Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லுக்ரேசியா லோசா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 16 மார்ச் 2024

செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட சால்மன் மீன்கள் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் காணப்பட்டன.

சுற்றுச்சூழல் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியாக இதைப் பார்க்கிறார் பாலினா லூஹி. "அதில் பெரிய மீன்கள் மட்டுமல்ல, பல சால்மன் குஞ்சுகளும் இருந்தன," என்று ஃபின்லாந்தின் சூழலியல் நிபுணர் லூஹி ஆர்வத்துடன் கூறுகிறார்.

"அவை ஏற்கனவே ஆற்றின் ஆழமான பகுதியில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன. அணையை அகற்றிய பிறகு அந்த இடம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தபோது, உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்தது." எனக் கூறுகிறார் லூஹி.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

மீட்கப்படும் நதிகளின் வழித்தடங்கள்

லடோகா ஏரியிலிருந்து பின்லாந்துக்கு இடம்பெயரும் நன்னீர் சால்மன் மீன்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. ஆனால் 1911 மற்றும் 1925க்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று அணைகளின் கட்டுமானம், சால்மன் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டையிடும் இடங்களுக்கு இடையில் புதிய தடைகளை உருவாக்கியது. சால்மன் மற்றும் பிற மீன்களான பழுப்பு ட்ரவுட் போன்றவை ஆற்றின் மற்றொரு பக்கத்தில் சிக்கிக்கொண்டன.

இன்று அணைகள் அகற்றப்பட்ட நிலையில், உயரமான மரங்களால் சூழப்பட்ட புதிதாக கட்டப்பட்ட ரேபிட்கள் வழியாக மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு முறை அணை அகற்றப்படும்போதும், சால்மன் மீன்கள் ஆற்றின் புதிய பகுதியை "தழுவிக் கொள்கிறது" என்கிறார் தென் கரேலியன் ரிக்ரியேஷன் ஏரியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஹன்னா ஒல்லிகைனென்.

பழைய அணைகளை கையகப்படுத்தி, அதை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொறுப்பு இந்த அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல் அணை அகற்றப்பட்ட பிறகு, மீன்களின் ஐந்து முட்டையிடும் கூடுகள் நீரில் காணப்பட்டன.

ஒரு வருடம் கழித்து, 2022 இலையுதிர் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 சாலமன் மீன்கள் (0.4 ஹெக்டேர்) என்ற சாதனையை எட்டியது. 2023 டிசம்பரில் ரிடகோஸ்கி என்ற மேல் அணையை இடிக்கும் பணி முடிந்ததும், சாலமன் மீன்களால் ஆற்றின் மேல் பகுதிகளுக்கும் அதன் துணை நதிகளுக்கும் செல்ல முடிந்தது.

ஆற்றின் ஆரோக்கியம் மட்டுமல்ல, பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக மூன்று அணைகளும் அகற்றப்பட்டன என்கிறார் ஒல்லிகைனென். இந்த அணைகளின் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டாய சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணைகளால் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று மதிப்பீடுகள் முடிவு செய்தன என ஒல்லிகைனென் கூறுகிறார். அதனால் அணைகள் அகற்றப்பட்டன.

எவ்வாறாயினும், மூன்று ஃபின்னிஷ் அணைகளின் அகற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும், பல பழைய அணைகள் அவற்றின் முடிவை நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பராமரிப்பு செலவுகள் அவை வழங்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளன. இது போன்ற பெரிய அணைகள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிறிய அணைகளும் ஐரோப்பிய நதிகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

பெரிய அணைகளால் தொடரும் பிரச்னை

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதிக தொழில்மயமான பகுதிகளில் உள்ள ஆறுகள் பல நூற்றாண்டுகளாக, சாலைகள் கட்டமைத்தல், விவசாயத்திற்கான நீர் எடுத்தல், நீர் ஆலைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகளின்படி, உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன் முழு வழித்தடத்தில் 1,000 கிமீக்கும் (621 மைல்கள்) அதிகமான தூரத்திற்கு சுதந்திரமாக பாய்கின்றன.

இத்தகைய தடைகள் தொடர் பிரச்னைகளை உருவாக்கியுள்ளன. அவை பல்லுயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீன் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. மேலும் ஆறுகளின் வளங்கள் மற்றும் வண்டல்கள் கீழ்நோக்கி பாய்வதைத் தடுக்கிறது. இதனால் மீன்வளம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அணைகள், ஆற்று நீரில் உள்ள வண்டல்களைத் தடுப்பதால், கீழ்நிலை நீரும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.

நதியின் வழித்தடத்தில் ஏற்படும் இந்த துண்டிப்பு, நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. ஆற்றின் இயக்கவியல் மற்றும் வெப்பநிலையை மாற்றியமைக்கிறது என சான் பிரான்சிஸ்கோ எஸ்டூரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள மீள் நிலப்பரப்பு திட்டத்தின் அறிவியல் இயக்குனர் மெலிசா ஃபோலே விளக்குகிறார்.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அழிவின் விளிம்பில் நன்னீர் மீன் இனங்கள்

இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் உயிரினங்களுக்கும் பல தடைகளை உருவாக்குகின்றன அணைகள். குறிப்பாக மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம். ஐநாவின் COP28 காலநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 25% நன்னீர் மீன் இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 45% நன்னீர் மீன் இனங்கள் அணைகள் மற்றும் நதியிலிருந்து நீர் எடுப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

இது புலம்பெயர்ந்த மீன்களை மட்டுமல்ல, நீர்வழிப்பாதையில் வாழும் சிறிய மீன்களை கூட பாதிக்கிறது. பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களில் பிராக்மெண்டேஷன் (Fragmentation) செயல்முறை கூட உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

36 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 1.2 மில்லியன் தடைகள் நதி ஓட்டத்தைத் தடுக்கின்றன எனவும், அதில் சுமார் 68 சதவீத தடைகள் 2 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என ஆராய்ச்சி காட்டுகிறது. "20 செ.மீ அளவுக்கு சிறிய தடைகள் கூட சில உயிரினங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்" என்கிறார் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியலில் பேராசிரியரும், அம்பர் ஒருங்கிணைப்பாளருமான கார்லோஸ் கார்சியா டி லீனிஸ்.

2016ஆம் ஆண்டு முதல், ஆம்பர் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கார்சியா டி லீனிஸின் ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஐரோப்பா முழுவதும் 2,000 கிமீ (1,243 மைல்) ஆறுகளின் வழித்தடங்களில் பயணம் செய்து, அவற்றின் துண்டிப்புகளை, தடைகளை வரைபடமாக பதிவுசெய்தது. அவர்கள் அணைகள் மட்டுமல்லாது, மதகுகள், பிற சிறிய தடுப்பணைகளையும் பதிவு செய்துள்ளனர்.

பயனற்ற 150,000 அணைகள்

உண்மையில் ஒரு அணை அல்லது தடையை அகற்றும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் மாநில சட்டங்கள், பொறியியல் பணிக்கான நிதி மற்றும் சாத்தியக்கூறுகள் வரை. ஐரோப்பாவின் 150,000 நீர்வழித் தடைகள் இப்போது பயனற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. பழைய அணைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.

ஐரோப்பாவில் ஆயுட்காலம் முடிந்துவிட்ட, காலாவதியான அணைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவற்றின் பராமரிப்பு செலவுகள் இப்போது ஆற்றல் உற்பத்தியின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன, 2016 இல் நிறுவப்பட்ட 'ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழுவின்' மேலாளர் பாவோ பெர்னாண்டஸ் கரிடோ விளக்குகிறார். ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழு 2022இல் குறைந்தது 325 தடைகளை அகற்றியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம்.

அணைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்வதால், ஆற்றல் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் நன்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. "பயன்பாட்டில் உள்ள அணைகளை தகர்க்கவோ அல்லது அகற்றவோ யாரும் நினைப்பதில்லை" என்று கார்சியா டி லீனிஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் காலாவதியான அணைகளை அகற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால் இனி சமூகத்திற்கு எந்த பயனுமில்லை மற்றும் நதியின் ஓட்டத்தை தடுக்கின்றன"

நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், அணையை அகற்றும் செயல்முறைக்கு சட்டம் உதவும். ஐரோப்பாவில் அணைகளை அகற்றுவதில் ஸ்பெயின் நாடு முன்னணியில் உள்ளது. 2022இல் 133 அணைகள் தகர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பிரான்ஸும் இதை முன்னெடுக்கின்றன. நதிகள் இணைப்பு என்பது ஐரோப்பிய ஆணையத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்தின் மையப் பொருளாகவும் உள்ளது.

நவம்பர் 2023இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்வந்தன. 2030க்குள் ஆறுகளுக்கு 25,000 கிமீ (15,530 மைல்கள்) தடைகளற்ற நீர் வழித்தடத்தை சாத்தியமாக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான கடமையும் அடங்கும். இந்தச் சட்டம் பிப்ரவரி 27 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மட்டும் இந்த பணிகள் நடக்கவில்லை. ஐரோப்பாவின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வரும் அணைகள் தகர்ப்பு வேலைகளே முன்னுதாரணம் என பெர்னாண்டஸ் கரிடோ கூறுகிறார். அமெரிக்காவில் சராசரியாக 62 ஆண்டுகள் பழமையான 92,000 அணைகள் உள்ளன.

1999ஆம் ஆண்டு கென்னபெக் ஆற்றின் மீது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதே அமெரிக்காவின் முதல் பெரிய அணை அகற்றப்பட்ட சம்பவம். 1837இல் கட்டப்பட்ட அந்த அணையின் உரிமம் 1997இல் காலாவதியானபோது, ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை புதுப்பிக்கவில்லை. ஆற்றின் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அது முன்னுரிமை அளித்தது. இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணைகள் அமெரிக்க நதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதாவது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதிலிருந்து 76% அணைகள் அகற்றப்பட்டுள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அணைகள் இடிக்கப்படுவது எப்படி?

அணைகள் வெடிப்பொருட்கள் மூலமாக உடனடியாக உடைத்துவிட முடியாது. மாறாக, அணையை அகற்றுதல் என்பது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு பொறியியல் பணி. ஹைடோலான்ஜோகி ஆற்றில், புல்டோசர்கள் படிப்படியாக கான்கிரீட் சுவர்களை உடைத்தன. இதனால் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டது.

"அணைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது செயல்முறையின் ஒரு பகுதியாகும். வண்டல் எங்கே முடிகிறது? வண்டல் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறதா? பாதிப்பைக் குறைக்கும் உத்திகள் என்ன? என அனைத்தையும் ஆராய்வோம்" என்று ஃபோலி கூறுகிறார்.

இன்றுவரை மிகப்பெரிய நதி மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்று பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள செலூன் ஆற்றில் நடந்துள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில் இரண்டு பெரிய அணைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் 60 கிமீ (37 மைல்) நீர்வழித்தடம் திறக்கப்பட்டது. 1920களில் இருந்து செயல்படும் இரண்டு அணைகளும் ஒரு நூற்றாண்டு காலமாக அட்லாண்டிக் சால்மன், லாம்ப்ரேஸ் மற்றும் ஐரோப்பிய ஈல்கள் போன்ற மீன்களின் இடம்பெயர்வை முற்றிலும் தடுத்துவிட்டன.

"கனரக பொறியியல் பணிகள் மூலம் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டதால், அணையின் பின்புறம் குவிந்திருந்த வண்டல் மண் கரைகளை மீண்டும் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாவரங்கள் மிக விரைவாக மீண்டும் வளர்ந்தன, உண்மையில் வண்டல் அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்தது. தாவரங்கள் கரைகளை உறுதிப்படுத்த உதவியது மற்றும் நிறைய உயிரினங்களுக்கு நிழல் மற்றும் தங்குமிடம் உருவாக்கவும் அது உதவியது" என்று திட்டத்தைக் கண்காணித்து வரும் இன்ரேயில் உள்ள செலூன் அறிவியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லாரா சொய்சன்ஸ் கூறுகிறார்.

அணையை அகற்றுவதற்கான இயற்பியல் கூறுகளை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அணைகள் அமைந்திருக்கும் நிலப்பரப்புகளுடன் உள்ளூர் மக்களுக்கு வலுவான தொடர்புகள் இருக்கும் என்பதால் அணைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அவர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம் என்று செலூன் திட்டம் அறிவுறுத்துகிறது.

"இந்த அணைகள் நீண்ட காலமாக இருக்கும் போது, ஒரு நதி சுதந்திரமாக ஓடுவது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பது சவாலாக இருக்கும்" என்கிறார் ஃபோலே.

செலூன் ஆற்றில் அணை அகற்றும் பணிக்கு முன்பு, உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அணைகளுக்குப் பின்னால் உள்ள ஏரிகளை படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் நீர்த்தேக்கங்களில் நச்சு சயனோபாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. " என இன்ரே செலூன் அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஜீன்-மார்க் ரூசல் கூறுகிறார்.

டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மீன் சூழலியல் நிபுணர் கிம் பிர்னி-கௌவின் மற்ற அணைகளை அகற்றும் விஞ்ஞானிகளுடன் செலூன் ஆற்றுக்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் மிகுந்த வருத்தமாக இருந்ததைக் கண்டனர். ஆனாலும் கூட, ஒருவருக்கு அதில் சந்தோஷம் இருந்ததாக பிர்னி-கௌவின் நினைவு கூறுகிறார்.

"அணை கட்டப்பட்டபோது அவரது தாத்தாவுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பகுதியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தாத்தா விரும்பவில்லை" என்று பிர்னி-கௌவின் கூறுகிறார்.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள்

அணைகளை அகற்றுவதால் அட்டகாசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. செலூனில் தாவரங்கள் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்லாமல், மீன்கள் கூட மீண்டும் தென்பட்டன. இரண்டாவது அணை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சால்மன் மீன்கள் ஆற்றின் மேற்பகுதிக்கு வந்தன.

இதேபோல், ஐரோப்பிய விலாங்கு மீன்களும் இப்போது முழு நீர்ப்பிடிப்பையும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளன மற்றும் கடல் லாம்ப்ரே எனப்படும் மீன்களும் புதிய வாழ்விடங்களை முட்டையிடும் இடங்களாகப் பயன்படுத்துகின்றன.

மக்களுக்கும் அணையை அகற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மீட்டெடுக்கப்பட்ட ஆறுகளால் சுற்றுலா வாய்ப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிடோலான்ஜோகி ஆறு ஒரு சுற்றுலாத் தலமாக மாற தயாராக உள்ளது என்று ஒல்லிகைனென் கூறுகிறார்.

இதேபோல் அமெரிக்காவில் அணைகளை அகற்றுவதால் மக்கள் நதிக் கரைகளுக்குத் திரும்புகின்றனர். மைனே மாநிலத்தில் பெனோப்ஸ்கோட் நதியின் அணை அகற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின் தரம் மற்றும் நீச்சல், படகு சவாரிகள் மற்றும் வனவிலங்குகளைப் கண்டுகளிப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும், அணையை அகற்றுவதற்கு ஆதரவான முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெனோப்ஸ்கோட் இந்திய தேசத்துடன் ஆற்றின் சுதந்திரமான பாயும் நிலையை மீட்டெடுப்பது பெரும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது .

ஆரம்பத்தில் அணையை அகற்றும் திட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் சிலர் கவலை தெரிவித்தனர் என்றும் ஆனால் இப்போது நீர் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது, கயாக் போட்டிகள் நடத்தப்பட்டது. மக்கள் ஆற்றை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூத்த விஞ்ஞானி ஜோசுவா ராய்ட்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் நதிகள் இணைப்பை மீட்டெடுக்க அணைகளை அகற்றுவது ஒரு சாத்தியமான வழியாக இருக்கும் என்று நிரூபித்து காட்டினாலும், இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அமேசான், காங்கோ மற்றும் மீகாங் படுகை போன்ற முக்கிய நதிகளில் புதிய அணைகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

இதேபோன்ற கவலைகள் பால்கன் பகுதியிலும் உள்ளது. அங்கு ஏராளமான சிறிய நீர்மின் நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் சிறிய, குறைந்த திறன் கொண்ட நீர்மின் அணைகள் கட்டப்பட்டால் ஐரோப்பாவில் உள்ள அணைகளை அகற்றுவதில் அர்த்தமில்லை என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

"நாம் சற்று விரிவாக யோசிக்க வேண்டும். சிறிய அணைகள் ஒருபோதும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போவதில்லை, அவை மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தப் போகின்றன. அதற்காக அணைகளே வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் நல்லதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பழைய அணைகளே எங்கள் இலக்கு" என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

https://www.bbc.com/tamil/articles/cndjyxprkw6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.