிட்டன் வான்வெளி தொழில்நுட்ப நிபுணர், ரிச்சர்ட் காட்ஃப்ரே. அவர் விமானம் மாயமாகியிருக்கக் கூடும் என்ற இடத்தை மேலும் குறிப்பாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார். சில சிற்றலை வானொலி சோதனைகள் மூலம் அவர் இதைச் செய்துள்ளார். ட்ரோன்கள் கொண்டு கவனத்துடன் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பல முறை தேடிப் பார்க்க வேண்டும்.

“ஒரு ஆண்டில் 1.7 பில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் ஒரு மீன் வலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த வலை முழுவதும் ரேடியோ சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு விமானம் செல்லும் போது, இந்த வலையில் ஒரு துளை ஏற்படும். அதை வைத்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருந்தது என என்னால் கூற முடியும். தெற்கு இந்திய பெருங்கடல் மீது பறந்த ஆறு மணி நேரங்களில், MH370யினால் ஏற்பட்ட 313 முரண்பாடுகள் 95 வெவ்வேறு நேரங்களில் பதிவாகியுள்ளது. அதை வைத்து விமானம் வீழ்ந்த பகுதியை மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்,” என்கிறார்.

ரிச்சர்ட் சொல்வது சரியான வழியா என்று கண்டறிய லிவர்பூல் பல்கலைகழகம் சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அதன் முடிவுகள் தெரிய வரும்.

மலேசிய போக்குவரத்து அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அரசு இதுவரை கொண்டிருந்த அணுகுமுறையில் இருந்து இந்த வாக்குறுதி மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோன்று அவர்களுக்குப் பலமுறை நம்பிக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன.

“எனக்கு விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கொன்சாலெஸ் கூறுகிறார். “அப்போதாவது எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும். இதுவரை நான் அவரது நினைவாக எதுவும் செய்யவில்லை. என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கண்களுக்குப் புலப்படும் எதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என்றார்.

நினைவு தின நிகழ்வில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் நம்பிக்கையை, துயரத்தை, சோகத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

பெரிய சீன எழுத்துகளில், அந்தப் பலகையில் எழுதுவதற்காக கீழே அமர்ந்த லி, அந்த பலகையைப் பார்த்து அழுதுகொண்டே நின்றார்.

அதில், “மகனே, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உனது அம்மாவும் அப்பாவும் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம். மார்ச் 3, 2024,” என்று எழுதியிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cy9z80j9g3xo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.