Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" 

"அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது 
அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது 
அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு  
அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" 

"ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே
ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே
ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் 
ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!"

"இன்பம் துன்பம் நீயே தேடியது 
இருப்பதைக் கொண்டு வழியை அமை 
இதயம் திறந்து வரவேற்க பழகு 
இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!"  

"ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே 
ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே 
ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் 
ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!"

"உயர்ந்த நோக்கம் மனதில் எழுக 
உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க 
உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது
உண்மை நேர்மை உன்னில் இருக்கட்டும்!" 

"ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம்
ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது 
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 
ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே!" 

"எய்யாமை எவருக்கும் கேடு தரும் 
எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் 
எழுச்சி கொண்ட வாழ்வை அமை 
எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்!" 

"ஏழை பணக்காரன் தற்காலிக நிலையே 
ஏற்றம் இறக்கம் வாழ்வில் பொதுவே  
ஏமாற்றம் தடுமாற்றம் நிறைந்த வாழ்வில் 
ஏணை  பழக்கம் சுடுகாடு வரைக்குமே!"  

"ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் 
ஐயம் தவிர்த்து துணிந்து நில்  
ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் 
ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு!"

"ஒடுங்கி அடங்கி வாழ்வது வாழ்வல்ல 
ஒல்லார் நாண உன்னை உயர்த்து 
ஒளியார் முன் ஒள்ளியர் ஆகு
ஒற்றுமை கொண்ட இனமாய் வாழு!"

"ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு 
ஓந்தி போல நிறம் மாறாதே 
ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் 
ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்!"   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘அ’ தொடங்கி ‘ஓ’ வரை கவிதைகள் அருமை



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.