Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை மெக்ஸிகோ அரசு தொடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக வன்முறை மோதலில் ஈடுபடும் மெக்ஸிகன் கிரிமினல் குழுக்கள் அல்லது கும்பல்கள் இந்த ஆயுதங்களை பெறுகின்றன என்பதை இந்த நிறுவனங்கள் நன்கு அறிந்திருப்பதாக மெக்ஸிகோ அரசு கூறுகிறது.

கோல்ட்ஸ் ஸ்மித் & வேசன் போன்ற பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அதற்கு அவை பொறுப்பல்ல என்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு இந்த நிறுவனங்களுக்கு உள்ளது.

ஆனால் இந்த வழக்கின் வாதங்களுக்கு எதிராக இந்த பாதுகாப்பு போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் மெக்ஸிகோ வெற்றிபெற முடியுமா என்பதைக் கண்டறிய நாம் முயற்சிப்போம்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை அழித்த மெக்சிகன் இராணுவம்.

மெக்ஸிகோவில் குற்ற அலை

இயோன் கிரில்லோ, மெக்ஸிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர். அங்கு திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் குறித்து பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

மெக்ஸிகோவில் கிரிமினல் குழுக்களுக்கு இடையேயான சண்டை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் மோதல்கள் அல்ல. மாறாக அது போரின் வடிவத்தை எடுத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

அவரது புத்தகங்களில் ஒன்றான ‘Blood Gun Money: How America Earns Gangs and Cartels’, இந்த வழக்கில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“2006 முதல் மெக்ஸிகோவில் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 70 சதவிகிதம் பேர் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டுள்ளனர். சில சண்டைகள் மிகவும் கடுமையானவை.

500 துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இரண்டாயிரம் போலீசாருக்கும் இடையே நீண்ட நேரத்திற்கு துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 100 கொலைகள் நடக்கின்றன," என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 12 கோடியே 90 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்தப்பரந்த நாட்டில் இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. ஆனால் இது எங்கு நடந்தாலும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை மற்றும் வன்முறை நிறைந்தவை. பல சமயங்களில் சாதாரண மக்கள் இந்த மோதலுக்கு பலியாகின்றனர்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் வந்து கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் சுட்டுக்கொள்கின்றனர். பல சமயங்களில் கார்களில் செல்லும் சாதாரண மக்கள் அல்லது சாலையோர வண்டிகளில் இருந்து உணவு உண்பவர்களும் இதற்கு பலியாகின்றனர் என்றும் அயன் கிரில்லோ கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளில், இந்த மாஃபியா குழுக்கள் அல்லது கார்டெல்கள் தங்களுடைய சொந்த ராணுவத்தை உருவாக்கியுள்ளன. பல தாக்குதல்களில் சுமார் 100-200 பேர், AK-47 மற்றும் AR-15 போன்ற துப்பாக்கிகளால் தாக்குகிறார்கள்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெக்சாஸில் உள்ள ஒரு துப்பாக்கி கடை.

மெக்ஸிகோவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் ஆயுதங்கள்

ஆனால் நாட்டுக்குள் ஆயுதங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதை எப்படி அறிவது?

குற்றவாளிகளிடமிருந்து ஆயுதங்கள் காவல்துறையால் கைப்பற்றப்படும்போது அல்லது குற்றம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்படும்போது காவல்துறை அவற்றின் வரிசை எண்களை அமெரிக்க நிர்வாகத்திடம் கொடுக்கிறது. இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை அது கண்டுபிடிக்கிறது என்று அயன் கிரில்லோ விளக்குகிறார்.

இதில் 70 சதவிகித ஆயுதங்கள் அமெரிக்க துப்பாக்கி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து மெக்ஸிகோவை சென்றடைந்ததாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து கடத்தல் மூலம் மெக்ஸிகோவை அடைவதாக அரசு மதிப்பிடுகிறது. இது வன்முறைக்கு வழிவகுக்கிறது.

“ராணுவம் பயன்படுத்தும் மட்டத்தில் உள்ள துப்பாக்கிகள் இங்கு வந்தடைகின்றன. பல துப்பாக்கிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை 50 காலிபர் தோட்டாக்களைப் பயன்படுத்துகின்றன. அவை போலீஸ் கவச வாகனங்களைத் துளைக்கும் சக்தி கொண்டவை,” என்று அவர் குறிப்பிட்டார்.

மெக்ஸிகோவில் தனிநபர்கள் துப்பாக்கிகளை வாங்க முடியும். ஆனால் ஒரே ஒரு துப்பாக்கி கடை மட்டுமே ராணுவத்தால் நடத்தப்படுகிறது. துப்பாக்கிகளை வாங்கும் செயல்முறை கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

"இந்த கடையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயுதங்களின் விலை மிகவும் அதிகம். மிக முக்கியமாக அடையாள அட்டை உட்பட ஏழு வெவ்வேறு வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆயுதம் வாங்கும் நபருக்கு குற்றப்பின்னணி பதிவு இல்லை என்று சான்றளிக்கும் காவல் துறையின் ஆவணம் அவற்றில் ஒன்று,” என்று இதுகுறித்து அயன் கிரில்லோ கூறினார்.

ஆனால் கார்டெல் நபர்கள் அத்தகைய ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து எளிதாகப் பெற முடியும்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹூஸ்டனில் உள்ள ஒரு துப்பாக்கி கடை.

அமெரிக்காவிலிருந்து வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள்

மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக 16,000 ஆயுதங்கள் விற்பனையாகின்றன. ஆனால் அதே நேரம் அமெரிக்காவிலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் இங்கு வந்துசேருகின்றன.

”கடைகளில் குற்றப்பின்னணி பதிவுகள் இல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றன. அவர்கள் டஜன் கணக்கான ஏகே 47 ரக துப்பாக்கிகளை வாங்கி கார்டெல்லிடம் ஒப்படைக்கிறார்கள், அதற்கு அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்,” என்று அயன் கிரில்லோ விளக்குகிறார்.

மற்றொரு வழி அமெரிக்காவில் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்குவது. அவர்கள் குற்றப்பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை வாங்கி மெக்ஸிகோவிற்கு கொண்டு வருவதன் மூலம் வாரத்திற்கு 15-20 ஆயிரம் டாலர்களை தாங்கள் சம்பாதித்ததாக, மெக்ஸிகோ சிறைகளில் உள்ள பல குற்றவாளிகளை தான் நேர்காணல் செய்தபோது அவர்கள் குறிப்பிட்டதாக கிரில்லோ கூறுகிறார்.

இந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கெஞ்சிய பிறகு மெக்ஸிகோ அரசு இப்போது சட்டப் போராட்டத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கறிஞர்கள், துப்பாக்கிகள் மற்றும் பணம்

”தற்போது அமெரிக்காவில் சாதாரண குடிமக்களிடம் 40 கோடி ஃபயர் ஆர்மஸ் அதாவது துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் போன்ற ஆயுதங்கள் உள்ளன,” என்று கலிஃபோர்னியாவில் உள்ள யுசிஎல்ஏ சட்டக்கல்லூரியில் சட்டப் பேராசிரியரான ஆடம் விங்க்லர் கூறினார்.

“அமெரிக்க அரசியலமைப்பின்படி தனிநபர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க உரிமை உண்டு. மக்கள் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் தெருக்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றம் இதை விளக்குகிறது."

ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் முதலில் ஆயுதத் தொழிலை பார்ப்போம்.

"2000வது ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி கம்பெனிகள் தயாரிக்கும் ஆயுதங்கள் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டால் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்களை குற்றவாளிகளாக கருத முடியாது," என்று ஆடம் விங்கிள் கூறினார்.

"இந்தச்சட்டம் ’ஆயுதங்களின் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்."

அதாவது, ஆயுதம் தயாரிப்பவர்கள் மீது பொறுப்புக் கூற முடியாதா? ஆயுதங்கள் பழுதடைந்தால் அல்லது பயன்பாட்டின் போது வெடித்தால், நிறுவனம் மீது வழக்குத் தொடரலாம். ஆனால் அவை கடத்தப்பட்டாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்கப்பட்டாலோ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம் என்று ஆடம் விங்கிள் குறிப்பிட்டார்.

வழக்குகளில் இருந்து நிறுவனங்களை பாதுகாப்பது அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆயுதம் தாங்கும் உரிமை அமைப்பான நேஷனல் ரைஃபிள் அசோசியேஷனுக்கு முன்னுரிமை பணியாக இருந்தது.

வழக்குகள் தங்கள் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று அஞ்சுவதால் ஆயுத நிறுவனங்கள் இந்த வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டதாக ஆடம் விங்க்லர் கூறினார்.

"புகையிலை மற்றும் சிகரெட் நிறுவனங்கள் வழக்குகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டியிருந்தபோது உடனடியாக ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏனென்றால் அவர்களுக்கு எதிராக இதேபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் அபாயம் இருந்தது.”

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன்

அமெரிக்காவின் பலவீனமான துப்பாக்கிச் சட்டங்கள்

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் சொந்த சட்டங்கள் உள்ளன. பல மாகாணங்களில் அவை மிகவும் தளர்வாக உள்ளன. மெக்ஸிகோவுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்களில் மக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள். இது ஆயுதக் கடத்தலுக்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது என்று ஆடம் விங்க்லர் கூறினார்.

இந்தக் கடத்தலை கண்காணிக்கும் பொறுப்பு உள்ள அமெரிக்க நிறுவனம், ’Bureau of Alcohol, tobacco and fire arms explosive’ அதாவது ஏடிஎஃப் என்று அழைக்கப்படுகிறது.

“ATF மிகவும் பயனுள்ளதாக இல்லை. அமெரிக்காவில் இருக்கும் 40 கோடி ஆயுதங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினம். இந்தப் பணிக்கு இந்த ஏஜென்சியிடம் போதிய பணம் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மெக்ஸிகோவின் எல்லை போலீஸாருக்கும் சமமான பெரிய பொறுப்பு உள்ளது. மெக்ஸிகோ எல்லை போலீசார் அங்கு வரும் வாகனங்களை கண்டிப்புடன் சோதனை செய்வதில்லை என்கிறார் ஆடம் விங்க்லர்.

மெக்ஸிகோ அரசு 2021இல் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு எதிராக மாசசூசெட்ஸில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. ஆனால் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி ஒரு வருடம் கழித்து நீதிமன்றம் அதை நிராகரித்தது..

மெக்ஸிகோ அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மெக்ஸிகோ ஒரு இறையாண்மை நாடு என்றும் அமெரிக்காவின் இந்த பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் வாதிட்டது. அதன் முறையீடு வெற்றி பெற்றது.

அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக சட்டவிரோத வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றுவதாக மெக்ஸிகோ கூறுகிறது. 2005 இல் இயற்றப்பட்ட ’ஆயுதங்களில் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்,’ அமெரிக்க ஆயுத நிறுவனங்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்து வருகிறது, ஆனால் அது தொடருமா?

ராபர்ட் ஸ்பிட்சர், SUNY Cortland பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக உள்ளார். துப்பாக்கி கொள்கை குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நேஷனல் ரைஃபிள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

2005 ஆம் ஆண்டில் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான துப்பாக்கி ஏந்தியவர் ஒருவர் பள்ளிக்கூடத்தில் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் மற்றும் 6 பெரியவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கனெக்டிகட்டின் உள்ளூர் சட்டத்தின் கீழ் வேறு வாதத்தை முன்வைத்து, 200 ஆண்டுகள் பழமையான ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

“1970 முதல் கனெக்டிகட்டில் ஒரு சட்டம் உள்ளது. நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டம் அது. இந்த வழக்கில் 2022 இல் ஏற்பட்ட ஒரு சட்ட தீர்வின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் ரெமிங்டன் நிறுவனத்திடமிருந்து 73 மில்லியன் டாலர்கள் இழப்பீடு பெற்றனர். துப்பாக்கி நிறுவனம் இதுவரை செலுத்திய மிகப்பெரிய இழப்பீடு இது ஆகும்,” என்று பர்ட் ஸ்பிட்சர் விளக்குகிறார்.

இந்த வழக்கின் வெற்றிக்கு இழப்பீடு மட்டுமே முக்கிய காரணியாக இருக்கவில்லை.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

“சமூகத்தின்மீது ஏமாற்றமடைந்த இளைஞர்களை தனது தானியங்கி துப்பாக்கிகளின்பால் ஈர்க்க, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை பயன்படுத்தியதைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான உள் ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ரெமிங்டன் நிறுவனத்திற்கு ஏற்பட்டது,” என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார்.

இந்த ஆயுதங்களின் ராணுவத் திறனை நிறுவனம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதாவது இவை தற்காப்புக்காகவோ, துப்பாக்கிச் சூடு இலக்கு பயிற்சி அல்லது பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அல்ல.

சட்டப்பூர்வ தீர்வின் கீழ் ரெமிங்டன் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படவில்லை. சமரசம் ஏற்பட்டு வழக்கு முடிந்தது.

விசாரணை முழு அளவில் நடந்திருந்தால், கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர் வெற்றி பெற்றிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறுகிறார்.

அதே நேரத்தில் பொறுப்பற்ற சந்தைப்படுத்தலுக்கு எதிரான சட்டம் கனெக்டிகட் மாகாணம் உட்பட நாட்டின் ஐந்து மாகாணங்களில் மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் முழு நாட்டிற்கும் இது பொருந்தாது.

இதுபோன்ற மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார். இந்த வழக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பார்க்லேண்ட் உயர்நிலைப் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையது.

இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க இப்போது துப்பாக்கி நிறுவனங்கள் தங்கள் ஆயுத சந்தைப்படுத்தல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிமன்றப் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும்?

”மெக்ஸிகோ அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புக்கூறலை தவிர்த்துவந்துள்ளன. இப்போது மற்ற நாடுகளும் இந்த திசையில் பார்க்கின்றன,” என்று ஹேக்கில் உள்ள ’ஏசர் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் யுரோபியன் லா’ வின் மூத்த ஆராய்ச்சியாளர் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச் குறிப்பிட்டார்.

“லத்தீன் அமெரிக்க நாடுகளில் துப்பாக்கியால் ஏற்படும் 70 முதல் 90 இறப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக வந்தவை. குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் ஈக்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலும் இதே போக்கு காணப்படுகிறது," என்றார் அவர்.

"ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளிலும் இதேதான் நடக்கிறது. இப்போது ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் நீதிமன்றத்தில் மெக்ஸிகோவின் கோரிக்கையை ஆதரித்துள்ளன. இந்த வழக்கில் மெக்ஸிகோ வெற்றி பெற்றால் இந்த நாடுகளில் சில அந்த அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரக்கூடும்.”

மெக்ஸிகோ வெற்றி பெற்றால் ஆயுத நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் முதல் மாற்றம், அவர்களின் சந்தைப்படுத்தல் கொள்கைகளாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். மரணத்தை அதிகரிக்கும் விதமாக மாற்றியமைக்கக்கூடிய பிற ஆயுதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

அரிசோனா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கடைகளில் இருந்து ஆயுதங்கள் தனது நாட்டை வந்தடைகின்றன என்பதை மெக்ஸிகோ நிரூபித்துள்ளது.

அரிசோனா ஆயுத விற்பனையாளர்கள் மீது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டையும் மெக்ஸிகோ பதிவு செய்துள்ளது. இதன் பொருள் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிரான வழக்குகள் மூலம் இவர்கள் இருவருமே சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கில் என்ன நடக்கும்?

மெக்ஸிகோ தாக்கல் செய்த வழக்கு இன்னும் தொடங்கவில்லை ஆனால் இந்த வழக்கில் என்ன நடக்கும்?

"மெக்ஸிகோ, நீதிமன்றத்திற்கு வெளியே எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அதன் நோக்கம் இந்த துப்பாக்கி நிறுவனங்களை அம்பலப்படுத்துவதாகும். இந்த ஆயுதங்கள் அதன் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடாக மெக்ஸிகோ கோரியுள்ளது. ஆனால் மெக்ஸிகோவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இவ்வளவு பெரிய இழப்பீட்டு தொகைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று தோன்றவில்லை” என்றார் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் மெக்ஸிசிகோ வெற்றிபெறுமா? மெக்ஸிகோ அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாப்பு தடையை முறியடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த நிறுவனங்களுக்கு எதிராக கடத்தல் தொடர்பான உறுதியான ஆதாரங்களை அந்த நாடு முன்வைக்க வேண்டும்.

மெக்ஸிகோ எல்லைப் போலீசார் சோதனைகளில் மெத்தனமாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. இது ஒரு நீண்ட மற்றும் செலவுமிக்க சட்டப் போராட்டமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூருகின்றனர்.

இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முடிவு எதுவாக இருந்தாலும் சரி, அது நிச்சயமாக ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரச்னை தொடர்பான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலிருந்து எதோ ஒரு நன்மை நிச்சயமாக ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/c6p4np1v7xdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.